• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
17



“அப்புறம் ஏன்டி நான் சொல்றதை நம்பமாட்டேன்ற? இப்பக் கேளு. அவர் ஃப்ரண்ட்ஸ் சர்கிள்ல இருக்கிற யாராவது பார்க்கணும் பேசணும் சொல்லி, ஒருவேளை சாப்பாட்டை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல போய் ஒரு வெட்டு வெட்டிட்டு, வெட்டியா பேசிட்டு வர்றதுக்குப் பெயர்தான் மீட்டிங். அதுவும் உடம்புல எதாவது சுகர் பி.பினு இருந்து வீட்ல ஓவர் கண்டிஷன் இருந்தா, இப்படித்தான் எதாவது காரணம் சொல்லி அவங்க க்ரூப் அலம்பல் பண்றாங்க. இது தெரியாம...”

“ஹான்” என அவள் வாய்திறக்க...

“அதேதான். மீறி தொழில் விஷயமா போனாலும் நான் எல்லாத்தையும் கான்பரன்ஸ்லயே முடிச்சிருவேன். ஒரு அரைமணி நேர வேலைதான் இருக்கும். அவர்தான் அலப்பறையைப் போடுறார்னா நீ சேர்ந்து தாளம் போடுற.”

“ஆனா மாமா முகம் சோர்வாயிருந்ததே?”

“ஒரு செகண்ட்” என்றவன் முகத்தை சோகமாக மாற்றி, “இன்னும் ரெடி சொல்லலையே பேபி. ஐ ஃபீல் சோ சேட்” என தலையைத் தொங்கப்போட்டு பின் நிமிர்ந்து, “இந்த ஆக்டிங்தான் உன் மாமனார் போட்டது” என்றான்.

திறந்த வாய் மூடாமல் நின்றிருந்தவள் அருகில் நெருங்கி, “ஆர் யூ ரெடி பேபி” என... சட்டென அவனைத் தள்ளிவிட்டு நகர்ந்தவள் கைபிடித்து “கேள்வி கேட்டா பதில் சொல்லணும். ஓடக்கூடாது” என்றான்.

“அது கேட்கிற கேள்வியைப் பொறுத்து.”

“அப்படி என்ன கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுட்டேன்? ரெடியாயிருந்தா பர்சேஸ் பண்ணப் போகலாமா கேட்டேன். ஆமா நீ என்ன நினைச்ச?” என்றான் வந்த சிரிப்பை அடக்கியபடி.

“நானா? நா..நான் ஒண்ணும் நினைக்கலையே. ஏன் எதாவது நினைக்கணும் நினைச்சீங்களா?” விலாங்குமீனாய் தன் பேச்சால் நழுவினாள்.

“அப்ப நீ எதுவும் நினைக்கல?”

“ம்கூம்.”

“நிஜமா?” அவளின் சம்மதமான தலையாட்டலில், “அப்ப சரி. சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு போகலாம். ம்.. போ”

அவனை முறைத்து, “இப்படிக் கையைப் பிடிச்சிக்கிட்டு போ போ சொன்னா எப்படிப் போறதாம். முதல்ல கையை விடுங்க.”

“விட்டா போயிருவியே!”

அக்குரலிலுள்ள ஏதோ ஒன்று, “போனா பின்னாடியே வாங்க” என்று சொல்ல வைத்தது.

கண்கள் மின்ன “ஆர் யூ...” சட்டென அவன் வாய்மூடி ‘ம்கூம்’ என தலையசைக்க... அவளின் கையை நகர்த்தி, “இந்த அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அவள் உணருமுன் அங்கிருந்து சென்றிருந்தான்.

திகைப்பாய் ஒரு அதிர்வு அவளுள். அவனை முறைக்கத் திரும்புகையில் அவனில்லை அங்கே.

ஏதோ ஏதோ ஒன்று நெஞ்சுக்குள்ளே புகுந்து

காதல் ரேகை மீட்டச் சொல்கிறதே!

“ஹலோ மேடம். போதும் கனவு கண்டது. கொஞ்சம் கீழ இறங்கி வாங்க. நம்ம கூட ஒருத்தன் வந்தானே என்ன ஆனான்னு அக்கறையிருக்கா? நீ பாட்டுக்கு உன் ஹஸ்பண்ட் கூப்பிட்டதும் வந்துட்ட?” என்று வந்து நின்றான் நிஷாந்த்.

“வேண்டாம்டா தம்பிப்பையா. எதோ தெரியாத ஆளில்லாத காட்டுக்குள்ள விட்ட மாதிரிக் கத்துற? வா சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்ப” என்று இழுத்துச் சென்றாள்.

“வெல்கம் டூ அவர் ரூம்.” இரவில் தன்னறைக்கு வந்த மனைவியை வரவேற்று, “டூ யூ லைக் திஸ் ரூம்” என... அவளின் ‘ம்’ என்ற தலையசைவில், “டூ யூ லைக் மீ?” என அதே வேகத்தில் கேட்க...

“எஸ்” என்றவள் அர்த்தம் உணர்ந்து “அச்சோ இல்ல” என்றாள் வேகமாக.

“ஹாஹா ஐ நோ! ஐ நோ!” என்று சிரித்தான்.

‘ஹ்ம்’ என்ற செல்லச் சிணுங்கல்கள் அவளினுள். வெட்கம் மறைத்து “நான் எங்க படுக்கிறது?” என கேட்க,

“பெட்லதான்.”

“அப்ப நீங்க?”

“என்ன கேள்வி பெட்லதான் படுப்பேன்” என்றவனுக்கு அவள் ஏன் அப்படிக் கேட்கிறாள் என்று புரியவில்லை.

“இல்ல எனக்கு வேற ரூம் தர்றீங்களா?”

“ஏன் இந்த ரூம்கு என்ன? எதாவது பிரச்சனையா?” என்று பதற...

அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை என நினைத்தவள் மனதில் சிறு நிம்மதி எழ, “இல்ல நமக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும். அதுக்குக் கொஞ்சம் டைம் வேணும்” என்று நாசூக்காக தங்கள் இருவரின் தனிமையை மறுத்தாள்.

“உண்மையைச் சொல்றேன் ஏர்போர்ட் எனக்கு எதுவுமே புரியல” என்றதும் அவள் புன்னகைக்க, “இங்க நீ படுக்குறதுக்கும் கெமிஸ்ட்ரிக்கும் என்ன சம்பந்தம்?”

“எந்த சம்பந்தமும் வேண்டாம். நான் இங்கேயே படுத்துக்கிறேன்.”

“அப்ப சரி. பால் குடிச்சியா?”

“இல்ல. எனக்கு நைட் பால் குடிச்சிப் பழக்கமில்ல.”

“பால் குடிச்சிப் பழக்கமில்லையா? இல்ல பாலே பிடிக்காதா?”

“அப்படிலாம் இல்ல. பால் குடிப்பேன். நைட் பழக்கமில்லை சொன்னேன்.”

“பழகிக்கிறியா?” என அருகில் வந்து கேட்க... ‘ம்’ என்ற தலையாட்டினாலும் பார்வை மட்டும் அவனிடமே.

“கொஞ்சம் வெய்ட் பண்ணு வர்றேன்” என்று கிச்சன் சென்று பால் எடுத்து வந்து தருமுன், தன் தாயை அவன் படுத்தியபாட்டில் உள்ளுர சிரிப்பு வர குடித்தபடியே கணவனைப் பார்க்க, அவனோ பெட்டை சரிசெய்து கொண்டிருந்தான்.

‘வெறும் வாய்ப்பேச்சுதான் உங்களுக்கு. நானும் சில டைம் அந்த வார்த்தையைக் கேட்டு பதறிப் பயந்திருக்கேன். இப்ப நினைச்சா... ஹாஹா சரியான...’ சிரிப்புதான் வந்தது திருவிற்கு.

“மொழி படுத்துக்கோ. நான் அப்பாகிட்ட பேசிட்டு வர்றேன்” என்றதும் அவளின் சம்மதமான தலையாட்டலில் குட்நைட் சொல்லிச் சென்றான்.

