• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
218
பார்த்திபன் கனவு - 3.3. மாரப்பன் புன்னகை


விக்கிரமன் செண்பகத்தீவில் இருந்த காலத்தில் தாய் நாட்டையும், தாய்நாட்டில் உள்ளவர்களைப் பற்றியும் அடிக்கடி சிந்தனை செய்வான். அருள்மொழி, சிவனடியார், பொன்னன், வள்ளி, காஞ்சி நகர்ப் பெண் ஆகியவர்கள் அவனுடைய உள்ளத்தில் இடைவிடாமல் தோன்றுவார்கள். அவர்களுக்கிடையில் மாரப்ப பூபதியும் சில சமயம் அவனுடைய நினைவுக்கு வருவான். அப்போது விக்கிரமனுடைய உள்ளமும் உடலும் அருவருப்பினாலும் அவமானத்தினாலும் சுருங்கிப்போகும். சித்தப்பா தன்னை வஞ்சித்து நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாரென்று சிராப்பள்ளி மலையில் அவன் புலிக்கொடியை உயர்த்த முயன்ற அன்றைத் தினமே வெளியாகிவிட்டது. அந்த முயற்சிக்கு மாரப்ப பூபதி பூரண உதவி செய்வதாய் வாக்களித்திருந்ததற்கு மாறாக அவர் அச்சமயம் அருகில் வராமலே இருந்துவிட்டது மாத்திரமில்லை - அவரே முன்னதாகப் பல்லவ சேனாதிபதிக்குத் தகவல் தெரிவித்தவர் என்பதும் அவனைச் சிறைப்படுத்திக் காஞ்சிக்குக் கொண்டு போன வீரர்களின் பேச்சிலிருந்து தெரிந்துவிட்டது.
ஆகையால், மாரப்ப பூபதியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் விக்கிரமனுடைய உள்ளம் கசந்ததோடு, நாவும் கசந்தது. சோழ வம்சத்தில் இப்படிப்பட்ட மனிதர் ஒருவரும் பிறந்ததை எண்ணி எண்ணி அவன் மனம் குன்றினான்.

இவ்வாறு அவனுடைய அருவருப்புக்கும் அவமான உணர்ச்சிக்கும் காரணமாயிருந்த மாரப்ப பூபதி, இப்போது சற்றும் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று எதிரில் நின்றதும், விக்கிரமனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா?

இரத்தின வியாபாரியின் முகத்தில் தோன்றிய திகைப்பை மாரப்ப பூபதி கவனித்தவனாய், "ஏனையா இப்படி மிரளுகிறீர்? ஏதோ திருடனைப் பற்றிப் பேச்சு நடந்ததே? ஒருவேளை நான் தான் திருடன் என்று நினைத்துக் கொண்டீரோ?" என்று சொல்லி மீண்டும் ஏளனச் சிரிப்பு சிரித்தான்.

இதற்குள் விக்கிரமன், ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான்.

"இந்த நாட்டுத் திருடர்கள் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஐயா! நான் இந்த நாட்டான் அல்ல. ஆனால் நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப்புரட்டே கிடையாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் நீர் திருடராயிருக்க முடியாது" என்றான்.

"அசலூர்க்காரனாயிருந்தாலும் அகம்பாவத்தில் மட்டும் குறைச்சல் இல்லை. நீர் எந்தத் தேசம், ஐயா? உமது பெயர் என்ன? எதற்காக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறீர்?" என்று பூபதி கேட்டான்.

"உமக்குத் தெரிந்தேயாக வேண்டுமானால் சொல்கிறேன். என் பெயர் தேவசேனன்; இரத்தின வியாபாரம் செய்ய வந்திருக்கிறேன்."

"ஓகோ! இரத்தின வியாபாரம் செய்வதற்கா வந்திருக்கிறீர்? அப்படியா சமாசாரம்? இரத்தின வியாபாரி ஒவ்வொரு கல் தச்சனாகக் கூப்பிட்டு எதற்காக இரகசியம் பேச வேண்டும்? பல்லவ நாட்டிலிருந்து சிற்பிகளைக் கலைத்து அழைத்துப் போகிறவர்களுக்கு நரசிம்ம சக்கரவர்த்தி என்ன தண்டனை விதிப்பார் தெரியுமா?"

"எனக்குத் தெரியாது! ஐயா! நான்தான் அயல் நாட்டான் என்றேனே? இவ்வளவு விசாரணை புரியும் நீர் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?"

மாரப்ப பூபதி கடகடவென்று சிரித்தான். "நான் யார் என்று தெரியவில்லையா? நல்லது; வெண்ணாற்றங்கரைப் போர்க்களத்தில் உயிரைவிட்ட பார்த்திப மகாராஜாவுக்கு உடன்பிறந்த சகோதரன் நான்! தற்சமயம் சோழ நாட்டின் பிரதம சேனாதிபதி!"

