• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 15

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
15



அன்பழகியின் விக்கலில் நெட்டிசன்கள் பரபரப்பாக, மற்றதை மறந்து மனைவியை முறைத்த செந்தூரனோ, “ப்ச்.. எப்பப்பாரு என் நினைப்புதானா அன்பழகி? அதான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்ல. பதிலுக்கு நீயும் சொல்லிட்டா விக்கல் ஏன் வரப்போகுது? எங்க நீ சொல்லு?” என்று புருவம் உயர்த்த, அவள் மனதில் சொன்ன ஆயிரம் லவ் யூக்கள் கண்கள் மூலம் கணவனைச் சேர, பதிலுக்கு அவனின் மயக்கும் புன்னகை ஒன்று அவளைச் சேர, அவள் இதழ்களில் மோகனப் புன்னகை ஒன்று அழகாய்! அழகோவியமாய்! அற்புதமாய்!

ஒன்றுவிடாமல் அத்தனையையும் படம் பிடித்துக் கொண்டனர் இணையதளவாதிகள்.

மீம் நம்பர் 1: விக்கல் எடுத்தா என்ன பண்ணணும்?

தண்ணீர் குடிக்கணும்ணே!

அடேய் அழகேசா! விக்கல் எடுத்தா பொண்டாட்டி புருஷனுக்கு ஐ லவ் யூ சொல்லணும். என்ன சொல்லணும்?

ஐ லவ் யூண்ணே! என்றதோடு முடிந்தது.

மீம் நம்பர் 2: அடியே ஆண்டாளு! இப்படி விக்கிட்டு நின்னு செத்துகித்துப் போயிராத. உன்னை நம்பி இரண்டு புள்ளைக இருக்கு.

வேற என்னக்கா செய்யுறது? நானும் நிறுத்த என்னென்னவோ செய்யுறேன். முடியலையே?

நான் சொல்லுற ஐடியாவைக் கேளு. விக்கல் வந்ததும் உன் புருஷனைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லு. விக்கல் தன்னால போயிரும்.

நெசமாவா!

அட ஆமாங்குறேன் என்றதோடு முடிந்தது.

மீம் நம்பர் 3: அண்ணே உங்களுக்கு விக்கல் வருது. எங்க உங்க மனைவி?

அவள் போயி வருஷம் பத்து ஆகுதுடா.

அச்சோ! சீக்கிரமே போயி அவங்ககிட்ட ஐ லவ் யூ சொல்லுங்கண்ணே! விக்கல் தன்னால நின்னுரும்.

இயற்கையா வர்ற விக்கலுக்கு இத்தனை அட்டகாசமாடா. சாகச் சொல்றானே என்னை. முடியலைடா என்னால.. அவ்வ்.. என்று முடிந்தது.

அதேபோல் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக எதிராக என்று இதேபோல் நிறைய. மௌனச் சாமியார்னு பெயரெடுத்தவர் பேசுவார் என்பது நிஜ துறவிகளையும், நிஜ பக்தர்களையும் கொதிக்க வைத்ததோடு பல இடங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

“வக்கீல் சார் என் மனைவிக்கு விக்கல் நின்னுருச்சி. இப்ப நீங்க ஆரம்பிங்க” என்று மச்சினனைப் பார்த்து சொல்ல,

“விக்கலையா?” என கிண்டலடித்து, “உங்கள் விக்கல் விளையாட்டு அளவில்லாமல் போகுது சார். இது கோர்ட். நாங்கள்லாம் இருக்கோம்ன்றதை மறந்திருறீங்க” என்றான் செந்தூரனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம் வக்கீல் சார். பேசிட்டிருந்ததை மறந்திரப் போறீங்க. போய் கன்டினியூ பண்ணுங்க” என்றான் சின்ன தோள்குலுக்கலுடன்.

சேகரிடம் சென்ற அதியன், “இவரை உங்க அண்ணிக்குப் பிடிக்காதுன்னா, தப்பானவரா என்ன?” என்று செந்தூரனைக் காண்பிக்க,

“தப்பானவன் கிடையாது சார். ரொம்பவே நல்லவனா இருக்கிறதாலதான் கஷ்டத்தை அனுபவிச்சான். எங்க அண்ணிக்கு இவன் பிறக்கும் முன்னே இருந்தே பிடிக்காது” என்று தலைகுனிய, தன் கோபத்தை அடக்க அருகிலிருந்த நாற்காலியை இறுகப் பற்றிக்கொண்டார் ராஜேஸ்வரி.

‘இந்த மனுஷன் ஏன் ஆதி முதல் இழுக்கிறார்’ என்று ராஜலட்சுமி மனதிற்குள் திட்ட, பவானி செந்தூரனுக்கு இத்தகவல் புதிது. குடிகாரக் கணவனுக்குப் பிறந்ததால்தான் தங்களைப் பிடிக்கவில்லை என்ற எண்ணம் கலைய, ஏன் தங்கள் பிறப்பே பிடிக்கவில்லை என்கிறாரென்று புரியாமல் பார்த்திருந்தனர்.

“ஓ.. எதனால அவங்களைப் பிடிக்கலை?”

