• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
709
பார்த்திபன் கனவு - 2.22. சிறுத்தொண்டர்


உறையூருக்கு மேற்கே காவேரி நதியிலிருந்து சற்றுத் தூரத்தில் ஒரு அழகான தாமரைக்குளம் இருந்தது. அந்தி நேரமானபடியால், அத்தடாகத்தை அழகு செய்த தாமரை மலர்கள் எல்லாம் அச்சமயம் இதழ் கூம்பியிருந்தன. மேல் வானத்தைப் பொன்மயமாகச் செய்து கொண்டிருந்த சூரியன் சுழலுகின்ற தங்கத் தகட்டைப்போல் அதிவிரைவாய்க் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.
தாமரைக் குளத்தைச் சேர்ந்த படித்துறை மண்டபத்தில் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியும் வந்து தங்கியிருந்தார்கள். மண்டபத்துக்குச் சற்றுப் பின்னால் வேல்பிடித்த வீரர்கள் ஒதுங்கி நின்றார்கள். பட்டத்து யானையும், புரவிகளும் சிறிது தூரத்தில் காணப்பட்டன.

மேற்குத் திக்கிலிருந்து காவேரி ஆற்றின் ஓரமாக வந்த சாலையைச் சக்கரவர்த்தி ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

குந்தவி தடாகத்தின் படிக்கட்டில் இறங்கிக் கீழ்ப்படியில் வந்து நின்றாள். தளதளவென்று விளங்கிய தாமரை இலைகளின் வனப்பையும், கூம்பிய தாமரை மலர்கள், மொட்டுகள் இவற்றின் அழகையும் அவள் சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்தாள். தாமரை இலைகளின் மேலே முத்து முத்தாகத் தண்ணீர்த் துளிகள் நின்றதையும், இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்தபோது அந்த முத்துக்கள் அங்குமிங்கும் ஓடிச் சில சமயம் பிரிந்தும் விளையாடியதையும் பார்த்துக் களித்தாள். அப்போது தடாகத்தின் தெளிந்த நீரில் பிரதிபலித்த அவளுடைய உருவமானது தற்செயலாக அவள் பார்வையைக் கவர்ந்தது.

சந்தன நிறத் தந்தத்தினால் செய்தவை போல் விளங்கிய குந்தவியின் அழகிய நீண்ட புஜங்களும் பங்கஜ மலர்ப் பாதங்களும் பளிங்கு போல் தெளிந்த தண்ணீரிலே பிரதிபலித்தபோது பன்மடங்கு வனப்பும் சோபையும் பெற்று விளங்கின.

குந்தவி தன்னுடைய பிரதி பிம்பத்தைத் தானே பார்த்த வண்ணமாகச் சற்றுநேரம் ஸ்தம்பித்து நின்றாள்.

அந்தக் காட்சி, கைதேர்ந்த சிற்பி ஒருவன் செய்த அற்புத அழகு வாய்ந்த தந்தப்பதுமை ஒன்றை உயர்ந்த ஆடை ஆபரணங்களினால் அலங்கரித்து அக்குளக்கரையில் நிறுத்தி வைத்திருப்பது போல் தோன்றியது.

திடீரென்று தந்தப் பதுமைக்கு உயிர் வந்ததுபோல் குந்தவி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளுடைய மேனி அழகைப்பற்றி அவளிடம் ஏற்கெனவே பலர் பிரஸ்தாபித்ததுண்டு. தாய்மார்கள் சொல்லியிருக்கிறார்கள்; தோழிகள் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்; சித்திரக்காரர்களும் சிற்பிகளும் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் குந்தவி மேற்படி பாராட்டுதல்களைப் பொருட்படுத்தியதேயில்லை. ஆனால், இப்போது அவள் தன் மேனி அழகைப் பற்றித் தானே சிந்திக்கத் தொடங்கினாள். தோழிகள் அழகைப் பற்றிச் சொல்வதெல்லாம் வெறும் புகழ்ச்சியல்ல, விளையாட்டுமல்ல; உண்மைதான். ஆனால், ஆனால்...? "இந்த அழகினாலே என்ன பிரயோஜனம்?" என்று அவளுடைய உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அடுத்தாற்போல் "ஆகா! அந்த இராஜகுமாரனுக்கு இந்த உறையூர்தானே? அவன் மட்டும் இப்போது என் அருகில் நின்று கொண்டிருந்தால்....?" என்னும் எண்ணம் உண்டாயிற்று. இதை அடுத்து இன்னதென்று விவரிக்க முடியாத மனக்கிலேசம் ஏற்பட்டது.

"இந்த அலங்காரமெல்லாம் என்னத்திற்காக? நாளை முதல் ஆபரணம் ஒன்றும் அணிந்து கொள்ளக்கூடாது. இவற்றினால் என்ன பிரயோஜனம்? அழகு அதிகமாகி விடுகிறதா! இருக்கிற அழகு போதுமே?" என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றின. "இப்போதே இதையெல்லாம் எடுத்து எறிந்துவிடுகிறேனே! என்று தலையில் சூடியிருந்த ஆபரணங்களை முதலில் எடுக்கப் போனாள்.

அப்போது திடீரென்று அவளுடைய தந்தையின் குரல், "குந்தவி! இங்கே ஓடி வா!" என்று விரைந்து அழைத்தது காதில் விழுந்தது. தன்னை மறந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த குந்தவி, திடுக்கிட்டுத் தந்தை இருந்த பக்கம் நோக்கினாள். "அதோ பார் குந்தவி, சிவிகை வருகிறது! என் அருமைச் சிநேகிதர் வருகிறார்! பல்லவ சேனாதிபதி வருகிறார்! சளுக்கரை முறியடித்துப் புலிகேசியைக் கொன்ற மகா வீரர் வருகிறார்! உறையூருக்கு நாம் இந்தச் சமயம் வந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!..."

இவ்விதம், ஊரிலிருந்து உறவினர் வரக்காணும், சின்னஞ்சிறு குழந்தையைப்போல் சக்கரவர்த்தி அளவற்ற உற்சாகத்துடன், சொல்லிக்கொண்டே போனார். அவர் அவ்வளவு குதூகலம் கொண்டதைக் குந்தவி அதற்கு முன்னால் கண்டதேயில்லை.

சிறிது நேரத்துக்கெல்லாம் சிவிகை தாமரைத் தடாகத்தின் அருகில் வந்துவிட்டது. மண்டபத்தில் சக்கரவர்த்தி நிற்பதைக் கண்டதும் ஏவலாளர் சிவிகையை விரைந்து கீழே இறக்கினார்கள். அந்தச் சிவிகையிலிருந்து, தலையையும் முகத்தையும் நன்கு முண்டனம் செய்தவரும், விபூதி ருத்திராட்ச தாரியுமான பெரியவர் ஒருவர் இறங்கினார். அவருடன் ஒரு மூதாட்டியும் இறங்கினார்.

அந்தப் பெரியவர் "அரசே! என்று சொல்லிக் கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்து வந்தார். சக்கரவர்த்தியும் "சேனாதிபதி!" என்று சொல்லிக் கொண்டு மண்டபத்திலிருந்து விரைவாகக் கீழே இறங்கி வந்தார்.

சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்த வண்ணமாகக் கூப்பிய கரத்துடன் நின்றார்கள். இருவருடைய கண்களிலும் நீர் ததும்பியது. பிறகு, ஏக காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அப்போது இருவருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகி வழிந்து அருவியாக ஓடத் தொடங்கியது.

இதற்கிடையில் சிவிகையிலிருந்து இறங்கிய மூதாட்டியை நோக்கிக் குந்தவி வந்தாள். அவருக்குக் குந்தவி நமஸ்காரம் செய்ய யத்தனிக்க, அந்த அம்மையார் அதற்கு இடங்கொடாமல் அவளைத் தம்முடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, "குழந்தாய்! பிறைசூடும் பெருமானுடைய அருளால் உனக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும். உன் மனதிற்கிசைந்த மணவாளனை அடைந்து தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்!" என்று ஆசீர்வதித்தார். அவர் இவ்விதம் ஆசிகூறியபோது குந்தவியின் தேகத்தில் புளகாங்கிதம் உண்டாயிற்று.

பரஸ்பரம் ஆலிங்கனம் செய்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்த சக்கரவர்த்தியும், அவருடைய பழைய சேனாதிபதியும் சிறிது நேரத்துக்கெல்லாம் சற்று விலகி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

"உறையூருக்கு நான் இச்சமயம் வந்தது எவ்வளவு அதிர்ஷ்டம்! இல்லாவிட்டால் உங்களைப் பார்த்திருக்க முடியாதல்லவா? நீங்கள்தான் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள்; காஞ்சிக்கு வருவதேயில்லை!" என்றார் சக்கரவர்த்தி.

"அரசே! தங்களை நான் மறந்து விடுவதா? தென்னாட்டில் நான் தரிசித்த ஒவ்வொரு ஸ்தலத்திலும் தங்களுடைய நினைவு எனக்கு உண்டாயிற்று. இந்தத் திவ்வியக்ஷேத்திர யாத்திரையில் தாங்களும் என்கூட இல்லையே என்று எவ்வளவோ வருந்தினேன். கடைசியாகப் பழனிமலையில் எழுந்தருளியிருக்கும் ஆண்டவனைத் தரிசித்தபோதும் தங்களுடைய நினைவுதான் எனக்கு. அவருடைய சந்நிதியில் நான் விரும்பியது உடனே நிறைவேறி விட்டது. இங்கே வந்ததும் தங்களைப் பார்த்தேன்..."

"சேனாதிபதி!"

"பிரபோ! என்னை அவ்விதம் அழைக்க வேண்டாம்!"

"பரஞ்சோதி!"

"அது என் பூர்வ ஜன்மப் பெயர்! அதை இப்போது கேட்கப் பிடிக்கவில்லை."

"கேளும், சிவபக்தரே!"

"அவ்வளவு பெருமைக்கு நான் உரியவன் அல்ல பிரபு! இன்று இந்நாட்டில் மகான்களான சிவபக்தர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொண்டு புரியும் சிறுத்தொண்டன் நான்!"

"கேளும் சிறுத்தொண்டரே! நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால்..."

"சொல்லுங்கள் அரசே!"

"இந்த உலகத்தில் நான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இன்னும் இரண்டு பாக்கியிருக்கின்றன. அவற்றை முடித்துவிட்டால், நானும் உங்களைப்போல் துறவு பூண்டு ஸ்தல யாத்திரை தொடங்கி விடுவேன். ஆனால் உங்களைப் போல் தலையை முண்டனம் செய்து கொள்ளமாட்டேன். பார்த்தவர்கள் வசிஷ்டரோ, விசுவாமித்திரரோ அல்லது அகஸ்திய முனிவர்தானோ - என்று பிரமிக்கும்படியான ஜடாமகுடம் தரிப்பேன்!" என்று சொல்லிச் சக்கரவர்த்தி நகைக்க சிறுத்தொண்டரும் கூட நகைத்தார்.

அவ்விருவருடைய சிரிப்பின் ஒலியும், அந்தி நேரத்தில் கூட்டை நோக்கிப் பறந்த பறவைகளின் குரல்களுடன் கலந்து நாற்றிசையும் பரவி எதிரொலி செய்தன.
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top