• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 11

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
11



மாடியிலிருந்து இறங்கி வந்த செந்தூரனைக் கண்ட அதியன், ‘இவன் என்ன இவ்வளவு சந்தோசமா வர்றான்?’ என்றெண்ணியபடி அவனைத் தாண்டிச் சென்றவன் அன்பழகியின் அசையா நிலை கண்டு, “அக்கா! அக்கா என்னாச்சி? ஏன் இப்படி நிற்கிற?” என்று உலுக்க,

“ஹா..ஹான்” என சுயம் வந்தவள், “எ..என்ன கேட்ட அதி” என்றாள் தடுமாற்றத்துடன்.

“ஏன் இப்படி நிற்கிற? அவன் உன்னைத் திட்டினானா? என்ன திட்டினான்? அவனை வீட்டுக்குள்ள வரவிடாதன்னு சொன்னா கேட்குறியா? அவனுக்காகப் பரிதாபப்பட்டு கடைசியில் காயம்பட்டு நிற்கிறதே உனக்கு வேலையா போச்சி” என சரமாறியாகத் திட்ட அதைக் கேட்குமிடத்தில் அவளில்லை.

தன்னறைக்கு வந்து கதவை அடைத்து அவன் புகைப்படத்தை நாட்குறிப்பிலிருந்து எடுத்துப் பார்த்து, “என்னயா இப்படிப் பொசுக்குன்னு முத்தம் கொடுத்துட்ட? குழந்தை ஷhக்காகிப் போயிருச்சில்ல” என்று கன்னத்தை வருடி, “செய்யுறதெல்லாம் செய்துட்டு கோர்ட்டுக்கு வரச் சொல்லிட்டுப் போற. நீ நல்லவனா கெட்டவனான்னு ஆராய்ச்சி பண்ணியே ஆயுசு முடிஞ்சிரும் போலிருக்கு. ஹ்ம்.. நாளைக்கு கோர்ட் இருக்குன்னு ஞாபகப்படுத்த வந்தீங்களா? மறந்தால்தான? மறக்கக்கூடாத நாளல்லவா நாளைய தினம்” என பெருமூச்செறிந்தாள்.

மறுநாள் காலை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி முன் இருவரும் அமர்ந்திருக்க, “மியூச்சுவல் கேட்டு வந்திருக்கீங்களா? இல்லை யாராவது ஒருத்தர் சேர்ந்து வாழ விரும்புறீங்களா?” என்றார்.

“மியூச்சுவல்தான் மேடம்” என்றாள் அன்பழகி.

“ஓ.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?”

“சாருக்குதான் மேடம் எதோ பிரச்சனை. எனக்குக் கிடையாது” என்று செந்தூரனைக் கைகாட்ட,

“என்ன மிஸ்டர் உங்க ஒய்ஃப் இப்படிச் சொல்றாங்க? அவங்களுக்கு இதில் விருப்பமில்லை போலிருக்கே” என்றார் நீதிபதி.

“மேடம் எங்களை ஏன் தனியா விசாரிக்குறீங்க? படங்கள்ல பார்த்திருக்கேன் ஜட்ஜ் உட்கார்ந்திருக்க, டவாலி பக்கத்தில் கம்போடு நின்றிருக்க, ரைட்டர் கீழ உட்கார்ந்து டைப் பண்ணிட்டிருக்க, இரண்டு பக்கம் குற்றவாளிக் கூண்டிருக்க, எதிரெதிர் கட்சி வக்கீல் உட்கார இரண்டு பக்கமும் மேஜையிருக்க, அங்கங்க போலீஸ் நின்றிருக்க, ஒரு தடுப்புக்கு அப்புறம் கேஸ் சம்பந்தப்பட்டவங்களும், அடுத்தடுத்த கேஸ்கு வந்தவங்களும் உட்கார்ந்திருக்கன்னு பார்க்கவே அழகாயிருக்கும். இங்க என்னடான்னா ஒரு நீதிபதி, நாங்க இரண்டு பேர் மட்டும் இருக்கிறோம்.”

“கல்யாணம் நானூறு பேர் முன்ன நடக்குது. அப்பப் பிரிவும் அப்படித்தான இருக்கணும்? சோ, எங்களுக்கு ஓபன் கோர்ட் வேணும்” என்றான்.

“அடப்பாவி!” என்றனர் அன்பழகியும், நீதிபதியும்.

“மிஸ்டர்.செந்தூரன் அதெல்லாம் சினிமாவுல மட்டும்தான் நடக்கும். இங்க இப்படித்தான். முடிந்தளவு தம்பதிகளை சேர்த்து வைக்கத்தான் பார்ப்போம். பிரிவு ஈசின்னு நினைச்சிட்டிருக்குறது தப்புன்னு சிலராவது உணரணும். அதுக்கான கவுன்சிலிங் கொடுத்து, டைம் கொடுத்து, எதுவும் மாறாதுன்னு தெரிந்தால்தான் கேஸ் கோர்ட்டுக்கே வரும். உங்க பாய்ண்ட்டுக்கே வர்றேன். நானூறு பேர் முன்ன நடந்த கல்யாணத்தை நாலு கோடி பேர் பார்க்க பிரியணுமா? அதுக்கு சேர்ந்த வாழலாமே?” என்றார்.

