• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
10



கணவனின் கைவளைவில் தலைவைத்துப் படுத்திருந்தவளின் காதோரம் குனிந்து, “ஐ லவ் யூ சுப்பு” என்றான் ஜீவா.

அந்த நேரத்தில் அந்த வார்த்தை கொடுத்த இனிமையை ரசித்தவளுக்கு, அவனின் ‘சுப்பு’ என்ற உச்சரிப்பில் கணவனின் காதலை உணர்ந்தாள். ஒரு முத்தம் குடுத்ததுக்கே ஓடியவனா இவன் என்ற எண்ணம் வந்ததும் இதழ்கள் விரிய...

அதை அவன் உணர்ந்தானோ! “ஒரு முத்தம் குடுக்கிறதுக்கே ஓடியவனா இவன்னு தோணுதா தேவிமா?”

‘ம்...’ என சம்மதமாய் தலையாட்ட... “அது அப்ப, இது இப்ப ஓகே. சுப்பு எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும். நமக்கு ஃபர்ஸ்ட் பகல் இல்லடா? இந்த ஃபர்ஸ்ட் நைட் குறையை ஏன் வைக்கணும், இன்னைக்கு நைட் முடிச்சிரலாம்” என்று மேலும் மேலும் அவளை வெட்கப்படுத்தி, தன்னுள் புதைந்தவளை ஆனந்தமாக கட்டிக்கொண்டான் ஜீவானந்த்.

அந்த இருளிலும் கணவனின் முகம் பார்க்க முயன்று தோற்றுத்தான் போனாள் சுபா. சற்று நேரத்திற்கெல்லாம் வேலை நினைவு வர “தேவி டைமாகுது. நான் இப்ப போயிட்டு ஈவ்னிங் வர்றேன்” என எழுந்து, கரண்ட் இல்லாததால் செல்லில் டார்ச் அடித்து ஆடை எடுத்து குளித்து வர, அதற்குள் எழுந்த மனைவியின் பின்புறமாக கட்டியணைத்து, கழுத்தோரம் குனிந்து முத்தமிட்டு “சீக்கிரம் வந்திடுறேன்” என்றான் ஜீவா.

“சாப்பிடாம போறீங்க? மழை வேற வருது” என்ற மனைவியிடம், “சாப்பாடு வெளில பார்த்துக்கறேன். மழைக்கு ரெய்ன் கோட் இருக்கு. இப்ப பை.” முத்தமிட்டு கிளம்பினான்.

தானும் குளித்து வெளியே வந்தமர்ந்தவளருகே வந்த வந்தனா, “உன்னை யாரு மழையில் நனையச் சொன்னது தேவி. ஜுரம் வந்து கண்ணுல வலி வந்தா எப்படி சமாளிக்கிறது?” என்றபடி முடி அவிழ்த்து ஈரம் தட்டிவிட...

“அ...அது அத்தை மழையில் நனையனும்னு ரொம்ப நாள் ஆசை. அப்பாவும், அம்மாவும் விடமாட்டாங்க. அதான் இன்னைக்கு கிடைச்ச சான்ஸை யூஸ் பண்ணிக்கிட்டேன்.” ‘அதே சான்ஸை உங்க பையனும் யூஸ் பண்ணிக்கிட்டாங்க’ என மனதில் நினைக்க முகத்தில் வெட்கம் பூத்தது.

“ஆமா, ஜீவா வந்தமாதிரி இருந்ததே எங்க போனான்?”

“அவங்க அப்பவே கிளம்பிட்டாங்க. வேலையிருக்குதாம் முடிச்சிட்டு ஈவ்னிங் வந்திடுவேன் சொன்னாங்க” என்று தலை கவிழ்ந்தபடியே சொன்ன மருமகளின் செய்கையில் வித்தியாசம் தெரிய, நல்லது நடந்தால் சந்தோஷமே என நினைத்தது அந்த தாயுள்ளம்.

சாதனா அண்ணியினருகில் வந்தமர, “உனக்கு இன்னைக்கு என்ன லீவு சாதுமா?” கேட்ட தாயிடம்...