“காரணம் தெரியாது சார். என் மனைவியை அவங்கதான் வளர்த்தது. அதனால் கண்மூடித்தனமான பாசம் அவள் அக்கா மேல. அவங்க சொல்றது சரியா தப்பா எதையும் யோசிக்காமல் செய்வா. என்னையும் அப்படியே பழக்கிட்டா. எனக்கு வேலை எதுவும் இல்லாததால அண்ணியை அண்டியே வாழ்ந்துட்டோம். செந்தூரனுக்கும் பவானிக்கும் எப்படி எட்டு வயசு வித்தியாசமோ, அப்படித்தான் ராஜேஸ்வரி ராஜலட்சுமி சகோதரிகளுக்கும். பவானிக்கு நாலு வயது இருக்கும் போதுதான் எங்க கல்யாணம் நடந்தது. அதை நடத்தி வைத்ததும் அண்ணிதான்.”

“நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்” என்ற அதியன் சேகரிடம், “சோ, அவங்க மேல அளவுக்கதிகமான நன்றிக்கடன் இருக்கு. அவங்க எது சொன்னாலும் செய்திருவீங்க?” என்றான்.

“ஆ..ஆமாம் சார்” என்றார் வேகமாக.

“இப்ப நீங்க அவங்களைக் காட்டிக் கொடுத்த கோபம் பயங்கரமாயிருக்கும். கோபத்துல நேரே வெளில போய் வண்டியில விழுந்து சாகுன்னு உங்கண்ணி சொன்னா, விழுந்து செத்துருவீங்களா?” சற்றே காட்டமாகக் கேட்டான்.

“அ..அ..அ..” என இழுக்க,

என்ன சார் அ..அ..அ.. பதில் சொல்லுங்க?” என்றான் அதட்டலாக.

“அ..அது அதெப்படி சார் முடியும்?” பதில் கேள்வி அவர் கேட்க,

“நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்” என்றவன் சேகரிடம் திரும்பி, “இப்பதான் கண்மூடித்தனமான பாசம், நன்றிக்கடன்னு சொன்னீங்க? இவ்வளவுதானா உங்களோட பாசம்? உயிரைக் கொடுத்து உறவை வளர்க்கணும்யா” என்றான் அதியன்.

அதில் அனைவரும் சிரித்துவிட, வந்த சிரிப்பை முகத்தில் காட்டாது, “அமைதி அமைதி” என்றார் நீதிபதி.

“ராஜேஸ்வரி அவர்களை விசாரிக்க விரும்புகிறேன் நீதிபதி அவர்களே” என்றான் அதியன்.

“அவங்களை விசாரிக்கிறதுக்கு முன்ன பத்து நிமிட இடைவேளை எடுத்துட்டு வர்றேன்” என்று செல்ல, அவரவர் கைபேசியைப் பார்க்க ஆரம்பித்தனர்.

சேகரை ஒருவழி செய்ய எழுந்த ராஜேஸ்வரியை, பெண் காவலாளி தடுத்து அங்கேயே அமரவைக்க, தங்கை கணவனை பார்வையால் எரிக்க மட்டுமே முடிந்தது. தங்கையைப் பிடிக்க நினைக்க, அவரோ குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தார். கோபம் கோபம் கோபம் மட்டுமே அவரிடம்.

செந்தூரனோ அதியனுடன் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல் பரிமாறிக் கொண்டிருக்க, அவனையே வைத்த விழியகற்றாது பார்த்திருந்தாள் அன்பழகி.

“அண்ணி விக்கல் வரலையா?” பவானியின் குரலில் பார்வையை மாற்றியவள், “ஏன்?” என்றாள் புரியாமல்.

“இல்ல அண்ணனைப் பார்த்தால் மட்டும் அப்பப்ப விக்கல் வருதே. இப்பவும் அண்ணனைத்தான் பார்க்குறீங்க. அதான் வரலையா கேட்டேன்” என்றாள் குறும்பாக.

“வரலாறுக்கு ரொம்ப முக்கியம். போ அங்கிட்டு” என்று திரும்பவும் கணவனைக் காண ஆரம்பித்தாள்.

“ஹ்ம்.. பேசாம நாமளும் லவ் மேரேஜ் பண்ணியிருக்கலாம்” என்று முனக,

“ஏய் என்ன சொன்ன?” என்று அன்பழகி பவானியை ஆராய்ச்சியாய் பார்க்க, “நானா? நான் எதுவும் சொல்லலையே” என்கையில் நீதிபதி வர இடமே அமைதியைத் தத்தெடுத்தது.

ராஜேஸ்வரியை அழைக்க முகம் சிவக்கக் கூண்டில் வந்து நின்றார்.

“நீங்க சொல்லுங்க? ஏன் உங்க பிள்ளைகளைப் பிடிக்காது?” என்றான் அதியன்.

“பிடிக்காததுக்குக் காரணம்லாம் சொல்ல முடியாது. பிடிக்காதுன்னா பிடிக்காதுதான்” என்றார் அழுத்தமாக.

“பிடிக்கலைன்னா குழந்தையே பெத்துருக்க வேண்டாமே. மீறி வந்தாலும் கலைச்சிருக்கலாமே? இப்படி வளர்த்து நீங்களே கொல்லுறதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லையே” என்க, அவரிடம் அமைதி மட்டுமே பதிலாய்க் கிடைக்க, “என்ன சாமியம்மா பேச்சையே காணோம்? கடவுளோட தூதர்னா நேர்மை உண்மையின் பிரதிபிம்பம்னு சொல்வாங்க. ஒரு பக்கம் சாமியா காட்சியளிக்கிற நீங்க, இன்னொரு பக்கம் சாத்தானா உருமாறும் காரணம் சொல்ல முடியுமா?” என்றான் கிண்டலாக.