“ஹ்ம்.. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை இருக்கணும் மேடம்” என்றவன் மனைவியை ஏக்கமாகப் பார்த்து, “பாலைவனம் எப்பவும் சோலைவனம் ஆகாது மேடம்” என்றான் சோகக்குரலில்.

“நீங்க சொல்றது புரியலை மிஸ்டர்.செந்தூரன்?”

“சாதாரண டைவர்ஸ் கேஸ் கிரிமினல் கேஸா மாற வாய்ப்பிருக்கும் போது, இந்த ரகசிய விசாரணை தேவையில்லைன்னு சொல்றேன்.”

“மிஸ்டர் வந்ததிலிருந்து முன்னுக்குப் பின் முரணா பேசுறீங்க. உங்களுக்கு எதுவும் ஹெல்த் இஷ்யூ இருக்கா?”

“பைத்தியம்னு நினைச்சீங்களா மேடம்? அப்படில்லாம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. சந்தேகம் இருந்தா அன்பழகி சைக்யாட்ரிஸ்தான், செக்கப் பண்ணச்சொல்லி தெரிஞ்சிக்கோங்க” என்றவன் மனைவியை நெருங்கினாற்போல் வந்து, “செக் பண்ணு அன்பழகி” என்றான்.

“மேடம்” என்று அன்பழகி பதற,

“மிஸ்டர் உங்களுக்கு ஒண்ணுமில்லைன்னு நான் நம்புறேன். சரி கிரிமினல் கேஸாக சான்ஸ் இருக்குன்னு எதை வைத்துச் சொல்றீங்க?”

“நான் இவங்களைக் கொடுமைப்படுத்தி இருக்கலாம். இல்லை இவள் என்னைக் கொடூரமா கொடுமைப்படுத்தி இருக்கலாம்” என நிஜத்தில் நடந்தது போல் விவரித்தான்.

அவளோ, “ஐயோ! இல்லைங்க மேடம். எனக்கு யாரையும் நோகடிக்கத் தெரியாது” என்றாள் வேகமாக.

“ஆமாம் மேடம். என்னைத் தவிர யாரையும் நோகடிக்கத் தெரியாது” என்றான் அப்பாவியாய்.

“மிஸஸ்.அன்பழகி ரிலாக்ஸ்” என அமைதிப்படுத்தி, “கிரிமினல் கேஸா மாற்றினா உங்க குடும்ப மானமும் போகும். உங்க ஒய்ஃபை கேட்கக்கூடாத கேள்வியெல்லாம் கேட்பாங்க. அது சரியா சொல்லுங்க?” என்றார் தன்மையாகவே.

“விவாகரத்துன்னு கையெழுத்து போட்டப்பவே அதெல்லாம் போயிருச்சி மேடம். அன்பழகியைத் தப்பா கேட்க என் வக்கீலுக்கு வாய்வராது” என்றவன், “அன்பழகி கொஞ்சம் வெளில நிற்குறியா? நான் மேடம்கிட்ட ஐந்து நிமிடம் தனியா பேசணும்” என்றதும் எதுவும் சொல்லாது அவள் வெளியேற, நான்கு நிமிடத்தில் தான் பேச வேண்டியதைப் பேசி முடித்து நீதிபதியுடன் வெளியில் வந்தான் செந்தூரன்.

“நான் பேசிட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்றேன் செந்தூரன். கேஸை சீக்கிரமா முடிக்குற மாதிரி மூவ் பண்ணச் சொல்றேன்” என்று சென்றுவிட்டார்.

நீதிபதி சென்றதும், “பப்ளிக்ல வச்சி என்னை என்ன செய்யுறதா உத்தேசம்? இங்கேயே முடிய வேண்டியதை.. ப்ச்.. நீங்க என்ன யோசிக்குறீங்க புரியலை?” என்றாள் கணவனிடம்.

“புரியுறப்போ புரியும் அன்பழகி” என்றவன் குரல் சற்று அழுத்தமாக வர, அக்குரலில் அவன் முகம்காண, சட்டென்று முகத்தை சாதாரணமாக்கி புன்னகைத்து, “என்ன லுக்கு? நம்ம வாழ்க்கையில் கிக் வேண்டாமா?” என்றான்.

“ஆரம்பத்திலிருந்து அந்த கிக்கைத்தான் கொடுத்துட்டு இருக்கீங்க. புதுசா என்ன கிக்?” என்றாள் சலிப்பாக.

“ஓஹ்ஹோ.. உனக்கு விக்கல் எடுத்தப்ப கொடுத்தேனே அந்த கிக்கைச் சொல்றியா?” என்றதும் “ஹா..ஹான் அ..அப்படில்லாம் எதுவும் நடக்கலை. நான் போறேன்” என்றவள் முகம் வெட்கச் சிவப்பைப் பூசியது.

“அடிக்கடி திக்குற அன்பழகி. மச்சானை அதிகம் நினைக்குறியோ?” என்கையில் திரும்பி அவனை முறைக்க முயன்று முடியாமல் வெளியே நின்றிருந்த தாயைக் கண்டு நடக்க, “உனக்கு நல்ல பேமிலி பேக்ரௌண்ட் அன்பழகி. எனக்கு இப்படி அமையலை” என்று அவளருகில் வர,

ஏனோ அக்குரலிலிருந்த வலியில் நின்று அவனைப் பார்க்க, “என் தங்கை அனாதைன்னா, நான் யாரு அன்பழகி? அப்ப நானும் அனாதைதான?” எனக் கூறி நிற்காது சென்றுவிட்டான்.

