- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
ஓம் சரவண பவ
உயிர் தேடும் இளம்பூவே
1
உயிர் தேடும் இளம்பூவே
1
பதினைந்து வருடங்களுக்கு முன்:
பகையொன்று தொடங்குதடா!
ஈரக்குலையை நடுங்க வைத்து
பந்த பாசம் தூரம் போட்டு
மூன்று தலைமுறையினரைக்
குலையறுத்தவர்களைக்
காவு கொடுத்து,
குலம் காக்க வருகிறார்கள்
என்னிளநாதனும்! எம்மங்கையும்!
“இளா பிள்ளைங்களைப் பார்த்துக்க. பொங்கல் வச்சி முடியுறது வரை எல்லாரும் உன்னோட பொறுப்பு.” தன் பதினைந்து வயது மருமகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் இளா என்கிற இளநாதனின் தாய்மாமன் அருணாச்சலத்தின் மனைவி தமிழரசி.
“நான் பார்த்துக்கறேன் அத்தை. நீங்க போய் வேலையைப் பாருங்க.”
“எனக்குத் தெரியும் இளா. அதனாலதான் பொறுப்பை உன்கிட்டக் கொடுத்தேன்” என்று மருமகனின் தலைவருடிக் கொடுத்தார்.
“அண்ணி மருமகனைக் கொஞ்சினது போதும். இங்க வாங்க நேரமாகுது. இருட்டுறதுக்குள்ள கிளம்பணும்.. சீக்கிரம் வைங்கன்னு உங்க அண்ணன் என்னைப் பிடுங்குறாங்க” என இளநாதனின் தாய் காமாட்சி சொல்ல...
“பார்த்தா அப்படித் தெரியலையே அண்ணி.” யோசனையாய்த் தமிழரசி கிண்டலடிக்க,
“ம்... தெரியாத வரைக்கும் நல்லது. இப்ப வர்றீங்களா இல்லையா?”
“சரி சரி.. இதோ” என அருகில் சென்று பொங்கல் வைக்க ஆரம்பித்தனர். மூத்த தலைமுறையினர் பேரன் பேத்திகளை ஒரு பார்வையும், இங்கே ஒரு பார்வையுமாக அமர்ந்திருந்தார்கள்.
அருணாச்சலம், தமிழரசிக்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து பிறந்தவன் அறிவழகன். அவனுக்கும் அடுத்து பிறந்த மங்கையர்கரசிக்கும் ஏழு வயது வித்தியாசமென்றால், மங்கைக்கும் கடைக்குட்டி அன்பழகனுக்கும் மூன்று வயது வித்தியாசம்.
அதேபோல் தேவநாதன், காமாட்சிக்கு இளநாதனும், அவனுக்கு அடுத்ததாக நான்கு வருட இடைவெளியில் பிறந்த கயல்விழி மட்டுமே!
“அத்தான் இங்க பாருங்க, தம்பி டிரஸ்லாம் வெல்லம் சாப்பிட்டு தேய்ச்சிக்கிட்டான்.” புகாரளித்த மாமன் மகள் மங்கையர்கரசியிடம் இருந்து, “அன்புப் பையா வா இங்க” என்றழைத்து தன் தாய்வழிப் பாட்டியிடம் சென்று ஆடை வாங்கி மாற்றினான் இளநாதன்..
சற்று நேரத்தில் அன்பழகன் தூங்கிவிடவும், அவனை அங்கிருந்த மரத்தடியில் போர்வை விரித்துப் படுக்கவைத்தார்கள்.
“இளா அருவிக்குப் போயிட்டு வரலாமா?” என்றபடி வந்த அறிவழகன் இளநாதனை விட இரண்டு வயது பெரியவன்.
“அண்ணா நானும்” என்று கயல்விழி வர,
“சரி அறிவு அத்தான். பொங்கல் வச்சி சாமி கும்பிட்டு முடிச்சதும் போகலாம்” என்றான் இளநாதன்.
“இளா அத்தான் நான் இந்த மலையில தொலைஞ்சி போயிட்டா என்ன பண்ணுவீங்க?” என கேட்டாள் மங்கையர்க்கரசி.
