- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
16
“டேய் மகனே! எங்ககிட்ட வந்து சிக்கிக்கிட்டியா?” என்று கையில் கிள்ள,
“ஸ்.. வலிக்குதும்மா. தலைக்கு மேல வளர்ந்த புள்ளைய திட்டுறதே தப்பு. நீ என்னடான்னா கல்யாணமான பையனைக் கிள்ளுற. பேட் மம்மி நீ.”
“சும்மா தொட்டதுக்கே இவ்வளவு அழிச்சாட்டியம் பண்றடா. உன்னையெல்லாம் நல்லா பிடிச்சித் திருகியிருக்கணும். எங்க தொட்டதுக்கே வலிக்கும் அத்தைன்னு உன் பொண்டாட்டி சப்போர்ட் பண்றா. இது தெரிஞ்சா...”
“ஹா..ஹா அந்த பயம் இருக்கட்டும்” என்றான் காலர் தூக்கி.
“போதும் சீன் போட்டது. கார் ரெடியாகிருச்சாம். அப்பா கால் பண்ணிட்டாங்க. சீக்கிரம் போகல நாம காலி” என்று அவர்களிடமும் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.
“இந்தப் பையனைப் பார்த்தா இளா மாதிரியே தெரியுறான் கயல். ஆனா, அவன் கிடையாது.”
“எப்படி அத்தை சொல்றீங்க?” என்றவளுக்குள் எதிர்பார்ப்பு. எந்த வகையில் இருவரும் வேறு என தெரிந்துகொள்ள.
“இளா பொறுப்பானவன் பொறுமையானவன். விளையாட்டு ரொம்பக் கம்மி. என்னோடவே இருந்ததால் என்னை மாதிரியே பொறுப்புன்னு உங்க மாமா கிண்டலடிப்பாங்க. இந்தப் பையன் பயங்கர ஜாலி டைப். அவனோட அப்பா, அம்மாவையே கிண்டலடிக்கிறான். பொண்டாட்டிகிட்ட கூட சரிக்கு சரி வாயாடுறான்.”
மேலோட்டமாகப் பார்த்தால் தன் அத்தை சொன்ன விளக்கங்கள் எல்லாம் சரியாகத்தானிருந்தது. அனைத்தையும் தாண்டிய ஒன்று இளங்கதிர்தான் இளநாதன் என்கிறது. ‘எது உண்மை?’ புரியாத குழப்பம் அவளுள் வந்தபோதும் மூளை சொன்னது என் அண்ணன் என்று.
மறுநாள் மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் தங்கள் வீட்டிற்கு வர வந்த களைப்பில் மனைவிக்கு போன் கூட செய்யாது படுத்துவிட்டான். டிரைவருக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி வந்த சிவகாமி, மகனின் தூக்கம் பார்த்து மருமகளிடம் வந்துவிட்டதை தெரியப்படுத்தி, மதிய உணவுக்கு வெளியே ஆர்டர் கொடுத்து உணவு வந்ததும், பையனை எழுப்ப குருமூர்த்தி சென்றார்.
மகனின் தலைவருடி, “இனிமேல் உன்னை ஊருக்கு அனுப்பமாட்டேன்டா. எனக்கு முழுசா என் பிள்ளையா நீ வேணும். கொலைகாரப் பயல்களா இருக்காங்கடா அவங்க. உன்னை எதாவது பண்ணிட்டா...” கண்களில் கோர்த்த நீரைத் துடைத்து “நீ இல்லன்னா நாங்க ஜடப்பொருள்டா கதிர். நாங்க வாழ்றதே உனக்காகத்தான்டா. என்னென்னவோ நடந்து உனக்குப் பிடிச்ச பொண்ணை கல்யாணமும் பண்ணிக்கிட்ட. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்னா மருமகளை இங்க வரவழைச்சிடலாம்.” நெற்றி வருடி மெல்ல முத்தமிட்டு சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினார்.
