• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
13



பிரகாஷ் தன் நண்பனுக்கு சைகை செய்ய, அவன் வேகமாக சென்று ஒரு நடுத்தர வயதுக்காரர் முன் நின்று போனைப் பறித்தான்.

“என்னடா அப்பு பேசிட்டாரா?” எனக்கேட்க,

“இல்லடா அதுக்குள்ள பிடுங்கிட்டேன்.”

“என்ன பண்றீங்க தம்பி? இதெல்லாம் சரியில்ல. முதல்ல போனைக் குடுங்க” என்றார் அவர்.

“எல்லாம் சரிதான். இங்க நடந்த எதாவது உன் முதலாளிக்குத் தெரிஞ்சது உன் குடும்பத்தையே இல்லாம பண்ணிருவேன். நான் யார் தெரியும்தான?” என்றான் மிரட்டலாக.

“தம்பி இது முதலாளிக்குத் தெரியலன்னா அவருக்குப் பிரச்சனையாகிரும்.”

“இந்த விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சது... உங்க குடும்பத்தை நிஜமாவே இல்லாமல் பண்ணிருவேன். உங்க குடும்பமா? விசுவாசமான்னு யோசிங்க. அப்பு அந்த போனை இவர்கிட்ட குடுத்திரு. இங்க நடந்த எதுவும் அங்க போகக்கூடாது. போச்சிது... நானும் ரௌடிதான்” என காலர் தூக்கி அவனை விரல் நீட்டி எச்சரித்துச் சென்றான்.

“என்னடா உன் ஆளோட உறவுகள் லிஸ்ட் ஏறுது?”

“ஏறினால் பரவாயில்லடா அப்பு. இறங்கதான் கூடாது. ஏற ஏறத்தான் எங்க பாவக்கணக்கும் குறையும். இல்லன்னா அந்த அழுத்தமே என் அம்மாவை நிம்மதியா இருக்கவிடாது. இப்ப அது இளநாதனா? இளங்கதிரா தெரியாது. இளநாதனா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். அன்புக்கு மங்கையை அடையாளம் தெரிஞ்சிருக்கு. அவள்கிட்ட சொல்லலை போல. எந்த வகையிலும் கார்மேகமும், ஜெயராமும் இவங்களை அடையாளம் தெரிஞ்சிக்கக்கூடாது. இவங்கள்ல யார் யாரைப் பார்த்தாலும் யாரோ ஒருத்தருக்கு ஆபத்து. அதைத் தடுக்க என்னாலான முயற்சி செய்துட்டிருப்பேன்.”

“புரியுதுடா. ஆனா, டீச்சருக்கு உன்னைப்பற்றின உண்மை தெரிஞ்சா?”

“செத்தாலும் கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டாள்டா” என்றான் பட்டென்று. “இதுவரை தனின்னு நினைச்சிட்டிருந்தவளுக்கு அவளோட உறவுகள்ல சில இருக்குன்ற திருப்தியிருக்கும். அவங்களைப் பற்றி என்ன முடிவெடுக்கப் போறாள்னு பார்க்கலாம். எப்பவும் போல நீ அவளைப் பார்த்துக்க.”

“கண்டிப்பா பார்த்துக்கிறேன்டா” என்றதும் மெல்லிய புன்னகை அவனிடம்.

“சரி மொழி நீ ஊரைவிட்டு வரவேண்டாம். ஆனா, நீ என்னோட வர என்ன செய்யணுமோ அதை நான் செய்றேன்.”

“ஏன் அவனுங்களைக் கொலை பண்ணப்போறீங்களா?” என்றாள் நக்கலாய்.

“அப்படிச் செஞ்சாதான் நீ வருவன்னா, கண்டிப்பா செய்றேன்” என அவள் முகம் பார்த்து அழுத்திச் சொன்னான்.

அப்பார்வை தனில் ஒரு நிமிடம் அரண்டு மயங்கித்தான் போனாளோ!

“சொல்லு ஏர்போர்ட்.. செஞ்சிரவா?” சட்டென்று அவன் வாய்மூட... கதிரின் கண்கள் சிரித்தனவோ!

