• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 16

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
16



“சிலமுறை பலவந்தப்படுத்தவும் வீட்டை விட்டு வெளியே போயிருவேன்னு சொன்னேன். அவ்வளவுதான் பயந்து, இனி உன்னைத் தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணினான். அடுத்த ஆறுமாதம் எந்தப் பிரச்சனையும் இல்லாமலிருந்தது. திடீர்னு வயித்துக்குள்ள ஒரு அசைவு. அப்பதான் தெரிந்தது நான் கர்ப்பமாயிருக்கிறதும், கலைக்கக்கூடிய நிலையைக் கடந்துட்டேன்னும். கோபம்! யார்மேல காட்டுறதுன்னு இல்லாத கண்மண் தெரியத கோபம். எனக்குதான் நான் பெத்த அடிமை இருந்ததே” என்று ஏளனக்குரலில் மகனை நோக்கிக் கை நீட்டினார்.

‘ம்.. இன்னும் சொல்லு. உனக்குப் பிறந்ததுக்கு கடவுள் கொடுக்குற தண்டனையா நினைத்து ஏத்துக்குறேன்’ என்பதாய் தாயையே பார்த்திருந்தான்.

“எனக்குக் கொள்ளி வைக்கப் பிறந்தியான்னு அவன் தொடையில் சூடு வைத்தேன். அவங்கப்பன்கிட்டச் சொல்லி சண்டையாகி, இவனைத் தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரியும் வீடுமா அலைஞ்சான். தொடர்ந்து பையனைத் தூக்கிட்டு அலைய வைத்தேன். பத்தாவது மாதம் பவா பிறந்துட்டா. பொண்ணுன்றப்ப கொஞ்சம் இளகின மனசு, அவங்கப்பனைப் போல முகமும், கழுத்து மச்சமும் இருக்கவும், கடவுள் என்னை வஞ்சித்ததாதான் நினைத்தேன்.”

“கடவுள் எங்களைத்தான அண்ணி வஞ்சித்தார். இந்தம்மாவுக்கென்ன? இன்னும் ஜெகஜ்ஜோதியாதான் இருக்கு. இவங்க கஷ்டப்பட்டா நாங்க என்னண்ணி செய்தோம்? நான்தான் கஷ்டம் அனுபவிச்சேன்னு பார்த்தா, அண்ணன் பாவம் அண்ணி” என்று கண்ணைக் கசக்க,

“ப்ச்.. பவிக்குட்டி இதுவரை நடந்ததையும் நடக்குறதையும் மறந்துட்டு, நீயும் உன் அண்ணணும் வருங்காலத்தை மட்டும் பாருங்க. இப்ப அங்க கவனி” என்றாள் அன்பழகி.

“அந்த முகம் பார்த்ததனால் அவள் மேலயும் பாசம் வைக்க முடியலை. பவாவோட நாலாவது வயசுல ராஜி காதல்னு வந்து நிற்க, பையனை விசாரிச்சதுல சரிவரும்னு தோணினதால முடிச்சி வச்சிட்டேன். என் கடமையை நிறைவேற்றிய திருப்தி எழுந்தாலும், குடும்ப பாரம் மனசுல அழுத்தத்தைக் கொடுத்தது. யாரையும் பிடிக்கலை. இயல்பாயிருக்க முடியலை. ஒண்ணு நான் சாகணும். இல்லை இவங்க மூணு பேரையும் கொல்லணும். அப்படித்தான் என் மனநிலை இருந்தது. மூச்சு முட்டிப்போய் செத்துவிடுவேனோன்ற நிலை. இப்படியே இருந்தா சரிவராதுன்னுதான் கோவில் கோவிலா சுத்த ஆரம்பித்தேன். அதில் ஒரு ஆறுதல்.”

“பவாவுடைய ஐந்தாவது வயதில்தான் என்னோட ஆன்மீக குருவைச் சந்தித்தேன். அவருடைய வார்த்தைகளில்லா மௌனமொழி, ஆண் பெண் எல்லோரும் அவர் காலில் விழுந்து ஆசி வாங்குறப்ப அவரே கடவுளாதான் தெரிந்தார். கொஞ்சம் கொஞ்சமா அதுல மூழ்க ஆரம்பித்தேன். அவர் பின்னாடியே சுத்தி என்னை சிஷ்யையா ஏத்துக்கச் சொன்னேன்.”

“அதுக்கான வயது உனக்கில்லை. ஐம்பது வயதுக்கு மேல இங்க வா. பெண்கள் மாதவிடாய் உடல் பிரச்சனை, அதாவது காமம் கடந்து வருதல்னு நிறைய இருக்கு. மனதை ஒரு நிலைப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு சொன்னார். இரண்டாவது பிரச்சனையேயில்லை. முதலாவது என்ன செய்யலாம்னு டாக்டர்கிட்ட கேட்டப்ப, கர்ப்பப்பை இல்லைன்னா மூணுநாள் பிரச்சனையே இருக்காது சொன்னாங்க. அதான் அதை எடுத்துட்டேன். இது யாருக்கும் தெரியாது. அப்புறம் ஆன்மீகத்துல முழுசா இணைஞ்சிட்டேன்” என்றார்.