“ஒரு ப்ரோஜெக்ட் முடிஞ்சதும்மா. அதனால எல்லாருக்கும் இன்னைக்கு பார்ட்டி. நமக்குத்தான் அது செட்டாகாதே இன்னைக்கு மழை வேறயா, அப்படியே உங்க கையால சூடா எதாவது செஞ்சி தரச்சொல்லி சாப்பிட்டா எப்படியிருக்கும்னு தோணிச்சி. திடீரென்று வந்துமா எனக்கு ஆஃபீஸ்னதும் தான் நியாபகம் வருது. ராஜ் சார் இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்க. மழை வர்றதால அநேகமா ஈவ்னிங் வருவார்னு நினைக்கிறேன்.”

‘ஓ... அவன் வேற இருக்கிறானோ?’ என நினைத்து, “சரிமா வரட்டும் பேசிக்கலாம்” என்றார் வந்தனா.

‘அந்த ராஜ் நல்லவனாயிருந்தா, சாதனா எங்கண்ணனுக்கு மனைவியாக மாட்டாளா? இன்னைக்குக் காலையில கூட இரண்டு பேரையும் சேர்த்து வைத்துப் பார்த்தேன். ஜோடி சூப்பராயிருந்ததே. யார் அந்த ராஜ் தேவையில்லாம் வந்து என்ட்ரியாகுறான். அவனுக்கு எங்க சாதனாதான் கிடைச்சாளா என்ன? அப்படி என்ன எங்கண்ணனோட பெரிய இவனா? வரட்டும் பார்த்திடலாம்’ என நினைத்தாள்.

அவன் வந்ததும் தன் மனதில் நடக்கப்போகும் பிரளயத்தை அறியாமல்.



மாலை நேரமும் வர, மழையும் ஒருவழியாக நிற்க, சுபாவும், வந்தனாவும் ராஜை எப்படி எதிர் நோக்குவதென்று யோசித்துக் கொண்டிருக்க... அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வந்தனா கணவனுக்கு போன் செய்து கேட்டார்.

“பார்த்து பேசுமா” என்றவரிடம், “அது வந்துங்க...” என வந்தனா இழுக்க...

“அதான் என் வாழ்க்கையில் வந்துட்டியே 29 வருஷத்துக்கு முன்னாடியே.”

“ப்ச்... இது ரொம்ப முக்கியம் பாருங்க இப்ப. நானே டென்சனா இருக்கேன்.”

“என்ன டென்சன் உனக்கு?”

“அது நம்ம ப்ரேம்கு சாதனாவைப் பேசலாம்னு பார்த்தேன். ஆனா, திடீர்னு ஒருத்தன் பிடிச்சிருக்குன்னு வருவான்னு நானென்ன கண்டேன்.”

“முன்னாடியே என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருந்தா, நான் ப்ரேம்கிட்ட நேரடியா பேசியிருப்பேனே? அதிருக்கட்டும் அப்புறம் ஏன் அந்தப்பையனை வரச்சொன்ன?”

“நானெங்க வரச்சொன்னேன். சாதனாகிட்ட கேட்டிருக்கான் அவளும் பெரியவங்ககிட்ட பேசுங்கன்னு சொன்ன பிறகு, அவனும் வர்றேன்ன பிறகு நானெப்படி குறுக்க நிற்க முடியும். அப்புறம் பின் விளைவுகள் வேற மாதிரியாகிட்டா?”

“ஏன் இவ்வளவெல்லாம் யோசிக்கிற வந்து? நம்ம பொண்ணு தப்பால்லாம் யோசிக்கமாட்டா. தைரியமாகவே அவகிட்ட பேசியிருக்கலாம் நீ.”

“யாரோட மனசு எப்ப மாறும்னு கேரண்டி குடுக்க முடியாது. சப்போஸ் நாம அவனை வேண்டாம்னு சொல்லி, இவன் தான் வேணும்னு நின்னுட்டாள்னா.. இது அவளோட வாழ்க்கைப் பிரச்சனைங்க யோசிச்சித்தான் பண்ணனும்.”

“சரிமா பார்த்து செய். நான் இன்னும் ரெண்டு நாள்ல வர்றேன்.”

சரி சொல்லி போனை வைத்தவருக்குள் பல யோசனைகள்.

மாலையில் கணவனிடம் தனக்கு கண் தெரியும் விஷயத்தை சொல்ல ஆவலோடு காத்திருந்த சுபாவிற்கு நிறைய படபடப்பும், எதிர்பார்ப்புகளுமாய் நேரம் கழிய...

சாதனா இந்தப் பிரச்சனைக்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என்பது போல் ஸ்நாக்ஸ் கொறித்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தவள், “என்னதான் சொல்லுங்கண்ணி மழை நேரத்துல கால்மேல கால்போட்டு டிவி பார்த்துக்கிட்டு, ஸ்நாக்ஸ் சாப்பிடுற சுகமே தனிதான்ல.”

‘இது ரொம்ப முக்கியம். இவ டென்சனே பாதி எனக்கு’ என நினைத்தவள், “என்ஜாய் பண்ணுமா” என்றபடி வாசல் பார்க்க...

அங்கே உள்ளே நுழைந்தவன் சுபாவைப் பார்த்ததும் சிரித்தபடி வர... அவனைப் பார்த்த சுபா, ஆச்சர்யத்தில் அவனையே பார்க்க, ‘யார் இவன்? என்னைப் பார்த்ததும் சிரிக்கிறான்’ என்று எண்ணும் போதே, அவன் பின்னாடியே மற்றொருவனும் வர, அவன் முகம் பார்த்தவள் “ஆனந்த்” என்று இருக்கையை விட்டு எழுந்து எட்டெடுத்து வைத்தவளின், பார்வைகள் மட்டும் ஏனோ முன்னே வந்தவன் புறம்போக, அருகிலிருந்த டேபிளில் கால் இடித்து கீழே விழப்போனவளை, “சுப்பூஊஊ...” எனறலறியபடி ஓடிவந்து பிடித்தவனைப் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறைதான்.

அவனின் குரலும், தொடுகையுமே இவன்தான் தன் கணவன் என்று சொல்லாமல் சொன்னது, அவளைப் பிடித்திருந்த ஜீவாவைப் பார்த்து.

டிவி பார்த்திருந்த சாதனா, சத்தம் கேட்டு “அண்ணி என்னாச்சி?” என்றபடி வர... அதற்குள் மனைவியை உட்கார வைத்து, “எங்கமா அடிபட்டிச்சி?” என கேள்வி கேட்டு அவள் காலருகில் உட்கார்ந்து முட்டிக்கு கீழ் அழுத்தினான்.

வலித்தாலும், “வலியெல்லாம் இல்ல. லேசான அடிதான். முதல்ல எழுந்திரிங்க” என்றவளின் குரல் வெளியே வரவில்லை.

“பார்த்து வந்திருக்கலாம்லமா?”

“பார்க்க முடியாததால தான் அடிபட்டிருச்சி.” ‘என் மனசுல’ என்பதை மட்டும் உள்ளுக்குள் முழுங்கினாள். “சாரிமா நான் அதை மறந்திட்டேன்.”

“என்னண்ணி என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல?” அப்பொழுது தோட்டத்திற்கு சென்று உள்ளே வந்த வந்தனா, “என்னாச்சி?” என பதறிபடி வேகமாக வர... “ஒண்ணுமில்லம்மா அண்ணி டேபிள்ல இடிச்சிக்கிட்டாங்க.”

“என்ன தேவிமா எதுவாயிருந்தாலும் என்னைக் கூப்பிடச் சொல்லியிருக்கேன்லயா?” என வருத்தப்பட, அந்த மூவரின் அன்பிலும் சற்றுத் திணறினாலும், அவளின் கோபம் அனைத்தும் கணவனாகிய ஜீவாவின் மேலேயே விழுந்தது.

தற்செயலாக திரும்பிய சாதனா, “ஹலோ! ராஜ் சார் எப்ப வந்தீங்க? சாரி அண்ணிக்கு அடிபட்டதுல உங்களைக் கவனிக்கல. உள்ளே வாங்க. ஏன் வாசல்லயே நிற்கிறீங்க?” என்றதும் தான் அனைவரும் அவனைப் பார்த்தார்கள்.

ஜீவாவை நேருக்கு நேர் பார்த்த ராஜ் மிரண்டு தான் போனான். ஜீவாவும், வந்தனாவும் ‘இவனெப்படி இங்கே? இவன் தான் ராஜ்ஜா?’ என நினைக்க...

‘இவன் சாதனாவோட அண்ணனா?’ ராஜும் நினைத்தான்.

அவனையே பார்த்திருந்த ஜீவாவின் கண்களில் வெறியேற, அவனருகே நடந்தபடி, “வாடா! ராஜ்ன்ற பெயர்ல சுத்துறியா நீ? இத்தனை நாளா உன்னைத்தான் தேடிட்டிருந்தேன். என் கண்ணுல மாட்டாம போயிட்ட?” என்று சட்டையைப் பிடிக்க...

ஏனென்று முழுமையாக புரியாவிட்டாலும், சுபாவிற்குமே அந்த ராஜ்கு தண்டனை குடுக்கும் எண்ணம் இருந்தது. சாதனா இடைபுகுந்து, “அண்ணா அவர் என்னோட கெஸ்ட். ஏன் இன்சல்ட் பண்ற?”

“இந்த உலகத்துல உள்ள சுயநலத்தோட மொத்த உருவம் இவன். இவன் உன்னோட கெஸ்டா? இவன் உனக்கு வேண்டாம் சாதுமா?”

“நானும் வேணும்னு சொல்லலையேண்ணா. இப்ப நான் சம்மதிச்சதால வீட்டுக்கு வந்த கெஸ்ட் இவர்.”

“சாதுமா ப்ளீஸ்... புரியாமல் பேசாத. இவனைப்பற்றி உனக்குத் தெரியாது. தெரிஞ்சா நீயே இவன் கழுத்தைப் பிடிச்சி வெளில தள்ளுவ.”

“முதல்ல சட்டையிலிருந்து கையை எடுண்ணா.” ஜீவா கையை எடுத்ததும், “சரிண்ணா இப்ப கேட்கிறேன். என்ன காரணம் சொல்லு?”

மனைவியின் புறம் திரும்பியவன், அவளின் குழப்ப முகம் பார்த்து, “இப்ப வேண்டாம் நான் உன்கிட்ட தனியா சொல்றேன்.”

“ஏன் இப்ப சொன்னா என்ன?”

“சாதனா என்ன அண்ணனை எதிர்த்துப் பேசிட்டிருக்க? அதுவும் யாரோ ஒருத்தன் முன்னாடி. அவன் எது செஞ்சாலும் அதிலொரு காரணம் இருக்கும்னு தெரியாதா? இவனெல்லாம் நம்ம வீட்டுல நிற்கக்கூடத் தகுதியில்லாதவன்.”

“அப்ப ராஜ்ஜை உங்களுக்கும் தெரியுமா?” என்று சாதனா கேட்கும்போதே, சுபாவிற்கும் ‘எப்படி’ என்ற யோசனை வந்தது.

“ஏன் தெரியாது? ரொம்பவே தெரியும் இவன் ஒரு பக்கா சுயநலவாதின்னு” என இகழ்ச்சியாய் கூற...

“எதுவானாலும் இருக்கட்டும்மா. அதுக்காக வீட்டுக்கு வந்தவரை இப்படியா அவமானப்படுத்துறது?”

அதுவரை பொறுமையாயிருந்த ஜீவா, “சாதனா உள்ள போ. இதுக்குமேல ஒரு வார்த்தை பேசின கொன்னுடுவேன். உனக்கு நானே நல்லபையனா பார்த்து இன்னும் ஒரு மாசத்துல கட்டி வைக்கிறேன். இனி நீ வேலைக்கும் போகக்கூடாது. சுயநலத்துக்காக உயிரைக்கூட பலிகொடுக்கிறவங்க இருக்கிற இடத்துல நீ இருக்கக்கூடாது.”

“அண்ணா நான் என்ன சொல்றேன்? நீ என்ன பேசிட்டிருக்க? புரிஞ்சிதான் பேசுறியான்னு என்னைக் கேட்டுட்டு, நீதான் புரியாமல் பேசுற? இதுக்கும் என்னோட கல்யாணத்துக்கும் ஏன் முடிச்சி போடுற?”

“ஓ... அப்படி வர்றியா. சரி உன் வழிக்கே வர்றேன், இவன் இங்க எதுக்கு வந்தான்?”

“பிடிச்சிருக்கு சொல்லி பொண்ணு கேட்டு” என குரல் உள்ளே போக...

