- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
16
“பூரணி நம்ம பொண்ணு மைதிலி. தெருவுல போறவளைப் பேசுற மாதிரி, என்ன பேச்சிது கூத்தடிக்கிறாள்னு? இதையே உன் பெரிய பொண்ணைச் சொல்லு ஒத்துக்குறேன். சின்னவளைப் பற்றிச் சொல்லாதே” என்றார் கண்டிப்பான குரலில்.
ஏனோ தந்தையின் வார்த்தைதனில் அனைத்தையும் மீறிய ஒரு சந்தோஷம் பூரணிக்கு.
“நான் என்ன பண்ணினேன்னு என்னைக் குறை சொல்றீங்க?” ஜனனி கோபத்தில் கேட்க,
“கல்யாணத்துக்குப் பேசி முடித்த பின், காதலனோட போன நீ, இவளைக் கேட்கத் தகுதியில்லை” என்றார் பட்டென்று.
“எப்பப்பாரு என் பொண்ணைக் குறை சொல்லிட்டேயிருங்க. மாப்பிள்ளை செய்த தப்புக்கு என் பொண்ணு என்ன செய்வா?” பெரிய மகளுக்காக பரிந்து வர,
“வாயை மூடு மைதிலி. என் பொண்ணு என் பொண்ணுன்னு அடிச்சிக்கிற. பூரணியும் உன் பொண்ணுதான்றதை மறந்துராத. ஒரு பொண்ணு நினைச்சா எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் தன்வசப்படுத்தலாம். ஒருத்தனைப் பிடிச்சிருக்குன்னு நேருக்கு நேர் சொல்ல முடியாத ஆள்னு நினைச்சியா உன் பெரிய பொண்ணை? செய்ததெல்லாம் இவள். பழி மட்டும் புருஷன் மேல போடுவாளாமா? ஒண்ணுமே தெரியாத மாக்கான்னு நினைச்சாளா என்னை. அவர்மேல தப்பில்லைன்னு தெரிஞ்சதாலதான் வீட்டுக்குள்ள சேர்த்துருக்கேன். இன்னொரு முறை பெரியவள் பெருமை பேசின தொலைச்சிருவேன் சொல்லிட்டேன்” என்க, மனைவி மகள் இருவரும் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டனர்.
அதுவரை மாமனாரின் மேல் தகப்பன் அளவு வெறுப்பை வைத்திருந்த வசீகரனுக்கு, அவரின் இந்த அவதாரம் ஆச்சர்யத்தோடு வியப்பையும் அளித்தது. ‘கொஞ்சமில்லை ரொம்பவே நல்லவர்தானோ’ என்றது மனம்.
மனைவியைக் கண்டித்து மகளிடம் திரும்பியவர், “இவர் வீட்டுல இவரைக் காணும்னு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தா என்ன செய்வ? முதல்ல இங்க கூட்டிட்டு வரவேண்டிய அவசியமென்ன? இவரை எங்க பார்த்த?” அமைதியாக கேள்விகளைக் கேட்டுப் பதில் வந்தேயாக வேண்டுமென்று நின்றார் மலையரசன்.
“அது தினகரன் இவங்க பெரியப்பா பையன்..” என்று முதல்முறை கோவிலில் பார்த்தது, பின் மெடிக்கல் முன் நடந்ததையும் அதனால் அடிபட்ட காயத்தையும் காண்பித்து, தற்போது பார்க்க ஆளில்லாததால் தினகரன் தன்னிடம் ஒப்படைத்துச் சென்றதையும் சொன்னவள், அஞ்சுகாவுடன் திருமணம் பேசியதை வேறு பிரச்சனைகள் வந்துவிடக் கூடாதென்று மறைத்திருந்தாள்.
“இதையெல்லாம் நம்புற மாதிரியாயிருக்கு பூரணி. நீ எதையும் நிறைய யோசிச்சி செய்வியே. இதை எப்படி ஆராயாம போன? நான் கொஞ்சம் சுயநலம்தான்.. கொஞ்சம் என்ன நிறையவே சொல்லலாம். நீ அப்படியில்லையேமா. இதுல உன்னோட சுயநலமும் தெரியுது” எனவும் தலைகவிழ்ந்து ஆமோதித்தாள். உண்மையும் அதுதான். என்னதான் அவனை வேண்டாமென்று வெளியில் மறுத்து நொண்டிக்காரணம் சொன்னாலும், அவனுடனான நிமிடங்களை மறுக்க மனமில்லை. அதைத் தகப்பனிடமும் மொழிந்தாள்.
“என்னதான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகமாட்டேன்னு தினகரன்கிட்டச் சொன்னாலும், எனக்கு இவங்களோட இருக்கிற இந்த இரண்டு நாள் முக்கியம்னு தோணிச்சிப்பா. உங்களுக்குத் தெரிஞ்சா சத்தம் போடுவிங்க... வீட்டுல சேர்க்கலைன்னா என்ன பண்றதுன்னுதான் மறைச்சிட்டேன். சாரிப்பா” என்றாள் கண்கலங்க.
முதல் முறையாக மகளின் மனம் புரிந்தாரோ! “ப்ச்.. பரவாயில்லை விடு. நீ சொன்ன மாதிரி நானா பார்த்த வரன்தான. கல்யாணம் பேசுறப்ப நல்லா விசாரிச்சிருக்கலாம். அப்படி விசாரிச்சிருந்தாலும் உண்மையை யார் சொல்லிருப்பா சொல்லு. இங்க பொண்ணு மாப்பிள்ளைப் பற்றி விசாரிச்சா, மோசமானவங்கன்னு தெரிந்தாலும் நல்லவங்கன்னுதான் சொல்லுவாங்க. அது பொதுவான விதி. அதை மாதிரி இதையும் உன் விதின்னு விட்டுரலாம்.”
“இவங்க வீட்டுல பையனைத் தேட ஆரம்பிக்கிறதுக்குள்ள வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லு. பிரச்சனை எதுவும் ஆகிராமல் பார்த்துக்கோ” என்றவர் புன்னகையுடன் நின்றிருந்த சின்ன மருமகனிடம் வந்து, “பாரு பையன் ஹீரோ மாதிரியிருக்கான். நல்லாயிருந்திருந்தா உன் வாழ்க்கையும் சந்தோஷமா இருந்திருக்கும். என்னவோ போம்மா” என்றார்.
“தேங்க்யூ அப்பா” என்றவள் குரலில் அத்தனை ஆனந்தம்.
மலையரசனுக்கு மகளை நினைத்து மனதில் வருத்தம் வந்து போனாலும் அதைக்கடந்து வெளியே செல்ல, மனைவியும், பெரிய மகளும் அவரைக் கேள்வி கேட்பது உள்ளிருப்பவர்களுக்குக் கேட்கவில்லை.
தகப்பன் வெளியே சென்ற நொடி கணவனைக் கட்டிக்கொண்டிருந்தாள் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்.
அவனுமே அவளறியாது கண்ணீரைத் துடைத்துத் தானும் அவளை அணைத்தபடி முதுகை மென்மையாய் வருடிக்கொடுத்து, அந்நிமிடங்களைத் தன்னுள் சேமிக்க, சட்டென்று கணவனைத் தள்ளிவிட்டு விலகி நின்று முறைக்கவும், வசீகரனோ ஒருவித ஏமாற்றத்தில், ‘ஏனிந்த விலகல்?’ என்பதாய்ப் பார்த்தான்.
தன் இடதுபக்க தோள் பகுதியைக் காண்பித்து, “இங்க தண்ணீர்! இல்லை கண்ணீர். நீங்க அழுதீங்களா வசீகரா?” என்றாள் அவனை ஆராயும் நோக்குடன்.
சட்டென்று சுதாரித்தவன், “அந்த சொட்டை அங்கிளும், அந்த குண்டு ஆன்ட்டியும் உன்னைத் திட்டினாங்கள்ல? எனக்கு அழுகையா வந்தது பரி. உன்னை ஏன் திட்டுறாங்க? சரியான டெவில்ஸ்” என்றான் கண்ணைக் கசக்கியபடி.
“என்னைத் திட்டினா உங்களுக்கு அழுகை வருமா வசீகரா?”
“ம்.. கோபமும் அழுகையும் வந்தது” என்றான் குழந்தை குரலில்.
‘உங்களுக்குள்ள இந்த வகை உணர்வுகள் வருதுன்னா, குணமாகிட்டு வர்றீங்க அர்த்தம். என் வேண்டுதல் சீக்கிரமே பலிக்கணும் தாயே’ என கண்மூடி அன்னை அகிலாண்டேஸ்வரியை வேண்டிக்கொண்டாள்.
“பரி என்னாச்சி?” என்று அவளின் மோனநிலையைக் கலைக்க, “ஹ்ம்.. ஹான்.. இல்ல எனக்காக அழுதது சந்தோஷம்னாலும், நீங்க அழுதா என்னால தாங்கிக்க முடியாது. அப்புறம் என் அப்பா அம்மா டெவில்ஸ் கிடையாது. மாமா, அத்தை சொல்லணும் சரியா?” என்க, அவனின் ம்-ல் கண்ணீர் துடைத்து இரு கன்னம் தாங்கி, “என்னோட குட்டிக்கண்ணா எப்போதும் சந்தோஷமாயிருக்கணும். நான் சொல்றது புரியுதா?” என்று கண்சிமிட்டிக் கேட்டதில் அவளின்பால் இன்னுமே வசீகரிக்கப்பட்டவன், பதிலுக்குப் புன்னகையையே கொடுத்தான்.
“நம்ம வீட்டுல சாரி உங்க வீட்டுல நமக்குக் கல்யாணம் பேசும்போது ஒரு போட்டோ கொடுத்தாங்க. அதுல எவ்வளவு அழகா சிரிச்சிருப்பீங்க தெரியுமா? அந்த இயற்கை சிரிப்பைப் பார்க்கிற சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காதுதான். இருந்தாலும் அதுல அவ்வளவு அழகு நீங்க” என்றாள் ரசனையும் ரசிப்புமாய்!
‘இப்பயில்லையா?’ என்பதாய் கோபமாய்ப் பார்க்க, அதை உணர்ந்தாளோ! “அது வசீகரிக்கும் வசீகரன் சிரிப்பு. இது என் குட்டிக்கண்ணா சிரிப்பு. இரண்டுக்கும் வித்தியாசமிருக்கு” என்று எம்பி நெற்றியில் முத்தமிட்டு, “உட்காருங்க. வெளிய என்ன பஞ்சாயத்து ஓடுதுன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று சென்றாள்.
அவள் சென்றதுதான் தாமதம் இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டு அவளின் நெற்றி முத்தத்தை அனுபவித்து, “நான் வசீகரிக்குறேனா? நீதான் உன்னோட ஒவ்வொரு சொல்லாலும் செயலாலும் என்னை வசீகரிக்குற! இந்த அறை முழுக்க இருக்கிற உன் மூச்சுக்காற்றாலும் என்னை வசீகரிக்குற! நொடியும் உன்னைவிட்டுப் பிரியாதிக்கணும்னு நினைக்கிற அளவு என்னை வசீகரிக்குற! உன்மேல் பைத்தியமாகுற அளவு என்னை வசீகரிக்குற! வசியக்காரிடி நீ! நான் உன்னை வசீகரிக்கிறேனா?”
“உன்னோட கணவனா வர நான் அதிர்ஷ்டம் செய்திருக்கணும் பரி. சுயம் தொலைத்த நேரம் நான் உனக்குக் கட்டிய தாலி வேண்டாம். நான் என்னை.. உன்னை உணர்ந்து கட்டப்போறதுதான் நிஜம். அதை யாராலும் தடுக்க முடியாது. ஏன் நீயே நினைத்தாலும் முடியாது. உன்னை விடவும் மாட்டேன். விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். நீ இந்த வசீகரனுக்குச் சொந்தமானவள்! இது மாறாது. மாறவும் விடமாட்டேன். அதே மாதிரி, பரிபூரணின்ற உன் பெயரைப்போலவே பரிசுத்தமும், பூரணத்துவமும் நிறைந்தவள்னு எல்லாருக்கும் புரியவைக்குறேன்” என சபதமே எடுத்தான்.
வீட்டினருக்குத் தெரிந்துவிட்டதால், பாத்ரூம் செல்வதற்குக் கணவனைத் தைரியமாகவே அழைத்து வந்தாள் பூரணி.
“ஹேய் பூரணி! உன் புருஷனை முந்தானையால் மறைக்காம கூட்டிட்டு வந்திருக்க? தைரியம் வந்திருச்சோ” என சீண்டினாள் அஞ்சுகா.
“தைரியம் வந்ததாலதான் இவங்க இங்க இருக்கிறதைத் தைரியமா வீட்டில் சொல்லி, தைரியமா வெளில கூட்டிட்டும் வந்திருக்கேன்” என்று சற்று கர்வமாகவே பதிலளித்தாள்.
“பார்றா! கெத்து காண்பிக்கிறீங்களோ? ம்.. ஒருமுறை தைரியமா கேட்டதுக்கு ரைமிங்கா எத்தனை தைரியம் சொல்லுற? ஓகே ஜோக்ஸ் அபார்ட், எப்படித் தெரிஞ்சது? எதுவும் திட்டிட்டாங்களா?” என்றாள் கவலையாக.
“கதவை லாக் பண்ண மறந்துட்டேன்பா. என் அக்கா பார்த்து கத்திட்டா. திட்டு எப்பவும் வாங்குறதுனால அதெல்லாம் பிரச்சனையில்லை. இவங்களைக் கொஞ்சம் மரியாதையில்லாமல் பேசிட்டாங்க” என்று வருத்தத்துடன் உரைக்க,
“அது சரி. மற்றதைவிட அதுதான் உனக்குக் கஷ்டமாயிருந்திருக்கும். எதிர்த்துப் பேசியிருப்பியே?”
“ம்.. பேசினேன்தான். ஆனா அப்பா எனக்கு ஆதரவா பேசினாங்க.”
“உலக அதிசயம்தான் போ” என்றாள் கிண்டலாக.
அதில் புன்னகை எழ, “அது எப்பவாவது நடக்கும் அஞ்சு. அந்த அதிசயமான நாள்ல இன்றைய நாளும் ஒண்ணு. சரி அஞ்சு நாங்க உள்ள போறோம். வேற யாரும் பார்த்தா சூழ்நிலை மாறிப்போகும்” என்று உள்ளே சென்று தினகரனுக்கு அழைத்துக் கேட்க, சற்று நேரத்திற்கெல்லாம் வந்து அழைத்துப் போவதாகச் சொன்னதும், “ஏன் நாளைக்குதான வர்றதா சொன்னீங்க?” என்றாள் உள்ளே போன குரலில்.
செமினார் திடீரென நிறுத்தப்பட்டதால் இன்றே வந்துவிட்டதாகவும், சற்று நேரத்திற்கெல்லாம் வந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்ல.. சரியென்று வைத்தவளுக்கோ கணவன் இரு நாட்களேனும் தன்னுடன் இருக்கிறானே என்ற எண்ணம் பறிபோன நிலை. நாளை வரை இருப்பான் என நினைத்தவன் இன்றே கிளம்புவதால் ஒருவித ஏமாற்றம் அவளுள்.
அவனுக்கோ மனைவி மேலுள்ள காதலை வேறுவிதமாகக் காட்டி விடுவோமோ என்ற பயம். தன் உடல், உயிர் அனைத்தும் அவள் தனக்கே வேண்டுமென்று துடிக்க, இன்னும் ஓரிரவு இங்கிருந்தாலும் விளைவுகள் விபரீதமாகும் என்பதை உணர்ந்ததால், அதிலிருந்து தப்பிக்கவே தம்பியவனை பூரணிக்கு முன்பே கைபேசியில் அழைத்து வரச்சொல்லிவிட்டான்.
ஒருமணி நேரத்தில் தினகரன் வந்துவிட, வசீகரன் கிளம்பிய நிமிடம் அறைக்குள் வந்தவளை இறுக அணைத்து முகமெங்கிலும் விடாது முத்தமிட்டு அவளைத் திணறடித்து, “இப்பப் பார்த்த படத்துல பொண்டாட்டிக்கு இப்படித்தான் ஹீரோ முத்தம் கொடுத்தான். நீயும் என் பொண்டாட்டிதான அதான் கொடுத்தேன்” என்று மூச்சுமுட்டக் கட்டிக்கொண்டு முத்தமிட்டு தன் ஏக்கத்தை ஓரளவு தீர்த்துக்கொண்டு, “ஐ லவ்யூ பரி” என்று விலகி வாசல் சென்றவன், பழைய புன்னகையைக் கொடுத்துவிட்டே கிளம்பினான்.
நிமிடங்கள் அனைத்தும் அப்படியே உரைந்திருக்க, கணவனின் அணைப்பில் உடலெங்கும் அதிர்வுடன் கூடிய மின்சாரம் பாய்ந்ததோ! உலகம் மறந்து, தன்னை மறந்து பித்துப் பிடித்த நிலையில் வசீகரிக்கப்பட்டு நின்றிருந்தாள் பரிபூரணி. அவன் சென்றதைக்கூட உணரும் நிலையிலில்லை அவள். என்னதான் படம் பார்த்தேன் என்று சொன்னாலும் அவனின் அணைப்பும் முத்தமும் அப்பட்டமாக சொன்னது, அது படம் பார்த்ததினால் வந்த தாக்கமில்லை என்று. பின்னே என்ன என்ற மனதின் தேடலை மூளை, அவனின் நிலையைச் சொல்லி தடுத்து நிறுத்தியதோ!