- Joined
- Aug 31, 2024
- Messages
- 662
- Thread Author
- #1
11
சந்நிதானத்திற்கும், சரணுக்குமிடையே ஐந்தடி தூரம் இருக்கையில், ஆராதனா தற்செயலாகப் பின்னாடி திரும்பிப் பார்த்தாள்.
சரண் அவளின் கண்ணில் சிக்காமல் வேதவல்லியின் பின் மறைந்தான். “ஹேய்! வந்துட்டியா. என்னடா பின்னாடி அவன் நிற்கிறானேன்னு திரும்பாமலேயே வந்தேன். நீ சைன் பண்ணுனியா?” என கேட்க,
“ஆமா. போட்டுட்டுத் தான் வந்தேன்” என்றாள் ஒரு மாதிரிக் குரலில்.
“என்னாச்சி வேதா? ஏன் ஒருமாதிரி இருக்க? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”
“ஒன்னுமில்ல ஆரு. சின்ன அதிர்ச்சி அவ்வளவுதான்.”
“அதிர்ச்சியா? ஏன்? கோவில்ல என்ன அதிர்ச்சி வரப்போகுது?”
“இல்லடி. இந்த சரவணன் பண்ணினதைத்தான் சொல்றேன்.”
“ஏன்? அவன் எனக்குத் தெரியாம தாலி கட்டிருவான்னு பயப்படுறியா? அன்தாவு விட்டுருவோமா என்ன?” என்றாள் கெத்தாக. கொத்தாகத் தோற்றுப்போனதை அறியாது.
‘ஆமா. ஏற்கனவே ஒருத்தனுக்கு பொண்டாட்டி ஆகிட்ட. அது கூட தெரியாம, என்னத்த உஷாரா இருக்கிறியோ தெரியல?’
“வேதா மத்ததை விடு. இன்னைக்கு சாமி அலங்காரம் சூப்பராயிருக்கும்” என்று பேசியபடி தோழிகள் நகர,
சரண் பின்னால் வந்த சரவணனும், அவன் நண்பனும் பேசுவதை நுணுக்கமாக கேட்க ஆரம்பித்தான்.
“டேய்! எவனோ ஒருத்தன், நான் போட வேண்டிய கையெழுத்தைப் போட்டுட்டான்டா. அவன் தெரிஞ்சி செஞ்சிருக்கமாட்டான்னு நினைக்கிறேன். நான் அவ சாமி கும்பிடும் போது தாலி கட்டிடுறேன். அவளோட பிரண்டை நீ பிடிச்சிக்கோ” என்றவன் சரணிடம் வந்து, “சார் கொஞ்சம் அர்ஜன்ட். முன்னாடி போய்க்கிறேனே?” என்று கேட்டான்.
“சாரி சார். எனக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. முன்னாடி லேடீஸ் நிற்கிறதால தான் இடிச்சிட்டுப் போக முடியல. ஒரு நிமிஷம் முன்னப்பின்ன போகப்போறோம் வெயிட் பண்ணுங்க சார்” என்று இடம் விடாத அளவிற்கு நின்று கொண்டிருந்தான்.
சரவணனால் எங்கும் நகர முடியாமல், சரண் செக் வைக்க, சரவணனின் கிரிமினல் மூளை முன்னால் செல்பவர்களிடம் கைபேசியில் தகவல் அனுப்ப அவர்கள் இருவரும் அலார்ட்டாகி ஆராதனாவை நடுவில் நிற்குமாறு பார்த்து, சரவணனிடம் ஓகே சொல்லி பதில் அனுப்பினர்.
அவர்களின் திடீர் திருப்பத்தில் போலீஸ் உஷாரானார்கள்.
முருகன் சந்நிதி வர ஆராதனா முருகனின் அழகில் மயங்கி, அவளையும் அறியாமல் சில நொடிகள் கண் மூடி வேண்ட, முன் சென்ற முதல் இருவரையும் காவல்துறை லாவகமாக வளைக்க, சரவணனின் பின் வந்தவனை அங்கு உள்ள காவல்துறை பிடித்தார்கள்.
சரவணன் சரணை இடித்துத் தள்ளி தாலி கட்ட செல்ல, சரணைத் தாண்டிச் சென்றவன் முகத்தில் ஒரு குத்து வைத்து, வேதாவை நகரச் சொல்லி, ஆராவின் அருகே வந்த சரண், முருகர் சந்நிதானத்தில் அவரின் ஆசீர்வாதத்தோடு, தன் தாயை வேண்டிக் கொண்டு ஆராதனாவின் கழுத்தில் தாலி அணிவித்தான்.
சுற்றிலும் நின்றிருந்தவர்கள் பூ போட்டு வாழ்த்த, வேதவல்லியும் வாழ்த்தினாள்.
கண் திறந்த ஆராதனா, என்ன ஏதென்று உணரும் முன், அங்கு ஐயர் கொண்டு வந்த ஆராதனைத் தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து, மனைவியின் நெற்றி வகிட்டில் பொட்டு வைத்து, முழுமையாகத் தன் மனைவியாக்கிக் கொண்டான் சரண்.
ஒரு கையில் கைபேசியில் அவர்களின் திருமணத்தை பதிவு செய்தபடி இன்னொரு கையால் பூ தூவி வாழ்த்து தெரிவித்தார் ராகவன்.
வேதாவும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், புகைப்படமாக எடுத்துத் தள்ளினாள்.
முழு அதிர்ச்சியிலிருந்த அராதனாவை, சந்நிதானத்தை விட்டு வெளியேற்ற முயல, சரவணன் வேகமாக வந்து, “ஆரு கழட்டி எறி. இவன் ஏதோ ப்ளானோட தான் வந்திருக்கான். நான் செய்ய வேண்டியதை யாரோ ஒருத்தன் செய்யுறதா? அதைக் கழட்டு ஆரு. இரு நானே கழட்டுறேன்” என்று தாலியில் கைவைக்க வர, தன்னிச்சை செயலாய் தாலியைப் பிடித்துக் கொண்டவள், அதே வேகத்தில் அவனை அடித்திருந்தாள்.
அவளைத் தொடர்ந்து அந்த போலி சரவணனை அடித்த சரண் அவனை அடித்து காவலரிடம் ஒப்படைத்தான்.
“டேய்! தெரிஞ்சே தான் பண்ணினியா? உன்னை விடமாட்டேன்டா? உன்னை விடமாட்டேன்” என்று கத்தினான்.
“அதுக்கு முதல்ல நீ வெளில வாடா. அப்புறம் பார்க்கலாம்.”
அப்பொழுது சரவணனின் அருகில் வந்த ராகவன், “தம்பி நீயா? எங்கப்பா போயிட்ட? அன்னைக்குக் கொடுத்தியே அது உன்கிட்ட வாங்குறதுக்காக தேடினேன் தெரியுமா? வலுக்கட்டாயமாகக் கொடுத்தாலும் அதுல ஏதோ இருக்கு. எனக்கு அதைத் தர்றியா? இவங்க உன் ப்ரண்ட்ஸா? ஏன் கோவில்ல வச்சி சண்டை போட்டு விளையாடுறீங்க?” என்றார் அதுவும் அறியாதவராக.
“அதை நான் சொல்றேன்” என்று வந்த இன்ஸ்பெக்டர் முகிலன் ராகவனிடம், “அவன் என்ன கொடுத்தான்? எது உங்க நாக்குல ஒட்டிக்கிச்சி?” என்று கேட்க,
“அ...அது வந்து சார். ஒண்ணுமில்லை” என்றதும் இன்ஸ்பெக்டர் அடிக்க கை ஓங்க,
“சொல்றேன் சார். ஒருநாள் வந்து ட்ரக்ஸ் கொடுத்தான். நான் வேண்டாம்னு தான் சொன்னேன் கேட்காமகே கொடுத்தான். அப்புறம் அவனைப் பார்க்கல. இப்ப தான் பார்க்கிறேன். வேற எதுவும் தெரியாது சார்” என்று பயந்தது போல் நடித்தார்.
சரவணனையும், அவன் நண்பர்களையும் பார்த்து, “நான் ஏதோ பொண்ணுகிட்ட தகராரு பண்றான்னு வந்தா, ட்ரக்ஸ் சேலராடா நீ? உன்னைத் தான்டா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்” என்று சந்நிதானத்தை விட்டு வெளியே இழுத்து வந்து விலங்கிட்டார்கள் நால்வருக்கும்.
ஆராதனா தன் அதிர்ச்சியிலிருந்து முழுதாக வெளிவராமல் இருக்க, “ஆரு... ஆரு என்னைப் பாருமா” என தோழியின் கன்னத்தைத் தட்டினாள்.
திடுக்கிட்டு விழித்தவள், “என்னடி நடந்துச்சி இங்க? எல்லாம் கனவுதான வள்ளி? ஏதோ எனக்கு கல்யாணமான மாதிரி பீலிங் வருதுடி. அது... அது உண்மையில்லைல? எல்லாம் கனவு தான வள்ளி?” என்றாள்.
“எல்லாம் கனவுதான்” என்று தோழியின் வாயில் இருந்து வரவும் ஆரா முகம் பளிச்சிட்டது. “அப்படிச் சொல்லணும்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா, அது நிஜமில்லையே ஆரு” என்று அவளின் கழுத்திலுள்ள தாலியை எடுத்துக் காண்பித்து, பின் கோவிலில் உள்ள கண்ணாடிக்கு இழுத்து வந்து அவளின் நெற்றியைக் காண்பித்தாள்.
அதிர்ச்சியில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தோழியிடம், ‘அந்த கையெழுத்து விஷயம் சொல்லலாமா?’ என்று நினைத்தவள் பின், ‘வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லலாம்’ என்று விட்டு விட்டாள்.
“ஆரு இப்ப என்ன செய்யப்போற? வா என் கூட” என்று கோவிலைச் சுற்ற இழுத்துச் சென்றவள் பின்னால், குழந்தை போல் சென்றாள்.
சரண் அவர்களுக்குத் தனிமை கொடுத்து இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசிக்கொண்டிருக்க, அவனின் அந்த முகிலனின் பார்வையோ பாவையைச் சுற்றிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த சரண், “என்ன சார் பார்க்குறீங்க?” என்று கேட்க,
“நான் யாரையும் பார்க்கலையே” என்று வேகமாக உளறினான்.
“நானும் யாரைப் பார்க்குறீங்கன்னு கேட்கலையே சார்?”
“ஓ... சாரி கேள்வியைக் கவனிக்கல.”
“என் ஆளோட ப்ரண்டைத்தான பார்த்தீங்க.?”
சற்று தடுமாற்றத்துடனும், வெட்கத்துடனும் ‘ஆம்’ என்று தலையாட்ட, “என்ன சார்? பார்த்ததும் காதலா? அதுவும் யூனிபார்ம்ல” என கேட்டான்.
“பார்த்ததும் தான் சரண். ஆனா, இப்ப இல்ல. ஒரு மாசத்துக்கு முன்னாடி” என்றான் முகிலன்.
“என்ன சார் சொல்றீங்க? என்று ஆச்சர்யப்பட,
“ஹேய்! கூல். ஒரு மாசத்துக்கு முன்னாடி, முறைப்படி மேரேஜ்கு அலையன்ஸ் பார்த்தப்ப வந்த சம்பந்தம். வீட்ல எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டாங்க. எனக்கு போட்டோ காட்டி நேர்ல போயி பார்த்துக்கன்னு சொன்னாங்க. எனக்குத் தான் டைம் கிடைக்கலை. அதுக்கெல்லாம் சேர்த்து வச்சித்தான் இன்னைக்கு மொத்தமா பார்க்கிறேன். ஏன் யூனிபார்ம் போட்டா கட்டிக்கப் போறவளை சைட்டடிக்கக் கூடாதா என்ன?”
“தாராளமா பார்க்கலாம் சார். குட் செலக்ஷன். ரொம்ப நல்ல பொண்ணு. உங்களுக்கு நல்ல மேட்ச் சார் வாழ்த்துகள்” என்று கைகொடுத்தான்.
“தேங்க் யூ. உங்க கல்யாணம் இன்னைக்கு நான் எதிர்பார்த்தேன் தான்.”
“சார் நான் ப்ளானலாம் பண்ணலை.”
“ஆமா, நேத்து ஈவ்னிங்ல இங்க வந்து அவன் அப்பா, அம்மா பெயர்ல இருந்து, எல்லாத்தையும் மாத்தி பண்ணினதுக்குப் பெயர் ப்ளான் இல்லையா சரண்?” என்றான் கிண்டலாக.
“சார் உங்களுக்கெப்படி?”
“சுடச்சுட நியூஸ் எனக்கு கிடைச்சிருச்சி. இங்க தான் நம்ம ப்ளான்னு முடிவு பண்ணினதில் இருந்து, யார் யார் வர்றாங்க. ஆபீஸ்ல என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சிக்காம இருப்பேனா?”
“சாரி சார்.”
“எதுக்கு சாரிலாம். இந்த சாரை விடலாமே சரண். ஏன் உங்க ப்ரண்டா என்னை அக்செப்ட் பண்ணிக்க மாட்டீங்களா?”
“எப்படி உங்களை நான் பெயர் சொல்லி?” என்று இழுக்க,
“ஹாய்! ஐம் முகிலன். இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்” என்று கைநீட்டினான்.
சரண் சிரித்து, “ஐம் சரண். மேனேஜர் ஆஃப் கே.என் கம்பெனி.” இருவரும் கைகொடுத்து சிரித்துக் கொண்டார்கள்.
கோவிலைச் சுற்றி வந்த ஆராதனாவிற்குள் பலவித குழப்பம். கல்யாணம் பண்ணிக்க கேட்டதுக்கே அடித்தவள். தாலி கட்டி இவ்வளவு நேரமாகியும், அவனை எதுவும் செய்யவில்லை. ‘ஏன் அவனைத் திட்டத் தோணலை? அன்னைக்கு அடிச்ச மாதிரி அடிக்கத் தோணலையே ஏன்? அவன் ப்ளான் பண்ணி தாலி கட்டினானா? இல்ல இருக்காது. இது அந்த சரவணனோட ப்ளானா தான் இருக்கும். நடுவுல இந்த சரண் எப்படி? என்னடா ஆராவுக்கு வந்த சோதனை. எவனெவனோ என் வாழ்க்கையில் என் சம்மதமில்லாமல் விளையாடுறான். நான் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு இருக்கேன்.’
பிரகாரம் சுற்றி முடித்து, முருகபெருமான் இருக்கும் இடம் திரும்பி பார்த்து, ‘என்ன முருகா உன் திருவிளையாடலுக்கு நான் தான் கிடைச்சேனா? நடத்து நடத்து. என் பங்குக்கு நானும் நடத்துறேன் விளையாட்டை. முதல்ல உன் பேரை வச்சி என்னை ஏமாற்றினானே அவனை அப்புறம் எனக்குத் தாலி கட்டினானே அவனை’ என்று மர்மச் சிரிப்பு சிரிக்க,
அருள் வடிவேலன் குமரனின் முகத்திலும் மர்மப்புன்னகை தோன்றி மறைந்தது. உன் திருவிளையாடலை நானும் பார்க்கிறேன் என்று!