- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
15
பகல் முழுவதும் தாயறியாது பாத்ரூம் அழைத்துச் செல்வது, யாருமறியாமல் அறைக்குள் பதுங்குவது என்று ஒரு திகில் அனுபவம் அவளுக்கு.
“பூரணி! மழை வர்றதால ஜனனி நாளைக்கு வர்றதா போன் பண்ணிருந்தா” என்றார் மைதிலி.
‘ரொம்ப நல்லதா போச்சி. பிசாசு எப்பப்பாரு மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு தரகர் வேலை பார்க்குது’ என மனதில் நினைத்து, “பரவாயில்லைம்மா மழையெல்லாம் நின்னு இரண்டு நாள் கழித்து நிதானமாகவே வரட்டும்” என்றவள் இரவு உணவு செய்ய ஆரம்பித்தாள்.
சமையல் முடிக்கையில் மழையில் நனைந்ததால் குளியல் போட்டு வந்த மலையரசன், “இன்னைக்கு போன கல்யாணத்துல தனசேகரன் ஐயாவைப் பார்த்தேன் மைதிலி. மனுஷன் தம்பியைப் பற்றி கதை கதையா சொல்றார். இவங்களை ஒட்டிப்பிறந்த இரட்டைகள்னு பேசினவங்கள்லாம், இப்ப தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு நிரூபிச்சிட்டாங்கையா சொல்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை” என்று ஆச்சர்யப்பட்டார்.
“நம்ம வீட்டுக்குக் கொஞ்சமா செய்திருக்காங்க. அதுக்கான தண்டனை வேண்டாம். இப்ப கல்யாணம் வேண்டாம்னு உட்கார்ந்திருக்கா. அவங்க பைத்...”
“அம்மா” என்றவள் குரல் ஓங்கி ஒலித்தது அங்கே!
உள்ளேயிருந்த வசீகரனே அக்குரலில் சிலநொடி தடுமாறிவிட்டான்.
“என்னடி அம்மான்னு கத்துற? பைத்தியத்தை வேற எப்படி சொல்வாங்க?” வசீகரன் வீட்டினர் மேலுள்ள கோபத்தை மகளிடம் காட்டினார்.
“எதுவும் சொல்ல வேண்டாம். என்னவோ அவங்க மட்டும்தான் தப்புன்னு பேசுறீங்க? அப்படிப் பேசுறவங்க கைநீட்டி பணம் வாங்கியிருக்கக்கூடாது. அவங்க பையனுக்கு நல்லது செய்யுறதா நினைச்சி தப்புப் பண்ணினாங்க. நீங்க எனக்கு என்ன நல்லது செய்தீங்க? பத்து நாள் உறவுக்கு பத்து லட்சம் பணம் வாங்கிட்டு, சே...” என்றவள் அறைக்கு செல்லப்போக...
“ஏய்! உனக்காகத்தானடி வாங்கினோம். யாருக்கோ வாங்கின மாதிரி பேசுற?” தங்களைக் குறை சொல்வது பிடிக்காமல் கோபம் குறையாது மைதிலி கத்த,
அவரிடம் திரும்பியவள், “எது எனக்காகவா? வேண்டாம்மா. உங்க தப்பை மறைக்க என்னைப் பலிகடாவாக்காதீங்க.” சற்றுக் கடுமையாகவே சொன்னாள்.
“என்ன பேசுற நீ? வாழ்க்கை இழந்து நிற்கிறது நீ. அவங்க பண்ணின தப்புக்கான நஷ்டஈடுதான் அது. சும்மா தூக்கிக் கொடுத்த மாதிரி கோபப்படுற?”
“நஷ்டஈடு எதெதுக்குக் கேட்குறதுன்னு இல்லையா?”
“கோர்ட்ல கேஸ் போட்டா இதைவிட அதிகமாகவே தரவேண்டியிருக்கும். அதோட அவங்க பெயரும் கெட்டுரும்னு வீட்டோடவே முடிச்சிக்கிட்டாங்கன்னு தெரியாதா என்ன?” என்றவர் குரலில் தனக்கும் வெளி விவரங்கள் தெரியும் என்ற பெருமையே!
“ப்ச்.. உங்ககிட்டலாம் பேச முடியாது. என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கப்போறது இல்லை” என்று கொஞ்சம் சலிப்பாகவே சொன்னாள்.
“உன்னை யார் பேசச் சொன்னது? அதான் அந்தப் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட எடுக்காம தன்மான சிங்கமா, சாப்பாட்டு செலவைக்கூட நீ பார்க்குறியே. பின்ன எதுக்கு அதைப் பேசுற?” மைதிலியின் குரலில் பிழைக்கத் தெரியாதவள் என்ற ஏளனமிருந்ததோ! பூரணியின் இடத்தில் ஜனனி இருந்திருந்தால் தான் சொன்னதைக் கேட்டு இன்னுமின்னும் வசூலித்திருப்பாள் என்ற எண்ணம் வராமலில்லை அவருக்கு.
உழைக்காமலே பணம் கிடைத்தால், அதை உட்கார்ந்திருந்து அனுபவிப்பதிலும் ஒரு தனிசுகம் உண்டல்லோ!
“பார்க்கிறவங்களுக்கு நீங்க வாங்கினது மட்டும்தான் தெரியும்” என அழுத்தமாகச் சொல்லி, மறக்காது கணவனுக்குமான உணவெடுத்து செம்பில் தண்ணீருடன் சென்றாள்.
அறைக்குள் நுழைகையில் அனைத்தையும் மறந்தவளாய் புன்னகையுடன், “சாப்பிடுங்க வசீகரா” என்றாள்.
இத்தனை நேரமிருந்த கோபமனைத்தும் தன்னைப் பார்த்ததும் மறைந்து புன்னகைத்தவளை வாஞ்சையாய்ப் பார்த்து, “நீ சாப்பிடலையா பரி?” என பரிவுடன் கேட்டான்.
“என்னோட அப்பா அம்மா இப்பதான் மனசு முழுக்க நிறைய கொடுத்தாங்க. அதுவே வயிறு நிறைஞ்சிருச்சி. நீங்க சாப்பிடுங்க” என்று அவன் கையைக் கழுவ வைத்து, சாதத்தில் காரக்குழம்பை ஊற்றி அருகில் கிண்ணத்தில் கேரட் பொரியல் வைத்துக் கொடுத்து, “இங்க சாப்பாடு ரொம்பவே சிம்பிளாயிருக்கும் வசீகரா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. மாவு காலியாகிருச்சி. இல்லைன்னா தோசை ரெடி செய்திருப்பேன். சாப்பிட்டுட்டு பிடிச்சிருக்கா சொல்லுங்க? இதுவும் உங்க பொண்டாட்டி கைவண்ணம்தான்” என்று அவனின் வார்த்தைக்காகப் பார்த்திருந்தாள்.
இரண்டு வாய் எடுத்து சாப்பிட்டவன், “சாப்பாடு நல்லாயிருக்கு பரி. உன் கையால் சமைச்சதால இன்னுமே ருசிக்குது” என்றான் உணவின் ருசியை முகத்தில் காட்டியபடி.
“நல்லா பேச கத்துக்கிட்டீங்க. அம்மா சொல்லித் தந்தாங்களா?”
“ஆமா. இன்னும் நிறைய சொல்லித் தந்தாங்க. நான் உனக்கு சொல்லித் தர்றேன்” என்றான் விஷமப்புன்னகையுடன்.
“நீங்க எது சொல்லித்தந்தாலும் கேட்டுக்குவேன். இந்தக் குட்டிக்கண்ணனோட பொது அறிவை நானும் தெரிஞ்சுக்குறேன். வேற என்னென்ன தெரியும்?” ஆர்வமாய் அவன் முகம் பார்த்திருந்தாள் பூரணி.
“கூடவே இருக்கிறவங்க சாப்பிடாம இருந்தா இப்படி ஊட்டி விடணும்னு தெரியும்” என்று அவள் எதிர்பாரா நேரம் சாதத்தை அள்ளி அவள் வாயில் வைத்த சில நொடிகளில் அவளின் கண்கள் கலங்கி சிலதுளி நீரை வெளியேற்றியது.
“என்னாச்சி பரி? ரொம்ப காரமாயிருக்கா?” என பதறிப்போய் கேட்க, “இல்லைங்க உங்க அக்கறையினால வந்த கண்ணீர். எனக்கு உடம்புக்கு எவ்வளவு முடியாமல் இருந்தாலும் அம்மாவோ அப்பாவோ இதுவரை ஊட்டிவிட்டது கிடையாது. ஏன், அம்மா என்கிட்ட அன்பா பேசினதுகூட கிடையாது. எனக்கு விவரம் தெரிந்து சண்மு ஊட்டிவிட்டுருக்கா. அடுத்து நீங்கதான்” என்று நெகிழ்ந்த குரலில் கூறினாள்.
அவளின் துன்பத்தை விலக்க, “மற்றதை விடு பரி. இப்பப் பிடிச்சிருக்கா?” மென்மையான குரலில் வினவினான்.
“ரொம்பவே” என்றவள் கண்கள் கண்ணீரிலும் சிரித்தது.
தொடர்ந்து உணவை அவளுக்கேக் கொடுத்தவன், கொடுப்பதையும் தான் ஊட்டிவிடுவதையும் அவள் உணரவிடாமல் பேசிக்கொண்டேயிருந்தான்.
பூரணியுமே கணவனின் சரளமான பேச்சை உணராது, அவன் கையால் உண்பது ஒன்றே இன்பமாகிப்போக, குழந்தையாகிப் போனாள் அவளின் வசீகரனிடம்.
உணவு முடித்ததும் கைகழுவி அவளுக்கும் வாய் துடைத்துத் தண்ணீர் கொடுக்கையில், மதியம் தான் கொடுத்ததுபோல் தனக்கேத் தெரியாமலேனும் ஒரு முத்தமிட்டால் என்னவாம் என்ற ஏக்கம் எழ அவளைப் பார்க்க, பாவையின் பார்வைதனில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தும் மறந்துபோக, அவன்மேல் கொண்ட காதல்! காதல்! காதல் மட்டுமே!
தற்பொழுது தான் பைத்தியம் என்பது மறந்து அவனுமே கண்களால் காதல் வசனம் பேச, சில நிமிடத்திற்கெல்லாம் சுதாரித்தவன். “பரி.. பரி.. தூங்கலாம்” என்று புன்னகையுடன் கேட்க... மயக்கம், கிறக்கம், மோகம், தாபம் அனைத்தும் அரண்டடித்து ஓட, சடாரென்று எழுந்தவள் சூழ்நிலை உணர்ந்து, “தட்டை வச்சிட்டு வர்றேன்” என்று வெளியே சென்று பத்து நிமிடங்கள் கழித்தே உள்ளே வர, அவளையேதான் பார்த்திருந்தான் வசீகரன்.
பாயை விரித்து அதன்மேல் போர்வையை விரித்து இரண்டு தலையணை போட்டு, “இங்க கட்டில் கிடையாது வசீகரா. மழை பெய்யுறதால கொசு கொஞ்சம் கம்மியாயிருக்கு. இல்லைன்னா பிய்த்து எடுக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றபடி அவனைப் படுக்கவைத்து போர்வையால் மூடி, தன்னிடம் வேறு போர்வை இல்லாததால் புடவை ஒன்றை இரண்டாக மடித்து தனக்கு மூடி, கணவன் அருகிருந்ததால் பழக்கதோஷத்தில் அவன் தோளில் தலைவைத்து, வயிற்றில் கைபோட்டு படுத்ததும் உறங்கிவிட்டாள்.
அவனோ பார்த்த விழி பார்த்தபடி பூத்துயிருக்க.. ‘பரி.. பரி..’ என்று புலம்பவில்லை அவ்வளவே! அவளுக்கோ அவனின் அருகாமையே போதுமென்பதாய்! வசீகரனுக்கோ அனைத்தும் அவளாக வேண்டுமென்பதாய்!
‘தாய் வீட்டில்தான் பெண்கள் சுதந்திரமாக இருப்பதாக பேச்சு உண்டு. இவளுக்கு அதுவும் இல்லையா? சாப்பாட்டிற்கும், இதர செலவுகளுக்கும் தன் வருமானத்திலிருந்து கொடுக்கிறாள் என்றால், தங்கள் பிரிவிற்காகப் பெற்றவர்கள் பணம் வாங்கியது இவள் மனதை எவ்வளவு பாதித்திருக்கும். சுயகௌரவம் நிறைய பார்க்கிறாள். அதுதான் அன்று சண்முகியிடம் சொன்னாளே தன்மானமும், சுயமரியாதையும் நிறையவே இருக்கிறதென்று. அதனாலேயே தன்னை ஏற்கவைக்க நிறைய போராட வேண்டியிருக்கும்’ என நினைக்க, ‘போராடாமல் எதுவும் சுலபமாகக் கிடைக்காது’ என்றது மனம்.
‘ஏன் இப்படிச் செய்தீங்க? அப்படி என்ன பண்ணிட்டாள்னு இப்படி விட்டுட்டீங்க?’ மானசீகமாகத் தாயைத் திட்ட மட்டுமே முடிந்தது அவனுக்கு. அவளின் இந்நிலைக்குக் காரணமான எல்லோரையும் தண்டிக்கும் வேகத்தை அவனின் விவேகம் தடை செய்து கொண்டிருக்கிறது.
