• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
19



கயல்விழி பால்கனி சென்ற பொழுது அங்கிருந்த குருமூர்த்தியைப் பார்த்ததும் உதட்டில் புன்னகை ஒட்டிக்கொள்ள, அவரைச் சீண்டத் தோன்றியதோ!

வேடிக்கை பார்த்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவர் முன்னால் உள்ள சேரில் அமர்ந்து நிலாவைப் பார்த்து, “நிலா எப்படியிருந்தாலும் அழகுதான்ல சார்?” என்றாள்.

அதுவரை எதோ தீவிர சிந்தனையிலிருந்தவர் சட்டென தலை திருப்பிப்பார்க்க, கயலை அங்கு எதிர்பார்க்கா விழிகள் சிறு பயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்து கடைசியில் அவள் முகத்தில் நிலைகொண்டது.

“யாரை சார் தேடுறீங்க? இப்போதைக்கு யாரும் இல்ல. சொல்லுங்க சார்? இளநாதன் எப்படி இளங்கதிரானான்? சர்ஜரி பண்ணனீங்களா? இல்ல கீழ விழுந்ததுல எங்கண்ணனுக்கு அம்னீஷியா மாதிரி எதாவது? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க சார்?” என்றாள் அவர் முகத்திற்கு நேரே.

“என்ன உளர்ற நீ? சின்னப்பொண்ணுன்னு எதையும் கேட்காம இருந்தா... என்ன பிரச்சனை உனக்கு அதைச் சொல்லு முதல்ல?”

“உங்களுக்குத் தெரியாதா?” நக்கலான பதில் அவளிடம்.

“உளறல்களுக்கு அர்த்தம் பண்ண எனக்கு வராது. எதுக்காக எதை மனசுல வச்சிக்கிட்டு இப்படிப் பேசுற தெரியல. ஆனா நீ நினைக்கிறது தப்பு.”

“நான் என்ன நினைச்சேன்? எனக்கு மறந்திருச்சி சார் கொஞ்சம் சொல்றீங்களா?”

அவரோ பதில் பேச முடியாமல் பற்களைக் கடிக்க...

“என்னோட ஒரு கேள்விக்குக் கூட பதில் வரல சார்?”

“அப்ப நீ கேட்கிற கேள்வி அர்த்தமில்லாததுன்னு அர்த்தம்.”

“அர்த்தத்தை அனர்த்தமாக்கப் பார்க்கறீங்க. இட்ஸ் ஓகே. அது உங்க பிரச்சனை. இளநாதன் எப்படி இளங்கதிர் ஆனான்றதை சொல்லுங்க?”

“அவன் இளநாதன் இல்ல. என் சொந்தப்பிள்ளை இளங்கதிர்” என்றார் கடினமான குரலில்.

ஹா..ஹா என சத்தமாகச் சிரித்தவளை... “மெல்ல சிரி சிவா வந்திரப்போறா. அவள் காதுல உன் உளறல் கேட்கக்கூடாது” என்று சீறினார்.

“சார் ஒரு விஷயம் தெரியுமா? அன்னைக்கே சொன்னேன் நினைக்கிறேன். உண்மையும், விதையும் ஒண்ணுதான். எவ்வளவுதான் மண்ணுக்குள்ளப் போட்டு அழுத்தினாலும் விருட்சகமா ஒருநாள் வளர்ந்து நிற்கும். அப்ப உங்களால சின்னச் செடிதானன்னு பிடுங்கி எறிஞ்சிர முடியாது.”

அவரின் அமைதி தொடர... “சார் ஒரு மனுஷனோட உருவத்தை மாத்தலாம். குண இயல்பு கூட இருக்கிற இடத்தைப் பொருத்து மாறும். ஆனா, அவனோட குரல்...” என்றதும் குருமூர்த்தி திகிலடித்தாற்போல் அவளைப் பார்க்க... “அதே குரல் வயசுக்கேத்த வித்தியாசம் மட்டுமே! மங்கைக்கு தெரியாமல் இருக்கலாம். எங்க அத்தைக்கு சந்தேகம் வந்தாலும் செத்தவன் எப்படின்னு விட்டிருக்கலாம். ஆனா, நான் பிறந்ததிலிருந்து அவனோடவே இருந்தவ. அதே மாதிரி யாரும் மறுக்கவே முடியாத இன்னுமொரு அடையாளமும் இருக்கு.”