விக்கித்துப்போய் நின்றவளின் தோளில், “பொம்மு!” என்று தாயின் கை படிய நிதானத்திற்கு வந்தவள் வேகமாகக் கணவனைக் காண, அந்த இருசக்கர வாகனத்தின் பின்பகுதி மட்டுமே தெரிந்தது. எங்கோ பார்த்த தோற்றம்!

“உள்ள என்ன பேசினாங்க? நீ ஏன் இப்படி நிற்கிற? எதாவது பிரச்சனையா?” என்றார் ராகினி.

“அனாதைன்னு சொல்லிட்டுப் போறாங்கம்மா” என்றாள் தொண்டையடைத்த குரலில்.

“உன்னையா?” என்றார் வேகமாக.

“ம்கூம் அவங்களை அவங்களே! நான் பவிக்காகச் சொன்ன வார்த்தை அவங்களை பாதிச்சிருக்கு போலம்மா” என்றவளுக்குள் குற்றவுணர்ச்சி.

“பெத்தவளும், கூடப்பிறந்தவளும், ஏன் கட்டினவள் நீயும் இருக்கிறப்ப அவர் எப்படி அனாதை ஆவார்?”

“நாங்க யாரும் கூட இல்லையேம்மா” என்றாள் கலங்கிய குரலில்.

“அதுக்கு நீ காரணமில்லை பொம்மு. மாப்பிள்ளை செய்ததுக்கெல்லாம் நீ எப்படிப் பொறுப்பாவ? விடு பார்த்துக்கலாம்” என்று மகளை அழைத்து வீடு செல்ல, “அண்ணி!” என ஓடி வந்து கட்டிக்கொண்ட நாத்தனாரைக் கண்டு “காலேஜ் போகலையா?” என்றாள்.

“இன்னைக்கு எக்ஸாம் இல்லை அண்ணி. அதான் லீவ். கோர்ட்ல என்ன நடந்தது? என்னை கூட்டிட்டுப் போயிருந்தா, அண்ணனை நாக்கு பிடுங்குற மாதிரி கேள்வி கேட்டுருப்பேன்ல” என்று அண்ணன் மீதுள்ள கோபத்தை ஆத்திரமாக வெளியிட்டாள் பவானி.

“தயவு செய்து அந்தத் தப்பை மட்டும் செஞ்சிராத பவிக்குட்டி. இதை என் வார்னிங்கா கூட வச்சிக்கோ” என்றாள் அழுத்தமாக.

“உங்களை இந்தளவு படுத்தியும் அண்ணனுக்கு சப்போர்ட் செய்யுறீங்க பாருங்க” என்று சலித்தாள்.

அவள் கன்னத்தை மெல்ல தட்டிக்கொடுத்து, “நீ சின்னப்பொண்ணு. இப்போதைக்கு உன் படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு. போய்ப் படி” என்றனுப்பியவளுக்கு கணவன் தன்னைத்தானே அனாதை என்றதே கண்முன் வந்து போக காரணமேயில்லாது சிறு வலி எழுந்தது.

மறுநாள் வீட்டில் வந்து நின்றவனை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அகிலன் ஒரு பக்கம் முறைக்க, அதியன் முகத்தைப் பெயர்த்தெடுக்கும் கோபத்தை அடக்கி நிற்க, ராகினி என்ன பேசுவதென்று தெரியாது விழித்தபடி நின்றிருந்தார்.

அன்பழகிக்கு மருத்துவமனை செல்ல நேரமிருப்பதால் சற்று தாமதித்தே தயாராகிக் கீழே வர, தன் குடும்பத்தினர் அனைவரும் ஒரே திசையைப் பார்த்து நிற்பதைக் கண்டவளுக்கு யாரோ அங்கு நிற்பது மட்டும் தெரிந்தது.

தாயை நெருங்கியவள் அவர்மேல் கை வைத்து, ‘என்னம்மா பார்க்குறீங்க?’ என கேட்க நினைக்கையில், “கோர்ட் வரை இழுத்து அசிங்கப்படுத்தின பின்னும் உங்களுக்கு இங்க என்ன வேலை?” என்ற தந்தையின் கோபக்குரலில் திரும்பிப் பார்த்தவள் முன் அவள் கணவன் நின்றிருக்க, ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தாள் அன்பழகி.

“ஹாய் அன்பழகி! ஹாஸ்பிடல் கிளம்பியாச்சா?” என்றான் புன்னகையுடன்.

அவன் செய்கையில் அவளுள் ஒருவித ரசனை வந்திருக்க, “இதோ சாப்பிட்டதும் கிளம்ப வேண்டியதுதான். வாங்களேன் சாப்பிடலாம்” என்றாள் உதட்டோர முறுவலுடன்.

“தாராளமா சாப்பிடலாமே. அதுக்கு முன்ன ஒரு சின்ன வேலை. பேசிட்டு வர்றேன்” என்க, அன்பழகியைப் பெற்றவர்களும், உடன்பிறப்புகளும் என்னடா நடக்குது என்பது போல் இவர்களின் சாதாரண பேச்சை வியப்பாய்! ஆசையாய்! மகிழ்வாய்! குழப்பமாய் பார்த்திருந்தார்கள்.

