• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
16



“மாமா நான் உங்க பொண்ணை கட்டிக்கிறேன்” என்றவன் மற்றவர்களின் அதிர்ச்சி முகத்தைக் கவனிக்காமல், “அதே நாள்! அதே முகூர்த்தம். மாப்பிள்ளை மட்டும் நான். நீங்க என்னை முழுசா நம்பலாம். எனக்கு எந்தவிதமான கெட்டபழக்கங்களும் கிடையாது. எம்எஸ்சி முடிச்சி பிஹெச்டி பண்ணி பெங்களுர் சைன்ஸ் இன்ஸ்டிடியூட்ல வேலை பார்க்கிறேன். கைநிறைய சம்பளம். ஓரளவுக்கு நாங்களும் ரிச் ஃபேமிலிதான். நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறீங்க. என்ன மச்சான் நீங்களும்தான்” என ப்ரேமிடமும் முடிவாக சொன்னான்.

அதிர்ச்சியா! ஆனந்தமா! என்னவென்று வரையறுக்க முடியாத நிலைமையில் பேச வாயெழாமல் ராஜனும், ப்ரேமும் நின்றார்கள். அதேநேரம் மயக்கம் தெளிந்து ட்ரிப்ஸ் அகற்றி வந்த சண்முகசுந்தரி, “நான் உங்களை நம்புறேன். என் பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றார்.

ஆனந்தை விட்டு நகர்ந்து ஆண்களின் புறம் திரும்பி, “இவங்க ரெண்டு பேரும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்றாங்களே அத்தை” என்றான். “ஒருவேளை சொத்துக்காக உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைக்கிறீங்களா? உங்களோட வசதி எவ்வளவுன்னு தெரியாது. ஒரு நிமிஷம் இருங்க” என சொல்லிக்கொண்டே அங்கிருந்த செவிலியிடம் வெத்து பேப்பர் வாங்கி, “மனைவி வழியாக வரும் எந்த சொத்தும் எனக்குத் தேவையில்லை” என எழுதிக் கையெழுத்திட்டு மாமனார் கையில் கொடுத்தான்.

அவனையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜன், அதை அப்படியே கிழித்துப்போட்டு ஜீவாவினருகில் வந்து கட்டியணைத்து, “சந்தோஷத்துலதான் மாப்பிள்ளை வாய் மூடிருச்சி. உங்களைப் பிடிக்காமல் இல்ல. என் பொண்ணை எங்களைவிட நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கை எனக்கிருக்கு” என்றார்.

ப்ரேமும் அப்பா வழியே பின்பற்றி சம்மதித்தான். ஆனால், இந்த நிலைமையில் இந்த கல்யாணம் சரிவருமா? என நினைக்காமலில்லை யாவரும்.

தாயின் புறம் திரும்பிய ஜீவா கண்களால் சம்மதம் கேட்க, “அதான் பேசி முடிச்சிட்டியேடா. அப்புறமென்ன கண்ணால சம்மதம் கேட்கிற? ஒழுங்க அடுத்த வாரம் என் மருமக கழுத்துல தாலிகட்டுற வழியைப்பாரு” என்றார் புன்னகையுடன்.

தாயின் கைபிடித்து நன்றியுடன், “தேங்க்ஸ் வந்துமா” என்று ஆனந்திண் அருகில் வந்தவன் “தேங்க்ஸ் மிஸ்டர்” என்றான். ‘ஏன்?’ என கேள்வியாய் பார்த்தவனை... “அவளை வேண்டாம்னு சொன்னதுக்கு. நீ ஒரு அன்லக்கி ஃபெலோ கையில் கிடைச்ச பொக்கிஷத்தை தூக்கியெறிஞ்சிட்ட. அதுவும் நல்லதுக்குத்தான். தனக்குத் தகுதியானவங்ககிட்டத்தான பொக்கிஷம் இருக்கணும். நீ கிளம்பு இனி நாங்க இருக்கிற பக்கம் வந்திடாத” என்று விரட்டியனுப்பினான்.

தன் தங்கையை மற்றவனிடம் விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப் பேசி, உரிமையாய் நடந்த ஜீவா அப்பொழுதே ப்ரேம்கு ஹீரோ ஆனான்.

சற்றுமுன், வெளியேறப் போகப்போன ஆனந்தை நிறுத்தி ராஜன் கேள்வி கேட்க ஆரம்பித்ததும், அவனின் பதில் என்னவாக இருக்குமென்று ஜீவாவின் இதயத்துடிப்பு எகிறியது. ஆனந்த் நாசூக்காக மறுக்காமல் பட்டிக்காடு என்று தாழ்வாக பேசவும் சட்டென்று மூண்ட கோபத்தில் இருக்கையை விட்டு எழ, அதற்குள் ப்ரேம் தட்டிக்கேட்க... ப்ரேமின் அந்த பாசத்தில் சில வினாடிகள் கட்டுண்டு கிடந்தான் ஜீவா. பின்னரும் அவளைக் குருடி என்றதும் பொறுக்க முடியாமல் பொங்கிவிட்டான்.

