New member
- Joined
- May 1, 2025
- Messages
- 23
- Thread Author
- #1


தூரம் 19
மூன்று நாட்கள் கழிந்து விட்டன. அதீத சோகத்துடன் அமர்ந்திருந்தாள், அனுபமா.
காலையில் கதிர் அழைக்கவில்லை. அவள் அழைத்த போது வீடியோ அழைப்பில் வந்தவன் ஓரிரு நிமிடங்கள் பேசி விட்டு வைத்து விட்டான்.
அவன் நன்றாகத் தான் பேசுகின்றான். ஆனால் அவனில் ஏதோ மாற்றம் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
ரஜனைச் சந்தித்த தினம், அவன் கூறிய விடயத்தைச் சொன்னாள். அன்றிலிருந்து அவன் ஒழுங்காக கதைக்கவில்லை. வேலை வேலை என்று காரணம் சொல்லி அவசரமாக சென்று விடுவது போல் இருந்தது.
ஏன் இப்படிச் செய்கிறான் என்ற சிந்தனையுடனே அவளின் நேரங்கள் நகர்ந்தன. மாமியார் இன்னும் அவளோடு ஒழுங்காகக் கதைக்கவில்லை. அவளும் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
காவ்யா வந்து "அம்மா! ரஜன்.." என்று அவனைச் சந்தித்த விடயத்தைக் கூற வரும் போது கூட, சீதா அதனை மறுத்து, "அவன பத்தி எதுவும் பேசக் கூடாது இங்க. கண்டவன பத்தி பேசியும் நெனச்சும் தான் இங்க தேவ இல்லாத கதையெல்லாம் வருது.
வெளிய இறங்கி தல காட்ட முடியல. உன் மருமவ அப்படியா இப்படியா? பையனுக்கு தெரியாதானு கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க. அது போதாதுன்னு மருமகள ஒழுங்கா பாத்துக்க தெரியாதானு என்னையே குத்தம் சொல்லுறாங்க. இதையெல்லாம் கேக்கனும்னு எனக்கு தல விதி" அனுவுக்கு கேட்கும் படி, சத்தமாகவே புலம்பித் தள்ளினார்.
அனுவுக்கு ஒரு புறம் வயிற்றுக்குள் புகைந்தாலும் அவரை எதிர்த்துப் பேச நினைக்காமல் வாய்க்கு பூட்டுப் போட்டுக் கொண்டாள்.
சொல்வதை கேட்காமல், தானாக ஒன்றை உறுதி செய்து கொண்டு புலம்புபவரை அவளால் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு கதிரின் மாற்றம் தான் மண்டையை வண்டாகக் குடையத் துவங்கியது.
அவள் இப்போது யாரையும் எதிர்பார்ப்பதில்லை. கதிர் என்ற ஒருவன் போதும். அவனது நம்பிக்கை போதும். ஆனால் இப்போது அவன் சரியாகப் பேசாதது என்னவோ போல் இருந்தது. அவனது சிறு மாற்றமும் அவளுக்கு பூதாகரமாகத் தோன்றியது.
கவலையுடனே இருந்தாள். அவனது நினைவு மனதை வாட்டியது. அதோ இதோவென்று இரவானது.
அவனது அழைப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள். அவன் அழைத்து விட்டான். அவளுள்ளம் துடித்து அடங்கியது.
"தங்கம்" உயிரை உருக்கும் குரலில் அழைக்க, "சொல்லு டா. என்ன பண்ணுற?" என்று வினவ,
"ரொம்ப கோவமா இருக்கேன். ரொம்ப ரொம்ப கவலையா இருக்கேன்" என்று வந்தது, அவள் பதில்.
"ஏன்ம்மு?" என்று கேட்க, "ஏனா? உங்களுக்கு ஏன் எதுக்குன்னு தெரியாது. சும்மா கேள்வி கேக்காதீங்க. இப்போல்லாம் நீங்க என் கூட சரியா பேசுறதே இல்ல. எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?" தொண்டை அடைத்தது, அவளுக்கு.
"தெரியும். உன் கஷ்டம் புரியுது. ஆனா என் நெலமய கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன். நான் வேணும்னே உன் கூட பேசாம இருக்கல. எனக்கும் கொஞ்சம் வேல. அதனால தான் அப்படி. நீ இப்படி கவலப்பட்டுட்டு இருக்காத" என்று சொல்ல,
"கவலப்படாத கவலப்படாதன்னு சொன்னா மட்டும் என் கவலை எல்லாம் போயிடுமா? நானும் எவ்ளோ தாங்குவேன்? எனக்கு இப்போ யாரும் வேண்டாம் போல இருக்கு.
போற இடமெல்லாம் அந்தப் பேச்சு தான். காது குடுத்து கேக்க சகிக்கல. அதையெல்லாம் பல்லக் கடிச்சு பொறுத்துட்டு இருக்கேன். என் மனசுக்கு நீங்க மட்டும் தான் ஆறுதல். நீங்களே என் கூட பேசாம இருந்தா எங்க போவேன்?
உங்க நெலம எனக்குப் புரியாம இல்ல. ஆனா என்னயும் கொஞ்சம் யோசிங்க. இப்படி கேக்குறது சரியா இல்லயான்னு தெரியல. எனக்கான நேரத்த நீங்க ஒதுக்கித் தான் ஆகனும்" கவலை கோபமாக உருமாற, ஆக்ரோஷமாகப் பேசினாள்.
"அம்மு! ரிலாக்ஸ் செல்லம். எமோஷனல் ஆகாத. நான் சொல்லுறத கேளு" அவளை மென்மையாக சமாளிக்க முயன்றான்.