“எனக்கு அம்மான்ற வார்த்தையே பிடிக்காது” என்றார் பட்டென்று.

“அப்ப சாமியம்மான்னு ஊரே உங்களை அழைக்குதே. அதெப்படி பிடிக்குது?” என்றான் கேலி குறையாது.

“அது என் பக்தர்கள் அழைப்பு” என்று பல்லைக்கடித்தார்.

“மன்னிக்கணும் மேடம். கடவுளிடத்தில் நீங்களும் ஒரு பக்தைதான். நீங்களே கடவுள் கிடையாது” என்றான் அழுத்தமாக.

“தம்பி வார்த்தையை பார்த்துப் பேசுங்க. கோர்ட் படி ஏறிட்டதால என்ன வேணும்னா பேசணும்னு அர்த்தம் கிடையாது. இல்லாதது பொல்லாததை மத்தவங்க சொன்னா அதை ஒத்துக்கிட்டு சரணடைய நான் ஒண்ணும் முட்டாள் இல்லை” என்றார் கோபமாக.

“ஐயா! நான் இவங்களிடம் பேசலாமா?” என்று நீதிபதியிடம் அனுமதி கேட்டான் செந்தூரன்.

“பேசுங்க செந்தூரன். உங்கள் தரப்பைச் சொல்ல, கேள்வி கேட்க உங்களுக்கும் உரிமையிருக்கு” என்றார் இளந்திரையன்.

ராஜேஸ்வரியைக் கண்டு “அம்மா!” என்றழைக்க, அந்த வார்த்தையில் மகனைக் கூர்மையாய் பார்த்தார் ராஜேஸ்வரி.

“என்ன பார்க்குறீங்க? அம்மான்னு உங்களைக் கூப்பிடலை. உங்களுக்குதான் அப்படிக் கூப்பிட்டா பிடிக்காதே. ஆனா, எனக்குப் பிடிக்கும். அம்மான்ற வார்த்தையிலுள்ள தாய்மை பிடிக்கும். ஆனா நாங்க உச்சரித்த முதல் வார்த்தை அப்பா. அதிகம் உச்சரித்த வார்த்தையும் அப்பாதான். கீழ விழுந்து அடிபட்டா ஒரு குழந்தை சொல்லுற வார்த்தை அம்மா. அங்கேயும் நாங்க அப்பாவைத்தான் அழைப்போம்” என்று தங்கையைக் காண, கண்களில் கண்ணீருடன் தலையசைத்த பவானி, தன் தந்தையைத் தேடினாளோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“சின்ன வயசுலயே அம்மா கூப்பிடச் சொல்லி நீங்க சொன்னதும் இல்லை. கூப்பிட விட்டதுமில்லை. எல்லாரும் அம்மாவைப் பற்றி புகழும் போது அந்த வார்த்தையில் ஒரு ஆசை. அந்த ஆசையில் ஒருமுறை கூப்பிட்டப்ப, அந்த வார்த்தை சொல்லக்கூடாதுன்னு அடித்து மிரட்டி அங்கேயிருந்த பெரிய தண்ணீர்த் தொட்டியில் போட்டுட்டீங்க. ஞாபகமிருக்கா?” என கேட்டு நீதிபதியிடம் திரும்பியவன், “எங்கப்பா வந்து தூக்கி என்னை சரிபண்ணுற வரை வேடிக்கை மட்டுமே பார்த்த தெய்வத்தாய் ஐயா இவங்க. அம்மான்னு கூப்பிட்ட ஒவ்வொரு முறையும் தண்டனைதான். என்னோட இது முடியலை. என் தங்கைக்குமே இந்த நிலைதான் ஐயா.”

“அம்மான்ற வார்த்தை பிடிக்கலைன்னா, கல்யாணமே செய்திருக்கக்கூடாது. அப்படியே செய்தாலும் குழந்தையை மறுத்திருக்கணும். மீறி வந்திருந்தாலும் என்னோடவாவது நிறுத்தியிருக்கணும். என்னை மாதிரியே என் தங்கையையும் அன்புக்கு ஏங்குற குழந்தையாக்கி...” குரல் கரகரக்க சில நொடி நிறுத்தியவன், “நான் பையன் எதுனாலும் சமாளிப்பேன். அவள் பொண்ணு. ஆதரவில்லாத பொண்ணுங்களுக்கு எத்தனை ஆபத்திருக்கும்னு தெரியாதவங்களா நாம. குழந்தைப் பருவத்தோட விட்டாங்களா எங்களை? வெளியில் சொன்னா கேவலம். இதுல ஊரே போற்றும் சாமியம்மா. அப்படித்தான அ..ம்..மா?” என்ற ஒவ்வொரு எழுத்தாக அழுத்திக் கேட்டான்.

அதுவரை அவனை முறைத்து வெறித்தபடி பார்த்திருந்த ராஜேஸ்வரி, “அம்மா சொல்லாத செந்தூ” என்றார் கண்டனக் குரலில்.

“என்னோட ஆசையை எல்லார் முன்னாடியும் நிறைவேத்திக்குறேன். விடுங்க அ..ம்..மா” என்றான்.

“வேண்டாம்டா. என்னை அப்படிக் கூப்பிடாத. எனக்குப் பிடிக்கலை” என்றார் அலறலாக.

“அம்மாவை வேற எப்படிக் கூப்பிடுறது? ஏய் பவி உனக்கும் இவங்க அம்மாதான? அம்மான்னு கூப்பிடு” என்றான் சத்தமாக.

அண்ணன் தன்னிடம் பேசியதில் கண்ணீர் துடைத்து முகம் மலர்ந்தாள் பவானி. உண்மை தெரிந்ததிலிருந்து மன்னிப்பு கேட்கப் பலவகையில் முயல்கிறாள். எங்கே அவன் பிடிகொடுத்தால்தானே! இதோ பவி என்றழைத்ததில் அகமும் முகமும் மலர அண்ணனவனைக் காண, அதனை உணர்ந்தானோ,” நம்ம பிரச்சனையை அப்பறம் பார்த்துக்கலாம். முதல்ல கூப்பிடு” என்றான்.

சிறிது மனம் சுணங்கினாலும், “அம்மா!” என்றழைத்து, “அண்ணனுக்கு வேணும்னா அம்மான்ற வார்த்தை பிடிக்கலாம். எனக்கும் பிடிக்கும் நிஜ அம்மாவா அன்பை அள்ளிக் கொடுக்கிறவங்களை. இப்ப சூழ்நிலை வேறாயிற்றே அம்மா” என்றாள் தாயைப் பார்த்து.

“பவா அம்மா சொல்லாத சொன்னேன்” என்று எச்சரிக்கை விடுக்க,

“என்னம்மா நீங்க? எவ்வளவு ஆசையா அம்மான்னு கூப்பிடுறேன். ரொம்பப் பண்றீங்கம்மா” என்றாள் கோபம் போல.

“எங்க மேல என்ன கோபம்மா? எங்ககிட்ட பாசமா ஒரு முறையாவது பேசுங்க அம்மா” என்ற செந்தூரன் அவரின் கோபம் எல்லையைக் கடப்பதை உணர்ந்தேயிருந்தான்.

“ஆமாம்மா. இந்த டெரர் ஃபேஸ் வேண்டாம்மா. நல்ல அம்மாவா பேசுங்கம்மா” என்று பவானி ஒருபுறம் அவரை ஏற்றிவிட,

“அம்மா அம்மான்னு கூப்பிட்டு என்னைக் கொல்லாதீங்க. எனக்கு என்னவோ போலிருக்கு” என்று தலையைப் பிடிக்க, ஜனம் மொத்தமும் இவர்களைப் பார்த்திருக்க, நீதிமன்றத்தில் அவ்வளவு அமைதி. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்தது ராஜேஸ்வரியின் அடுத்தடுத்த வார்த்தைகள்.

“எனக்கு எங்களைப் பெத்தவளையே பிடிக்காது. அவளை மட்டுமில்லை எங்களைப் பெத்தவரையும் சுத்தமா பிடிக்காது. பெண்களில் அம்மான்ற வார்த்தையை வெறுக்குறேன்னா, ஆண்களை முழுசா வெறுக்குறவள் நான்” என்றார் சத்தமாக.

“அதான் ஏன்னு கேட்குறேன் அம்மா?” என்று இன்னும் அவரைச் சீண்டினான் செந்தூரன்.

அப்பொழுதுதான் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார் ராஜேஸ்வரி.

“என்னைப் பெத்தவங்க தாண்டி பாட்டி மட்டும்தான் எங்கள் வீடு. ராஜி அப்பப் பிறக்கலை. என் பாட்டிக்கு நான் பெண்ணா பிறந்தது பிடிக்கலை. கட்டிட மேஸ்திரியான அப்பா பாசம் அதிசயமா சில சமயம் கிடைக்கும். என்னைப் பெத்தவளுக்கோ கணவனே கண்கண்ட தெய்வம். எதோ கிடைக்காதது கிடைத்த மாதிரி பொக்கிஷமா வச்சிப்பா. அவர் வீட்டுக்கு வந்து மறுநாள் காலையில் வேலைக்குப் போகும்வரை அப்படித்தான் தாங்குவாள். அவரை விட்டு அங்கேயிங்க நகர்றதில்லை. அப்படியொரு பதிபக்தி.”

“நான் பசியில் அழுதாலும் என்னைக் கவனிக்க மனசு வராது. பாட்டிக்கு எப்பவும், தலைப்பிள்ளை பையனா பிறந்திருந்தா கடைசி காலத்துல என் பையனுக்கு உதவியாயிருந்திருக்கும். செலவு வைக்கணும்னே இவள் பிறந்திருக்கா. பேரன் பிறந்திருந்தா அவன் கையால கொள்ளி வாங்கணும்னு நினைச்சிருந்தேன். எல்லாத்தையும் கெடுத்துட்டாள்னு எங்க பாட்டி வாயைத் திறந்தாலே இப்படியான வார்த்தைகள்தான் விழும்.”

“என்னைப் பெத்தவர் எப்பவாவது கன்னத்தைத் தட்டிக்கொடுத்து நல்லா படிக்கணும்னு சொல்வார். முழுசா இரண்டு நிமிடம் என்கிட்ட நின்னு பேசிட்டா என்னைப் பெத்தவளுக்குப் பிடிக்காது. அப்பாவாவே இருந்தாலும் ஆம்பளைங்ககிட்ட நின்னு பேசக்கூடாது சொல்லுவாங்க.”

