• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
17



அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் அனைவரின் ஆசியுடனும், அன்புடனும் சாதனாவின் கழுத்தில் தாலி கட்டி தன்னவளாக்கிக் கொண்டான் ப்ரேம்.

ஜீவா காலையிலிருந்தே மனைவியின் அழகை பார்வையால் வருட... பச்சைப்பட்டுடுத்தி, அவளின் நீண்ட கூந்தலை தளறப் பின்னி, பின்னல் முழுவதையும் மல்லிகைப்பூவால் மறைக்க, மற்றவர்களிடம் சிரித்துப்பேசும் அழகில் சற்று ஏங்கித்தான் போனான். ‘சுப்பு என்னைப் பாருடி! சுப்பு திரும்பி ஒருமுறை என்னைப் பாரு!’ என உட்குரல் கொடுக்க...

அக்குரலின் பாதிப்பில் சுபா கணவன் புறம் திரும்ப, “தனக்கு பார்வை தெரியுமென்பது ஜீவாவிற்கு தெரியாதென்பதால், அப்படி என்னதான் செய்துவிடுவான் என்ற நினைப்பில் அவனின் பார்வையில் கலந்தாள். தனக்குத் தெரியாமல் கணவன் எதுவும் செய்யமாட்டான் என்று நினைத்திருந்தவளின் நினைப்பைப் பொய்யாக்கி, கண்ணடித்து இருவிரல் சேர்த்து முத்தமிட்டு பறக்கும் முத்தமொன்று அனுப்பினான்.

அது பறந்து சென்று சரியான ஆளைத்தாக்க, கணவனின் திடீர் தாக்குதலில் தடுமாறியவள், அவனிடமிருந்து பார்வையை எடுக்கவும் முடியாமல், நேருக்குநேர் பார்க்கவும் முடியாமல், சிவந்த முகத்தை மறைக்க படாதபாடுபட்டுக் கொண்டே ஒருகணம் கண்மூடி திறந்தவள் எதிரில் ஜீவா இல்லை. அவன் இல்லையென்றதும் இதுவரை நடந்தது கனவோ என்றிருந்தது சுபாவிற்கு. “சே... லூசுடி நீ” என தன்னையே நொந்தபடி, சுற்றிலும் பார்த்தவள் மற்றவர்களிடமிருந்து மெல்ல விலகி மணமகள் அறைக்குள் செல்ல, பின்னால் வந்தவனைக் கவனிக்காமல் கட்டிலில் தலைகவிழ்ந்து அமர்ந்தாள். கணவன் அறியாத நேரம் தான் அவனைப் பார்ப்பதும், ரசிப்பதும். அவன் தன்னைப் பார்க்கும்பொழுது பார்க்காதது போல் நடிப்பது என இருக்க, அவனை வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் மனம் சண்டித்தனம் செய்தது.

அம்மாடி உன் அழகு செம தூளு. கணவனின் குரலில் தலை நிமிர்ந்து பார்க்க, எதிரே ஆளுயரக் கண்ணாடியிருந்தது. சுற்றிலும் யாருமில்லை.

உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு

படக்கென்று எழுந்து நின்று, எங்கேயிருக்கிறானென்று பார்த்தவள் கண்களில் மாட்டவில்லை என்றதும், ஏனோ சற்று ஏமாற்றமாக உணர்ந்தாள். வேண்டாம் வேண்டாமென்று விலக நினைத்தாலும், அவனின் நினைவு தன்னை பாடாய் படுத்துவதை விரட்ட வழியில்லாமலிருந்தாள்.

அம்மாடி உன் அழகு செம தூளு

உன்னக் கண்டா பொழுதும் திருநாளு

உன்னப் பார்த்துதான் தடுமாறுறேன்

புயல் காத்துல பொறியாகுறேன்

அடிமாடு நான் மிரண்டோடுறேன்

ஒரு வார்த்தை சொல்லு உயிர் தாறேன்.

பாடியபடியே அவளருகில் வந்தவனை இமைக்க மறந்து, தான் நடிக்கிறோம் என்பதையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மனைவியின் விழிகளுள் மூழ்கி அதில் தன் உருவத்தைப் பார்த்தபடியே வந்தவன் ‘பார்த்தே கொல்றாடா’ என்றான் மனதினுள்.

பாட்டில் பல சேதிகள் சொல்லி எதிரில் வந்து நின்றவனையே ஒருவித லயிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, மனைவியின் கண்கள் சொன்ன காதலில் கரைந்தான் ஜீவா. மெல்ல அவளை நெருங்கி ஒரு கையால் அணைத்துப் பிடித்து, மறுகையை கூந்தல் நுழைத்து மல்லிகையின் நறுமணத்தை சுவாசித்தவன், “சுப்பு செம சூப்பராயிருக்கடி” காதோரம் கிசுகிசுத்தான்.

கணவனின் அணைப்பிலும், கிறக்கக் குரலிலும் கட்டுண்டவள் கைகள் தன்னாலேயே அவனை அணைக்க, அதில் மகிழ்ந்தவன் இன்னும் அணைத்து கழுத்தில் ஆரம்பித்து முத்தங்கள் முகத்திற்கு இடம்பெயர்ந்தது. சுபாவின் முகம் ஒருவித மயக்கத்திலிருக்க, அதில் இன்னும் மயங்கியவன் அவளின் இதழை தனதாக்கினான்.

பலவினாடிகள் கழித்து விடுவித்து மெல்ல அவளின் இரு கண்களிலும் முத்தமிட்டான். இத்தனை நாள் அவளைப் பார்க்காத ஏக்கத்தை குரலில் தேக்கி, “சுப்பு ஐ மிஸ் யூடா. உன்னை, உன் சிரிப்பை, குறிப்பா உன் கண்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என உருகல் வசனம் பேச, அதுவரை கணவனின் அணைப்பில் உருகிக் கொண்டிருந்தவள், அவன் கண்களைச் சொன்னதும்தான் மயக்கத்திலிருந்து மீண்டு கண்களைத் திறந்து பார்த்தவளுக்கு எதிரிலிருந்த கண்ணாடி தெரிந்தது.

தனது கழுத்தில் கணவன் குனிந்து தாபத்தில் புதையல் தேடிக்கொண்டிருக்க, அவனுக்கு இணையாக தன் கைகள் இறுக்கி அணைத்திருப்பதை உணர்ந்தாள். உணர்ந்த வேகத்தில் கைகளை விலக்கியவளால் கணவனை விலக்க முடியவில்லை.

அதே நேரம் அறைக்கதவு தட்டப்பட, வேகமாக மனைவியிடமிருந்து விலகியவன் ரசனையுடன் அவள் கண்பார்க்க, அதில் தெரிந்த அந்நியத்தன்மையில் அதிர்ந்தான். அப்பொழுதுதான் அவனுக்கே உறைத்தது தன்னிடமிருந்து அவளின் கைகள் விலகி சில நிமிடங்கள் ஆனதென்று. ‘சே... விருப்பமில்லாத பெண்ணையா இவ்வளவு நேரம் அணைத்திருந்தேன்’ என தனக்குள்ளேயே மறுக, இல்லையே அவளின் பார்வைதானே அவளருகே என்னை அழைத்தது. யோசனைகளின் நடுவே மீண்டும் கதவு தட்டப்பட வேகமாக கதவுதிறந்து யார் இருக்கிறார்கள் என்றுகூட கவனிக்காமல் வெளியே சென்றான்.

உள்ளே நுழைந்த சுந்தரி மகளின் குழப்ப முகம் பார்த்து, அவருக்கு குழப்பமானதுதான் மிச்சம். மகளும், மருமகனும் தனியறையில் இருந்திருக்கிறார்கள். ஆனால், சந்தோஷத்திற்கு பதில் இருவருமே குழப்பத்தில். ‘ஏன்? இவர்களுக்குள் எதாவது பிரச்சனையா? யாரால்? கண்டிப்பாக மருமகனால் இருக்காது’ என்று ஸ்திரமாக நம்பினார். ஜீவாவின் மேல் அன்று அவர் வைத்த நம்பிக்கை இன்றில்லை என்றும் மாறாதது. திருமண வீட்டில் வைத்து எதுவும் பேச வேண்டாமென்று தனக்குத் தேவையானவற்றை எடுத்து அமைதியாக கிளம்பினார்.

சுபா இருந்த குழப்பத்தில் தாய் வந்ததையோ, தன்னையே பார்த்ததையோ அறியவில்லை. அவளுக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘என்ன செய்கிறேன் நான்? கணவனைவிட்டு விலகி வந்தும் அவன் அணைப்பில் இதம் காண்கிறேன். அப்படின்னா நான் தப்பில்லையா? எப்படி முடிந்தது என்னால்? நோ இந்த நிலை நீடிக்கக்கூடாது, கூடிய சீக்கிரமே முடிவெடுக்கணும்.’ கணவனின் துரோகம் கண்முன் தோன்ற இறுகிப்போனாள் சுபா. இனி அவனை பார்க்கவே கூடாதென்று கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு, அதிக நேரம் உள்ளேயிருக்க முடியாதென்று வெளியே வந்து மாமியாருடன் நின்றாள்.



இரவு உணவு வேளையில் சாதனா-பிரேமிடமிருந்து விலகி விலகிப்போக ஏனென்று காரணம் புரியாமல் குழப்பத்தில் அவளைப் பார்த்தான்.

அதே நேரம் சுபாவினருகில் வந்தமர்ந்த ஜீவா குறும்பாக அவளைப் பார்த்தான். அவளோ கணவனின் பார்வை தவிர்க்க, அவளுக்கு தனியாக டிபன் எடுத்து வைத்த அத்தையிடம், “என்னத்தை நீங்க என் ஒய்ஃப்கு நான் ஊட்டிவிட மாட்டேனா?” என்று ஒரே தட்டை இருவருக்குமாக வாங்கினான்.

சாதனாவிடம், “நாமளும் ஒரே தட்டுல சாப்பிடுவோமா?” என்று ப்ரேம் கேட்க, அவனை முறைத்தவளிடம்... “என்னன்னு தெரியல. ரொம்ப முறைக்கிற. அப்புறமா சரி பண்றேன்” என்று கண்சிமிட்டினான்.

“தேவிமா இட்லியா, தோசையா, சப்பாத்தியா? என்ன சாப்பிடுற?” என்று ஜீவா கேட்க...

“ம்... பூரி” என்றாள் அவனின் மனைவி.

“ஓ... பூரியா? இதோ தர்றேன். நீ இதைத்தான் கேட்பன்னு தெரியும்” என்று பூரியைப் பிய்த்து குருமா வைத்து வாய் திறக்க சொல்ல, ‘நைட்ல பூரியா?’ என நினைத்தவள் ‘ஏட்டிக்குப் போட்டியா பேசி வாய்விட்டல்ல அனுபவி’ என்று தனக்கே சொல்லி வாய் திறந்தாள். வாய்க்குள் சென்ற பொழுதுதான் தெரியும் அது சப்பாத்தியென்று. ஆச்சர்யத்தில் கணவனைப் பார்க்க, அவளைப் பார்த்து கண்ணடித்து ஊட்டிவிடுவதில் மும்முரமானான்.

அனைத்து வேலைகளும் முடிந்து சுபா மாடி செல்லப்போக, “அத்தை அவளுக்கத்தான் கண் ப்ராப்ளம் இருக்கே. கீழ் ரூம் செட் பண்ணியிருக்கலாமே?” என கேட்டான் ஜீவா.

“எங்க உங்க பொண்டாட்டி நான் சொல்றைதக் கேட்டால்தான” என சலித்தார் சண்முக சுந்தரி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
இரவு புதுமணமக்களை அறைக்குள் அனுப்ப, நெடுநேரமாகியும் சாதனா-ப்ரேமிடம் முறுக்கிக்கொண்டு விலகியிருக்க, ‘என்னடா இந்த திடீர் பாராமுகம்? ஈவ்னிங்வரை நல்லாத்தான போயிட்டிருந்தது. அதுக்குள்ள என்னாச்சி?’ மனதில் நினைத்தபடி மனைவியை நெருங்க...

“என் பக்கத்துல வராதீங்க?” என்றாள்.

“ஏன்மா? நான் என்ன பண்ணினேன்?” ஒன்றும் புரியாமல் கேட்டான்.

“எதுக்கு இந்த திடீர் கல்யாணம்? இப்படி திடீர் கல்யாணம் பண்ணியது எனக்கு பிடிக்கல.”

“அதையேன்மா திடீர்னு எடுத்துக்குற. அதிரடின்னு எடுத்துக்கோயேன்.”

“ஆமா பெரிய அதிரடி. இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமான்னு ஒருவார்த்தை கேட்டீங்களா?” என்றாள் கோவத்தில்.

“ஏன் கேட்கணும்?’”

‘ஏன் கேட்கணுமா? என்ன பதில் இது?’ என முழித்து “என்னை மேரேஜ் பண்ணிக்க என்னோட பர்மிஷன் வேண்டாமா? அதை என்கிட்டே கேட்க மாட்டீங்களா?”

“தேவையில்லை. நீ ஏற்கனவே பெர்மிஷன் குடுத்துட்ட.”

“நானா? எப்ப?” என கேள்வியாய் பார்க்க... அவள் கண்களை நேருக்குநேர் சந்தித்து “தேவியைப் பார்க்க நான் பர்ஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வரும்போது, உங்கம்மா யாருன்னு கேட்டதுக்கு உங்க மாப்பிள்ளை’ சொல்லியிருக்க நியாபகமிருக்கா?”

“அப்படியா! நியாபகமில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும் அண்ணியை மனசுல வச்சி சொல்லியிருப்பேன்.”

“ஓ... ஆனா உங்கண்ணன் என்கிட்ட விசாரிச்சப்ப மாப்பிள்ளை விருந்துக்கு வந்திருக்காங்கன்னு உன்னையறியாமல் சொன்னியே. அது எந்த கணக்கு?”

“அதான் உன்னையறியாமல்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் என்ன? இதையெல்லாமா பர்மிஷனா எடுத்துக்கிறது. அதுவுமில்லாமல் திடீர் கல்யாணம்னதும், ஏதோ திருட்டுக்கல்யாணம் பண்ற ஒரு ஃபீலிங் வருது.”

“இப்ப உன்னோட பிரச்சனைதான் என்ன? திடீர் திருமணமா? இல்ல இந்த ப்ரேம்தானா?”

“ம்... ரெண்டும்தான். என்கிட்ட உங்களை பிடிச்சிருக்கா கேட்கல. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு நான் கேட்கல” என்று அவள் சொல்லி முடித்ததும் வாய்திறந்து சத்தமாக சிரித்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஹையோ! செல்லம்! நீ ஏன்டி இப்படி இருக்க? நான் உன்னை பெரிய புத்திசாலின்னு நினைச்சிட்டிருக்கேன். ஆனா நீ இப்படி லூசுத்தனமா கேள்வி கேட்கிற?”

“நான் லூசா?” என்று கணவனை முறைத்து மறுபுறம் திரும்பியமர...

அவளின் அந்த கோபத்தை ரசித்து மனைவியின் மறுபுறம் சென்றமர்ந்து கழுத்தில் இருகைகளையும் கோர்த்து செல்லமாக நெற்றியில் முட்டி, “லூசுன்னு சொன்னா கோபம் வருதா. நீயே யோசிச்சி சொல்லு நீ சொல்றது எப்படியிருக்குன்னு? நிச்சயம் முடிஞ்சி நான் வந்தப்ப என் தோள்ல உரிமையா சாய்ந்தது யாருமா?” என்றான் புன்னகையுடன்.

“அ... அது அந்த ராஜ் போன்ல ஏதேதோ உளறினான். அதனால தெரியாம...”

“ஓ... தெரியாம! ம்... அந்த இடத்துல வேற எந்த ஆணாவது இருந்திருந்தா அப்படி பண்ணியிருப்பியா?”

“என்னை லூசுன்னுட்டு நீங்கதான் அப்படி பேசுறீங்க. அடுத்தவங்க மேல சாயுற அளவுக்கு நானொண்ணும் மோசமானவள் கிடையாது. அந்த மாதிரி என்னை வளர்க்கலை” என்றாள் கோபமாக.

மெல்ல சிரித்தவன் கழுத்திலிருந்த கையை எடுத்து அவளின் இடைக்கு இறக்கி, “எனக்குத் தலைவலின்னதும் டேப்லெட்டோட துடிச்சிப்போய் ஓடி வந்து பொது இடம்னு கூட பார்க்காம நெற்றி, கழுத்துன்னு தொட்டுப் பார்த்தியே என்னைப் பிடிக்காமலா?” என்றான் குறுகுறு பார்வையுடன்.

கணவன் சொன்ன அந்த நிகழ்ச்சியை நினைத்தவள் வெட்கத்தில் தலைகவிழ்ந்தபடி, “ம்... ஒத்துக்கறேன். எனக்கு பிடிச்சித்தான் இருந்தது. ஆனா, உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்ததான்னு தெரியலையே?”

அவளைத் தோளோடு சேர்த்தணைத்து, “முதல்முதல்ல பார்த்தப்ப படபடன்னு பட்டாசா வெடிச்சியே அப்ப பிடிச்சிருக்கலாம். நெற்றியில அடிபட்டதுன்னு சொன்னப்ப, உன்னோட வலி எனக்குள்ள தெரிஞ்சதே அப்போவா இருக்கலாம். கல்யாணம்ன்ற பேச்சு எடுக்காததால உன்னோட நினைப்பு ஒரு சாதாரண நிகழ்வா நினைச்சி விட்டுட்டேன். தேவி போன் போட்ட அன்னைக்கு காலையிலதான் உன்னைப்பற்றிய பேச்சி வீட்ல வந்தது. நீ வேலைக்கு போறதால டிரைனிங் முடியட்டும்னு சொல்லியிருந்தேன். அன்னைக்கே தேவி போன் பண்ணி ரெண்டு நாள்ல நிச்சயம்னதும் என்னோட சந்தோஷத்துக்கு அளவேயில்லை.”

ப்ரேம் சொல்லச்சொல்ல அவனின் மலர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் கணவனை இறுக்கியணைத்து “தேங்க்ஸ்ங்க. அந்த ராஜாலதான் அண்ணி எனக்கு கிடைச்சாங்க. அதே ராஜாலதான் நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்க” என்றாள் சந்தோஷத்துடன்.

“ராஜ் யாரு? அன்னைக்கு தேவியும் சொன்னா.. நீயும் சொல்ற?”

“அப்ப ராஜ் யாருனு உங்களுக்குத் தெரியாதா?” என்றவள் ;அண்ணியே மறைச்சிருக்காங்கன்னா எதாவது காரணமிருக்கும்’ என்று நினைத்தவள், “அவன் ஒரு லூசுங்க. நான் வேலைக்குப் போக ஆரம்பிச்ச ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான். நமக்கெதுக்குடா வம்புன்னு வீட்ல கோர்த்து விட்டுட்டேன். இதுல வந்துமாக்கு நான் அவனை லவ் பண்றேனோன்னு டௌட். இல்லன்னதும் அப்படியொரு சந்தோஷம் முகத்துல. வந்துமா ஏற்கனவே உங்களை செலக்ட் பண்ணியிருந்திருப்பாங்க போல. அந்த ராஜைப் பிடிக்கலைன்னா விட வேண்டியதுதான. எவனோ வந்து பொண்ணு கேட்டதுக்கு ஏன் இந்த அவசர கல்யாணம்ன்ற கோபம் அவ்வளவுதான்.”

“ப்ச்...ப்ச்... ஏதோ இடிக்குதே. ஹ்ம்...” என யோசித்தவன், “அந்த ராஜாலதான் அண்ணி கிடைச்சாங்க சொன்னியே அதெப்படி? தேவிக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?”

‘ஹையோ! இருந்தாலும் என் புருஷன் இம்புட்டு அறிவாளியா இருக்கக்கூடாது. சமாளி சாது சமாளி.’ “அ...அது அவனை அண்ணனுக்கு பிடிக்கலையா? அதனால வேண்டாம் சொல்லிட்டு, உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்குறேன்னதும், அண்ணி காலம் தாழ்த்தாம உங்ககிட்ட பேசி முடிச்சிட்டாங்க. என்னதான் கல்யாணம் வேண்டாம்னு வெளில சீன் போட்டாலும், மாப்பிள்ளை நீங்கன்னதும் சாது சைலன்டாகிட்டா. உங்களை எனக்கு குடுத்தது அண்ணி. அதுக்கு காரணம் அந்த ராஜ். அதனால அண்ணிமேல அன்பு ஜாஸ்தியாகிடுச்சி.”

மனைவி சொன்ன விதம் ப்ரேம்கு சிரிப்பை வரவழைக்க... ‘ஷப்பா... நல்லவேளை கரெக்டா பேசி சொதப்பாம கரெக்ட் பண்ணிட்டோம். இருந்தாலும். நீ புத்திசாலிதான்டி சாது’ என்று தன்னைத்தானே தட்டிக்கொடுக்க, என்னவென்று பார்த்த கணவனுக்கு, ஒரு அசட்டு சிரிப்பை பரிசளித்தாள்.

“சரி உன்னைப்பற்றி சொல்லு ப்ரேம்” ஆரம்பிக்க...

காலையிலிருந்து உள்ள அசதியெல்லாம் ஒன்று சேர, ‘என்னடா இது விடிய விடிய ராமாயணம் மட்டும்தானா?’ என்ற நினைப்பு வர... “என்னைப்பற்றி உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னா நம்ப முடியலையே. அதுவுமில்லாமல் பர்ஸ்ட் நைட்லயே எல்லாத்தையும் பேசி முடிக்கணும்னு உங்களுக்கு எந்த அறிவாளி சார் சொன்னது?” என நக்கலாக கேட்டாள்.

“அப்ப பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணவேண்டாம்னு சொல்றியா?” என மையலுடன் மனைவியைப் பார்த்து, “சே... இது தெரியாம நேரத்தையும், எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணியிருக்கேன். சாரிடா தனா” என்று அணைப்பை இன்னும் இறுக்கினான்.

கணவன் அழைத்த தனாவை ரசித்து, “ஹேய்! என்ன விளையாடுறீங்களா? நான் தூங்குறதுக்காக சொன்னேன். நீங்க நினைக்கிற அர்த்தத்துல இல்ல?” என்றாள் வேகமாக.

“பரவாயில்ல பேபி. தூங்குறதுதான ரெண்டுபேரும் சேர்ந்தே தூங்கலாம்” என கட்டிலில் சாய்த்து, தூங்காமலிருக்க என்னென்ன வழிகளோ அதை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தான் அவளின் கணவன்.
 
Top