New member
- Joined
- May 1, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
தூரம் 20
கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த அனுபமாவுக்கு இன்று கொஞ்சம் தலை சுற்றுவது போல் இருந்தது. முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவள் அலைபேசியைக் கையில் எடுத்தாள்.
வாட்சப்பினுள் நுழைந்தவள், கதிர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதைக் கண்டு புருவம் சுருக்கியவாறு அதனைப் பார்த்தாள். அமரன் படத்தில் வரும் பாடலைத் தான் போட்டிருந்தான்.
"வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ.." என ஆரம்பித்திருக்க, அதனுடனே வாயசைத்துப் பாட ஆரம்பித்தாள்.
"எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே" என்று பாடும் போது உணர்வுகள் ஊசி முனையில் ஊஞ்சலாடின.
உண்மை தானே? இருவருக்கும் இடையே நீண்ட தூரம். ஆயினும் நீங்கவில்லையே அவளின் கண்ணாளனின் காதல்?
இதயத்தில் ஈட்டி விடுவது மற்றும் முத்தம் வழங்குவது போன்ற இமோஜிகளை அவனுக்கு பறக்க விட்டவள் விட்டத்தைப் பார்த்தவாறே கைகள் இரண்டையும் தலைக்குக் கொடுத்து சாய்ந்து கொண்டாள்.
சற்று நேரம் அப்படியே இருந்தவளுக்கு பசியெடுக்க ஆரம்பித்தது. சமயலறைக்குச் சென்றவள் உணவைத் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டவள் டிவியை ஆன் செய்த மாத்திரத்தில் அவள் முன்பு பத்திர காளியாய் வந்து நின்றார், சீதா.
"என்னாச்சு அத்த?" அவரைப் புரியாமல் ஏறிட்டாள்.
"இது என்ன?" அவர் தனது கையில் இருந்த தொலைபேசியைக் காட்ட, உறைந்து போனாள், பாவையவள்.
"இ..இது" என தடுமாறியவளுக்கு வார்த்தை வரவில்லை.
"இது தான். இது என்ன கூத்துன்னு பதில் சொல்லு. இவன எதுக்கு பாக்க போன?" என்று அவர் கேட்க, அப்புகைப்படத்தில் படிந்தது, அவள் பார்வை.
நகைக்கடைக்கு முன்னால் அவள் ரஜனோடு பேசிக் கொண்டிருப்பது அதில் படமாக சேமிக்கப்பட்டிருந்தது. அன்று காவ்யாவும் உடன் இருந்தாள் தானே? அவளைத் தவிர்த்து தன்னையும் அவனையும் மட்டும் யாரோ புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
எத்தகைய ஈனச் செயல் இது? குடும்பங்களில் கலவரத்தை உண்டாக்கும் அற்பச் செயல். அவளால் ஜீரணிக்க இயலவில்லை.
"அவருக்காக செய்யக் குடுத்த செய்ன வாங்கப் போனேன். காவ்யா கூடத் தான் போனேன் அத்த. யாரோ இத போட்டோ எடுத்துட்டு வந்துட்டாங்க. அத வெச்சுட்டு என்னை நோக்கி விரல் நீட்டுறது சரியில்ல" அழுத்தமாகச் சொன்னாள், அவள்.
ஊராரின் குத்தல் பேச்சுகள் அவருள் மூட்டியிருந்த கோபத்தீ தற்போது திகுதிகுவென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
"பாக்க போனதக் கூட விடுவோமே. ஆனா இந்தக் கத வர ஒரு காரணம் இருக்கும்ல? எங்க போனாலும் என்ன பாத்து கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க. வெளியில் தல காட்ட முடியல. அன்னிக்கு என்னன்னா மேசேஜ் வருது. இப்ப சந்திக்கப் போய் இருக்க. என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல.
என் பையன் அங்க போய் உனக்காக எவ்ளோ கஷ்டபட்டுறான் தெரியுமா? ஆனா நீ அதையெல்லாம் கண்டுக்காம உல்லாசமா இருக்க. கண்டவன் கூடவும் சேத்து வெச்சுப் பேசுற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்ட.
நம்ம சொந்தத்துல நிரஞ்சனுக்கு நடந்த கதி தான் இங்கயும் நடக்குது. பொண்டாட்டிய விட்டு பக்கத்து ஊருக்கு போய் வேல செஞ்சு நைட் வருவான். அந்தப் பொண்ணு அதுக்கிடையில் ஒருத்தன் கூட கும்மாளம் போட்டு ஓடிப் போயிருச்சு" என்று அவர் சொல்ல, துடிதுடித்துப் போனாள், அனுபமா.
"அ..அப்ப நானும் அப்படின்னு சொல்லுறீங்களா?" தொண்டைக் குழிக்குள் வந்து துடித்தது, அவளிதயம்.
"நடக்குறதெல்லாம் அப்படித் தானே இருக்கு" என்று அவர் கூற, "நிறுத்துங்க" எனும் கர்ஜனைக் குரலில் இருவரும் திரும்பினார்கள்.
தனக்காகப் பேச யாரும் வர மாட்டார்களா என ஏங்கித் தவித்த தாரகையவளின் விழிகள் வாயிலில் நிலைக்குத்தி நின்றன.
இமையோடு விழிகளும் விரிய, இதழ்களும் குவிய, கண்ணின் கருமணிகள் நிலவொளியை ஒத்துப் பிரகாசித்தன.
"த..தங்கம்" அவளின் இதழ்கள் வியப்போடு உச்சரிக்க, விழிகளில் சீற்றம் கக்க அழுத்தமான காலடிகளோடு உள்ளே நுழைந்தான், கதிர். அனுபமாவின் அன்புக் கணவன்.
சீதாவோ நடுநடுங்கிப் போனார். தான் பேசிய அனைத்தையும் மகன் கேட்டு விட்டானோ என நினைத்து அஞ்சியவர், எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டார்.
"என்ன சொன்னீங்க? நிரஞ்சன் பொண்டாட்டியும் என் பொண்டாட்டியும் ஒன்னா? இவ சொக்கத் தங்கம்மா. ஊருல ஒருத்தி தப்பு பண்ணுனதுக்காக, அதே நிலையில் இருக்கிற எல்லாருமே தப்பு பண்ணனும்னு நெனக்கிறது தப்பு.
அவங்க தப்பு பண்ணாங்களா இல்லயானு தெரியாமலே இந்த மாதிரி கண்டபடி பேசுறது ரொம்பத் தப்புமா. அன்னிக்கு கூட நெறய பேசி இருக்கீங்களே. இவ என் கிட்ட ஒன்னும் சொல்லல. இவ நெனச்சி இருந்தா நீங்க பேசினத சொல்லி இருக்கலாம்.
ஆனா என் அம்மு அந்த மாதிரி வேல எல்லாம் பாக்க மாட்டா. அவ சொன்னா நான் நம்பி இருப்பேன். உங்க கிட்ட சண்ட போட்டு இருப்பேன். அப்படி நடக்கக் கூடாதுன்னு உங்க வார்த்தைகள சகிச்சுக்கிட்டா. காவ்யா தான் எனக்கு கால் பண்ணி வீட்டுல நடந்த எல்லாம் சொன்னா.
உண்மயா பொய்யானு தெரியாமலே நீங்க ஒரு முடிவுக்கு வந்து இந்த மாதிரி பேசலாமா? கேவலமான ஒரு பிறவி கலகம் பண்ணனும்னே ஃபோட்டோ எடுத்துட்டு வந்து காட்டினத வெச்சு, என் பொண்டாட்டிய தப்பு சொல்லுறது நியாயமா?"
"யாரு கேவலமான பிறவி? லதா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல" உண்மையில் யார் இதைச் செய்தது என்பதை உளறி விட்டார்.
"லதா? ஓஓ! விடிஞ்சும் விடியாம ஊர்க்கத பேசுற சங்கத்தோட தலைவி தானே? அது சரி. யாரோ லதாவுக்காக வக்காலத்து வாங்குறீங்க. உங்க மருமகள உங்களால நம்ப முடியாதுல்ல?
என் மருமக அப்படிப்பட்ட பொண்ணு இல்ல. அவ என் பையன தவிர வேற ஒருத்தரையும் நெனக்க மாட்டானு சொல்ல முடியாதா? அந்தளவுக்கு உங்களுக்கு அவ மேல நம்பிக்க இல்ல. எப்படி நம்பிக்க வரும்? அனு உங்க பொண்ணு இல்லயே" என்று சொல்ல,
"நான் யாரையும் பிரிச்சு பாக்கல" என்று தலையை அசைக்க, "உங்க மனச தொட்டுச் சொல்லுங்க" என்று கூற, அவரிடம் பதில் இல்லை.
"எப்படியும் அது நடக்கவே நடக்காது. எந்த சந்தர்ப்பத்திலும் மாமியார் தாயாக முடியாது. மருமகள் மகளாகவும் முடியாது. நீங்க அவள மகளா பாக்க வேணாம். அட்லீஸ்ட் ஒரு பொண்ணா பாக்கலாம்ல?
இதே பேச்சு உங்களுக்கு வந்திருந்தா உங்களால தாங்க முடியுமா? தப்பே பண்ணாத நெலமயில, உங்க மனசாட்சிக்கு நீங்க நியாயமா இருக்கிற நெலமயில யாராவது உங்கள தப்பா பேசுனா தாங்குவீங்களா? அத கேட்டுட்டு சாதாரணமா இருப்பீங்களா?"
மைந்தனின் வினா அம்புகள் அவரைப் பலமாகத் தாக்கின. அத்தகையதொரு நிலை தனக்கு வருமென்று நினைத்தும் பார்க்க முடியவில்லை. அனுவைச் சாடியவரின் உள்ளம் தனக்கென்று யோசிக்கும் போது கசந்து வழிந்தது.
அனுவுக்கோ தான் காண்பது கனவா நனவா என்றிருந்தது. நேற்றுத் தானே அவளோடு பேசினான். அதற்குள் கண்முன் நிற்கிறான். உண்மையில் அவன் வந்து விட்டானா என யோசித்தபடி அவனையே இமைக்காமல் பார்க்கலானாள்.
"அப்பறம் என்ன சொன்னீங்க? அவளுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேனா? நான் வெளிநாடு போனது யாருக்காக? அப்பா கடன அடைக்க. நம்ம குடும்பத்துக்காக. வெளிநாட்டு வாழ்க்க அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது தெரியுமா?
அவளுக்காக தான் அவங்க அப்பா கூட எங்கேயும் போகாம இருக்கார். அவங்களுக்கு பணம் முக்கியம் இல்ல. உறவுகள் பக்கத்துல இருக்கனும். சின்னச் சின்ன சந்தோஷத்தையும் பக்கத்துல இருந்து கொண்டாடனும்னு ஆச.
அவ நெனச்சி இருந்தா என்னை போக வேண்டாம்னு சொல்லி இருக்கலாம். ஆனா என் அம்மு அப்படி சொல்லல. எனக்காக அவளோட வலிய உள்ளுக்குள்ள வெச்சுட்டு வாழ்ந்தா. நான் இல்லாத வேதனையை அதிகமா அனுபவிக்கிறது அவ ஒருத்தி தான்.
கர்ப்பமா இருக்கிற நேர்த்திலேயும் ஒரு பொண்ணு மனசு புருஷனுக்காக தானே ஏங்கும். அவ என்னைத் தேடி துடிக்கிற துடிப்பு எனக்குத் தெரியும். என்ன தவிர ஒரு சந்தோஷம் அவளுக்கு இல்ல. அப்படிப்பட்ட என் உசுர நீங்க களங்கப்படுத்துறீங்க. நான் உங்கள இப்படி நெனக்கவே இல்ல" தாயைப் பார்த்தவனின் முகத்தில் அதிருப்தி.
"இப்படில்லாம் பேசாத கதிர். ஊருல பேசுறது உனக்கு தெரியாது" என்று சொல்ல, "ஊரு ஊருனு ஏன் சாகனும். காரித் துப்பத் தான் இந்த ஊரு காத்திருக்கும். அது நம்மள கொண்டாடும்னு ஒருக்காலும் கனவு காணாதீங்க.
ஊருக்காக வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போறீங்க? நம்ம குடும்பம் தான் கடைசியில நம்மள பாத்துக்கும். காவ்யா கல்யாணமானா மாமியார் வீட்டுக்கு போயிடுவா. இந்த வீட்டுல இருக்கப் போறது நானும் அனுவும் தான். உங்கள கடைசி வரைக்கும் பாத்துக்க போறது அவ தான்.
நான் இல்லாத சமயம் உங்களுக்கு தண்ணி தரப் போறதும், சாப்பாடு சமச்சி தரப் போறதும் அவ தான். ஃபோட்டோ பிடிச்சு தந்த லதா வந்து உங்களுக்கு சேவகம் பண்ணுவாளா? இல்லவே இல்லை. அதனால உங்க கூட இருக்கப் போற இந்தப் பொண்ண அன்பா பாத்துக்கங்க. அப்ப தான் அவளுக்கும் எந்த தயக்கமும் இல்லாம உண்மயான அன்போட, அக்கறையோட பாத்துக்குற மனசு வரும்.
உங்க கூட இனி இருக்கவே இவ மனசு இடம் கொடுக்குமானு எனக்கு தெரியல. ஏன்னா நீங்க பேசுனத என்னாலயே ஜீரணிக்க முடியல" என்றான், கதிர்.
"இப்படி பேசாதீங்க. போதும் கதிர்" அனுபமா அவளருகில் வர, "பாத்தீங்களா? இது தான் என் பொண்டாட்டி. பாத்து நடந்துக்கங்கம்மா. உங்கள நான் தப்பா சொல்லல. அடுத்தவங்க பேச்ச கேட்டு ஒரு நல்ல பொண்ண கஷ்டப்படுத்த வேண்டாம்" கோபம் தணிந்தவனாக தன்மையாகக் கூறி விட்டு தன்னவளை தோளோடு சேர்த்து அணைத்தவாறு தமது அறைக்குச் சென்றான்.
சீதாவுக்கோ மகனின் வார்த்தைகள் ஆழ்மனதைத் தொட்டன. அவன் பேச்சு வாய்மையானது தான். அவன் மனைவியை அவன் முழுதாக நம்புகிறான். இதை விட வேறு எதுவும் தேவையில்லை தானே. அனுபமாவைத் தவறாகப் பேசியதற்காக நொந்து கொண்டார்.
தன்னருகில் நிற்பவனை இமை சிமிட்டக் கூட மறந்து போனவளாக அவள் நோக்க, அவனும் அவளைத் தான் நோக்கினான், நீண்ட நாள் தேடலின் பின்னர் தாயைக் கண்ட சேயினைப் போல.
"எப்படி வந்தீங்க?" தாங்க முடியாத ஆச்சரியத்தோடு கேட்க, "உனக்காக எப்படியாவது வருவேன் அம்மு. எங்கே இருந்தாலும் உனக்கு ஒன்னுன்னா இந்தக் கதிர் வருவான்" என்று அழுத்திச் சொல்ல, அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள், அவனவள்.
தூரம் தொடரும்......!!
ஷம்லா பஸ்லி