யாரிடமும் சுபாவைத் திருமணம் செய்து கொள்ளவா என்று அனுமதி கேட்கவில்லை. நான் செய்யுறேன் என்று முடிவாகவே சொன்னான். அவர்கள் சந்தோஷத்தில் திளைத்து நிற்க, மாமியாரின் நான் நம்புறேன் என்ற வார்த்தை முழு தைரியத்தையும் கொடுத்தது. அனைவரின் சம்மதம் வாங்கிவிட்டாலும் சுபாவின் சம்மதம் எப்படி வாங்குவதென்று யோசிக்க ஆரம்பித்தான். ‘ஒருவேளை ஆனந்தை தேவி விரும்பியிருந்தா? இருக்காது’ என்றுதான் தோன்றியது ஜீவாவிற்கு.

இரண்டு நாட்கள் கழித்து சுபாவிடம் கலயாணப் பேச்சை ஆரம்பிக்கலாமென்றதும், தங்கைக்கு போன் செய்து நிலவரத்தைச் சொன்னான். சாதனா போனிலேயே தன்னுடைய மறுப்பைப் பதிவு செய்தாள். அதன்பிறகு எந்த போனும் மெசேஜும் சாதனாவிடம் வேலை செய்யவில்லை. தந்தையோ முதலில் யோசித்தாலும், பையனின் விருப்பத்திற்கு மதிப்பளித்து சம்மதமாக தலையாட்டினார். இதனாலேயே சுபா வீட்டினர் மனதில் ஜீவா குடும்பத்தினர் ஒரு பெரிய இடத்தைப் பிடித்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து மகளிடம் சுந்தரி மெல்ல திருமண பேச்செடுக்க... அதன் காரணத்தைச் சொன்னால் ஆனந்தை கொன்று விடுவார்களென்றே காரணம் சொல்லாமலேயே திருமணத்தை மறுத்தாள். “பையன் நல்ல பையன்டா சூழ்நிலை காரணமா இப்ப பண்ணிக்கிறேன்னு சொல்றான்” என்று ஜீவாவை மனதில் வைத்து சொல்லி மாப்பிள்ளையின் பெயர் குறிப்பிடாமல் பேசினார்.

அம்மா ஆனந்தைத்தான் சொல்கிறார் என திரும்பத் திரும்ப மறுத்துக் கொண்டிருந்தாள் சுபா. அவர்கள் மாப்பிள்ளை மாறியதை தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. சொல்லக் கூடாதென்றில்லை அந்த சமயத்தில் ஒருவர் மற்றொருவர் சொல்லியிருப்பார்களென்ற எண்ணத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தாயோ அடிக்கடி பேச மறுத்தவளிடம், “விபத்து நடக்கிறதுக்கு முன்னாடி உள்ளதை மறந்திருமா. மருமகன் உன்னை நல்லா பார்த்துப்பாங்க” என்றார். மாப்பிள்ளை மாறியது மகளுக்குத் தெரியாதென்பதை நினைக்கவில்லை. சுபாவின் குரல் வராததால் மகளின் மறுப்பு எதனால் என்று புரியவில்லை அந்த தாய்க்கு. புரிந்திருந்தால், அவனில்லை என்று எடுத்துச் சொல்லியிருப்பாரோ!

திருமணநாளிற்கு இரண்டு நாட்களே இருக்கும் வேளையில் இன்னும் சுபா கல்யாணத்திற்குச் சம்மதிக்காத வேளையில் அவளருகில் வந்த விவேக் தன்னை அவளின் மாமனாராக அறிமுகப்படுத்தினார்.

‘ஆனந்திற்கு அப்பா இருக்காரா? இல்லையென்ற மாதிரி இருந்ததே. இப்ப எப்படி திடீர் மாமனார்?’ குரல் வராவிட்டாலும் ஆனந்திற்கு அப்பா இருக்காரா என்று சைகை செய்து வாயசைப்பில் கேட்டிருந்தாலே உண்மை தெரிந்திருக்கும் குழப்பத்தில் அவளும் விட்டாள். ‘சே... சுபா நீ ஏன் எதையும் தெளிவா கேட்டுக்கல? ஆனந்த் சொன்ன மாதிரி நீ சுத்த பட்டிக்காடுதான் போ’ என தனக்குத் தோன்றியதை மறைத்து “சொல்லுங்க” என வாயசைத்தாள் மாமாவைத் தவிர்த்து.

அதைப் புரிந்தவராக மருமகளை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்து, “இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கணும்மா. என் பையன்றதுக்காக சொல்லல, அவன் ரொம்ப நல்ல பையன்மா. இந்த ஆக்ஸிடெண்ட் ஆனது கூட தன்னால்தான்ற ஒரு ஃபீலிங் இருக்கு அவனுக்கு. உனக்கு குறிச்ச முகூர்த்தத்துல உங்க கல்யாணம் நடக்கணும். இது உங்கப்பா, அம்மாவோட ஆசைகூட. எங்க வீட்ல நீ ராணி மாதிரி இருக்கலாம்மா. உனக்கு எங்க வீடு பிடிக்கலன்னு தோணினா, எப்ப எந்த நிலையிலயும், கேள்வி கேட்காம நான் உனக்கு உதவி செய்வேன். இது ப்ராமிஸ்மா. என்னை நம்பி என் பையனை கல்யாணம் பண்ணிக்கோ. உன் வளமான வாழ்க்கைக்கு நான் உத்திரவாதம் தர்றேன்” என்றார்.

ஆனாலும், சாவுவரை அழைத்துச் சென்றவனை எப்படி திருமணம் செய்வது? மனம் குழம்ப யோசித்தாள்.

சுபாவிடம் பேசிய விவேக்கும் மாப்பிள்ளை மாறியதைச் சொல்லாமல், மணமகன் ஜீவா என்ற குறிப்புமில்லாமல் தன் பையன், குறித்த முகூர்த்தம் என்றே பேச சுபாவிற்கு கடைசிவரை மாப்பிள்ளை மாறிய விஷயமே தெரியவில்லை. தன் குடும்பத்தினருக்காகவும், மாமனாரின் வார்த்தைக்காகவும் வேறு வழியில்லாம் ‘சரி’ என்று சம்மதித்தாள் சுபா.

அவளின் சம்மதம் ஜீவாவை சந்தோஷத்தில் பறக்க வைத்தது. திருமணம் முடியும் வரை ஏனோ அவளிடம் பேசும் தைரியம் வரவில்லை ஜீவாவிற்கு.

திருமணத்திற்குப் பின் முதல்முறையாக தனியே அவளிடம் பேசும் பொழுது, ‘நீங்க அன்னைக்கு கார்ல பேசினதை வைத்து நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல டெர்ம்ஸ் ஒத்துவராதுன்னு நினைத்தேன்’ என்றாள். ஏன் அப்படி சொல்கிறாள்? என குழம்பியவன் அவள் இரண்டாவது சொன்ன, ‘அப்ப என்னைத் தொடக்கூடாது சொன்னதுக்கும் திட்டுனீங்க’ என்றதும் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. மூன்றாவதாக ‘நீங்க ஏன் லாரில மோதப் போறோம்னு தெரிஞ்சதும் உங்களை மட்டும் காப்பாத்திக்க தலையை குனிஞ்சிட்டீங்க?’ என்று கேட்ட பொழுதுதான் உண்மை அவனுக்கு உச்சியிலடித்தது போல் உறைத்தது, அவளுக்கு மாப்பிள்ளை மாறியது தெரியவில்லையென்று.

எப்படி தெரியாமல் போனது? அப்பாவும் வந்து பேசியபின்தானே திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள். அதே நேரம் அவள் சொன்ன தன்னைக்காப்பாற்ற அவளை எக்கேடோ கெட்டுப் போகட்டுமென்று விட்ட ஆனந்தின் மேல் கொலை வெறியே வந்தது. இந்த உண்மை அவன் எதிர்பாராதது. இருவரும் காரில் வாக்குவாதம் செய்தபடி வந்ததைப் பார்த்தவனால், கார் மோதும்போது என்ன நடந்தது என காணமுடியவில்லை. அவன் நினைத்திருந்தால் அவளையும் இந்நிலைக்கு ஆளாக்காமல் தடுத்திருக்கலாம் என்று தோன்றியது. அதன்பின் தான் பழசையெல்லாம் மறந்திருமா அன்னைக்கு உன்கிட்ட எப்படி நடந்துகிட்டேன்னு நியாபகமில்லை. உன் புருஷன் நல்லவன்தான இதை எப்பொழுதும் மறந்துவிடாதே! இதை கண்டிப்பா நீயும் உணர்வாய்! என்று அவளை சமாதானப்படுத்தினான்.

அதன்பின் தாயையும், மாமனார் வீட்டினரையும் அமரவைத்து மெதுவாக, மாப்பிள்ளை மாறிய விஷயம் மனைவிக்கு தெரியாதென்று சொல்லி என்ன செய்யலாமென்று கேட்டான். அனைவரும் ஒருவகையில் குற்றவுணர்ச்சியில் தவித்தார்கள்,” சே... நான் சொல்லியிருக்கணும் மறந்துவிட்டேனே” என்று. யாருக்கும் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பதென்ற வழி தெரியவில்லை.

“ஜீவா இப்போதைக்கு சொல்ல வேண்டாம். கண் ஆபரேஷனும், சர்ஜரியும் முடிஞ்சி நாம வீட்டுக்கு கூட்டிட்டுப்போன பிறகு நேரம் பார்த்து சொல்லிக்கலாம். இப்ப அவ மைண்ட் ப்ரீயா இருக்கணும். உன்னை நேர்ல பார்க்க முடியாத சமயத்துல உண்மையைச் சொல்லி மனசு முழுக்க போராட்டம் நடந்தா நல்லதற்கில்ல. ஆபரேஷன் டைம்ல வேற எதுவும் ப்ராப்ளம் ஆகிடக்கூடாது. இதே நிலையில நானிருக்கேன் உனக்குன்னு நிரூபி. இப்போதைக்கு இதுதான் பெஸ்ட்னு எனக்குத் தோணுது. மத்தவங்களுக்கு வேற எதாவது ஐடியாயிருந்தா சொல்லுங்க” என்றார் வந்தனா. வந்தனா குறிப்பிட்ட விஷயங்களில் இருந்த உண்மையை அனைவரும் ஒத்துக்கொண்டார்கள்.

“ஆனா, ஜீவா இதில் இன்னொரு ப்ராப்ளம் இருக்கு என்றதும் அனைவரும் அவரையே யோசனையாக பார்க்க... “தேவிக்கு கண் தெரியுறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை மாறின உண்மையை அவளுக்கு புரியவைக்கணும். ரொம்ப இழுத்தடிச்சா விஷயம் கைமீறி விபரீதாமாகப் போயிடும். அப்புறம் தேவி என்ன முடிவெடுத்தாலும் அவளை நாம கண்ட்ரோல் பண்ணவும் முடியாது. அந்த உரிமையும் நமக்கில்ல. பேசிக்கா தேவி அமைதியான பொண்ணுதான் பார்க்கலாம்” என்றார் பலவற்றையும் யோசித்து.

அதன்பின் எத்தனையோ முறை சொல்ல நினைத்து இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லிக்கலாம் என்று பின்வாங்கினான் ஜீவா. கடைசியாக சாதனாவை ப்ரேம்கு பேசிய அன்று அவள் கேட்டபொழுதும் உண்மையைச் சொல்லவில்லை. திருமணத்திற்குப் பின் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். ஊருக்கு கிளம்பும் அன்றாவது சொல்லியிருக்கலாம். அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றியது.

ஆனால், காலம் கடந்துவிட்டதே. இதில் யாரை குற்றம் சொல்வது.

அனைத்தையும் படுத்தபடியே நினைத்துக் கொண்டிருந்தவன் திடீரென்று அதிர்ச்சியில் எழுந்தமர்ந்தவன், ‘கடவுளே! தேவிக்கு உண்மை தெரிந்திருந்து விட்டதால், நான் ஆனந்த் இல்லையென்றும் தெரியும். இத்தனை நாள் அவளுக்கு என்னை நான் கணவனாக அறிமுகப்படுத்தவே இல்லையென்றால், ஆனந்த்தான் கணவனென்று நினைத்ததாகத்தானே அர்த்தம்.’ அந்த உண்மை உறைத்த நேரம் உண்மையிலேயே உறைந்துதான் போனான் ஜீவா.

அவளின் இடத்திலிருந்து பார்த்தால் இது பெரிய நம்பிக்கைத் துரோகமல்லவா. ஆயிரம் விரோதியை மன்னிக்கலாம் ஒரு துரோகியைக் கூட மன்னிக்கக்கூடாது என்று அன்று தாய் பேசியது மனதில் ஓடியது. ‘அப்ப கடைசி வரை என் தேவி என்னை மன்னிக்க மாட்டாளா?’ என்றவனுக்கு, ‘சீக்கிரம் சொல்லலன்னா விளைவு விபரீதமாகிடும் ஜீவா’ என்ற தாயின் எச்சரிக்கை வார்த்தைகளும் நினைவு வந்தது.

“ஐம் சாரி” என்றான். யாரிடம் மன்னிப்பு கேட்டான், யாருக்காக கேட்டான் என்பதை அவனே அறியான். யாரிடம் இதைச் சொல்லுவான் மனைவியின் மனமாறுதலுக்காக காத்திருக்க ஆரம்பித்தான் ஜீவா.

மன்னித்து மறந்து ஜீவாவை ஏற்றுக் கொள்வாளா அவனின் சுப்பு? விதியின் வழி நாமும் பயணிப்போம்!
 
Top