New member
- Joined
- Nov 28, 2024
- Messages
- 7
- Thread Author
- #1
அன்னை மடியில் அறுபது நொடிகள்
அந்தக் கறுப்பு வெள்ளை புகைப்படத்தின் மீதுள்ள குங்குமம் கூடத் தன் புடைவையில் பட்டு அழிந்துவிட கூடாதெனக் கவனமாய் அணைத்து உறங்கும் செல்விக்கு "செல்லம்மா, எழுந்திடுடா" என்ற அம்மாவின் குரல் கேட்க, சுகமான கனவு கலைந்த உணர்வில் திடுக்கிட்டு விழித்தாள் இளம் பெண் ஒருத்தி.
எழுந்ததும் நேரத்தைப் பார்த்தவளது கண்கள் அவசரமாய் ஒரு அதிர்ச்சியை தத்தெடுத்ததுக் கொண்டது என்றால், மூளையோ முடிக்க வேண்டிய வேலைகளை அவசரமாய் வரிசைப்படுத்திக் கொண்டது.
"அச்சச்சோ சித்தி எழுந்துட்டாங்களோ தெரியலையே? அடியேய் லூசு செல்வி இப்படியாடி தூங்குவ" என்று தன்னை தானே திட்டிக் கொள்ளவும், எப்போதும் சித்தி எழுந்ததும் போடும் சுப்ரபாதம் ஒலிக்கவும் சரியாய் இருந்தது.
"அய்யய்யோ சித்தி எழுந்துட்டாங்களே, இன்னைக்கு செத்தடி நீ.. எப்பவும் கடைசி நேரத்துலயாவது காப்பாத்த அப்பா இருப்பாங்க. ஆனா இன்னைக்கு அவங்களும் இல்ல எப்படியாச்சும் எஸ்கேப் ஆகிடு செல்வி" என்று பேசிய வண்ணமே தன் ஆடையைச் சரி செய்து கொண்டவள் மெல்ல எட்டி பார்த்து யாரும் இல்லையென உறுதிப்படுத்தி வாசலை நோக்கி விரைந்தாள்.
அவசமாய் வெளியே வந்தவள் வாசலில் வைக்கப்பட்டிருந்த நீரில் முகத்தை அலம்பி, அந்த நீரினை அள்ளி வாசலில் தெளித்தாள். விரைவாக ஓரளவுக்கு நன்றாக, சிறிய கோலம் ஒன்றை போட்டு, சித்தி கண்ணில் படுகிறாரா என எட்டி பார்த்தபடி மீண்டும் தன் அறைக்கு விரைந்தவள் அவசரகதியில் "எல்லாரும் நல்லா இருக்கணும். அப்பா சீக்கிரம் வேல முடிஞ்சி பத்திரமா வீட்டுக்கு வந்துடனும்" என்று கடவுளுக்கு மனு அனுப்பவும் தவறவில்லை.
அதன் பின் வேறு எதையும் யோசிக்க விடாமல், கடிகாரத்தை விடவும் வேகமாய் நகர்ந்தது அவளது நேரம். கோலம் போட்டு, வீட்டில் அவர் அவர் விருப்பம் படி ஒவ்வொருவருக்கும் ஏற்பச் சமையலை முடித்து, துவைக்க வேண்டிய ஆடைகளை எடுத்து, துவைத்த ஆடைகளை மடித்து வைத்து என எல்லாம் முடிந்து, ஒருவழியாய் வெளியே வந்து வீட்டு முற்றத்தில் அமரச் சரியாய் ஆறு முப்பது தான் ஆகி இருந்தது. நேரம் ஏதோ ஆமை வேகத்தில் கழிவதாய் ஒரு பிரம்மை அவளுள்.
