• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
13



தனக்கு வந்த அதே கேள்வி அவளுள்ளும் எழுமென்று அறியாதவனா. வித்யா என்று தெரியாமல் கீர்த்தியைப் பெண் கேட்டு வித்யாவை முடிக்கச் சொன்ன பொழுது அவனிருந்த அதே மனநிலை. அவள் கண்கள் அதிர்விலிருந்து கோபத்திற்கு மாறுவதை பார்த்திருந்தான். அவளின் கோபத்தை என்ன செய்து தீர்ப்பது என்று யோசிக்கலானான்.

அவனின் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தாள் வித்யா. ‘கீர்த்தியைப் பெண் கேட்டு என்னை எப்படி?’ ஏனோ அவர்கள் மேல் கோபம்தான் வந்தது. நல்லவர்களென்று தான் எண்ணியது தவறென்று பட... அருகில் சிரித்துக் கொண்டிருந்த கீர்த்தியிடம், “என்னடி நடக்குது இங்க? பெண் பார்க்க வந்தது உன்னைத்தான? என்னை ஏன்டி? உனக்குக் கோபம் வரலையா பல்லைக் காட்டிட்டிருக்க?” என்று அவளைக் கடித்துக் குதறினாள்.

“அது வித்திமா. காலையில வரை அப்படிதான் போச்சி. பட் ஜாதகம் பார்த்தது உங்க ரெண்டு பேருக்கும்தானாம். எனக்கு ஒரு வருஷம் கழிச்சி பார்க்கணுமாம். அப்பக்கூட இந்த மாப்பிள்ளைக்கும் எனக்கும் பொருத்தமே இல்லையாம். பொருத்தமான உங்களை சேர்த்திடலாம்னு பெரியவங்க முடிவு பண்ணிட்டாங்க.”

“இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல? எப்படிடி உன்னைப் பார்க்க வந்தவரை நான்... எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல கீர்த்தி. ஒரே வீட்ல ஒரு பெண்ணைப் பார்க்க வந்து, இன்னொரு பெண்ணை முடிக்கிறது கிரிமினல்தனம்” என்று பற்களைக் கடித்தபடி அமைதியாகக் கொந்தளித்தாள்.

“வித்தி அமைதியாயிரு. அவங்க கிளம்பினதும் பேசிக்கலாம்.”

“கிளம்பினதும் பேசி என்ன செய்ய முடியும்? என்னால இங்க நிற்கக்கூட முடியல. நல்லவங்கன்னு நினைச்சா, ச்சே.. நான் வீட்டுக்குப் போறேன்” என நகரப் போனவள் கைபிடித்திழுத்து, “பாசமலர் ரெண்டும் உன்னை முறைக்கிறது தெரியலையா? கொஞ்சம் அமைதியா நில்லு” என்றாள் காதோரம்.

‘ப்ச்...’ என தன் விருப்பமின்மையைத் தெரிவித்து நிற்க... அவளை எப்படி சரி செய்வதென்ற கேள்வி இப்பொழுது ஆனந்திற்கு.

“தனியா பேசணுமா வித்திமா?” என்ற அண்ணனை முறைத்து, “தனியா பேச நான் என்ன மெண்டலா. வேணும்னா நீங்க போகலாம்” என்றதும் சுபாஷ் சிரிக்க... “கடுப்பேத்தாம போறியா?” என மரியாதையை கைவிட்டு எரிந்து விழுந்தாள்.

“வித்தி நமக்குள்ள ஒரு ஒற்றுமை பார்த்தியா?” அவளோ அண்ணனை முறைக்க... அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், “நாம ரெண்டு பேருமே அவங்கவங்க கல்யாணத்தோட குழப்பத்துலயே இருக்கோம்” என்றவன் ஆனந்திடம் திரும்பி, “மச்சான் தனியா பேசணுமா?” என கேட்டான்.

“தனியா பேசுற அளவுக்கு இன்னும் மெண்டலாகல மாப்பிள்ளை சார். வேணும்னா உங்க தங்கச்சிகிட்டப் பேசுறேன்” என்றதும் அவளறியாமல் வந்த சிரிப்பை வித்யா அடக்க, சுபாஷ் சத்தமாக சிரித்து, “ரெண்டு பேருக்கும் என்னே ஒரு ஒற்றுமை. வித்திமா போய் பேசிட்டு வா” என்றான்.

அண்ணனை முறைத்து வேறு வழியில்லாமல் நகர்கையில், அவன் காலில் அழுத்தமாய் ஒரு மிதி மிதிக்க, கத்தப் போனவன் தன் வாய்மூடி அதை அடக்கினான் சுபாஷ்.

ஆனந்த் அவனைத் தாண்டுகையில், “வெளியில இத்தனை பேர் பாதுகாப்போட இருக்கிற உங்களுக்கே இப்படினா, உள்ள தனியா போற என்னோட நிலையை யோசிங்க மாப்பிள்ளை சார்.”

“கஷ்டம்தான். இருந்தாலும் வாழ்த்துகள்” என்றான்.

அறையுனுள்ளே தன் கோபத்தைக் காட்ட வழியில்லாமல் அங்குமிங்கும் நடந்த கொண்டிருந்தவள், அவன் வருகையுணர்ந்து அதே கோபத்துடன் திரும்பி, “கீர்த்தியைக் கேட்டு வந்து என்னை எப்படி? உங்களுக்கு நல்லவர்னு முத்திரை குத்தி கீர்த்திக்குப் பொருத்தமா இருக்கீங்கன்னு கொஞ்ச நேரம் முன்னதான் நினைச்சேன். ஆனா நீங்க... எனக்கு உங்களைப் பிடிக்கல. பேசாம அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிருங்க. இல்ல...”

அவன் எதுவும் பேசாமல் தன்னையே பார்த்திருப்பது புரிய, “அதெப்படி சார், முன்னாடியே அவளைப் பார்த்துப் பிடிச்சி அதே விருப்பத்தோட இப்பவும் வந்தவருக்கு ஜாதகம் சேரலன்னதும் உடனே பொண்ணு மாத்திக்க எப்படி முடியுது? உங்களுக்கே இது அசிங்கமா தெரியல.”

“பேசிட்டியாமா? நான் பேசலாமா?”

“ஓ.. பேசுங்களேன் நான் போனதும் தனியா.”

“நீ கிடைக்கலன்னா வேணும்னா தனியா பேசிக்கிறேன் வித்யா. ஐ மீன் மனசளவுல உன்னோட மட்டும்” என அழுத்தமாகச் சொல்லி, “நான் பார்த்தது ஆசைப்பட்டது எல்லாம் உன்னைத்தான்னு சொன்னா நம்புவியா?”

அவள் முகம் இதென்ன புதுக்கதை என்பதாய் திரும்ப...

“அதான் நிஜம். வித்யா கீர்த்தியானதால வந்த குழப்பம். வேணும்னா உங்க வீட்ல உள்ளவங்ககிட்ட கேட்டுக்கோ.”

“இங்க பாருங்க எது எப்படியானாலும் இது இல்லன்னா அதுன்றது தப்பு. அதுவும் ஒரே வீட்ல.. ரொம்பவே தப்பு.”

“நானும் அப்படிப்பட்டவனில்லை வித்யா. ஒரு காலத்துல இது இல்லன்னா அதுன்னு சுயநலமா யோசிச்சிருக்கேன். இப்ப வாழ்க்கை எனக்கு நிறையக் கத்துக் கொடுத்திருக்கு.”

“அதை இன்னும் நீங்க முழுசா கத்துக்கலை. சரி நான் கிளம்புறேன். அங்க வந்து கல்யாணம் வேண்டாம் சொல்லிருங்க.”

“வேண்டாம் சொன்னா நீ கிடைக்கமாட்டியே?” என்றான் ஏக்கமாக.

“வேணும்னு கேட்டாலும் கிடைக்கமாட்டேன். ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன். உங்களை வேண்டாம்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். நீங்க போகலாம்” என்று சினிமா வசனம் பேசினாள்.

“ஹா..ஹா.. ஐ லவ் யூ மிஸஸ்.வித்யானந்த் அவர்களே! நானும் ஒரு தடவை முடிவெடுத்தா எடுத்ததுதான். சிக்கிரமே என் மனைவியா வந்தா இன்னுமே ஹேப்பி.”

அவனின் ஐ லவ் யூவிலேயே அரண்டவள், அவனின் மிஸஸில் தன்னிடமிருந்து மிஸ்ஸாகப் போகும் மிஸ்ஸை மிஸ்ஸாக்க விடாமல் என்ன செய்யலாமென்ற யோசனையிலிறங்கினாள்.

“தேங்க்ஸ் என்னோட தனியா வந்ததுக்கு. சந்தர்ப்பமிருந்தா கல்யாணத்துக்கு முன்னால, இல்லனா கல்யாணத்துல சந்திப்போம். பை” என்று செல்ல... கீர்த்தி உள்ளே வந்தாள்.

“ஹேய் வித்தி ஆள் எப்படி?” என அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

“உனக்கு வருத்தமாவே இல்லையாடி? எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு.”

“எதுக்கு வருத்தப்படணும்? அம்மா ஜாதகம் சேரலன்னதுமே சந்தோஷமாகிருச்சி. ஐயோ பெரியவளை விட்டுட்டு என்னை தள்ளிவிடப் பார்க்கிறாங்களேன்ற எரிச்சல்லயிருந்து விடுதலை. இப்ப ரொம்ப ரிலாக்ஸாயிருக்கேன்.”

“இருந்தாலும் உன்னைப் பார்க்க வந்து என்னை... ப்ச்.. பிடிக்கல கீர்த்தி. என்ன மனுஷங்க இவங்க” என்றாள் கோபம் குறையாமல்.

“வித்தி ப்ளீஸ் வார்த்தையை விடாத. அவர் பார்த்து பிடிச்சி பெண் கேட்டு வந்தது என்னையில்ல உன்னைத்தான்.”

“என்ன நீ அந்...” அந்தாள் என சொல்ல வந்தவள் நாக்கைக் கடித்து, “அவரை மாதிரியே உளர்ற?” என்றாள்.

“நிஜம் வித்தி. இப்பதான் அம்மாகிட்ட விசாரிச்சிட்டு வர்றேன். உன்னைப் பார்த்தவர் கீர்த்தின்ற பெயர் உன்னோடதுன்னுதான் நினைச்சிட்டிருந்திருக்கார். அதாவது உன் பெயர் கீர்த்தின்னு. கீர்த்தி ஜாதகத்தோட செட்டாகலைன்னு தெரிஞ்சதும், வித்யாவைப் பார்க்குறீங்களா கேட்டதும், வித்யான்னா நான்னு நினைச்சி முடியாதுன்னு கிளம்பிட்டாங்களாம்.”

“என்ன சொல்ற கீர்த்தி? என்னை ரொம்ப குழப்புற.”

“அப்படிக் கேளு. அதாவது ஜாதகம் பார்க்கிற இடத்திலேயே உங்க ரெண்டு பேர் பெயரும் சேர்ந்திருச்சி. சார் உன்னைக் கீர்த்தின்னு நினைச்சதால ஜாதகம் செட்டாகலன்னதும், ஒரே வீட்டுல ஒரு பெண்ணைப் பார்க்க வந்து இன்னொரு பெண்ணை முடிக்கிறது தப்புன்னு கிளம்பிட்டாராம்.”

“சரி அதான் கிளம்பிட்டாங்கள்ல. அப்புறம் எப்படி நான் வந்தேன்?” என்றாள் எரிச்சலாக.

“ஹா..ஹா அதுவா. சித்துவுக்காக நீ காத்திருந்தியே, அப்ப வித்யான்னு கூப்பிட்டேன்ல அப்பதான் சார்கு பெயர் மாறினதே தெரிஞ்சிருக்கு.”

“ஓ...”

“ம்... அதுக்கப்புறமும் உன்னைப் பொண்ணு கேட்கிறதுக்கு ரொம்ப யோசிச்சிருக்கார். உன் மாமியார்தான் உன் அண்ணன் மாமியாரிடம் பேசி முடிச்சிட்டாங்க” என்றாள் சிரிப்புடன்.

“என் மாமியாரா?”

“ஆமாம். மிஸஸ்.வித்யானந்த் அவர்களே!” என கிண்டலடிக்க...

“நாங்க பேசினதை ஒழிஞ்சிருந்து கேட்டியா?”

“இல்லையே ஏன்?”

“அவனும் இப்படிதான் மிஸஸ்னு உளறிட்டிருந்தான்” என்றாள் கடுப்புடன்.

“ஹா..ஹா அப்படிப் போடு. அண்ணா செம ஸ்பீடுதான் போ. நீ என்ன முறைச்சாலும் அதான் உண்மை. சரி நீ எதுக்கு இந்த ரூம்கு வந்த? பேச வந்தவ இன்னொரு ரூம்கு போயிருக்கலாம்ல? இந்த ரூம் பெண்பார்க்க ராசியில்ல. போன ஜோடி இங்க சண்டை போட்டதை நாம கேட்டோம்தான?” என்றாள் கிண்டலாக.

“உன்னையெல்லாம் பொண்ணுன்னு பெத்தாங்க பாரு எங்க அத்தை அவங்களைச் சொல்லணும்” என்று அவளை அடிக்க விரட்ட... அவர்களின் சண்டையை வெளியிலிருந்து கேட்டவர்களுக்கு புன்னகை வந்தது.

வாணி சற்று சங்கோஜத்துடன், “இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா இப்படித்தான் அண்ணி. எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சி, சின்னப்பிள்ளைங்க மாதிரி விளையாடுறாங்க” என்றார்.

“விடுங்க அண்ணி. பிள்ளைங்க அப்படியே இருக்கிறதுதான் நல்லது. அது இதுன்னு கட்டுப்பாடு போட்டு அவங்களை அடக்கி அவங்க சந்தோஷத்தை ஏன் கெடுக்கணும்.”

“கீர்த்தி, வித்யா ரெண்டு பேரும் கார்த்திகிட்ட போங்க” என்ற சுபாஷிணியின் குரலில்... “வா கீர்த்தி ஓடிடலாம்” என்று அவள் கைபிடித்தாள்.

“அம்மா இந்த வித்தி என்னைக் கூட்டிட்டு ஓடப்போறாளாம்” என்று கத்த... “ஏய் லூசு கொஞ்சமாவது அடங்குறியா” என்று அவளை விரட்டியபடி கார்த்திகாவைத் தேடிச் சென்றார்கள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
வேறொரு விசேஷத்திற்குச் சென்று வர தாமதமாகிவிட்டதாக வந்த ஐயரை சுபாஷ் அழைத்து வர... அப்பொழுதே நாள் பார்த்துக் குறித்துவிட எண்ணி ஜாதகத்தை எடுத்து வந்து கொடுக்க... “வைகாசி கடைசியாகிருச்சி. ஆனி ஆடி சரிவராது. ஆவணி முதல் வாரத்துலயே ரெண்டு முகூர்த்தம் இருக்கே. எது சவுகரியப்படுமோ பாருங்க” என்றவர் “இரண்டாம் தேதியும் மூன்றாம் தேதியும் சொல்லி, மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை வருது அப்பவே வச்சிக்கோங்களேன்” என்றார்.

“அது கார்த்திக்கு நிறைமாசமாச்சே எப்படி ஐயரே?”

“அதுக்குள்ள நல்ல செய்தி வரலாம் யார் கண்டா” என்றார் பூடகமாக.

“சரிங்க ஐயரே அப்பவே வச்சிடலாம். உங்களுக்குச் சம்மதம்தானே?” என்று வரலட்சுமியிடம் கேட்க...

“எங்களுக்கு முழு சம்மதம். மாப்பிள்ளை வீடு பார்க்க எப்ப வர்றீங்க? பத்திரிக்கை அடிக்கிறதுக்கு முன்னாடி பையனைப் பற்றி எல்லாத்தையும் விசாரிச்சிக்கோங்க. அவனோட கம்பெனி விசிட்டிங் கார்ட்” என்று அவனிடம் வாங்கி சுதாகரிடம் கொடுத்து, “நாம கிளம்பலாமா ஆனந்த்?” என்றார்.

“சரிம்மா” என்று எழ...

“என்ன விசேஷ வீட்டுக்கு வந்து சாப்பிடாம போறீங்க?” என்றதும் வரலட்சுமி தயங்க... “அண்ணி யாரும் எதுவும் நினைச்சிக்க மாட்டாங்க. இப்ப ஒரு சிலரைத் தவிர ஆட்கள்லாம் கிளம்பிட்டாங்க” என்றார் வாணி.

“நான் வெளியிடங்கள்ல சாப்பிடமாட்டேன் சுதாகர். தப்பா எடுத்துக்காதீங்க” என்று ஐயர் கிளம்பினார்.

“அண்ணி நீங்க வந்தவங்களைக் கவனிங்க. நான் இவங்களை சாப்பிட கூட்டிட்டுப் போறேன்” என்று தயங்கி நின்றவர்களை அண்ணன் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்ற சுபாஷிணி பந்தியில் உட்காரவைத்து, “வித்தி, கீர்த்தி நாலு இலையோடு சாப்பாடு எடுத்துட்டு வாங்க” என்றதில், ‘யார்டா அந்த விஐபிஸ்’ என்று பார்த்த வித்யா ஆனந்த் வீட்டினரைக் கண்டதும், “இவங்களா! ஐயோ நான் இல்ல. கீர்த்தி நீ போ” என்றாள் மெல்லிய அலறலாக.

“ஹா.. அப்புறம். அவங்க உனக்காகத்தான் என்னை வரச்சொல்றாங்க. இந்தா இலையைப் பிடி. நான் தண்ணீர் எடுத்துட்டு வர்றேன்” என்றவள், “ஹேய் வித்தி வேணும்னா இன்னொரு இலை எடுத்துத் தரவா?” என்று ஹஸ்கியாக அவள் காதைக் கடிக்க...

“ஏன் நீயும் உட்காரப் போறியா?” என்றாள் கேலியாக.

“சேச்சே.. நீ உன் உட்பி கூட உட்கார். நான் பரிமாறுறேன்” என்று கண்ணடித்தாள்.

“அடிக்கிற அந்தக் கண்ணை நோண்டி எடுத்துருவேன். ஒழுங்கா வாடி” என்று முன்னே சென்றாள்.

பெரியவர்களுக்கு இலையை வைத்து, அவனுக்கு வைக்காமல் போய்விடலாமா என்று யோசிக்கையிலேயே, “நீங்க நினைக்கிறதெல்லாம் நடக்காது மிஸஸ்.வித்யானந்த்” என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

“மிஸஸ்.வித்யானந்த்னு சொல்லாதீங்க. நான் என்ன நினைச்சேன்னு உங்களுக்கெப்படித் தெரியும்? தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது” என்றாள் கடுப்பாக.

“தெரிஞ்சதாலதான்மா பேசினேன்.” பதிலுக்கு சிரித்தபடி அவனும் கடுப்படித்தான்.

“வித்யா இலையைப் போடாம என்ன நின்னுட்டிருக்க? கீர்த்தி தண்ணீர் வை. நீ இலை போட்டதும் ஸ்வீட் வை. நான் கீழ போயிட்டு வந்திடுறேன். விளையாடாம பரிமாறணும்.” மகளுக்கும் மருமகளுக்கும் ஆர்டர் போட்டு, வரலட்சுமியிடம் திரும்பி “அக்கா தப்பா எடுத்துக்காதீங்க. எங்க பெரியப்பா ஊருக்குக் கிளம்புறாராம். கொஞ்சம் சிக்கல் பிடிச்ச மனுஷன். நாங்க இல்லன்னா கோவிச்சிப்பார். இதோ வந்திருறேன்” என்று கீழே சென்றார்.

இலை வைத்து சாப்பாடு பரிமாறி முடித்து, அங்கேயே சற்று தள்ளி கையில் தண்ணீர் டம்ளருடன் ஒவ்வொரு மடக்காகக் குடித்தபடி நின்றிருந்தாள் வித்யா.

ஆனந்திற்கு பரிமாறிய கீர்த்தி, “அண்ணா நீங்க சாப்பிட என்னால ஹெல்ப் பண்ணமுடியாது. ஆல்ரெடி என் வயித்துக்குள்ள ஐந்தாறு டம்ளர் பாயசம் போயிருச்சி. ஆனா, நீங்களே வேண்டாம் வேண்டாம்னு மறுத்தாலும் பரிமாற நான் ஹெல்ப் பண்றேன். சாப்பிட மட்டும் எங்க வித்தி ஹெல்ப் பண்ணுவா” என்று மாமன் மகளை மாட்டிவிட்டாள்.

அப்பொழுதுதான் வாய்க்குள் தண்ணீர் ஊற்றியவளுக்கு சட்டென்று புரையேற, தொடர்ந்து இருமல் வந்தது. சாப்பிடுவதை நிறுத்தி வேகமாக அவளிடம் வந்தவன் கீர்த்தியிடம் தலையைத் தட்டிக்கொடுத்து முதுகில் கொஞ்சம் தட்டிவிடச் சொன்னான்.

கீர்த்தியும் செய்ய, அதற்குள் வரலட்சுமியும் அனுவும் சாரகேஷும் வர, “பார்த்து தண்ணி குடிச்சிருக்கக்கூடாதாம்மா” என்றபடி வரலட்சுமி அவளின் தலையை வருட, சில நிமிடங்களில் இருமல் குறைந்து முகம் சிவந்து கண்கள் கலங்கியிருந்தது.

அவள் முகம் கழுவியதும், “வித்யா இப்ப ஓகேவா” என்று பரிதவிப்புடன் கேட்டவனிடம்... “ம்... ஓ..கே. நீ..ங்க சாப்..பிடுங்க” என்றாள் சற்றுத் திணறலுடன்.

“ப்ச்.. சாப்பாடு இருக்கட்டும். ரொம்ப நேரம் இருமவும் கொஞ்சம் பயந்துட்டேன். நிஜமாவே இப்ப ஓகேதான?” என்றான் கவலையாக.

இருமியதால் வந்த தொண்டைக் கரகரப்பையும் மீறி, “நிஜமாவே சரியாகிருச்சி சாப்பிடுங்க. இல்லன்னா சரியா கவனிக்கலன்னு அப்பா திட்டுவாங்க. நீங்களும் உட்காருங்க” என்று மற்றவர்களையும் உட்காரச் சொன்னாள்.

“இருக்கட்டும்மா. சாப்பிட்டாச்சி. நீ வந்து உட்கார்” என்று சேர் போட்டு அமரவைத்து புடவையில் அவளின் முகம் துடைத்து, “கொஞ்சம் வெந்நீர் எடுத்துட்டு வாமா” என்று கீர்த்தியை அனுப்பி, “நீ ஏன்டா நிற்கிற? சாப்பிடு போ” என்றார்.

“இல்லமா பசியில்ல. எங்க கையைக் கழுவணும்?” என்று தேட...

“அதோ அங்க” என்று ஒரு மூலையைக் காண்பிக்க, வேகமாக சென்று கைகழுவி வந்தான்.

“வித்யா யார் இவங்க?” என்று உறவுக்காரப் பெண்ணொருவர் கேட்க...

“சுபாஷ் அண்ணா ஃப்ரெண்டும் அவங்க பேமிலியும்” என்ற பதில் வேகமாக வந்தது.