“எனக்கு அவங்களைப் பழிவாங்கணும்தான். இல்ல சொல்லல. சாகடிக்கணும்னா நான்ன் வருஷக்கணக்கா காத்திருக்க அவசியமில்லையே? அவங்க கத்தியில்லாம இரத்தமில்லாம துடிதுடிக்கணும். என் கண்முன்னால என் குடும்பமே ரெத்த வெள்ளத்துல மிதந்தது. நான் அந்தளவுக்குக் கொடூரமானவள் கிடையாது. ஆனா, எழவே முடியாதளவு எதாவது செய்யணும்” என்றாள் கொதிக்கும் மனதுடன்.

“பண்ணிரலாம் மொழி.”

“இல்ல அது அவ்வளவு ஈஸி கிடையாது. ஏன்னா இப்ப அந்த ஜெயராம் அரசியல்ல பெரும்புள்ளி. அதோட எம்.எல்.ஏ வேற. நெக்ஸ்ட் எலக்ஷன்ல எம்.பிக்கு நிற்கப்போறான். அவனைத் தொட்டா தமிழகம் தாண்டி மத்திய அரசே கொந்தளிக்கும்.”

“உனக்கெப்படித் தெரியும்?” எனக்கேட்டு பிரஷாந்தைப் பார்த்தான் கதிர். அவனுக்குமே இது புதிதென்பது தெரிந்தது.

“இங்க அது நடக்கும்போது நான் ஒண்ணும் குழந்தை கிடையாது. ஒருத்தர்கிட்ட மோதணும்னா அவனோட பலம் பலவீனம் தெரிஞ்சிருக்கணும். இவங்களைப் பொருத்தவரை பலம் மட்டுமே! நோ சென்டிமெண்ட்! என் குடும்பத்தைக் கொல்றியா... கொன்னுட்டுப் போ. பூமியில் இருக்கிறது வரை நான் நல்லாயிருக்கணும். தன்னைச் சுற்றி நடக்கிற எதைப்பற்றியும் கவலை கிடையாது சொல்ற கேரக்டர்ஸ். எந்த வகையிலும் அவங்களை ஒண்ணும் செய்ய முடியாது. அவங்க பக்கத்துல நம்மால் நெருங்கவும் முடியாது. அதையும் தாண்டி எதுவும் செய்யவும் முடியாது.”

“எப்படிக்கா இப்படிலாம்?” என்றவனுக்குத் தான் மேலோட்டமாகப் பார்த்ததை எப்படி அலசி ஆராய்ந்திருக்கிறாள் என்ற ஆச்சர்யமே.

“கேரக்டர் ஜட்ஜ் பண்றதுடா தம்பிப்பையா. படிச்சது அக்ரியா இருக்கலாம். அதோட சேர்த்து நிறைய புக்ஸ் படிக்கிறேன். கொலை செஞ்சிட்டு தண்டனை அனுபவிக்காம அரசியல், ஜாதி, மதம், இது மாதிரி எதிலாவது ஒழிஞ்சிக்கிறாங்க. கடைசிவரை அவங்களுக்கத் தண்டனைன்னு ஒண்ணு இல்லாமலே போயிருது. செஞ்ச கொலைகளும் மட்கி மண்ணோட மண்ணா புதைஞ்சிருது. இதுல யாரைக் குறை சொல்றது. அரசியலையா? ஜாதியையா? இல்ல மதத்தையா? தப்பு செய்தது யாராயிருந்தாலும் தண்டனை கிடைச்சே ஆகணும்னு இருந்தா, தப்பு செய்றவனுக்குப் பயம் வரும். தண்டணை அனுபவிக்காம பெரிய மனுஷன்ற பெயர்ல ஊர்ல உலாத்திட்டிருக்காங்க நிறைய பேர்.”

“வெளியில இருந்து பார்க்கிறவங்களுக்கு எங்களுக்கு நடந்தது ஜஸ்ட் ஒரு நியூஸ். இத்தனை வருஷமா உள்ளயிருந்து அனுபவிச்ச எனக்குதான் அந்த வேதனை தெரியும். அந்த பாவிங்களையெல்லாம் கொன்னு புதைக்கிற வெறியிருக்கு. ஆனா...”

பேச முடியாமல் தடுமாறியவளை தன் தோளோடு அணைத்த சிவகாமி, “எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு திரு. என்ன கொஞ்சம் லேட்டாகும். அவ்வளவுதான்” என்றார்.

“ஆனா, அவங்களுக்கு முடிவு இல்லையே அத்தை. நம்பவச்சிக் கழுத்தறுத்த பாவிங்க” என்றவள் கண்கள் கனலைக் கக்கியது.

கயல்விழியின் கண்களுமே அதேயளவு கனலைச் சிந்தியது. மங்கையர்கரசியை விட ஒரு வயது பெரியவள். அருவியிருக்கும் இடம் நோக்கிக் கண்கள் திரும்ப விழும் தண்ணீரெல்லாம் இரத்தமாகத் தெரிந்தது. கண்முன் அத்தனை பேரும் அலறியதை நினைக்க, இப்பொழுதும் அடிவயிறெல்லாம் அமிலமாய் எரிய அது கண்ணீராய் வெளி வந்ததோ!

தற்செயலாகத் திரும்பிய இளங்கதிர் கயல்விழி அருகில் வந்த நேரம் பிரகாஷும் வர... “என்னாச்சிமா? ஏன் அழுற? திரும்பவும் கலாட்டா பண்றாங்களா?” என கேட்டான்.

அதே நேரம், “கயல் அழாத. எல்லாம் சீக்கிரம் சரியாகிரும்” என்ற பிரகாஷை கேள்வியாய் பார்த்த கதிரிடம்... “என்ன சார் தெரிஞ்ச பொண்ணாயிருந்தாலும் பேச விருப்பமில்லாத பொண்ணுகிட்ட பேசுறது தப்புன்னு என்னைச் சொல்லிட்டு, வலுக்கட்டாயமா ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டீங்க. அதெப்படி முதல்ல வேண்டாம்னு கழட்டிப்போட்ட பின்னாடி திரும்பவும் கட்டுனீங்க? இது எந்த ஊரு லாஜிக் சார்?” என்றான் நக்கலாய்.

“ப்ரதர் அவங்க சூழ்நிலை வேற. என் ஒய்ஃப் பக்கத்துல இருக்கானே, அவன் அவளோட கூடப்பிறந்த தம்பி” என்றான்.

கயல் வியந்து போய் பிரஷாந்தைக் கண்டு “அன்பு” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

“அவன் பெயர் உங்களுக்குத் தெரியுமா சிஸ்டர்? ஓ... நானும் அவனும் பேசினதைக் கேட்டிங்களா?” கேள்வியும் பதிலும் அவனாகி, “அவனுக்குத் தன் அக்காவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சித்தரணும்னு ஆசை. அதான் இந்த அவசர திருமணம்” என்றான் பொறுமையாக.

“நீங்க ஏன் அண்ணா இவங்களுக்கு விளக்கம் சொல்லிட்டிருக்கீங்க? இவங்களும் நீங்களும் ஒண்ணா?” என்று அவனை முறைத்து, “நீங்க அவளைக் கல்யாணம் பண்ணினது சரிதான். ஒரு பெண்ணுக்கு நிம்மதியான வாழ்க்கைதான் முக்கியம். அது உங்ககிட்டக் கிடைக்கும்னு நம்பிக்கை வச்சி அவள் தம்பி செய்தது சரிதான்ணா.”

“மச்சான் டைமாகுது. கிளம்பலாம் வாங்க” என்று பிரஷாந்த் சத்தமாக அழைத்தான்.

“நடங்க வர்றேன்” என்றவன் கயலிடம் திரும்பி, “போகலாமா” எனவும் அவன் முன் கைநீட்டித் தடுத்து, “என் பெயர் கயல்விழி” என்றாள்.

“நைஸ் நேம். நான் இளங்கதிர்” என்றான் பதிலுக்கு.

“இல்லண்ணா நீங்... நீ இளங்கதிர் இல்ல. இளநாதன்தான்” என்றாள் ஸ்திரமாக.

‘இளநாதனா? என்ன உளறல்?’ என்பதாய் புருவம் சுருக்கி அவளைக் காண...

“என் பெயர் உனக்கு என்னை யார்னு சொல்லலையா அண்ணா?”

“புரியலமா. உன் பெயர் எனக்கெப்படித் தெரியும்? அதுவும் இளங்கதிர்னு சொல்லியும் இளநாதன்னு சொல்ற?” என்று அவளைச் சந்தேகமாகப் பார்த்தான்.

“லூசு மாதிரி தெரியுதான்ணா. நான் உன் கூடப்பிறந்த தங்கைதான்ணா.”

எதையோ உணர்ந்து, “நீ இளாவோட தங்கையா? அப்ப மொழியோட அத்தைப் பொண்ணா? ஒரு நிமிஷம் மொழியைக் கூப்பிடுறேன்” என்றவனைத் தடுத்து, “உன் முகம் மாறலாம். ஆனா, என் அண்ணனை எனக்குத் தெரியாதா? குரல் கொஞ்சம் தடித்திருந்தாலும் உன் குரலே உன்னைக் காட்டிக்குடுக்குதே. அதோட உன்னை இனம் கண்ட விதம் வேறண்ணா. இளா யாரோ இல்லண்ணா.. அது நீதான். ஏன்ணா மறுக்கிற?” என்றாள் கண்கலங்கியபடி.

“என்ன உளர்ற? அதோ போறாங்க பார் அவங்க சிவகாமி. என்னைப் பெற்ற தாய். நாங்க இருக்கிறது ஹைதராபாத்ல. நான் படிச்சதெல்லாம் அங்கதான். வேணும்னா சர்டிபிகேட் காண்பிக்கவா? நான் சின்ன வயசுலயிருந்து எங்க படிச்சேன்னு அது சொல்லும்.”

“கயல் நிஜமாவே உன் அண்ணன்தானா?” என்றான் பிரகாஷ்.

“இவர் என் அண்ணன்றதுல எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. என்னால நிரூபிக்கவும் முடியும்” என்றாள் உறுதியாக.

கதிர் அவளைக் குழப்பமாய் பார்த்து நெற்றியைப் பிடிக்க, அவனின் கைபிடித்து தன் கையைச் சேர்த்து அழுத்தி, “ப்ளீஸ் கையை விடாம ஒரு பத்து செகண்ட் கண்மூடி யோசிச்சிப் பாருண்ணா. உனக்குத் தெரியுமா? நம்ம வீட்ல யார் கையை இப்படிப் பிடிச்சிக்கிட்டாலும் ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சிருவ. இப்ப அந்த ஃபீல் வருதா பாரு?” என்றாள்.

அவள் தன் கைபிடித்ததுமே அவனறியா ஒரு உணர்வு. அவளை வேற்றாளாக நினைக்க முடியவில்லை. ஏன் இப்படியென்று அவனுக்குமே புரியா ஒரு சூழலில் நிற்க, சற்றுமுன் மனைவியின் கைபிடித்ததில் உள்ள அதே உணர்வு.

அதுவரை அவர்கள் பேசுவதைத் தடுக்க முடியாமல் நின்றிருந்த குருமூர்த்தி, இருவரின் கையையும் விலக்கி, “வா போகலாம்” என இழுத்துச் செல்கையில் கயலை ஒரு பார்வை பார்த்தார்.

அவரின் அவசரத்தில் எதையோ உணர்ந்து சின்னப் புன்னகையை அவருக்குக் கொடுத்து, “அண்ணா! உன் மனைவிக்குத் தேவையான முக்கியமான அவசியமான பொருள் ஒண்ணு என்கிட்ட இருக்கு. நீயா என்னைத்தேடி வருவ. அதுவரை உனக்காகக் காத்திருப்பேன்” என்றாள் சத்தமாக.

அதில் அரண்டுதான் போனார் குருமூர்த்தி.

கதிர் திரும்பி அவளை யோசனையுடன் பார்த்தான்.

“நீதான் என் அண்ணன் இளநாதன். உன் முறைப்பெண்ணை தான் கல்யாணம் பண்ணியிருக்க. அதனால அவளும் வருந்தத் தேவையில்லை. இந்த இடத்துல பிரிஞ்ச நம்மளை இதே இடத்துல அடையாளம் காட்டிய இந்த காமாட்சித்தாய், உன்னை என்னைத்தேடி வரவைப்பா. இப்ப... ஹேப்பி மேரீட் லைஃப்” என்று அவனைத் தாண்டி நடந்தாள்.

“அப்பா என்ன இந்தப்பொண்ணு இப்படி உளறிட்டுப் போறா?” என தகப்பனிடம் கேட்க...

“அதான் உளறல்னு சொல்றியே. நீ என் மகன்றதுதான் நிஜம். உன்னோட பெர்த் சர்டிபிகேட்ல இருந்து நாம குடும்பமா எடுத்துக்கிட்ட போட்டோஸ் முதற்கொண்டு இருக்கு. காண்பிக்கவா?” என கோபமாகக் கேட்டார்.

“அப்பா சந்தேகப்படல. அந்தப்பொண்ணு எதோ தெரியாம பேசிட்டுப் போறா” என தகப்பனை சமாதானப்படுத்தினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“உண்மையை எவ்வளவுக்கு எவ்வளவு மண்ணுல புதைச்சாலும், அவ்வளவுக்கு அவ்வளவு வீறு கொண்டு வெளியில வரும் ப்ரதர். இத்தனை வருஷம் இல்லாத மன நிம்மதியோட போறேன். இனி எதுனாலும் என் அண்ணன் நீயிருக்க. பொறுப்பை உதறிட்டுப் போற கோழை கிடையாது என் அண்ணன். கண்டிப்பா உன் பொறுப்பை உன் கடமையை உணர்ந்து வருவ” என்று அம்மனிருக்கும் இடம் திரும்பி, “நன்றி தாயே! விதிப்படி எல்லாம் நடக்கட்டும்” என நிற்காமல் சென்றாள் கயல்விழி.

“பார்த்ததில்லை அவன்!” இப்படியொரு தெளிவில் சற்றுப் பெரிய குரலில் சின்னதாக கிண்டலும் கலந்து பேசிப் பார்த்ததில்லை. எப்பொழுதும் முகத்திலிருக்கும் சோகம் இன்று அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றிருக்க, முகத்தில் ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டதோ! அதைக் கண்டவனுக்குள் பாவம் புண்ணியம் தாண்டி, முதல் முறையாக கயல்விழி என்ற பெண்ணைப் பிடித்தது பிரகாஷிற்கு.

கதிருக்கும் அப்படியே! அவளின் முகத்தெளிவு மனதிற்கு கொஞ்சம் இதமாய் இருக்க ‘இவ்வளவு உறுதியாக சொல்லிச் செல்கிறாளே. எப்படி?’ என்று மனம் கேள்வி கேட்கவும் தவறவில்லை.

“காதல் காதல் காதல்! காதல் போயின் சாதல் சாதல் சாதலாடா நண்பா” என்றான் கிண்டலாக.

“ஆமாடா அப்பு. இத்தனை நாள் பார்த்தப்ப பிடிச்சிருந்தாலும் ரொம்பப் பிடிச்ச மாதிரி எந்த ஃபீலிங்கும் வரல. ஆனா, இப்ப... என்னை ஒரேயடியா கவுத்துட்டாடா.”

“நண்பா டீச்சரம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு பெயர் எடுத்தவங்க. சோ, எப்பவும் கம்பும் கையுமாதான் இருப்பாங்க. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு.”

“அவள் பக்கத்துலதானடா தள்ளி நிற்கச் சொல்ற? நண்பன் நீ சொன்னா கண்டிப்பா கேட்டுக்குவேன்டா” என்றான் குறும்புடன்.

“டேய் என்னடா உளர்ற?” என்றான் அப்பு அலறலாக.

“புதுசா லவ் பண்றவன் உளறத்தான்டா செய்வான். நண்பனா நீ அதை சகிச்சிக்கதான் வேணும். வாடா.. என் கயல் போயிட்டிருக்கா பாரு.”

“அப்பு உனக்கு ஆப்பு ரெடி போலடா. நண்பன் லவ் பண்ணினா கூட இருக்கிறவனுக்குதான் அடிவிழும்னு எத்தனை பார்த்திருக்கோம். அதுல நான் சிக்கக்கூடாது நினைச்சிருந்தேனே! சிக்க வச்சிட்டானே.. இந்த சிக்கல் பிடிச்சவன்’ என மனதுக்குள் புலம்பினான்.

“ஆரம்பத்துலயே அழக்கூடாது நண்பா. இன்னும் இருக்கு வாடான்றேன்” என நடந்தபடி தாய்க்கு போன் செய்து இங்கு நடந்தவற்றைச் சொல்ல, தாயின் சந்தோஷமும் அழுகையுமே பதிலாய்க் கிடைத்தது. ‘இந்த அழுகையை நிறுத்தி முழு சந்தோஷம் கொடுக்கத்தான்மா முயற்சிக்கிறேன்’ என மனதினுள் மருக... நண்பனின் ஆறுதலான தொடுகையில் ‘சரி பண்ணிவிடலாம்’ என்ற நம்பிக்கை அவனுக்குள் வந்திருந்தது.

தேவதானம்பட்டி வந்து இளங்கதிர் திருமொழிக்கு ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அனுப்ப, “சிவா கொஞ்சம் அவசரமா பேசணும்” என்று மனைவியை இழுத்துக்கொண்டு அங்கிருந்த மரத்தினருகில் வந்து நின்றார் குருமூர்த்தி.

“கையை விடுங்க. அப்படியென்ன தலைபோற விஷயம்?”

“இங்க இருந்தா தலையும் போயிரும் சிவா. உனக்கு உன் பையன் வேணுமா? வேண்டாமா?”

“என்ன பேசுறீங்க நீங்க? இப்பதான் கோவிலுக்குப் போயிட்டு வந்திருக்கோம். அபசகுனமா பேசாதீங்க” என கண்டித்தார்.

“சிவா உனக்கு புரியற மாதிரி எப்படிச் சொல்றது. இப்பவே ஊருக்குக் கிளம்பணும்.” மனைவியின் அசுவாரசியமான பாவனையில் தளர்ந்து போனவர், “சிவா நம்ம பையன் ஜாதகத்துல தோஷம் இருக்கு” என்றதும் மனைவியின் புரியா மொழியில்... “அவன் ஜாதகப்படி பிறந்த மண்ணுக்கு வந்தா ஆபத்துன்னு இருக்கு. அதனாலதான் அப்பா அம்மா கூட உங்களை இங்க வரவிடல. அதையும் மீறி வரவிட்டேன்னா அது உனக்காகத்தான் சிவா. உன்னோட பிடிவாதத்துக்காகத்தான். முழுசா எதுவும் தெரியலன்னாலும் தப்பான சிலது நடக்கும்போது நான் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்திருக்கேன்.”

“புரியலங்க?”

“புரிய வேண்டாம் சிவா. அந்தப்பொண்ணு கார்மேகம்தான் தன்னோட குடும்பத்தையே அழிச்சான்னு சொல்றா. கார்மேகம் யார்னு தெரியுதா? நிஷாந்த் கல்யாணத்துல அறிமுகப்படுத்தினேனே அவன்தான். அவன் இப்படின்னு இப்பதான் தெரியுது. அவங்ககிட்ட மோதுற அளவுக்கு நமக்கு செல்வாக்கு கிடையாது சிவா. நமக்கு இருக்கிறது ஒரே பையன்.”

“ஜாதகம் பற்றி ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லல? சொல்லியிருந்தா வந்திருக்கமாட்டேன்ல.”

“சிவா!”

“ஓகே நடந்தது நடந்திருச்சி. அதனால ஒரு நல்ல பொண்ணு மருமகளா கிடைச்சிருக்கா” என்றார் கூலாக.

“அவள் வில்லங்கத்தையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்கா” என்றார் கோபமாக.

“திரு இப்ப நம்ம மருமகள்ங்க. ஏன் இப்படிப் பேசுறீங்க?”

“எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல சிவா” என தடுத்து நிறுத்த முடியாத கோபத்தை மனைவியிடம் காட்டினார்.

“கல்யாணம் உங்களுக்கா முடிஞ்சது, பிடிக்கல சொல்றதுக்கு. பிடிக்க வேண்டியவனுக்குப் பிடிச்சிருக்கு. அது போதுமே!”

“சிவா” என பல்லைக்கடித்தவர், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன். நீ என்னடான்னா...”

“ஒரு கதை தெரியுமாங்க?” ‘இந்த நேரம் இது தேவையா?’ என்று அவர் பார்வையிருக்க... “அட கேளுங்க! ராஜா ஒருத்தரோட ஆயுட்காலம் முடியுதுன்னு ஜாதகத்துல இருந்திருக்கு. விதியை மதியால் வெல்லலாம்னு, தன்னுடைய அமைச்சர்கள் ஆலோசனையோட எதனாலெல்லாம் ஆபத்து வரும்னு யோசிச்சவர், ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கடலுக்கடியில் போய் இருந்திருக்கார். அவர் ஆயுள் முடியும் நாளும் நெருங்கியிருக்கு. தன்னை எதுவுமே நெருங்கவிடாம சுத்திலும் தன்னோட வீரர்களைக் காவலுக்கு வச்சிட்டு பாதுகாப்பா இருந்திருக்கார். அவருக்குத் தெரிஞ்சி சின்னப் புழு பூச்சி கூட இல்லாத சுத்தமான இடம் அது.”

“ஜாதகம் சொன்ன நேரம் நெருங்கியிருச்சி. அந்த குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டிட்டா போதும் அவருக்கு ஆயுள் கெட்டின்றது ஜாதகம் சொன்னது. அன்னைக்கு முழுக்க எதுவும் சாப்பிடல. சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகிரக்கூடாதுன்ற கவலை அவருக்கு. எதையுமே தொடவும் முயற்சிக்கல. அவரை எமன் கொண்டு போற நேரம் நெருங்க நெருங்க திக் திக்னு மனம் அதிர, பயத்துல இதயம் பக் பக்னு அடிக்க, டிக் டிக்னு கடிகார ஓசை கேட்டது. ஜாதகத்துல சொன்ன டைம் தாண்டி ரெண்டு நிமிஷமானதும் திக் திக் பக் பக் டிக் டிக் சத்தமெல்லாம் போய் உயிர் பிழைச்சதுக்கு சாமிக்கு நன்றி சொல்ல எலுமிச்சம் பழமும், பூவும் கேட்டிருக்கார்.”

“ஏற்கனவே ரெடியாயிருந்ததை காவலாளி கொண்டு வந்து வைக்க, அப்ப ஒரு காவலன் அவசரமா வந்துட்டிருந்திருக்கான். அரசரோட கெட்ட நேரம் அவன் வந்ததை அவர் கவனிக்கல. மனதில் உயிர் பிழைச்ச நிம்மதியில் வாயால காற்றை வெளியிட்டு சுதந்திரக் காற்றை நாசியில் வேகமாக ஏற்ற அந்த வேகத்தில் எலுமிச்சம் பழத்தில் இருந்த கண்ணுக்குத் தெரியாத பூ நாகம் அவர் நாசிக்குள் நுழைஞ்சிருச்சி. அரசே மன்னிக்கவும். உங்களுக்கான நேரம் முடிய இன்னும் இரண்டு நிமிடம் பாக்கியிருக்கு. என் குழந்தையைப் பாடசாலை அனுப்ப ஐந்து நிமிடங்கள் அதிகமாக வைத்திருந்தேன்னு சொல்லவும்... விதி வலியதுன்னு அவர் சரியவும் சரியாயிருந்தது.”

“இப்ப என்ன சொல்ல வர்ற சிவா?”

“நான் சொல்ல வர்றதைக் கேளுங்க. என்னதான் விதியை வெல்ல மதியைப் பயன்படுத்தணும்னு நினைச்சாலும், விதி வெல்வார் யார்? யாருமில்லை. அந்த அரசன் யோசிக்காத ஒரு இடம் நேரம். அத்தனை நாள் அந்த நேரத்தைப் பார்த்துதான் அனைத்தும் செய்தான். ஒவ்வொரு நொடியும் அவனளவுல உயிர் செத்துப் பிழைச்சிருக்கும். கடைசியா அவன் பார்த்தப்பவும் நேரம் சரிதான். இன்னும் பொறுமையா இருந்திருக்கலாம். காலன்கிட்டச் செல்ற அவசரம் அவனுக்கு.”

“நீ என்னைக்கு எனக்குப் புரியுற மாதிரி பேசுவ சிவா?”

“என்ன அவசரம்? இருங்க விஷயத்துக்கு வர்றேன். குறுக்க பேசினா ப்ளோ போயிரும்ல.” கணவரின் முறைப்பில் சற்று அசடு வழிய சிரித்து, “பிராக்டிகலா சொல்லணும்னா,, போற உயிர் எங்க எப்படியிருந்தாலும் போகும். அது கடவுள் கணக்கு. நம்ம பையனுக்கு இத்தனை வருஷத்துல ஒரு முறையாவது இந்த மாதிரி கனவு வந்திருக்கா. படுத்ததும் நிம்மதியா தூங்கிதான் பழக்கம். இப்ப தொடர்ந்து வந்திருக்குது. அதுவும் சம்பந்தப்பட்டவங்க முகத்தை தெளிவா காண்பிச்சி.”

குருமூர்த்தி ஏதோ சொல்லவர,, “சரி சரி அப்ப கார்மேகம் கேரக்டர் ஏன் தெரியலன்னுதான? கண்டிப்பா அதுக்கும் காரணம் இருக்கலாம். அந்த அம்மனே அழைச்சிருக்கிறதால... ஆபத்து நம்ம பையனுக்குக் கிடையாது. நம்ம பையன் மூலமா வேற யாருக்கோ தண்டனை குடுக்கப்போறா.”