'ச்சே! இவ்வளவு வேலை செஞ்சும் இந்த நேரம் மட்டும் ஓட மாட்டேங்கிது, எப்போ ஒன்பது மணியா போகுமோ?' என்று எண்ணியபடி, தன் தம்பி தங்கையை எழுப்ப அவர்கள் அறையினுள் நுழைந்தவளுக்கு அவ்வளவு நேர சோர்வு மறந்து சிரிப்பு தான் தோன்றியது. எப்போதும் எலியும் பூனையுமாய் சண்டை போடுபவர்கள் இவ்வளவு நெருக்கமாய் உறங்குவது ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டது போன்ற உணர்வு அவளுக்கு.
"டேய் சரத்து அடியேய் ஹேமா எழுந்துக்கோங்க ரெண்டு பேரும். ஸ்கூல் போகணுமேனு ஒரு அக்கர இருக்கா உங்களுக்கு" என்று காட்டு கத்து கத்தியும் அவளது பாச மலர்கள் எழுந்த பாடில்லை. அது எப்போதும் நடக்கும் ஒன்று தானேயென அவளும் அலட்டிக்கொள்ளாமல் தனது கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்தாள்.
"அடியேய் சொப்பன சுந்தரி நீ மட்டும் என் கையில கெடச்ச செத்தடி. எப்போ பாரு இதே வேல உனக்கு" என்ற தன் தம்பி சரத்தின் வாயில் கை வைத்தவள் "அடேய்! எரும மாடே ஏன்டா கத்துற, சித்தி காதுல விழுந்திச்சு நான் செத்தேன். மரியாதையா எழும்பித் தொல" என்றாள்.
அவனோ "இல்ல.. இல்ல, நீ ஃபேன போடு முதல்ல, ஏன் எப்ப பாரு அத ஆப் பண்ற நீ" என்றான் இடையில் தூக்கம் கலைந்த எரிச்சலுடன்.
"அதெல்லாம் முடியாது நீ எழும்பு. அதான் உன்ன எழுப்ப நான் கண்டு பிடிச்ச ஆயுதம்" எனப் பெருமை பட்டுக் கொண்டாள் செல்வி.
"ச்சே! இந்த உலகத்துல ஒரு வாலிபன் தூங்க கூடச் சுதந்திரம் இல்ல என்ன வாழ்க்கையோ? இதோ பாரு இவள என்ன நடந்தாலும் கும்பகர்ணி மாதிரி தூங்குறத்த" என்றவாறு தன் தங்கையை உதைக்க, அதில் எழுந்து ஒரு போருக்குத் தயாராகியவளை இவன் தாக்க, மறுபடி அவள் தாக்க எனப் போய்க்கொண்டிடுந்த, போரைச் சமாதான உடன்படிக்கைக்கு கொண்டு வரச் செல்விக்குப் போதும் போதும் என்றானது. அவள் இந்த வீட்டில் ஓரளவுக்கு சந்தோசமாக இருக்க காரணமானவர்கள் இவர்கள் தான்.
தன் பாசமலர்களின் சேட்டையில் லைத்திருந்தவளை சித்தியின் குரல் உலகுக்கு அழைத்து வந்தது.
"அடியேய்! இன்னும் என்ன தான் பண்ணுற, இன்னுமா வேல முடிக்கல என்ன பொண்ணோ" என்ற தன் சித்தியின் இனிய வார்த்தை அன்றைய நாளுக்கு மோசமான ஆரம்பமும் உண்டு என்பதை எப்போதும் போல் அவளுக்கு உணர்த்தியது.
"இதோ வந்துட்டேன் சித்தி, எல்லாம் முடிச்சிடேன். சரத், ஹேமா ரெண்டு பேரும் குளிக்கப் போயிருக்காங்க வந்தா ஸ்கூல் அனுப்பிடுவேன் அவ்வளவு தான்" என அவள் சொல்லுவதை என்றும் இல்லா பொறுமையுடன் செவிமடுத்து அவளைக் கடந்து சென்றார் அன்னலட்சுமி. இதுவே இந்த நாளின் பெரும் அதிசயத்தில் ஒன்று தான்.
