• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
11



“பையன் யாரும்மா? ரொம்ப நேரமா உங்களுக்காகத்தான் காத்திருந்தான்.”

“நம்ம கீர்த்தியைப் பொண்ணு கேட்கிறான் கார்த்திமா” என்றார் மகளிடம்.

“பையன் எப்படிம்மா? நல்ல மாதிரியா தெரியுறானா?”

“பையன் நல்லவனாதான்ம்மா இருக்கான். நான் வீட்ல போயி பேசிட்டு நாளைக்கு வரும்போது உங்ககிட்ட சொல்றேன்” என்று நேரே மகள் வீடு சென்று ஆனந்த் பற்றிய விவரங்கள் அவளிடம் சொல்ல...

“அம்மா, பையனைப் பார்த்துப் பேசியது நீங்க. உங்க கணிப்புப்படி பையன் எப்படின்னு நீங்களே சொல்லுங்க?”

“குறை சொல்ற மாதிரி இல்லமா. பார்க்கப் பழக நல்லவனா தெரியுறான். முக்கியமா உண்மையை மறைக்காம சொல்றான்.”

“அம்மா இப்பலாம் நிறைய பேர் நல்லவனா நடிக்கிறதுல கை தேர்ந்தவனாதான் இருக்காங்க. அவர் உண்மையைப் பேசினதா உங்களுக்கெப்படித் தெரியும்?”

“கண் முகபாவனை பாடி லேங்க்வேஜ் அன்ட் அவன் தேடி வந்த பொண்ணோட அம்மான்னு தெரிஞ்சும், பொண்ணு கேட்டதுக்காக மன்னிப்பு கேட்கமாட்டேன்னு சொன்னப்ப தெரிஞ்சது அவனுடைய குணம்.”

“ம்... நீங்க ஒரு முடிவெடுத்தா சரியாத்தான்மா இருக்கும். எதுக்கும் விசாரிச்சிக்கோங்க. இப்பல்லாம் நம்பவச்சி ஏமாத்துறதுதான் ட்ரெண்ட்” என்றாள்.

“அதை நான் பார்த்துக்கறேன் கார்த்தி. சுபாஷ் எங்க?”

“சார் சாப்பிட்ட களைப்பை மொட்டை மாடியில் போய் உருண்டு புரண்டு சரிபண்ணப் போயிருக்காங்க” என்றாள் மாடியிலிருந்து இறங்கி வந்த கணவனைக் கவனிக்காமல் கவனித்து.

“அத்தை வாங்க. போன் பண்ணியிருந்தா கூப்பிட நான் வந்திருப்பேனே?”

“அதைவிடு. மொட்டை மாடியில் உருண்டு புரண்டியாம்? எதுவாயிருந்தாலும் நம்ம ஏரியாவுலயே உருளு. பக்கத்து ப்ளாட்ல உருள அது உன் அத்தை வீடு கிடையாது” என கிண்டலடிக்க... அவனின் மனைவியவளோ சிரிக்க...

“அத்தை” என சிணுங்கி மனைவியை முறைத்து, “என்னதான் வருணபகவான் கிளப்பினாலும் ஒரு முறைதான் பக்கத்து வீட்டுக்கு படிதாண்டி போவோம். அப்புறம் எப்பவும் ஸ்டெடிதான். ஏன்னா நான் படிதாண்டா பத்தினன்” என்றான் நிமிர்வாக.

“ஹா..ஹா பத்தினியின் ஆண்பால் பத்தினன். நல்லாத்தான்டா இருக்கு” என்று சிரித்தபடி, “வளைகாப்புக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. நீங்க இப்பவே வீட்டுக்கு வந்திடுறீங்களா?”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, “நாங்க முந்தின நாள் வர்றோம்” என்றார்கள்.

“சரி உங்க இஷ்டம். கீர்த்திக்கு ஒரு வரன் வந்திருக்கு. என்ன பதில் சொல்லன்னு தெரியல.”

“நல்ல இடம்னா முடிச்சிடலாமே அத்தை.”

“இல்லபா. அவளோட பெரியவ வித்தி இருக்காளே. அவளை விட்டுட்டு சின்னவளுக்கு எப்படின்னு யோசனையாயிருக்கு.”

