• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 09

அலுப்புத் தீர குளித்து விட்டு வந்த கதிர் அலைபேசியை எடுக்க, அனுபமாவின் தவற விடப்பட்ட அழைப்புகள் அவனைப் பார்த்து பல் இளித்தன.

தான் வரும் நேரத்திற்கு முன்னதாக அழைக்க மாட்டாளே. இன்று என்னவானது என நினைத்தவனாய் அழைப்பு விடுத்தான்.

மூன்று முறை அழைத்தும் ரிங் சென்று கட்டானதே தவிர, அவள் அழைப்பை ஏற்கவில்லை. இனம் புரியாத படபடப்பு அவனை ஆட்கொண்டது.

வேகமாக தாயிற்கு அழைக்க, "அனு எங்கம்மா?" எனக் கேட்டான், அவன்.

"அவங்க அம்மா வீட்டுக்கு போனா. அப்பாவுக்கு சுகமில்லைனு என் கிட்ட சொன்னா. உனக்கு கால் எடுத்து பார்த்தாளாம். ஆன்ஸ்வர் பண்ணலயாம். மேசேஜ் போடப் பாக்கும் போது ஆஃப் ஆகிடுச்சு போல. உனக்கு கால் எடுத்து சொல்ல சொல்லிட்டு தான் போனா. மாத்திரை போட்டு சாஞ்சதுல நான் மறந்துட்டேன்" என்று அவர் சொன்னதும் அவன் சற்றே ஆசுவாசமானான்.

அங்கே போனாலும் தன்னை நினைவுறுத்தி பேசி விட மாட்டாளா என்று அவனுக்கு ஒரு மனம் சண்டித்தனம் செய்தது. அப்பாவுக்கு சுகமில்லாத போது அவர் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளட்டும். இன்று ஒரு நாள் தானே? என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

என்றாலும் தினமும் அவளோடு பேசி விட்டு இன்றைய தினம் பேசாமல் இருப்பது அவனுக்கு வெறுமையான உணர்வைக் கொடுத்தது. தன் சிந்தனைகளைத் திசை திருப்பங்கள் முயன்றான்‌. தான் சேமித்து வைத்திருந்த அவளின் புகைப்படங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

அழகான புன்னகையோடு அவன் தோளில் கைவிட்டு சாய்ந்திருந்தாள், அனு. அவள் முகமெங்கும் அத்தனை புன்னகை. அவனிலும் தான். அந்த நாட்கள் அத்தனையும் எவ்வளவு இனிமையானவை என நினைத்துக் கொண்டான்.

அடிக்கடி சின்னஞ்சிறு சண்டைகளும் பிடித்துக் கொள்வார்கள். அவன் கலாய்ப்பான். அவள் கோபப்படுவாள். அவள் அவனைக் கடுப்பாக்கி வேடிக்கை பார்ப்பாள்.

ஆனால் கொஞ்ச நேரம் தான். அடித்துப் பிடித்து கெஞ்சிக் கொஞ்சி அடுத்த சில நிமிடங்களில் சமாதானமாகி விடுவார்கள். சண்டைகள் வராத உறவு அரிதிலும் அரிது. அதைத் தீர்ப்பதிலும், பொறுமையாகக் கையாள்வதிலும் தான் உள்ளது, அவ்வுறவின் வலிமை.

ஒவ்வொரு சண்டைக்குப் பின்னாலும் அன்பானது வழமையிலும் அதிகமாக ஊற்றெடுக்கும். அதீத அன்னியோன்யத்தை இருவரிடையேயும் தோற்றுவிக்கும்.

தான் அணிந்திருந்த டிஷர்ட்டைப் பார்த்தவனுக்கு அவள் அதனைப் பரிசளித்த நாளின் நினைவு.

வேலை விட்டு வீடு திரும்பிய கதிர் கூடத்தில் இருந்த நாற்காலியில் தன்னைச் சாய்த்துக் கொண்டான். அப்பட்டமான சோர்வு அவனுக்கு.