பெட்டில் அமர்ந்து சில நிமிடங்களில் அப்படியே படுத்தவள் நேரமாகியும் தூக்கமில்லாமல் உருள, கனவுகளும் தூரம் போனதோ! ஒரு அளவிற்கு மேல் முடியாமல் கணவனைத் தேடி வெளியே வந்தாள்.

அங்கு அப்பாவும் மகனும் அமர்ந்திருக்க, வேலை செய்பவனை எப்படி அழைப்பது என தயங்கி நின்றிருந்த மருமகளின் அலைபாயும் மருண்ட விழிகளைக் கண்ட குருமூர்த்தி, “கதிர் நீ ரூம்கு போ” என்றார்.

“என்னப்பா திடீர்னு. இன்னும் பத்து நிமிட வேலைதான் முடிச்சிரலாம். மொழி தூங்கிட்டிருக்கா. அலைச்சல் அதிகம்ல ரெஸ்ட் எடுக்கட்டும்.”

“மருமக தூங்கலைப்பா. உன் பின்னாடிதான் நிற்கிறா பாரு.”

சட்டென்று பின்புறம் திரும்பி அவளைப் பார்த்தவன், “என்ன மொழி புது இடம்ன்றதால தூக்கம் வரலையா?” என்றான்.

“இ..இல்ல அ..அது...”

“கணக்குதான காலையில் பார்த்துக்கலாம்டா. எதுவாயிருந்தாலும் உள்ள கூட்டிட்டுப் போய்க் கேளு” என தள்ளாத குறையாக அனுப்பினார்.

தங்களறைக்கு வந்ததும் “என்னமா? ஏன் தூங்கல?” என்றான்.

“எ..எனக்குத் தூக்கம் வருது. ஆனா, தூங்க முடியல” என்று தயங்கித் தயங்கி சொல்ல...

“ஏன்மா?”

“நான் அத்தை கூடவே இருந்துட்டேன். முதல் டைம் வெளியில போனது நிஷாந்த் அண்ணா கல்யாணத்துக்குதான். அப்பக் கூட பத்மினி அம்மா பக்கத்துல படுத்துக்கிட்டேன்.”

“என்ன சொல்ல வர்றன்னு புரியல மொழி?”

“நான் உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு தூங்கட்டுமா? எனக்குத் தனியா படுக்க பயம். ஹாஸ்டல்ல தனிரூம் எடுத்தது கூட என் கனவு மத்தவங்களைப் பாதிக்கக்கூடாதுன்னுதான்.”

“மங்கை! என்னமா சொல்ற?” அக்குரலில்தான் எத்தனை கரிசனம்.

மனதினுள் ஏதோ ஒரு மூலையிலிருந்த, ஏதோ ஒன்று உருவம் பெற்று வருவது போலிருந்தது மங்கையவளுக்கு. அதன் கணம் தாளாமல், “ஆமா. மங்கையா இருக்க முடியாமல்தான் திணறிட்டிருக்கேன். என் அப்பா, அம்மா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டின்னு அத்தனை பேரோட பாசத்தையும் ஒட்டுமொத்தமா இழந்துட்டு, தனியா கனவுகளோட போராடி திருமொழின்ற அடைமொழியோட... மங்கையர்கரசியா வாழ முடியாம அந்த வாழ்க்கை தந்த ஏக்கத்தை மறக்கவும் முடியாம அல்லாடிட்டிருக்கேன். என்னால அந்த பாரத்தைத் தாங்க முடியலங்க” என்றாள் குனிந்தபடி.

“மொழி கண்டிப்பா நீ மங்கையர்கரசியா தைரியமா வாழத்தான் போற. நான் உன்னை வாழ வைப்பேன்” என்றான் அழுத்தமாக.

தலைநிமிர்ந்து விழியுயர்த்தி கணவன் முகம் பார்க்க... அவளின் கலங்கிய கண்கள் துடைத்து, “உன் ஆசை சீக்கிரமே நிறைவேறும் மொழி. ம்கூம்.. மங்கை. சரிதான?”

“எப்பவுமே அப்படியே கூப்பிடுறீங்களா? என்னோட அப்பா ஆசையா வச்ச பேர்னு அம்மா சொல்வாங்க. சொந்தப் பெயர் கூட மறந்திருமோன்னு பயமாயிருக்கு. நான் மங்கையர்கரசியாவே இருக்கணும்.”

“ஆனா, எனக்கு மொழியும் பிடிச்சிருக்கே. என்ன செய்யலாம்?” என்றான் யோசிப்பது போல்.

“தனியா இருக்கும்போது மங்கை கூப்பிடுங்க. மத்த நேரம் மொழி கூப்பிடுங்க. ஓகேவா?”

“அப்படிலாம் வாக்கு கொடுக்க முடியாது. ரெண்டையும் எப்ப வேணும்னா சொல்வேன்” என்றதும் அவள் முறைக்க... அவனோ சிரித்து, “சரி படுத்துக்கோ. என் கையை மட்டும் இல்ல என்னையே கூடப் பிடிச்சிக்கிட்டாலும் ஓகே” என்றதில் ‘வேறெதாவது இருக்கிறதா’ என்று கணவன் முகம்காண... தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று தெரிந்ததும்... ‘ம்..’ என சம்மதித்துப் படுத்தாள்.

அவளுடன் தானும் படுத்து மனைவியின் கைபிடித்துத் தன் விரல்களால் அழுத்தினான். அந்த அழுத்தம் அவளின் தனிமையைப் போக்க... அவனுக்கோ அந்த ஸ்பரிசம் உடலெல்லாம் பரவி நாடி நரம்புகள் தாண்டி இதயம் சென்று எதையோ உணர்த்த, புரியவில்லை அவனுக்கு. மனம் எதிலோ முட்டி மோதிப் பார்த்தும் உருவமில்லா ஒன்று, அவனுள்ளே சுற்றிச் சுழன்று ஆட்டம் காட்டியது.

சட்டென கையை உதற அதற்குள் பயத்தில் அவள் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

‘மங்கையர்கரசி! கயல்விழி! யார் இவர்கள்? என் வாழ்வில் கனவாய் வந்து, நனவிலும் காட்சிகொடுத்து, ஒருத்தி மனைவியாய்! ஒருத்தி தங்கையாய்!’ தாய் சொன்னாற்போல் கடவுளின் கணக்கு என்னவென்றுதான் புரியவில்லை கதிருக்கு. கடவுள் விட்ட வழியென்று மனைவியைப் பார்க்க, கண்மூடி அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்தாள்.

மெல்ல அவளின் தலைவருடி, “ஆர் யூ ரெடி பேபி” என்றதில் சட்டென்று மங்கையவள் கண்விழிக்க... கணவனின் குறும்புத்தனமான மௌனச்சிரிப்பில் அதற்கான அர்த்தத்தோடுதான் கேட்கிறான் என்பதை உணர்ந்து, “விளையாடாம தூங்குங்க” என்றாள்.

“அதுக்குத்தான்மா கேட்டேன். நீ என்ன நினைச்ச? அதுவும் தூக்கத்துல இருந்து முழிக்கிற அளவுக்கு என்ன நினைச்ச? கெமிஸ்ட்ரி இவனுக்கும் ஒர்க் அவுட் ஆகிருச்சின்னா?” என வம்பிழுத்தான்.

“திரும்பவும் முதல்லயிருந்தா. தூக்கம் வருதுங்க. கெமிஸ்ட்ரி பயாலஜிலாம் யோசிக்க முடியாதளவு தூக்கம். எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம் தூங்குங்க. இல்லன்னா அத்தைகிட்டப் போயிருவேன்” என்று மிரட்ட... “ஹேய் நோமா. நான் தூங்கிட்டேன்” என்று கண்மூட, மெல்லிய புன்னகை அவளுள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
மாலை வரவேற்பு என்றிருக்க, நிஷாந்த் குடும்பத்துடன், தமிழரசி கயல்விழியும் முன்தினமே வந்து அவன் முன்னர் தங்கியிருந்த சின்ன வீட்டிலிருந்தார்கள்.. காலையில் புது வீடு பால்காய்ச்சி முடித்து அப்படியே வரவேற்புக்கு பரிசுப்பொருள் வாங்குகிறோம் என்ற பெயரில் சற்று நேரம் சுற்றிவிட்டு, மாலை அந்த பெரிய ஹோட்டலுக்கு அழைத்து வந்தான் நிஷாந்த்.

“என்னமா மருமகளை ரெடி பண்ணிட்டீங்களா?”

“எஸ் மேம். ஃபுல் மேக்கப் முடிஞ்சது.”

“மேக்கப்லாம் அதிகமில்லையே. நேச்சுரலாவே அழகான பொண்ணுதான். ஓவர் மேக்கப் போட்டு என் பையன் யாரோன்னு பயந்து தலைதெறிக்க ஓடிறப்போறான்” என்றார் கேலியாக.

“மேம் அந்தளவுக்கு மேக்கப் போடல. அந்த மாதிரி கேட்கிறவங்களுக்கும் இல்ல அந்த மாதிரி மேக்கப்தான் சிலருக்கு செட்டாகும்னு தோணுறவங்களுக்கும்தான் போடுவோம். வேணும்னா நீங்களே பாருங்க” என்று மங்கையவள் முகம் திருப்ப... அதில் திருப்தியுற்றவராய், “ம்.. இது அழகு” என்று கையால் திருஷ்டி கழித்து மேடைக்கு அழைத்துச் சென்றார்.

நிமிர்ந்து மேடையையும் அங்கு நின்றிருந்தவனையும் பார்க்கவில்லை அவள். ஆனாலும், கண்டாள் அவன் தன்னையே பார்த்திருப்பதை. ஏதோ ஒன்று அவளை தலை நிமிரவிடாமல் செய்தது. வெட்கமா! கூச்சமா! இல்லை நாணமா! பழையவை எதுவும் நினைவில் இல்லாமல் போக மெல்ல நிமிர்ந்து மேடையைக் கண்டாள்.

தன்னைக் கிண்டலடித்த நண்பன் ஒருவனை, கையில் கிடைத்த எதையோ எறிந்து ஏதோ கிண்டலாகத் திட்டிச் சிரித்தபடி அவனும் அவளைக் கண்டான்.

தன்னையே பார்த்திருந்த கணவனுக்கு கண்ஜாடை செய்து மற்றவர்கள் பார்ப்பதைச் சொல்ல... புரிந்தவனோ மலர்ந்த புன்னகையை சிறிதாக்கி அசடு வழியத் திரும்பினான்.

“மச்சான் அசடு வழியுது சொல்வாங்கள்ல அது இதுதானா பாருங்க?” என்று செல்போன் கேமராவைக் காண்பிக்க...

“போடா” என்று அடிபோட்டு, “நிஷா இன்னும் வரலைபோல. போன் போட்டுக் கேளு” என்றான்.

“டிராபிக் கொஞ்சம் அதிகமா இருக்காம். இப்ப வந்திருவாங்க.”

அதற்குள் சிவகாமி மங்கையர்கரசியை அழைத்து இளங்கதிர் வசம் நிறுத்தி அருகில் நின்றார்.

“மச்சான் வீட்ல வந்துட்டாங்க. நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று நிஷாந்த் செல்ல...

“உன்னை மாதிரிதான் உன் தம்பியும்” என்று மனைவியைப் பார்த்தான்.

“நீங்க கூடதான் அத்தை மாதிரியே இருக்கீங்க. நான் எதாவது சொன்னேனா?”

‘நான் எதுக்கு சொன்னா இவ... ஹா..ஹா கதிர்’ என தனக்குள்ளே சிரித்து “பதிலுக்குப் பதில் பேசியே ஆகணுமா?” என்றான்.

“நீங்க கேள்வி கேட்டே ஆகணுமா?”

“டேய் மகனே! ஸ்டேஜ்ல வச்சி மருமகளை ஏன்டா மிரட்டுற? பாரு முகம் எப்படி வாடிப்போச்சிதுன்னு” என அக்கறை தொணிக்க குருமூர்த்தி சொன்னதில்,

கதிர் மனைவியைக் காண, அவளின் முறைத்த பாவனை மாறி சாந்தமாக மாறியதைப் பார்த்து, “தந்தையாரே இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். என் பொண்டாட்டியை எனக்கு எதிரா திருப்புறீங்களா?”

“ஆமா இவர் பெரிய வக்கீலு. நான் இவர் கேஸை திசை திருப்புறேன்” என அங்கலாய்க்கவும், அதில் மங்கையவள் சிரிக்க,

“நான் சொன்னேன்ல எங்கப்பா ஒரு கேடின்னு. நம்புனியா நீ?”

“நீங்களும் ஒண்ணும் குறைஞ்ச ஆள் கிடையாது” என்று கணவனைக் காண, இருவரிடமும் சிரிப்பு. பார்ப்பவர்கள் கண்படுமளவு அப்படியொரு சிரிப்பு.

அதை அழகாக ஒளிப்படமும், ஒலிப்படமும் உள்வாங்கியதென்றால், அப்பொழுதுதான் மண்டப வாயில் வந்த தமிழரசி, கயல்விழியுடன் மற்றவர்களும் அங்கிருந்த வீடியோவில் காண... இமைக்க மறந்து பார்த்திருந்தார் தமிழரசி.

சில நிமிட ஸ்தம்பித்த நிலைமாறி, “க..கயல் இ..இந்தப்பொண்ணு மங்கை மாதிரி இருக்காள்ல?” அவளிடம் கேட்டு சட்டென்று நிஷாந்திடம் திரும்பியவர் “இவ உன் கூடப்பிறந்த தங்கையா?” என்று அவன் முகம் பார்த்தார் பதிலுக்காய்.

அவர்களின் அசைவில்லா நேரத்தில் மனைவியையும், தாய் தகப்பனையும் நிஷாந்த் உள்ளே அனுப்பியிருக்க... அவர்களைத் தேடி வந்த பிரஷாந்த் உள்ளே வந்த தாய் தகப்பனை உள்ளே மேடைக்கு அனுப்பி, அண்ணனைத்தேடி வந்தபொழுது தமிழரசியின் கேள்வியைக் கேட்டான்.

கேட்டது யாரென்று அவர் முகம் பார்க்காமலேயே, “ஆமா என் கூடப்பிறந்த அக்காதான்” என தன் முன் வந்து நின்றவனை முழுதாகப் பார்க்கும் முன், அவரைப் பார்த்திருந்தான் அவர் பெற்ற மகன் அன்பழகன்.

கயல்விழியும் நிஷாந்தும் அவர்கள் இருவரையுமே பார்த்திருக்க...

“அம்மா” என்ற உதடசைவுடன் கூடிய அதிர்வு அவனுக்கென்றால்...

சில நொடிகள் அவன் முகத்தை அசையாது பார்த்திருந்த தமிழரசிக்குள், மகனின் அந்த குழந்தை மாறா பருவம் அடையாளம் கண்டு, “அன்பு” என்று உதடுகள் உச்சரித்தது.

தாயின் அன்பு என்ற வார்த்தை தாயின் மேலிருந்த பாசத்தைக் கொண்டு வந்த அடுத்த நிமிடம், தாய் மேலுள்ள வெறுப்பும் நினைவு வர “சாரி நான் அன்பு கிடையாது பிரஷாந்த். இது என் அண்ணன் நிஷாந்த். அது என் அக்கா திருமொழி” என்று வீடியோவில் இருந்தவளைக் காட்டினான்.

தாய் மகனின் பிரிவுக்குப் பின்னான சேர்தல் அத்தனை வருட துயரத்தைத் தீர்க்கும் என்றிருந்தவர்களுக்கு, அவனின் இந்த பாராமுகம் ஏனென்று புரியவில்லை.

“பெத்தவளுக்குத் தெரியாதாடா பிள்ளையை. உனக்கு என்னை ஞாபகமில்லையா? நான் உன் அம்மாடா. ஊர் பெயர் மாத்தினா அடையாளம் தெரியாம போயிருமா? எதுக்காக தெரியாத மாதிரி நடிக்கிற? தெரியாதவனாயிருந்தா எதுக்கு என்னைப் பார்த்ததும் அப்படியே நின்ன? உன் உதடு உச்சரித்த அம்மான்ற வார்த்தை பொய் கிடையாது அன்பு.”

முகம் திருப்பி நின்றிருந்தவன் முன் வந்து, “உன்னை மட்டும் எப்படிடா... நீ அவங்க கையில் இருந்ததை நான் பார்த்தேன். உன்னை இப்படி ஒரு இடத்துல எதிர்பார்க்கலடா” என்றார் குரலில் சந்தோஷம் மேலிட.

‘சாகட்டும்னு விட்டுட்டுப் போயிட்டு, உயிரோட வந்தா எதிர்பார்க்க முடியாததுதான்’ என நினைத்து, “நீங்க என்ன சொல்றீங்க தெரியல. அண்ணா யார் இவங்க?” என்றான் நிஷாந்திடம்.

“இவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்கடா” என்ற நிஷாந்திற்குமே ‘உண்மையிலேயே அவனுக்கு அவன் அம்மா நினைவில்லையோ’ என்றுதான் தோன்றியது.

அண்ணனை ஆச்சர்யமாகப் பார்த்து “மச்சானுக்கு இவங்க சொந்தமா? எப்படி?”

“அது எனக்குத் தெரியாதுடா. இவங்க இருக்கிற இடம் சொல்லி பத்திரிக்கை கொடுத்து, இங்க வர்றது வரை கதிர் சார் ஆர்டர்தான்.”

‘ஓ... ஏன் எனக்குச் சொல்லல? ஆனா, எப்படி இவங்களை.. எங்கே?’ என்ற கேள்வி மனதினுள்.

“இங்க வர்றதுவரை மாப்பிள்ளை வீடா இருக்கலாம். இப்ப நான் பெண் வீடு. இது என் பொண்ணோட விசேஷம்” என்று தமிழரசி அழுத்தமாகச் சொன்னார்.

பிரஷாந்த் ஏதோ சொல்ல வர... அவனை கைநீட்டித் தடுத்து, “அவ என் பொண்ணுதான். இல்லன்னு யாரும் சொல்ல முடியாது. அதே மாதிரி நீதான் என் கடைசிப்பையன் அன்பழகன். அதையும் இல்லன்னு சொல்ல முடியாது. அவள் உன் கூடப்பிறந்தவள்னு நீயே சொல்லிட்ட. அப்ப கண்டிப்பா என்னை அடையாளம் தெரியாமல் இருக்காது. ஆனா, தெரிஞ்சே தெரியாத மாதிரி நடிக்கிற உன்கிட்டச் சொல்லணும்ன்ற அவசியமில்லை. என்னதான் உன்னை நீ மறைச்சாலும் உண்மைன்னு ஒண்ணு இருக்கு அன்பு. நீ வாமா போகலாம்” என்று உள்ளே சென்றார்.

‘உண்மை! ஹ்ம் என்ன உண்மையைக் கண்டுட்டாங்க. என்னை சாகடிக்கப் போறாங்கன்னு பார்த்தும் பார்க்காத மாதிரி போனவங்கதான. உண்மையாம் உண்மை.’ நினைவுகளில் அன்று நடந்தது வர கண்களில் நீரும் பெருகியதோ!

மரத்தினடியில் உறங்கிக்கொண்டிருந்த அன்பழகன், பூமியைப் பிளப்பதுபோல் விழுந்த இடி மின்னல் மழையில் அதிர்ந்து எழுந்து அழுதபடி கண்கள் சுற்றிலும் பார்க்க, அவ்வெளிச்சத்தில் தூரத்தில் தன் குடும்பத்தினர் அலறல் கேட்டது. கண்ணில் விழுந்த மழைத்தண்ணீர் எதுவும் தெரியாத அளவிற்கு மறைத்தது. வேகமாக எழுந்து நிற்கையில் தூரத்தில் கயல்விழி ஓடி வந்து ஒளிவது கண்ணில்பட்டது. அதைத் தொடர்ந்து தன் அக்காவின் அலறல். இளநாதன் எதோ சத்தமிட்டு எங்கோ விழுவது தெரிந்தது. அதன் பின் கார்மேகம் சித்தப்பா கையில்லாமல் தன்முன் வர பயந்து அலறிவிட்டான்.

கார்மேகம் பின்னாலேயே தன்னைப் பார்த்தபடி தாய் வர அழுகையுடன் தாயை அழைக்க வந்த நேரம், ஒருவன் தன்னைத் தூக்கவும் வெட்ட வந்த சித்தப்பனை இன்னும் அழுதபடி பயத்துடன் பார்த்தான். அதேநேரம் தன்னை நெருங்கிய தாய் கண்ணில் நீருடன் அழுகையை அடக்கியபடி மற்றவர்களறியாமல் செல்வது கண்ணில்பட்டது. அச்சிறு வயதில் தாயின் செய்கை தவறாகவேபட்டது அன்பழகனுக்கு. அவருடன் சென்ற கயல்விழியைக் கவனிக்கவில்லை அவன்.

இப்பொழுதும் தாயின்மேல் கோபம்தான். ‘ஏன் தன்னைக் காக்க வரவில்லை? தன் உயிர்தான் முக்கியமென்று போக எப்படி முடிந்தது? ஏன் அநாதரவாக விட்டார் தன்னை? இவ்வளவுதான் பெத்த பாசமா? அப்படியானால் அவர்களுக்கு நான் யார்?’ மனம் அடிக்கடி கேட்ட... கேட்கும் கேள்விகள்.

“அன்பு” என்ற நிஷாந்த் அழைப்பில் கண்கள் துடைக்க... “அம்மாகிட்ட ஏன்டா அப்படிப் பேசின? உன்னைப் பார்த்ததும் அவங்க சந்தோஷம் முகத்துல தெரிஞ்சது. ஏன்டா இப்படிப் பண்ணிட்ட? பாவம்டா அவங்க?”

“நான் எதுவும் பண்ணலண்ணா. உயிருக்குப் போராடிட்டிருந்த பையனைக் காப்பாத்தாம ஓடிப்போனவங்க. இப்ப வந்து நான் உன் அம்மா சொன்னா எப்படி ஒத்துக்க முடியும். எனக்கு அம்மான்னா அது பத்மினி அம்மாதான். வேற யாரும் கிடையாது. இங்க நடந்ததை இத்தோட மறந்திருங்கண்ணா. எல்லாரும் தேடுவாங்க போகலாம் வாங்க.”

கயல்விழியுடன் நடந்தாலும் மனமெல்லாம் மகனைப் பற்றிய யோசனைதான் தமிழரசிக்கு. மகன் இந்தளவு வெறுக்கக் காரணம் புரியாது தவித்தார் அந்தத்தாய்.

கயலின் “அத்தை” என்ற அழைப்பில் திரும்பியவர், “அவன் அன்புதான் கயல். எனக்கு நல்லாவே தெரியுது. நான் அவன் அம்மாவே இல்ல சொல்றான். என்னை மறந்திருப்பான் சொல்ல வழியில்லாம அம்மான்னு சொன்னான் கயல்.”

அத்தையின் வேதனை பொறுக்காது “அவன் அன்புதான் அத்தை. அவன் முகம் வேதாச்சலம் தாத்தா மாதிரி. என்ன காரணத்துக்காக இப்படிப் பேசுறான் தெரியல. சீக்கிரமே தெரிஞ்சி சரி பண்ணிரலாம் அத்தை. நீங்க கவலைப்படாதீங்க.”

“உனக்கு அவன்தான் அன்புன்னு தெரியுதுதான?” திரும்பத்திரும்பக் கேட்டு உண்மையென்றதும் கண்ணீர் துடைத்து, “என்னைத் தேடிக் கண்டிப்பா வருவான். தொலைந்து போனதா... இல்லை இல்லாமலே போனதா நினைச்ச என் இரண்டு பிள்ளைங்க உயிரோட இருக்கிறதே போதும். எல்லா வகையிலும் என்னை அந்தத்தாய் கைவிட்டுட்டதா நினைச்சேன். பரவாயில்லை என்மேலயும் அந்த காமாட்சி தாய்க்கு கருணை இருக்குபோல. இந்த நேரத்து சந்தோஷத்தை ஏன் இழக்கணும் கயல்” என்றார் தெளிந்த மனதுடன்.
 
Top