“எல்லாம் சரி உங்க கணவர் எப்படி இறந்தார்னு தெரியுமா?” என்று வழக்கு ஆரம்பித்த பொழுது கேட்ட கேள்வியைத் திரும்பவும் கேட்டான் அதியன்.

“உனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. அதான் திரும்பத்திரும்ப கேட்கிற. செந்தூக்கே கூட இந்த விஷயம் தெரிஞ்சிருக்கலாம். அதுக்கெல்லாம் கவலைப்படவோ பயப்படவோ நான் தயாராயில்லை. நான்தான் சுயசரிதையைச் சொல்லிட்டிருக்கேன்ல, அதுல உன் கேள்விக்கான பதிலும் வரும்” என்றார் திமிராக.

“அதுக்கு முன்ன ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா?”

“விடவா போற கேளு?” என்றார் அவரும்.

“அதென்ன பிள்ளைங்களைப் பிடிக்காது, அவங்களை அறவே வெறுக்குறேன்னு சொல்ற நீங்க, செந்தூ, பவான்னு பெயரைச் சுருக்கிச் செல்லமா கூப்பிடுறீங்க?” என்றான் அதியன். அந்த சந்தேகம் அன்பழகி குடும்பத்தினருக்குமே உண்டு.

“அது செல்லமா கூப்பிடுறது கிடையாது. செல்லத்துரை அவனை செந்தூர் இல்லைன்னா செந்தூரன்னு கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட்டா அந்த முருகனே பையனுக்குத் துணையிருப்பார்னு ஒரு நம்பிக்கை அவனுக்கு. பவானி பெரியபாளையத்தம்மன் பெயர். பவானி இல்லை பவிக்குட்டின்னு கூப்பிடுவான். அவனுக்குப் பிடித்ததுதான் நமக்குப் பிடிக்காதே” என்றார் கேலி பாவனையில்.

“சரிதான். நீங்க உங்க சுயசரிதையை கன்டினியூ பண்ணுங்க” என்றான்.

அவனை முறைத்து, “நான் சன்னியாசம் வாங்கி மூணு வருஷமிருக்கும். ஒருநாள் செல்லத்துரை என்னைப் பார்க்க வந்து, தனக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறதால சீக்கிரமே செத்துப்போயிருவேன்னு சொன்னான்.”

“அம்மா அப்பா இப்ப உயிரோட இல்லைமா. தங்கச்சி எந்த இடத்தில் இருக்காள்னு சொல்லக்கூட ஆள் இல்லை. யாரைக் கேட்டாலும் எனக்குத் தெரியாதுன்னு சொல்றாங்க. என்னதான் என்னை வெளில அனுப்பினாலும் சொத்து என் பெயரிலும் எழுதியிருக்காங்க. அதைப் பராமரிக்க எனக்கு ஆயுள் கிடையாது. பையனுக்கு வயதில்லை. இதையெல்லாம் விட்டுட்டு இனியாவது பிள்ளைங்களைப் பாரு ராஜேஸ்வரி.”

“பவானி பெண் குழந்தை. அவளுக்கு ஒரு பெண் துணை தேவை. அது நீயாயிருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். செந்தூரன் படிப்பு செலவு முழுசா கட்டிட்டேன். பொண்ணு படிக்கிறதுக்கு பேங்க்ல இருக்கு. மேல படிக்கணும்னா பையன் பார்த்துப்பான். உனக்குத் தேவைப்பட்ட பாதுகாப்பு நம்ம பிள்ளைகளுக்குத் தேவைப்படுது. வா ராஜேஸ்வரி” என்றார் கெஞ்சலாக.

ராஜேஸ்வரியோ எழுத்துப் பலகையை எடுத்து, “இனி இதுதான் நிரந்தரம். உன் பிள்ளைங்க எனக்கு சுமைதான். அந்தச் சுமை எனக்கு வேண்டாம்” என்றெழுதிக் காண்பித்தார்.

“என் பிள்ளைங்களா? அவங்களைப் பெத்தவள் நீ. நீயிருக்கும் போது பிள்ளைங்க அனாதையா நின்னா அவங்க வாழ்க்கை என்னாகிறது? நீ இந்த இடத்துக்கு வந்திருக்கன்னா ஓரளவு பக்குவப்பட்டிருப்ப. சரி தப்பு பிரித்துப் பார்க்கத் தெரியும்தான? வா ராஜேஸ்வரி” என காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்.

“முடியவே முடியாது” என்று எழுதிக் காண்பிக்க,

“அம்மா அப்பா இருந்திருந்தா பிள்ளைங்க பொறுப்பை அவங்ககிட்ட ஒப்படைத்திருப்பேன். அவங்களும் உயிரோட இல்லை. மீதியிருக்கிற தங்கை உறவு எங்கேயிருக்குன்னே தெரியாது. உன்னை விட்டா எனக்கு வேற வழியில்லை” எனும்போது இருமல் ஆரம்பிக்க இதயப்பகுதியிலும் வயிற்றின் அடிப்பகுதியிலும் வலி வெகுவாய்த் தாக்க, இருமலைக் கட்டுப்படுத்த முடியாது வலியும் அதிகரிக்க, ராஜேஸ்வரி வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தார்.