அங்கு வந்த அனு அவனைக் கண்டு, "இப்போ தான் வந்தீங்களா?" என்று கேட்க, "ம்ம்" உம் கொட்டினானே அன்றி, அவளது முகத்தையாவது பார்க்கவில்லை அவன்.

"சாப்பிட்டீங்களா?" அவனருகில் வந்து வினவ, "ம்ம்" தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

"வந்து கழுவுங்க" என அவள் அழைக்க, "டயர்டா இருக்கு. அப்பறம் வர்றேன்" முகத்திலடித்தாற் போன்று அவன் சொல்ல, எழுந்து நின்றவளோ "காலையில் நீங்க வேலைக்குப் போகும் வரை இருக்காம நான் வெளிய போனது தப்புத் தான். மன்னிச்சிடுங்க. அதுக்காக என்ன பண்ணனும் நான்?" வெடுக்கென்று கேட்டாள், காரிகை.

"ஒன்னும் பண்ண வேண்டாம். விடு"

"விடனும்னா ஒழுங்கா பேசுங்க. இல்லன்னா நான் இப்படியே தான் பேசுவேன்" என்றவளை முறைத்துப் பார்த்தான்.

"என்ன?" புருவம் உயர்த்தினாள், அவள்.

"ஒன்னும் இல்லையே"

"ஆமாம்மா ஒன்னும் இருக்காது. ஒரு நாளைக்கு இப்படி நடந்தாலும் இந்தளவு கோபம் வருமா உங்களுக்கு? இனிமே நான் எங்கேயும் போகல. போதுமா?" என்று அவள் சொல்ல, ஒன்றும் பேசாமல் எழுந்து அறைக்குச் செல்ல, அவளும் பின்னால் நடந்தாள்.

"பாத்ரூம் போறேன். அங்கேயும் வரப் போறியா?" எனக் கேட்க, "நான் வரல" என்றவளை ஒரு பார்வை பார்த்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் வெளியே வரும் போது அவள் அங்கேயே நின்றிருக்க, "தூங்கலயா? எனக்கு செம தூக்கம் வருது" வாயில் கை வைத்து கொட்டாவி விட்டவனைப் பார்த்து,

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க? நான் தான் சாரி கேட்டுட்டேன்ல? இன்னும் எதுக்கு முரண்டு பிடிக்கிறீங்க?" ஆற்றாமையுடன் கேட்டாள்.

"நான் சாதாரணமா தான் இருக்கேன். கோபம் இல்ல"

"கோபம் இல்லன்னா வந்த உடனே அம்முன்னு கூப்பிடுவீங்க. அன்பா பேசுவீங்க. டயர்டா இருக்குன்னு சொல்லி என் தோள்ல தான் சாயுவீங்க. இன்னிக்கு ஒன்னும் பண்ணல தானே?" முகத்தை உப்பிக் கொண்டு சொல்ல,

"நெஜமா கோவம் தான். கோவம் என்றதையும் தாண்டி கவலையா இருந்தது அம்மு. வேலைக்கு போறப்ப போயிட்டு வர்றேன் அம்முனு சொல்லி உன் தலையை தடவிட்டு தானே போவேன். நீயும் நான் போகும் வரை கதவு கிட்ட நின்னுட்டிருப்ப. இன்னிக்கு ஒன்னுமே நடக்கல. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. இன்னிக்கு நாள் நாளாவே இல்லம்மு. இனி இப்படி பண்ணாத டா" மெல்லிய குரலில் சொன்னவனை நாடி வந்து,

"சாரிங்க" என அணைத்துக் கொண்டாள், அனுபமா.

"விடு டி. இனி இந்த மாதிரி பண்ணாத சரியா? சின்ன விஷயம் ஒன்னு வழக்கத்துக்கு மாறா நடந்தாலும் அது என்ன ரொம்ப பாதிக்குது. அதனால தான் இப்படி நடந்துக்கிட்டேன். உன்ன கஷ்டப்படுத்துறது என் எண்ணம் இல்லம்மு" என்றான்.