“நீங்க மட்டும் பேசுறீங்க? ஏன் நைட் என்னை பாட்டி கூட படுக்க வச்சிட்டு, நீங்களும் அப்பாவும் படுக்கறீங்க கேட்டா, வாய்க்கொழுப்பா பேசுறேன்னு அடிவிழும். ஒண்ணு சொல்லும்போது அதை அவங்களும் கடைபிடிக்கணும்தானே? இல்லைன்னா தகுந்த காரணம் சொல்லணும். எதுவுமில்லாமல் வரும் எதிர்வினையை குழந்தைங்க என்னன்னு புரிஞ்சிப்பாங்க? அப்பவே இந்த ஆண்கள், அம்மா உறவு மேல் நல்ல அபிப்ராயம் கிடையாது.”

“நாளாக நாளாக அம்மான்னு கூப்பிடவே பிடிக்கலை. கூப்பிடாம இருக்கவும் முடியாதே. அதான் நான் பெத்ததுங்களைக் கூப்பிடவிடாமல் செய்தேன்” என்றதில் கோபத்தை விட வருத்தமே செந்தூரன் பவானிக்கு.

“என்னோட எட்டாவது வயசுல என் தங்கச்சி பிறந்தா. அதுவும் பொண்ணுன்னதும் எங்க பாட்டிக்குச் சொல்லவே வேண்டாம். எனக்கு நடந்தது மாறாம என் தங்கைக்கு நடந்தது. நான் பிறந்தப்ப என்ன நடந்திருக்கும்னு என் தங்கையைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன். அழுகுறாள்னு பால் கொடுத்துட்டிருப்பா, எங்கப்பாவோட சைக்கிள் சத்தம் கேட்டதும் குழந்தை கதறுறதைக்கூடப் பார்க்காம ஓடிருவா எங்களைப் பெத்தவள்.”

“அப்படியென்ன புருஷ பக்தி? கேட்டா காதலாம்! காதல்னா தன்னைத் தாண்டி மத்தவங்களைக் காயப்படுத்தும்னா அப்படிப்பட்ட காதல் தேவையா? எனக்கென்னவோ இப்பவும் இதை காதலா பார்க்கத் தோணலை. காமம்னு சொன்னா பொருத்தமா இருந்திருக்கும். அதன்பின் என் தங்கையோட பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன். என்னைப் பெத்தவளுக்கு இதில் ஏக நிம்மதி. பள்ளிக்குப் போகும் நேரம் மட்டும்தான் ராஜி அவங்ககிட்ட இருப்பா. அந்நேரமெல்லாம் அவளை எப்படிக் கொடுமைப்படுத்துறாங்களோன்னுதான் இருக்கும்.”

“படிக்கிறது கவர்ன்மெண்ட் ஸ்கூல்ன்றதால என்னோட தேவைகள் அதிகமிருக்காது. பத்து முடிச்சிட்டு வீட்டுலதான் இருந்தேன். அதுக்கு மேல படிக்கணும்னா வெளியூர்தான் போகணும். நான் போயிட்டா ராஜி நிலை என்னாகுறது? அவளுக்காகவே படிப்பை நிறுத்தினேன்.”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“என்னோட பதினாறாவது வயசுல, வேலை இடத்துல என்னைப் பெத்தவர் கால் தவறி விழுந்து, அங்கிருந்த கம்பி கழுத்துப் பகுதியில் குத்திப் பின்னாடி வந்திருச்சி. கொடூர மரணம்தான். போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சி வர்றதுக்குள்ள, அவரோட உயிர்க்காதலி பூச்சிமருந்து குடிச்சிட்டு செத்துப்போயிட்டா. இதை எல்லாரும் தெய்வீகக் காதல்னு சொன்னாங்க. இரண்டு பெண் குழந்தைகளை விட்டுட்டுப் போனதுக்குப் பெயர் தெய்வீகக் காதலாம். அந்த தெய்வமே இதை ஏத்துக்காதுன்றப்ப நானெப்படி ஏத்துக்குவேன்? அம்மா அப்பான்னு அழக்கூடத் தோணலை.”

“எல்லாம் முடிந்த பிறகு பாட்டிதான் எனக்குக் கொள்ளி வைக்காம போயிட்டியேடா. பையனைப் பெத்திருந்தாலாவது என்னைக் காப்பாத்தியிருப்பான். இவளுங்க எப்படிடா என்னைப் பார்த்துக்குவாளுங்கன்னு ஒரே புலம்பல். ரொம்ப நாள் இதுவே தொடர, நானே உனக்குக் கொள்ளி வைக்குறேன்னு, விறகடுப்புல எரிந்த கட்டையை எடுத்து பாட்டிக்குத் தெரியாமல் புடவையில் வச்சிட்டேன். முதலில் கிழவி கவனிக்கலை. கவனிச்சப்ப... ஹாஹ்ஹாஹ்ஹாஹா” என சத்தமாகச் சிரிக்க நீதிமன்றமே சில நொடி அதிரத்தான் செய்தது.

