New member
- Joined
- Dec 8, 2024
- Messages
- 2
- Thread Author
- #1
பரபரப்பாய் இயங்கும் காலை வேளையில் தன் அறையில் வெளியே கிளம்பி அமர்ந்து இருந்தாள் கயல்விழி. அவள் கிளம்பி இருந்தாலும் அவளுக்கு வெளியே செல்ல மனம் இல்லை. அதுவும் குறிப்பாக அவள் செல்லப் போகும் இடத்திற்கு. எங்கோ வெறித்திக் கொண்டு மனதை அலைபாய விட்டு அமர்ந்து இருந்தாள். “ஹே கயல் மாப்பிள்ளை வந்துட்டாரு டி” என்று அவள் அம்மா கூறியதில் தான் நடப்பிற்கு வந்தாள். கூடவே பதட்டமும் அதிகரித்தது. போக பிடிக்கவில்லை என்று அவளால் வீட்டிலும் சொல்ல முடியாது. கட்டிக்க போறவனிடம் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். ஒரு பக்கம் மனதில் அங்கு சென்றாலாவது தனக்கு ஒரு வழி கிட்டும் என்ற ஆசை இருந்தாலும் மறு பக்கம் அங்கு போகவே தயங்கிக் கொண்டு இருந்தாள். அறையை விட்டு இன்னும் அவள் வெளியே வராமல் இருக்க உடனே அவளின் அன்னை அவள் அறைக்கு வந்து, “கயல் மாப்பிளை வெயிட் பன்றாரு சீக்கிரம் வா.. அவரு உன்ன வெளிய கூட்டிட்டு போக வருவாருன்னு தெரியும்ல ஏன் உள்ளாரையே உக்காந்து இருக்க?” என்று அவர் படபடவென கேட்க நடப்பிற்கு வந்தவள் லேசாக தலையை அசைத்து விட்டு வெளியே வந்தாள். சுரத்தையே இல்லாமல் பெற்றோரிடம் இருந்து விடைபெற்று அவளின் வருங்கால கணவன் வருண் உடன் கிளம்பினாள். பெற்றோரும் இன்முகத்துடன் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்.
கார் கதவை கயலுக்காய் வருண் திறந்து விட யோசனை உடனே ஏறி அமர்ந்துக் கொண்டாள் கயல். காரை கிளப்பிய வருண் அவளின் முகத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்தவண்ணம் ஓட்டிக் கொண்டு இருந்தான்.
“கயல், என்ன ஒரு மாதிரி இருக்க? எனக்கு தெரியும் நீ எதுக்கு தயங்குறன்னு, ஆனா நீயும் இதை பண்ணா நல்லா இருக்கும் தானே சொன்ன.. உன்னால முடியும் கயல் நீ இவ்வளோ பெரிய ஸ்டெப் எடுத்ததே நல்ல விசயம். உன் கூட நான் எப்போதும் இருப்பேன். உன் நிலமை எனக்கு புரியுது ஆனா ஒரு விசயம் உன் மனசுல பதிய வச்சிக்க நடந்ததுக்கு நீ காரணம் இல்ல” என்று அழுத்தமாய் கூறிட மெளனமாவே இருந்தாள் கயல்.
“கயல், ஐ லவ் யூ” என்று வருண் அவளின் விழிகளை பார்த்து கூறிட கயல் மனதில் இருந்த பாரம் சற்று குறைந்தது போல் உணர்ந்தாள். கியர் மீது இருந்த அவன் கரத்தின் மீது அவளின் கரத்தினை பதித்து அவனை பிடித்துக் கொண்டாள். வருண் மனம் அந்த சிறு தொடுகைக்கே சிறகில்லாமல் பறந்தது. அவளாக முன்வந்து தொடுவது எவ்வளவு பெரிய விடையம் என்று அவனுக்கு நன்றாய் தெரியும்.