அதற்குள் கீர்த்தியும் வர, அந்தத் தண்ணீரின் சூடு பதம் பார்த்து, “இப்ப குடிமா” என்று கொடுக்க... எதுவும் சொல்லாமல் அதை வாங்கிக் குடித்தபடி அவரைக்காண, அவரின் பொட்டில்லா நெற்றி அவரின் நிலை சொல்ல, பரிதாபத்துடனும் சற்று அன்பும் கலந்திருந்ததோ அவள் பார்வைதனில்.

“அம்மா டைமாகுது. உங்களை சென்னையில் விட்டுட்டு நைட்டே நான் பெங்களுர் போகணும். நாளைக்குக் கம்பெனி எம்.டி வர்றார். நான் கண்டிப்பா அங்க இருக்கணும்மா.”

“சரிப்பா வா சொல்லிட்டுக் கிளம்பலாம்” என்றவர், “நாங்க வர்றோம்மா. உடம்பைப் பார்த்துக்கோ.” மகளிடம் திரும்பி “பார்த்து இறங்குமா” என்று மகளின் கைபிடித்தபடி கீழே சென்றார்.

“நானும் கிளம்புறேன் மிஸஸ்.வித்யானந்த். உடம்பைப் பார்த்துக்க. வர்றேன்மா தங்கச்சி.” பர்சிலிருந்து கார்ட் ஒன்றை எடுத்துக் கொடுத்து, “இதுல என் போன் நம்பர் இருக்கு. எப்ப வேணும்னாலும் பேசலாம்” என்று கீர்த்தியிடம் கொடுத்து வித்யாவைப் பார்த்துச் சொல்லி, கீழே வந்த ஆனந்த்திடம் கார்த்திகாவை அறிமுகப்படுத்த, சின்ன நல விசாரிப்புடன் கிளம்பினார்கள்.

“என்னம்மா வேலை டைம்ல கூப்பிட்டிருக்கீங்க? கார்த்தி எங்க?” என்றான்.

“சுபாஷ் கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வாடா. எனக்கு பயமாயிருக்கு.”

தாயின் குரலிலுள்ள பதற்றத்துடனான பயத்தை உணர்ந்தவன், “என்னம்மா எதாவது பிரச்சனையா? எதாவது சொன்னால்தானமா தெரியும். அவ்வளவு அவசரம் ஏன்?”

“ஐயோ பேசிட்டிருக்காதடா. உடனே போய் லீவ் சொல்லிட்டு கால் டேக்ஸி பிடிச்சி வா. இங்க வந்ததும் பேசிக்கலாம்” என்று போனை வைத்தார்.

தாயின் அழுகையை அடக்கிய குரல் தன்னுள் ஏதேதோ செய்ய ‘என்னவாயிருக்கும்’ என்ற குழப்பத்துடன் கால் டேக்ஸிக்கு புக் செய்து, லீவ் சொல்லி வீடு வர, வீட்டில் ஆள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ‘ஒரு வேளை குழந்தை பிறந்திருக்குமோ?’ என்ற சந்தேகம் வர, ‘சே... இருக்காது. எட்டாவது மாசம்தான நடக்குது. இன்னும் மாசமிருக்கே’ என நினைத்தான்.

“என்ன சுபாஷ் இங்க நிற்கிற? ஆஸ்பத்திரி போகலையா?” பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்க...

“ஆஸ்பத்திரிக்கா? ஏன்கா?” என்றவனுக்குள் பயம் எழுந்து பாடாய்படுத்தியது.

“கார்த்தி...” என ஆரம்பிக்கும் போதே அவனது போனடிக்க, “எடுப்பா அப்பாவாதான் இருக்கும்” என்றதுபோல், அப்பாவேதான் அழைத்திருந்தார்.

“சுபாஷ் நீ ரோஜா ஹாஸ்பிடல் வா. வாசல்ல பைக் இருக்கு பாரு” என்றார்.