“தொலைய விடமாட்டேன் மங்கை. நீ என்னோட கையை பிடிச்சிக்க. அம்மாகிட்ட சொல்லிட்டு போகலாம்.”
“நான் கேட்டதுக்குப் பதில்” என்றாள் பிடிவாதமாக.
“ஹ்ம்... தொலைஞ்சிட்டா கண்டுபிடிக்கிறது கஷ்டம்தான். ஆனா உன் கையோடு விரல் கோர்த்து நல்லா பிடிச்சிக்கிட்டா, எந்த சூழ்நிலையிலும் எத்தனை வயசானாலும், நீதான்னு ஈஸியா கண்டுபிடிச்சிருவேன். நீன்னு கிடையாது உங்க நாலு பேர்ல யாராயிருந்தாலும் என் உணர்வுகளால கண்டுபிடிக்க முடியும்” என்றவன் குரலில் அவ்வளவு உறுதி.
“சூப்பர்டா இளா. விளையாடுற டைம்ல உன்னோட இந்த உணர்வை ஃபீல் பண்ணியிருக்கேன். பார்க்காமலே கையைப் பிடிச்சிட்டு என் பெயரைச் சொல்லிருவ. கடவுள் ஏதோ ஒரு கணக்குலதான் வச்சிருப்பாராயிருக்கும். சரி வா நாம கிளம்பலாம்” என்றதும் இளா தன் அப்பா தேவநாதனிடம் சொல்ல, அவர் மறுக்க, ஆயிரத்தெட்டு ப்ளீஸ் போட்டார்கள் பிள்ளைகள்..
“சரி போகலாம். இன்னும் கால்மணி நேரத்துல பூஜை முடிஞ்சிரும். அப்புறமா நாங்களும் வர்றோம்” என்றார்.
திண்டுக்கல் மாவட்டம், தேவதானம்பட்டியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரமுள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைத்து வேண்டுதல் நிறைவேற்ற இரண்டு குடும்பத்தினரும் வந்திருக்கிறார்கள்.
அது கொடைக்கானலின் அடிவாரத்திலிருக்கும் கோவில். அதன் மேல் பகுதியில்தான் தலையாறு அருவி இருக்கிறது. கோவிலுக்கு வருபவர்கள் அங்கு சென்று, இயற்கையை ரசித்து, புகைப்படம் எடுத்து என மகிழ்வுடன் உலவ உதவும் இயற்கை கொஞ்சும் ஏரியா. சற்றுத் தள்ளியிருக்கும் குறுகலான பாதையில் கற்பாறைகள் உள்ள அருவி.
அவர்களுடன் சேர்த்து இன்னொரு குடும்பத்து ஆண்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சார்பில் சில அடியாட்கள் வந்து மறைந்திருந்ததை உணரவில்லை வேதாச்சலம் குடும்பத்தினர்.
கார்மேகம்! அருணாச்சலத்தின் சொந்த சித்தப்பா மகன்.
வேதாச்சலம் வெங்கடாச்சலம் இருவரும் ஜமீன்தார் பரம்பரையில் வந்தவர்கள். இப்பொழுது ஜமீன்தார் என்று எதுவுமில்லையென்ற போதிலும் வேதாச்சலம் குடும்பத்திற்கு இணை யாருமில்லை. முன்னரெல்லாம் பிரச்சனையென்றால் பஞ்சாயத்து வைத்து தீர்த்துக் கொள்வார்கள். தற்பொழுது ஊராட்சித் தலைவர், கவுன்சிலர் இப்படி பொறுப்புகளுடன் அந்த இடத்தில் இவர்கள் குடும்பமே எப்பொழுதும் கௌரவமாய் தலைதூக்கியிருந்தது.
அவர்களுக்கு இணையாக வர முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள் தம்பி வெங்கடாச்சலம் குடும்பத்தினர். ஊரார்களிடம் கிடைக்கும் மரியாதை பதவியென்று வேதாச்சலம் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் அனைத்தையும் ஒருவித பொறாமையுடனும் இயலாமையுடனும் பார்த்திருப்பது கார்மேகத்திற்கு பெருத்த அவமானமாகப்பட்டது.
