• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 17

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
17



மனைவியின் விக்கலில் உற்சாகம் வரப்பெற்றவன், “ஓய் அன்பழகி! வாழக் கூப்பிட்டல்ல, இப்ப நான் ரெடி. நீ ரெடியா? ரெடின்னா ஐ லவ் யூ சொல்லு. இல்லைன்னா காதலிக்குறேன்னு தமிழ்ல சொல்லு?” என்றான் சினிமா பாணியில்.

சற்றுமுன் ஆணிற்கான எந்த இலக்கணமும் தன்னிடமில்லை. அவளுக்குத் தான் பொருத்தமும் இல்லையென்று, அவளின் வாழ்விற்காக விலகியிருக்கவும் முடிவு செய்தவனை, அன்பழகியின் ஒற்றை விக்கல் அடக்கி ஆட்சி செய்தது.

செந்தூரனை அடக்கும் ஒரே வழி அவனின் அன்பழகிதானோ!

சுற்றியுள்ளவர்களும் அன்பழகியிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லச் சொல்லி கேட்க, கணவனை முறைத்தோம் என்ற பெயரில் காதல் கணைகளைத் தொடுத்து வெட்கம் மறைக்கப் பவானியின் தோள்சாய்ந்து கொண்டாள்.

“டாக்டர் மேடம்! ரொம்ப அழகாயிருக்கீங்க” என்று மேலும் அவன் கேலி செய்ய, இன்னுமே நாத்தனாரின் தோளில் அழுந்தப் புதைய, “அண்ணி! அண்ணா அங்கேயிருக்காங்க. நான் குட்டிப்பொண்ணு” என தன் பங்கிற்கு கேலியைத் தொடர்ந்தாள் பவானி.

“போடீ” என்று நிமிர்ந்து பவானியின் தலையில் கொட்டு வைத்துத் திரும்பவும் அவள்மேல் சாய்ந்து கொண்டாள்.

சதாசிவம் அதியனுக்கு சந்தோசத்தில் கண்கலங்கியது. யாருமறியாமல் கண்ணீர் துடைத்த அதியன் எதிரே பார்க்க, ராஜேஸ்வரி இருவரையும் பார்வையில் குரூரம் கொண்டு பார்த்திருந்தார்.

‘முதலில் இந்தம்மாவைத் தூக்கில் போட வைக்கணும். அப்பதான் என் அக்கா வாழ்க்கை சிறக்கும்’ என்றெண்ணிக் கொண்டான்.

தன் கண்முன் வளர்ந்த பெண்ணில் உள்ள பாசத்தில் நீதிபதியுமே சற்றே உணர்ச்சிவசப்பட்டிருந்தாரோ!

மகன் மருமகளின் இந்த அன்னியோன்யம் பிடிக்காது ராஜேஸ்வரி பேசிய வார்த்தையில் அவ்விடமே அமைதியானது.

“இவங்க இரண்டு பேரையும் கல்யாண பந்தத்துல சேர்த்து அவங்க வாழ்க்கையை நாசமாக்குறதுதான் என் ப்ளான்” என்றதும் நீதிபதி சொல்லாமலேயே அனைவரும் அமைதியாக, “எனக்குப் பிடித்த பொண்ணுன்னு சொன்னா இவன் அவளோட வாழமாட்டான், என் பையன் இவன்னு தெரிந்தால் இவளும் அவனோட வாழமாட்டாள்னு சேர்த்து வச்சேன். என் நினைப்பையெல்லாம் ஒரே நிமிடத்தில் ஒண்ணுமில்லாமல் ஆக்கினா இந்தப் பொண்ணு” என்று அன்பழகியை நோக்கிக் கைநீட்டி குற்றம் சாட்டினார் ராஜேஸ்வரி.

செந்தூரன் அன்பழகி இருவரும் எப்படியென்பதாய் கேள்வியாய் ராஜேஸ்வரியைப் பார்த்தார்கள்.

“கல்யாணம் முடிந்த கொஞ்ச நேரத்துல இவளைக் கூப்பிட்டு மிரட்டினேன். இவள் என்னடான்னா என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டா. செந்தூகிட்ட இவளைப் பற்றித் தப்பா சொல்லிப் பார்த்தேன். நம்பின மாதிரிதான் இருந்தது. கல்யாணமே ஏமாற்றிச் செய்ததுன்னு தெரிந்தும் இவனை, எல்லாத்தையும் மறந்து நாம வாழலாம்னு கூப்பிட்டா. அப்பத் தெரிந்தது அவள் மனசுக்குள்ள செந்தூக்கான இடம் என்னன்னு. இதே வேற யாரோவாயிருந்தா போடான்னு போயிருப்பா.”

“அதேநேரம் குழப்பத்திலிருந்த இவனும் அவளை நேருக்கு நேராகப் பார்த்ததில், அவளோட நேரடிக் கேள்வியில் தடுமாற ஆரம்பித்தான். சம்மதம் சொல்ல அவன் தயார்னு அவன் முகபாவனையில் தெரிந்ததும், நடுவுல அவன் கவனத்தை என் பக்கம் திருப்பினேன். என்மேல் உள்ள வெறுப்பில்தான் அவளை வேண்டாம் சொன்னான். இஷ்டப்பட்டு சொல்லலை” என்று நக்கலாய் மகனைப் பார்த்தார் ராஜேஸ்வரி.