“பதறித் துடித்துக் கிழவி கத்தினா பாருங்க.. நான் வச்சாலும் கொள்ளி பத்திக்குது பாரு கிழவின்னு சாகுறதுக்கு முன்ன நான் சொன்னதைக் கேட்டுதான் கிழவி செத்தா” என்றார் கண்களில் வெறியுடன்.

தாயாய்த் தாங்கிய அக்காவின் அன்பில் மூழ்கியிருந்த ராஜலட்சுமி, இந்த ரூபத்தில் அரண்டுதான் போனார்.

“கடைசியில் நானும் என் தங்கையும்தான். வயிறுன்னு ஒண்ணு இருக்கே. கூடவே தங்கச்சியும் சின்னப்பொண்ணு. பக்கத்துல இருந்த பொம்மைக் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். பள்ளிக்கூடம் போற தங்கச்சிக்குப் பாதுகாப்பா, என்னோட படிச்ச பிள்ளைங்களோட தங்கச்சிங்களைப் பிடிச்சி வேலி போட்டேன். பதினாறு வயசுப் பொண்ணுக்கு வேலி போட முடியுமா? போட்டாலும் தாண்டி வராத இடத்துலதான் இருக்கோமா?” எனும்போது ராஜலட்சுமியின் கண்ணிலிருந்து சகோதர பாசத்தில் விம்மி வழிந்தது கண்ணீர்.

“காதல்னு வந்து நின்னாங்க சிலர்! காமம் மட்டும் போதும்னு சிலர்! ராணியாக்குறேன்னு ஆசை வார்த்தை காட்டி சிலர்! தனியாயிருக்கிற பொண்ணு தப்பானவளாதான் இருப்பாள்னு சிலர்! இப்படி சிலர் சிலரா சேர்ந்து பலர்! அந்த சிலரை விட இந்தப் பலர்தான் பயங்கரமானவங்க. சில ஆண் ஜென்மம் அத்து மீறும்போதுதான் என்னோட கோபம் உச்சத்தைத் தொட்டது. பலமில்லாதவள்னு அடக்க நினைக்குறவங்களுக்கு நம்முடைய பலம் என்னன்னு காட்டிட்டா?”

“நடுராத்திரியில் வீட்டு ஓட்டைப் பிரித்து உள்ளே குதித்தான் ஒருத்தன். பயத்தில் உயிரே போயிருச்சி. என்னதான் செய்யுறான்னு பார்த்தபடி கையிலிருந்த கூர்தீட்டிய அருவாளைப் பிடிச்சிக்கிட்டேன். வந்தவன் எனக்கு முன்ன படுத்திருந்த என் தங்கைமேல கையை வைக்கப்போக, அடுத்த நொடி அவன் தலை வேற முண்டம் வேறன்னு கிடந்தான்” என்றவர் குரலில் குறையாத வன்மும் கண்களில் அத்தனை வெறியும்.

“கைவைக்க வந்தவனைத் தள்ளி விட்டுக் கத்துறதுக்குள்ள அவன் கழுத்தை ஒரே போடு போட்டுட்டேன். என் தங்கச்சி எழுந்து பயந்துரக்கூடாது பாருங்க” என்று புன்னகைத்தார்.

தன் அக்காவிற்காக தான் செய்த, செய்யப்போகும் எதுவும் தவறில்லை என்ற நிலைக்கு வந்திருந்தார் ராஜலட்சுமி.

கேட்டிருந்த அனைவருக்குள்ளும் அதிர்வலை ஒன்று எழுந்தது. இந்தக் கொலை தவறாகத் தெரியவில்லை. கொடூரனை வதம் செய்த எண்ணம் மட்டுமே. இருப்பினும் இப்பொழுதே இரண்டு அடுத்து என்னவோ என சற்று திகிலுடனே அமர்ந்திருந்தனர்.

அவரின் அந்நாளைய நிலை ராஜேஸ்வரியின் பிள்ளைகள் தாண்டி அன்பழகியையும் பாதித்தது. ‘தங்கை மேல் இவ்வளவு அன்பைக் கொட்டுபவர் ஏன் பெத்த பிள்ளைகளை வெறுக்க வேண்டும்?’ என்ற எண்ணம் எழாமலில்லை.

“நைட்டோட நைட்டா எங்க ஊர் சுடுகாட்டுல வெட்டியானுக்குத் தெரியாம ஏற்கனவே எரிந்து முடியுற நிலையிலிருந்த இடத்துல அவளை இழுத்துட்டு வந்து போட்டு கையிலிருந்த தலையையும் போட்டு அங்க கிடந்த கட்டைகளை அவன்மேல் வச்சி கற்பூரத்தை வைத்துக் கொளுத்தி விட்டுட்டேன். அதுக்குப் பிறகு வீட்டிற்கு வந்து தங்கச்சி எழுறதுக்குள்ள வீட்டைக் க்ளீன் செய்து சாம்பிராணி புகை போட்டு விட்டுட்டு நிம்மதியா படுத்தேன்.”

“அடுத்து என்னன்ற நிலையில்தான் ஒரு பாட்டி யாருக்கோ சொன்ன அறிவுரையைக் கேட்டேன். கல்யாணம் முடிச்சா பாதுகாப்புன்னும், உன் குடும்பத்தைப் பார்த்துக்குற பொறுப்பு அவனுக்கு இருக்கும்னு சொல்லிட்டிருந்தாங்க. ஒருத்தனைக் கல்யாணம் செய்தா பாதுகாப்புக் கொடுப்பான்னா, எனக்கு அந்த பாதுகாப்பு தேவைப்பட்டது. பணம் போட்டு, நகை செய்து கல்யாணம் பண்ணுற நிலையிலா இருந்தோம். என்ன செய்யலாம்னு யோசனை. அப்பதான் ஊர்த் திருவிழாவுக்கு சென்னையில் செட்டிலான செல்லத்துரை குடும்பம் வந்தது.”