"எனக்கு புரியுது. பக்கத்து வீட்டு கவிதா ஒரு கடைக்கு போவா. எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது. நேத்து கூப்பிடவும் இன்னிக்கு மார்னிங் போகலாம்னு சொன்னா. அவ பசங்களை ஸ்கூல் அனுப்பிட்டு போனா நல்லதுன்னு தான் அந்த டைம்ல போக வேண்டியதாகிடுச்சு.

என்னோட தேவைக்காக போறது தானே? அதனால அவங்க கூப்பிடுற நேரம் போகனும்ல. அது உங்களை இந்தளவு ஹர்ட் பண்ணும்னு நெனக்கல. இனி இப்படி பண்ணவே மாட்டேன் தங்கம்" என்றதும், "ம்ம்" என தலையசைத்தான்.

"டிஷர்ட் போட்டு வர்றேன்" என நகர்ந்தவனை விலகாமல் பிடித்துக் கொண்டே நின்றாள், பாவை.

"என்னடி இது? கொஞ்சம் இரு" என விலக, "போகாதீங்க. இப்படியே இருங்க கொஞ்ச நேரம்" என்றாள்.

"எதுக்கு?"

"நானே உங்களுக்கு அழகா ஒன்னு சிலெக்ட் பண்ணி போட்டு விடறேன். கண்ண மூடிட்டு நில்லுங்க" என்றவளின் சொல்லைத் தட்டாமல் நல்ல பிள்ளையாக கண்களை இறுக மூடிக் கொண்டான்.

டிஷர்ட் ஒன்றை அணிவித்தவள், அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்று கண்ணாடியின் முன்னால் நிறுத்தி விட்டு, "இப்போ பாருங்க" என்றாள்.

மெல்லத் திறந்தன கண்கள். அகன்று விரிந்தன இமைகள். தன் விம்பம் கண்டு கருமணிகளில் பளிச்சென்று மின்னல் மின்னிற்று.

கறுப்பும் வெள்ளையும் கலந்த புதிய டிஷர்ட்டைக் கண்டு, "இது எப்படி?" என்று வினவினான்.

"கவிதாக்கா கூட இதை வாங்க தான் கடைக்கு போனேன்" என்று கண்களைச் சிமிட்ட, "ஏன் திடீர்னு? எதுவும் விசேஷமா?" புருவம் இடுங்க வினாத் தொடுத்தான்.

"ஏன் ஏன்? எதுவும் விசேஷம் இருந்தா தான் வாங்கிட்டு வரனுமா? என் புருஷனுக்கு நான் என்ன வேணா, எப்போ வேணா வாங்குவேன். வாங்கித் தந்தா ஏன் எதுக்கு எப்படின்னு கேள்வி கேக்க கூடாது. பிடிச்சிருக்கானு சொல்லனும்"

"பிடிக்காம இருக்குமா அம்மு? எனக்காக நீ எது வாங்கிட்டு வந்தாலும் பிடிக்கும். நீ எனக்கு ஸ்பெஷல் டா. நீ எனக்காக பண்ணுற ஒவ்வொரு வேலையும் ஸ்பெஷல். எனக்காக ஒதுக்குற நேரம் ஸ்பெஷல். எனக்காக வாங்கி தர்ற ஒவ்வொன்னும் ஸ்பெஷல் தான்" அவளின் நெற்றி முட்டினான்.

"லவ் யூங்க" அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

"லவ் யூ செல்லம்" அவனும் பதிலுக்கு அவள் கன்னங்களில் இதழ் ஒற்றினான்.

"நேத்து தான் ஃபர்ஸ்ட்டா கேக் ஆர்டர் செஞ்சேன். அதுல காசு கெடச்சது. அந்த காசுல முதல் முதலா உங்களுக்கு ஏதாவது வாங்கி தரனும்னு ஆசைப்பட்டேன்" என்றவளை அன்போடு பார்த்து,

"பார்றா. என் பொண்டாட்டி பயங்கரமான ஆள் ஆகிட்டா போல" என்று அவன் சிரிக்க, "கிண்டல் பண்ணாம போங்க" சிணுங்கினாள், அவள்.

"கிண்டல் இல்லம்மு. நீ உனக்கு புடிச்சத பண்ணிட்டு சந்தோஷமா இருக்கனும். அதான் எனக்கும் சந்தோஷம்" என்றவன், "உன் அப்பாம்மாவுக்கும் ஏதாவது கொடு. அவங்களும் சந்தோஷப்படுவாங்கள்ல?" என்றுரைத்தான்.

"கண்டிப்பாங்க. நானும் நெனச்சுட்டு தான் இருக்கேன். அடுத்த ஆர்டர்ல கெடக்கிற காசுல அவங்களுக்கு வாங்கி குடுத்துடலாம். ரொம்ப சந்தோஷப்படுவாங்க" பெற்றோரை நினைவு கூர்ந்தாள்.

"என் பட்டு" அவள் மூக்கைப் பிடித்து ஆட்ட, "சும்மா இருங்க" முகம் சுருக்கியவளின் குழந்தைத்தனமான செய்கையில் அவன் அதரங்கள் அழகாய் விரிந்தன.

"தங்கம்" என்றழைத்தவளை நோக்கி, "சொல்லு டா" என்றான்.

"என்னோட இரக்கமா?" என்று அவள் வினவ, "உசுரு மாதிரி" என்றவனின் பதிலில் உச்சி குளிர்ந்து போனவளாய் தன்னவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

"இப்படி வா" அவள் முகத்தை சற்றே நகர்த்தி வைக்க, கதிரின் இதயத் துடிப்பு அவள் செவியை நனைத்தது.

"ஹார்ட் பீட் கேக்குது" குதூகலத்தோடு அவள் மார்போடு ஒன்றியபடி நிற்க, "எப்படி துடிக்குது?" என்று கேட்டான்.

"லப் டப்னு தானே ஹார்ட் துடிக்கும்"

"இது லவ் லவ்னு துடிக்கும். நல்லா உத்து கேட்டா அம்மு அம்முனு துடிக்கும் பாரு" என்று சொன்னவனைப் பார்த்தவள், "அடடா! என் புருஷன் ரைட்டராகி இருக்க வேண்டிய ஆளு. டிசைன் டிசைனா பேசி கவுக்குறீங்களே" என்றாள்.

"போடி எனக்கு வெக்கமா வருது" முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொள்ள, "ஹா ஹா" கலகலத்துச் சிரிக்கலானாள்.

"பாத்து. பல்லு கொட்டிட போகுது" என்றவன் அவளது சிரிப்பை ஆசையாக‌ ரசித்தான்.

"உங்களுக்கு வெக்கம் எல்லாம் இருக்கா? ரொம்பத் தான் அலப்பறை பண்ணுறீங்க. உங்களோட இருந்தா சிரிப்புக்கு பஞ்சமில்ல" ஓயாமல் சிரித்தவளுக்கு இதழ் மூடவே ஈரைந்து நிமிடங்கள் சென்றன.

"அப்படித் தான் இருக்கனும். எப்பவும் நீ சந்தோஷமா இருக்கனும். நான் உன்னை சிரிக்க வெச்சுட்டே இருக்கனும். நீ சிரிக்கும் போது தான் எனக்கும் சிரிப்பு வருது" அவனையும் அப்புன்னகை வஞ்சகமின்றி வாரியணைத்தது.

அன்றைய நினைவுகளில் மூழ்கிய கதிருக்கு தற்போதும் தன்னவள் முகம் பார்க்கும் ஆவலில், மனம் உந்தித் தள்ளியது.

"அம்மு! மிஸ் யூ டி. உன்ன நான் அவ்ளோ மிஸ் பண்ணுறேன். என்ன தவிக்க விடாம வந்துரு. உனக்காக காத்தி
ருக்கேன் கண்ணம்மா" அவள் வாங்கித் தந்த உடையை அன்போடு வருடிக் கொடுத்தான்.


தூரம் தொடரும்.......!!

ஷம்லா பஸ்லி
2025-06-10
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top