“உங்கள் வார்த்தைப்படி பார்த்தா அப்பவே எங்களுக்கு ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருந்திருக்கு. நாங்கதான் அதை உணரலை. ப்ச்.. இதை முன்னாடியே நீங்க சொல்லியிருக்கலாம். நீயாவது சொல்லியிருக்கலாம்ல அன்பழகி?” என்று மனைவியைக் குற்றம்சாட்ட,

‘சீரியஸா பேசுற இடத்தில் காமெடி பண்ணுறதே இவங்களுக்கு வேலையா போச்சி’ என்று கணவனைச் செல்லமாக முறைத்து, ‘தொலைச்சிருவேன்’ என்று விரல் நீட்டி மிரட்டினாள்.

“ஐயோ!” என செந்தூரன் வாய்மூடிய செய்கையில் வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டாள் அன்பழகி. அவளின் விரல் நீட்டும் நிழற்படமும், அவனின் ஐயோ! என்ற அலறலும் இணைந்து வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்க, அது எதையுமறியாமல் இங்கே வழக்கும் வம்பும் நடந்து கொண்டிருந்தது.

“ஹலோ மச்சான் சார் இது கோர்ட். வீடுன்னு நினைச்சிட்டீங்க போலிருக்கு” என்று தன் வார்த்தைகளாலேயே செந்தூரனுக்கான உரிமையை அதியன் வழங்க, கண்கள் பளிச்சிடப் பார்த்த செந்தூரன் குறும்பு மிளிர, “அதுக்கு உன் அக்காதான் மாப்ள காரணம். அப்பப்ப விக்கல் எடுக்குதே ஏன்னு கேட்டியா? அவளை நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துறேன்” என்றான் கிண்டல் தொணியில்.

“ம்கூம் அவளும் திருந்தமாட்டா. நீங்களும் திருந்தியிராதீங்க. இது கிரிமினல் கேஸ் மாதிரித் தெரியலை. ஏதோ பிரிந்திருந்த காதலர்களைச் சேர்த்து வைத்த மாதிரியிருக்கு” என்றான்.

“அதான் மாப்ள நடக்குது” என்றான் செந்தூரன்.

“சைலன்ஸ்” என்ற நீதிபதியில் தட்டலில் அனைவரின் கவனமும் அவரிடம் செல்ல, “நீங்க சொல்லுங்க சா.. ராஜேஸ்வரி? என்றார் சாமியம்மாவை விடுத்து.

“அப்புறமென்ன டைவர்ஸ்கு அன்பழகியையும் பவாவையும் கொலை செய்திருவேன்னு மிரட்டினேன்.”

“அவ்வளவுதானா?” என்றான் அதியன்.

“இதுக்கு மேல சொல்ல என்னயிருக்கு?” என்றார் எரிச்சலுடன்.

“உங்க பொண்ணுக்கு அப்பப்ப விபத்து நடக்குதே அதைப்பற்றித் தெரியுமா?” என்றான் சிறு கோபத்துடன்.

“ஓ.. அதுவா? என்னை மீறிப் போய் எனக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துக்கிட்டாள்ல, ஒரு தாயா அதுக்கான தண்டனையைக் கொடுத்தேன்” என்று அலட்சியமாக தோளைக் குலுக்கினார்.

“எல்லாம் சரி. அன்பழகி அம்மாவைக் கொல்ல ஏன் ஆள் அனுப்புனீங்க?”

“கொலை செய்யன்னு அனுப்பலை. சும்மா மிரட்ட மட்டும்தான்” என்றவர், “நீதிபதி ஐயா என் வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன். தண்டனை எப்படியும் உறுதின்னு தெரிஞ்சிருச்சி. சீக்கிரமே தண்டனையைக் கொடுங்க” என்று நேரடியாகவே நீதிபதியிடம் கேட்டார் ராஜேஸ்வரி.

அந்நேரம் ராகினியும், அகிலனும் வர செந்தூரனைக் கனிவாகப் பார்த்து பவானியினருகில் சென்றமர்ந்த ராகினி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட, கண்கள் எனோ கலங்கியது அவருக்கு.

“என்னம்மா உங்க மருமகள் மேல பாசம் பொங்குது. அதுவும் பப்ளிக்ல?” என அன்பழகி கேலி செய்ய,

“ஏன் பொங்குதுன்னு வீட்டுக்குப் போனதும் தெரிஞ்சிக்கலாம்” என்றார்.

“நாங்க வீட்டுக்கு வந்திருப்போமே. நீங்க ஏன் வந்தீங்க?” என்ற மகளிடம், “எல்லாம் காரணமாதான்” என்றவர் மருமகனைத்தான் அதிகம் கவனித்திருந்தார்.

“என்ன செந்தூரன் விவாகரத்தை ரத்து செய்திரலாமா?” என்றார் நீதிபதி.