“அப்பா, அம்மா, தங்கை மட்டுமே! ரொம்ப நல்லவன்னு எல்லாரும் புகழ்ந்தாங்க. நல்லவன்னா என் தங்கைக்கும் பாதுகாப்புதானே! அதனால அவன் போற இடத்திலெல்லாம் கண்ணில் படுற மாதிரி அவனைக் கவனிக்காத மாதிரி நின்னேன். முதலில் அவனும் கவனிக்கலை. இரண்டு நாள் கழித்து அவன் பார்வை என்பக்கம் திரும்பிச்சி. அப்பறம் எல்லாரும் போல காதல் கீதல்னு, பிடிக்கலைன்னாலும் சிரித்து சமாளிக்க வேண்டிய நிலை. என்னைப் பெத்தவங்களைப் பார்த்து வளர்ந்த எனக்குக் காதலையோ, ஆண்களையோ எப்படிப் பிடிக்கும்?”

“செல்லத்துரை உடனே வீட்டில் சொல்லிட்டான். அவங்க மறுக்க, என்னைத்தான் கட்டுவேன்னு இவன் சண்டை போட, அவங்கம்மா கோபத்துல அவனை வீட்டைவிட்டு அனுப்ப, வெளில வந்ததுமே கோவிலுக்குக் கூட்டிட்டுப்போய் தாலி கட்டிட்டான். அவன் நண்பர்கள்கிட்ட சொல்லி வேலை செய்யுற இடத்துக்குப் பக்கத்துல வாடகை வீடெடுத்துன்னு ஒருவாரம் கழிய, ராஜியை அங்கேயிருந்த ஸ்கூல்ல சேர்த்துவிட்டோம்.”

“ஒருவாரம் எந்தப் பிரச்சனையுமில்லாமல் போன வாழ்க்கையில் அன்னைக்கு நைட் செல்லத்துரை என்னை நெருங்கும் போதுதான் யதார்த்தம் உச்சியில் உரைத்தது. காதல், காமம் எனக்குப் பிடிக்காதவை. இதை இரண்டையும் அவன் என்கிட்ட எதிர்பார்க்குறதைப் புரிஞ்சிக்கிட்டேன். காதலை நடிப்பாகக் கூட காட்டலாம். காமத்தை? ஏதேதோ காரணம் சொல்லி ஒருமாதம் தள்ளிப்போட்டேன். அதுக்கும் மேல முடியாம அந்தக் கொடுமையை ஏத்துக்கிட்டேன். என் பிடித்தமின்மையை அவன் உணரவேயில்லை. உணர்ந்து விலகியிருந்தா ஒருவேளை இந்த ஆண்கள் மேல சின்னதா நம்பிக்கை வந்திருக்குமோ என்னவோ!”

“அவனை ஏத்துக்கிட்டதுக்கு முக்கிய காரணம் என்னன்னா, என் தங்கச்சியை அப்பா ஸ்தானத்துல இருந்து பார்த்துக்கிட்டான். அவன் பார்வையில் எப்பவுமே கள்ளத்தனம் இருந்ததில்லை. ஒரு குழந்தைகிட்ட பேசுற மாதிரிதான் ராஜிகிட்ட நடந்துக்குவான்.”

“பிடிக்காத கணவன் மனைவி உறவு எத்தனை நாள் நீடிக்கும்? முடிந்தளவு அவனை விட்டு விலகினேன். என்ன விலகி என்ன.. அவன் கரு என் வயிற்றில். என்னால அம்மான்ற ஒரு ஸ்தானத்தை ஏத்துக்கவே முடியாது. வக்கீல் சார் கேட்ட மாதிரி செல்லத்துரைக்குத் தெரியாமலேயே கலைக்க முயற்சித்தேன்...” எனும்போது யாவருக்கும் அவர் செய்யக்கூடியவர்தான் என்றே தோன்றியது.

“எப்படியோ விஷயம் தெரிந்து குழந்தையைக் கலைச்சிராதன்னு கால்ல விழாத குறையா கெஞ்சினான். தாய்ப்பால் குழந்தைக்குத் தரமாட்டேன்னும், இனிமேல் என்னை அந்த எண்ணத்தோடு தொடக்கூடாதுன்னும் கண்டிஷன் போட்டேன். குழந்தை மேலுள்ள பாசத்தில் எல்லாத்துக்கும் சம்மதிச்சான். அவன் இறங்க இறங்க ஏறி மிதிக்கத்தான் தோணிச்சி. எனக்குன்னு குழந்தை வந்தா என்னைப் பெத்தவள் மாதிரியில்லாமல், பாராட்டி சீராட்டி வளர்க்கணும்ன்ற எண்ணம் நொடி கூட வரவேயில்லை. ஹ்ம்.. என்னைப் பெத்தவள் குணம் எனக்குள்ளும் இருந்திருக்கும் போல.”

