- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
19
சுபா பள்ளிப் பொறுப்பெடுத்து ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் கற்றுக்கொண்டிக்க, விவேக் எதற்கும் தடுக்காததால் தன்னால் முடிந்த சின்னச்சின்ன மாற்றங்களும் செய்தாள். தான் படித்த பள்ளியில் தான் பெரிய பொறுப்பிலிருப்பதை பெருமையாகவே உணர்ந்தாள். அந்த பதவி அவளுக்கென்று ஒரு தனி கௌரவத்தைக் கொடுத்ததோடு மனதில் ஒரு நிமிர்வையும் கொடுத்தது. கணவனின் நியாபகங்கள் வரக்கூடாது என்றே வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தவள், அதில் வெற்றி பெற்றாளா, பெறுவாளா தெரியாது. ஆனால் ஜீவாவைப் பற்றிய அவளின் எண்ணங்கள் மட்டும் மாறுவதாகயில்லை.
ஜீவா அன்று சென்றவன்தான் அதன் பின் மனைவியைச் சந்திக்கவோ, போனில் பேசவோ முயற்சிக்கவில்லை. சாதனா மட்டும் போனில் பேசுவதோடு சரி. அப்பா, அண்ணன் ஏன் அம்மா கூட அவளை சந்திக்கவில்லை.
மாலை நேரம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து அமர்ந்திருந்த பொழுது அன்நோன் நம்பரிலிருந்து கால்வர சின்ன யோசனையுடன் அதை எடுத்து ஹலோ சொல்லுமுன்... “சுபா நான் அகிலா பேசுறேன்” என்றிருந்தாள் எதிரில் இருந்தவள்.
“ஹேய் அகி! எப்படியிருக்க? எங்கயிருக்க? ஒரு போன் இல்ல. வீட்டுக்கும் வரலன்னு அம்மா சொன்னாங்க?”
“சுபா உன்கிட்ட ரொம்ப நேரம் பேச முடியாது. நான் திருட்டுத்தனமா பேசிட்டிருக்கேன். ஒரு சிக்கல்ல மாட்டிட்டிருக்கேன். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுடி” என்றாள் கெஞ்சலாக.
“என்னடி ப்ளீஸ்லாம் போட்டுட்டு. என்னன்னு சொல்லு?”
“நாளைக்கு காலையில எனக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணப்போறாங்க. நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்துட்டேன். என்னால முடியல? சூஸைட் கூட ட்ரை பண்ணிட்டேன், ப்ச்... நோ யூஸ்.”
“அகீஈஈஈ...”
“விடுடி நான் பிழைச்சிக்கிட்டேன். இப்ப ஹவுஸ் அரஸ்ட்ல இருக்கேன் சுபா.”
“சரி கல்யாணம் எங்க? எந்த இடம்?”
“வீட்ல வச்சி தான்” என்று இடம் சொன்னாள்.
“சரி நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாம கூலா இரு” என்று போனை வைத்து மாமனாருக்கு போன் செய்து விஷயம் சொல்ல, “நானும் வரவாம்மா” என்றவரிடம், “இல்ல மாமா நான் தாண்டவ்ணா கூட போறேன். எதுக்கும் நீங்க போலீஸ்ல தெரிஞ்சவங்க இருந்தாங்கன்னா சொல்லி வைங்க. நாங்க அதுக்குள்ள வந்திடுறோம்.” போனை வைத்து தாண்டவை அழைத்து விஷயம் சொல்ல...
“பாப்பா அப்பாகிட்ட சொன்னா உடனே சரிபண்ணிருவாங்க. சொல்லலாமா?”
“இல்லன்ணா. முடியாத பட்சத்துல ஹெல்ப் கேட்டுக்கலாம். இப்ப வண்டி எடுங்க.” காரில் சென்று கொண்டிருக்கும்போதே எதை எப்படி செய்யலாம் என்று பேசி அகிலா இருக்குமிடம் தாம்பரம் தாண்டி படப்பை செல்ல மணி ஏழு ஆனது. அகிலா வீட்டினருகே காரை நிறுத்தி, “தாண்டவ்ணா என்னை அவங்களுக்கு தெரியும்” என்றவள் எதோ பிடிபட, “சே... இப்ப தெரியாதுல்ல மறந்திட்டேன். உங்களுக்கு அகியைத் தெரியும்தான?” என்று நிறுத்த தாண்டவ் சம்மதமாய் தலையசைத்தான். “அப்படின்னா அவளை யாருக்கும் சந்தேகம் வராம வெளில கூப்பிட்டு வந்திடுங்க.’”
“நான் பார்த்துக்கறேன் பாப்பா. நீங்க கவலைப்படாதீங்க” என்று கிளம்பியவனை... “தாண்டவ்ணா அவ மாமா பையன் முரடன். பார்த்து பத்திரம்” என்றாள்.
“சரிங்க தங்கச்சி” என்று பூக்கூடை ஒன்றை தோளில் தூக்கி வீட்டினுள் நுழைய, யாரென்று கேட்ட பெண்மணியிடம், “பூவும், மாலையும் சொல்லியிருந்தாங்கமா” என்றான்.
“ஓ... வாப்பா. மொத்தம் எவ்வளவாச்சி?”
“ஏற்கனவே பேசினதுதான்மா. அதிகம்லாம் வேண்டாம்.”
“இதுவே அதிகம்பா.”
“வியாபாரிக்கும் லாபம் வேணுமேம்மா. சரி சரி பேசிட்டிருக்காத. இந்தா பணம் சரியாயிருக்குதா பார்த்திரு. அதோ அந்த ரூம்ல வச்சிட்டு போ” என்று உள்ளே சென்றார்.
அறைக்குள் நுழைந்தவன் அகிலாவைத் தேட, அங்கிருந்த கட்டிலின் ஓரத்தில் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தவளைப் பார்த்து சைகை செய்தான். அவளோ திரும்புவதாக இல்லை. அவளருகிலிருந்த இரண்டு நடுத்தரவயதுப் பெண்கள் என்ன என்று விசாரித்து “இங்க வச்சிட்டுப்போ” என்று சொல்ல ஓரமாக வைத்தவன் திரும்பவும் அவளைக்காண, அவள் திரும்பிப் பார்ப்பதற்கு வழியில்லை என்றதும், ‘இவங்க தேறமாட்டாங்க போல! என்ன பண்ணலாம்’ என்று யோசிக்க அதே நேரம் கரண்ட் கட்டாக, “காட்ஸ் க்ரேட்!” என்று செல்லை எடுத்து வெளிச்சம் பரப்பியவன் அவளிருக்குமிடத்தை கணக்கிட்டு பின் செல்லை அணைத்து அவளின் கைபிடிக்க, சத்தம் போடுவாள் என்று தெரிந்தே அவள் வாய்மூடி “தப்பிக்கணும்னா சத்தம் போடாம வாங்க. நான் தாண்டவ்” என்று சொல்லி மெல்ல வெளியே வந்தார்கள்..
உருவத்தை வைத்தது அங்கிருந்த ஒருவர் “யாருப்பா அது?” என்று கேட்க...
எதிர்பாராத சத்தத்தில் அதிர்ந்தவன், “நான் பூ கொண்டு வந்தேங்க. வச்சிட்டேன். டைமாகுது அதான் கிளம்பிட்டேன்.”
“ஆங்... சரி சரி” என்று நகர்ந்தவருக்கு சந்தேகம் வந்து, “என்னப்பா உன் பின்னாடி ஏதோ ஒரு உருவம் தெரியுது?”
“என் பின்னாடியா? இந்த நேரத்துல பேய்தான வரும். அச்சச்சோ... சொல்லவே இல்லையேங்க. இந்த வீட்ல பேயிருக்கா? அது என் பின்னாடி வருதா? இப்ப நான் என்ன பண்றது?” என்றதும் அகிலா அவனைக் கிள்லினாள்.
‘ஆஆஆ...’ என்று கத்தியவன் வாயை அவள் கையால் மூட, “என்னப்பா சத்தம்?” என்ற குரலுக்கு, “பேய் அடிச்சிருச்சீங்க” என்று வீட்டு வாசல் தாண்ட கரண்ட் வர சரியாக இருந்தது.
மற்றவர்கள் அவர்களைப் பார்த்து கூச்சலுடன் ஓடி வர, சுபா இருவரும் ஓடி வருவதைப் பார்த்து கதவைத் திறந்து வைத்து காரை ஸ்டார்ட் செய்திருக்க... கார் அருகில் வந்து அகிலாவை உள்ளே தள்ளி தாண்டவனும் உட்கார கார் பறந்தது.
இருவரும் ஆசுவாச மூச்சிவிட, “ஷப்பா! தப்பிச்டோம்டா” என்ற அகிலா... தாண்டவிடம் திரும்பி உங்களுக்கு நான் பேயா? பேய் அடிச்சிருச்சா உங்களை!” என்று அவனை அடிக்க...
“பாருங்க பாப்பா நான் பேயடிச்சிருச்சின்னு சொன்னதை நிரூபிக்கிறாங்க.”
“ஹேய், ஹலோ! பேய் எப்படி அடிக்கும்னு காட்டட்டுமா? அது உச்சந்தலையில் இப்படி அடிக்கும்” என்று கையை அவன் தலைக்கு நேராக தூக்கி, “அடிச்சிக் காட்டட்டுமா?” என்றாள்.
“ஆத்தாடி! நான் எங்கப்பா, அம்மா தவமாய் தவமிருந்து பெத்த ஒரே பையன். பேய்கிட்ட மாட்டி அவஸ்தைபட நான் தயாராயில்லை” என்று விளையாட்டுக்கு சொன்னவனுக்குத் தெரியாது கடைசிவரை அந்த பேய்கூடதான் குடும்பம் நடத்தப் போகிறானென்று.
இருவரது சண்டையையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த சுபாவிற்கு மனதில் ஒன்று தோன்ற அதை நடத்தவும் முடிவு செய்தாள். வந்ததும் அழுவாள் என்று எதிர்பார்த்ததை விட தாண்டவிடம் வாயடிக்கும் தோழியை பூடகமாக பார்த்தாள்.
“தங்கச்சி காரை நிறுத்துங்க. நான் ட்ரைவ் பண்றேன்” என்றதும் காரை நிறுத்தி சுபா பின்னால் அமர... “ஹேய்! நீங்க யாரு? சுபா வரலையா?” என்றாள் அகிலா.
“அடிப்பாவி நான்தான்டி சுபா.”
“சுபாவா! இல்ல சொய் சொல்றீங்க?” என்றவளுக்கு சந்தேகம் தீரவில்லை.
“ஆமா இவகிட்ட பொய் சொல்லி அவார்ட் வாங்கப்போறாங்க. லூசு அகி எனக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்ல முகம் முழுக்க அடிபட்டதால பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருக்கு. அதான் உனக்கு அடையாளம் தெரியலை.
அதிர்ச்சியை முகத்தில் காட்டி, “எனக்கு எதுவுமே தெரியாதுடி சுபா சாரிடி” என்றாள் வருத்தமாக.
“லூசு! இரு மாமாவுக்கு சொல்லிக்கிறேன்” என்று மாமனாருக்கு போனில் விஷயத்தை சொல்லி வைத்து அகிலாவிடம் திரும்பினாள்.
“இருந்தாலும் அழகாத்தான்டி இருக்க.”
“ஹலோ எங்க பாப்பா எப்பவும் அழகுதான்” என்று தாண்டவ் இடையிட...
“வாங்க சுபா கொள்கைபரப்பு செயலாளரே” என்று அவனை நக்கலடித்து தோழியிடம் திரும்பி, “சுபா சாப்பிட எதாவது இருந்தா குடு பசிக்குது.”
“ஏன்டி நான் உன்னைக் காப்பாத்தணுமேன்னு பயங்கர டென்சன்ல இருக்கேன். நீ என்னடான்னா கூலா சாப்பிட எதாவது இருக்கா கேட்கிற?”
“அதான் என்னோட டென்சனை நீ சுமக்குறியே. அப்புறம் நான் ஏன் ஃபீல் பண்ணனும். ஒரு விஷயத்துக்கு ஒருத்தர் டென்சனானா போதும். முதல்ல நான் கேட்டதைக் கொடு” என்றாள்.
“எனக்குன்னு வந்து சேருறீங்க பாரு. உன்னைய!” என்று இரண்டடிகள் போட்டு, அங்கிருந்த கூல்டிரிங்ஸும், பிஸ்கட்டும் எடுத்துக் கொடுத்தாள். வரும்பொழுது ஹோட்டலில் சாப்பாடு வாங்கிவர, அனைவரும் சாப்பிட்டு முடித்து அகிலாவிடம் என்னவென்று விசாரித்தாள்.
“இந்தப் பிரச்சனை கிட்டத்தட்ட ஆறுமாசமா நடக்குது சுபா. அம்மாவுக்கு அவங்கண்ணன் மேல குருட்டுத்தனமான பாசம். அவர் பையனைத்தான் மேரேஜ் பண்ணிக்கணும்னு ஒரே தொல்லை. அப்பா சரியான தண்ணி வண்டி. அவரை எதுலயும் சேர்க்க முடியாது. நகைபோட்டு கட்டிக்குடுக்க முடியாதுன்ற பயம் வேற. அவன் அந்த சங்கர் அவனோட பார்வையும், பேச்சும் சரியான பொறுக்கி. நல்லவன்னு சொல்ல எந்த நல்ல பழக்கமும் அவன்கிட்ட கிடையாது. எனக்கு முன்னாடியே எத்தனை பொண்ணுங்ககிட்ட வம்பிழுத்து அடிவாங்கியிருக்கான் தெரியுமா?”
“முன்னாடி ஒரு டைம் கேட்டப்ப எனக்குப் பிடிக்கலன்னு சொன்னேன். கொஞ்ச நாள் ஆறப்போட்டு இப்ப திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க. என்ன இந்த டைம் எல்லாவிதத்திலும் தப்பிக்க முடியாதபடி என்னை லாக் பண்ணிட்டாங்க. எங்கம்மாவுக்கு சொந்தம் விட்டுபோயிடக்கூடாது. அவனுக்கு படிச்ச பொண்ணு வேலைக்குப் போயாவது தன்னைக் காப்பாத்துவான்ற எண்ணம். அதுக்கு என்னை கல்யாணம் பண்ணினால்தானே முடியும். அதான் அம்மாவை கைக்குள்ள போட்டுட்டு என்னை சிக்க வச்சிட்டான்.”
அவள் தரப்பை அமைதியாக கேட்ட அனைவரும் என்ன செய்வதென்று அறியாமல் இருக்க... “சரிமா போய் படுங்க. நாளைக்கு காலையில பேசிக்கலாம்” என்றனுப்பினார் விவேக்.