“உன்னை விரும்பிக் கட்டிக்கிட்டதுக்கு இந்தத் தண்டனை தேவைதான் ராஜேஸ்வரி. உன்னை மாதிரி ஆளுங்க இருக்கிற இடத்துல என் பிள்ளைகளைத் தனியா விட்டுட்டுப் போறேன்றப்ப, அந்தக் கடவுள் மேலயே கோபம் வருது. குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாத நீ, கடவுளின் மறுபிறப்பா? இதுக்கெல்லாம் கண்டிப்பா தண்டனை உண்டு ராஜேஸ்வரி. என் பிள்ளைங்களை...” என்றவர் கண்ணில் வழிந்த நீருடன் அவர் உயிர் பிரிந்தது.

“அப்பா” என்ற அலறல் பவானியிடமிருந்து வர, செந்தூரன் கண்களிலோ வலி மட்டுமே! தெரிந்த உண்மை என்பதாலா!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“அது பெண் பிறப்பே இல்லை சார். அவங்களைத் தூக்குல போடுங்க சார். எங்கப்பா, அண்ணன், நான்னு யாரையும் வாழவிடலை. சாகும்போது கூட எங்கப்பாவை நிம்மதியில்லாமல் அனுப்பியிருக்காங்கன்னா, எவ்வளவு வன்மம் இருக்கணும். இவங்களைக் கல்யாணம் செய்ததைத் தவிர எங்கப்பா என்ன பாவம் சார் செஞ்சாங்க? கொன்னுட்டா சார். எங்கப்பாவைக் கொன்னுட்டா. எங்களுக்காக இருந்த ஒரே உறவைக் கொன்னுட்டா. சும்மா விடாதீங்க சார்” என்று சத்தமாகக் கத்தி அழுதாள்.

“பவிக்குட்டி அழாத. எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க பார்” என்ற அன்பழகியின் சமாதானம் எதுவும் அவளை எட்டவில்லை. சில நிமிடங்களில் அழுகை தேம்பலாக மாறியது.

“பெத்த பொண்ணு தாயை சாகச் சொல்லுற அதிசயம் இப்பதான் பார்க்கிறேன். வித்தியாசமான வழக்குதான். எனக்கே ஜீரணிக்கக் கஷ்டமாயிருக்கு. இதுவும் ஒரு அனுபவம்னு எடுத்துக்கலாம். நீங்க சொல்லுங்க ராஜேஸ்வரி” என்ற நீதிபதியின் குரல் இறங்கி மீண்டிருந்தது.

ராஜேஸ்வரியை மகளின் அலறல் அசைத்ததா என்றால் அவர் மட்டுமே அறிந்த ரகசியம். நடந்ததைக் கண்டும் காணாது பேச ஆரம்பித்தார்.

“சதா அம்மன் பெயரை உச்சரிக்கிற என்கிட்ட செல்லத்துரை சாபம்லாம் பலிக்குமா என்ன? ராஜி வீட்டுக்காரருக்கு தகவல் அனுப்பி வரச் சொல்லிட்டு, அவர் வந்துதான் செந்தூக்கு போன் செய்து சொன்னார். செல்லத்துரையோட சொந்த பந்தங்கள் ஊர்ல இருக்கத்தான் செய்தாங்க. அங்க சொல்லியிருந்தா யார் மூலமாவது அவன் தங்கைக்கும் தகவல் போயிருக்கலாம். அவளும் வந்திருக்கலாம். என்னைக் கல்யாணம் பண்ணின பிறகு அது ஒருவழிப்பாதை, வந்த இடத்துக்குத் திரும்பிப்போக முடியாதுன்னு தெரிந்த பிறகும், அப்பா அம்மா சாவுக்குப் போயிருக்கான்னா, அது தப்புதான? நான் தனிமரமா நிற்க, அவன் தோப்பாகலாமா? அதான் வீட்டோட எல்லாத்தையும் முடிக்கச் சொல்லிட்டேன்.”

“பவாவைப் பார்த்தப்ப கொஞ்சம் பாவமாயிருந்ததுதான். பொம்பளைப் பிள்ளை வேறயா அதான் ராஜியை குடும்பத்தோட வரவைத்தேன். செந்தூக்கு அவள் வரவு பிடிக்கலை. அவள் வந்தா நானும் வருவேன்ற கோபமிருந்தாலும் பவாவுக்காகப் பொறுத்துக்கிட்டான் பையன். பவாவை முடிந்தளவு கண்டிப்போட, என்னோட கண்காணிப்புல இருக்கிற மாதிரி செய்தேன். செந்தூ பவாவை விடமாட்டான்னு நினைத்தேன். அவன் என்னடான்னா ராஜி பொறுப்பெடுத்ததும் விட்டுட்டான்” என்றவர் குரலில் கேலி அதிகமிருக்க, செந்தூரன் கண்கள் தங்கையைக் கண்டு மன்னிப்பை யாசித்ததோ!

‘உண்மைதானே! ஆயிரம் சமாதானம் செய்து கொண்டாலும் விட்டுவிட்டேன்தானே! கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டேனே! இவ்வளவு செய்தவர்கள் அவளை என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்திருக்க வேண்டாமா! இதில் தானும் சேர்ந்து அவளை வேதனைப்படுத்தி... அண்ணன் ஸ்தானத்திற்கு எனக்குத் தகுதியில்லையோ! ஆணுக்கான இலக்கணம் சிறிதும் தன்னிடமில்லையோ! அன்பழகிக்குத் தான் பொறுத்தமில்லையோ! தான் இல்லாது அவளாவது நன்றாக வாழட்டுமே! நாம் அவளைவிட்டு விலகிவிடலாம்’ என நடப்பது அனைத்தையும் காணக்காண தன்னைத்தானே குழப்பிக்கொண்டான்.

“செந்தூ படித்து முடித்ததும் குடும்பத்தை அவன் பார்த்துக்கிட்டான். ஐந்து வருஷம் முன்ன இவன் அப்பா சொத்தை வித்து, பேங்க்ல லோனும் வாங்கி, தங்கச்சி பெயர்ல பெரிய ஹாஸ்பிடல் கட்டி, சென்னை திருவள்;ர் மாவட்டத்திலேயே டாப் லெவல் ஹாஸ்பிடலா கொண்டு வந்துட்டான்.”

“அவன் எப்படி பெயரெடுக்கலாம்னு, ஏதோ ஒரு உணர்வு அவன் முன்னேற்றத்தைத் தடுக்கச் சொல்லிச்சி. இல்லை நான் இப்படி நினைக்கக்கூடாதுன்னு நித்தமும் கடவுள் நாமம் சொல்லும் மனம் சொல்லுது. என் ராட்சஷ மனம் அவன் எப்படி முன்னேறலாம்? அது தப்புன்னு திட்டுது. எப்பவும் நல்லதைவிட கெட்டதுதான் முண்டியடிச்சிட்டு முன்னாடி வந்து நிற்கும். அப்படித்தான் என் ராட்சஷ மனசு அவனை ஒண்ணுமில்லாமல் பண்ணச் சொல்லுச்சி. ராஜி வீட்டுக்காரரை வரச்சொல்லி சாகும் தறுவாயிலிருக்கும் ஒரு குழந்தையுடைய பெற்றோரைத் தேடிப் பிடிக்கச் சொன்னேன்.”

“ஏன்?” என்று இடையிட்டான் அதியன்.

“பவானி ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போய், குழந்தைக்கு இரண்டு நாளா காய்ச்சல்னு சொல்லி இன்றைக்கோ நாளைக்கோன்னு இருக்கிற குழந்தையைக் காட்டினா, முதல்ல செக் பண்ணிட்டு ஊசி போடுவாங்கள்ல? ஏற்கனவே இழுத்துக்கிட்டிருக்கிற குழந்தைக்கு வேற மருந்து ஏத்தினா சாவு உறுதி. நான் சொன்ன மாதிரியேதான் அங்க நடந்தது. குழந்தை செத்தது பெரிய கரும்புள்ளி. பவானி ஹாஸ்பிடலை அடித்து நொறுக்கிட்டாங்க. குழந்தைக்கான நஷ்டயீடுன்னு அவங்களுக்கு பணமும் கொடுத்தாங்க. இவனுக்கு அதுவரையிருந்த பெயர் போச்சிது. அதோட டாக்டர் தொழிலையே விட்டுட்டான். இல்லை விட வைத்தேன்” என்றார் வஞ்சப் புன்னகையுடன்.

தாய் சொல்லச்சொல்ல பல்லைக் கடித்தபடி அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தான் செந்தூரன். ‘பவானி குழந்தை நல மருத்துவமனை!’ ஆசையாசையாய் பார்த்துப் பார்த்துக் கட்டியது.

தந்தை வழி சொத்து அவர் சாவிற்கு முன்னே செந்தூரன் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. எப்படியும் மனைவி பிள்ளைகளைப் பார்க்க ஒத்துக்கொள்ள மாட்டாள் என்பதை அத்தனை வருட வாழ்க்கையில் தெரிந்து வைத்திருந்தார் செல்லத்துரை. கடைசி முயற்சியாக மனைவியின் மனது மாறிவிடாதா என்ற நப்பாசையில், பையன் பெயருக்கு மாற்றியதைச் சொல்லாமலே மனைவியிடம் பேசியிருந்தாரோ!

தந்தை உடனிருந்ததால் வீட்டைப் பற்றிய கவலையின்றி படிப்பை மட்டுமே பார்த்திருந்தான். மகளின் வளர்ச்சியைக் கண்டவர் குடியை மட்டும் குறைத்திருந்தார். சமைக்க வீட்டு வேலை செய்ய ஆள் வைத்துவிட்டார். செந்தூரன் மூன்றாம் வருட மருத்துவப் படிப்பில் இருக்கும் பொழுது, மகனைப் பார்க்க வந்தவர் லாக்கர் சாவியை அவனிடம் கொடுத்து, “என்னோட காலத்துக்குப் பிறகு பார். த...”

“நீங்க இருக்கும்போது ஏன்ப்பா?” என்று இடையிட்டு கேட்டான்.

“எல்லாம் ஒரு காரணமாகத்தான்பா. தங்கச்சியைப் பார்த்துக்கோ, பெண்துணை தேவைப்படுற வயசு அவளுக்கு. நானோ நீயோ ஆண் என்கிறதால சில விஷயங்கள் நமக்குப் புரியாது. முடிந்தளவு பாப்பாவைப் பார்த்துக்கோ. நல்லா படிக்க வைத்து நல்லவனா விசாரித்துக் கல்யாணம் செய்து கொடு. உன் அம்மா மாதிரியில்லாமல் நல்ல பெண்ணா பார்த்துக் கல்யாணம் செய்து, எல்லா சந்தோஷத்தோடவும் வாழணும் செந்தூர் கண்ணா” என்று மகனின் முகம் வருடினார்.

“லாக்கர்ல இருக்கிற பத்திரத்தோட இன்னும் சில சொத்துப்பத்திரமும் இருக்கு. அது என் தங்கச்சிக்குச் சேர வேண்டியது. அவளுடைய தகவல் அதுல இருக்கு. அவளைக் கண்டுபிடிக்கிற வரை உயிரோட இருப்பேனா தெரியாது. விசாரித்து அவள்கிட்ட ஒப்படைச்சிரு. அப்பா அம்மா சாவுக்கு வந்திருப்பாளாயிருக்கும். எல்லாம் எனக்கு லேட்டாதான் தெரிந்தது.”

ஆம்! கடைசிவரை அவர் தாய் தகப்பனைப் பார்க்கவேயில்லை. ஒரு வழிப்பாதையாகவே இருந்துவிட்டார். அப்பா அம்மா இல்லை என்று கூறியதை, அவர்களுக்குள் போக்குவரத்து இருக்கிறது என்பதாய் ராஜேஸ்வரி தவறாகப் புரிந்து கொண்டார்.

“தற்செயலா ஊர்க்காரரைச் சந்திச்சப்பதான் விஷயம் தெரிந்தது. போய்ப் பார்த்தா அவங்க கொடுக்கச் சொன்னதா கவரைத்தான் நீட்டுறாங்க. இறந்ததோட போன தங்கச்சி, சொத்துக்காகக் கூட என்னைத் தேடி வரலை. அவளுக்குன்னு நான் எதுவும் செய்யலை. என் ஸ்தானத்திலிருந்து அவளைப் பார்த்துக்கணும் செந்தூர் கண்ணா” என்றார்.

“நான் பார்த்துக்குறேன்பா. நீங்க ஏன் சாவு அது இதுன்னு பேசுறீங்க? உடம்புக்கு எதாவது செய்யுதாப்பா? உங்களை வைத்துதான்பா நானும் பவியும். நீங்கயில்லைன்னா என்னால நினைத்துக்கூடப் பார்க்க முடியலை. சொல்லுங்கப்பா நீங்க நல்லாயிருக்கீங்கதான? வாங்கப்பா ஒரு மெடிக்கல் செக்கப் செய்துக்கலாம்” என்றழைத்தான்.

“உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவாவது நான் இருப்பேன். நல்லபடியா படித்து பெரிய டாக்டர்னு பெயரெடுக்கணும். பெயர்லாம் அவ்வளவு சுலபமா கிடைச்சிராது. உழைப்போட சேர்த்து அதிர்ஷ்டமும் வேணும். இத்தனை வருடம் நீ பட்ட கஷ்டத்துக்கு இனி நல்லாயிருப்ப செந்தூரன். என்னோட உழைப்புன்னு நாம இருக்கிற வீடும், திருவள்;ர் பாரதி நகர்ல இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கேன். சிட்டிக்கு நடுவில் இருக்கும் இடம். அதில் பவானி பெயர்ல ஹாஸ்பிடல் கட்டிக்கோ. என் பையன் திறமைனா, என் பொண்ணு அதிர்ஷ்டம். நீங்க சேர்ந்தே இருக்கணும்னுதான் இரண்டு பேர் பெயரிலும் மாத்திட்டேன். அந்த பத்திரமும் லாக்கர்ல இருக்கு. ஏதோ என்னால செய்ய முடிந்ததுவரை செய்துட்டேன் செந்தூர் கண்ணா. நல்லாயிருங்க. கடைசியா ஒரு முறை உன் அம்மாவைப் பார்த்...”

“அப்பா! என்ன வார்த்தை பேசுறீங்க?” என்றவனுக்குள் இனம்புரியா தவிப்பும் பதற்றமும்.

“சாரி செந்தூர் கண்ணா. என்னையறியாமல் வந்திருச்சி. அவளைப் பார்த்து உங்களோட இருக்கக் கேட்கப்போறேன்” என்று சென்றவர்தான், மறுநாள் காலை பத்து மணிக்கெல்லாம் உடல்நிலை சரியில்லாது இறந்துவிட்டதாக செய்தி வர, அதில் இடிந்து போனவன்தான், இறப்பின் காரணம் விளங்காது சென்னையிலிருந்து திருவள்;ர் வர, சேகரே எல்லாவற்றையும் பார்க்க அந்நிலையில் அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. முன்தினம் தன்னைப் பார்க்க வந்தவர் மறுநாள் இல்லையென்றால்! மூளை மரத்துப்போய் சிறு கோடாய் கண்ணீர் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தது.

தன் ஆதரவு தங்கைக்குத் தேவைப்படுமென்று அவளைப் பார்க்க, ராஜலட்சுமி பவானியை தன் தோள்சாய்த்து அணைத்து ஆறதலளித்துக் கொண்டிருக்க, ஏனோ தகப்பன் சொன்ன பெண் துணை நினைவில் வந்தது. ராஜலட்சுமி கொடுத்த ஆறுதலைத் தான் செய்திருந்தால் தங்களிடையே அன்பும் பாசமும் பலப்பட்டிருக்குமோ?

அங்கேயே தன் சறுக்கல் தொடங்கியிருப்பதை தற்பொழுது உணர்ந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
செல்லத்துரையின் காரியம் முடிந்தும் ராஜலட்சுமி குடும்பத்தினர் அங்கேயே இருக்க, செந்தூரனுக்கோ கல்லூரி செல்ல வேண்டிய கட்டாயம். ராஜலட்சுமி இருந்தால் தாயின் இடையூறு வருமென்று தெரியும். இருந்தும் விட்டுச் சென்றான். அவனின் படிப்பு இன்டெர்ன்சிப் முடிந்து சென்னை அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்க, அதிகம் தங்கையைப் பார்க்கச் செல்ல முடியவில்லை. தாயைப்போல் சித்தி கிடையாதென்பது அவன் எண்ணம்.

ராஜலட்சுமி நல்லவர்தான் தன் சகோதரியின் சொல் கேட்காதிருப்பது வரை. அவரோ அக்காவின் சொல் கேட்டு கண்டிப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட கொடுமைப்படுத்தினார் என்றே சொல்லலாம்.

தங்கையிடம் சென்று ‘எப்படியிருக்கிறாய்?’ என கேட்டிருந்தால் அனைத்தையும் ஒப்பித்திருப்பாள். இவனோ பணம் மட்டுமே கொடுத்து விலகிவிட, அண்ணன் தங்கை பாசம் வெறும் பண அளவிலேயே நின்றது. தந்தையின் சொல்லுக்கிணங்க ‘பவானி மருத்துவமனை’ பலவித எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. செல்லத்துரை சொன்னாற்போல் செந்தூரனின் திறமையும், பவானியின் அதிர்ஷ்டமும் குறைந்த காலக்கட்டத்தில் நல்ல பெயரெடுக்க, அதைக் குலைக்கவென வந்தார்கள் ராஜேஸ்வரி அனுப்பிய ஆட்கள்.

‘இரண்டு நாளாக குழந்தைக்கு காய்ச்சல் அடிக்குது டாக்டர். பக்கத்துல க்ளினிக்ல பார்த்தும் சரியாகலை’ என்றதும் குழந்தையைப் பார்க்க, குழந்தையின் இதயத்துடிப்பு வித்தியாசப்பட, பரிசோதித்துச் சொல்கிறேன் என்றவனிடம், ‘ஒரு ஊசி போட்டால் சரியாகிரும் டாக்டர். எங்களுக்குப் பயமாகயிருக்கிறது டாக்டர்’ என்று அழுது அடம்பிடித்து கிட்டத்தட்ட அவனை வற்புறுத்த, பெற்றோரே சொல்லும்போது வேறு வழியில்லாது நர்ஸிடம் ஊசி போடச்சொல்லி அனுப்பினான்.

அடுத்த கால்மணி நேரத்திற்கெல்லாம் குழந்தைக்குத் தவறான ஊசி போட்டதால் இறந்துவிட்டதாகவும், செந்தூரனைக் கொலைகாரன் என்றும் அந்த இடத்தையே ஒருவழி செய்தனர். ‘தவறான மருந்து கொடுத்துக் குழந்தையைக் கொன்ற டாக்டரைக் கைது செய்’ என்றொரு கூட்டம் ஆரம்பிக்க, காவல்துறை இடையிட்டதில் தற்காலிகமாக பவானி மருத்துவமனை பூட்டி வைக்கப்பட்டது.

அன்று தாய் செய்த இந்த இழி செயலைச் சொல்ல வாய் திறக்கும் போதுதான் டாக்டர்.ரஹ்மான் அவனிடம் பேச்சை மாற்றியது.

பின் தெரிந்தவர்கள் மூலம் அந்த வழக்கை திரும்பப்பெற வைத்து, அதற்கொரு நஷ்டயீடு கொடுத்து வெளிவந்தாலும், தன்னால் ஒரு குழந்தை செத்துப் போனதைத் தாங்க இயலவில்லை செந்தூரனால். நண்பன் ஆதிகேசவனை எடுத்து நடத்தச் சொல்ல, அதற்கான பயிற்சியும் பக்குவமும் தனக்கில்லையென்று அவன் மறுக்க, தந்தையின் ஆசை என்பதால் தங்கையின் பெயரிலிருக்கும் மருத்துவமனையை மூடவியலாது, குழந்தை நல மருத்துவமனையை மல்ட்டி ஸ்பெஷhலிட்டியாக்கினான்.

தன் அப்பா பெயரிலிருக்கம் சீனியர் மருத்துவர் ஒருவருடன் நண்பனையும், ஆடிட்டரையும் பார்த்துக்கொள்ளச் சொன்னதோடு, வாரம் ஒருமுறை மருத்துவமனை சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை மின்னஞ்சல் செய்யச் சொல்லி, வேலையில்லாமல் அலையக்கூடாது என்பதற்காக தேர்ந்தெடுத்ததுதான் இரண்டாம் தரமாகப் பொருட்களை வாங்கி விற்பனை செய்வது.

மருத்துவமனை பிரச்சனை நடந்து ஒன்றரை வருடம் கழிந்த நிலையில் வேலை விஷயமாக சென்ற வீட்டில்தான் கண்டான் இறந்த குழந்தையின் தாய் தகப்பனை. அவர்கள் கையில் ஒரு மாதக் கைக்குழந்தையைக் கண்டதும்தான் மனபாரம் சற்று மட்டுப்பட்டது.

ஒரு டாக்டர் ஏசி மெக்கானிக் வேலை பார்ப்பது தங்களால்தான் என்ற குற்றவுணர்ச்சி எழுந்ததோ! இல்லை இந்தக் குழந்தைக்குத் தங்களின் பாவம் அண்டக்கூடாது என்றெண்ணினரோ! செந்தூரனிடம் முழு உண்மையையும் சொல்லி காலில் விழுந்துவிட்டனர்.

‘இப்படியேனும் தன்னைப் பழிவாங்க வேண்டுமா? என்ன தாய் இவரெல்லாம்? தாயென்ற பெயருக்கேக் களங்கம்’ என்றெண்ணியவனுக்கு அதிர்ச்சியெல்லாம் எழவில்லை. “நீங்கயில்லைன்னா இன்னொருத்தர் மூலம் செய்திருப்பாங்க” என்று அவர்களை மன்னித்து வெளியே வந்தவனுக்குத் தகப்பனின் நினைவு ஆக்கிரமிக்க அப்பொழுதுதான் அந்த நெருடல் எழுந்தது.

சந்தேகமென்று வந்ததும் சேகர் குடித்த பழச்சாறில் சிறிது போதை மாத்திரை கலந்து அவரிடமிருந்து வரவழைத்த உண்மையில், தந்தையின் சாவுக்குத் தாய்தான் காரணமெனத் தெரிய கண்ணீர் மட்டுமே அவனிடம். அடித்துக் கொல்லும் வெறி அவனிடமும் உண்டு. தான் எதாவது செய்தால் தங்கை நிலை? அருகில் இல்லையென்றாலும் தன் பார்வையில் வைத்திருப்பவனாகிற்றே!

‘பொறுத்தாற் பூமி ஆழ்வார் என்றொரு பழமொழியுண்டு.’ அதேபோல் ‘பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு’ என்ற பழமொழிக்கிணங்க, தாயின் அத்தனை அட்டகாசத்தையும் பொறுத்தவன், கடைசியில் தன்னுயிருக்குச் சமமானவர்களுக்கச் சமாதிகட்ட அவர் நினைத்ததும்தான் அவர் விரலை வைத்தே அவர் கண்களைக் குத்த முடிவெடுத்தான். இதோ அதைத்தான் நடத்திக்கொண்டும் இருக்கிறான்.

விவாகரத்துக்குப் போன வழக்கை அங்கிருந்த நீதிபதியிடம் பேசி குற்றப்பிரிவு வழக்காகக் கொண்டு வந்ததே செந்தூரன்தான். பழியைப் பழியாலேயேப் பழிவாங்க கத்தியில்லாமல் இரத்தமில்லாமல் நடத்தப்படும் ஒரு யுத்தம்!

இருக்குமிடம் உணர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தியவன், “நான் விட்டுட்டேன்தான்.. பொறுப்பில்லாதவன்தான். நீங்க திட்டம் போட்டு எங்கப்பா வாழ்க்கையில் வரலைன்னா நாங்க வந்திருக்கவே மாட்டோமே?” என கேட்டான்.

“ஆமா பெரிய திட்டம். போடா” என்றார் அசட்டையாக.

“ஆமாங்க தெய்வமே! பெரிய திட்டம்தான். திட்டம் போட்டுதான் எங்கப்பா வாழ்க்கையைக் கெடுத்துருக்கீங்க. அப்படியாவது நல்லா வாழ்ந்தீங்களா? எப்பப்பாரு எங்கப்பா அப்படிப் பண்ணிட்டார், இப்படிப் பண்ணிட்டார்னு சொல்றீங்களே, நாட்டுல என்னென்ன கொடுமையெல்லாம் நடக்குதுன்னு போய்ப்பாருங்க. அப்பத் தெரியும் எங்கப்பாவோட அருமை. பொண்டாட்டியோட சந்தோசமா வாழும்போதே, அடுத்த பொண்ணுங்களை விட்டுவைக்க மாட்டானுங்க.”

“கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வ...” நாகரீகம் கருதி சட்டென்று நிறுத்தியவன், “வச்சிருக்கிறவன் எத்தனை தெரியுமா? அப்படிப் பார்த்தா எங்கப்பா கிரேட். உங்களைத் தாண்டி வேற பெண்ணைத் தேடிப் போகலையே? அப்படியொரு எண்ணம் எழும்போதே தப்புன்னு தன் தேவையைத் தன் மனைவிகிட்ட கேட்ட மனுஷன். பலவந்தப்படுத்துறது தப்புதான். மறுக்கலை. மறுக்கவும் மாட்டேன். அந்த நிலைக்குத் தள்ளினது யாரு?”

“இதையெல்லாம் விடுங்க, அந்தக் கொடுமைபடுத்துறவன்கிட்ட உங்களுக்கு என்னங்க வேலை? பிடிக்காத உறவை விட்டுட்டுத் தள்ளிப் போயிருந்திருக்கலாமே? ஏன் போகலை? ஏன்னா பக்கா சுயநலம் பிடித்த ஆள் நீங்க” என குற்றஞ்சாட்டி, “நேர்மையா ஒழுக்கமா இருந்த மனுஷனைக் காதல்ன்ற பெரிய சுழலுக்குள்ள இழுத்துவிட்டு, உங்க சைக்கோத்தனத்துக்கு எங்கப்பாவை இரையாக்கியிருக்கீங்க” என்று தன் கோபத்தையெல்லாம் குரலில் கொடுத்துக் கத்தினான்.

“ஏய்! யாரைடா சைக்கோ சொல்ற? என்னை விமர்ச்சிக்க நீ யாரு?” என்றார் பதிலுக்குக் குரலை உயர்த்தி.

“அதான? நான் யாரோதான? ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சிரும்” என்றவன் சற்று குரலைக் குறைத்து, “கடைசிவரை எங்கப்பாவோட பிள்ளைகளா மட்டும்தான் பார்த்திருக்கீங்க? உங்க பிள்ளைகள்னு நொடிகூட நினைக்கலையில்ல. அப்படி நினைச்சிருந்தா எங்கப்பாவைக் கொன்னுருப்பீங்களா? கொன்னதோடில்லாமல், எப்படிச் செத்தார்னு வர்ணிக்கிறீங்க” என்று கோபத்தை அடக்கப் பல்லைக்கடித்துக் கொண்டான்..

“கொலையா? உளறாத செந்தூ..”

“பின்ன, கண்முன்ன ஒரு உயிர் துடிக்கும்போது காப்பாற்ற வழியிருந்தும் காப்பாற்றாம விட்டா அதுவும் கொலைன்னு சட்டம் சொல்லுது. எதை வேணும்னா மன்னிக்கலாம். ஆனா இதை எப்பவும் மன்னிக்கமாட்டேன்” என்றான் கோபத்தை அடக்கி.

“உன்னை யாரு மன்னிப்பு கேட்கச் சொன்னது? போ.. போயி வேலையிருந்தா பாரு. எப்படியும் என் சுயசரிதை முடிந்ததும் தண்டனை கொடுக்கப் போறாங்க. நான் செய்ததெல்லாம் தெரிந்தே செய்த தப்பு. அதனால எதுக்கும் கவலையில்லை” என்றார்.

“தண்டனை கிடைக்கும்னு தெரிந்தே செய்த தப்பு. உங்க வாக்குமூலம் சூப்பர். நோட் திஸ் வேலிட் பாய்ண்ட் யுவர் ஹானர்!” என்ற அதியன், “சரி சாமியம்மா.. சாரி மேடம். நீங்க உங்க சுயசரிதையைக் கன்டினியூ பண்ணுங்க. எங்க விட்டீங்க மறந்துட்டா நானே சொல்றேன். உங்க கணவரின் கதை முடிச்சது. சாரி சாரி முடியுறதைப் பார்த்து காரியம் செய்தது வரை சொல்லியிருக்கீங்க” என்றவனை முடிந்த மட்டும் முறைத்தார் ராஜேஸ்வரி.

“அமைதியா போயிட்டிருந்த வாழ்க்கையில் கல்லை எறிந்தவள்தான் அன்பழகி. என் பதினைந்து வருடத் தவத்தை சில நிமிடத்தில் கலைச்சிட்டா. எனக்கான விழாவில் என்னைக் கடவுளாகக் கொண்டாடும் மக்கள் மத்தியில் கேவலமா அசிங்கப்படுத்திட்டா. என் குடும்பம் தாண்டி யாரிடமும் நான் பகை பாராட்டியதில்லை. இவள் என் எல்லாத்தையும் உடைச்சிட்டா. கோவில்ல இவள் பேசிய பேச்சிக்கெல்லாம் செந்தூதான் ஆதரவு” என்க,

அன்பழகி வேகமாகக் கணவன் முகம் பார்த்து ‘நிஜமா?’ என்றாள் பார்வையால்.

ஆமென்று கண்மூடித் திறந்தவன் மீசையை மெல்லத் தடவி கண்ணாலே கதை பேசி, மோகனப்புன்னகை ஒன்றை மனைவியிடம் செலுத்த, பாவையவளோ முழுக்க மயங்கிப் போன நேரம், ‘ஹக்’ என்ற அன்பழகியின் திடீர் விக்கல் சத்தத்தில், அங்கிருந்த அனைவரிடமும் ஒரு உற்சாகம்.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
ஆத்தர் ஜீ அதெப்படி இந்த விக்கல் மட்டும் நேரம் பார்த்து வருது? எனக்கென்னமோ இந்த அன்பழகியோட அம்மாதான் செந்தூரனின் அத்தையா இருப்பாங்களோன்னு தோணுது. அந்தக் காணம போன தங்கச்சி ராகிணிதான், அன்பழகி செந்தூரனுக்குச் சொந்த அத்தைப் பொண்ணு சரிதானா?
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
ஆத்தர் ஜீ அதெப்படி இந்த விக்கல் மட்டும் நேரம் பார்த்து வருது? எனக்கென்னமோ இந்த அன்பழகியோட அம்மாதான் செந்தூரனின் அத்தையா இருப்பாங்களோன்னு தோணுது. அந்தக் காணம போன தங்கச்சி ராகிணிதான், அன்பழகி செந்தூரனுக்குச் சொந்த அத்தைப் பொண்ணு சரிதானா?
ஆஹா. நெசமா தான் சொல்றீங்களா? அப்படியும் இருக்கலாமோ?
 
Top