முப்பது நிமிடத்தில் நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனைக்கு இருவரும் சென்றார்கள். நேராக அவர்கள் சென்றது மனநல ஆலோசகர் பிரிவிற்கு தான். அங்கு வரவே கயலுக்கு தயக்கமாக இருந்தது. முதலில் வருண் அங்கு செல்லலாம் என்று கூறிய பொழுது கயல் சொன்ன முதல் விடையம், “நான் ஒன்னும் பைத்தியம் இல்ல, இது மனசுல உள்ள சின்ன பிரச்சனை. அங்க வர மாட்டேன்” என்று தான் கூறினாள். ஆனால் வருண் தான் ஆலோசனை பெறுவது ஒன்றும் தவறில்லை, அங்கு சென்றால், மன நோயாளி என்று அர்த்தம் இல்லை என்று கூறி அவளை சமன் செய்து அங்கு அழைத்து சென்றான். இப்பொழுது அங்கு வந்து விட கயலுக்கு பதட்டமாய் இருந்தது.
“கயல் நான் வெளியவே இருக்கேன் நீ டாக்டர் போய் பார்த்து என் கிட்ட சொன்னது எல்லாத்தையும் சொல்லு.. நான் வந்தா நீ தயங்குவ சோ உன் மனசு விட்டு நீ எல்லாத்தையும் சொல்லு புரியுதா” என்று அவளுக்கு ஆதரவாக கூறினான் வருண். இவ்வளவு உறுதுணையாக ஒரு வாழ்க்கை துணை கிடைக்க, குடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றாமல் இல்லை. நிச்சயம் அவனுக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்தாள். ஒரு செவிலியர் கயலின் பெயரை அழைக்கவும் வருணிடம் தலை அசைத்து விட்டு ஆலோசகர் அறைக்கு சென்றாள்.
“உக்காருங்க மா..” என்று அந்த பெண் மருத்துவர் கயலுக்கு அமர இடத்தை காட்ட தயக்கத்துடன் அமர்ந்தாள்.
“ரிலக்ஸ் மிஸ்.கயல் தண்ணி எதுவும் குடிக்குறிங்களா?” என்று தன்மையாய் அவர் கேட்க மறுப்பாக தலை அசைத்தாள்.
“ஓகே.. நீங்க எதுக்காக என்ன பாக்க வந்து இருக்கிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று புன்னகை முகமாக இயல்பாய் பேசுவது போல் கேட்டார். முதலில் தயங்கிய கயல் வருண் நினைப்பில் பேச ஆரம்பித்தாள்.
“டாக்டர் அது வந்து எனக்கு இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம், எனக்கு கல்யாணத்துல சம்மதம் தான். மனசால அவரு கூட நெருங்கிட்டேன் ஆனா என்னால உடலால நெருங்க முடியுமானு தயக்கமா இருக்கு”
“ஏன்? பிசிகள் ரிலேசன்ஷிப்ல பயமா?”
“இல்ல டாக்டர் அது எனக்கு பிசிகலா அவரை நெருங்க முடியுமான்னு தெரியலை”
“இதுவரை நெருங்க ட்ரை பண்ணி இருக்கிங்களா?” என்று மருத்துவர் கேட்க தயங்கினாள் கயல்.
“மனசு விட்டு பேச தான் நீங்க வந்து இருக்கீங்க சோ தயக்கம் இல்லாம எல்லாமே சொல்லலாம்” என்று அவர் கூறவும் சம்மாதமாய் தலை அசைத்தாள் கயல்.
“இல்ல.. எனக்கு அதை பத்தி நினைச்சாலே என் சின்ன வயசுல நடந்த சில விசயம் நியாபகம் வந்து அவரை நெருங்க விடாம பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு”
“அப்படி என்ன நடந்துச்சு?”
“அது சின்ன வயசா இருக்கும் போது ஒருத்தன்.. தப்பா..” என்று சொல்ல முடியாமல் கயல் தடுமாற உடனே அவளுக்கு தண்ணீரை குடுத்தார் மருத்துவர்.
“ரிலாக்ஸ கயல் நீங்க டைம் எடுத்து சொல்லுங்க” என்று நிதானமாய் கூறிட கண்களை இறுக மூடி பழைய நினைப்பை நினைத்து பார்த்தாள்.
“எனக்கு அப்போ நாலு வயசு இருக்கும் டாக்டர்.. அப்போ எங்க கீழ் வீட்டுல பிளஸ் டூ படிக்கிற ஒருத்தன் இருந்தான். அந்த அண்.. இல்ல அவன் கூட நானும் என் வயசுல இருக்குற புள்ளைங்களும் விளையாடுவோம். ஒரு நாள் சக்திமான் ஸ்டிக்கர் வச்சி இருக்கேன் சொல்லி என்ன அவனோட ரூம்க்கு கூட்டிட்டு போனான்..” என்று கூறிய கயலுக்கு இப்பொழுதும் அதனை நினைத்தாள் உடல் நடுங்கியது.