“அடுத்து நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனை ஆட்டி வைத்தேன். எப்படியும் மனசுக்குள்ள ராட்சசியாதான் பார்த்திருப்பான். ஒன்பதாவது மாதம் செந்தூ வந்து பிறந்தான். ஒருவேளை முதல்ல பொண்ணு பிறந்திருந்தா மனசு மாறியிருக்குமோ என்னவோ! இவனைப் பார்க்கும் போதெல்லாம் கொள்ளி வைக்கப் பேரன் வேணும்னு கேட்ட என் பாட்டிதான் நினைவு வந்தாங்க. கொள்ளியாதான் இவன் எனக்குத் தெரிந்தான். தெரியுறான்” என குற்றவாளியைக் காண்பதுபோல் மகனைப் பார்த்தார்.

செந்தூரனின் கண்கள் தன்னால் மூடி தன் வேதனையை விழுங்க, என்ன நினைத்தானோ மனைவியின் புறம் திரும்பினான். அவளின் விக்கலை எதிர்பார்த்தானோ! அவளோ ‘வேதனை வேண்டாம். நான் இருக்கிறேன். எனக்கு நீ வேண்டும்’ என்பதை செய்கையில் சொல்ல, அதுவரையிருந்த கலக்கம் போய் ஒரு சாந்தம் அவன் முகத்தில்.

“ஸ்மைல் ப்ளீஸ்” என வாயசைத்து உதட்டை சிரிப்பதுபோல் கையால் செய்துகாட்ட, கீற்றாய் ஒரு புன்னகை அவனிதழில். “தட்ஸ் குட் மை மேன்” என்றாள் உதடசைத்து.

அதைப் புரிந்தவனோ, “நான் உனக்குரியவன் மட்டும்தான்” என்றான் பதிலுக்கு.

“இவனை நான் வளர்க்கலை. ராஜி பார்த்துக்குவா. அவளையே பல சமயம் தூக்கவிட மாட்டேன். அம்மான்னு கூப்பிட்டா அதிகமான தண்டனை கொடுப்பேன். இவனுக்கு மூணு வயசு இருக்கும் போதுதான் குடிக்க ஆரம்பித்தான் செல்லத்துரை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். குடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிரும்னு உளறினான். என்னோடது பொய்யான காதல்னு தெரிந்திருக்கும் போல. நல்லவனாவே இருந்தாலும் அவன் குடிகாரனாச்சே. அதான் ராஜியை ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்த்துட்டேன். தொடர்ந்து காலேஜும் ஹாஸ்டல்தான்.”

“தினமும் தண்ணியடிச்சிட்டு என்னை நெருங்க, நான் சண்டை போடன்னு வாழ்க்கை போச்சிது. சில நேரம் அவனைப் பார்த்துப் பாவமாதான் இருக்கும். எனக்குள்ள இருக்கிற ராட்சசி ஆண்களை நம்பாதே. தன் தேவைக்கு நடிப்பாங்க. இவனுக்கு இரக்கம் காட்டாதேன்னு சொல்லிருவா.”

“செந்தூ பிறந்து ஏழாவது பிறந்தநாள் அன்னைக்குப் பையனோட வெளில சுத்தப் போனவன் ராத்திரி எட்டு மணிக்குதான் வந்தான். பையனைத் தூங்க வச்சிட்டு என்கிட்ட நெருங்கினப்ப முடியாதுன்னு மறுத்துட்டேன். முதல்ல கெஞ்சினவன், இதுக்காக என் சுயத்தைக் கெடுத்து வெளியில் போக முடியாதுன்னு...” சட்டென்று ஒரு இடைவெளி விட, அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்தது.

“எந்த பாதுகாப்புக்காக அவன்கிட்ட வந்தேனோ அவனே என்னைப் பலவந்தப்படுத்தவும், அவனைக் கொன்னு புதைக்குற அளவு வெறி. அதுவே அவன் மகனைப் பார்த்தப்பவும் வந்தது.”

சொன்ன வார்த்தை நிஜமென்று தெரிந்த பொழுது நீதிமன்றமே அதிர்ந்து நிசப்தமாய் காட்சியளித்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
Yov writer eh oru paithiyatha samiyamma renjuku oh god
Enna vela parthiruku
Purusanaum inthamma tan potrucho
சாமியம்மாவ அப்படி சொல்லக்கூடாது.
இவ்வளவு செய்தவங்க புருசனையும் முடிச்சிருக்கலாம்.

நன்றி.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
என்ன ஆத்தர் ஜீ சாமியம்மாவை கொலைகாரியா மாத்தி வச்சிருக்கீங்க. தெய்வ குத்தம் ஆகாதா... நீங்க சொல்ற இந்த சாமியம்மாவுக்கும் நான் பல செய்திகளில் கேள்விப்பட்ட சாமியம்மாவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோன்னு தோணுதே...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
என்ன ஆத்தர் ஜீ சாமியம்மாவை கொலைகாரியா மாத்தி வச்சிருக்கீங்க. தெய்வ குத்தம் ஆகாதா... நீங்க சொல்ற இந்த சாமியம்மாவுக்கும் நான் பல செய்திகளில் கேள்விப்பட்ட சாமியம்மாவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோன்னு தோணுதே...
தெய்வ குத்தம் சாமியம்மவுக்கு தான்.
எஸ் இந்த கேரக்டர் நிறைய பேர் இருக்காங்க.
 
Top