“என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்ற சதாசிவத்தின் குரலில் தற்பொழுது கோபமில்லை.

அதை உணர்ந்தோனோ! “என் டைவர்ஸ் கேஸ் நடத்த ஒரு வக்கீல் வேணும். அந்த வக்கீல் நீங்களாவோ, இல்லை உங்க பையனாவோ இருந்தா நல்லாயிருக்கும்” என்றதில் போன கோபம் பாய்ந்து வர, “என்ன கொழுப்பா? என் அக்காவுக்கு எதிரா நாங்க நிற்கணுமா? என்ன ஒரு கெட்ட எண்ணம். அப்பா வெளில போகச் சொல்லுங்க” என்று காட்டுக்கத்தலாய்க் கத்தினான் அதியன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
நீதிபதியிடம் ‘அன்பழகியைத் தப்பா கேட்க என் வக்கீலுக்கு வாய்வராது’ என்றது நினைவு வர, “ஸ்மார்ட்” என மனதினுள் கணவனை பாராட்டினாள்.

“எந்த தைரியத்துல இப்படிக் கேட்குறீங்க?” என்றார் சதாசிவம்.

“எல்லாம் உங்க மேலுள்ள நம்பிக்கையில்தான் மாமா” என்றான் அசராமல்.

“நீங்க விளையாடத்தான் கோர்ட்டை ஏற்பாடு செய்திருக்கீங்களே. அப்புறம் எங்க வீட்டுல வந்து என்ன விளையாட்டு? இங்கிருந்து போயிருங்க” என்றான் அகிலன்.

“மச்சானுங்ககிட்டதான் விளையாடணுமாம். அதான் இங்கே வந்துட்டேன்” என அவனுமே அசராமல் பதிலளித்தான்.

“பேசாம வெளில போறியா. இன்னும் கொஞ்ச நேரம் நின்ன...”

“அதீ” என அதட்டலிட்டு, “மரியாதையா பேசணும் சொல்லியிருக்கேன்ல. அப்பாவுக்கும் அண்ணனுக்கும்தான் கோபமிருக்கு. அதுக்காக மரியாதையில்லாமலா பேசுறாங்க. சாரி கேளு” என்றாள் அன்பழகி.

“மரியாதை கொடுக்குற அளவு நடந்துக்காதப்ப, நான் பேசியது தப்பாத் தெரியலைக்கா. அதனால மன்னிப்பு கேட்கமாட்டேன்” என அடமாக நின்றான் அதியன்.

“நான் உன்னை மன்னிப்பு கேட்கச் சொன்னேன் அதி. முடியாதுன்னு சொன்னா, இனி என்கிட்ட எப்பவும் பேசாதே” என்றாள் முடிவாக.

“அக்கா!” என்றான் தடுமாற்றத்துடன்.

“விடு அன்பழகி. மாப்ள சின்னப்பையன்தான போகப்போக சரியாகிருவான்” என்று செந்தூரன் இடையிட,

“என்ன சரியாகிருவான்றீங்க? புரியாமலிருக்க இவன் ஒண்ணும் பச்சைக் குழந்தை கிடையாது. இவன் ப்ரொபஷனலுக்கு பொறுமை ரொம்ப அவசியம்” என்றாள் அன்பழகி.

“அக்கா இப்ப சாரி கேட்கணும் அவ்வளவுதான?” எனவும், அவள் அதைக் கவனியாததுபோல் முகம் திருப்பி நிற்க, ‘ப்ச்..’ என சலித்தவன், “சாரிங்க சார். இனி அப்படிப் பேசமாட்டேன். நீங்க என்னை அடித்தால்கூட அமைதியா வாங்கிக்குறேன்” என்றான்.

“டேய் அதி!” என்று அகிலன் அமைதிப்படுத்த,

“சரி எனக்கு ஒரு பதிலைச் சொல்லுங்க? என் கேஸை அட்டெண்ட் பண்ணப்போறது யாரு?” என்றான் காரியத்தில் கண்ணாக.

“உங்க சார்பா அதி வருவான். கடைசிவரை உங்களுக்காக வாதாடுவான்” என யாரையும் கேட்காது அன்பழகி பதிலளிக்க, “அக்கா” என மறுத்த தம்பியிடம், “நீதான் வாதாடுற” என்று அழுத்தமாக உரைத்து, “உங்க கேள்விக்கான பதில் கிடைச்சிருச்சில்ல. இப்ப சாப்பிட வாங்க. சாப்பிட்டு முடித்ததும் அதியோட டிஸ்கஸ் பண்ணிக்கலாம். அதுக்குள்ள நீயும் தயாராகு அதி” என்று தம்பிக்கும் அறிவுறுத்தி கணவனுடன் சாப்பிட அமர்ந்தாள்.

வேகமாக வந்த ராகினி பரிமாற வர, “நான் பார்த்துக்குறேன்மா. முதல்ல ஷாக்ல நிற்கிற அப்பாவையும், அண்ணனையும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துங்க. ம்.. போங்கம்மா” என விரட்டி, “உங்களுக்கு எது பிடிக்கும்னு தெரியாது. இட்லி, தோசைதான் இருக்கு. உங்களுக்கு ஓகேதான?” என்றாள்.

அவளையே புன்னகையும் ரசனையுமாய் பார்த்திருந்தவன், “அனாதைக்கு ஃபுட் செலக்ட் பண்ற தகுதி கிடையாது அன்பழகி. கிடைத்ததை வயித்துக்குள்ள போட்டுக்கணும்” என்றதில் பரிமாற எழுந்த கை அப்படியே நின்றது.

உணவை வெறித்தாற்போல் சில நொடிகள் இருந்தவள், பின் பரிமாறியபடி, “சாரி. நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. பவிக்குட்டி சொன்ன சில வன்மையான விஷயங்களைக் கேட்டதும், நீங்கயிருந்தும் எப்படி விட்டீங்கன்ற கோபம். அதான் என்ன பேசுறதுன்னு தெரியாம உங்களை ஹர்ட் பண்ணிட்டேன். இனி அனாதை அது இதுன்னு சொல்லாதீங்க ப்ளீஸ். மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்றாள் கெஞ்சலாக.

“ப்ச்.. விடு அன்பழகி. ஆமா என் மேல உள்ள கோபம் போயிருச்சா?” என்றான் வம்பிழுக்கும் நோக்கோடு.

“அதெப்படி போகும்? அதை உள்ளுக்குள்ள ஓரங்கட்டி வச்சிருக்கேன். தேவைப்பட்டா எடுத்துக்கலாம்” என்றாள்.

அவன் ஒன்று சொல்ல, அவள் ஒன்று கேட்கவுமாக காலை உணவை முடித்துக் கைகழுவி வந்ததும் கைதுடைக்க துண்டை நீட்ட, அதை வாங்கித் துடைத்தபடி, “மனைவி கையால சாப்பிடுறதும் கூட சுகம்தான்ல. இன்னொரு முறை இது கிடைக்குமா தெரியலை. ஹ்ம்..” என ஏக்கப் பெருமூச்சுவிட்டு சுற்றிலும் பார்த்தவன், “உன் கண்ணுல ஒரு பவர் இருக்கு அன்பழகி” என்றதும் நிமிர்ந்து கணவன் கண்கள் காண, “நிஜம்பா. இப்ப உனக்கு விக்கல் வரலையா அன்பழகி?” என்றான் குறும்புக்குரலில்.

அவளோ புரியாது நிற்க, புரிந்ததும் விழிவிரித்து அவனை முறைக்க, “எஸ்கேப்” என்று கையிலிருந்த துண்டை அவள் தோள்மீது போட்டு வேகமாக நகர, அன்பழகியின் கண்கள் சிரித்து முகம் அழகாய் வெட்கம் கொள்ள, சில அடிகள் சென்றவன் வேகமாக மனைவியருகில் வந்து அவளறியாது கன்னத்தில் முத்தம் வைத்து, “விக்கல் வரலைன்னாலும் இதை அட்வான்ஸா வச்சிக்கோ” என்று ஓடிவிட்டான்.

“அடப்பாவி!” என்ற உதடசைவிற்கு எதிராக, நாணத்தைப் பிரதிபலித்தது அவளின் உடல்மொழி.

நீதிமன்றத்தின் உள்ளே சில வழக்குகள் விசாரிக்கபட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, ஆறாவது வழக்காக வந்தது செந்தூரன் அன்பழகி விவாகரத்து வழக்கு.

இவர்கள் வழக்கு வந்ததும் உள்ளே சென்று பார்வையாளர் பகுதியில் அனைவரும் அமர, பின்னால் மற்றவர்களுடன் சாமியம்மாவும் அமர்ந்திருந்தார். முதல்நாள் தனி விசாரணை என்பதால் கண்டுகொள்ளாதவர், இன்று அவர்களின் அவஸ்தையை கண்ணாரக்கண்டு ரசிக்க தங்கையுடன் வந்துவிட்டார் ராஜேஸ்வரி.

முதல்முறையாக தனித்து வாதாட செந்தூரன் சார்பில் அக்காவின் அறிவுறுத்தலில் ஆஜரானான் அதியன்.

வழக்கு எண்ணையும் வழக்கையும் வாசித்த நீதிபதி, “வழக்கு தொடரலாம்” என்றதும், “வணக்கம் நீதிபதி அவர்களே!” என்று அன்பழகி சார்பாக வந்து நின்றார் சதாசிவம். ஆம். மகள் சார்பாக நண்பனிடம் வழக்கை ஒப்படைத்தவர், திரும்பவும் தானே எடுத்து நடத்துவதாகச் சொல்லி வந்துவிட்டார்.

செந்தூரன் சார்பாக அதியனைக் கண்ட ராஜேஸ்வரிக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. “ராஜி இது விவாகரத்து வழக்குதான?” என்றார்.

“ஆமாம்கா. ஆனா, அன்பழகி தம்பி எப்படி நம்ம பையனுக்கு ஆதரவா இறங்குறான் தெரியலை” என்றார்.

“என் பையன் நமக்குத் தெரியாமல் ஏதோ விளையாடுறான்னு நினைக்கிறேன். அது சரி விவாகரத்து வழக்கு குடும்ப நல நிதிமன்றத்துலதான விசாரிக்கப்படும். இது கிரிமினல் கோர்ட்டுக்கு எப்படி வந்தது?” என்றவருக்குக் குழப்பமே மிஞ்சியது.

“என்னக்கா சொல்ற? ஐயோ எனக்குப் பயமாயிருக்குக்கா.”

“நானே உள்ள வரும்போது யோசிக்கலை. குற்றவியல் நீதிமன்றம்னு போட்டிருந்ததைப் பார்த்தும் புரியாம வந்துட்டேன். இப்ப நடக்கிறதைப் பார்த்தா எதுவும் சரியில்லை” என்றார் யோசனையுடன்.

“ஒருவேளை அன்பழகி அப்பா ஏமாற்றிக் கல்யாணம் செய்ததா கேஸ் கொடுத்திருப்பாரோ?” என்றார் ராஜலட்சுமி.

“அப்ப அவள் தம்பி எப்படி செந்தூக்கு ஆதரவா நிற்குறான்?”

“அக்காவை மடக்க தம்பியை... சேச்சே.. அவன்தான் பாசக்காரனாச்சே. ஒரே குழப்பமாயிருக்குக்கா” என்றவருக்கு உள்ளுக்குள் பயம் எட்டிப்பார்த்தது.

“பவா எங்கயிருக்கா பாரு” என்றதும், அவர்களின் மறுபுறமிருந்த அன்பழகியின் அருகில் இருந்தவளைக் காண, அவளோ அண்ணியின் பாசமலர் அதியனை முறைத்து, “உங்க தம்பி எப்படி அண்ணி இப்படிச் செய்யலாம்? அதுவும் உங்களுக்கு எதிரா?” என்றாள் நகத்தைக் கடித்தபடி. நடந்த எதுவும் பவானிக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆதலால் அதியனை திட்டிக் கொண்டிருந்தாள்.

“அது அவன் தொழில்மா. தொழில்ல சொந்த பந்தம் பார்க்கக்கூடாது. அதுவே அவங்க வேலைக்கு சறுக்கலாகிரும்”

“அது பாசமில்லாதவங்களுக்கு அண்ணி. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உடன்பிறந்தவளுக்கு எதிரா நிற்கலாமா? அப்படி ஒரு சம்பாத்தியமோ, வேலையோ தேவையா?”

“இதை நீ அவன்கிட்டதான் கேட்கணும். ஆமா. உன் அண்ணன் கேஸ் நடக்குது. இப்பக்கூட உன் புருஷன் வரலையே ஏன்?” என கேட்டாள் அன்பழகி.

“ஹான்! அது என் அண்ணனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லாததால, என் புருஷனுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. அதான் வரவேண்டாம் சொல்லிட்டேன்” என்று சமாளிக்க,

“அஹான்! நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்றதில் அண்ணியவளை முறைத்து, “நம்பலைன்னா போங்க எனக்கென்ன வந்தது” என்று அதியனை முறைக்கும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஏதோ உள்ளுணர்வில் பவானியின் புறம் திரும்பியவன் அவளின் முறைப்பைக் கண்டு, "அட இந்தப் பொண்ணுக்கு என்னாச்சி? இவ்வளவு பாசமா நம்மளைப் பார்க்குது" என்று அக்காவின் புறம் திரும்பி, என்னவென்பதாய் பவானியைக் காண்பித்து ஜாடையில் கேட்க, அவளோ தனக்கும் தெரியாது என்பதாய் கையை விரித்துக்காட்ட, "ஹ்ம்.. எலிக்குட்டி எல்லாம் என்னை முறைக்குது. எல்லாம் நேரம்" என்பதாய் திரும்பிக் கொண்டான்.

“அக்கா உன் பொண்ணு அவங்க குடும்பத்துலயே செட்டிலாகிட்டா. இனி அவளை வைத்து ஒண்ணும் செய்ய முடியாது” என்றார் ராஜலட்சுமி.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். அவள் புருஷன் யாருன்னு உன் புருஷன் கண்டுபிடிச்சிட்டாரா?”

“இல்லைக்கா” என்றார் குரல் இறங்க.


“சரி விடு பார்த்துக்கலாம்” எனும்போது வழக்கு சம்பந்தப்பட்ட இருவரையும் கூண்டுக்குள் வரவழைத்து சத்தியப்பிரமாணம் எடுத்து முடிய, “கனம் நீதிபதி அவர்களே! இந்த வழக்கின் சிறப்பு என்னவென்றால் ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்ததோடில்லாமல், அவர்களே விவாகரத்தும் கேட்டதுதான்” என்று வழக்கை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டார் சதாசிவம்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
எதிர்க்கட்சி வழக்கறிஞராக எழுந்த அதியனோ, “டாக்டர் பொண்ணு, அப்பா தம்பின்னு லாயர்ஸ் இருக்கிற குடும்பம். அப்பேர்ப்பட்ட குடும்பத்தை ஒருத்தரால் ஏமாற்ற முடியும்னா, ரொம்பவே புத்திசாலின்னு பாராட்டுங்க லாயர் சார்” என்றவன் குரலில் நக்கலிருந்ததோ! அக்காவின் கல்யாணத்தில் சரியாக விசாரிக்காததால் வந்த வினைதானே இதெல்லாம். அந்தக் கோபம் அவனிடம் வெளிப்பட்டது.

“ஏமாத்தினா புத்திசாலியா?”