“இங்க பார் நீ என்ன சொன்னாலும் இவன் என் பையன்தான். இரு வர்றேன்” என்று வேகமாக எழுந்து சென்றவர், பிறந்தது முதல் இப்பொழுது வரையிலான போட்டோக்கள் சர்டிபிகேட்களை எடுத்து வந்து காண்பித்து, “நல்லா பார். கதிர் எங்க பையன்றதுக்கான ஆதாரம்.”

“சரிங்க சார். உங்க பையனோட ஹிஸ்டரி எனக்கெதுக்கு. என் அண்ணனைப் பற்றிச் சொல்லுங்க?” என்றாள் இது எதையும் நம்பமாட்டேன் என்ற உறுதியுடன்.

“நானும் அவனைப்பற்றிதான் சொல்றேன்” என்றுவிட்டு சட்டென நாக்கைக் கடித்தார். பளிச்சென்ற மின்னல் அவளிடம் வர... “உன் அண்ணன் கதிர் கிடையாதுன்றதைத்தான் சொல்றேன்” என்றார் வேகமாக.

“ஓ... அப்ப குரல்” என்றாள் அவரை ஆழம் பார்த்தபடி.

“குரல் வச்சிலாம் யாரும் யாரையும் அடையாளம் காண முடியாதுமா. கதிர் மாதிரி குரல் உள்ள சிலரை நான் கூட்டிட்டு வரவா?”

“ம்... ஓகே ஒரு பாய்ண்ட் அவுட்” என்றதும் குருமூர்த்தி சிரிக்க...

“என்ன சிரிப்பு? ஒரு பாய்ண்ட்தான் அவுட்னு சொன்னேன்.”

“ஹ்ம்.. அப்ப இந்த ஆதாரத்தை நம்பல?”

“ம்கூம்.. நம்புற மாதிரி நீங்க எதையும் காண்பிக்கல சார். எனக்குத் தேவை உண்மை மட்டுமே!”

“அதைத்தான் நீ நம்பலையேமா!”

“நம்புற மாதிரி நீங்க சொல்லலையே சார்.”

குருமூர்த்திக்கு தலைவலிப்பது போல் தோன்ற லேசாகத் தலையை அழுத்தி, “நான் தூங்கப்போறேன்” என்றார்.

“உண்மையைச் சொல்லிட்டா தலைவலி குணமாகும். லைஃப்ல எந்த குழப்பமும் இல்லாம நிம்மதியாயிருக்கலாம் சார்.”

சட்டென்று கோபம் வர, “நான் சொன்னதுதான் உண்மை. நம்புறதும் நம்பாததும் உன் விருப்பம்” என்று நடக்க ஆரம்பித்தவரை... “ஓகே சார் நான் சிவகாமி அம்மாகிட்டயே கேட்டுக்கறேன்” என்ற வார்த்தை நிறுத்த... திரும்பி வந்து தொப்பென்று சேரில் அமர்ந்தார்.

என்ன செய்வது என்ன பேசுவதென்ற அவருக்குப் புரியவில்லை. ‘உண்மையைச் சொன்னால் இந்தப்பெண் ஒத்துக்கொள்வாளா? அதைத்தாங்கும் சக்தி இவளுக்கு இருக்கிறதா? எதை அறியத் துடிக்கிறாள் இவள். கதிர் என் பையன் என்பதை எப்படிப் புரியவைப்பது? சின்னப்பெண்ணை வார்த்தைகளால் துன்புறுத்தவும் மனமில்லை அவருக்கு. நாசூக்காகச் சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறாளே!’ மனம் தனக்குள் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுக்குடைய...

அவரை மிகவும் நோகடிக்கிறோம் என்று கயலுக்கும் புரிந்தது. இன்று தன் அண்ணன் உயிரோடு இருப்பது இவரால்தானே. தன்னையே சமாதானப்படுத்தி, “நீங்க உண்மையை மறைக்கப் பல காரணம் இருக்கலாம் சார். எனக்கு உண்மையை வெளிக்கொண்டு வந்து அவன் என் அண்ணன்னு ப்ரூப் பண்றதுக்கு ஒரே ஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதும்” என்றாள் அமைதியாய்.

மொத்தக் கலவரமும் அவர் முகத்தில் வந்து போக...