அன்னலட்சுமி, தன் கணவரின் மூத்த தாரத்தின் மகளை தன் மகளாக நடத்தும் அளவிற்கு நல்லவர் இல்லை என்றாலும், தங்க இடம் கொடுத்திருப்பதையே பெரிதாய் எண்ணி, தான் பெரியமனது கொண்டவர் என அவரே ஊரில் உள்ளவர்களிடம் பெருமை பேசுவதுமுண்டு.
இத்தனைக்கும் அவர்கள் இருக்கும் வீடு செல்வியின் தாயாரின் பெயரில் தான் இன்றளவிலும் இருக்கிறது. இதிலிருந்தே அவர் பெரியமனது எத்தகையது என்பது ஊரறிந்த விடயம்.
அன்னலட்சுமி பேருக்குத் தான் லட்சுமி உண்மையில் சொர்ணாக்கா, மங்கம்மா என்ற பெயருக்கு நூறு வீதம் கச்சிதமாய் பொருந்துபவர். சரத் ரகசியமாய் பேசும்போது அவரை விளிக்கும் பெயரும் இதுதான். மாட்டிக் கொள்ளாதவரை அவனுக்கு நல்லது.
சரத் ஹேமா என்னதான் அன்னலட்சுமியின் குழந்தைகளாக இருந்தாலும் ஒட்டுதல் என்னவோ செல்வியிடம் தான். அதுவே அன்னலட்சுமிக்கு செல்வி மீது மேலும் கோபத்தை டன் கணக்கில் ஏற்றி விட்டிருந்தது.
அப்படியே அடுத்த ஒரு மணி நேரமும் செல்வியின் வாழ்வில் வளமை போல் நகர்ந்த நேரங்களே. தம்பி தங்கையின் சேட்டையில் ஒருவாறு சமாளித்து அனுப்பி வைத்தவளுக்கு இன்று ஏதோ சுதந்திர உணர்வு. காலையில் சித்தியின் வாயால் திட்டு வாங்காததோ என்னவோ.
அனைத்தும் ஒருவழியாய் முடிய நேரத்தைப் பார்க்க அதுவோ காலை எட்டு மணியெனக் காட்டியது. பார்த்தவள் மனதில், விரைவில் அடுத்த ஒரு மணி நேரம் நகராத என மனது முரண்டு பிடித்தது.
காலை ஒன்பது மணி என்பது, அவளது அன்றாட வாழ்வில் ஆவலுடன் எதிர்பார்க்கும் நேரம். அவளுக்கே அவளுக்காகச் செலவிடும் நேரம்.
அதுவும் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிவரை அவள் செலவிடும் இந்த ஒரு மணி நேரமே அவள் வாழ்வில் பொக்கிஷமான தருணங்கள்.
அன்றைய நாளில் அந்த ஒரு மணி நேரத்தை அடையும் வரை, அதை நோக்கிய எதிர்பார்ப்புகளுடனும்.. அந்த ஒரு மணி நேரத்தைக் கடந்த பிறகு அது கொடுத்த சுகமான நினைவுகளுடனுமே இனிதாய் நிறைவு பெறும் செல்வியின் அன்றைய நாள்.
அந்த நேரம் தான் அவள் இயற்கையுடன் செலவிடும் நேரம். காலை உணவு உண்ணுவதற்காய் உணவை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்குச் சற்று தொலைவில் இருக்கும் அவர்களது தோட்டத்துக்குச் செல்லும் நேரமது.