மாலை ஐந்து மணிக்கெல்லாம் மகனை வலுக்கட்டாயமாக எழுப்பி குளித்து வரச்சொல்லி, வந்தவனை சாப்பிட வைத்து, “உனக்கு கல்யாணமானதை மறந்துட்டியாடா ராஜா?” என்றார்.
“ஏன் தாயே திடீர்னு? அதெப்படி மறக்க முடியும். மறக்கிற விஷயமா அது?”
“அப்ப ஏன்டா வந்ததும் போன் பண்ணாம தூங்கிட்ட? அவள் உன்னைப்பற்றி என்ன நினைப்பா. தாலி கட்டிட்டு கழட்டி விட்டுட்டதா நினைக்கமாட்டா.”
“அப்படிலாம் நினைக்க மாட்டாமா. அவளுக்கு என்னைத் தெரியும். நான் வந்த வேகத்துல அப்படியே படுத்துட்டேன். எக்ஸ்பீரியன்ஸ் இல்லல்லமா. இனிமேல் கத்துக்கறேன்” என்று மனைவிக்கு உடனே போன் செய்ய அவள் எடுத்ததும் “சாரி சாரி மொழி. நான் மறந்துட்டதுக்கு ரியலி சாரி” என்றான் படபடப்பாக.
“ஏன் இந்த படபடப்பு? எதுக்கு சாரி? எதை மறந்தீங்க?”
“இல்லமா வந்ததும் போன் பண்றேன் சொல்லி போன் பண்ணல. போன் வராம நீ டென்சனாயிருப்பதான அதுக்குதான்.”
“அச்சோ அத்தை என்கிட்ட மதியமே சொல்லிட்டாங்க. நீங்க ஃபீல் பண்ணத் தேவையில்லை” என்றதும் அவன் தாயைப் பார்க்க, அவரோ அப்பொழுதுதான் தீவிரமாக சுவரிலுள்ள போட்டோக்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
“மொழிமா உன் அத்தையை தனியா கவனிச்சிக்கிறேன்” என்றான் பல்லைக்கடித்தபடி.
“அத்தையை ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் கஷ்டப்படக்கூடாதுன்னுதான சொன்னாங்க. அதுவுமில்லாம அவங்களுக்கு இருக்கிறது ஒரே பையன். அவனோட விளையாடாம... போய் வேலையைப் பாருங்க சார்.”
“மாமியாருக்கு சப்போர்ட்.. ம்.. கவனிச்சிக்கிறேன். சரி இப்ப எங்கயிருக்க?”
“தோட்டத்துல பூப்பறிச்சிட்டாங்க. மார்க்கெட்டுக்கு போக பேக்கிங் நடக்குது.”
“ஓ.. உன் தம்பி எங்க?”
“அவனுக்குன்னு வீடு இல்லையா. இப்பதான் அண்ணன் கல்யாணம் முடிஞ்சிருக்கு. இங்கயிருந்தா வேலைக்காகுமா?”
“சரி நீ சீக்கிரம் வீட்டுக்குப் போ. நான் காலையில கால் பண்றேன்” என பேசி முடித்து தாயினருகில் அமர்ந்தவன் ஏதோ யோசனையிலிருந்தான்.
“என்ன ராஜா யோசனை?”
“என் ஒய்ஃப் இங்க எப்படி அழைச்சிட்டு வரணும்னு யோசிக்கிறேன்ம்மா. அங்க விட்டுட்டு வந்ததை விட, அவளோட அம்மாவைப் பார்த்த பிறகு அங்க விட பயமாயிருக்கு.”
“என்னடா திடீர் பயம்? எப்பவும் போலதான அவள் அத்தை வீட்ல இருக்கிறா.”
“அம்மா! அவள் ஜாடையில அவங்கம்மா மாதிரியிருக்கா. யாராவது அவளைச் சேர்ந்தவங்க பார்த்து சம்பந்தப்பட்ட ஆளுங்ககிட்ட சொல்லிட்டா?”
“ராஜா!” என அதிர்ந்தார்.
“அதான்ம்மா. இதுவரை அவளை அடையாளம் தெரிஞ்சிருக்காதது வேற. நேரமும் காலமும் காப்பாத்தியிருக்குன்னு சொல்லலாம். எப்பவுமே நேரம் காலம் நமக்கு சாதகமாயிருக்காதே. நான் பக்கத்துல இருந்தா பரவாயில்ல. இங்க வான்னு சும்மா கூப்பிட்டாலும் லட்சியம் அது இதுன்னு சொல்வா.”
“குடும்பம் மொத்தத்தையும் கண்முன்னால பறிகொடுத்தவ ராஜா. அந்த வலி வேதனை எத்தனை காலமானாலும் குறையுமா?” காமாட்சி தன்னிடம் சொன்னதைச் சொல்லி, “அழுகைதான் அவளுக்கான மருந்து. அதைக் கொடுத்தா மட்டுமே மனசளவுல முன்னேற்றம் வரும்” என்றார்.
“அவளோட அம்மாவும், கயலும் நார்மல் லைஃப் வாழ்றாங்களேம்மா?” தாயிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“அவங்களுக்கு சாவை ஏத்துக்கிற பக்குவம் இருந்திருக்கு. ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்காங்க. எல்லாத்தையும் மறந்துட்டாங்கன்னு எப்படிச் சொல்ற? மறக்கிற சம்பவமா அது. திருவைப் பொறுத்தவரை என்னதான் காமாட்சி அவளோட வச்சிருந்தாலும், தனக்குள்ளேயே கேள்விகள் கேட்டு தன்னைத்தானே தேற்றிக்க வேண்டிய நிலை. நம்பிக்கைத் துரோகிகளின் நயவஞ்சகப் பழிவாங்கல். பாரு அநியாயம் செய்தவன் பெரிய மனிதன் போர்வையில் இருக்கான். எதுவும் செய்யாத அப்பாவிகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தறாங்க.”
“இவங்ககிட்ட சத்ரியத்தனம் வேலைக்காகாதும்மா. சாணக்ய தந்திரம்தான் சரியானது. தண்டனை அனுபவிக்காம எத்தனை காலத்துக்கு இருப்பாங்க. அதைவிடக் கொடுமை அன்புவ சாகடிக்கிறதுக்காக வளர்க்கக் கொடுத்தது. கத்தி மேல நிற்கிறான்மா அவன். எப்படியோ போன்னு விடமுடியாது. சீக்கிரமே எதாவது செய்யணும். அதுக்கு முன்னாடி மொழிய அவளோட அம்மாவோட சேர்க்கணும். அதுக்குதான் என்ன செஞ்சா சரிபண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்மா” என்று திரும்பவும் யோசனையிலாழ... சிவகாமியும் யோசிக்க ஆரம்பித்தார்.
அதே நேரம் குருமூர்த்தி வர, தாய் மகன் அமர்ந்திருந்த பாவனை சிரிப்பை வரவழைத்தது. இருவர் நடுவில் அமர்ந்து யாராவது தன்னைப் பார்ப்பார்களா என எதிர்பார்க்க எந்த முன்னேற்றமும் இல்லை. “சிவா” என அழைக்க வாயைத்திறக்க...
“ஐடியா” என தாய் மகன் இருவரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள்.
“என்ன ஐடியா?” இடையிட்டார் குருமூர்த்தி.
“நீங்க எப்ப வந்தீங்க? நான் கவனிக்கலையே?” என்றார் ஆச்சர்யமாய்.
“ம்... நீயும் உன் மகனும் மலையைப் புரட்டிப்போட என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தீங்கள்ல.. அப்ப வந்தேன்.”
ஹி..ஹி என இருவரும் அசடு வழிய... “சரி அப்படியென்ன யோசிச்சி ஐடியா கண்டுபிடிச்சீங்க?”
“நம்ம மருமகளை இங்க வரவைக்க என்ன செய்யலாம்னுதான். ஒரு ரிசப்ஷன் வச்சிரலாம்ங்க. அப்ப அவள் இங்க வந்துதான ஆகணும்.”
“நானும் ரெண்டு நாளா இதைத்தான்மா நினைச்சிட்டிருந்தேன்” என்றவருக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் இல்லையென்று தோன்றியது. இங்கு மருமகள் வந்த பின் தமிழ்நாடு செல்லாதிருக்க வழி செய்யலாம் என்பது அவருடைய எண்ணமாகயிருக்க, உடனே சரியென்று சம்மதித்துவிட்டார்.
உடனே நிஷாந்திடம் பேசி அங்குள்ள ஜோசியரிடம் நாள் பார்க்கச்சொல்லி நேரம் குறித்து, பத்து நாட்களுக்குள் வரப்போகும் வரவேற்புக்கு பம்பரமாய் சுற்ற ஆரம்பித்தார்கள்.
பத்திரிக்கை அடித்து நிஷாந்திற்கு அனுப்பி வைத்து தமிழரசியின் முகவரியில் பத்திரிக்கை கொடுத்ததுடன் அவர்களுடன் தமிழரசி கயல்விழியை அழைத்து வரச்சொல்லி உத்தரவு போட்டான்.
தங்கள் வீட்டு வாசலில் நிற்பவர்களை யாரென்பதாய் பார்த்தபடி நின்றார் தமிழரசி.
அந்நேரம் வந்த கயல்விழி அவர்களை அடையாளம் கண்டு, நலம் விசாரித்தவள் உள்ளே அழைத்து வந்து உட்கார வைத்து, “அத்தை அன்னைக்கு அம்மாவும் பையனும் வந்தாங்கள்ல அவங்க ரிலேடிவ்ஸ்” என்று அறிமுகப்படுத்தினாள்.
“ஓ... சாரி எனக்குத் தெரியாது. நாங்க லேடீஸ் மட்டும் இருக்கிறதால புதுசா வர்ற யாரையும் உள்ள கூப்பிடறதில்ல. தப்பா எடுத்துக்காதீங்க.”
“புரியுதும்மா. கூடவே உங்களுக்கு இரண்டு பையன்கள் ஒரு பொண்ணும் இருக்கிறதா நினைச்சிக்கோங்க” என்றான் நிஷாந்த்.
“புரியல. எ..என்ன இரண்டு பையன்” என்று கேட்கவும்,
“நான்! என் தம்பியும் தங்கையும்தான்ம்மா. ஏன் உங்க பிள்ளைங்களா ஏத்துக்க மாட்டீங்களா?”
‘என்ன இந்தப்பையன் உளறுறான்?” என தமிழரசி அவனின் தாய் தகப்பனைப் பார்த்தார்.
“இவங்களுக்கும் நாங்க பிள்ளைங்கதான்ம்மா. பெற்றால்தான் பிள்ளையா என்ன? இவங்க என்னை வளர்த்தவங்க” என்றான்.
“நிஷாந்த்” என்ற அதட்டல் பத்மினியிடமிருந்து வந்தது.
“ஏன்டா? யார் சொன்னது நீ நாங்க வளர்த்த பிள்ளைன்னு? அப்படிலாம் இல்லடா” என்றார் பத்மினி தவிப்பாக. ரத்தினமும் அதையே சொல்ல...
“எனக்கு தெரியும்ப்பா. என் கல்யாணத்தன்னைக்கு பிரஷாந்த்கிட்ட பேசினதை நானும் கேட்டேன். இதுக்காகல்லாம் உங்களை என் அப்பா, அம்மா இல்லன்னு சொல்லமாட்டேன். எனக்கு நல்ல அப்பா, அம்மா உங்களை விட யார் கிடைப்பாங்க. அடையாளம் இல்லாம எங்கேயோ கிடந்திருக்க வேண்டியவனுக்கு, மகன்னு அடையாளம் கொடுத்தது நீங்க. நீங்கயில்லன்னா நிஷாந்த்னு ஒருத்தன் இல்லவேயில்ல” என்றான் கலங்கியபடி.