- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
18
மாமியாரின் அருகில் சென்றமர்ந்த ஐஸ்வர்யா, “அத்தை நான் சொல்றது உங்களுக்கு இன்னுமே அதிர்ச்சியா இருக்கும். எப்பவும் உங்ககிட்ட பணக்காரத் திமிர் கொஞ்சம் இருக்கும். உங்க அக்காவோட கம்பேர் பண்ணினா கம்மிதான். அதனாலதான் நான் உங்ககிட்ட அதிகம் ஒட்டுறதில்லை. பூரணி அப்படிக் கிடையாது. பெண் பார்க்கப் போனப்ப நீங்க பாலிஸ்டா பேசின அனைத்தும் அவளுக்குப் பொக்கிஷமான வார்த்தைகள். உங்களை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். உங்க மேல அவளுக்கு லவ்வோ லவ் அத்தை!” என்றாள் புன்னகையுடன்.
மருமகள் சொல்வதை வியப்பாய்ப் பார்த்திருந்தார் ஆனந்தி. அவருக்கேத் தெரியும் தன் திமிரும், அதன் காரணமாக ஒரு சிலரைக் கண்டால் விலகிச் செல்வதும். பூரணியையும் வாய் வார்த்தையிலேயே வசியம் செய்தவர். திருமணத்திற்குப் பின் அவளிடமிருந்து விலகியிருக்கவே நினைக்க மறுநாளே அதையெல்லாம் உடைத்தெறிந்திருந்தாள் அவரது மருமகள். அவளின் அன்பும் ஒட்டுதலும் இப்போது நினைத்தாலும், அவ்வுணர்வைச் சொல்லி மாளாது. ‘எப்படி மாறினேன் நான்? கணவன் வார்த்தையிலிருந்த நம்பிக்கை. ஸ்வாதி போன்றோரின் இடையிடலால் அனைத்தும் மாறிப் போனதா?’
“நிஜம் அத்தை. வசீ போட்டோ பார்க்கும் முன்ன உங்களுக்காக ஒத்துக்கிட்டா. போட்டோ பார்த்ததும் மேடம் ஃபுல் பார்ம்ல லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. வசீயைப் பற்றிய உண்மை மூணாவது நாளே உங்க அக்கா மருமகள் மூலமாகத் தெரிஞ்சாலும் நம்பத் தயாராயில்லை. என்கிட்ட கேட்டப்ப நானும் மழுப்பிட்டேன். நைட் நீங்க பேசினதை கேட்ட பிறகுதான் உண்மைன்னே தெரியும். உங்க பையனை அந்தளவுப் பிடிச்சதால உண்மை தனக்குத் தெரியாத மாதிரி காட்டிக்கிட்டா. அதோட சேர்த்து அவளுக்கு இந்த வீட்டுல வேற ஒரு பிரச்சனையும் இருந்தது” என்றவள் குரல் மென்மையிலிருந்து கோபத்தைத் தத்தெடுத்திருந்தது.
“இங்கேயா? இங்கே என்ன?” என்றவர் குரலில் ஒரு உதறல். ‘மகனைப் பற்றிய உண்மை தெரிந்தும் இங்கே இருந்தவளுக்கு என்ன பிரச்சனை வந்திருக்கும்?’ மனம் திகிலுடனே கேள்வி கேட்டது.
“பூரணி வந்த ஒருசில நாள்லயிருந்து நாங்க அதிக நேரம் எங்க ரூமில்தான் இருப்போம். அதை ஏன்னு யோசிச்சிருக்கீங்களா அத்தை?”
“ம்.. நான் கேட்டதுக்கு ஒவ்வொரு நேரமும் ஏதேதோ காரணம் சொன்னான்மா. சேர்ந்து சாப்பிடக் கூப்பிட்டாலும் வரலை. ம்.. இல்லை வசீ அப்பா இருக்கும்போது மட்டும் வரமாட்டீங்க.” சட்டென்று மூளையில் ஏதோ உதிக்க, “ஆமா இப்பதான் தோணுது. அவர் இருக்கிறப்ப மட்டும் உன்னை இங்கே பார்க்க முடியாது. ஏ..ஏன்?” என்றார் குரல் நடுங்க.
“உண்மை கொஞ்சம் கசக்கும் அத்தை. ஏன்னா உங்க புருஷன் பூரணி மேல ஆசைப்பட்டார்” என்று உண்மையை சொல்லிவிட்டாள்.
“ஐஸ்வர்யா!” அலறியேவிட்டார் ஆனந்தி.
வசீகரனுக்கோ இன்னதென்று சொல்லமுடியா ஆத்திரம்தான் வந்தது.
இருவரின் உணர்வுகளையும் உணர்ந்தாலும், “கசப்பு கொஞ்சம் அதிகமாகிருச்சா அத்தை. ஆனா இதுதான் நிஜம்” என்று நடந்த அனைத்தையும் சொன்னாள்.
“இல்ல.. இருக்காது” என்று அழுதவருக்கு, உண்மை கசக்கத்தான் செய்தது. “அப்படி இருக்காதுடா கண்ணா” என்று மகனின் மார்பில் சாய்ந்து அழுதவரை அணைத்து, “இதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் நல்லாதான்மா இருக்கும். யாருக்கோ நடந்தாலே வெட்டிப்போடுற கோபம் வரும். நம்ம வீட்டுல.. அதுவும் வாழ வந்த பொண்ணுக்கு.. அதுவும் என் பரிக்கு...” என அவனின் கண்களிலும் கண்ணீர். “அப்பாவோட யோக்யதை அவளுக்கு முழுசா தெரியாதும்மா. அது தெரியாமலேயே வரமாட்டேன்றா. தெரிஞ்சா ஒரேடியா விட்டுட்டுப் போயிருவா” என்றான் வேதனையுடன்.
“வசீ கண்ணா அந்தப் பால்ல தூக்க மாத்திரை இருக்குன்னு அவருக்குத் தெரியாதுடா. அது எனக்கு வச்சிருந்த பாலை மாற்றி எடுத்துட்டுப் போயிருக்கார்.” ஏனென்றே தெரியாது கணவன்மேல் சிறிது நம்பிக்கை இருந்ததோ! பாவம்தான் அவரும்!
“அப்ப நைட் அவங்க அறைக்கு வந்ததை என்னன்னு நியாயப்படுத்தப் போறீங்க அத்தை?” என கோபமாகக் கேட்டாள் ஐஸ்வர்யா. இவ்வளவு சொல்லியும் இன்னும் அவருக்காகப் பேசுகிறாரே என்றிருந்தது.
“ஐயோ! நான் அவர் செய்ததை சரி சொல்லலைமா. சொல்லவும் மாட்டேன். மகளா பார்க்க வேண்டிய பொண்ணை, தப்பாப் பார்த்ததே கொலைக்குச் சமானம். அது தெரிஞ்சப்ப அந்தப் பொண்ணு ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைச்சிருக்குமே. தாயன்பை எதிர்பார்த்த பொண்ணுக்கு நான் என்ன செய்து வச்சிருக்கேன். அவள்கிட்ட மன்னிப்பு கேட்கக்கூடத் தகுதியில்லாமல் பண்ணிட்டார்டா அந்த மனுஷன்.”
“ஒவ்வொரு நேரமும் அவள் பார்வை சரியில்லை. அவள் பெரியவனைத் தப்பாப் பார்க்கிறா. சின்னவனைப் பற்றித் தெரிந்திருக்குமோ! அதனாலதான் இப்படிப் பண்றாளோன்னு... என்னென்னவோ சொல்லி சாதாரணமா நடக்கிற நிகழ்வைக்கூட என் பார்வையில் தப்பா காண்பித்து, நான் அவளை வெறுக்க ஆரம்பிச்சி மாமியார் திமிரைக் காட்டிட்டேன்டா. பெரிய பாவம் பண்ண வச்சிட்டார்டா” என்று புலம்பியவரை,
“அம்மா.. அம்மா ஒண்ணுமில்லை. சரியா போயிரும். சரி பண்ணிரலாம்மா. நீங்க அமைதியாயிருங்க” என்று சமாதானப்படுத்தினான்.
அவர் மனம் அமைதியடைய நேரம் கொடுத்த ஐஸ்வர்யா, “அத்தை! இதுல உங்க பெரிய பையன் பெயர் சம்பந்தப்பட்டிருப்பது அவங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சா நடக்கிற விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது. உணர்ச்சிவசப்பட்டு அவங்ககிட்ட சொல்லிராதீங்க. ஏன்னா பூரணி நல்லாயிருக்கணும்னு நினைக்குற முதல் ஆள் உங்க பையன்தான்.”
“சொல்ற மாதிரி எதுவும் நடக்கலையேமா. அவரோட குடும்பம் நடத்தியும் அவரைப்பற்றித் தெரியலையே. பேரன் எடுத்த பிறகும் அவர்...” விழிநீரைத் துடைத்து, “ப்ச்.. அடுத்து என்ன செய்யுறதுன்னு கூடப் புரியாமல் நிற்கிறேன்” என்றார்.
“அம்மா! இதை உங்ககிட்ட சொல்லாமலே விட்டுருக்கலாம். பரி என்னோட வந்த பிறகு அவளை நீங்க வெறுப்பாய் பார்க்கக்கூடாதுன்ற எண்ணத்துலதான் சொன்னது.”
“அவளை நான் வெறுக்கவா? ஹ்ம்.. அவள் என்னை வெறுத்து ஒதுக்காமலிருந்தா போதாதா. எனக்கு ஒரு மாதிரியிருக்கு கண்ணா. நான் போய் படுக்குறேன்” என்று கிளம்பியவரைத் தடுத்து, “உடம்புக்கு எதாவது செய்யுதாம்மா?” அவரின் சோர்ந்த முகம் பார்த்து உடல்நலம் விசாரித்தான் வசீகரன்.
“கொஞ்சம் படபடப்புதான்டா. உண்மையை ஏத்துக்கணும்ல அதான் ரெஸ்ட் எடுக்கணும் சொன்னேன். வேற ஒண்ணுமில்லை” என்று போய் படுத்துவிட்டார்.
“வசீ பூரணியை சமாதானப்படுத்தப் போகலையா?” என்றாள் ஐஸ்வர்யா.
“போகணும் அண்ணி. தொடர்ந்து தொந்தரவு பண்றோமோன்னு ஒரு உறுத்தல் வருது” என்றான் மென்குரலில்.
“நீங்க ஆசைப்பட்ட பண்ணின தொந்தரவுதான? இப்ப என்ன உறுத்தல்? ம்..” என்றாள் புருவம் உயர்த்தி.
“தினா ஒப்பிச்சிட்டானா? எனக்குத் தெரியாமல் கூட்டணி எதுவும் போகுதா என்ன?”
“அதெல்லாம் சொல்ல முடியாது. அடுத்து என்ன?”
“படையெடுப்புதான் அண்ணி” என்றான் புன்னகையுடன்.
“இப்பதான் பல்லு வெளிய தெரியுது. என் தங்கச்சியோட எப்பவும் சந்தோஷமாயிருங்க” எனும்போது எதோ சத்தம் கேட்க, “வசீ எதோ சத்தம் கேட்கிற மாதிரியில்ல” என்றவள் அச்சத்தத்தைச் சற்றுக் கூர்ந்து கேட்கையில் முனகல் சத்தம் போலிருந்தது.
“அண்ணி.. அம்மா..” தாயினதாக இருக்குமோவென்று சொன்னவன், “அம்மாதான்” என்று வேகமாக அவர் அறைக்குள் செல்ல, வியர்த்து நெஞ்சைப் பிடித்தபடி அனத்திக்கொண்டிருந்த தாயைப் பார்த்து, “அம்மா?” என்ற அலறலுடன் அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் அருகிலிருந்த மருத்துவமனைவில் சேர்த்து அவசர சிகிச்சைப் பிரிவு வாசலில் அமர்ந்திருந்தான். உடன் ஐஸ்வர்யா இருக்க, அந்த அவசரத்திலும் பையனை பக்கத்து வீட்டினர் பொறுப்பில் விட்டு வந்திருந்தாள்.
“தப்புப் பண்ணிட்டேன் அண்ணி. அம்மாகிட்ட சொல்லியிருக்க வேண்டாம்னு இப்ப தோணுது. இப்படி நடக்கக்கூடாதுன்னு தான் உண்மை தெரிஞ்சதுமே கேட்கலை. இன்னைக்கு பரியைப் பார்த்த டென்ஷன்ல... ப்ச்.. எல்லாம் என்னாலதான். நான் பைத்தியமானதாலதான இதெல்லாம்” என தன்போக்கில் புலம்ப,
“எப்ப வேணும்னாலும் தெரியப்போறதுதான் வசீ. அத்தைக்கு ஒண்ணும் ஆகாது. கவலைப்படாதீங்க” என்றாள்.
“எதுவும் ஆகக்கூடாது. ஆகாது!” தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
“உங்க அம்மாவுக்கு மைல்ட் அட்டாக் மிஸ்டர்.வசீகரன். வலி வந்ததும் பார்த்துக் கூட்டிட்டு வந்ததால காப்பாத்துறது சுலபமாகிருச்சி. நேரம் சென்று வந்திருந்தா சிக்கலாகியிருக்கும். இப்ப அவங்க சேஃப். யூஸ்வலா சொல்றதுதான் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. இரண்டு நாளைக்கு இங்கேயே இருக்கட்டும். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.”
“தேங்க் யூ சோ மச் டாக்டர். அம்மாவைப் பார்க்கலாமா?”
“ஐசியூல டிஸ்டர்பன்ஸ் இருக்கக்கூடாது. உள்ள போறதுக்கான உபகரணத்தோட தொந்தரவு பண்ணாம பார்த்துட்டு வாங்க. எங்களைவிட உங்களுக்குதான் அவங்க மேல அக்கறையிருக்கும். சோ, ஹாஸ்பிடல் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க. நாளைக்கு காலையில் நார்மல் வார்டுக்கு மாத்தியிருவாங்க. அப்ப மத்தவங்க வந்து பார்த்துக்கட்டும்” என்றதும் அவருக்கு நன்றி சொல்லி தாயைப் பார்க்கக் கிளம்பினான்.
“பூரணி! எனக்கென்னவோ அவர் உன்னோட சேர்ந்து வாழ ஆசைப்படுறார் தோணுது. நீ ஏன் அதைப்பற்றி யோசிக்கக்கூடாது” என்றாள் ஜனனி.
“இதைப்பற்றி பேச வேண்டாம்கா” என்றாள் பட்டென்று.
“அவங்க உண்மையைச் சொல்லாம முடிச்சது தப்புதான். இப்பதான் சரியாகிருச்சே பூரணி. அப்பவே அவரைப் பைத்தியம்னு சொன்னா விட்டுக்கொடுக்க மாட்ட. இப்ப எல்லாம் சரியாகி வந்திருக்கார். அப்புறமும்...”
“எதுவும் சரியாகலை. என்னை என்னன்னு நினைச்ச நீ? வசீகரன் நிலை பார்த்ததும் விட்டுட்டு வந்ததாகவா?”
“அப்ப?” என்றாள் கேள்வியாய்.
“அது மட்டும்னா கடைசிவரை விட்டுட்டு வரவோ, விட்டுக் கொடுத்திருக்கவோ மாட்டேன். இது வேற...”
“என்ன சொல்ற? இதுயில்லாமல் வேற காரணமிருக்கா?” ‘வேற என்ன காரணம் இருக்க முடியும்’ என்பது ஜனனியின் கேள்வியாக இருந்தது.
“ஜனனி அவளுக்குச் சொல்ல விருப்பமில்லாததை திரும்பத்திரும்பக் கேட்டு சங்கடப்படுத்தாத. சொல்ல முடியாத காரணம் இருக்கப்போய்தான மறைக்கிறா. உலகம் அறிந்த பொண்;ணு அவள் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்குவா” என்று மனைவியை அடக்கி, “நீ வா பூரணி பஸ் ஏத்திவிடுறேன்” என்று அழைத்துச் சென்றான் ஜெஃப்ரின்.