அதைவிட தமிழரசியை தனக்குப் பெண் கேட்டு பெண் வீட்டில் மறுத்து அவளை அருணாச்சலத்திற்கு முடித்துக் கொடுத்தார்கள். தமிழரசியை யாரோ திருமணம் செய்திருந்தால் இந்தளவிற்கு பகை உருவாகியிருக்காதோ என்னவோ! ஆனால் அருணாச்சலம் தமிழரசியை முடித்ததால் ஒரு வகை வன்மம் தலைத்தோங்கத் தொடங்கியது கார்மேகத்திடம்..
“பெண்ணாசையில் பல சரித்திரங்கள் அழிந்தது. கார்மேகத்தின் ஆசையினால் அழியப்போவது யாரோ!”
அதன்பின், தமிழரசியின் சித்திப் பெண்ணான செல்வரசியை பெண் கேட்க, அவர்கள் கொடுக்காததால் அடாவடியாகத் தாலிகட்டி மனைவியாக்கியது தனிக்கதை.
அதன் பின்னும் அருணாச்சலத்தின் தங்கை காமாட்சியை கார்மேகம் தன் தாய்மாமன் மகனுக்குக் கேட்க, வேதாச்சலமும் அருணாச்சலமும் மறுத்து செல்வரசியை முடித்தாற்போல், அவர்கள் எதுவும் தகிடுதத்தம் செய்துவிடும் முன், தொழில் முறை நண்பனான தேவநாதனுக்கு அவசர அவசரமாக மணம் முடித்து விட்டார்கள்.
அதில் கார்மேகம் இன்னும் வெறிகொள்ள, பகையொன்று உருப்பெற்று அவர்களை உருத்தெரியாமல் அழிக்கக் காத்திருந்தது. அதை வெளிக்காட்ட தருணம் பார்த்திருந்தார்கள்.
இல்லாத பகையை தன் பத்தொன்பது, பதினேழு வயதுப் பையன்களான ஜெயராம், சிவராம்கு சொல்லிக் கொடுத்தார் கார்மேகம். முதல் இரண்டு மகன்களும் அப்பாவின் இழுப்பிற்குப் போனதால் பயத்தில் உஷாரான செல்வரசி, தன் சின்ன மகன் ஸ்ரீராமை மட்டும் தாய் வீட்டினர் உதவியுடன் வெளியூரில் படிக்க அனுப்பியதைத் தடுக்க முடியவில்லை கார்மேகத்தால்.
இருபது வருடங்களாகியும் பகையை மனதினுள் வைத்து, நாவில் தேனை வைத்துத் தன் பெரியப்பா குடும்பத்தினருடன் உறவாடிக் கொண்டிருக்கிறான் கார்மேகம். அவனின் தந்தை வெங்கடாசலம் உயிருடன் இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பாரா தெரியாது. பெற்றோர்கள் இல்லாததால் அறிவுரை சொல்ல ஆள் இல்லாமல் ஆட ஆரம்பித்த கார்மேகத்திற்கு மனைவியின் சொல்லும் மண்டையில் ஏறவில்லை.
உள்ளுக்குள் எழுந்த பொறாமைத் தீ சிறிது சிறிதாக எரிந்து அவர்களை குடும்பத்துடன் சாகடித்து சொத்துக்களையும் தாங்களே ஆக்கிரமித்து அந்த ஊரில் எல்லாமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் பெரிதாகிக் கொண்டிருக்க, அதற்கேற்ற தருணமாக அமைந்ததுதான் இந்தப் பயணம்.
“அத்தை அங்க பாருங்க கோவில்ல சாமி மறைச்சிருக்காங்கள்ல அதுக்குப் பின்னாடி பளிச்சின்னு ஒளியடிக்குது.”