“நான் அப்படிச் செய்யமாட்டேன் சார். செத்துட்டதா நினைச்சவன் உயிரோட இருக்கிறதே வரம்தான் சார். அவனுக்கு இன்ஷியல் கொடுத்து நல்ல மனிதனாகவும் வளர்த்திருக்கீங்க. இதுக்கே என் அண்ணனை நான் உங்களுக்கு விட்டுக்கொடுக்கலாம். எனக்கு உண்மை மட்டும்தான் தேவைப்பட்டது. அப்பா அம்மா எல்லாரும் கண்முன்னாடி...” துக்கம் தொண்டையடைத்து கண்களில் கண்ணீர் வர, “பிரிவுன்றது பழகிப்போயிருச்சி சார். உங்ககிட்டயிருந்து என் அண்ணனைப் பிரிச்சிட்டுப் போற ஐடியால நான் இல்ல. அத்தையும் நானும் தனிதான்னு நினைச்சிட்டிருந்தேன். இப்ப அத்தைக்கு கூட அவங்க பிள்ளைங்க கிடைச்சிட்டாங்க. நான் மட்டும் அனாதையா...”

“ஐயோ ஏன்மா இப்படிப் பேசுற? உன்னை அப்படிலாம் விட்டுறமாட்டோம்.”

“ஹ்ம்... உண்மைதான சார். இனிமேல் யார்கிட்டயும் எதுவும் சொல்லமாட்டேன். நீங்களா மனசு வந்து உண்மையைச் சொன்னா சந்தோஷப்படுவேன். இந்த விஷயம் நமக்குள்ள முடியணும்னாலும் முடிஞ்சிரட்டும். என் மனசுல உள்ளதை ஓபனா கேட்கணும் தோணிச்சி கேட்டுட்டேன். அப்ப ஏற்கனவே சொன்னதை எங்க போய் எழுதன்னு கேட்டீங்கன்னா... சாரி.. நான் பேசின எதையும் உங்க வீட்ல சீரியஸா எடுத்துக்கல. அதை அவங்க மறந்துட்டாங்க. இனிமேல் நான் அந்தப் பேச்சை எடுக்கமாட்டேன். பட், அண்ணான்னு கூப்பிடுறதை உங்களால தடுக்க முடியாது. குட் நைட்” என்று திரும்ப...

“அண்ணான்னு கூப்பிடுறதை யார் தடுத்தா கயல்?” என்றபடி சிவகாமி நின்றார்.

சில நொடிகள் இருவருக்குள்ளும் சுவாசம் நின்று வந்தது.

“அது அம்மா இளா அண்ணனைச் சொன்னேன். சார் அண்ணன் சொல்லாம தெலுங்குல அண்ணையா சொல்லு சொல்றாங்க. நீங்களே சொல்லுங்க? நாம பிறந்தது வளர்ந்தது எல்லாமே தமிழ்ன்றப்ப எதுக்கு தெலுங்குல கூப்பிடணும்? அதான் முடியாது சொல்லிட்டிருந்தேன். சரி நீங்க இன்னும் தூங்கலையா?”

“தூங்கிட்டுதான் இருந்தேன்மா. திடீர்னு முழிப்பு வந்ததும் எழுந்து வந்தேன்.”

“சார்கு தலைவலின்னு சொன்னாங்க. தைலம் தடவி படுக்க வைங்க. பால்கனியில பனிக்காற்று வேற. நான் ரூம்கு போறேன்” என்று சென்றாள்.

“ரொம்ப நல்ல பொண்ணுங்க. எவ்வளவு உரிமையா பேசுறா தெரியுமா? அப்படியே நம்ம கதிரைப் பார்த்த ஃபீல்தான் வருது. நமக்கு இப்படி ஒரு பொண்ணு இல்லன்ற வருத்தம் இவளைப் பார்த்ததும் வந்திருச்சி. பேசாம இவளைத் தத்தெடுத்திருவோமா?”

கயல்விழியிடம் பேசி முடித்ததில் அவருக்குமே இந்த எண்ணம் வந்தது. பொறுமையா நிதானமா நேருக்குநேர் நின்னு உண்மையைத் தெரிஞ்சே ஆவேன்னு சொன்னவ, என் அண்ணன் நல்லதுக்காக விட்டுக்குடுத்துட்டுப் போறேன்னு போறா. அவனை விட்டுக்கொடுக்க நீ யார் பெண்ணே? உண்மை தெரிஞ்சா இதைப் பேசுவியா? அப்பவும் இதே மனநிலையில் இருப்பியா?’

“என்னங்க யோசிக்கிறீங்க? உங்களுக்கு இஷ்டம் இல்லையா?”

“சிவா சொல்லி என்னைக்காவது மாட்டேன் சொல்லியிருக்கேனா. நல்ல நாள் எப்பன்னு யோசிச்சிட்டிருக்கேன். சீக்கிரமே உன்னோட ஆசையை நிறைவேத்துறேன் சிவா. கதிர் கயல்னு நமக்கு இரண்டு பிள்ளைங்க சரியா.”

“கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்குங்க.”

“சரி வா தூங்கலாம்” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.

“உன் லட்சியம் என்னாச்சி மங்கை? ஹாயா புருஷனோட செட்டிலாயிட்ட போல. அப்ப இத்தனை வருஷக்கனவு லட்சியம்லாம் என்னாச்சி? உன் குடும்பத்தை அழிச்சவங்களை மன்னிச்சிட்டியா நீ? தப்பு மங்கை. மன்னிக்கிற எதையும் அவங்க செய்யல. ஏதோ ஆடு மாடு வெட்டுற மாதிரி வெட்டிப் போட்டுட்டுப் போயிட்டானுங்க. ஆட்டை வெட்டினாலே சண்டை போடுவியே... அவங்க வெட்டினது உன் ரெத்த உறவுகளை. உன்னைப் பெத்தவர் கூடப்பிறந்தவங்கன்னு தாண்டி எல்லாரையும். உன் கோபம் எங்க போச்சிது? அந்த வெறி என்னாச்சி? ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்க? நீ இருக்க வேண்டியது அணைப்பட்டி. சீக்கிரமே அவங்களைப் பழிவாங்கிட்டு உன் புருஷன்கிட்ட வா. இப்ப போ மங்கை... பழிவாங்கு... எழுந்திரு மங்கை...” தனக்குள் ஓங்கி ஒலித்த அக்குரலின் வேகம் தாளாமல் “நா..நான் வர்றேன். இதோ” என மெல்லிய முனகலை வெளியிட...

சிறு சத்தத்திலேயே எழுந்த இளங்கதிர் “மொழி என்னாச்சி?” என்றான்.

“நான் வர்றேன்” என்ற வார்த்தை திரும்பவும் வர ஏசியையும் மீறிய வியர்வை அவளிடத்தில்.

“மொழி எழுந்திருமா? என்ன செய்யுது?” என பதற... கணவனின் உலுக்கலில் கனவிலிருந்து வெளிவர வேகமாக எழுந்தமர்ந்தவளின் முகத்தில் பயமே அதிகமிருந்தது. துணி எடுத்து அவளின் முகம் துடைத்து தண்ணீர் கொடுத்துக் குடித்ததும் சற்று ஆசுவாச மூச்சுவிட்டாள்.

“இப்ப ஓகேவா மொழி?”

“ம்...”

“என்னமா கனவா? நான் வர்றேன்னு புலம்பின?”

“அது.. நான் அப்பா... அண்ணா... லட்சியம்.. பழி...”

சட்டென்று அவளின் வாய்மூடி முகத்தில் விழுந்த முடி விலக்கி “எதையும் யோசிக்காம படுடா” என்றான்.

“நான் போகவா?” என்றாள் மென்குரலில்.

“காலையில் பேசிக்கலாம் படுமா” என்றதும் அவன் கையை விடாமல் பிடித்து படுக்கையில் சாய்ந்தவள், “சாரி” என்றாள்.

எதுக்கு என்பதாய் பார்க்கையில் சட்டென்று குறும்பு தலைதூக்க... “ஆர் யூ ரெடி பேபி” என்றான் கண்ணடித்து.

“ப்ச்.. நீங்க அடங்கமாட்டீங்களா?”

“நீ அடக்கு ஏர்போர்ட். அதுக்குதான கல்யாணம் பண்ணியிருக்கேன்.”

“உங்கள... நான் அடக்கணுமா? இதெல்லாம் ஓவர் பாஸ். என்னை அடக்கவே நாலு பேர் வேணும். இதுல உங்களையா...”

“ஹேய் மொழி.. உன்னை அடக்க நான் ஒருத்தன் போதும் பார்க்குறியா” என்று அவளை நெருங்க...

அவனின் இரட்டை வசனத்தில் சட்டென்று முகம் சிவக்க “நான் வாய் பேசுறதைச் சொன்னேன். நீங்க எதோ தப்பா...”

“ஹாஹா நானும் நீ சொன்ன அர்த்தத்துலதான் சொன்னேன். ஆனா, சொல்லல” என கண்சிமிட்டி “ஆர் யூ...”

ஆரம்பிக்கும்போதே அவன் வாய்மூடி, “பேசாம படுக்குறீங்களா? ஒண்ணு சொன்னா ஒன்பது பேசுறது. பேட் பாய்.” அவன் எதோ சொல்ல வாயசைக்க... “மூச்.. சைலண்ட்டா படுங்க” என்றதும் அவனின் கண்கள் சிரிக்க... மனம் தித்திக்க இருவரும் நிம்மதியாக கண்ணுறங்கினார்கள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
காலையில் எழுந்ததிலிருந்து வீடே பரபரப்பாக இருந்தது. ஏனோ தங்கள் வீட்டில் இத்தனை மக்கள் இருப்பதில் சிவகாமிக்கு அளப்பறிய சந்தோஷம். மூவருமே கலகலப்பாக இருந்தாலும் இப்பொழுது இருக்கும் உயிர்ப்பு அதில் இல்லையென்றுதான் தோன்றியது சிவகாமிக்கு. அதையே கணவரிடமும் சொல்ல ஒப்புக்கொள்ளவே செய்தார் குரு.

காலை உணவு முடிந்ததும் அனைவரும் ஹாலில் இருப்பதைப் பார்த்த கதிர் தமிழரசியிடம், “அத்தை நான் ஒண்ணு சொன்னா என்ன ஏதுன்னு கேட்காம ஏத்துக்குற அளவிற்கு என்மேல் நம்பிக்கையிருக்கா?” நேரடியாகவே கேட்டான்.

“நம்பிக்கை! இதைப் பதினைந்து வருஷமா கயலைத் தவிர யார் மேலயும் வைக்கலப்பா. காரணம் ஒருத்தனை நம்பினதாலதான் என் குடும்ப...” அதைச் சொல்கையில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே கண்கலங்கியது. அடைத்த துக்கத்தை சரிசெய்து, “அதுக்கப்புறம் யாரையும் நம்பினதில்ல. நம்பினதில்லன்றதை விட யார்கிட்டயும் பழகுறதேயில்ல. ஏனோ தெரியல முதல்முதலா உங்களைப் பார்த்ததிலிருந்து மனசுல ஒரு இனம்புரியா தவிப்பு. ஏன் எதுக்குன்னு தெரியல. இப்பவரை அந்தத் தவிப்பு போகல. உங்களை நம்பினதாலதான் என் பொண்ணும் பை...” பையன் என சொல்லப்போனவர் நிறுத்தி, “இங்க இருக்கிறது தெரியாமலேயே இங்க கிளம்பி வந்தேன். இதுக்கு மேல எப்படிச் சொல்றது தெரியல.”

“தேங்க்யூ அத்தை. உங்க நம்பிக்கை வீண்போகாது. இந்த பேப்பர்ல உங்க எல்லார் கையெழுத்தும் வேணும்.”

நிஷாந்த் அப்பொழுது சரண்யாவுடன் வர... அவர்களைச் சாப்பிடச் சொல்ல... சாப்பிட்டு வந்ததாகச் சொன்னதும் தங்களுடனே அமர்த்தி அவனையும் கையெழுத்திடச் சொன்னான்.

சிவகாமி சரண்யா தவிர அனைவரிடமும் கையெழுத்து வாங்க... குருமூர்த்தியோ, “என்னோடது எதுக்கு?” என்றார்.

“கேள்வி கேட்காம போடுங்கப்பா. எல்லாம் நல்லதுக்காகத்தான் கேட்கிறேன்” என்றதும் சம்மதித்து அவரும் கையெழுத்திட, “ஒரு மணிநேரத்துல வந்திருறோம்” என்று நிஷாந்த் பிரஷாந்தையும் கூட்டிச்செல்லவும், அவர்களுடனே குருமூர்த்தியும் ஆபீஸ் சென்றார்.

காமாட்சியின் அருகே அமர்ந்த தமிழரசி அவர் கைபிடித்து, “நன்றின்னு ஒரு வார்த்தையில உன்னை ஒதுக்க மனசு வரலமா. இத்தனை வருஷம் என் பொண்ணை வளர்த்துப் படிக்கவச்சி என் நாத்தனாரை அப்படியே உன் உருவத்துல பார்க்கிறேன்மா. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ செய்ததுக்கு நன்றி சொல்லி மாளாது” என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.

“அச்சோ! ஏன் இப்படிலாம் பேசுறீங்க? நானும் என் அப்பாவுமா தனியா இருந்தப்ப என் தனிமையைப் போக்க வந்தவ திருமொழி. இவள் வந்து கொஞ்ச நாள் நடந்த சம்பவத்தோட பாதிப்புல இருந்தாலும் அடுத்தடுத்து வந்த நாட்கள்லாம் ரொம்பவே சந்தோஷமான நாட்கள். படிச்சா மனசளவுல தைரியமா இருப்பாள்னுதான் அவ ஆசைப்பட்டதைப் படிக்கவச்சி, வேற என்னென்ன கத்துக்கணும் நினைச்சாளோ அதையும் கத்துக்க வச்சேன். என்ன ஒரு குறைனா இவளோட தாத்தாவை எங்களால காப்பாத்த முடியல. பேத்தியைக் காப்பாத்தணும்னே உயிரைக் கையில் பிடிச்சிட்டிருந்தாற்போல. எங்க கையில ஒப்படைச்சிட்டு அவர்...”

அவர் நிறுத்திய இடத்தில் அனைவருக்கும் கண்கலங்க, கண்ணீர் விட வேண்டியவளோ தொண்டையை சரி செய்து, “ஏன் அத்தை இப்பவாவது சொல்லலாம்ல?” என்று காமாட்சியிடம் கேட்டு பேச்சை மாற்றினாள். அவளைப் பொறுத்தவரை அழக்கூடாது. அழுதால் தான் பலகீனமாகிவிடுவோம் என்ற எண்ணம் உண்டு. மீறி துக்கமென்றால் கூட ஒன்றிரெண்டு சொட்டு கண்ணீரே அதிகம் அவளுக்கு.

“எதைச் சொல்லச் சொல்ற திரு?”

“அதான் அத்தை உங்களுக்கு ஏன் கல்யாணம் நடக்கலன்னு? ஒன் சைடும் இல்ல. ஊரைவிட்டும் போகல. லவ் பெயிலியரும் கிடையாது. என்ன காரணம்னு நானும் மூளையைக் கசக்குறேன். ம்கூம்... ஒரு வேளை ஜாதகம் சரியில்லையோ? இல்ல மேரேஜ் முன்னாடி லவரோ இல்ல மாப்பிள்ளையோ செத்துட்டாரா?”

“ஹா..ஹா திருமா. நீ என்னன்னு கேட்டாலும் காரணம் சொல்லமாட்டேன்” என்ற காமாட்சியைப் பார்த்த சிவகாமியின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.

“ஏன் காமாட்சி நீ கல்யாணம் பண்ணிக்கல?” அணைப்பட்டியில் இருந்த சமயம் கேட்டார் சிவகாமி.

தூரத்தில் அமர்ந்து கதிர், பிரஷாந்துடன் பேசிக்கொண்டிருந்த மருமகளைப் பார்த்தபடி, “கல்யாணம் பண்ணிக்கத் தோணலக்கா” என்றார்.

திருமொழி கேட்ட அத்தனை கேள்வியையும் சிவகாமி கேட்க, எல்லாவற்றிற்கும் மறுப்பு தெரிவித்த காமாட்சியிடம், “அப்ப திருதான் காரணமா?” என்றதில் அவளிடமிருந்த பார்வையைத் திருப்பி சிவகாமியைக் காண,

“என்ன காமாட்சி? அப்ப திருதான் காரணம்ல?”

“அக்கா அ..அது...”

“பரவாயில்ல சொல்லு. என் மூலமா இது அவளுக்குத் தெரியாது.”

“எனக்கு செவ்வாய் தோஷம் உண்டுக்கா. பரிகாரம் பண்ணியும் எதுவும் சரியா அமையல. என்னோட இருபத்தொன்பதாவது வயசுலதான் திரு எங்ககிட்ட வந்தது. அவளைத் தேற்றி ஸ்கூல் அனுப்புற வரை மாப்பிள்ளை பார்க்கிறதை அப்பா நிப்பாட்டி வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் தேடி அலைஞ்சி வந்த சிலதும், நகை பணம் இப்படி போயிருச்சி. மீறி வந்தவங்க திருவை காரணம் காண்பிச்சாங்க. உங்கப்பா காலத்துக்குப் பிறகு நீதான் பார்த்துக்கப் போறியா? இல்ல ஆசிரமம் எதிலாவது சேர்த்திருவியான்னு கேட்டாங்க சிலர். அதுலயே மனசு பாதி வெறுத்திருச்சி.”

“அதுல உச்சக்கட்டம் என்னன்னா, சின்ன வயசுல உன் பொண்ணு பண்ணின தப்புல பிறந்த பிள்ளையை, இப்ப தத்தெடுத்து அத்தைன்னு கூப்பிட வச்சிருக்கீங்களா? அதான் விடமாட்டேன்றீங்க போலன்னு ஒரு சந்தேகத்தை எழுப்பி, அதுதான் நிஜம்ன்ற மாதிரி பேசி மனசை உடைச்சிட்டுப் போயிட்டாங்க. அந்த டைம் எனக்கும் முப்பத்து மூணு வயசாகிருச்சி. இதுக்கு மேல கல்யாணம் குடும்பம் குழந்தை ப்ராப்தம் நமக்கில்லன்னு தோணிச்சி. எனக்கு வயசு ஏற ஏற கல்யாணமும் தள்ளிப்போனதுல அப்பா மனசளவுல நொந்து அது உடம்பைப் பாதிச்சி, ஒரு கட்டத்துக்கு மேல எங்களைத் தனியா விட்டுட்டுப் போயிட்டார்.”

“நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா. வேற யாரையும் உள்ள விடத்தோணலக்கா. இவளும் ரெண்டுக்கெட்டான் வயசுல இருக்கிற பொண்ணு. வர்றவன் எப்படியோ யாருக்குத் தெரியும். அதான் இவளுக்குப் பாதுகாப்பாவே இருந்துட்டேன். ஆனா, நல்ல குடும்பப் பிண்ணனியில உள்ள பொண்ணு அக்கா. பேச்சு செயல் எல்லாத்திலும் ஒரு மெச்சூரிட்டி இருக்கும். எதையும் சுயமா சிந்திச்சி யோசிச்சி செய்வா. இப்ப தோட்டம் எல்லாம் இவள்தான் பார்த்துக்கறா.”

“இந்த விஷயம் திருவுக்குத் தெரியுமா காமாட்சி?”

“அச்சோ அக்கா! எக்காரணம் கொண்டும் என் விஷயம் அவளுக்குத் தெரியக்கூடாது. கடைசிவரை தன்னால்தான்ற குற்றவுணர்ச்சியோட வாழ்வா. அவளை ஒரு காரணம்னு சொன்னாலும், இவள் இல்லாம இருந்திருந்தாலும் இப்படித்தான்னு விதியிருந்தா என்ன செய்திருக்க முடியும்? எனக்குத் துணையா கடவுள் அனுப்பினதாதான் நான் நினைக்கிறேன். நாம பேசினதை இத்தோட மறந்திருங்க அக்கா. பாருங்க எவ்வளவு அழகு என் மருமகள். இந்தப் பெருமையே போதும்கா என் வாழ்நாளுக்கும்.”

இப்பொழுது நினைக்கையில் சிவகாமிக்கு காமாட்சி அதிசயப் பெண்ணாகவேத் தெரிந்தார்.

சிவகாமியின் பார்வை உணர்ந்த காமாட்சி திரும்பிப்பார்த்து ‘பேசக்கூடாது’ என்பதைக் கண்களால் அனுப்பி புன்னகைத்துத் திருவைப் பார்த்தார்.

அதைக் கவனித்திருந்த தமிழரசிக்கோ எதோ புரிவது போலிருந்தது.

சிவகாமி காமாட்சி இருவரின் பார்வையும் சரண்யா கயலுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த திருமொழியின் மேலிருக்க... அவளுக்காக எதையும் செய்யலாம் என்ற தெளிவு அவர்கள் முகத்தில்.

மகளின் கேள்விக்கும், அவர்களின் பார்வைக்கும் சரியான அர்த்தம் கண்டுபிடித்த தமிழரசியோ விக்கித்து அமர, கண்கள் கலங்கியது. ‘நாம் செய்த புண்ணியம் நம் பிள்ளைகளைக் காப்பாற்றும் என்பது உண்மை. அதில் இன்னொரு பெண்ணின் வாழ்வு...’ மனம் கலங்கியது அவருக்கு.

“அம்மா ஏன்மா அழுறீங்க?”

தன்னருகில் மகளைக் கண்டதும் “தூசிமா” என்றார்.

“அதான.. தமிழரசின்னா ஸ்ட்ராங் பெர்சனாலிட்டியாச்சே” என்றாள் பெருமையாக.

“அத்தை எதாவது பிரச்சனையா?” என்ற கயலிடமும் அதையே சொல்ல, “இதை நம்ப நான் மங்கை கிடையாது அத்தை கயல்விழி. உண்மையைச் சொல்லுங்க?”

“சில உண்மைகள் தெரியாமல் இருக்கிறதே நல்லதுமா” என்று சிவகாமி காமாட்சியைப் பார்த்தவரின் பார்வையில் அவ்விருவரும் உயர்ந்து நின்றார்கள்.

இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பியவர்கள், சுற்றிப்பார்க்க கூப்பிட பெரியவர்கள் வர மறுக்க சின்னவர்கள் அனைவரையும் அங்கிருந்த முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றான் கதிர். கடைசியாக ஷாப்பிங் மால் வர சினிமாவில் மட்டுமே பார்த்த மால் கண்முன். வாவ்! என்ற வார்த்தை திரு கயல் பிரஷாந்திடம்.

“இங்க கிடைக்காத பொருளே கிடையாது. உங்களுக்கு என்னென்ன தேவையோ வாங்கிக்கோங்க. நிஷா புது வீட்டுக்கு என் சார்புல கொஞ்சம் பொருட்கள் ஆர்டர் பண்ணியிருக்கேன். நாளைக்கு வந்திரும். சரண்யா உனக்கு வேற எதாவது வேணுமாமா?”

“வேண்டாம் அண்ணா போதும். நான் அடிக்கடி வர்ற இடம்தான். தேவைப்படுறப்ப வந்து வாங்கிக்கறேன். நீங்க மொழிக்கும் கயலுக்கும் வாங்கிக்கொடுங்க.”

“சார்...” என நிஷாந்த் இழுக்க,

“சூ.. மச்சான் கடமைப்பா” என்று அவனை அமைதிப்படுத்தினான்.

“மச்சான் நானும் முதல்முறையா வர்றேன். சும்மா கலக்கல்தான்.”

“உனக்கு என்ன தேவையோ வாங்கிக்கோ பிரஷாந்த். என்கிட்ட வாங்கணுமா யோசிக்காத. மலை ஏறணும்னாலும் மச்சானுங்க ஹெல்ப் வேணுமாம். எனக்கு எதாவது தேவைனா உங்ககிட்ட கேட்கத் தயங்கமாட்டேன். அதையே நீங்களும் பாலோ பண்ணனும் ஓகே.”

“எஸ் பாஸ்” என்ற பிரஷாந்தின் தலை கலைத்து திரு கயலுடன் அங்கிருந்த மொபைல் ஷாப்பில் நுழைந்து அவர்களின் மறுப்பைக் கண்டுகொள்ளாது, இருவருக்கும் ஒரே மாடலில் சற்று விலையுயர்ந்த டச் போனை வாங்கி, சிம் மெமரி போட்டு “ஒன் இயர்கு டேட்டா அன்ட் கால் ஃப்ரீ” என்று அவர்களிடம் கொடுத்தான்.

அங்கேயே ஜவுளி எடுத்து, இரவு உணவையும் முடித்து அங்கிருந்தே நிஷாந்த் சரண்யா அவர்களின் வீடு செல்ல... மற்றவர்களுடன் வீடு வந்த கதிருக்கு போன் வர வெளியே போய்வருவதாகச் சொல்லிச் சென்றான்.

தனியே டிவி பார்த்துக் கொண்டிருந்த திருவின் கண்கள் அதில் வந்த ப்ளாஷ் நியூஸையே வெறித்திருந்தது. சற்று நேரங்கழித்து வந்த கணவனிடம், “நாளைக்கு அம்மா கூட நானும் ஊருக்குப் போறேன். போகணும்” என்று அழுத்தமாக சொல்லிப் படுத்துக்கொள்ள, விக்கித்து நின்றான் கதிர்.
 
Top