இப்படிச் சொல்லியபோது இரத்தின வியாபாரியின் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று மாரப்பன் உற்றுப் பார்த்தான். ஒன்றும் தெரியாமல் போகவே "என்னுடைய கீர்த்தி உம்முடைய காதுக்கு எட்டியிராவிட்டாலும் வீராதி வீரரும் சூராதி சூரருமான பார்த்திப மகாராஜாவின் புகழ் கண்டிப்பாக எட்டியிருக்க வேண்டுமே? அந்தப் பெயரைக் கூட நீர் கேட்டதில்லையா? அப்படி எந்தக் கண்காணாத தேசத்து மனுஷர் ஐயா நீர்?" என்று கேட்டான்.

இரத்தின வியாபாரி சற்று யோசிப்பவன்போல் காணப்பட்டான். பிறகு அவன் மாரப்பனை ஏறிட்டுப் பார்த்து, "ஆமாம். பார்த்திப மகாராஜாவின் புகழை நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய புதல்வர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் செண்பகத் தீவுக்கு அரசர். நான் அவருடைய பிரஜை. ஆகையால் பார்த்திப மகாராஜாவைப் பற்றிக் கெடுதலாகவோ பரிகாசமாகவோ எதுவும் என் காது கேட்கச் சொல்ல வேண்டாம்!" என்றான்.

மாரப்பனுடைய முகத்தில் இப்போது சிறிது திகைப்புக் காணப்பட்டது. ஆயினும் அவன் உடனே சமாளித்துக் கொண்டு கூறினான்! "ஓஹோ! அவ்வளவு ராஜபக்தியுள்ள பிரஜையா நீர்? உம்முடைய முகத்தில் விழித்தாலே புண்ணியம், ஐயா! அதனால்தான் உம்மை விட்டுப் போகவே மனம் வரமாட்டேன் என்கிறது. ஆமாம், உமது பெயர் என்னவென்று சொன்னீர்?"

"தேவசேனன்."

"தேவசேனன் - ஆகா! என்ன திவ்யமான பெயர்! - இவ்வுலகில் பெயர், புகழ் எல்லாம் பொய் என்று சொல்வது எவ்வளவு பிசகு? உம்முடைய பெயருக்காகவே உம்மிடம் இரத்தினம் வாங்கலாம். இருக்கட்டும்; கோமகள் குந்தவி தேவி இரத்தினம் வாங்குவதற்குத்தானே உம்மை அரண்மனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்?"

"கோமகள் குந்தவி தேவியா? யாரைச் சொல்கிறீர்?" என்று இரத்தின வியாபாரி உண்மையான வியப்புடனே கேட்டான்.

"இப்போது பல்லக்கில் போனாளே. அந்தத் தேவியைத்தான்!"

"அவள் குந்தவி தேவியின் தோழி மாதவி அல்லவா?"

"ஓஹோ! உன்னிடம் அப்படி ஒரு பொய் சொல்லி வைத்தாளாக்கும். அப்பாவுக்கு ஏற்ற பெண்தான். நீ இந்தத் தேசத்து மனுஷன் அல்லவென்று நிச்சயமாய்த் தெரிகிறது. அல்லது இந்தத் தேசத்தைவிட்டு வெளியேற்றப் பட்டவனாயிருக்க வேண்டும்...."

இந்த இடத்தில் மாரப்பபூபதி தனக்குதானே பேசிக் கொண்டான். பிறகு திடீரென்று தேவசேனனை உற்றுப் பார்த்து, "ஆமாம்; உங்கள் தேசத்து ராஜா விக்கிரமன் என்று சொன்னீரே? அவனுடைய தாயார் அருள்மொழி ராணிக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அவனுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

இந்தக் கேள்வியினால் மாரப்பபூபதி என்ன எதிர்பார்த்தானோ, அது சித்தியாகிவிட்டது. இத்தனை நேரமும் மாறாமல் பதுமை போலிருந்த இரத்தின வியாபாரியின் முகம் மாறிவிட்டது. அளவிலாத பீதியுடனும் ஆத்திரத்துடனும், "என்ன? அருள்மொழி ராணிக்கு என்ன?" என்று அவன் அலறிக் கொண்டு கேட்டான்.

மாரப்பன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

அதே சமயத்தில், அவர்களுக்குப் பின்னால் வெகு சமீபத்தில் ஒரு பெரும் கோலாகல கோஷம் எழுந்தது. "வாதாபியை அழித்து வாகை சூடிய நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க!" "ஐய விஜயீ பவ!" என்று ஏககாலத்தில் அநேகம் குரல்களிலிருந்து வாழ்த்தொலிகள் கிளம்பி ஆரவாரித்தன. "சக்கரவர்த்தி வருகிறார், சக்கரவர்த்தி வருகிறார்" என்று பலர் பேசுவது காதில் விழுந்தது.
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top