“ஏன் ஏமாறுறீங்க கேட்குறேன். படிக்காதவன் கூட மாப்பிள்ளை பார்க்கும்பொழுது ஆயிரம் யோசித்து, ஆயிரம் பேரிடம் விசாரித்துத் தெரிந்துதான் பெண்ணைக் கொடுக்கிறான். படித்த அவங்க வீட்டுல நிதானமா பொறுமையா விசாரித்துச் செய்திருக்கலாமே? ஏன் செய்யலை? கேளுங்க நீதிபதி அவர்களே?” என்றவன், “சரி அதைவிடுங்க கல்யாணமும் முடிஞ்சிருச்சி. இனி பேசி ஒண்ணும் ஆகப்போறதில்லை. என் கட்சிக்காரர் ஏமாத்திட்டதா சொல்றீங்களே, எப்படின்னு தெரிஞ்சிக்கலாமா? உங்களால அதை நிரூபிக்க முடியுமா?” என்றான்.

“கண்டிப்பா முடியும்” என்று கோவிலில் ராஜேஸ்வரியிடம் பேசியது முதல் நடந்த அனைத்தையும் விளக்கினார் சதாசிவம்.

“நீதிபதி அவர்களே! கடவுளின் பிரதிநிதியான, மக்களால் சாமியம்மா என்று மதிப்பும் மரியாதையோடும் அழைக்கப்படும் ஒருவர், ஒரு சின்ன பிரச்சனைக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்தார் என்பது நம்புற மாதிரியாயிருக்கு?” என்றான் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக.

“சாட்சி இருக்கு நீதிபதி அவர்களே!” என்றவர், சண்டைக்கான வீடியோ ஆதாரத்தைக் கொடுத்ததோடு, பெண் கேட்பதற்காக அவர்கள் செய்த அத்தனை வேலையையும் சொல்லி அதற்கு சாட்சியாக, சதாசிவத்தின் சித்தப்பா கோதண்டத்திடமும், நண்பன் தயாவிடமும் வாக்குமூலம் வாங்கப்பட்டது.

அனைத்தையும் கேட்ட நீதிபதி, “ஏமாற்றித் திருமணம் செய்ததற்கான தண்டனை கொடுத்து, விவாகரத்தும் கொடுத்துவிடலாமா சதாசிவம்?” என்றார்.

“இல்லை.. நான் எதுவும் செய்யலை. தண்டனை அனுபவிக்க நான் என்ன தப்பு செய்தேன்? இவங்க சொல்லுற இந்தப் பழிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. செய்யாத தப்புக்குத் தண்டனை கொடுக்குறது தர்மம் கிடையாது” என்று கத்தினான் செந்தூரன்.

“என்னக்கா இவன் இப்படிக் கத்துறான்? நீதிபதி தீர்ப்பு சொல்லி இப்பவே விவாகரத்து கொடுத்திருப்பார்ல” என சலிப்பாக சொன்னார் ராஜலட்சுமி.

“விவாகரத்து மட்டும்னா பரவாயில்லை ராஜி. தண்டனைன்னு சொன்னா கத்தமாட்டானா?” என்றார் ராஜேஸ்வரி.

“உங்களுக்குச் சம்பந்தமில்லைன்னா நிரூபியுங்க செந்தூரன். தாலி கட்டினது நீங்கதான?” நீதிபதி அவனுக்கான சலுகை கொடுக்க,

“தாலி கட்டினதுக்காகத் தண்டனை அனுபவிக்க முடியாது நீதிபதி ஐயா” என்று வாதம் செய்தான்.

“அப்ப நிரூபியுங்க” என்றவருக்கு மதிய உணவு இடைவேளை நேர மணியடிக்க, “உணவு இடைவேளைக்குப் பின் வழக்கு தொடரும்” என்று சென்றுவிட்டார் நீதிபதி.

“ஹலோ! வக்கீல் சார்! ஒரே நாள்ல என்னை ஜெயிலுக்கு அனுப்ப ப்ளானா? என் சார்பா வாதாடுற மாதிரி கோர்த்து விடுறீங்க?” அதியனை முறைத்தபடி வந்தான் செந்தூரன்.

“இந்த வக்கீல்தான் வேணும்னு கேட்டா அப்படித்தான் நடக்கும்” என்றான் அவனும் வீம்பாக.

“அது சரி. என்னை ஜெயிலுக்கு அனுப்பியாவது உங்கக்காவை என்கிட்டயிருந்து பிரிக்கணும். ஹ்ம் நல்ல எண்ணம்தான். அப்படியே கன்டினியூ பண்ணுங்க” என்று வெளியே வர, அவனெதிரே வந்த பவானி, “அண்ணியைக் கடைசிவரை நிம்மதியா இருக்கவிடக்கூடாதுன்ற எண்ணத்துலதான நான் அவ்வளவு சொல்லியும் செய்தும் கோர்ட் வந்திருக்கீங்க?” என்றாள் கோபமாக.

“ஆமா இப்ப என்ன?” என்றான் திமிராக.

“என்னவா? இந்த விவாகரத்து முடிந்ததும், சூப்பரா பையன் பார்த்து என் அண்ணிக்குக் கட்டி வைப்போம்” என,

“முடிந்தா அதைப் பண்ணு போ” என்று அவளை விலக்கிவிட்டுச் செல்ல, அண்ணனவனை முறைத்தபடி அங்கு நின்றிருந்த அதியனைக் கண்டு அவனிடம் வந்து முறைப்பு குறையாது, “நீங்கள்லாம் என்ன தம்பி?” என்றாள் கோபத்தில்.

‘வரவர இந்த எலிக்குட்டி தொல்லை தாங்கலைடா சாமி’ என புலம்பியவன், “என்ன.. என்ன தம்பி?” என்றான் சற்று முன் செந்தூரன் பேசிய தொணியில்.

“சொந்த அக்காவுக்கு ஆதரவா நிற்காம எதிரா நிற்குறீங்க? இதெல்லாம் தப்புன்னு தெரியலையா?”

“நீ கூடதான் சொந்த அண்ணன்கூட நிற்காம எதிரா நிற்கிற? நான் எதாவது கேட்டேனா? போ போய் வேலையைப் பாரு” என்றான் அதியன்.

“அவங்க என் அண்ணன் கிடையாது. நான் தனி! வேறெந்த உறவும் எங்களுக்கிடையில் இல்லை” என்றாள் வெளியே நின்றிருந்த அண்ணனை வெறுப்பாகப் பார்த்தபடி.

“தொப்புள் கொடி உறவை அவ்வளவு ஈஸியா விடமுடியாது பவிக்குட்டி. உன் அண்ணன் மேல உள்ள கோபத்தை விடுன்னு சொன்னா கேட்கமாட்டேன்ற. அனாவசியமா அவங்க மேல வெறுப்பை வளர்க்காத. அது உனக்கு ஆரோக்கியமானதில்லை” என குரலில் சிறு கண்டிப்புடனே வந்தாள் அன்பழகி.

“அவள் அண்ணனோட யோக்கியதை தெரிந்துதான விலகியிருக்கா. நீதான்கா இன்னும் அவனை நல்லவன் ரேஞ்சில வச்சிட்டிருக்க. சொந்தத் தங்கைக்கு இல்லாத அக்கறை உனக்கெதுக்கு?” என்றான் எரிச்சலுடன்.

அதியனின் பேச்சு அண்ணனை அவமானப்படுத்துவது போல் தோன்ற உள்ளுக்குள் மெல்லியதான வலி பவானிக்கு. ‘ஏன்ணா யார் யாரோ உங்களைத் தாழ்த்திப் பேசுற மாதிரி வச்சிக்கிட்டீங்க? என்னால உங்களுக்கு ஆதரவா பேசக்கூட முடியலை. கொஞ்சமே கொஞ்சம் என்கிட்ட அன்பைக் காட்டியிருந்தா, இப்ப நிலையே வேற’ என மனதினுள் மருகினாள்.

“என் ஹஸ்பண்டா இருக்கிற வரை இந்த அக்கறை இருக்கும் அதி. உன் அண்ணனை ரொம்ப விட்டுக்கொடுத்துத் தப்பு மேல தப்புப் பண்ற பவானி” என்ற அன்பழகியின் கடுமையில், தன் முழுப்பெயரை உச்சரிக்கும் அண்ணியவளை அதிர்ந்து பார்த்தாள்.

“இவ்வளவு பேசுற நீ முதல்ல உன் அண்ணனைப் புரிஞ்சிக்கிட்டியா? எனக்கென்னவோ உன்மேலயும் தப்பிருக்குன்னு தோணுது” என்று வெளியே செல்ல விக்கித்துப் போய் நின்றிருந்தாள் பவானி.

சில நொடி அதிர்வு அகன்றதும், “சார்! அண்ணி என்ன சொல்லிட்டுப் போறாங்க?” அதியனிடம் புரியாமல் கேட்டாள்.

“ஹான்! பாசி படர்ந்து மூடி மறைச்சிட்டிருக்கிற உன் மூளையை, ப்ளீச்சிங் பௌடர் இல்லை சபீனா பௌடர் போட்டுத் தேய்த்து சுத்தம் பண்ணிட்டு, சுற்றிலும் பாருன்னு சொல்றாங்க” என்று அவனும் செல்ல, இப்பொழுதும் எதுவும் புரியாது முழிக்க மட்டுமே செய்தாள் பவானி.

“என்ன பவா சுதந்திரமா இருக்க போல” என்ற ராஜலட்சுமி குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், “ஓ.. நீங்களா? ஆமாம் சித்தி. ரொம்ப அமோகமா, சந்தோசமா இருக்கேன்றதை என்னைப் பார்த்தாலே தெரியுதுல்ல” என்று புன்னகைத்து அவரை வெறுப்பேற்றி நகர,

“பவா ஜாக்கிரதையாயிரு” என்ற ராஜேஸ்வரி குரலிலிருந்த வேற்றுமையை உணராது, அவரை முறைத்து அவள் வெளியேற, எதிரில் வந்த அண்ணனை முறைத்தே பஸ்பமாக்கினாள் தங்கையவள்.

தங்கையின் மேல் கவனத்தை வைத்திருந்தவனுக்கு ராஜேஸ்வரியின், ‘ஜாக்கிரதையாயிரு’ என்ற வார்த்தை தனக்கும் சொல்வது போல் தோன்ற, மனதில் சிலபல திட்டமிடல்கள்.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
ஒரு பக்கம் ரொமான்ஸ் இன்னொரு பக்கம் டிவோர்ஸ் நீ நல்லா வருவே செந்தூரா...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
ஒரு பக்கம் ரொமான்ஸ் இன்னொரு பக்கம் டிவோர்ஸ் நீ நல்லா வருவே செந்தூரா...
என்னமா திருகுதாளம் பண்ணுறான் இந்த செந்தூரன்.
 
Top