“ஆமாடா மங்கை. இந்த அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. 500 வருட பழைமை வாய்ந்த கோவில் இது. இங்க சாமியை திரைமறைவுலதான் பார்க்க முடியும். நாம என்ன வேண்டிக்கிறோமோ அது அப்படியே நடக்கும்னு பெரியவங்க சொல்வாங்க. மலை அடிவாரத்துல இருக்கிறதாலேயோ என்னவோ சக்தி ஒளி இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.”
“அப்படியா? அப்ப நானும் வேண்டிக்கிறேன்.”
“அப்படியேதான். சரி என்னன்னு வேண்டிக்கப் போறீங்க?”
“நான்! இளா அத்தான்! அறிவண்ணா! கயல்! தம்பி எல்லாரும் எப்பவும் உங்களை மாதிரியே ஒற்றுமையா ஒரே வீட்ல இருக்கணும்னு.”
“நல்ல விஷயம்தான். ஆனா, உனக்கும் கயலுக்கும் கல்யாணம் முடிச்சதும் வேற வீட்டுக்குப் போயிடுவீங்களே. அப்ப என்ன பண்றதாம்?”
“இல்ல நான் எங்கேயும் போகமாட்டேன். எப்பவும் உங்களோட இருக்க என்ன பண்ணனும்மா?” என தாயிடம் கேட்டாள்.
“பேசாம என் பையனை கல்யாணம் பண்ணிக்கடா மங்கை. அப்பதான் ஒரே வீட்ல எப்பவும் இருக்கலாம்” என்று காமாட்சி இடையிட...
“அண்ணி.. இப்பவே ஏன் சொல்லிக்கிட்டு” என்றார் தமிழரசி.
“அடிக்கடி பிள்ளைங்க முன்னாடி பேசினால்தான் அண்ணி தப்பு. விளையாட்டுப் பிள்ளையில்லையா, இன்னும் கொஞ்ச நேரத்துல பேசினதையெல்லாம் மறந்திருவா. மீறி பெரிய வயசுல ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா மட்டும்..” மட்டும் என்பதில் அழுத்தம் கொடுத்து “வேண்டாம்னா சொல்லப் போறோம்” என அமைதியாக அண்ணிக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல...
“நிஜமாவா அத்தை. அப்ப நான் இளா அத்தானை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களோடவே இருப்பேனா?” என்றாள் பெண்.
“கண்டிப்பா. ஆனா இப்ப நீ குழந்தையில்லையா, அதனால இந்த மாதிரி பேசாம பெரியவங்க சொல் பேச்சு கேட்டு, நல்லா படிச்சி எப்பவும் சமத்துப் பொண்ணா இருப்பீங்களாம். சரியா செல்லம்.”
“நான் சமத்துதான் அத்தை. இந்த இளா அத்தான் தான் பொறுப்பான பையன்னு அம்மா சொல்வாங்க. நானும் இளா அத்தான் மாதிரி நிறைய படிச்சி பொறுப்பான பொண்ணா வளருவேன்” என்று பெருமை தட்டினாள்.
“அவன் அதிகம் படிச்சிருக்கானா? பத்தாவது பெரிய படிப்புன்னு இதுவரை தெரியாமல் போயிருச்சேடா மங்கை” என்றார் ஆச்சர்யத்தைக் காட்டி.
“அத்தான் பத்தென்ன இருபது கூட படிப்பாங்க. சரி நான் அண்ணன்கிட்ட போறேன்” என சென்றாள்.
தன்னைவிட்டு ஓடிச்சென்ற அண்ணன் மகளை அன்பாய் பார்த்திருந்து, “இந்தப் பிள்ளைங்க எல்லாத்துக்கும் இளான்னா பொறுப்பானவன். அவனை மாதிரியிருக்கணும்னு ஆசைப்படுறாங்க. அறிவு கூடதான் சமத்துப் பையன். அவனை யாராவது சொல்றாங்களா பாருங்க அண்ணி?”
“விடுங்கண்ணி. சின்னப் பிள்ளைங்கதான. சரி வாங்க நேரமாகுது. இது மலையடிவாரம் வேற. சீக்கிரமே இருட்டிரும்” என்று அழைத்துச் சென்றார்.
Last edited: