Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 218
- Thread Author
- #1
பார்த்திபன் கனவு - 3.14. காளியின் தாகம்
பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு மின்னல் மின்னிற்று. மின்னலில் அந்த இருவருடைய முகத்தையும் பார்த்ததும், பொன்னனுடைய உடம்பெல்லாம் ஒரு தடவை பதறிற்று. வந்தவர்களில் ஒருவன் மாரப்ப பூபதி; இன்னொருவன்...ஆம், கபால ருத்ர பைரவன்தான்!
அவர்களை அவ்விதம் திடீரென்று பார்த்த பேரதிர்ச்சியை ஒருவாறு பொன்னன் சமாளித்துக் கொண்டு விக்கிரமன் இருந்த இடத்தின் அருகில் சென்று அவரைத் தொட்டு மெல்லிய குரலில், "மகாராஜா!" என்றான்.
விக்கிரமன், "இதென்ன, பொன்னா? ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்பதற்குள், பொன்னன் விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, "இரைய வேண்டாம்! பெரிய அபாயம் வந்திருக்கிறது; எதற்கும் சித்தமாயிருங்கள்!" என்று காதோடு சொன்னான்.
விக்கிரமன் இடுப்பைத் தடவிப் பார்த்து, "ஐயோ! வாள் ஆற்றோடு போய்விட்டதே!" என்று முணுமுணுத்தான்.
வந்தவர்கள் இருவரும் அந்த மண்டபத்தின் வாசல் திண்ணையில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். அவர்களுடைய பேச்சு உள்ளே இருந்தவர்களின் காதில் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் அரைகுறையாகவும் விழுந்தது.
அவர்களில் ஒருவனுடைய குரலைச் சட்டென்று விக்கிரமனும் தெரிந்து கொண்டான். திடுக்கிட்டு அவன் எழுந்திருக்கப் போனபோது பொன்னன் அவனைப் பிடித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது.
"மகாப் பிரபோ! காளிமாதா எனக்கு இன்னும் என்ன ஆக்ஞாபித்திருக்கிறாள்? கிருபை கூர்ந்து சொல்ல வேண்டும்" என்றது மாரப்பனின் குரல்.
இதற்குப் பதில் கூறிய குரலானது கேட்கும்போதே மயிர்க் கூச்சல் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ஒரு வேளை பேய், பிசாசுகள் பேசுமானால் இப்படித்தான் அவற்றின் குரல் இருக்கும் என்று எண்ணும்படியிருந்தது.
"மாதா உனக்கு இன்னும் பெரிய பெரிய பதவிகளையெல்லாம் கொடுக்கக் காத்திருக்கிறாள். உன்னிடம் இன்னும் பெரிய பெரிய காரியங்களையும் எதிர்பார்க்கிறாள். அன்னைக்கு ரொம்பவும் தாகமாயிருக்கிறதாம். ராஜ வம்சத்தின் இரத்தம் வேண்டுமென்கிறாள்!"
"ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த அரசிளங் குமரனைக் காளிக்கு அர்ப்பணம் செய்ய முயன்றேன். எப்படியோ காரியம் கெட்டுப் போய்விட்டதே....."
"உன்னாலேதான் கெட்டது; அந்த ராஜ குமாரனுக்காக நானே வந்திருந்தேன். நீ குறுக்கிட்டுக் கெடுத்து விட்டாய்."
"மன்னிக்க வேண்டும் பிரபோ...ஆனால் ராஜ குமாரன் வருகிறான் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"
"மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறாயே? காளிமாதா சொல்லித்தான் தெரிந்தது. அருள்மொழி ராணியின் வாய்மொழியாக மாதா எனக்குத் தெரிவித்தாள். 'அதோ கப்பலில் வந்து கொண்டிருக்கிறான்! கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறான்?' என்று ராணி சொன்னாள். நான் வந்தேன்! அதற்குள்ளாக நீ நடுவில் குறுக்கிட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டாய்."
"பிரபோ! க்ஷமிக்க வேண்டும்...."
"போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ஆனால், 'தாகம்' 'தாகம்' என்று கதறிக் கொண்டிருக்கிறாள்! ராஜ குல ரத்தம் வேண்டும் என்கிறாள்! இந்த அமாவாசை போய்விட்டது. துலா மாதப் பிறப்பிலாவது தாயின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.... அவனை நீ எப்படியாவது தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்...."
"கொண்டு வந்தால்...."
"கொண்டு வந்தால் உன் மனோரதம் நிறைவேறும். பூபதி! காளி மாதாவைச் சரணமாக அடைந்தவுடனே உனக்குச் சேனாதிபதிப் பதவி கிடைக்கவில்லையா? இன்னும்...."
"இன்னும் என்ன சுவாமி?"
"இன்னும் மிகப் பெரிய பதவிகள் உனக்கு நிச்சயம் கிடைக்கும்."
"பெரிய பதவிகள் என்றால்..."
"சோழநாட்டின் சிம்மாசனம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மாதா கையில் கிரீடத்தை வைத்துக் கொண்டு உன் தலையில் சூட்டக் காத்திருக்கிறாள்."
"அவ்வளவுதானா, பிரபோ!"
"அதைவிடப் பெரிய பதவியும் அன்னை வைத்துக் கொண்டிருக்கிறாள்."
"அது என்னவோ?"
"என்னவா? பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனம் தான்!"
"ஆ!" என்றான் மாரப்ப பூபதி. சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.
"ஆனால், அப்படிப்பட்ட மகத்தான பதவி லேசில் கிடைத்துவிடாது. அதற்குத் தகுந்த காணிக்கை காளி மாதாவுக்கு நீ சமர்ப்பிக்க வேண்டும்."
"அடியேனிடம் மாதா என்ன எதிர்பார்க்கிறாள்?"
"முதலில் பார்த்திபன் மகனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்."
"செய்கிறேன்; அப்புறம்?"
"வரும் துலா மாதப் பிறப்பன்று...."
"சொல்லுங்கள், பிரபோ!"
"காளி மாதா சந்நிதிக்கு நீ வரவேண்டும்..."
"வந்து..."
"உன்னுடைய தலையை உன்னுடைய கையினாலேயே வெட்டி மாதாவுக்கு அளிக்க வேண்டும்!"
"ஐயோ!" என்று மாரப்பன் அலறினான்.
"அளித்தால் அடுத்த ஜென்மத்தில் காஞ்சி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகலாம். இல்லாவிட்டால்...."
"இல்லாவிட்டால் என்ன பிரபோ!"
"ஆத்ம பலிக்கு ஈடான இன்னொரு மகா பலி அளிக்க வேண்டும். அளித்தால் இந்த ஜென்மத்திலேயே சக்கரவர்த்தி பதவி கிட்டும்."
"அது என்ன பலி, சுவாமி!"
"அந்த விபூதி ருத்திராட்சதாரியைப் பலிக்குக் கொண்டு வர வேண்டும்...."
"பிரபோ! இராஜ வம்சத்து இரத்தத்தை விரும்பும் காளி மாதா கேவலம் ஒரு விபூதி ருத்திராட்சதாரியைப் பலி கொள்ள விரும்புவானேன்?" என்று மாரப்பன் கேட்டான்.