அவள் மூடிப்படுத்திருந்த புடவையை விலக்கி, தன்னை மூடியிருந்த போர்வையை இருவருக்குமாக போர்த்தி மனைவியவளை அணைத்துக்கொள்ள குளிரின் மாயமோ அல்லது மூளையின் அறிவுறுத்தலோ அவனை இன்னும் நெருங்கியணைத்து கட்டிக்கொண்டாள். இல்லையில்லை ஒட்டிக்கொண்டாள். ‘என்னை விட்டுப் போகாதே’ என்பதான இறுகிய அணைப்பு. அதுவே சொல்லியது கணவனுக்கான அவளது தேடலை.
காலை விடிந்ததும் எழ முயற்சித்து எழ முடியாமல் போக, சட்டென்று பதற்றம் ஒட்டிக்கொள்ள கத்த வாயெடுத்தவளை அணைத்து, “கொஞ்ச நேரம் தூங்கு பரி” என்ற குரலிலேயே கணவனையும் நடந்ததையும் உணர, “சே.. லூசுடி நீ” என தன் தலையில் தானே தட்டிக்கொண்டாள்.
கணவன் கைவளைவில் இருந்தபடியே அவன் முகம் பார்த்து தலையை செல்லமாய் கலைத்து, “ஹேய் குட்டிக்கண்ணா! வர வர அழகாயிட்டேப் போறீங்க. முன்னெல்லாம் பக்கத்துல படுத்திருந்தா லேசா அணைவா பிடிச்சிக்குவீங்க. இப்ப கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு. இப்படியே என்னோடவே இருந்திருறீங்களா? வாழ்க்கை முழுக்க உங்க கூடவே இருக்கணும்னு மனசெல்லாம் துடிக்குது. நடைமுறைக்கு சாத்தியமில்லைன்னு மூளை அறிவுறுத்தினாலும், அதையும் மீறி நீங்கதான் வேணும்னு மனசு தவிக்குது. இந்த இரண்டு நாள் எனக்கான நாள்! நமக்கான நாள்! இதுவே நம் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்.”
“சீக்கிரமே குணமாகி குடும்பம் குழந்தைன்னு வாழணும் நீங்க. அப்படி ஒண்ணு நடந்தா சத்தியமா உங்களை உரிமை கேட்டு வரமாட்டேன். கொடுமை என்னன்னா, நம்ம கல்யாணம் செல்லாது வசீகரா” என்கையில் குரலில் அத்தனை நடுக்கம். “அவ்வளவு சொந்தபந்தங்கள் முன்னால முறையா நீங்க கட்டின தாலி வெறும் பத்தே பேருக்குள்ள பஞ்சாயத்துன்ற பேர்ல... ப்ச்.. தாலியை வாங்கிக்கிட்டா நீங்க என் கணவன் இல்லைன்னு ஆகிருமா?”
“உங்க அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? தாயன்பு அவங்க மூலமா கிடைக்கும்ன்ற சந்தோஷத்துல இருந்தேன். அவங்களுக்காகவே உங்களைப் பார்க்காமலே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்னா பாருங்க. உங்க போட்டோ பார்த்ததும், கட்டினா இவனைக் கட்டணும்டான்னு முடிவே பண்ணிட்டேன்” என்று அவன் மூக்கைப் பிடித்து வலிக்காமல் அசைத்து மெல்ல கன்னம் தொட்டு, “எனக்கு உங்களை அவ்வளவு பிடிச்சிருந்தது. அதுக்கும் ஆயுள் கம்மின்றது தெரியாமல் போயிருச்சி வசீகரா.”
“இப்ப உங்களோட நான்... கனவோன்னு இருக்கு வசீகரா. இந்தக்கனவு கலைஞ்சிராதுதான? எனக்கும் அன்புக்கும் ஏக தூரம்போல. எவ்வளவு தூரமிருந்தாலும் நான் உங்கமேல வைத்த அன்பு மட்டும் மாறாது. மற்றவங்க அன்பை எதிர்பார்த்தால்தான அது ஏமாற்றத்தைக் கொடுக்கும். நான் மட்டுமே கொடுத்தால் அங்கே ஏமாற்றத்துக்கு வேலையில்லையே! அதனால ஐ லவ் யூ வசீகரா!” அவனின் தாடையில் முத்தமிட்டு எழுந்து வெளியே சென்ற சிறிது நேரத்தில் காஃபியுடன் வந்து அவனை எழுப்பினாள்.
அவள் பேசிய வார்த்தைகளை அசைபோட்டிருந்தவனோ, அவளின் ஐ லவ் யூவில் மயங்கிப்போய் இருக்க, பூரணியின் தொடுகையில், “ஐ லவ் யூ பரி!” என்று கண்திறவாது மென்மையாக உச்சரித்தான்.