“வித்திக்கும் பார்க்க ஆரம்பிச்சிடலாம் அத்தை. அப்பாகிட்ட பேசலாம். அதுக்காக கீர்த்திக்கு வந்த சம்பந்தத்தை ஏன் விடணும்?”

“ம்... நான் அண்ணன்கிட்டயும் உன் மாமாகிட்டயும் பேசிட்டு சொல்றேன்” என்றார்.

தாய் சென்ற சில நிமிடத்திற்கெல்லாம் கார்த்திகாவின் போன் அழைக்க எடுத்துப் பார்த்தவள் முகம் பளிச்சென்றாகிட, யாரென்ற கணவனின் சைகையில், “ஃப்ரண்ட்” என்றாள் உதடசைத்து.

“ஹேய் சாது எப்படியிருக்க? அண்ணா அன்ட் உன்னோட ஜுனியர் எப்படியிருக்காங்க? அப்புறம்...”

“ஹேய் கார்த்தி ஒண்ணொன்னா கேளு. இப்படி மூச்சுவிடாமல் பேசினா உன் பேபி பயந்திடப்போறாங்க” என்றாள் கிண்டலாக.

“என் பேபி அப்படிலாம் பயப்படமாட்டாங்க. முதல்ல நான் கேட்டதுக்குப் பதில்?”

“அனைவரும் நலம்! நலம் அன்ட் நலம்!”

“நக்கல் உனக்கு. சரி என்ன திடீர் போன்?”

“ஏன் போன் பண்ணினன்னு கேட்குறியா?”

“ஏய் சாது!”

“அப்புறமென்ன! நான் என் ப்ரண்டை அடிக்கடி பார்க்க முடியாட்டியும் போன்ல பேசலாம்னு பார்த்தா, சாதனாவையே கேள்வி கேட்கிற நீ. அண்ணாகிட்ட குடு நான் பேசிக்கிறேன்.”

“அவங்க ஏற்கனவே பழம். இதுல நீ வேறயா. நீ ஒண்ணும் வாழைக்காய்க்கு வாய்ப்பாடு சொல்லிக் குடுக்கத் தேவையில்லை.”

“ஹாஹா வாழ்க சாதனாவின் புகழ்! வளர்க என் புதுமொழி!”

“ஐயோடா பார்த்து! சரி சாது இந்த சண்டே என்னோட வளைகாப்பு. மறக்காம குடும்பத்தோட வந்திரு.”

“யா ஷ்யூர் கார்த்தி.”

“நடுவுல எதாவது காரணம் சொல்லி வராமலிருந்த அவ்வளவுதான்.”

“ஓகே கூல். கண்டிப்பா வளைகாப்புல சாதனா அன்ட் பேமிலி இருக்கும். சரி வச்சிடறேன்” என்று போனை வைக்க...

“ஹேய் கருவாச்சி! அப்ப நாம புது மணமக்கள் பதவியிலிருந்து விலகுறோமா?”

அவனது கருவாச்சியில் முறைத்து, “புரியல?” என்றாள்.

“இல்லமா. வித்யா இல்லன்னா கீர்த்திக்கு மேரேஜானா அவங்க நியூ கபுள் அகிருவாங்க. நாம பழசாகிடுவோம்ல சொன்னேன்.”

“கல்யாணம் முடிஞ்சி ஒரு வருஷம் மேலாகுது. இன்னும் நியூலியா? நக்கல்தான் மாம்ஸ் உங்களுக்கு. முதல்ல வித்யாவுக்கு நல்ல இடமா பாருங்க.”

“பார்த்துட்டா போச்சி. சரி ஏழாவது மாசமே வளைகாப்பு முக்கியமா? பேசாம டேட் மாத்திடுவோமா?”

“டேட் பிக்ஸ் பண்ணியாச்சேங்க. முதல் குழந்தைன்றதால அவங்க சீக்கிரமே வைக்க பிரியப்படுறாங்க.”

“ஆனா நம்மளைப் பிரிக்கிறாங்களே.”

“என்னது பிரிக்கிறாங்களா? என்னோட சேர்த்து நீங்களும் அங்கதான் வரப்போறீங்க. பக்கத்து வீடாயிருக்கிறப்ப பிரிவு எங்க வந்தது. எங்கயோ கண்காணாத இடத்துக்கு அனுப்புற மாதிரி சொல்றீங்க?”