“போ... உள்ள போ... போயிடு சொல்றேன்ல” என குரல் உயர்த்தி கண்களில் ஆவேசத்துடன் தங்கையைப் பார்த்து கத்தியவன், “அம்மா தேவியையும் உள்ளே கூப்பிட்டுப் போங்கம்மா. இவனை நான் அனுப்புறேன்” என்றதும் வேறு வழியில்லாமல் மற்றவர்கள் உள்ளே சென்றுவிட்டனர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
மூவரும் உள்ளே சென்றதும் ராஜிடம் திரும்பியவன், “உனக்கு என் தங்கை கேக்குதாடா? பேசின பொண்ணையே கல்யாணம் பண்ண வக்கில்லாத பய நீ? உனக்கு என் தங்கையா?” என சட்டையைப் பிடிக்க...

“சார் முதல்ல சட்டையிலிருந்து கையை எடுங்க. சாதனா உங்க தங்கைனு எனக்குத் தெரியாது. எனக்குப் பிடிச்சிருந்தது, பொண்ணு கேட்டேன். இஷ்டமிருந்தா சொல்லுங்க. இல்லன்னா விடுங்க. அதுக்காக சட்டையெல்லாம் பிடிக்கிறது சரியில்ல சொல்லிட்டேன்.”

“இதையே தானடா அந்தப் பொண்ணையும் பார்த்தப்ப சொன்ன? அப்புறம் ஏன்டா உனக்குப் பிடிக்காமல் போச்சி.” என அவனிடம் பேசியபடியே முன்னே வர, ராஜ் பின்னால் எட்டெடுத்து வைக்க, அவனை அப்படியே வீட்டு வெளியே போர்டிகோவிற்கு தள்ளியபடி வர...

சுபாவை ரூமிற்குள் விட்டு வந்த வந்தனா, “ஜீவா வேண்டாம் அவனை விட்டுட்டு வீட்டுக்குள்ள வா” என அழைக்க...

“எப்படிம்மா விடச் சொல்றீங்க? முதல்ல எனக்கு இவன் அவளை வேண்டாம்னு சொன்னானேன்ற கோபம் இருந்தாலும், அதையும் மீறின ஒரு திருப்தி. இந்த மாதிரி ஒரு சுயநலவாதிக்கு அவ வேண்டாம்னு. ஆனா, இவன்...”

வந்தனா வெளியே வந்ததுமே, அவரைத் தொடர்ந்து சுபாவும் வந்து மறைவாக நின்று அவர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஜீவா, ராஜ் இருவரையும் பார்த்ததிலிருந்து இன்னும் குழப்பம். தனக்கேத் தெரியாமல் தன் வாழ்வில் நடக்கும் விசித்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவளைப்பற்றி! ஜீவாவைப்பற்றி! இதோ ராஜ் என்ற பெயரில் வந்து நின்ற ஆனந்த் பற்றி!

‘ஆம்.’ ஆனந்த் தான் சுபாவைப் பெண்பார்த்து, முறைப்படி நிச்சயம் செய்து, திருமணத்திற்கு முன் கோவிலுக்கு செல்லலாமென்று அழைத்துச்சென்று, ஆபத்தென்றதும் தன்னுயிரைக் காப்பாற்றி, மனைவியாகப் போகிறவள் உயிரை பழிகொடுக்க தயாரான ஒரு சுயநலவாதி.

ஆனந்த் மேல் அன்பு அப்பொழுதும் இல்லை. இப்பொழுது அவன் முகம் பார்க்கும் வரை, அவன் முகம் நினைவிலும் வரவில்லை. கண் தெரிந்ததும், தான் தொட்டு ரசித்த கணவனின் முகத்தை ஆசைதீர ரசிக்க எண்ணியிருந்தாள். முதன்முதலில் கணவன் முகத்தைத் தான் பார்த்தாள். பார்த்தறியாத முகம், மனதில் பதிந்த அந்த குரலும், தொட்டுணர்ந்து பார்க்காமலும் ஜீவாவை கணவனாக அறியமுடியவில்லை. அவனைத் தொடர்ந்து வந்த ராஜ்ஜை பார்த்ததும் ‘ஆனந்த்’ என எழுந்தவளின் பார்வை மட்டும் ஏனோ ஜீவாவையே சுற்ற, தான் ஏதோ தவறு செய்வதாக நினைத்து செய்வதறியாது திகைத்தாள்.”

அவனிடமிருந்து பார்வையை எடுக்க நினைத்தவள் அதில் நடை தவறியவளாய் கால் டேபிளில் இடிக்க... சுப்பூஊஊ... என ஓடி வந்தவனைப் பார்த்து மலைத்துத்தான் போனாள். எங்கே மயங்கி விடுவோமோ! என்ற எண்ணம் மனதில் வர, ஓடி வந்து பிடித்தவனின் குரலிலும், ஸ்பரிசத்திலும் ‘இவன் தான் தன் கணவன்’ என்று கண்டு கொண்டாலும், மிதமிஞ்சிய குழப்பங்கள் மனதில் ஆட்டிப் படைத்தது. அதைவிட கணவனின் மேல் எல்லையில்லாத கோபம் வந்தது. மற்றவர் அதிலும், அந்த ஆனந்த் முன் தன் குடும்பத்தை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே கணவனின் கால் வலிக்கிறதா? என்ற கேள்விக்கு அமைதியாக பதிலளித்தாள். தனக்கு கண் தெரியாமல் போனதற்காக முதன் முதலாக வருத்தப்பட்டதும் அப்பொழுது தான், சந்தோஷப்பட்டதும் அப்பொழுது தான்.

ஒரு நிமிடம் ஆனந்த் முதலில் வந்து ஜீவா பின்னால் வந்திருந்தால் அதன் விளைவு விபரீதமல்லவா? கணவன் என நினைத்து ஆனந்திடம் சென்றிருந்தாலோ, நடக்காவிட்டாலும், உணர்ச்சிவசப்பட்டு கணவன் தானேயென்று அவனை அணைத்திருந்தாலோ, அது எவ்வளவு பெரிய இக்கட்டில் கொண்டு வந்து விட்டிருக்கும். அதுவுமில்லாமல் கணவனென்று இதுவரை அவள் நினைத்திருந்தது இந்த ஆனந்தைத் தானே. இன்றைய உறவின் போதுகூட, ‘கடவுளே!’ அதை நினைத்தவளுக்கு தன்மேலேயே அருவெருப்பு வந்தது. அதுவே அவள் கோபத்தின் அளவு அதிகரிக்க காரணம். இந்த உண்மையை முன்னாடியே தெரிவித்திருந்தால் தனக்கு இந்த நிலை வந்திருக்காதல்லவா!

‘ஏன் மறைத்தார்கள்? இரண்டு குடும்பமும் சேர்ந்து எதற்கு... நான் சம்மதிக்க மாட்டேனென்றா? வீட்டில் பார்த்த பையன் யாராயினும் சம்மதமே என்றிருந்த நானா மறுத்திருப்பேன். தன் முகத்தில் ப்ளாஸ்டிக் சரிஜரி செய்திருந்ததால் இந்த ஆனந்திற்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிந்து அவன் என்னிடம் பேச வந்து, நான் எதாவது ஏடாகூடமாக பேசி, கடவுளே!’ யோசிக்கக்கூட அருவருப்பாக இருந்தது சுபாவிற்கு. அவையனைத்தும் மொத்தமாக கணவனிடம் திரும்பியது.

மற்றவர்கள் இந்த விஷயத்தை மறைத்திருந்தாலும் ஜீவா சொல்லியிருக்கலாமே என்ற எண்ணம் சுபாவிற்கு. இத்தனை நாட்களில்லாமல் பார்வை தெரிந்த பின் இன்று தங்களுக்குள் நடந்த உறவை என்னவென்று சொல்வாள். கோவம்... கோவம் மட்டுமே அவள் மனதிற்குள் கொழுந்து விட்டெறிந்தது. இந்த கோவம் அவசியமில்லையென்று ஒருபுறம் நினைத்தாலும், கடைசியாக அவள் செய்யவிருந்த செயல் அவளின் கோபத்தை அதிகப்படுத்தியது.

சுபாவின் இந்த கோபம் தீருமா? அல்லது கணவன், மனைவி இருவருக்குமிடையே பிளவை ஏற்படுத்துமா?
 
Top