• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
218
பார்த்திபன் கனவு - 3.10. காட்டாற்று வெள்ளம்


சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். 'நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்' என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை ஆராய்ந்தவர்களுக்கு வியப்பு ஒன்றும் இராது. அருவருப்பாயிருந்தாலும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?"
மகேந்திர பல்லவர் காலத்திலும் நரசிம்மவர்மரின் காலத்திலும் தமிழ்நாட்டில் சைவமும் வைஷ்ணவமும் தழைத்து வளர்ந்தன. இவ்விரண்டு சமயங்களும் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அப்போது தேய்ந்து போய்க் கொண்டிருந்த ஜைன, பௌத்த சமயங்களின் நல்ல அம்சங்களெல்லாம் சைவ - வைஷ்ணவ மதங்களில் ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சிவபக்தியும், கண்ணன் காதலும் சேர்ந்து தமிழ் நாட்டைத் தெய்வத் திருநாடாகச் செய்து வந்தன. அப்பர், சம்பந்தர் முதலிய சைவ சமயக் குரவர்களும், வைஷ கணவ ஆழ்வார்களும் தெய்வீகமான பாடல்களைப் பாடி நாடெங்கும் பக்தி மதத்தைப் பரப்பி வந்தார்கள். சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் அற்புத சிற்பக் கனவுகளைப் போல் தோன்றி வளர்ந்து வந்தன.

ஒருபுறம் இப்படிப்பட்ட அன்பு - மதங்கள் பெரும்பாலான ஜனங்களிடையே பரவி வருகையில், மிகச் சிலரான மக்களிடையே நரபலியைத் தூண்டும் பயங்கரமான கபாலிகம், சாக்தம், பைரவம் என்னும் மதங்கள் எப்படியோ இரகசியமாக வேரூன்றி வந்தன. இந்த மதங்களை ஆரம்பித்தவர்கள் மிதமிஞ்சிய மூடபக்தியை வளர்த்தார்கள். மூடபக்தி காரணமாக அவர்கள் காளிக் கோயில்களிலும், துர்க்கைக் கோயில்களிலும் தங்களுடைய சிரங்களைத் தாங்களே அநாயாசமாக வெட்டி எறிந்து கொண்டார்கள்! இப்படித் தங்களைத் தாங்களே பலிக் கொடுத்துக் கொள்வதால் அடுத்த ஜன்மத்தில் மகத்தான பலன்களை அடையலாமென்று நம்பினார்கள். இம்மாதிரி நம்பிக்கைகளை வளர்ப்பதற்குப் பூசாரிகளும் இருந்தார்கள். ஆங்காங்கு அடர்ந்த காடுகளிலும், மனிதர்கள் எளிதில் புகமுடியாத மலைப் பிராந்தியங்களிலும் காளி கோயில்களையும், துர்க்கைக் கோயில்களையும் இவர்கள் நிறுவினார்கள்.

மகேந்திர பல்லவரின் காலத்தில் வடக்கே வாதாபியிலிருந்து புலிகேசி என்பவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது, அவனுடைய சைன்யங்களுடனே மேற்கூறிய பயங்கர மதங்களும் தமிழ்நாட்டில் புகுந்தன. பிறகு, புலிகேசி திரும்பிப் போன அடியோடு ஒரு முறையும், நரசிம்ம பல்லவர் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்ற காலத்தில் ஒரு முறையும், தமிழகத்தில் கொடும் பஞ்சங்கள் தோன்றி ஜனங்களை வருத்தின. இந்தக் காலங்களில் மேற்கூறிய நரபலி மதங்கள் அதிகமாக வளர்ந்தன.

இந்த மூட மதங்களை வேரோடு களைவதற்கு நரசிம்ம சக்கரவர்த்தி பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். குருட்டு மத நம்பிக்கையை ஒழிப்பதற்குத் தண்டோ பாயம் மட்டும் பயன்படாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தங்களுடைய கழுத்தைத் தாங்களே வெட்டிக் கொள்ளச் சித்தமாயிருப்பவர்களை எந்த விதத்தில் தண்டிக்க முடியும்? ஆகையால்தான் அவர் சென்ற இரண்டு வருஷமாகத் தமது மூத்த குமாரனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டுத் தாம் மாறுவேடம் பூண்டு, நாடெங்கும் சஞ்சரித்து, மேற்படி மதங்கள் எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றன, எங்கெங்கே அந்த மதங்களுக்கு வேர் இருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். இதனாலேதான் விக்கிரமனுக்கு நேர்வதற்கிருந்த பேராபத்திலிருந்து அவனைச் சக்கரவர்த்தி காப்பாற்றுவதும் சாத்தியமாயிற்று.

ஆனால், விக்கிரமனோ தனக்கு நேர இருந்த அபாயம் எப்படிப்பட்டதென்பதை அறிந்து கொள்ளவில்லை. தன்னைத் திருடர்கள் தாக்கியதாகவே அவன் எண்ணியிருந்தான். ஒற்றர் தலைவனிடம் விடைபெற்று அவனுடைய குதிரைமீது ஏறிச் சென்ற விக்கிரமனுடைய உள்ளத்தில் பல விதமான எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து கொந்தளித்துக் கொண்டிருந்தன. அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுடைய உள்ளத்தில் முதன்மையாக இருந்தது. ஒற்றர் தலைவனின் உயர்ந்த ஜாதிக் குதிரை எவ்வளவோ விரைவாகச் சென்றும், அவனுடைய உள்ளத்தின் வேகம் காரணமாக, "குதிரை இன்னும் வேகமாய்ப் போகக் கூடாதா?" என்று தோன்றியது.

பிறகு, அந்த ஒற்றர் தலைவனின் கம்பீரத் தோற்றமும் அவன் மனக் கண்முன் அடிக்கடி வந்தது. அவன் தனக்குச் செய்த உதவியை நினைத்தபோது அளவில்லாத நன்றி உணர்ச்சி கொண்டான். இடையிடையே ஒரு சந்தேகமும் உதித்தது. அவ்வளவு அறிவுக் கூர்மையுடைய ஒற்றர் தலைவன் தன்னுடைய இரகசியத்தை மட்டும் கண்டுபிடிக்காமலிருந்திருப்பானா? ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சியில் தன்னை அகப்படுத்துவதற்காக இப்படி குதிரையைக் கொடுத்து அனுப்பியிருக்கிறானோ?

பின்னும், ஒற்றர் தலைவன் கூறிய நரசிம்ம சக்கரவர்த்தியின் இளம் பிராயத்துக் காதற் கதை அவனுக்கு அடிக்கடி நினைவு வந்தது. காட்டின் மத்தியில் இருந்த சிற்பியின் வீட்டில், சிவகாமி நடனமாடுவதும், அதைப் பார்த்துப் பார்த்துச் சிற்பி சிலை அமைப்பதும், இதையெல்லாம் நரசிம்மவர்மர் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பதுமான மானசீகக் காட்சியில் அவன் அடிக்கடி தன்னை மறந்தான்.

இவ்வளவுக்கும் நடுவில், பல்லக்கில் இருந்தபடி தன்னை ஆர்வம் ததும்பிய பெரிய கண்களால் விழுங்கி விடுபவள் போல் பார்த்த பெண்ணின் பொன்னொளிர் முகமும் அவன் மனக்கண் முன் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வளவு அழகு ததும்பும் முகத்தையுடையவளின் நெஞ்சில் வஞ்சனை இருக்க முடியுமா?- ஒரு நாளுமிராது. ஆனால் அவள் யார்? சக்கரவர்த்தியின் மகளா? அல்லது தோழிப் பெண்ணா?

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டும் இடையிடையே ஊர் கண்ட இடங்களில் இது சரியான வழிதானா என்று கேட்டுக் கொண்டும் விக்கிரமன் போய்க் கொண்டிருந்தான். ஒற்றர் தலைவன் கூறியபடியே குதிரை தானாகவே சரியான உறையூர்ப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த வியப்புடன் மகிழ்ச்சியும் அளித்தது. இதனால் ஒற்றர் தலைவனிடம் அவனுடைய நம்பிக்கையும் மரியாதையும் அதிகமாயின. அவன் கண்டிப்பாகச் சொல்லியிருப்பதை நினைத்து, இரவிலே பிரயாணம் செய்யக்கூடாதென்றும், இருட்டுகிற சமயத்தில் ஏதேனும் ஒரு கிராமத்துச் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டே சென்றான். ஆனால் சூரியன் அஸ்தமிப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னதாகவே அவனுடைய பிரயாணத்துக்கு ஒரு பெரிய தடங்கல் ஏற்பட்டு விட்டது.

திடீரென்று கிழக்கே வானம் கருத்தது. கருமேகங்கள் குமுறிக் கொண்டு மேலே வந்தன. குளிர்ந்த காற்று புழுதியை அள்ளி வீசிக் கொண்டு அடித்தது. தூரத்தில் மழை பெய்து தரை நனைந்ததினால் கிளம்பிய மணம் பரவி வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மழையே வந்துவிட்டது. அற்பசொற்பமாக வரவில்லை; இடியும் மின்னலுமாய் நாலு புறமும் இருண்டு கொண்டு வந்து 'சோ' என்று சோனாமாரியாகப் பொழிந்தது. வானம் திடீரென்று பொத்துக் கொண்டு வெகுநாள் தேக்கி வைத்திருந்த ஜலத்தையெல்லாம் தொபதொபவென்று பூமியில் கொட்டுவது போலிருந்தது.

சொட்ட நனைந்து குளிரால் நடுங்கிய விக்கிரமன் ஒரு மரத்தடியில் சற்று நேரம் ஒதுங்கி நின்று பார்த்தான். மழை நிற்கும் வழியாயில்லை. நேரமாக ஆக இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கன மழையோடு இரவின் அந்தகாரம் சேர்ந்து விட்டால் கேட்கவேண்டியதில்லை. எனவே எப்படியாவது மேலே போக வேண்டியதுதான் என்றும் கிராமம் அல்லது கோவில் ஏதாவது தென்பட்டதும் அங்கே தங்கி விடலாமென்றும் எண்ணி விக்கிரமன் குதிரையை மேலே செலுத்தினான்.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. பார்க்கும்போது தண்ணீர் முழங்காலளவுதான் இருக்குமென்று தோன்றியது. காட்டாற்றில் மளமளவென்று வெள்ளம் பெருகிவிடுமாதலால் சீக்கிரம் அதைத் தாண்டி விடுவதே நல்லது என்று நினைத்து விக்கிரமன் குதிரையை ஆற்றில் இறக்கினான். கொஞ்ச தூரம் போனதும், பிரவாகத்தின் வேகம் அதிகரித்தது. குதிரை வெள்ளத்தின் குறுக்கே போக முடியாமல் நீரோட்டத்துடன் போக தொடங்கியது. பிரவாகமோ நிமிஷத்துக்கு நிமிஷம் பெருகிக் கொண்டிருந்தது. முன்னால் போகலாமா பின்னால் திரும்பிக் கரையேறி விடலாமா என்று விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, குதிரை பிரவாகத்தில் நீந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இனிக் குதிரைக்கும் ஆபத்து என்று எண்ணமிட்டவனாய் விக்கிரமன் வெள்ளத்தில் பாய்ந்தான்.
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top