இருக்கும் ஆடையில் சிறந்த ஒன்றை அணிந்து தன்னை அழகுபடுத்தி நேரத்தைப் பார்த்தவளோ மனதில், 'அச்சோ! எவ்வளவு காத்திருந்தாலும் இந்த ஒன்பது மணி மட்டும் எப்போவும் சீக்கிரம் வரவே மாட்டேங்கிது, இப்போவே போனா சித்தி ஏதும் சொல்லுவாங்களோ? ச்சே..சே! சொல்லமாட்டாங்க வழமையா போறது தானே, இருந்தாலும் பயமா இருக்கே. எதுக்கு வம்பு சொல்லிட்டே போவோம்' என்று எண்ணியவள், "சித்தி" என்று அழைத்தாள்.
அவரோ மெல்ல அவளை எட்டி நேரத்தை பார்த்தவர், ஏதும் சொல்லாமல் தன் வேலையில் மீண்டும் கவனமானார்.
அவள் மீண்டும் "சித்தி, நான் வேலை எல்லாம் முடிச்சிட்டேன் போகவா?" என்று வார்த்தைகளை இழுத்தாள்.
"அதான் ஒன்பது இன்னும் ஆகலயே அதுக்குள்ள என்ன அவசரம், நேத்து துவைச்சுப் போட்ட என் புடவை எல்லாம் ஏதோ வாட வருதுனு அங்க போட்டிருக்கேன் மறுபடியும் துவைச்சு காயப் போட்டுட்டு போ, துவைக்கிற நேரம் ஏனோ தானோன்னு துவைச்சா இப்படி தான்" என்றார் வேண்டுமென்றே..
மறுத்து பேசினால் இன்னைக்கு போக விடமாட்டார் என்பது புரிய, இருக்கும் பதினைந்து நிமிடங்களுக்குள் எப்படியோ மின்னல் வேகத்தில் அந்த வேலையை முடித்தவள் பாதி நனைந்த ஆடையுடன் அவர் முன்னே வந்து நின்றாள். எங்கே ஆடை மாற்ற சென்றால், அது அவளுடைய ஒரு மணிநேரத்தில் சில நொடிகளை எடுத்துக்கொள்ளுமோ என்ற கவலை அவளுக்கு..
அவள் வந்து நிற்பதை உணர்ந்தவர், "ஏன் அம்மணிக்கு அங்க போய் சாப்ட்டா தான் சாப்பாடு எறங்குமோ? சாப்பிடுறது ஓசி சாப்பாடு, இதுல இவங்களுக்கு ஊர் மேய்ஞ்சு சாப்பிடணும்னு ஆச வேற, மனசுல பெரிய கதாநாயகினு நினைப்பு..
நீங்க போங்கம்மா அப்பறம் சித்தி சாப்பிடக் கூட விடுறாங்க இல்லனு ஊர்ல கெட்ட பேர் வாங்கி கொடுப்பீங்க தேவையா எனக்கு, நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அது போற இடத்துக்குத் தான் போகுமாம்" என்று பேசியபடியே எழுந்து உள்ளே சென்று விட்டார்.
அந்த வார்த்தைகளுக்குப் பின் அந்தச் உணவைக் கையில் வைத்திருப்பதே அவளுக்குப் பாரமாகி போனது. வைத்து விட்டுச் செல்லலாம் என்றாலும் அம்மாவின் ஆசை வார்த்தைகள் வந்து காதில் வீணை மீட்டியது.
"செல்லம்மா, என்ன தான் கோபமோ, சோகமோ வந்தாலும் சாப்பாட்டுல காட்டவே கூடாதுடா, அது நமக்குக் கடவுள் கொடுத்தது. அதை நிராகரிச்சா கடவுளையே நிகரிக்கிற போல ஆகிடும் கண்ணா" என்று அவள் அம்மா எப்போதும் சொல்லும் வசனங்களில் இதுவும் ஒன்று. அப்படி இருக்கையில் அவளால் அதனை மீற முடியுமா என்ன?
"சித்தி இன்னைக்கு நேத்தா திட்டுறாங்க. வழமை போலத் தானே விட்டுத்தள்ளு செல்வி" எனத் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள் தோட்டத்தை நோக்கி நடை போட்டாள்.
போகும் வழியில் "ஏலேய் செல்வி, எங்க தோட்டத்துக்குக் கிளம்பிட்டியா?" என்றார் இவளைக் கண்ட பாட்டி ஒருவர்.
"ஏய் கிழவி உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்றது போகும்போது எங்கனு கேக்காதன்னு. நீ எல்லாம் கேட்டா போற காரியம் விளங்குமா?"
அவரோ "அடியேய் கூறு கெட்டவளே, பாசமா எங்க போறனு கேட்டது ஒரு குத்தமா? அப்படியே இவ கவமெண்டுக்கு உத்தயோகம் பாக்க போறா, போடி இவளே" என்று கேலியுடன் வினவினார்.
இவளும் விடாமல் "ரொம்ப பேசுற கெழவி நீ, இரு இரு அது பண்ணி கொடு செல்வி, இத பண்ணி கொடு செல்வினு வந்து நிப்பல அப்போ பாத்துக்கிறேன்" என்றாள்.
"சரிதான் போடி" என்றவாறு முகத்தைத் திருப்பிக் கொண்ட அந்தப் பாட்டியும் சரி, கோபமாய் திரும்பி நடை போட்ட செல்வியும் சரி புன்னகைக்க தவறவில்லை.. இது எப்போதும் நடக்கும் வாடிக்கை தான் வீம்புக்காய் சண்டை போட்டுக் கொள்ளும் நண்பர்கள் அவர்கள்.
மெல்ல அந்தத் தோட்டத்தை அடைந்தவளது கண்களில் தெரிந்தது எல்லாம், காலையில் கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் தெரிந்த தன் அம்மா இப்போது பச்சை மஞ்சள் சிவப்பு என நிறப் படமாகக் காட்சியளித்த பிரம்மை தான்.
இது அவள் அம்மா பராமரித்த தோட்டம். இதுவே அவள் வீடு, அவளை ராணியாய் உணரவைக்குமிடம். அம்மாவின் ஒவ்வொரு ஸ்பரிசமும் நிறைந்து அவளுக்ககே அவளுக்கான அரவணைப்பு அது.
இங்கிருக்கும் அந்த ஒரு மணி நேரம் தான், அவளும் குழந்தையாய் தாயன்பை அனுபவிக்கும் நேரம். இங்கே அமர்ந்து உண்ணுவது ஏதோ தாயே அவளுக்கு ஊட்டி விடும் உணர்வு அவளுள்.
"அம்மா நேத்து என்ன நடந்துச்சினா" என ஆரம்பித்து அவள் அம்மாவிடம் உரையாடலைத் தொடங்கி விட்டாள் இனி அவள் வாய் மூடுவது கடினம் தான்
இந்த ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவர் வாழ்க்கை ஆரம்பித்தது போலவே இயந்திர கதியில் செல்லவேண்டியிருக்கும். இருந்தும் இந்த நேரம் இயற்கை அவளுக்காகப் பரிசளித்த நிமிடங்கள் அவை.
எது எப்படி இருந்தாலும் அவளுக்கு இயற்கையுடன் கலந்த அவளது தாயுடன் கடக்கும் இந்த ஒரு மணி நேரமே மீதியிருக்கும் இருபத்து மூன்று மணி நேரத்துக்குமான சாவி.
அந்த ஒருமணி நேரம் எப்போதும் போல் அதி வேகமாக கடந்து விட, பெருமூச்சுடன் எழுந்து கொண்டவள், வீட்டை நோக்கி நடைப்போட்டாள், வரும் போதிருந்த உட்சாகம் வடிந்திருந்தது.
இருந்தும் நாளை மீண்டும் இதே அறுபது நொடிகளும் அன்னை மடியாய் அவளை தாங்க, அவளுடன் அவளுக்காய் காத்திருக்கும்.
முற்றும்
Attachments
Last edited: