- Joined
- Aug 31, 2024
- Messages
- 916
- Thread Author
- #1
12
சரத்தினால் சலனத்திலிருந்தவளை ஆசுவாசப்படுத்தவென்று வந்த போனை எடுத்தவள் முகம் “ஃப்ரண்ட்அம்மாஆச்சி” என மலர...
“என்னடா ராசி ஹேப்பியா இருக்க போல. சாயங்காலம் பேசின பிறகு, ஊருக்குப் போயிட்டு போன் பண்ணுவன்னு நினைச்சேன். போனே வரல. அதான் கொஞ்சம் பயம் வந்திருச்சி. நல்லபடியா போயிட்ட தானடா?” என்றார் கவலையுடன் சேர்ந்த அக்கறையுடன்.
“இல்ல அம்மாஆச்சி. சாரி நான் இன்னும் மதுரை போகல. மேலூர்ல ஃப்ரண்ட் வீட்ல இருக்கேன்.”
“மேலூரா? உனக்கு அங்க யாரைத் தெரியும் ராசி? மேலூர்ல எங்க அக்கா ஒருத்தவங்க இருந்தாங்க. ஆனா, அவங்க கூட அங்கதான் இருக்காங்களா தெரியாது. தெரியாதவங்க வீட்டுக்குப் போயிராதடா தங்கம்” என்றார் பயத்தில்.
“ஹேய் அம்மாஆச்சி! என்னை பார்த்தா எப்படித் தோணுது. யார் கூப்பிட்டாலும் பின்னாடியே போற பாப்பான்னா. யூ நோ டார்லிங் மீ ராசி ஓகே. என்னைப் பார்த்துத்தான் எல்லாரும் பயப்படுவாங்க.”
“சரி சரி.. யார் அந்த ப்ரண்ட்?” என்றதும் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி, “நம்ம சேவியர் அண்ணா வீட்டு பிரச்சனையை சால்வ் பண்ணினவர்” என்றாள்.
‘ஓ...’ என்றவர் “எப்ப கிளம்பற?”
“மூணு நாள் இருக்கச் சொல்றாங்க அம்மாஆச்சி.’”
“அத்தனை நாளா? சரிம்மா நீ அங்க இருக்கிற பெரியவங்ககிட்ட போனை கொடு நான் பேசணும்” எனவும் சாந்தியிடம் போனை நீட்டி “அம்மாஆச்சி பேசணுமாம்” என்றாள்.
சாந்தி வேகமாக போனை வாங்கி ‘வணக்கம்’ சொல்லி ஆரம்ப நலவிசாரிப்புகள் முடித்து, “என் பொண்ணோட கல்யாணம் காலையில உங்க பேத்தி ரெண்டு நாள் எங்களோட இருக்கட்டுமே. நீங்க என்னம்மா சொல்றீங்க?” என்றார் மறுத்து விடக்கூடாதே என்ற எதிர்பார்ப்புடன்.
அதை உணர்ந்த மீனலோஜினி சிரித்தபடி, “அவ மூணு நாள் சொன்னா உனக்கு இரண்டு நாள் போதுமா” என கேலியாய் கேட்டவரிடம் “ரொம்ப நன்றிமா” என்றார்.
“நல்லா பார்த்துக்கோங்க. அவளுக்குன்னு எதுவும் வாய்திறந்து கேட்க மாட்டா. மத்தவங்களுக்கு பார்த்து பார்த்து செய்வா” என்று இன்னும் ஒரு சில ராசி புராணங்கள் பாடியே வைத்தார்.
போனை கையில் வாங்கியவள், “என்னம்மா அம்மாஆச்சி ரொம்ப ப்ளேடு போட்டாங்களா? என்னைப்பற்றி ஓவரா புகழ்ந்திருப்பாங்களே. அதையெல்லாம் நம்பாதீங்க. எனக்குப் புகழ்ச்சிப் பிடிக்காதுன்னா இந்த லோஜி கேட்கிறதே இல்லை” என்று தற்பெருமை அடித்தாள்.
அவளையே அமைதியாக பார்த்தபடி, “உன்னைப் பற்றி ஒண்ணும் சொல்லலையேமா. எதாவது சொல்லணும்னு எதிர்பார்க்குறியா?” என்று வந்த சிரிப்பை உள்ளடக்கி சொல்ல...
“ஹான்! ஒண்ணுமே சொல்லலையா? நிஜமா ஒண்ணுமே சொல்லலையா?” என்று பாவமாய் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பை வெளியிட்டு, “நான் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உளறிட்டேன் போல” என்றாள்.
சட்டென்று வாய்விட்டுச் சிரித்த சாந்தியை அனைவரும் வியப்புடன் பார்த்திருக்க அவர்களையறியாமல் கண்கள் கலங்கியது. நீண்ட வருடங்களுக்குப் பின்னான சாந்தியின் சந்தோஷச் சிரிப்பில்.
ராசியை அணைத்து “சும்மா சொன்னேன்மா. முழுக்க முழுக்க உன்னோட புராணம் தான் போதுமா!”
“அதான பார்த்தேன். என்னடா பாசத்தைப் பிழிஞ்சி லோஜியை கவுத்து வச்சிருக்கோமே. எப்படி என்னைப்பற்றி பேசாமல் இருக்கலாம். ஊர்ல வந்து வச்சிக்கிறேன்னு மனசுக்குள்ள திட்டக்கூட செஞ்சிட்டேன் தெரியுமா!” என்று ஒரு அப்பாவி லுக் விட்டாள்.
அதில் இன்னுமே சிரித்த சாந்தியின் கண்கள் கலங்கியது. அவர் கண்ணீரைக் காணவும், “என்னாச்சிம்மா? நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்” என்று பதற...
அவளை நெருங்கிய தீபா, “அது ஆனந்த கண்ணீர். ரொம்ப வருஷம் கழிச்சி மனம் விட்டுச் சிரிச்சதால வந்தது. தேங்க்ஸ்” என்றாள் ராசியை அணைத்து.
“ஹேய்! ஹலோ! எங்க லோஜியைக் கவுக்க எனக்கு பத்து வருஷமாச்சி. உங்களை கவுக்க பத்து நிமிஷம் போதும் போலிருக்கு. இவ்வளவு இளகின மனசாவா இருக்கிறது. வெரி பேட். இந்த உலகம் ரொம்ப பொல்லாதது புரிஞ்சிக்கோங்க. ஸோ பீ கேர்ஃபுல் ஓகே” என்று அந்த சூழ்நிலையை தன் கு(ழந்தை)றும்புதனத்தால் கலகலப்பாக்கினாள்.
அதில் சிரித்தாலும், “ஆமா, பத்து நிமிஷத்துல நீ யாரை கவுத்தன்னு சொல்லி இவ்வளவு பில்ம் ஓட்டுற?” என்று ஒருமையில் கலாய்த்த தீபாவிடம்...
“அப்ப நீங்க யாரும் கவுரலையா? என்னை நானே டேமேஜ் பண்ணிக்கிட்டேனா? சே... இது தெரியாம என்னோட ஃபுல் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டேன் போல” என்றதில் மறுபடியும் ஒரு சிரிப்பலை ஆரம்பித்தது.
“சரி வா போய் படுக்கலாம். இல்ல காலையில எனக்கு கணவராகப் போறவர் சாயங்காலம் தான் தாலிகட்ட முடியும்.”
“ஏன்?” என புரியாமல் விழித்தவளிடம், “தூக்கத்துல நான் கும்பகர்ணி லேட்டா தூங்கி.. லேட்டா எழுந்தா! ம்.. சொல்லு?”
“ஓகே. அப்ப ராசி பேசலை” என்றதும்...
“யார் ராசி?” என்றாள் தீபா.
“நான் தான் ராசி” என்றாள் இவள்.
“இல்ல அப்ப...” ‘ஹரிப்ரியா’ என்று சொன்னதை அவளிடம் கேட்க வந்தவளை சாந்தி தடுத்து, “சீக்கிரம் படுத்து தூங்குங்கம்மா. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்” எனறு அனுப்பினார்.
தீபாவுடன் அவளின் படுக்கையறைக்குள் நுழையப் போன ராசிக்கு, திரும்பிப் பார்க்கச் சொல்லி தன்னைத் துளைத்த பார்வையின் வீரியத்தில் திரும்ப... அவள் திரும்பியும் தன் பார்வையை மாற்றவில்லை சரத். அந்தப் பார்வை ஆசையாலோ, காமத்தாலோ அல்ல. ஒரு நன்றி, புதிதாக ஒருவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளத்தோன்றும் ஆர்வம். அதையும் தாண்டி ஒரு ஏக்கப் பார்வை.
‘அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன?’ என மனதினுள் கேட்க, வினாடிகள் நிமிடங்களாக பார்வைகளும் மாறாதிருந்தது.
தீபாவின் “என்ன அங்கேயே நின்னுட்ட? உள்ளே வா” என்ற அழைப்பில் கலைந்து உள்ளே சென்றாலும், அவனின் பார்வை தன்னைத் தொடர்ந்து உடல் சிலிர்த்து, உயிருள் ஊடுருவுவதை உணர்ந்தாள். ‘என்ன பார்வைடா இது!’ என்றது அவளின் குறும்பு மனது.
தோழிக்கு உதவுகையில் பொறுப்பான பெண்ணாக, கோவிலில் கோபக்காரியாக, காஃபி ஷாப்பில் சண்டைக்காரியாக பார்த்த ராசியை... மாடியிறங்கி வந்ததிலிருந்து தன் குடும்பத்தினருடன் அவளடித்த வாயாடல், தன் அக்காவை மனம்விட்டு சிரிக்க வைத்தது, அவளின் குழந்தைத்தனமான, குறும்புத்தனமான பேச்சி, சீரியஸான பேச்சை சிரிப்பாக மாற்றியது என அனைத்தையும் ரசித்திருந்தான்.
முன்னரும் அவள் மேல் ஈடுபாடு இருந்தது. அதை உணர்ந்தாலும் தனக்கும் அதுக்கும் செட்டாகாது என்று ஒதுங்கியிருந்தான். ஆனால், இப்பொழுது அவள் தனக்கே தனக்கு வேண்டுமென்ற எண்ணம் தோன்றி ஒருவித ஏக்கத்தை உண்டு பண்ண அவளையே பார்த்திருந்தான். தன் பாதிப்பு அவளுள்ளும் இருக்கிறது என்பதை அவளின் பார்வை உணர்த்தியது. அதை அவள் உணர்ந்திருப்பாளா என்ற ஆராய்ச்சிக்கு செல்லவில்லை சரத். அவள் உள்ளே சென்றதும் சற்று நேரத்தில் தூங்கச் சென்றான்.
மறுநாள் காலை அங்குள்ள மண்டபத்தில் திருமண நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. காலையிலேயே மணமகளுடன் ராசியும் எழுந்து கிளம்ப, பயணத்திற்கு சுடிதார் மட்டுமே எடுத்து வந்திருந்தாள். ‘சே... நேத்து கட்டியிருந்த சேலையை இன்னைக்கு எடுத்து வச்சிருக்கலாம்.’ மனதில் தோன்றினாலும் சுடிதாரை அணியப் போனவளை சாந்தி தடுத்து தீபாவிற்காக வாங்கிய புது பட்டுப்புடவையை கொடுத்து அணியச் சொன்னார்.
தீபாவிற்கு தைத்திருந்த ஜாக்கெட்டில் சின்னச் சின்ன அட்ஜெஸ்ட் செய்து அந்த காலை நேரத்தில் சாந்தி தைத்துக் கொடுத்ததோடில்லாமல் அதற்கு ஏற்றாற்போல் நகைகளும் கொடுக்க... மறுத்தவளை மல்லுக்கட்டி சம்மதிக்க வைத்தார். இந்த நேரத்தில் இது அவருக்குத் தேவையில்லாத வேலைதான். இருந்தாலும் அவரால் ராசியை வேற்றாளாகப் பார்க்க முடியவில்லை. தன் பெண்ணே அவளுருவத்தில் வந்ததாகவே எண்ணினார்.
விடியற்காலையிலேயே சரத் மண்டபம் செல்ல மணப்பெண்ணுடன் வந்திறங்கிய ராசியையே நிறைய பேர் வைத்தகண் வாங்காமல் பார்க்க... சரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? அவளைப் பார்த்து அயர்ந்தவன் கண்களாலேயே அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளைவிட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்த மனதை தடுக்க வழியில்லாமல் தடுமாறினான்.
தீபாவோ, “ப்ரியா எல்லாரும் கல்யாணப் பொண்ணான என்னைப் பார்க்கலை. உன்னைத்தான் பார்க்கிறாங்க. ஒருவேளை நீதான் பொண்ணுன்னு நினைச்சிட்டாங்களோ!”
“தீபா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? எனக்கு ஏற்கனவே சங்கோஜமா இருக்கு. உங்களைத் தவிர என்னை வேற யாருக்கும் தெரியாது. அவங்களையும் எனக்குத் தெரியாது நானே எப்படிடா தெரியாத இடத்தில் இருக்கிறதுன்னு சங்கடப்பட்டுட்டு இருக்கேன். நீங்க வேற” என்றாள்.
“ஹேய் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். ஆனா, உண்மையிலேயே நீ ரொம்ப அழகாயிருக்க” என்றாள் மனதார.
“இல்ல நீங்க தான் அழகு என்னைவிட.”
“இப்ப என்ன அழகுப் போட்டியா வைக்கப்போறோம். வா உள்ளே போகலாம்” என... பெண்ணழைப்பு முடித்து பெண்ணை மேடையில் அமரச் செய்ய... ராசியை தன்னுடனேயே நிற்கச் சொல்லிவிட்டாள் தீபா.
யோகேஷ் தீபாவிடம் குனிந்து, “இவங்க எங்க இங்க?” என்றான் மெதுவாக.
“உங்களுக்கு அவளை முன்னாடியே தெரியுமா?” தீபா ஆச்சர்யமாய் கேட்டாள்.
“ஏன் தெரியாது. அன்னைக்கு உங்க மாமாகிட்ட பேசிட்டு போன பொண்ணுதான?” என்றான் கூலாக.
“மாமாகிட்ட பேசிட்டு போன பொண்ணா எப்ப?” என்றாள் புரியாதவளாய்.
“என்னமா மறந்துட்டியா? நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கப்ப உங்க மாமா மேல தெரியாம சுடுதண்ணீர் ஊத்தி மன்னிப்பு கேட்டுட்டுப் போனாளே. அது இந்தப் பொண்ணுதான்” என்றான்.
அன்று காஃபி ஷாப்பில் சரத்திடம் குனிந்து பேசுகையில் தாயும் மகளும் கவனிக்கவில்லை என்றாலும் யோகேஷ் உரிமையாய் சரத்திடம் பேசியவளைப் பார்த்திருந்தான். அதனால் பார்த்ததும் அவளை இனம் கண்டுகொண்டு சொன்னான்.
‘ஓ...’ என்றபடி சட்டென்று சரத்தைப் பார்க்க அவனோ வேறெங்கோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்க, ‘மாமா யாரைப் பார்க்கிறாங்க?’ என்று பார்த்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.
அங்கோ ராசி தன் தந்தையிடம் வாயாடிக் கொண்டிருந்தாள். ‘அடப்பாவி மாமா! நேத்து நைட் மேரேஜ் பத்தி கேட்டப்ப அவ்வளவு பிகு பண்ணி ஓடிட்டு, இப்ப என்னடான்னா பப்ளிக்கா சைட்டடிக்கிறீங்களா! இந்த பொண்ணும் தான் மாமாவைத் திரும்பிப் பார்த்தால் என்ன’ என்றும் தோன்றியது. ‘இருங்க உங்களை அப்புறம் பார்த்துக்கறேன்’ என்றவளுக்கு அதற்கு பிறகு நேரமே கிடைக்கவில்லை யோகேஷிற்கு மனைவியானதால்.
ராசியைப் பற்றி விசாரித்தவர்களுக்கு இல்லாத தங்கையை வரவழைத்து, தங்கை மகள் தன் மகள் என்றார் சாந்தி. ராசிக்கோ நேற்றுத்தான் அவர்களை முதன்முறையாக சந்தித்தோம் என்ற நினைவே இல்லை. தன் வீடு போல் அனைத்து வேலைகளிலும் பங்கெடுத்தாள். மாப்பிள்ளை ஊர் உள்ளுரே என்பதால் பெண்ணழைப்பு மாப்பிள்ளை அழைப்பு, சீர் அது இதென்று எல்லாம் முடிய மூன்று நாளாகியது.