- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
13
சற்றுத் தொலைவில் ஏதோ சண்டைபோல் தோன்ற பூரணியும் சண்முகியும் வினோத்தை அனுப்பி என்னவென்று பார்த்து வரச்சொல்ல, பார்த்துவிட்டு வந்தவனோ, “பார்க்க டீசண்டா தெரியுறான். ஆனா, பைத்தியம் போலக்கா. அவனை ஒருத்தன் வம்புக்கிழுத்து அது சண்டையாகிருக்கு. பைத்தியம்னு சொல்றவன் அமைதியா நிற்கிறான். சாதாரண மனிதன் பைத்தியம் மாதிரி விடாமல் கத்துறான். இப்போதைக்கு அது தீராது போல. நீங்க அதைக் கண்டுக்காதீங்க” என்றபடி உள்ளே வந்து நின்றான்.
“வினோத் அவங்க எப்படியிருந்தாங்க?” கணவனோ என்றெண்ணி பதறியவாறு கேட்டாள்.
“எவங்க அக்கா?”
“சண்டை போட்டதுல முதல்ல ஒருத்தரைச் சொன்னியே?”
“ஓ.. அந்தப் பைத்தியமா?” அவன் குரலில் சற்று ஏளனமிருந்ததோ!
“வினோத் அந்த வார்த்தையைச் சொல்லாத. எப்படியிருந்தாங்கன்னு மட்டும் சொல்லு?” என்றாள் பதற்றம் குறையாது.
“நல்லா கலரா பார்க்க ஹீரோ மாதிரி...”
அவன் முடிக்கக்கூட இல்லை, “சண்மு! அவங்களோன்னு தோணுது. நா..நான் பார்த்துட்டு வர்றேன்” என்று தன்னை மறந்து ஓட... “அக்கா, பூரணி” என்ற குரல்கள் கேட்காது கூட்டம் நோக்கிச் சென்றவள் அங்கு கண்ட நிகழ்வில் அலறிவிட்டாள்.
பூரணி அங்கு வந்த வேளையில், “நான் கேட்டுட்டே இருக்கேன் செவுட்டுப் பயல் மாதிரி நிற்கிற? உன்னை...” என ஒருவன் கூறியபடி அருகில் எதாவது கிடைக்கிறதா என சுற்றிலும் தேடி வீடு கட்டப் போட்டிருந்த சவுக்கைக் கட்டை ஒன்றை எடுத்து வசீகரன் மண்டையில் அடிக்க.. இவளோ, “வசீகரா” என்றலறி கணவனிடம் ஓட.. அவன் தலையிலிருந்து இரத்தம் முகமெங்கும் வழிந்தது.
“ஏய்! ஏன்டா இப்படிப் பண்ணின? ஏன் அடிச்ச?” என்று கணவனை அடித்தவன் கையிலுள்ள கட்டையைப் பிடுங்கி இவள் அடிக்க ஆரம்பிக்க தினகரன் வந்துதான் தடுத்தான்.
“என்னை விடுங்க கொழுந்தன். அவன் என் கண்முன்ன... ஐயோ! இரத்தம் எவ்வளவு கொட்டுது? அவனை நான் சாகடிக்கிறேன்” என கண்ணீர் வடிய அடிக்கப்போனவள் கைபிடித்து, “முதல்ல அண்ணனைப் பாருங்க அண்ணி. இவனை நான் பார்த்துக்குறேன்” என்றதும் கணவனருகில் ஓடியவள், அடிபட்ட இடத்தைப் பார்க்க, சதை கிழிந்து இரத்தம் வந்து கொண்டிருக்க அவனுக்கு வலித்ததை விட இவள் ஆயிரம் மடங்கு வலியில் துடித்தாள்.
அடுத்து என்ன செய்வதென்பதை மறந்து இரத்தத்தைத் தன் துப்பட்டா கொண்டு துடைத்தபடியிருக்க, அவளையே பார்த்திருந்தான் வசீகரன். ‘அடி எனக்கு. வலி உனக்கா பரி?’ சமாதானப்படுத்த எழுந்த கையை மடக்கியவன் அவளறியாமல் தினகரனை அழைத்தான்.
“அண்ணி என்னாச்சி? மெடிக்கல் படிச்சிருக்கீங்க. இந்நேரத்துக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்க வேண்டாமா? பாமரப் பொண்ணு மாதிரி நடந்துக்குறீங்க. அடிபட்டது அண்ணனுக்கு. உங்களுக்கில்லை. முதல்ல போய் முதலுதவி பண்ணுங்க. ஸ்டிச்சஸ் போடுறதாயிருந்தா நான் வர்றேன்” என்ற அதட்டலில் முழு உணர்வு வந்தவள், கணவனை நேரடியாக டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டினாள்.
“ஆழமான காயமில்லை பூரணி. நீயே இதைச் செய்திருக்கலாம். ஏனிந்த பதற்றம்? அடிபட்டவரை விட நீதான் துடிக்கிற? இவரைப்பாரு ஒரு சின்ன சத்தம் கூட தரலை?” என,
“அவங்க எப்பவும் அப்படிதான் டாக்டர். அடிபட்டா கூட உணரத் தெரியாது.”
“ஏன்? எதுவும் ஹெல்த் இஷ்யூ இருக்கா?” யோசனையாக டாக்டர் கேட்க,
“இல்ல இல்லை டாக்டர்” என்றாள் வேகமாக.
“இவ்வளவு துடிக்கிறன்னா, யார் இவர்? இதுக்கு முன்ன பார்த்த மாதிரியில்லையே?” என்றார் கேள்வியாய்.
“எ..என்னோட அத்தை பையன்தான் டாக்டர். தேங்க் யூ. உங்க ஃபீஸ் வினோத்கிட்ட தந்து விடுறேன்” என்று மேலே அவரைப் பேசவிடாது எழுந்தாள்.
“ஃபீஸ்லாம் வேண்டாம். இரத்தம் அதிகம் போனதால கொஞ்சம் டயர்டாகுவார். ஜுஸ் எதாவது கொடுத்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க வை” என்றார்.
“நான் பார்த்துக்குறேன் டாக்டர்” என்றவள் கணவனை அழைத்து வந்து மருந்தகத்தின் உள்ளறைக்குள் செல்ல...
“பூரணி! மச்சானுக்கு என்னாச்சி? ஒண்ணும் பிரச்சனையில்லையே?” என கேட்டாள் சண்முகி.
“அப்புறமா சொல்றேன் சண்மு. வினோத்கிட்டப் பணம் கொடுத்து ஃப்ரெஸ் ஃப்ரூட் ஜுஸ் வாங்கிட்டு வரச்சொல்லு. ப்ளட் நிறைய போயிருக்கு. இவங்களைப் படுக்க வச்சிட்டு வர்றேன்” என்றவள் உள்ளே சென்று மடித்து வைத்திருந்த பை ஒன்றை எடுத்து வாய்வழி காற்றைச் செலுத்தி அதைத் தலையணையாக்கி, போர்வை ஒன்றை விரித்து அவனை படுக்கவைத்து வெளியே செல்லப்போக, “பரி” என்று தன் கைபிடித்து இழுத்தவனை வியப்பாய் பார்த்தாள்.
“குட்டிக்கண்ணா! பரின்னு கூப்பிட்டீங்களா? என்னை ஞாபகம் வந்திருச்சா? என்னை மறந்துட்டீங்களோ நினைச்சி எவ்வளவு அழுதேன் தெரியுமா?” என்றவளின் விழிகள் நீரை ஏந்த, அவளைத் தானும் கண்கலங்கப் பார்த்திருந்தவன் அவள் அதைக் கவனிக்கும் முன் சரி செய்து, “ஏன் அழுத? நீ என் மனைவிதான?” என்றான் பழைய குரலில்.
பழைய குரலேதான். தன் அண்ணியிடம் தான் மனநிலை சரியில்லாத பொழுது தானிருந்த நிலை, தன் நடவடிக்கை, தன் பேச்சு எப்படியிருக்குமென்று கேட்க, ஐஸ்வர்யாவோ சில வீடியோக்களை தன் கைபேசியிலிருந்தும் கணவன் கைபேசியிலிருந்தும் அவனுக்கு அனுப்பி திருமண வீடியோவையும் அவனிடம் கொடுத்துப் பார்க்க வைத்தாள். அக்குரலில் பேசியதால்தானோ என்னவோ பரிபூரணிக்கும் அவனிடம் உள்ள வித்தியாசம் தெரியவில்லை.
“அதுல என்ன சந்தேகம் வசீகரா. நான் செத்தாலும் உங்க மனைவியாதான் சாவேன்.”
அவ்வார்த்தைதனில் பதறித் துடித்துத் திட்டப்போனவன் சூழ்நிலை உணர்ந்து, “அப்படிப் பேசாத பரி. இப்படிப் பேசினா அம்மாவுக்குப் பிடிக்காது. திட்டுவாங்க” என்று தாயை இழுத்தான்.
“ஏன் நீங்க திட்டமாட்டீங்களா? சரியான அம்மாபிள்ளை” என்றாள் அவன் தலைகலைத்து.
“திட்டணுமா?” என்றவன் குரலிலுள்ள வேற்றுமையை உணராது, “உங்களைவிட்டா உரிமையா திட்ட எனக்குமே யார் இருக்காங்க?”
“ஏன்டி நானில்லையா? மச்சானால செய்ய முடியாததை நான் செய்யுறேன். ஆளைப்பாரு! திட்டுறதுக்கு ஆள் தேடுறாளாம். இந்தா மச்சானுக்குக் கொடுத்துட்டு நீயும் குடி” என்று அவளின் கையில் இரண்டு பெரிய பேப்பர் கப்பை திணித்து முறைத்துச் சென்றாள் சண்முகி.
வசீகரனோ நமுட்டுச் சிரிப்பு சிரித்து அதை அடக்கி அப்பாவியாய் அமர்ந்திருக்க, செல்லும் தோழியைப் பார்த்து, “மச்சான் சொல்லாத சொன்னா கேட்குறாளா. இவளை..”. கோபத்தில் பல்லைக்கடித்து “நீங்க குடிங்க” என்று அவன் கையில் கொடுத்து குடித்து முடித்ததும் இன்னொன்றையும் கொடுக்க, “இது உனக்கு சொன்னாங்க. நீ குடி” என்றான்.
“உங்களுக்கு இரத்தம் நிறைய போயிருக்கு. உடம்புக்கு சத்தானதா சாப்பிடணும். வீட்டுலனா அத்தை பார்த்துப்பாங்க. அங்க கூடயிருந்து என்னால பார்த்துக்க முடியாதே. இப்ப இந்த நிமிடங்கள் அரிதாக எனக்குக் கிடைச்சிருக்கு. இது உங்களோடான எனக்கான நேரம்” என்று அதையும் குடிக்கவைத்து, காலை உணவு அவன் எடுத்திருந்ததால் மாத்திரை கொடுத்து ஐந்து நிமிடங்கள் கழித்து படுக்கவைத்து எழப்போனவள் கை வசீகரனுக்குள்.
தன்னருகில் அருகிலமர்ந்தவளை படுக்கச் சொல்ல, அவள் மறுக்க, அவன் பிடிவாதம் பிடிக்க என வேறு வழியில்லாது படுத்தவள் கணவன் கண்மூடியதும் தோள்வளைவில் தலைவைத்து வயிற்றில் கைபோட்டு சாய்வாகப் படுத்துக்கொள்ள அவளறியாமல் தூக்கம் அவளை ஆட்கொள்ள அதுதான் சமயமென்று மனைவியை சிறிது சிறிதாக ரசித்துக் கொண்டிருந்தான் பூரணியின் வசீகரன்.
“ஹாய் சண்முகி! அண்ணனும் அண்ணியும் எங்க?” என்றபடி வந்தான் தினகரன்.
“ம்.. இருக்க வேண்டிய இடத்துல இருக்காங்க.”
“அட, நான் என்ன இந்திரலோகத்துலயா இருக்காங்கன்னு கேட்டேன். இருக்கிற இடம் எதுன்னுதான கேட்குறேன்?”
“சட்டுன்னு சிரிப்பு வருது சார். ஆனா பாருங்க சிரிக்கதான் முடியலை. ஆமா என்ன நாடகம் இது?” வசீகரனிற்கு அடிபட்டதை தற்செயல் என்று நம்பமுடியாமல் கேட்டுவிட்டாள்.
“அண்ணனுக்கு அண்ணியைப் பார்க்கணுமாம். கூடவேயிருந்து அவங்க காதலை அனுபவிக்கணுமாம். நமக்கு இதெல்லாம் செட்டாகாது சண்மு. நாம நேரடியா மணமேடை ஏறிருவோம்” என்றான் புன்னகையுடன்.
“ஹலோ சார்! உங்க கற்பனைக்கு நான் ஆளில்லை. உங்க குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. எனக்கு உங்க குடும்பமெல்லாம் சரிவராது.” சற்றே கடுப்புடன் அவனுக்குப் பதில் கொடுத்தாள்.
“உன்னைவிட அந்தத் தகுதி யாருக்குமில்லை சண்மு. இது என் ஆழ்மனசிலிருந்து சொல்றேன். நம்பி வா” என்றான்.
“நான் வர உங்க குடும்பத்திற்குத் தகுதியில்லை சார்” என்றாள் பட்டென்று.
“சண்முகி” என்று சத்தமாக உரைத்தவன், “ப்ளீஸ் இப்படிலாம் பேசாத. என்னயிருந்தாலும் அந்த குடும்பத்துலதான் நானும் வசீண்ணாவும் இருக்கோம். நீயும் அண்ணியும் அங்கதான் வரப்போறீங்க” என்றவன் குரல் சற்றே கரகரத்தபடி வந்தது.
பேசிய பின்னேதான் அதிகமாகப் பேசிவிட்டதை உணர்ந்து, அவனின் கமறிய குரலில், “சாரி. நான் பேசணும்னு பேசலை. பூரணிக்கு உங்க குடும்பம் செய்த செயலினால் பேச்சுவாக்கில் வந்திருச்சி. அதுக்குக் காரணமும் நீங்கதான்” என்று அவனையே குற்றவாளியாக்கினாள்.
“புருஷனை குறை சொல்லாத பொண்டாட்டி உலகத்தில் கிடையாதாம். அதனால என் பொண்டாட்டி நீ சொன்னதைத் தப்பா எடுத்துக்கலை” என்று அவளின் இரத்தக்கொதிப்பை அதிகரிக்க வைக்க,
“டேய் யாரைப் பார்த்து... இரு இதுக்காகவே வேற பையனைப் பார்க்கச் சொல்லி சீக்கிரமே என் கல்யாணப் பத்திரிக்கை தர்றேன்” என்றாள் ஆவேசமாய்.
“தா தா அதிலும் மாப்பிள்ளை பெயரா என்னோடதுதான் இருக்கும். வேற யாரையும் பக்கத்துல எழுத்தா கூட போட விட்டுருவோமா என்ன?” என்றான் அலட்டலாக.
அவன் பேசுவது பிடிக்காது முகம் சுளித்து, “இப்ப உங்களுக்கு என்ன வேணும்?” என்க,
“நீதான் வேணும் சொன்னா கோவப்படுவ. அண்ணனும் அண்ணியும் எங்கன்னு மட்டும் சொல்லு?”
“வந்து தொலை” என்றவள் உள் அறைவாயில் திறக்க, திறந்த நொடி கதவை சத்தம் வராமல் சாத்தியிருந்தாள்.
“ஏன் கதவைச் சாத்திட்ட? கதவைத் திற அண்ணனுக்கு செக்கப் பண்ணனும்” என்றான் சூழ்நிலை புரியாது.
“அதெல்லாம் அப்புறமா பண்ணிக்கலாம். நீங்க இங்க வந்து உட்காருங்க. வினோத் நம்ம மூணு பேருக்கும் ப்ரூட் ஜுஸ் வாங்கிட்டு வா” என்று பணம் கொடுத்தனுப்ப, அவன் சென்றதும், “ஏய் கள்ளி! நாம தனியா பேசணும்னுதான அவனை அனுப்பிட்ட” என்று வம்பிழுக்க ஆரம்பித்தான்.
“ப்ச்.. சும்மா எதையாவது உளறாதீங்க.”
“ஏன் கதவைச் சாத்திட்ட? எதாவது ஏடாகூடமா பார்த்துட்டியா?” என்று கண்சிமிட்ட,
“பேசாம இருக்கலை கண்ணை நோண்டிருவேன்” என்று விரல் வைத்து மிரட்டினாள்.