“அப்ப சுவரேறிக் குதிக்கலாம்ன்றியா?”

“ஐயே பேச்சைப்பாரு. அதான் லைசன்ஸ் வாங்கியாச்சில்ல அப்புறம் எதுக்கு சுவர் ஏறுறீங்க?”

“சுவரேறிக் குதிக்கிறது ஒரு கிக்டி செல்லம்.”

“உங்களை..” என்று காதைத்திருக... “என்னை மட்டும்தான்” என்று அவள் கைபிடிக்க... சந்தோஷச் சிரிப்புகள் அங்கே.

வீட்டிற்கு வந்த சுபாஷிணி கணவரிடமும் தன் அண்ணனிடமும் ஆனந்த் பற்றிப் பேசி முழு சம்மதத்தையும் வாங்கி, கார்த்திகாவின் வளைகாப்பன்று அவர்களை வரச்சொல்லி தன் அண்ணன் மூலம் போனில் தெரிவித்தார்.

ஆனந்த் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மனதை அடக்கியபடி தாய்க்கு அழைக்க, அவர் எடுக்காமல் விட்டதும் அவனின் சந்தோஷமனைத்தும் பனிக்கட்டியாய் உருகியது. “பெண் பாவம் பொல்லாதுடா ஆனந்த்!” தாய் தன்னைப் பார்த்து கடைசியாக பேசிய இல்லை தூற்றிய வார்த்தை.

பின் தங்கைக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல... என்னதான் திருமணத்திற்குப் பிறகு சாதாரணமாக பேசினாலும் சில விலகல் உடன்பிறப்புகளுக்குள் இருந்ததுதான். இன்று அண்ணன் பேசிய திருமண விஷயத்தில் அனைத்தும் மறந்தவளாய் உற்சாகமாகினாள்.

“சரிண்ணா நான் அம்மாகிட்ட சொல்றேன். நீ பத்து நிமிஷம் கழிச்சி அம்மாவுக்குக் கால் பண்ணு” என்றவள் திரும்பவும் “அண்ணா” என்று தயங்கி, “உனக்கு நாங்க பொண்ணு பார்க்கிறதை விட்டுட்டு உன்னையே பார்த்துக்குற சூழ்நிலையில் வச்சிட்டோம். சாரிண்ணா” என்றாள் வருத்தத்துடன்.

“அனு நீதான அம்மா பார்க்கிறதா சொன்ன? அதனாலதான் பெண் பார்க்க வந்தேன்.”

“அ..அது இவங்கதான்ணா அப்படி சொல்லச் சொன்னாங்க. அம்மா பேரை யூஸ் பண்ணினா நீ எதாவது நல்ல முடிவெடுப்பேன்னு” என்று கணவன் சாரகேஷை மாட்டிவிட்டாள்.

“ஓ... அப்ப அம்மா சொல்லலையா? ப்ச்.. பெரியவங்க செஞ்ச நல்லதை என்னோட குணத்தால கெடுத்தேன்ல. அதுக்கான தண்டனையா நினைச்சிக்கிறேன்” என்றவன் குரல் இறங்கியிருக்க...

“அதை மறந்திடலாம்ணா. நான் சொன்ன மாதிரி அம்மாவை பேச வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என வாக்குக் கொடுத்து, “என்னன்ணா லவ்வா?” என்றாள் சீண்டலாய்.

“அப்படின்னு சொல்ல முடியாது அனு. பட் பிடிச்சிருந்தது. உடனே கேட்கல. நீ பொண்ணு பார்க்கிறாங்கன்னு சொன்னதும் அவள்தான் வேணும்னு மனசு சொல்லிச்சி. அதான் நேர்ல வந்து நடந்த எல்லாத்தையும் சொல்லிக் கேட்டேன்.”

“அண்ணி பெயர் என்னண்ணா?”

“கீர்த்தி!”

“முழுப்பெயர் சொல்லுண்ணா?”

“அ..அது தெரியாதுமா” என அசடு வழிய சிரித்து, தான் பெண் பார்த்த கதையைச் சொன்னான்.

“சரி விடுண்ணா. நேர்லயே கேட்டுக்கலாம்.”

“தேங்க்ஸ்மா” என்றான் மனதார.

“ப்ச்.. என்னண்ணா நீ. சரி எப்ப பொண்ணு பார்க்கப் போறோம்?”

“ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லி போன் பண்ணினாங்க அனு. அம்மாவுக்கு போன் பண்ணினேன் எடுக்கல. அதான் உன்கிட்ட சொல்றேன்.”

“சரிண்ணா. நான் அம்மாகிட்ட பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்” என்று போனை வைக்க... தங்கையிடம் பேசியதில் மனம் லேசாக, தாயைப் பற்றிய கவலை சிறிது குறைய, ஒரு முறையே பார்த்த தன் வருங்கால மனைவியைப் பற்றி எண்ணலானான்.

தங்கையிடமிருந்து மெசேஜ் வந்ததும் தாய்க்கு முயற்சிக்க... போன் எடுக்கப்பட்டதும் அவனது மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. இருப்பினும் எதிரில் அமைதியாயிருக்க, “அம்மா தயவு செய்து என்னை மன்னிச்சிருங்கம்மா. இனிமேல் எந்த வகையிலும் உங்களைன்னு இல்ல வேற யாரையுமே கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்க மாட்டேன்மா. எனக்கான தண்டனை போதும்மா. அம்மா ப்ளீஸ் பேசுங்கம்மா. நீங்க எது சொன்னாலும் கேட்கிறேன்மா. ப்ராமிஸ்மா” என்றான் கெஞ்சலாக.

“எப்ப பொண்ணு பார்க்கப் போகணும்?” என்றார் ஒரே வார்த்தையில்.

தாயின் மௌனம் உடைத்த வார்த்தையில் மகிழ்ந்தவன் கண்கள் கலங்கி குரல் கரகரப்பாகி, “ரொ..ரொம்ப நன்றிமா. எ..எங்க கடைசி வரை...”

“ஆனந்த் அழாத. ஏதோ கெட்ட காலம்னு விட்டுரலாம். பொண்ணு பற்றிய தகவல் சொல்லு. அப்படியே ஜாதகம் அனுப்பச்சொல்லு பார்த்திடலாம்.”

“ஜாதகமா? அது ஏன்மா?” அதனால் எதுவும் வில்லங்கமாகிடக் கூடாதென்ற பயம் இருந்தாலும் இரண்டாண்டுகள் பேசாமலிருந்த தாயின் பேச்சை மீற மனமில்லை அவனுக்கு.

அவன் பயம் உண்மையே என்று அவன் வரவிற்காகக் காத்திருந்தது ஜாதகம் எனும் விதி!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“எல்லாம் பார்க்கணும்பா. தப்பா நடக்காதுன்னு நினை. அவங்க நம்பர் குடு பேசுறேன்” என்றார்.

“சரிங்கம்மா. நம்பர் சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்தவனுக்கு, இழந்ததைப் பெற்ற சந்தோஷம்.

அதன்பின் ஜாதகம் பற்றிப் பேசியதில் சுபாஷிணி அங்கேயே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி ஆனந்த் ஜாதகத்தை கம்ப்யூட்டர் காப்பி செய்து, ஜாதகமும் பார்க்கப்பட்டு, பெண் பார்க்கும் படலமும் முடிவு செய்யப்பட்டது.

ஜாதகத்தில் நடந்த குழப்பங்கள் யாருக்கும் தெரியாமல் போக, ஞாயிறு இனிதே விடிந்தது சில பல திருப்பங்களுடன்.

காலையில் வளைகாப்புடன் பெண்பார்க்கும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க, சுபாஷ் மனைவிக்குத் தேவையானதைச் செய்வதாகச் சொல்லி அனைத்தையும் சொதப்பிக் கொண்டிருக்க, மனைவியவளோ கண்டித்துக் கொண்டிருக்க, இருவரின் தங்கைகளின் கேலிப் பேச்சுக்களும் எல்லையில்லாமல் சென்றது.

கீர்த்திகாவைப் பெண் பார்க்க வருவதால் வித்யாவுடன் சேர்த்து கார்த்திகாவும் கிண்டலடிக்க... “ம்கூம் முதல்ல வித்திக்கு முடிச்சதும்தான் எனக்கு” என்றாள் கீர்த்திகா.

“ஹேய் கீர்த்தி! இன்னைக்குப் பார்க்க வர்றது உன்னை. என்னையில்லை.”

“ப்ச்.. பேசாம உன்னையே பார்த்திருக்கலாம். கொஞ்சநாள் ஃப்ரீயா இருந்திருப்பேன். நான் இப்பதான் காலேஜ் முடிச்சிருக்கேன். அதுக்குல்ல...”

“அடிச்சேன்னா பாரு. உனக்குப் பேசுற பையன்னா எனக்கு அண்ணன் முறையாகுது.”

“லூசு அது கன்பார்ம் ஆனாதான். அதுக்கு முன்ன நமக்கு யாரோதான்.”

அவளை முறைத்த வித்யா, “இப்ப எதுவும் பேச வேண்டாம். அமைதியா லட்சணமா உட்காரு” என்றாள்.

“எப்படி வித்தி? இப்படி தலைகுனிஞ்சி, பார்வையைத் தரையில் செலுத்தி, ஒண்ணுமேயில்லாத தரையில ஓராயிரம் ஆராய்ச்சி நடத்தி, அதுல டாக்டரேட் வாங்குறதுதான? தாராளமா செஞ்சிருவோம்” என்று சிரிக்க.

“செஞ்சிருவோம் இல்லமா, செய்!” என்று நகர,

“ஹான் செய்யலாம். பேசாம வர்ற வரனை உனக்கு முடிச்சிரலாம்.” சட்டென்று வாய்விட, தேவதைகளின் ததாத்சு இவர்களுக்குக் கேட்கவில்லையோ!

“அடி பிச்சிருவேன் கீர்த்தி. என்ன பேசுறன்னு புரிஞ்சி பேசுறதில்லையா?” என்று அவளுக்கு சிலபல அடிகளிட்டாள்.

“ஏன்மா சுபா, ஐயர் குறிச்சிக் குடுத்த நேரம் சரிதானா? பத்தரையிலிருந்து பனிரெண்டா? இல்ல பத்திலிருந்து பதினொன்றரையா?”

“பத்தரையிலிருந்த பனிரெண்டுதான். ஏன்ணா திடீர்னு சந்தேகம்?”

“இல்லமா ஒரு சின்ன குழப்பம்.”

அண்ணனின் முகக்குழப்பத்தை உணர்ந்தவரோ, “இருங்கண்ணா ஜாதகத்துல நேரம் இருக்கு. பார்த்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்று பீரோவிலுள்ள ஜாதகத்தை எடுத்து அமைதியாக உட்கார்ந்து பார்க்க, தான் சொன்ன நேரமே அதிலிருக்க ஒருவித திருப்தியுடன், கவரில் வைக்கப் போனவர் கண்களில் பட்டது ஜாதகம் பார்த்த இருவரின் பெயர்களும்.

சந்தேகத்தில் அதை விரித்துப் பார்த்தவர் கண்கள் அதிர்ச்சியிலாழ, அன்று பார்த்த அனைத்தையும் எடுத்துப் பார்த்தவருக்கு நடந்திருந்த குழப்பம் புரிய, தலையில் கைவைத்தபடி சில நிமிடங்கள் இருந்த சுபாஷிணி, நேராக அண்ணனிடம் சென்று நடந்த குழறுபடியைச் சொல்லி, திரும்பவும் ஜாதகத்தைக் கொண்டு போய் பார்த்து வர மனதில் பாரம் ஏறியது.

நேரம் நெருங்க நெருங்க என்ன முடிவெடுப்பதென்று புரியாமல் உழன்றவர்கள் ஒரு வழியாக மனதைத் திடப்படுத்தி மாப்பிள்ளையின் தாயை போனில் அழைத்து, தங்கள் நிலைமையைச் சொல்லி “ஏற்பாட்டை நிறுத்திவிடவா?” எனக்கேட்க, வேண்டாமென்று மறுத்த வரலட்சுமி “தாங்கள் வந்ததும் பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார்.

விடையில்லா கேள்விக்கு, விடை தேடிக் காத்திருக்கலானார்கள்.

“சொல்லு சாதனா. எங்க வந்திட்டிருக்க?”

“சாரி கார்த்தி. அப்பா திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க. ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட் வேறயா. அம்மா ரொம்ப பயந்துட்டாங்க. என்னால அங்க வரமுடியல. குழந்தை பிறந்ததும் பார்க்க வர்றேன்பா.”

“சாது முதல்ல அப்பாவைப் பாரு. மத்ததை அப்புறம் பார்க்கலாம்.”

“ஓகே கார்த்தி டாக்டர் வர்றாங்க. அப்புறம் பேசுறேன்” என்றதும் கார்த்திகா போனை கையில் வைத்தபடி, சாதனாவை நினைக்கையில் மனதில் ஒரு இதமும் இதழில் ஒரு புன்னகையும் ஒட்டிக்கொள்ளும். அவர்களின் சந்திப்பு அப்படி.

இன்ஜினியரிங் முடித்து கேம்பஸில் செலக்டாகி முதல்முறையாக வேலைக்குச் சென்றது தேவி இன்டஸ்ட்ரீஸ். அன்றுதான் சாதனாவும் வேலைக்கு வந்தது. வந்த சில மணிநேரங்களில் சாதனாவின் குணம் பிடித்து, அவள் திருமணமானவள் என்பது தெரிந்ததும் அவளின் கணவன் பற்றி விசாரிக்க... சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

ஒரு முறை முதலாளியிடம் கைகோர்த்து தோள் சாய்ந்திருந்ததைக் கண்டு அதிர்ந்து, சாதனாவிடம் விசாரிக்க... “ஃப்ரண்ட் ப்ளஸ் ரிலேடிவ்” என்று அவள் சொல்ல சின்னதாக சந்தேகம் வந்தபோதும் கண்டுகொள்ளாமலிருக்க... மறுமுறை இருவரையும் தனியறையில் பார்த்து அவளை தனியே அழைத்து தோழியாய் அவள் நடந்து கொள்வது தவறென்று அறிவுரை சொல்ல...

“என்மேல சந்தேகமா?” எனக்கேட்ட சாதனாவிடம் புன்னகைத்து, “சந்தேகம்னா உன்னோடான நட்பை எப்பவோ விட்ருப்பேன். இப்படி அட்வைஸ் பண்ணமாட்டேன். அவர் உன் நெருங்கின தோழனாவோ, சொந்தமாவோ இருக்கலாம். உரிமையா கைபிடிச்சி பேசுறதுனா சின்ன வயசிலிருந்து உள்ள நட்பாகூட இருக்கலாம். ஆனா, இங்க வேண்டாம் சாது. உன்னை யாரும் தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டா என் மனசு தாங்காது. ப்ளீஸ் சாது” என்றாள்.

“சாரி கார்த்தி. இனி அப்படி நடந்துக்கமாட்டேன். உன் ஃப்ரண்ட்ஷிப் கிடைச்சதுக்கு கடவுளுக்கும் உன் முதலாளிக்கும் நன்றி சொல்லணும்.” சொன்னபடி சாதனா அவனிடம் தள்ளி நின்றுதான் பேசுவாள்.

ட்ரைனிங் முடிய ஒரு மாதமேயிருக்க, ஒருநாள் வேலை முடித்து அனைவரும் கிளம்பியிருக்க கார்த்திகாவிற்குமே நேரமாகிவிட, அவசரமாக வேலை முடித்து லிப்டை நோக்கி வந்தவள் ஆணியடித்தாற்போல் அப்படியே நின்றுவிட்டாள்.

கம்பெனி முதலாளி லிப்டுக்குள் நின்று சாதனாவை அழைக்க, அவள் வரமறுக்க, ஆட்கள் யாருமில்லையென்ற தைரியத்தில் வெளியே நின்றிருந்தவளின் கைப்பிடித்திழுக்க, அவன் மார்பில் மோதி நின்றவளின் இடையணைத்து, இருவரும் ஏதேதோ பேசிச் சிரித்தபடியிருக்க லிப்ட் மூடியது. பார்த்திருந்தவளுக்கோ பகீரென்ற உணர்வு. ‘என்னதான் உறவென்ற போதும், இது...’ சாதனா மேல் தனக்கிருந்த பிம்பம் கரைந்து போனது.

குழப்பத்தில் இருக்கையில் மறுநாள் காலை தன்னைத்தேடி வந்த தோழியை அலட்சியப்படுத்த, பர்மிஷன் கேட்டு வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு இழுத்துச் சென்றாள் சாதனா.

அங்கிருந்த வசதியும், அதோடு தங்கள் கம்பெனி எம்.டி பிரேமையும் அங்கே பார்த்து ஆச்சர்யப்பட, அவனை நெருங்கி நின்று “இவங்க என் ஃப்ரண்ட் ப்ளஸ் சொந்தம்னு சொல்றதை விட, எனக்கு மட்டுமே சொந்தம்னு சொன்னா நீ என்ன சொல்வ கார்த்தி?” என்றாள் புன்னகை மாறாது.

அவள் சொன்னது முதலில் புரியாமல் புரிந்ததும், “ஏய் சாது நிஜமாவா? கடவுளே! நேத்திலிருந்து மனசுல அடைச்ச பாரம் விலகின ஃபீல்” என மூச்சை இழுத்துவிட்டு, “முதல்லயே சொல்றதுக்கென்ன? உன்னைத் தப்பா நினைச்சிட்டேன் தெரியுமா? ஆமா உன் கம்பெனியிலயே ஏன் நீ எம்ப்ளாயியா இருக்கிற?”

“ஏன் சிஸ்டர் ஓனர் ஒர்க் பண்ணக்கூடாதுன்னு இருக்கா என்ன?”

“அச்சோ அப்படியில்ல சார். இவள் சாரி இவங்க என்கிட்ட எதுவுமே சொல்லல. அதனால உங்களையும் தப்பா நினைக்க வேண்டியதாகிருச்சி” என்றாள் குற்றவுணர்வுடன்.

“என்னது இவங்களா? தொலைச்சிடுவேன் உன்னை. எவ்வளவு வசதியாயிருந்தாலும், ஃப்ரண்ட் ஃப்ரண்ட்தான் ஓகே?”

“அ..அது சாது...”

“அதேதான். மேல கேள்வி கேட்ட கொன்னுருவேன். நேத்து நீ எங்களைப் பார்த்ததை நானும் கவனிச்சிட்டேன். அதான் உன் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காம சொல்லியாச்சி.”

“அப்ப நேத்து நைட் முழுக்க என் மூளைக்கு எதுக்கு வேலை குடுத்த?” என்று செல்லக் கோபத்துடன் கேட்டாள்.

“அது என்னோட டைம்பாஸ்காக” என்று கண்ணடிக்க, திரும்பவும் தங்கள் நட்பை பலப்படுத்தினார்கள்.

ட்ரெய்னிங் பீரியட் முடிந்ததும் தன் அப்பாவின் கடையைப் பார்த்துக்கொள்ள முடிவு செய்து அதைத் தோழியிடமும் சொல்லி வெளியே வந்து வருடங்களாகியும் அவர்கள் நட்பு தொடர்கிறது.

‘சாரி சாதுமா. இந்நேரம் உனக்கு ஆதரவா உன்னோட இருக்க முடியல’ என மனதிற்குள் கேட்டுக்கொண்டாள்.

“என்ன கருவாச்சி டல்லாயிருக்க?” எனக்கேட்ட கணவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு தோழியின் நிலை சொல்ல, அவளின் முகம் நிமிர்த்தி, “தப்பா எதுவும் நடக்காது. நாம வேணும்னா ஒருநாள் பார்த்துட்டு வரலாம்.”

“நிஜமா கூட்டிட்டுப் போவீங்களா?”

“என் கருவாச்சி மேல சத்தியமா?”

“நான் கருவாச்சியா?” என்று அவன் வயிற்றில் கிள்ள, “இல்லமா. நீ என்னோட ஹீரோயின்” என்றான் படு தீவிரமாக.

“கண்டிப்பா நீங்க ஹீரோ கிடையாது” என்று முகம் சுழிக்க...

“ஆமா. இந்த கருவாச்சியைத் தூக்கிட்டுப்போன வில்லன். அதான் வயித்துல ஏழுமாசம்” என்று தொட்டுக் காண்பிக்க... “ஹையோ!” என முகத்தை கணவன் வயிற்றில் புதைத்துக் கொண்டாள்.

சுபாஷின் வீட்டில் வைத்தே பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ட்ராபிக்கில் மாட்டியதால் ஆனந்த் குடும்பத்தினர். குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாமல் போக, வளைகாப்பும் பதினொன்றரைக்கெல்லாம் நிறைவு பெற, மாடியில் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.
 
Top