“முழுசா சொல்லிடுங்க கயல் அதை கேக்க தான் நான் இருக்கேன்” என்று அவளுக்கு ஆதரவாய் மருத்துவர் கூறிட சம்மதமாய் தலை அசைத்தாள்.
“அங்க.. அங்க போனதும் ரூம் கதவை லாக் பண்ணான்.. அங்க.. அங்க.. அவனோட பிரைவேட் பார்டை என்ன.. என்ன.. டச்..” என்று கூற வந்தவளுக்கு குரல் கமரியது. அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை. கீழே குனிந்து கொண்டவள் அசிங்கத்தில் மூழ்கி இருப்பது போல் உணர்ந்தாள்.
“சத்தியமா எனக்கு அப்போ அதை பத்தி எதுவுமே தெரியாது.. வளர்ந்ததுக்கு அப்பறம் தான் அவன் என்ன என்ன பண்ணான் எதுக்கு பண்ணான்னு புரிஞ்சுது.. என்ன பண்ணான்னு என்னால முழுசா கூட சொல்ல முடியலை” என்று கூறியவள் வெடித்து அழ ஆரம்பித்தாள். மருத்துவர் அமைதியாய் அவளுக்கு டிஸ்யூ பேப்பர் குடுத்தார்.
“என்னால இன்னும் அதை மறக்க முடியலை. அந்த விசயம் நடந்ததுக்கு அப்பறம் எனக்கு அதை பத்தி பெருசா தெரியாததுனால நான் அதை மறந்துட்டேன்.. ஆனால் எனக்கு அப்போ இருந்து அவனை புடிக்காது. விவரம் தெரிஞ்சதுக்கு அப்பறம் அவன் பண்ண காரியம் புரிய எனக்கே அசிங்கமா இருக்கு.” என்று கூறி அழுதாள் கயல்.
“சோ அப்போ இந்த விசயம்னால தான் உங்களால உங்க பியான்சேவை நெருங்க முடியுமான்னு தெரியலை அப்படி தானே?” என்று சரியாக அவள் மனதில் இருப்பதை கூறினார் மருத்துவர். கயலும் ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.
“நீங்க எப்படி ஃபீல் பன்றிங்கன்னு என்னால உணர முடியுது. இதுக்கான பதிலை நீங்களே சொல்லிட்டிங்க.. உங்களுக்கு இதை பத்தி எதுவுமே அப்போ தெரியாது. தப்பு பண்ணினது அவன் நீங்க ஏன் அதை நினைச்சி ஃபீல் பண்ணனும்?”
“இந்த பதிலை தான் அவரும் சொன்னாரு” என்று வலியுடன் புன்னகைத்தவளுக்கு இவரும் தன் மனநிலையை புரிந்துக் கொள்ளவே இல்லையே என்று நினைத்தாள்.
“நீங்க என்ன நினைக்குறிங்கன்னு புரியுது.. உங்களை அவன் யூஸ் பண்ணிட்டான் நினைக்கிறீங்க அம் ஐ ரைட்?” என்று கேட்க அவரை அதிர்ச்சியாக பார்த்தாள் கயல்.
“நீங்க சொன்னதை வச்சி பார்த்தா முழுசா எதுவும் நடக்கலன்னு புரியுது. என்னோட பதில் என்னன்னா முழுசா எதுவும் நடந்து இருந்தாலும் அதுக்கு நீங்க பொறுப்பு இல்ல.. முதல்ல உங்களை நீங்களே அருவெறுப்பா நினைக்குறதை நிறுத்துங்க. பண்ணது அவன், சாக்கடையில விழுந்தா நீங்க உடனே சாக்கடை ஆக மாட்டீங்க.. அதுலையே நீங்க மூழ்கி இருக்கனும்ன்னு அவசியம் இல்ல. உங்களை நீங்க சுத்தப்படுத்திட்டு அடுத்த வேலைய தானே பாப்பிங்க..” என்று மருத்துவர் கூற அவரையே இமைக்காமல் பார்த்தாள் கயல்.