“சிவா...” என இடையிட்டவரைத் தடுத்து, “உங்க தவிப்பு புரியுதுங்க. என் பையனை ஆபத்துல மாட்டிவிட நினைப்பேனா? சாயங்காலம் நாம ஊருக்குக் கிளம்பறோம்.”

“நிஜமாவா சிவா?”

“கண்டிப்பா நாம ஊருக்குப் போறோம்ங்க. உங்க மன நிம்மதியும் முக்கியம். வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க. எனக்கு மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. இனிமேலாவது கொஞ்சம் சிரிச்சாப்ல இருங்க.”

“தேங்க்ஸ் சிவா. மனசிலயிருந்த பாரம் இறங்கின மாதிரியிருக்கு.”

“கடைசிவரை என்ன ப்ராப்ளம்னு சொல்லமாட்டீங்க?”

“நான்தான் ஜாதகம்னு சொன்னேனே சிவா. அப்புறமென்ன காரணம் வேணும்?”

“உண்மையை சொல்லணும்னா ஜாதகம்தான் காரணம்னா நீங்க என்கிட்ட சொல்லியிருப்பீங்க. வேற எதோ இருக்குன்னு தோணுது. இருந்தாலும் உங்ககிட்ட எதுவும் கேட்கல. வாங்க போகலாம். என்னவோ நாமதான் புதுமணத் தம்பதி மாதிரி தனியா வந்து பேசிட்டிருக்கோம்.”

“இல்லையா பின்ன” என்ற கேலியுடன் நிம்மதிச் சிரிப்பு அவரிடம்.

மதியம் அணைப்பட்டி வீட்டிற்கு வந்து தங்கள் பயணப்பைகளை எடுத்துக் கிளம்ப அப்படியே மனைவியையும் தயாராகச் சொன்னான். அவர்கள் கிளம்பும் வரை அவள் எதையும் எடுத்து வைக்காமலிருக்க திரும்பவும் அவன் சொல்ல, அவளோ அதைக் காதில் வாங்காது அமைதியாக நின்றிருந்தாள்.

“என்ன மொழி அப்பா அம்மா கிளம்பிட்டாங்க. ஏன் நின்னுட்டிருக்க?”

“கோவில்ல வச்சி நான் வரமாட்டேன் சொன்னதா நினைப்பு”

“கோவில்ல வச்சிதான் நான் தாலிகட்டினேன்னு எனக்கும் நினைவிருக்கு.”

“அதுக்காகல்லாம் என்னால வரமுடியாது.”

“ராமன் இருக்குமிடம்...”

“ஸ்ஸ்.. நிறுத்துறீங்களா? பழைய வசனம் பேசிட்டு. நீங்க ராமனாவே இருங்க. நான் சீதையா தீக்குளிக்கத் தயாராயில்ல. அதுக்குப் பதிலா என்னைச் சேர்ந்தவங்களை அழிச்சவனை நான் கண்ணகி மாதிரி எரிச்சிருறேன்.”

“யூ நோ ஏர்போர்ட்? கண்ணகி பண்ணினது ரொம்பவே தப்பு.”

“தன் புருஷனுக்காக வாதாடுனது தப்புன்னு எனக்குத் தோணல.”

“ஹேய்! வாதாடுனது தப்பில்லமா. அவங்க வாதாடுற அளவுக்குக் கோவலனுக்குத் தகுதியில்ல. ஒரு பேச்சுக்கு சொல்றேன். நான் இன்னொரு பொண்ணுகிட்ட போயிட்டு திரும்பவும் உன்கிட்ட வந்தா என்னை ஏத்துப்பியா?

“அதெப்படி முடியும்? கற்புன்றது ஆண்களுக்கும் உண்டு. நெறி தவறினவனை எப்படி ஏத்துக்க முடியும்? என்னதான் திருந்திட்டேன்னு சொன்னாலும், பழைய அன்பு நம்பிக்கை இருக்காது. நானாயிருந்தா சோத்துல விஷத்தை வச்சிக் கொன்னுருப்பேன். எக்ஸாம்பிள்காக கூட உங்களை இந்த மாதிரி விஷயத்துல சேர்த்து சொல்லாதீங்க” என்றாள் சற்று குரலுயர்த்தி.
 
Top