“ரத்தை எடுத்திருங்க ஐயா. விவாகம் மட்டும் இருக்கட்டும்” என்று அடக்கமாக வினவியவன், “நான் விவாகரத்து கேஸை வாபஸ் வாங்கிக்குறேன். இவங்க கேஸை என்னோட வக்கீல் அதியன் பார்த்துப்பார். நாங்க கிளம்பலாங்களா?” என்றான் அமைதியாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அதேநேரம் உணவு இடைவேளை ஆரம்பிக்க, “நீங்க கிளம்பலாம் செந்தூரன். சாட்சி சொல்லக் கூப்பிடுற நேரம் ஆஜராகிருங்க. அதுவரை சாமியம்மா என்ற ராஜேஸ்வரியை காவலெடுத்து சிறைச்சாலையில் அடைக்க ஆணையிடுகிறேன். மதிய உணவு இடைவேளைக்குப் பின் இதர வழக்குகள் விசாரிக்கப்படும்” என்றவர், அப்பொழுதே ‘ராஜேஸ்வரிக்கான தண்டனையாக ஆயுள் தண்டனையும், சேகருக்கு ஏழு வருட கடுங்காவல் தண்டனையும்’ என்றெழுதி எழுந்து சென்றுவிட்டார்.

“ஏன் அத்தை கண்ணு கலங்குது? அதான் எல்லாம் நல்லபடியா நடந்திருச்சே” என்ற பவானியிடம், “சந்தோசத்திலும் அழுகை வரும் பவிமா. வீட்டுக்குப் போனதும் இரண்டு மூணு பூசணிக்காய் சுத்திப்போடணும். எல்லார் கண்ணும் எம்புள்ளைங்க மேலதான். அப்படியே முச்சந்தி மண்ணெடுத்தும் சுத்திப்போடணும். அப்...”

“போதும் அத்தை. என்னையும் வேணும்னா சுத்திப்போடுங்க” என்றாள் கேலிபோல்.

“என் மருமகளை வெளியேல்லாம் போட முடியாது. ஆரத்தி எடுத்து உள்ளதான் வரவேற்பேன்” என்றதில் பக்கென அதிர, “எ..என்ன அத்தை சொல்றீங்க?” என்றாளவள்.

அவளுள்ளும் கள்ளத்தனம் ஒழிந்திருக்கிறதோ! ஏனோ கண்கள் அவனிருந்த பக்கம் சென்று மீண்டது.

வெளியே ஒரு ரசிகப் பட்டாளமே அவர்களை வளைக்க, ஏனெனப் புரியாமல் நின்றிருந்த செந்தூரன் அன்பழகியிடம் வேகமாக வந்த அதியன் தன் கைபேசியை எடுத்துக் காட்ட, “என்னடா இது?” என்றாள் அன்பழகி.

“இப்போதைய ட்ரெண்டிங் நீயும் மச்சானும்தான்கா. செம ஹாட் போஸ்ட்ஸ் அன்ட் மீம்ஸ். கூகுள் ஓபன் பண்ணினாலே உங்களோட விக்கல் சீன்தான் வருது” என்றான் சத்தமாகச் சிரித்தபடி.

“அன்பழகி ஆட்டோகிராப் ப்ளீஸ்” என்றவர்களிடம், “நாங்க மத்தவங்களுக்குப் பிரயோஜனமா எதையாவது சாதித்த பிறகு போடுறோம்” என்று கணவனுக்கும் சேர்த்து நாசூக்காக மறுத்தாள்.

சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவர்களை நெருங்க, “நாங்க சாதாரண மனிதர்கள். எங்களைப் பெருசா காண்பிக்கிற அளவு எதையும் செய்யலை. இந்த நீதிமன்றத்தைப் பொறுத்தவரையும் உங்களைப் பொறுத்தவரையும் இது பத்தோடு பதினோறாவது கேஸ். சோ, நிஜ சாதனையாளர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துங்க” என்று அவர்களை அனுப்பினான் செந்தூரன்.

அதுவுமே அவன் பெருந்தன்மை என்று இணையதளத்தில் பேசப்பட்டது வேறு கதை.

வீடு வரும்வரை ஒருவித அமைதிதான் காருக்குள். சதாசிவம் செந்தூரனை தங்கள் வீட்டிற்கு அழைத்து வர, வாசலில் வைத்து மகள் மருமகனுடன் சேர்த்து, பவானிக்கும் ஆரத்தியெடுத்தார் ராகினி.

“அத்தை எனக்கு எதுக்கு?” என்றாள் வேகமாக.

“வீட்டுக்குள்ள வா சொல்றேன்” என்று அணைத்துச் செல்ல, “அண்ணி மறக்காம வலது காலை எடுத்து வைங்க” என்று உள்ளே நுழைய, அவளை ஒட்டியபடி நுழைந்தான் அதியன்.

அதனைக் கண்டவளோ, “சார் ஒரு நிமிஷம்” என்று அதியனை நிறுத்தி, “எனக்கு எதுக்கு ஆரத்தி எடுத்தாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என கேட்க,

‘ம்..’ என்று அவளை அவன் முறைக்க,

“தெரியாதுன்னா சொல்லிட்டுப் போங்களேன். அதுக்காக ஏன் முறைக்குறீங்க?” என உதட்டைச் சுளிக்க,

“உன்னை முறைக்க ஆசையா இருந்தது. அதான்” என்றான் நக்கலாக.

“நான் கல்யாணமான பொண்ணு சார். சோ..” என்று நிறுத்தினாள்.

“சோ?”

“சோ! வார்த்தை சொல்ல நல்லாயிருந்தது சார். அதான் சொன்னேன்” என்க,

“கடுப்பேத்தாம போறியா. நானே ஏதோ ஒரு குழப்பம் என்னைச் சுற்றி வருதோன்னு யோசனையில் இருக்கேன். இதுல நீ வேற...” என்றான் எரிச்சலாக.

“வீட்டுல எல்லாமே நல்லதாதானே சார் நடக்குது. அப்புறமும் என்ன குழப்பம்?” என்றாள் புரியாது.

“ம்... வரும்போது தெரியும். வாசல்லயே நிற்காம உள்ள போ” என்று அதட்டினான்.

“ம்க்கும் கோபத்தை மட்டும் குறைச்சிராதீங்க. பாவம் உங்க பொண்டாட்டி” என்று அவனுக்கு அலவம் காட்டிச்செல்ல,

“இவளை... ம்கூம் என் குடும்பமே சப்போர்ட் இருக்கும்போது ஒண்ணுமே செய்ய முடியாது” என்று தன் அறைக்குச் சென்றான்.

“அகில்மா செந்தூர் உன் ரூம்ல குளிக்கட்டும். நாம எடுத்து வச்சிருக்கிற ட்ரஸ்ஸை எடுத்துக்கொடு” என்றவர் மருமகனிடம் திரும்பி, “இன்னையோட உன்னைப் பிடித்த கெட்டதெல்லாம் விலகணும்னு நல்லா எண்ணெய் தேய்த்துக் குளிச்சிட்டு வா செந்தூர் கண்ணா” என்றார் ராகினி.

அப்பாவின் அழைப்பை அத்தையிடம் கண்டவன் கண்கள் கலங்க, “என்ன செந்தூர் கண்ணா? போ.. போய்க் குளிச்சிட்டு வா. அதுக்குள்ள ஹோட்டல்ல சொல்லியிருக்கிற மதிய சாப்பாடு வந்திரும். சாப்பிட்டதும் பேசிக்கலாம்” என்றார் அவனின் கன்னம் தொட்டு.

இனம்புரியா உணர்வுடன் ராகினியின் அன்புக்குக் கட்டுப்பட்டுச் சென்று எண்ணெய் தேய்த்துக் குளித்து வர, மற்றவர்களும் தலைக்குக் குளித்து வந்தார்கள். இன்றோடு தங்களைப் பிடித்த கெட்ட கிரகம் விலகட்டுமென்று எண்ணினரோ!

மதிய உணவும் வந்து சேர, உண்டு முடித்ததும் அனைவரையும் சற்று நேரம் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார் ராகினி.

கணவனைத் தங்களறைக்கு அழைத்து வந்த அன்பழகி கட்டிலில் படுக்கச் சொல்லி, “இதோ வர்றேன்” என்று வெளியே செல்லக்கிளம்ப, “அன்பழகி! என்னை மன்னிச்சிரு” என்ற செந்தூரனின் குரலில் கால்கள் தன்னால் நின்றது.

மெல்ல அவன்புறம் திரும்பி, “ரொம்ப சாதாரணமா கேட்டுட்டீங்க” என்றாள் மனம் கேளாது.

விவாகரத்து வேண்டுமென்று அவன் பேசிய பேச்சுகள் மனதிலிருந்து பேசவில்லை என்றாலும், இவள் மனதை அவ்வார்த்தைகள் கொன்றதை என்னவென்று சொல்வாள்.

“மன்னிப்புன்றது சாதாரணமான வார்த்தையில்லை அன்பழகி. ஒருத்தர் தன் தப்பைத் திருத்தி, இனிமேல் இதுபோல் தவறு நடக்காதுன்னு மனப்பூர்வமா உணர்ந்து கேட்குறதுக்குப் பெயர்தான் மன்னிப்பு. அதனாலதான் மன்னிப்புக் கேட்குறவன் மனிதன். மன்னிக்கிறவன் பெரிய மனிதன்னு சொல்றாங்க.”

“கல்யாண மண்டபத்துல என் தவறை மன்னித்து எதுவும் சொல்லாம போனது, எனக்கான தண்டனைன்னு தெரியாமலே தண்டனையா அமைந்தது. இப்போதைய என்னோட மன்னிப்பு உனக்குத் தண்டனையா இருக்காதுன்னு நினைக்குறேன். தண்டனையா இருந்தா அதுக்கும் என்னை மன்னிச்சிரு அன்பழகி” என்றான்.

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்க மனசுல எனக்கான இடம் இருக்குன்னு தெரிந்ததுமே எல்லாத்தையும் மறந்துட்டேன். உங்களைப் பேச வைத்தது உங்க சூழ்நிலைதானே தவிர, நீங்க திட்டம் போட்டு எதுவும் செய்யலையே!”

“ஓ.. உன்னைப் பிடிக்கும்னு எப்ப தெரியும்?”

“ட்ரீட்மெண்டுக்கு எங்க ஹாஸ்பிடல்தான்... சாரி” என நாக்கைக்கடித்து, “உங்க ஹாஸ்பிடல்” என்றதும் அவன் முறைக்க, அம்முறைப்பு எதற்கெனப் புரிந்ததும், “சரி நம்ம ஹாஸ்பிடல்” என்றதும் அவன் புன்னகைக்க, “நாக்கௌட் டெஸ்ட் எடுக்கிறப்ப நான் உங்களோடதான் இருந்தேன்” என்றாள் மென்குரலில்.

“ஓ.. எனக்குத் தெரியாமலே நாக்கௌட் டெஸ்ட்? ம்.. அப்புறம்” என்றான்.

கோபமோ என்று கணவன் முகம் பார்த்து, “தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க ஓவர் டிப்ரஸன்ல இருந்தீங்க. ரஹ்மான் சார் பேசினாலும் நீங்க உள் மனசுல உள்ளதைப் பேசலை. பேசினால்தானே பிரச்சனை தீரும். ஆதிகேசவன் அண்ணா அனுமதியோட சார் உங்களுக்கு அந்த டெஸ்ட் எடுத்தார்.”

“முன்னயே கெஸ் பண்ணினேன்தான். பட், உனக்குத் தெரியும்னு தெரியாது. ஒருவகையில் தெரிந்ததும் நல்லதுதான். நானா உன்கிட்ட எப்பவும் சொல்லியிருக்க மாட்டேன். சரி நீ ரெஸ்ட் எடுக்கலை?” என்றான் அனைத்தையும் கடந்தவனாய்.

“இ..இல்ல வந்..து நான் பவி கூட போய்...”

“ஓ.. சரி போ” என்றதும் தயங்கி நின்றவளிடம் என்னவென கேட்க, “நீங்க கோபத்துல சொல்லலையே?” என்றவள் குரலில் அத்தனை தவிப்பு.

மெல்ல அவளருகில் வந்தவன், “உனக்கான அன்பு என்கிட்டேயும், எனக்கான அன்பு உன்கிட்டேயும் நிறைய இருக்கு அன்பழகி. பக்கத்துலயே இருந்து தொட்டுக்கிட்டே இருந்தால்தான் காதல்னு இல்லை. இன்னைக்குதான் நமக்குள்ள எல்லாம் சரியாகியிருக்கு. அதுக்குள்ள அந்தரங்க உரிமை எடுக்க அவசியமில்லை. உனக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் என்மேல் சின்னதா உறுத்தல் இருக்கலாம். முதல்முறையா உன்னை நான் அழ வைத்திருக்கேன்.”

“அதெ...”

“அதெல்லாம் கிடையாது. மறந்துட்டேன்னு நீ சொல்லலாம். ஆனா, உன்னைக் கஷ்டப்படுத்திய குற்றவுணர்வு எனக்கிருக்கு. எதைப்பற்றியும் யோசிக்காம போய் ரெஸ்ட் எடு அன்பழகி” என்றனுப்பினான்.

மாலை ஐந்து மணிபோல் சின்னதாக சிற்றுண்டியுடன் மொட்டை மாடியில் வெயில் படாதிருக்க வைத்திருந்த கூரையின் கீழ், அனைவரும் அமர்ந்திருக்க, “மச்சான் எனக்கொரு சந்தேகம்?” என்றான் அதியன்.

“கேளு மாப்ள” என்று செந்தூரன் அனுமதி கொடுக்க,

“நேஹா அண்ணி வளைகாப்புல நீங்க சிரிச்சிட்டே போனீங்க. என் அக்கா பேயறைந்தாற் போல நின்னுட்டிருந்தா. அப்ப உங்கமேல பயங்கர கோபம் வந்தது. இப்ப யோசனையாயிருக்கு. ஆமா அன்னைக்கு நடந்தது என்ன?” என்று கேள்விக்குறி போட்டு நிறுத்தினான்.

மனைவியைப் பார்த்து ரகசியமாய்ப் புன்னகைத்தவன், அவளின் முறைப்பைக் கண்டுகொள்ளாது, “அன்னைக்குதான் உன் அக்காவுக்கு முதல்முறையா விக்கல் வந்தது” என்றான் சிறிது வெட்கத்துடன்.

“என்னது? அங்கேயும் விக்கலா?” என்றான் அலறலாக.

“ப்ளீஸ் சொல்லாதீங்க” என்ற அன்பழகி கணவனிடம் கெஞ்ச, அதை ரசனையுடன் கண்டு, “எஸ். அதுக்கான ட்ரீட்மெண்ட் கொடுத்தேன்” என்றான் குறும்புப்புன்னகையுடன்.

“அப்பவேவா? அடப்பாவிகளா!” என்று அதியன் நெஞ்சைப் பிடித்து நடித்தான்.

அந்நேரம் சதாசிவமும் ராகினியும் வர, அகிலன் அப்பாவிற்கு நாற்காலியை எடுத்துப்போட, ராகினியோ செந்தூரனருகில் அமர்ந்து பவானியையும் அருகே அமரவைத்துக் கொண்டார்.

“செந்தூர் கண்ணா. நான்..” என்று தயங்க,

“சொல்லுங்க அத்தை” என்றான் ‘த்’தில் அழுத்தம் கொடுத்து.

“அ..அது நான்..”

“அம்மா சொல்ல வந்ததைத் தயங்காம சொல்லுங்க” என்றான் அகிலன்.

“நான் சொல்லவா அத்தை?” என்ற செந்தூரன், அவரின் எப்படியென்பதான முகபாவனையை உள்வாங்கி, “நீங்கதான் என்னோட அத்தை. அதாவது நான் இத்தனை வருஷமா தேடிட்டிருந்த, எங்க அப்பாவோட உடன்பிறந்த தங்கை நீங்க. சரிதானா அத்தை?” என்றான்.

ராகினி, அகிலன் தவிர அனைவரும் அதிர்ந்து போய் பார்த்திருந்தனர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“எங்கம்மாதான் உங்க அத்தையா? எப்படிச் சொல்றீங்க?” என்றனர் அன்பழகியும் அதியனும்.

