- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
12
தன்னருகில் நின்றிருந்தவன் கதிர் என்றுணர்ந்ததும் சுற்றிலும் தேட, “என்ன ஏர்போர்ட்.. என்னைப் பக்கத்துல வச்சிட்டே யாரைத் தேடுற?”
“இளா அத்தானைதான். அவங்க இங்கதான் இருக்காங்க.”
“அதான் எனக்குத் தெரியுமே.”
“என்ன சொல்றீங்க? இளா அத்தானை உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் வியப்பாக.
“யா.. என்னை எனக்கே எப்படித் தெரியாமல் போகும்.”
“என்ன உளர்றீங்க?” என்றாள் காட்டமாக.
“உண்மை எப்பவும் உளறலாகத்தான் இருக்கும். நான் இளங்கதிர்” என்றான் அன்று போல் பளிச்சென்ற புன்னகையுடன்.
வினாடிகளேனும் அச்சிரிப்பில், பெயரில் ஸ்தம்பித்து நின்றாள் என்றால், எங்கே அன்று போல் மயக்கம் போட்டு விடுவாளோ என்ற பயம் அவனுள் எழ, “ஹேய் மங்கை! போதும் ஷாக். அன்னைக்கு மாதிரி மயங்கிராத?” என்றதில் மங்கையவளுக்கு உணர்வு வந்தது.
“உங்க பெயர் என்ன?” அவன் முகம் பார்த்துக் கேட்க, அதில் தன் இளா அத்தானின் ஜாடையைத் தேடினாளோ!
“இப்பதான சொன்னேன். இளா.. இளங்கதிர்” என்றான்.
எதையோ எதிர்பார்த்த மனம் சிறிது ஏமாந்துதான் போனதோ!
மங்கையானவள் முகம் அப்பட்டமாக ஏமாற்றத்தை வெளிக்காட்ட... அவள் எதனால் அப்படியிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் மனம் சிறிது வாடினாலும் தன்னைத் திடப்படுத்தி, “என்னாச்சிமா? ஏன் திடீர் சோகம்?”
“அது இப்ப பெரியவர் ஒருத்தர், இளா அத்தான் உன்னோட இருக்கார் சொல்லி, இன்னொன்னும் சொன்னார். அதான் சந்தோஷத்துல எங்கன்னு தேடுறேன்.” மனம்போல் மாங்கல்யம் என்று அவர் கூறியதை மறைத்தாள்.
“நான்தான் உன்னோட இருக்கேன் மொழி.” அவனை திருமொழி முறைக்க... “நீயே பாரு இங்க என்னைவிட்டா வேற யாருமில்லை. இளா என்ல பாதிப் பெயர். சோ நான்தான இளா” என்றான் கண்ணடித்து. அவனைத் திட்ட அவள் வார்த்தைகள் தேட... “ஹேய் பூஜைக்கு ரெடியாகிருச்சி வா போகலாம்” என அவசரமாய் நடக்க ஆரம்பித்தவன் அவள் தன்னை முறைப்பதை உணரத்தான் செய்தானோ! சின்னதாக சிரிப்பு அவனிடத்தில்.
“ஹேய் யக்கா எங்க போயிட்ட? டைமாகுது வா வா.. மச்சான் என்ன என் அக்கா பின்னாடி சுத்துறிங்க. முக்கியமான வேலையிருக்கு வாங்க” என்று இழுத்துச் சென்றான்.
ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. ஏதோ ஒன்று அவன்புறம் தன்னை இழுப்பதை உணர்ந்த நிமிடம், சாமி முன் தன்னையறியாமல் அவனருகில் நின்றாள்.
பூசாரி கொண்டு வந்ததை கையிலெடுத்து, “ம்... கட்டுங்க மச்சான்” என்றான் அன்பழகன்.
அதைக்கண்ட குருமூர்த்தி ‘என்ன நடக்குது?’ என்பதாய் முன்னே வர, சிவகாமி அவரைப் பிடித்து நிறுத்த, கோபத்தில் முறைத்த கணவனிடம், “ப்ளீஸ்ங்க. நம்ம பையனுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. இதை நிறுத்தி வேற பொண்ணு பார்த்தாலும் அவன் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் சொல்றான். அவளும் இதைவிட்டா சம்மதிக்கமாட்டா” என்றார் கெஞ்சலாக.
“சிவா! உனக்கு இதுல உள்ள சீரியஸ்னெஸ் தெரியல. இது நடந்தா எல்லாமே தப்பாகும்.”
“தப்பானாலும் பரவாயில்லங்க. என் பையனுக்குப் பிடிச்ச லைஃப் கிடைக்குது. அதுவே எனக்கு சந்தோஷம்தான்.”
“சிவா.. சிவா.. நான் உனக்காகத்தான் சொல்றேன்னு ஏன் புரிஞ்சிக்கமாட்டேன்ற. பையன் பாசம் உன் கண்ணை மறைக்குது.”
“எனக்காகத்தான்னா.. நான்தான் முழுமனசோட சம்மதிக்கிறேனே. அப்புறம் என்னங்க?”
‘ஐயோ! உனக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன். இங்கயிருந்து போக நான் வழி தேடினா, நீ இங்கயே மருமகளைப் பிடிச்சி...’ மனம் அவரைக் குத்திக் கூறுபோட்டது. ,கதிர் வேண்டாம், என தடுக்குமுன், இளங்கதிரானவன் மங்கையானவள் கழுத்தில் தாலி கட்டினான்.
மொத்த அதிர்ச்சியும் சேர்ந்த அவளின் பார்வை கழுத்தில் கிடந்த தாலியில் இறங்க, யோசிக்கக் கூட இல்லாமல் சட்டென்று கழட்டி கதிரின் மேலேயே விசிறியடிக்க... சுற்றி நின்றிருந்தவர்கள் அந்த செயலில் புரியாமல் நின்றார்கள்.
“ரொம்ப தேங்க்ஸ்க்கா. எங்க அதைக் கழட்டாம விட்ருவியோன்னு பயந்துட்டேன்” என்றவனுக்கு முந்தைய தின நிகழ்வுகள். தன் அக்காவின் நல்வாழ்விற்காக தனக்கு அரைகுறையாக நினைவிருந்த அவளின் பிறந்தநாளை காமாட்சியிடம் கேட்டுத் தெளிவுபடுத்தி, நேரே ஜோசியரைச் சந்தித்து ஜாதகம் பார்த்தான்.
“மங்கையர்கரசி! இளங்கதிர்! பெயர் ராசி நல்லாயிருக்கு. ஆனா, பொண்ணோட ராசிக்கு இரு தாலின்னு இருக்கு தம்பி” என்று பிரஷாந்தைப் பார்த்தார்.
சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் அமர்ந்தவன், “இரு தாலின்னா? தாலி மட்டும்தானா? இல்ல உயிரிழப்பா ஜோசியரே” என்றான்.
“உயிரிழப்பு சாத்தியமில்லை. தாலி மட்டும்தான். அதுவும் அடுத்தடுத்து கட்டணும். முதல்ல ஒரு முறை கொஞ்ச நாள் இடைவெளிவிட்டு ஒரு முறைன்னு கட்டக்கூடாது. நேரங்கள்தான் வித்தியாசப்படலாம். ஆனா, நாட்கள் வித்தியாசப்படக்கூடாது. இல்லன்னா இந்தப் பொண்ணுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அப்படியே முடிஞ்சாலும் கணவனோட சேர்ந்து வாழாது. பொண்ணோட ஜாதகப்படி கல்யாண யோகம் வந்திருச்சி. நான் சொன்ன மாதிரி இந்த மாசத்துக்குள்ள முடிச்சா பொண்ணுக்கு மனம்போல் மாங்கல்யம்.”
அப்பாவிடமும் அண்ணனிடமும் பேசி முடிவுக்கு வந்தவன் தன் அக்காவைத் தேடிச்செல்ல கதிர், ஊருக்குப் போறேன் என்றதும் அவர்கள் முன் விழுந்துவிட்டான். தன் எண்ணம் போல் ஊருக்குச் செல்லாமல் கோவிலுக்கும் வர கதிரிடம் இங்கு வந்துதான் தான் எடுத்த முடிவைச் சொன்னான்.
செய்யப்போவது தப்பென்று தெரிந்து அவளுக்காகவும் தனக்காக சம்மதித்து தாயிடமும் சொல்லி அனுமதி வாங்கிவிட்டான் இளங்கதிர்.
“என்ன லுக்கு? நீ இப்படித்தான் செய்வன்னு தெரியும். இந்தாங்க இளா அத்தான் கட்டுங்க” என்றதில்... “இ..ளா அ..த்..தா..ன்” என மங்கையர்க்கரசி ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்த நேரம், ‘மனம்போல் மாங்கல்யம்’ பெரியவர் சொன்னது நினைவுவர அவனை கண்சிமிட்டாமல் பார்க்கையிலேயே... அவள் மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கையில் திரும்பவும் தாலி கட்டினான் இளங்கதிர்.
கண்கள் இருள மயங்கப்போனவள் உள்ளங்கையைத் தன் கைகளால் பிடித்துத் தாங்க, மின்சாரம் தாக்கியது போல் உடலில் அதிர்வு வர, “மங்கை!” என்றான் அவள் கண்பார்த்து.
அக்குரலிலிருந்த மென்மையில் பெண்ணவளும் அவன் கண்பார்த்து, “இளா அத்தான்” என்றாள் மௌனமான உச்சரிப்புடன்.
எது பேச வைத்ததோ, “ம்... உன் இளா அத்தான்தான்” என்றான் அவனறியாமல்.
அவ்வார்த்தைதனில் முடியும்பொழுது சம்மதமாக கோவிலின் மணிகள் சப்தம் எழுப்பியனவோ!
“பொய்யில்லையே?”
“மங்கைகிட்ட இளா என்னைக்கும் பொய் சொல்லமாட்டான்” என்றவனுக்குள் ‘நீ எந்த கூட்டத்தில், எந்த சூழ்நிலையிலும் உன் கைகோர்த்தா போதும் உன்னைக் கண்டுபிடிச்சிருவேன்.’ என்றோ யாரிடமோ சொன்னாற்போல் ஒரு ஞாபகம் கதிருக்கு. சட்டென்று கையில் சிறிது நடுக்கம் எழ தன் நினைவுகளைத் தட்டிப்பார்க்கையில் தோன்றிய நினைவுகள் அனைத்தும் வந்த வேகத்திலேயே மறந்தன.
அவர்களையும் அத்திருமணத்தையுமே பார்த்திருந்தாள் கயல்விழி. தன்னால் அண்ணன் என்று அழைக்கப்பட்டவன் ஒரு பெண்ணுக்குத் தாலி கட்ட, அதே வேகத்தில் அதை அவள் விசிறியடிக்க, இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனின் இளா அத்தானில், ‘அண்ணா’ என்ற உச்சரிப்பு அவளுள்.
திரும்பவும் தாலிச்செயினைப் போட்டதும் மயங்கப்போனவள் கைபிடித்து மங்கை என்றதும், ‘மங்கையா! என் மாமன் மகள் மங்கையர்கரசியா? அவளுக்கும் என் அண்ணனுக்கும் திருமணமா? அதை நான் பார்க்கிறேனா? என் உறவுகளில் இருவரை நான் பார்த்துவிட்டேனா?’ மகிழ்ச்சி தாளவில்லை கயல்விழிக்கு. ஆனந்தமாய் கண்களில் கண்ணீர் மட்டுமே. ‘தாயே! இத்தனை ஆண்டுகள் தவத்திற்கான பலன் கிடைத்துவிட்டதா? என் உறவுகளை அடையாளம் காட்டிவிட்டாயா?’
மகனின் முகமாற்றத்தைக் கவனித்த குருமூர்த்தியின், “கதிர்” என்ற அலறல் அம்மலையெங்கும் எதிரொலித்தது.
வேகமாக எழுந்தமர்ந்தான் ஜெயராம். முகமெங்கும் வியர்வை பூக்க மனதினுள் இனம் புரியாத பயம் அவனை ஆட்கொள்ள, “இளநாதன்” என்றான் சத்தமாகவே.
அந்த நாதன் ஸ்டீல் கம்பெனி அலுவலக அறைக்குள் இரவு முடிந்த மீட்டிங்கினாலும், ஆபீஸ் சீக்கிரம் வரவேண்டிய அவசியத்தினாலும் வந்திருந்தவன் அனைத்தையும் முடித்து சேரில் அமர்ந்தவாக்கில் கண்மூட, சில நிமிடங்களில் வந்த கனவில் அரண்டு போனான் அவன்.
“வரமாட்டேன்னு நினைச்சி சந்தோஷமா இருக்கியாடா. உன் வாழ்வுக்காக நான் குடுத்த கெடு முடிஞ்சிருச்சி. வந்துட்டேன்டா! பழிக்குப்பழி வாங்காம ஓயமாட்டான்டா இந்த இளநாதன்.”
கடுங்குரலுடன் ஆக்ரோஷமாய் ஒரு உருவம் அவன் கண்முன் நிழலாய் தோன்றி மறைந்தது. ‘இல்ல.. இளநாதன் செத்திருப்பான்’ என நினைக்கும் போதே அவனின் சடலம் யார் கையிலும் சிக்காதது நினைவு வந்தது. அப்படி நடந்திருமோ? இனிமேல் நான் ஜாக்கிரதையாக இருக்கணும். மனம் முழுவதும் பயம் நிறைந்திருந்தாலும் அதை எதிர்கொள்ள தன்னிடம் அரசியல் பலமிருப்பதை எண்ணி மீசையை முறுக்கினான் ஜெயராம்.
சட்டென்று நினைவு கலைந்த கதிர் திருவை நிறுத்தி, “அப்பா” என்றான்.
“வா கிளம்பலாம்” என்றார் கோப முகமாய். தகப்பனை அந்தளவு பார்த்திருக்காத கதிரும் சம்மதமாய் தலையாட்ட...
“மச்சான் பிள்ளைங்க சாமிகிட்டயும் பெரியவங்ககிட்டேயும் ஆசி வாங்கட்டும் கிளம்பலாம்” என்றார் காமாட்சி.
சாமி முன் விழுந்து கும்பிட்டு, அங்கிருந்த குங்குமத்தை பத்மினி எடுத்துக் கொடுக்க, மனைவியின் நெற்றியிலிட்டு தாய் தகப்பனிடம் ஆசீர்வாதம் வாங்க... ஆசீர்வதிப்பதைத் தவிர வழியில்லை குருமூர்த்திக்கு. “சிவா வா” என்று மனைவியையும் அழைத்து வாழ்த்த... காமாட்சி ரத்தினம் தம்பதியரிடமும் ஆசி வாங்கினார்கள்.