“இ..இதோப்பா” என்று பைக்கைப் பார்த்தவன் சாவி அதிலேயே இருக்கவும் நேரம் தாழ்த்தாமல் கிளம்பி ஐந்தே நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து பைக்கை நிறுத்தி வேகமாக உள்ளே நுழைகையில் தங்கையைப் பார்த்து, “என்னாச்சி வித்தி? ஹாஸ்பிடல்ல சேர்க்கிற அளவுக்கு என்ன அவசரம்? டெலிவரிக்கு இன்னும் நாள் இருக்கே?” என்றான் படபடப்பாய்.

“அண்ணிக்கு திடீர்னு பெய்ன் வந்திருச்சி அண்ணா. இந்த டைம் சூட்டு வலின்னுதான் நினைச்சாங்க. நேரம் ஆகியும் வலி குறையல. இங்க வந்தா டெலிவரி பெய்ன்னு சொல்லி அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க. முதல்ல ஆபரேசன்னு சொன்னாங்கண்ணா. எல்லாருமே பயந்துட்டோம். அப்புறம் நார்மலுக்கு முயற்சிக்கிறோம்னு பார்த்திட்டிருக்காங்க. அண்ணி உன்னைத்தான்ணா தேடிட்டிருந்தாங்க” என்றவள் குரல் நடுங்கியது.

பேசியபடியே வார்டிற்கு வர தாயிடம் வந்தவனோ, “எதுவும் பிரச்சனையாகிடாதுல்லமா? நான் உள்ளே போகலாமா?” என்றான் கலக்கத்துடன்.

“இல்லடா. பிரசவம் ஆனதும்தான் விடுவாங்க.”

ஒன்றும் புரியாமல் அங்கேயே அமர்ந்தவனுக்கு, உள்ளே மனைவியின் அலறல் கேட்க, கண்மூடியிருந்தவன் மனம் ஓயாது அரற்றிக் கொண்டிருந்தது. ‘குறைப் பிரசவத்தில் தன் அக்கா இறந்துவிட்டதாக’ சமீபத்தில் அலுவலக நண்பன் ஒருவன் சொல்லி அழுதது நினைவு வந்தது. ‘குறை மாசத்துல பிறந்த குழந்தையைக் காப்பாத்த முடியாமல் போயிருச்சிபா’ என தன் சொந்தக்காரன் ஒருவனின் அழுகை. ‘சொந்தத்தில் முடித்ததால் இப்படியாகிருச்சோ!’ கேட்டது பார்த்தது படித்தது அனைத்தும் நேரம் கெட்ட நேரத்தில் கண்முன் வந்து அலைமோத கண்களில் கண்ணீர் கசிந்தது.

“சுபாஷ்” என்ற தகப்பனின் ஆறுதலான அரவணைப்பில் கண்களைத் துடைத்து, “ஒண்ணுமில்லப்பா ரெண்டு பேரும் நல்லபடியா வந்திருவாங்க. நீங்கள்லாம் ஏன் இப்படியிருக்கீங்க?” தாயிடம் திரும்பி, “அம்மா அழுது எல்லாரையும் பலவீனப்படுத்துறதை விட, நல்லதே நடக்கட்டும்னு கடவுளை வேண்டிக்கோங்க. உங்களால சின்னப் பிள்ளைங்க ரெண்டு பேரும் அழுறாங்க” என்றான் வித்யா கீர்த்தியைக் காண்பித்து.

“அத்தை நீங்க கூட ஏன் இப்படியிருக்கீங்க? இப்பவும் சொல்றேன் நாங்க எப்பவும் சந்தோஷமா வாழ்வோம். என்னவாம் காதல் மன்னன் அழுகாச்சி மன்னனா இருக்கிறார்?” என்றவன், “மாமா இப்படி வாய்க்குள்ள அழக்கூடாது. கமல் அழுகை போல் செய்துகாட்டி இப்படிதான் நீங்க அழணும்” என மற்றவர்களுக்குள் மெல்லிய புன்னகை.

தனக்குள்ளிருக்கும் எதிர்மறையான எண்ணங்களை அழித்து, நேர்மறையான எண்ணங்களாக மாற்றி, சுற்றியிருந்தவர்களிடமும் அதை கொடுத்துக் கொண்டிருந்தான் சுபாஷ்.
 
Top