“எனக்கும் அகிலனுக்குமே இன்னைக்குதான் தெரியும். உனக்கெப்படித் தெரியும் செந்தூர் கண்ணா” என்றார் ராகினி.

“அகிலனுக்கும் தெரியுமா? எப்படி?” என்றார் சதாசிவம்.

“முதல்ல என் அண்ணன் மகன் சொல்லட்டும். அப்புறமா நாம பேசலாம்” என்றார் கணவரிடம்.

“ரொம்பவே சிம்பிள் அத்தை. முன்ன மகளோட புருஷன்ற முறையில் மரியாதையா பார்த்தீங்க. இப்ப உரிமையா பார்க்குறீங்க. பேசுறீங்க. என்ன புரியலையா? இன்னைக்குக் கோர்ட் உள்ள நீங்க வந்தப்ப உங்க கண்ணுல இருந்த உரிமை கலந்த கனிவான பார்வையும், அந்தக் கலக்கமும் கொஞ்சம் ஆராய சொல்லிச்சி. பவிக்கிட்டப் போனதும் அவளை அணைத்து முத்தம் கொடுத்தது ரொம்பவே உங்களை வித்தியாசமா காட்டிச்சி. பொது இடத்தில் அதீதமா உணர்ச்சிவசப்பட்டால்தான் நம்மை மீறி சிலதை செய்வோம். அதோட உங்க செந்தூர் கண்ணா சொல்லிச்சி நீங்க யாருன்னு. உண்மைதானே அத்தை?” என்றான் கனிவான குரலில்.

“ரொம்பவே சரி” என்றவர், “அப்பா, அம்மா அண்ணன. எல்லாரும் கோவிலுக்கு போனப்ப எனக்கு செமஸ்டர் எக்ஸாம் நடந்ததால போக முடியலை. எம்சிஏ முடித்து நல்ல சம்பளத்தில் வேலை அண்ணனுக்கு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. நான் என் ஃப்ரண்டோட அக்கா ரொம்ப நல்லவங்க. அவங்க அண்ணியா வந்தா நல்லாயிருக்கும்னு அம்மாகிட்ட பேசி வைத்திருந்தேன். ஊருக்குப் போன இடத்தில் எல்லாம் மாறிருச்சி.”

“அப்பாவும் அம்மாவும் மட்டும் வீட்டுக்கு வர அண்ணனைக் கேட்டப்பதான், அங்கேயே ஒரு பொண்ணைக் காதலித்து வீட்டை எதிர்த்துக் கல்யாணம் செய்துக்கிட்டதா சொன்னாங்க. நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு முடிச்சி வைத்திருக்கலாமேன்னு அம்மாகிட்டக் கேட்டதுக்கு, அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுன்னுதான் எல்லாரும் சொன்னாங்க ராகினி. ஆனா, அவள் முகத்தைப் பார்த்தா குடும்பத்துக்கு ஒத்து வருவாள்னு தோணலை. ஏதோ ஒண்ணு அந்தப் பொண்ணுகிட்டத் தப்பாயிருக்கு.”

“நம்ம பையனை அவள் வலையில் வசமா சிக்க வச்சிருக்கா தோணுது. இவனும் தெய்வீகக் காதல் அது இதுன்னு உளறிட்டிருந்தான். அவளை மருமகளா ஏத்துக்க முடியாதுன்னு சொன்னதும் போயி கல்யாணமே முடிச்சிட்டான்னு வருத்தப்பட்டு அழுதாங்க. அதுக்கப்புறம் சொந்த ஊருப்பக்கம் போகவேயில்லை. எதாவது விசேஷம்னா அப்பா மட்டும் போயிட்டு வருவாங்க.”

“நான் காலேஜ் முடிச்சதும் வீட்டுல எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தப்ப, அண்ணனைக் கல்யாணத்துக்குக் கூப்பிட அப்பா அம்மாவை அனுப்பி வச்சேன். ஆனா, அண்ணன் கல்யாணம் முடிச்சதோட போனதுதான் திரும்பி அங்க வரவேயில்லைன்னு சொன்னாங்களாம். அவன் ஃப்ரண்ட் சர்க்கிள்லயும் கேட்டோம். கல்யாணம் முடிந்த இரண்டு மாசத்துல அந்தக் கம்பெனியில் ஏதோ பிரச்சனைன்னு வேலையிலிருந்து நின்னுட்டதா சொன்னாங்க.”

“அதுக்கப்புறம் எங்க போனான் என்ன ஏதுன்னு தெரியலை. அம்மா அண்ணியைப் பற்றி சொன்னதுல கொஞ்சம் பயமும் எனக்குள்ள இருந்தது. எப்படியும் அவன் படிப்பு அவனைக் காப்பாற்றும்னு தெரிந்தாலும், அண்ணி எப்படியிருந்தாலும் அம்மா கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருக்கலாமோன்னு சில சமயம் தோணும்.”

“சென்னையில் நாங்க இருந்தது சொந்த வீடுதான்றப்ப அண்ணனும் எங்களை வந்து பார்த்திருக்கலாம். ஒருவேளை அவன் வாழ்க்கை நல்லாயிருந்திருந்தா வந்திருப்பானோ என்னவோ! நானும் கல்யாணம் முடித்து கோயம்புத்தூர் போயிட்டேன். அடுத்த நாலைந்து வருஷத்துல அப்பாவும் அம்மாவும் ஆறுமாச வித்தியாசத்துல இறந்துட்டாங்க. செத்ததும் சொந்த ஊருலதான் எல்லாம் செய்யணும்ன்றது அப்பா அம்மாவோட கடைசி ஆசை.”

“யார் மூலமாவது விஷயம் கேள்விப்பட்டு சாவுக்காவது அண்ணன் வருவான்னு பார்த்தேன். அதுவும் நடக்கலை. சொத்தை என்கிட்டதான் ஒப்படைச்சாங்க. அண்ணன் வந்தா கொடுத்திருங்க. அவன் என்னைத் தேடி வந்து எனக்குச் சேரவேண்டியதைத் தரட்டும்னு கிளம்பிட்டேன். உங்க மாமாவும் உன் விருப்பம்னு சொல்லிட்டாங்க.”

“சில வருஷங்கள் கழித்துதான் அந்தப் பத்திரம் அண்ணன் கைக்குப் போய்ச் சேர்ந்திருக்குன்னு கேள்விப்பட்டேன். எப்படியும் என் அண்ணன் என்னைத் தேடியிருப்பான். நானாவது என்னைப் பற்றிய தகவலை சரியா கொடுத்திட்டு வந்திருக்கலாம். எத்தனை வருஷம் தேடினானோ!” என்றார் வருத்தமாக.

“நடக்கணும்னு இருக்குறதை மாற்ற முடியாது அத்தை. சரி எங்களைப்பற்றி எப்படித் தெரிந்தது?” என்றான் செந்தூரன்.

“ஐந்து வருஷம் முன்னதான் சென்னைக்குக் குடி வந்தோம். இது நானும் அண்ணனும் வாழ்ந்த வீடு” என்றதும், செந்தூரனும் பவானியும் அவ்வீட்டை கண்கலங்க பார்வையிட்டனர். தந்தையின் நினைவலைகளைத் தேடியலைந்தனரோ!

“நேற்றுத் திடீர்னு ஒரு கனவு. என்னை மறந்துட்டியா ராகினிமா? நானும் இல்லாம என் பிள்ளைங்க ரொம்பவே கஷ்டப்படுறாங்க. பெத்த தாயை விட்டுட்டு பொண்ணு பின்னாடி போன பாவத்துக்கு நான் நிறையவே அனுபவிச்சிட்டேன். எனக்குப் பிறந்த பாவத்துக்கு என் பிள்ளைங்களும் அனுபவிச்சிட்டாங்க. அவங்களை விட்டுராத. இதான் நான் இருக்கிற விலாசம். என் பிள்ளைகளைப் போய்ப் பாரும்மான்னு சொல்லிட்டு அண்ணன் மறைஞ்சிட்டாங்க.”

“கனவு எல்லாமே நிஜமா நேர்ல பார்த்த மாதிரியே இருந்தது. அட்ரஸ் மறக்குறதுக்குள்ள நோட்டுல குறித்து வச்சிட்டேன். இன்னைக்கு கோர்ட் வராததுக்குக் காரணம் அதுதான். எல்லாத்தையும் விசாரிச்சிட்டு சொல்லலாம்னுதான் உங்க மாமாகிட்டக் கூடச் சொல்லலை. அகிலனைக் கூட்டிக்கிட்டு அந்த அட்ரஸ் போனப்பதான் தெரிந்தது அது உங்க வீடுன்னு.”

“ஒருவேளை உங்களுக்கு முன்ன அண்ணன் அந்த வீட்டுல இருந்திருக்கலாம்னு கதவைத் தட்டினேன். ராஜலட்சுமியோட பையன்கள் இருந்தாங்க. எங்களை அடையாளம் தெரிந்து ஆசையா விசாரிச்சவங்க, வீட்டுல யாரும் இல்லைன்னு சொன்னதும், சின்னப் பசங்ககிட்ட என்ன விசாரிக்கிறதுன்னு கொஞ்சம் தடுமாற்றமாதான் இருந்தது. விசாரிக்கவும் செய்யணுமே!”

“அப்பதான் அகிலன் ஒரு போட்டோவைக் காண்பித்து அது யாருன்னு பையன்கிட்ட கேட்க, யாரைக் கேட்கிறான்னு பார்த்தப்பதான் என் அண்ணன் போட்டோ மா..மாலைக்கு நடுவுல” என்று சத்தமிட்டு அழுதார்.

அவரை சமாதானப்படுத்த எழுந்த பெண்களைத் தடுத்த சதாசிவம், “அழுதா துக்கம் போயிரும். கொஞ்ச நேரம் அழட்டும். இத்தனை வருஷமா அண்ணனைப் பார்க்காத ஏக்கம் இதனால கொஞ்சம் மட்டுப்பட்டு, அவரோட இழப்பை மனம் ஏத்துக்கட்டும்” என்றார்.

சில நிமிடத்திற்குப் பின் கண்ணீர் துடைத்து, “அந்தக் கனவு வந்ததிலிருந்து அண்ணன் உயிரோட இல்லைன்ற நெருடல் இருந்துட்டேதான் இருந்தது. அதை நேர்ல பார்த்தப்ப என்னால தாங்கிக்க முடியலை. பையன்தான் சொன்னான் இவங்கதான் செந்தூரன் அண்ணன், பவானி அக்கா அப்பான்னு. மனசுக்குள்ள அப்படியொரு சந்தோசம். எங்கண்ணன்தான் ஏதோ ஒரு வகையில் இந்தக் கல்யாணம் நடக்க வழி வகுத்திருக்கணும். கல்யாணப் பத்திரிக்கையில் அப்பா இடத்துல அண்ணன் பெயர் இருந்திருந்தாலாவது சந்தேகம் வந்து விசாரிச்சிருந்திருப்பேன். ஆனா, அந்த சாமியம்மா அதையும் கெடுத்திருச்சி” என்று கோபத்துடன் சொல்ல,

“அந்தம்மா கெடுக்காமல் நல்லது செய்தால்தான் ஆச்சர்யப்படணும் அத்தை” என்று கடுப்புடன் சொன்னாள் பவானி.

“நேத்து மாதிரி முன்னாடியே இந்தக் கனவு வந்திருந்தா, அந்த நரகத்திலிருந்து உங்களை அப்பவே மீட்டுட்டு வந்திருப்பேன் செல்லங்களா! இத்தனை வருஷம் அத்தை உறவு இருந்தும் ஆதரவில்லாமல் உங்களை விட்டுட்டேனே?” என்றவர் குரல் அழுகைக்குச் செல்ல,

“அத்தை அழாதீங்க. தெரிந்தே செய்தது மாதிரி எதற்கிந்த அழுகை? நாங்க அனுபவிக்கணும்னு இருந்திருக்கு. அதை யாரால மாத்தியிருக்க முடியும். உங்களைத் தேடி ஊருக்குப் போய் யார் யாரையோ பிடிச்சி விசாரித்தும், எந்தத் தகவலும் கிடைக்கலை. டிடெக்டிவ் வைக்கலாம்னு நினைச்சப்பதான் ஹாஸ்பிடல் பிரச்சனை வந்திருச்சி. அதுக்கப்புறம் எதுலயும் பிடிப்பில்லாமல் விட்டுட்டேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் அத்தை உரைக்குது” என்றான் தங்கையைக் கண்டவாறு.

அவளோ தலை கவிழ்ந்து, “நானும் சின்னப் பொண்ணுதான அத்தை. நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்க யாருமில்லை. சித்திக்குக் கட்டுப்பட்டே எல்லாத்தையும் செய்யப் பழகிட்டேன். அண்ணன் மேல உள்ள கோபத்துல நானா எடுத்த முடிவு தப்புன்னு புரியுது. ஆனா, அந்தத் தப்பை விடமுடியாத இடத்துல இருக்கேன்” என்றாள் குரல் இறங்க.

“அப்பக் கல்யாணம் தப்பா?” என்றான் அதியன்.

“என்ன? புரியலை சார்?” என்றாள்.

“இப்பதான சொன்ன? நீயா செய்த தப்புன்னு. அப்படின்னா அது உன்னுடைய கல்யாணம்தானே? அதைத்தான் கேட்டேன்” என்றான்.

“அ..அது அப்படியில்லை. அ...”

“விடு பவிக்குட்டி. அடுத்த வேலை உன்னை உன் புருஷனோட சேர்த்து வைக்குறதுதான்.” அன்பழகி சொன்னதும் திருதிருவென விழித்த பவானி, ‘ம்..’ என தலையாட்டினாள்.

“அகில் எங்க ரூம் டேபிள்ல இருக்கிற டைரியை எடுத்துட்டு வா” என்றனுப்பி அவன் எடுத்து வந்ததும் அதை செந்தூரனிடம் நீட்டி, “செந்தூர் கண்ணா! இது அண்ணனோட டைரி. உங்க வீட்டுலயிருந்துதான் எடுத்தேன். இதைப் படிச்சிப்பாரு” என்றார்.

“அப்பா டைரி எழுதுவாங்கன்றதே இப்பதான் அத்தை தெரியுது” என்று அந்த டைரியை மெல்ல வருடிக்கொடுத்தவன், தங்கையின் ஆவல் ததும்பும் விழிகளைக் கண்டு, “இதை உங்க மருமகள்கிட்டக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்க அத்தை” என்றான்.

‘உங்க மருமகளா? உங்க தங்கையில்லையா அண்ணா?’ என்றவள் கண்கள் கலங்க, அதற்குள் டைரி அவள் கைக்குச் செல்ல, அதைத் திறந்து முதல் பக்கத்தைக் கண்டவளுக்குத் தந்தையின் கையெழுத்தில் தங்களின் பெயர்களைப் பார்க்கப் பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது.

அவள் கண்ணீர் துடைத்து, “படி பவிக்குட்டி” என்றாள் அன்பழகி.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
ஆஹா நான் சொன்னதுதான் 😂😂😂 இன்னும் என்ன ரகசியம் அந்த டைரியில் 🤔 இந்த பவியோட கல்யாணம் சந்தேகமாவே இருக்கே...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
ஆஹா நான் சொன்னதுதான் 😂😂😂 இன்னும் என்ன ரகசியம் அந்த டைரியில் 🤔 இந்த பவியோட கல்யாணம் சந்தேகமாவே இருக்கே...
ஆமான்க ஆமா. பவி கல்யாணம் தான அதையும் பார்த்துக்கலாம்.
 
Last edited:
Top