• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
13


வீட்டில் அழைப்பு மணியை அழுத்த நாற்பத்தெட்டு மதிக்கத்தக்க நடுத்தர வயது மனிதர் கதவு திறந்து, “யார் நீங்க? யாரைப் பார்க்கணும்?” என்றார்.

“நான் ராசி. இந்த வீட்டு ஓனர் மீனலோஜினியோட பேத்தி. இப்ப தெரியுதா யாரைப் பார்க்கணும்னு? இப்ப உள்ள வரலாம்ல?” என்று நிமிர்வாகவே கேட்டாள்.

இவளின் வரவை எதிர்பார்த்திராத அந்த மனிதர் வேறு வழ்யில்லாது, “வாங்க” என்று வரவேற்று, அதன் பின்னரே தன் தவறை உணர்ந்தார். அவரே அவள் வீடு என்பதுபோல் வரவேற்று விட்டாரே என்றுதான்.

உள்ளே நுழைந்தவளுக்கு பழைய நினைவுகள் போட்டி போட கண்கலங்கியது. அதை அவள் உணர்ந்தாளோ இல்லையோ, அவளின் நிமிர்வான பேச்சைக் கேட்டு அவளையே பார்த்திருந்த சரத் உணர்ந்தான். ஆறுதல் சொல்ல எழுந்த கை இடமறிந்து மடங்கியது.

உள்ளிருந்து வந்த அவரின் மனைவியும் இதை எதிர்பார்க்கவில்லை. வாரிசு இல்லா சொத்துதானே. பத்து வருடமாகக் குடியிருந்த தாங்களே உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. பேத்தி என்று ஒருத்தி வரவும் முதலில் விழித்தவர்கள், அதன்பின் சுதாரித்து, “எதுக்காக வந்தீங்க?” என்றாள் குடித்தனப்பெண்.

“எதுக்காகன்னு உங்களுக்குத் தெரியாது?” என்று பதில் கேள்வி கேட்டாள் ராசி.

“தெரியாது” என பட்டென்று சொன்னதும் கோபம் வர அதை அடக்கி, “சரி வீட்டை எப்ப காலி பண்றீங்க? வீட்ல கொஞ்சம் வேலையிருக்கு. சீக்கிரம் காலி பண்ணினா நல்லது” என்றாள் பொறுமையாக.

“அதை உங்க வீட்ல பண்ண வேண்டியதுதான. இங்க வந்து ஏன் சொல்ற?”

“என்னது! உங்க வீடா?” என்று கோபத்தில் சத்தமிட்டவளை... எங்கே அடித்து விடுவாளோ என்று பயந்து கைபிடித்து நிறுத்தி, “ராசி கூல்” என்று அவர்களிடம் திரும்பி, “அப்ப நீங்க வீட்டை காலி பண்ண மாட்டீங்க. அப்படித்தான?” என்றான்.

“எங்க வீட்டைக் காலிபண்ணச் சொல்ல நீ யாருடா?” என்று சரத்தைப் பார்த்துக் கேட்க,

“என்னது! டாவா!” என்றபடி ஆத்திரத்தில் அவர்களை என்ன செய்திருப்பாளோ தெரியாது... சரத்தின் “ராசி ப்ளீஸ். நான் பேசிட்டிருக்கேன்ல. நான் பார்த்துக்கறேன்” என்றான்.

“அதுக்காக ‘டா’ சொல்வாங்களா? நீங்களும் கேட்டுட்டு அமைதியாயிருக்கீங்க.”

“ராசி கொஞ்சம் பொறுமையாயிரு” என அவளை அமைதிப்படுத்தி, “என்ன சார்? நான் யார்னு தெரியணும் அவ்வளவு தான. இந்த வீட்டுப் பையன் நான்” என... ராசி அவனை விழிவிரித்துப் பார்க்க.. அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

சரத் அப்படிச் சொல்ல வேண்டுமென்று சற்று முன்கூட எண்ணியதில்லை. ஆனால், அவனுக்கு ஏதோ ஒரு பந்தம் அங்கு இழுத்துப் பிடித்தது போலிருந்தது. ஏதோ தனக்கும் இந்த வீட்டிற்கும் ஒரு சொந்தம் போல்.

“இந்த வீட்டு பையனா? எங்கிருந்து திடீர்னு முளைச்சான்?’ குடித்தனப்பெண் கேலியாக கேட்க...

“லோஜிம்மாவுக்கு பையனோ, பொண்ணோ இல்லாமலா பேத்தி வருவா. ராசி என் அம்மாவோட பேத்தி. அப்ப நான் உரிமைக்காரன் தான” என்றவன் தொடர்ந்து, “அப்புறம் நியாயத்தைத் தட்டிக்கேட்க உரிமை தேவையில்லை மனசு இருந்தாலே போதும். உங்க வீடுன்றீங்கள்ல பத்திரத்தைக் காட்டுங்க பார்க்கலாம்” என்றான் சற்றே அதிகார தோரணையில்.

“அதுக்கென்ன நீ போய் எடுத்துட்டு வா சரளா” என்று மனைவியை அனுப்ப...

“பத்திரம் பத்திரமாய் என்னிடம் இருக்கும் போது.. இதெப்படி?” என்று புரியாமல் பார்த்தவளை... “நான் பார்த்துக்கறேன்” என்று கண்களால் சமாதானப்படுத்த, பத்திரத்தைக் கொண்டு வந்த சரளா சரத்திடம் கொடுத்து படிக்கச் சொல்ல, இரண்டு பத்திரங்களும் அந்த வீட்டை உரிமை கொண்டாடின.

சட்டென்று போனை எடுத்தவன், “டேய்! நீ மதுரையில தாலுகா ஆஃபீஸ்ல எந்த போஸ்டிங்ல இருக்க?”

“லூசாடா நீ. அதுக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்?” என்று பதில் கேள்வி மணி கேட்டான்.

“தாசில்தாரா இருக்கியா. ரொம்ப நல்லதா போச்சி. நீ தாசில்தார்னா பத்திரம் ரீசன்டா பதிஞ்சது, பழையதுன்னு அடையாளம் தெரியும்தான?”

“என்னடா விளையாடுறியா? சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்குறியே. யார்கிட்டயாவது என்னை ஓட்டுறதுக்கு பெட் கட்டுனியா?”

“ஆமாடா. இங்க ஒரு பிரச்சனை எங்க வீட்ல இருந்துட்டு போலி பத்திரம் வேற வச்சிட்டு காலி பண்ணமாட்டேன்றாங்க.”

“போடா லூசு. எங்க வரணும்னு சொல்லு வந்து தொலைக்கிறேன். இல்ல வந்து நடிக்கிறேன்.”

“ஓ நீ வர்றியா. போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கலாம்ன்றியா. ஓகேடா தேங்க்ஸ்” என்று வீட்டு அட்ரஸைச் சொல்லி வைத்தவன் அவர்களிடம் திரும்பி, “நான் பேசினது கேட்டதுல்ல. வருவான் வந்ததும் அவன்கிட்டேயே பேசுங்க. என்ன ராசி ஏன் அப்படி நின்னிட்டிருக்க? இது உன்னோட வீடு. அந்த உரிமையோட உட்காரு” என்றதும்... அங்கிருந்த தங்களின் பழைய உணவு மேஜை மேல் ஏறியவள், “நீங்களும் வாங்க சரத்” என்று அவனையும் அமரவைத்தாள்.

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா மிஸ்டர் அன்ட் மிஸஸ்? சரத் ஒரு டிடெக்டிவ் ஆபீஸர். நீங்க என்ன கோல்மால் பண்ணினாலும் ஒரே நாள்ல வெளிய தெரிஞ்சிரும்” என்றதும் அவர்களின் முகம் பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது. “இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப்போகல உண்மையை ஒத்துக்கிட்டா இரண்டு நாளாவது வீட்டைக்காலி செய்ய டைம் குடுப்போம். இல்லையா வீட்டைப் பூட்டிட்டுப் போய்ட்டேயிருப்போம்.”

ஏற்கனவே தாசில்தார் போலீஸ் என்று மிரண்டிருந்தவர்கள் டிடெக்டிவ் என்றவுடன் பயந்து, “ஐயோ வேண்டாம்மா. நாங்க பண்ணினது தப்புதான் வாரிசு இல்லன்ற எண்ணத்துல தப்பு பண்ணிட்டோம்” என அலற ஆரம்பிக்க...

மேஜையிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்தவள், “வாரிசு இல்லன்னா என்ன வேணா பண்ணுவீங்களா? வீடுன்னு இருந்தா அதுக்கு சொந்தக்காரங்க இல்லாம இருப்பாங்களான்ற அடிப்படை அறிவு வேண்டாம். வாரிசு இல்லன்னா அவங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு கொடுக்ககூடாதுன்னு எதுவும் இல்லையே. உங்களை மாதிரி ஒரு சிலர் இருக்கிறதாலதான் வீட்டு ஓனருங்க அவ்வளவு கண்டிஷன் போடுறாங்க போல. வீட்டு ஓனர் தொல்லையில்லாம இருக்கிறதே இப்போதைக்கு பெரிய குடுப்பினை தெரியுங்களா! அதை அனுபவிக்காம வீட்டையே அனுபவிக்க கணக்கு போடுவீங்களா? அங்கங்க ஹவுஸ் ஓனர் தொல்லையால எத்தனை குடும்பங்கள் சிக்கி சீரழியுது தெரியுமா உங்களுக்கு? தெரியும். தெரியாம எப்படியிருக்கும். தெரிஞ்சே தப்பு பண்றவங்களுக்கு அது பெரிய விஷயமாகவே தெரியாது பாருங்க” என்று தன் ஆத்திரம் தீர திட்டி, “இந்த பத்திரம் மட்டும்தானா. வேறெதுவும் இருக்கா?” என்றாள் சத்தமாக.

“இது மட்டும்தான்மா ஜெராக்ஸ் கூட கிடையாது. எங்களுக்கு ஒரு மாசம் டைம் கொடுமா வீட்டைக் காலி செய்ய” என்றார் அந்த மனிதர்.

“ப்ச்..ப்ச் அதெல்லாம் முடியாது. ஒரு வாரம்தான். அதுவே நீங்க பண்ணின காரியத்திற்கு ஜாஸ்தி.”

அதேநேரம் மணி வர, “பிரச்சனை முடிஞ்சதும் எண்ட்ரியாகுறியேடா நண்பா” என்றான் கிண்டலாக.

“வேற வழி. புலி இருக்கிற இடத்துல பூனைக்கு என்னடா வேலை வச்சிருக்கப்போற” என்றவன் “கல்யாணத்துக்கு வர முடியலடா கோவிச்சுக்காத. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுதான” என்றவன் கண்ஜாடையால் சரத்தை தனியே பேச அழைத்தான்.

“பெர்பெக்டா முடிஞ்சது. நீ வரலன்னா என்ன ஒரு விஐபி கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க” என்று ராசியைப் பார்க்க... அவனறியாமல் அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். அவனின் பார்வை தன்புறம் திரும்பவும் வந்த வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்து வேறுபுறம் திரும்பி வெளியில் சென்றாள்.

வீட்டிலிருந்து வெளியே வந்தவளை, “பாப்பா நீ ஹரிப்ரியா தான?” என்ற கேள்வியில், ராசியும், சரத்தும் ஒருங்கே திரும்பினர்.

‘ராசி பெயர் ஹரிப்ரியாவா!’ ஆச்சர்யத்தில் பார்த்தவன் வினாடிகளில் தனக்கு வந்த சந்தேகத்தை நண்பனிடம் தெளிவுபடுத்திக் கொள்ள அவனுடன் தனியே சென்றான்.

“மஞ்சு சித்தி நல்லாயிருக்கீங்களா? சித்தப்பா தம்பி எப்படியிருக்காங்க?”

“எல்லாரும் நல்லாயிருக்கோம். பத்து வருஷம் கழிச்சி இப்பத்தான்டா உன்னைப் பார்க்கிறேன். அழகுடா பாப்பா நீ. எங்க அத்தா...” என பேச ஆரம்பித்தவளை...

“ஸ்... சித்தி அவங்க எனக்கு மாமா. மாமா மட்டும்தான். அப்பா ஸ்தானம். வேற எதாவது உறவுமுறை சொல்லி அசிங்கப்படுத்திராதீங்க” என்றாள் வேகமாக. அதை சரத் கேட்டுவிட்டானோ என்று அவனையும் ஒரு பார்வை பார்த்தவளுக்கு இல்லையென்றவுடன் மனதில் நிம்மதி எழுந்தது.

“அச்சோ! நானே அப்படிச் சொல்வேனாடா. அத்தான் இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.”

“சாரி சித்தி நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. ராசி எப்பவாவது இப்படித்தான் சொதப்புவா.”

“யாருமா அது ராசி?”

“சித்தீ நான்தான் அது” என சிரித்தபடி முறைக்க...

“ஹான்.. இப்பத்தான் ராசி பாப்பா அழகாயிருக்கா. சரிமா அத்தையை எங்க காணோம்?”

“அம்மாஆச்சிக்கு உடம்பு சரியில்ல சித்தி. அதான் நான் மட்டும் வந்தேன்.”

“ஓ... சரிமா. நான் போன் பண்ணி கேட்டுக்கறேன். இப்ப நாம போய் பேசிட்டு வரலாம் வா. நான் மட்டும் போனாதான ஏடாகூடம் பேசுறாங்க. நீ வந்தா வாயைத் திறக்க மாட்டாங்கள்ல.”

“ஃப்ரண்ட் வந்திருந்தாங்க சித்தி. அவங்களோட சேர்ந்து வீட்டுப் பிரச்சனையை சால்வ் பண்ணியாச்சி. இன்னும் ஒரு வாரத்துல காலி பண்ணிருவாங்க. சாவி வாங்கிட்டு போன் பண்ணுங்க. ப்ரண்ட் ஒருத்தவங்களோட வந்தேன். டைம் ஆகிருச்சி கிளம்பட்டுமா?” என்றாள்.

“அடி பிச்சிருவேன் பிச்சி. இத்தனை வருஷம் கழிச்சி வந்திருக்க. வீட்டுக்குள்ள வராம போயிரலாம்னு நினைப்பு வேறயா. ஒழுங்கா உள்ள வா.”

“சித்தி! சிங்கம் சிங்கிளா வரல டபுளா வந்திருக்கு. இப்ப ஒரு பூனை சேர்ந்ததால ட்ரிபிள் ஆகிருச்சி” என்றாள் சுடிதாரில் காலர் தூக்குவதுபோல் செய்து.

“என்னமா சொல்ற?” எனும்போதே... மணி அருகில் வந்து “ஹாய் சிஸ்டர்! நான் கிளம்பறேன். ஊருக்குப் போயிட்டு நைட் கிளம்பி வர்றேன்” என்றான்.

“பாப்பா இதுல சிங்கம் யாரு? பூனை யாரு?” என்ற தனது அரிய சந்தேகத்தை மஞ்சு கேட்க...

“அச்சோ! சித்தி” எனும்போதே...

“நல்ல ப்ரண்டுடா உனக்கு” என்று தான்தான் பூனை என்பதை மணி நிரூபிக்க... அதைக்கேட்ட மற்றவர்கள் சிரித்தனர்.

“சாரிண்ணா சும்மா ரைமிங்கா லைன்ஸ் விட்டா, டைமிங்ல சித்தி போட்டுக் குடுத்துட்டாங்க” என ராசி சொன்னதும்... பெரிதாகச் சிரித்தவன், “நோ ப்ராப்ளம் சிஸ்டர். லைக் யுவர் க்யூமர்சென்ஸ்” என்று நண்பனிடம் காதில் ஏதோ சொல்லி விடைபெற்று கிளம்பினான்.

என்னவென்று ராசி கண்களால் வினா தொடுக்க...

அந்த வினாவிற்கு விடை தெரியாமல்தான் திணறிக் கொண்டிருந்தான். நண்பன் சொன்னதில் நிறைய குழப்பத்தில் இருந்தவனால் அவளை வேண்டாமென்று ஒதுக்கவும் முடியவில்லை. அவளின் கேள்விக்கு ‘ஒன்றுமில்லை’ என்பதை தோள்குலுக்கி சொன்னான்.

“இரண்டாவதா வந்த சிங்கம் இவர்தானா!” மஞ்சு ஆரம்பிக்க... “ஹையோ சித்தி! வேண்டாம் விட்டுருங்க” என்று வாய் பொத்தி... சரத்திடம் ‘சாரி’ என்று கெஞ்சலாக கண்களால் கேட்க, அதில் முழுவதும் வீழ்ந்தான்.

ராசியின் “சாப்பிட்டுட்டுத் தான் போகணும்னு அடம் பிடிக்கிறாங்க. என்ன பண்ணலாம்?” என்றதில், தன்னிலை அடைந்து... “அவ்வளவு தான. எத்தனையோ வருஷம் கழிச்சி வந்திருக்க. அவங்க ஆசையையும் நிறைவேற்றிட்டுப் போகலாம்.”

நன்றி சொல்லி உள்ளே அழைத்துச் சென்ற மஞ்சு, மற்ற உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களிடம் பேசி கிளம்ப மதியம் பனிரெண்டைத் தாண்டியது.

செல்லும் வழியெல்லாம் சரத் மௌனத்தை மொழியாக்கி வந்தாலும் ராசியின் பேச்சில் மற்றதைத் தூக்கியடித்து, தங்கள் படிப்பு, வேலையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும் போதே, விராலிமலை டோல்கேட் தாண்டிய அந்த இடம் வர கார் தன்னாலேயே நின்றது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
பத்து வருடங்களுக்கு முன், “திருச்சி ஜி.ஹெச் வாங்கம்மா. ஒரு விபத்து” என்று கிரிதரன் தாயிடம் சொல்லிவிட, பதறிய மீனலோஜினி வேகமாக ராசியை எழுப்பி கார் வரவழைத்து, திருச்சி செல்லும் வழியில், காவல்துறையினரால் விபத்தான இடத்தில் ரிப்பன் கட்டி, சாக்பீஸால் வரைந்திருக்க, ஒரு நிமிடம் காரை நிறுத்தச் சொல்லி விசாரித்தார்.

“ஒரு பையனையும், பொண்ணையும் குத்திட்டாங்க. குத்தியவன்ல ஒருத்தன் இங்கேயே செத்துட்டான். இன்னும் ரெண்டுபேர் வண்டியில போகும்போது தீப்பிடிச்சிருச்சி” எனும்போது எதுவும் புரியவில்லையென்றாலும், பயத்தில் லோஜியை ராசி ஒண்ட, அவளை தன்னோடு சேர்த்தணைத்து, “ஒண்ணுமில்லடா மாமாவுக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று தனக்கும் சேர்த்தே ஆறுதல் சொல்லி, விரைவில் காரை எடுக்கச்சொல்லி செல்லும் வழியெல்லாம் அழுத வண்ணமே வந்த லோஜியை நினைத்தாள். அந்த நியாபகம் வந்ததும் கண்கள் கலங்க பார்த்திருந்தவள் மனதினுள் நன்றிகள் ஆயிரம் சொன்னாள் கிரியினிடத்தில், தன்னை நல்ல நிலைமையில் வைத்ததற்கு.

சரத்தும் அன்றைய இரவைத்தான் அசைபோட்டான். தன்மேல் வைத்திருந்த குருட்டுத்தனமான எண்ணம் கனவாக வந்து அக்கா மகளை காவு வாங்கிதை எண்ணினான். ‘என்னைப்பற்றிய எண்ணம் தவறாக அவள் மனதில் பதியாமலிருந்தால், இந்த நிகழ்வுகளைத் தடுத்திருக்கலாமோ!’ என்று தோன்றியவனுக்கு மறந்தும் ‘அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தால் எதுவும் நடந்திருக்காதோ!’ என்று தோன்றவில்லை.

காரிலிருந்தபடியே பார்த்து சில நிமிடங்களில் காரை எடுக்க, அங்கே ஏன் நிறுத்தினான் என்று அவளும் கேட்கவில்லை. ஏன் நிறுத்தினேன் என்று அவனும் சொல்லவில்லை. பேசாத மொழிகள் அங்கே ஊமையாகியது.

பின் மதிய உணவு ஹோட்டலில் முடித்து அவ்வப்பொழுது சிறிது ஓய்வும் எடுத்து சென்னை வர இரவு ஒன்பதானது.

வீட்டின் முன் கார் நிற்க இறங்கியவள் மீனாலோஜினி வாசலிலேயே நின்றிருப்பதைப் பார்த்து, “அம்மாஆச்சி” என ஓடிச்சென்று கட்டியணைத்து முத்தமிட்டாள்.

“எத்தனை நாளாச்சிமா உன்னைப் பார்த்து” என்றவர் குரலும் நெகிழ்ந்தது.

“எவ்வளவு நாள் அம்மாஆச்சி?” என கிண்டலாக கேட்க... அவளிடம் வம்பிழுக்க எண்ணி, “ஒரு பத்து நாள் இருக்கும்லமா” என்றார்.

“ஹையோ! லோஜி நாலு நாள்தான் ஆகுது.”

“கணக்குப்பிள்ளைகிட்ட கணக்கு பேசுறது தப்புன்னு அடிக்கடி மறந்திடுறேன்டா ராசி.”

“என்னது கணக்குப்பிள்ளையா? ஹ்ம்.. போங்க அம்மாஆச்சி” என சிணுங்கி, “உங்க பேத்தி பேங்க்ல கேஷியரா ஒர்க் பண்றேன்” என்றாள்.

“அதைத்தான்மா சொன்னேன். கணக்குப் பார்க்கிற கணக்குப் பிள்ளைன்னு.”

“லோஜி நீ பேட் லேடி. உன் பேச்சி கா!” என்றவளை அணைத்து, “சரி வீட்டுக்குள்ள போயி பேசிக்கலாம்” என்று உள்ளே அழைத்துச் செல்ல, வீட்டினுள் நுழைந்தவளுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்து சரத்தை திரும்பிப் பார்க்க, மேலூர் சென்ற இரவு பார்த்த அதே உயிருள் கலக்கும் பார்வை.

வீடு வந்ததும் அவள் இறங்க, இரவு ஆனதால் உள்ளே அழைக்காவிட்டாலும் ஒரு நன்றியாவது சொல்வாள். இல்லை அறிமுகமாவது செய்து வைப்பாள் என்று எண்ணியிருக்க, காரைவிட்டு இறங்கியதும் ஓடிச்சென்று லோஜியை அணைத்து முத்தமிட்டதும், அவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தைகளையும், அவளின் சிணுங்கல்களையும் சிறுகச் சிறுக ரசித்தவன் பார்வையை விலக்காமலேயிருந்தான்.

சரத்தின் நினைவு வந்து அவனைப் பார்த்தவள், அவனின் பார்வையினுள் நுழைந்து சில வினாடிகளேனும் கலந்து அசந்தவள், சுற்றுப்புறம் நினைவு வர அதை உதறி, “சாரி சரத். உள்ள வாங்க” என்றாள் அவனருகில் சென்று.

“இல்ல ராசி இன்னொரு நாள் வர்றேன். டயர்டாயிருப்ப போய் சாப்பிட்டு தூங்கு. சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு அப்படியே தூங்கிறாத” என்றான் கேலியுடன் கூடிய அக்கறையில்.

“நானா? டயர்டா? என்னங்க நீங்க? கார் ஓட்டிட்டு வந்தது நீங்க. டயர்ட் எனக்கா நல்ல கதையாயிருக்கே. வாங்க ஒரு கப் காஃபியாவது குடிச்சிட்டுக் கிளம்புங்க. இல்ல நைட்டாகிருச்சி சாப்பிட்டே கிளம்பலாம்” என்றாள்.

“வீட்ல யார்லாம் இருக்கீங்க?”

“நானும் அம்மாஆச்சியும் தான். ஏன் கேட்குறீங்க?”

“இல்ல ராசி. லேடீஸ் மட்டும் இருக்கிற வீட்ல நைட்ல ஒரு ஆண் வர்றது சரியில்ல. ஜென்ட்ஸ் யாரும் இல்லன்னு வேற சொல்ற. அப்ப அன்னைக்கு வந்தீங்க கேட்கலாம். அது கேஸ் விஷயமா அதுவும் சேவியர் வீட்டுக்கு.”

“அதெல்லாம்...” என ஆரம்பித்தவளை தடுத்து, “இரு சொல்லி முடிச்சிருறேன். அதெல்லாம் ஏன் பாhக்கணும்னு சொல்ல வர்றது புரியுது. அடுத்தவங்க நம்மளைப்பற்றிப் பேச நாமளே சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது. அடுத்தவங்களைப் பற்றி நமக்கென்ன கவலைன்னு நினைச்சாலும், அவங்களோட தான் நாம இருக்கிறோம். நம்மை நல்லவங்களா காட்டுறதும், கெட்டவங்களா காட்டுறதும் நம்ம கையிலதான் இருக்கு. நான் கிளம்பறேன்” என்று காரை எடுத்தான்.

அவனின் வார்த்தையிலிருந்த உண்மை உரைக்க, சரத்தைப் போலவே ஒரு புதிய கோணத்தில் அவனை ஆராய்ந்தாள் ராசி.

“ஒரு நிமிஷம் இருப்பா” என்று லோஜி வர சரத் காரை நிறுத்த, ராசி பார்வையை நிறுத்தினாள்.

சரத்துடன் வருவதாக சொல்லியிருந்தாலும், ராசியிடம் பேசியதில் யாருடன் வந்தாள் என்பதை விசாரிக்க மறந்து வீட்டினுள் செல்ல, தன் கேள்விகளுக்கு பதிலில்லை என்றதும் வெளியே வந்தவர், சரத்தின் பார்வையையும், ராசியின் அமைதியையும் பார்த்து குழம்பி.. ‘உள்ளே கூப்பிடு ராசி’ என்று சொல்ல வாய் திறக்குமுன் சரத்திடம் ராசி பேச ஆரம்பித்திருந்தாள். அமைதியாக இருவரையும் எடை போட்டவர், ராசியின் அழைப்பிலும், சரத்தின் மறுப்புடன் கூடிய பேச்சிலும் அவன்மேல் மரியாதை உண்டானது. அவனை எங்கோ பார்த்த நினைவு மனதினுள் நுழைய மூளை நினைவு படலத்தை தற்சமயம் நிறுத்தி வைத்தது.

சென்ற வாரம் கூட பேங்கில் புதிதாய் வேலைக்கு சேர்ந்தவன் அடிக்கடி அவளையே பார்த்திருந்தான் என்பதற்காக ப்யூன் மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்த சூடான டீயை எடுத்து அபிஷேகம் செய்து வந்ததாக சொல்லி முகம் கடுத்தவளிடம்...

“பார்த்ததற்காகவா?” என்றதற்கு... “ஆமா. முதல்ல பார்ப்பான். அப்புறம் பல்லைக் காட்டுவான். அப்புறம் பேச ட்ரை பண்ணுவான். அப்புறம் ஐ லவ் யூன்னுவான். அப்புறம்...”

“போதும்மா போதும். எனக்கு மூச்சிவாங்குது. எத்தனை அப்புறம்? அப்ப அன்னைக்கு கோவில்ல ஒரு பையனை புரட்டி எடுத்தியே அது?”

“ஓ அதுவா. அவனை உங்களுக்கு தெரியும் நம்ம ஏரியா பையன்தான். என்னோட சின்னவன் என்னை லவ் பண்றானாம். கேட்கவே கேவலமா இல்ல. போற இடமெல்லாம் வர்றான். தீபம் தொட்டு கும்பிட்டு நிமிர்ந்தா எதிர்ல முழுங்குற மாதிரி பார்த்திட்டிருக்கான். சாமிக்குப் பதிலா அந்த சனியனைப் பார்த்தேனா, அத்தனை நாள் கோபம் அதான் முதல்ல அவன் காலை காலி பண்ணிட்டு, ரெண்டு தட்டு தட்டினேன். அவ்வளவுதான் லோஜி” என்றாள் அசராது..

“என்னது ரெண்டு தட்டா? அவன் ஹாஸ்பிடல்லயிருந்து வரவே ரெண்டு நாளாச்சிதாம்.”

“விடுங்க அம்மாஆச்சி ஜனத்தொகையில ஒண்ணு குறைஞ்சிருக்க வேண்டியது. ஏதோ தப்பிச்சிட்டான் போல” என்று கூசாமல் சொன்னவள்...

இன்று இந்த பையனின் பார்வைக்கு அடங்கி அமைதியாகவே பேச்சுக்கொடுத்து, ‘கடவுளே இவன் நல்லவனாக இருக்க வேண்டும்’ என்று கடவுளிடம் பிரார்த்திக்கையில், அவன் பேசிய வார்த்தையில் மனம் தெளிய, கிளம்பியவனை தடுத்து, “ரொம்ப நன்றிப்பா. என் பேத்தி டக்குன்னு யாரையும் நம்பமாட்டா. உன்னை நம்பி வந்திருக்காள்னா, நீ ரொம்ப நல்ல பையனாயிருக்கணும். இப்ப வரமாட்ட தெரியுது. கண்டிப்பா இன்னொரு நாள் வரணும்” என்றார்.

“அதுவும் பகல்ல” என சிரித்து “வர்றேன்ம்மா”’ என்று லோஜியிடம் விடைபெற்று ‘’வர்றேன் என்று கண்களால் விடைபெற்றான் ராசியிடம். அவன் சென்றபின், “அப்புறம் லோஜி. நான் இல்லாம நாட்கள்லாம் எப்படி போச்சி. ஜாலியா இருந்ததா? இல்ல போர் அடிச்சதா?’

“ஜாலியா இருந்ததுன்னு சொல்லமாட்டேன். இவ்வளவு லாங் லீவு போடாதமா. எனக்கு வீட்ல இருப்பே கொள்ளல.”

“எவ்வளவு லாங் லீவு அம்மாஆச்சி” என்று கிச்சன் அழைத்துச் சென்று, சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு படுக்கையில் மீனலோஜினியை கட்டியணைத்தாற்போல் படுத்து, “ஐ மிஸ் யூ டார்லிங்” என்றாள். “நானும்தான்” என்றவருக்குள் ராசியின் திருமணத்தைப் பற்றிய முடிவெடுத்து, அது நல்லபடியாக நடக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையும் சேர்ந்தது.

“டேய் மணீஷ்! நீ சொன்னதெல்லாம் உண்மைதான. எதுவும் தப்பில்லையே. நாம தேடின ஹரிப்ரியாதான் ராசியா””

“ராசி இல்லடா ராசாத்தி” என்றவன், “கன்பார்ம் நியூஸ்டா. முதல்ல அவங்க இருந்த சமயநல்லூர், அப்புறம் அவங்க சித்தி ஊர் விளாங்குடி, எல்லா இடத்திலயும் ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி உன்னை காண்டாக்ட் பண்ணலாம்னு பார்த்தா, அதே நேரம் நீ போன் பண்ற. அதான் அவளே நான்தான் ஹரிப்ரியான்னு ஒத்துகிட்டிருக்காளே. அப்புறம் என்னடா?”

“உண்மையிலேயே என்னால நம்பமுடியலடா. ரொம்ப தேங்க்ஸ்டா. நீ எனக்கு பலவகையிலும் ஹெல்ப் பண்ற. அதனால நான் தங்கச்சிட்ட உன்னைப்பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்லி, அவங்க மனசுல உன்னோட இமேஜை ஏத்திவிடுறேன்டா.”

“எப்பா சாமி! நீ ஏத்தவும் வேண்டாம்.. இறக்கவும் வேண்டாம். அதையெல்லாம் நானே பார்த்துக்கறேன். நீ அமைதியா இரு. அதுவே நீ எனக்கு பண்ற பெரிய ஹெல்ப்தான்.”

“டேய்! நான் நல்லவன்டா.”

“அதை நாங்க சொல்லணும். அதைவிடு அந்த பொண்ணுதான்னு தெரிஞ்சிருச்சி. அடுத்து என்ன செய்யப்போற?”

“வெய்ட் அன்ட் ஸீடா.”

“என்ன செய்யப்போறேன்னு கேட்டா வெய்ட் அன்ட் ஸீயா. நான் வெய்ட் பண்ணி நல்லாவே பார்க்கிறேன். நீ லேட்டாக்காம மனசிலிருக்கிறதை சீக்கிரம் சொல்லிரு.”

“ம்... பார்க்கிறேன்டா. ஆனா, அவளுக்கு மேரேஜாகிருச்சி தானடா?” என்றான் கவலையாய்.

“ஸ்ஸ்.. ஆமால்ல. இதை எப்படி மறந்தேன்னு தெரியலையே. என்னடா சரத் நீ? இருந்திருந்து மேரேஜான பொண்ணு மேலயா ஆசைப்படுவ. ப்ச்... போடா உன் லைஃப் எப்பவும் டிராஜடியாகவே போகுது. நடப்பதை அதன் போக்குல விடுடா. உனக்குன்னு இருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது. இப்ப நான் கிளம்பறேன்” என்றான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top