"இத சொல்லிச் சொல்லியே நீங்க சொல்லுற மாதிரி நடக்க வைங்க. ஆனா நீங்க நான் சொல்லுறத கேக்க வேணாம். என் ஆதங்கத்த புரிஞ்சுக்கவும் வேணாம்" எண்ணெய்யில் இட்ட கடுகாக வெடித்தவள், அவனது மௌனத்தில் சற்று நிதானித்தாள்.
"பேசு. பேசு அம்மு. நீ சரியாத் தான் பேசுற. உனக்கு என்னால கஷ்டம் தான் வருது. கல்யாணமான புதுசுன்னு கூட பாக்காம உன்ன தனியா தவிக்க விட்டுப் போனேன். தூரமா இருந்தே உன்ன கஷ்டப்படுத்தினேன். அதனால தான் உனக்கு இப்படியொரு பேச்சும் வந்தது. இப்பவும் நான் ஒழுங்கா பேசாம இருக்கேன். என்னால உனக்கு கஷ்டம் கஷ்டம் கஷ்டம் மட்டும் தான்" உணர்ச்சிவயப்பட்டு விட்டான், காளை.
அவளுக்கு அய்யோ என்றானது. தனது உணர்வுகளைக் காட்டப் போய் அவனைக் காயப்படுத்தி குற்றவுணர்வுக் குழிக்குள் தள்ளி விட்டு விட்டோமே என்றிருந்தது.
தன்னோடு பேசாமல் இருப்பது தனக்கு மட்டுமன்றி அவனுக்கும் தானே கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு அவனை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது.
"தங்கம்" என்று அழைத்தாள்.
"ம்ம்ம்" என்று ஹூம்காரம் இசைக்க, "என்ன பாருங்க. என் தங்கம்ல?" கொஞ்சலுடன் கெஞ்சினாள், காரிகை.
இமை உயர்த்தி அவளைப் பார்த்தான். அவளது விழிகள் மன்னிப்பை யாசித்து நின்றன.
"சாரி டா தங்கம். என்ன பிரிஞ்சு நீங்களும் கவலைப்பட்டுட்டு தானே இருக்கீங்க. எனக்கு மட்டும் கஷ்டம்னு உங்கள குற்றம் சாட்டி பேசுறது பிழை தான். எனக்கு இங்க அம்மா, அப்பா, தங்கச்சினு எல்லாரும் இருக்காங்க. ஆனா நீங்க தனியா இருக்கீங்க. நீங்களும் என் கிட்ட தானே ஆறுதல் தேடி வருவீங்க.
வர முடியாத சூழ்நிலைல நீங்களும் தவிச்சு போவீங்கன்னு தெரியும். அத புரிஞ்சுக்காம நான் சுயநலமா யோசிச்சு சண்டை போட்டுட்டேன். என்ன மன்னிச்சிடுங்க" நலிந்து போன குரலில் மொழிந்தாள், மாது.
"விடும்மு. நீ என்ன நெலமயில இருக்கேனு எனக்கு தெரியும். அதனால உன்ன எதுவும் சொல்ல முடியாது" என்றவன், "நீ சாப்பிட்டியா?" என்று கேட்டான்.
"சாப்பிட்டேன்" என தலையை அசைக்க, "குழந்த இருக்கிறதால நீ டைமுக்கு சாப்பிடுறல்ல. அது நல்ல விஷயம் தான்" என்று கூற, நல்ல பிள்ளையாக சிரித்து வைத்தாள்.
"நீங்க சாப்பிட்டீங்களா?" என்று மறுகேள்வி பிறக்க, "இல்ல" என தலையசைத்தான்.
அவளின் முறைப்பில் காரம் சுருசுருவென ஏறத் துவங்க, "பசிக்கல அம்மு. திட்டாத" என பாவமாகப் பார்த்தான்.
"நேரத்துக்கு சாப்பிடனும்னு சொல்லி இருக்கேனா இல்லையா? பக்கத்துல இருந்தா வாய்க்குள்ள திணிச்சு இருப்பேன். இவ்ளோ தூரத்துல இருக்குறப்ப மந்திரக் கை வெச்சு தான் ஊட்டனும். ஒழுங்கா சொல்லுற பேச்ச கேட்டு இருங்க" பரபரவென திட்டித் தீர்த்தாள்.
"அப்பறமா சாப்பிடறேனே" கெஞ்சலுடன் தலை சாய்க்க, "அதெல்லாம் முடியாது. இப்பவே சாப்பிடுங்க" என்று அடம் பிடித்தாள்.
"சரி டி சரி. சாப்பிடுறேன்" கை கழுவி வந்தவன் சாப்பிட ஆரம்பிக்க, நாடியில் கை வைத்து அவனையே பார்த்தாள்.
இவனுக்கு ஊட்டி விடும் நாள் எப்போது வரும் என நினைக்கையில் ஏக்கமொன்று அவளுள் பிறப்பெடுத்து தேகமெங்கும் வியாபித்தது.
"என்னடா?" புன்னகையுடன் அவன் வினவ, "ஒன்னுல்ல. சாப்பிடுங்க" அன்பு கனிய நோக்கினாள், நங்கை.
அவ்வளவு அழகாகத் தெரிந்தான், அவளது கண்களுக்கு. எத்தனை பேருக்குக் கிடைக்கும் இத்தகையதொரு நம்பிக்கையுடன் கூடிய அன்பு?
தன்னைத் துளியளவும் சந்தேகிக்காத தூய காதல் நினைக்கும் போதே அவளை மெய் சிலிர்க்க வைத்தது. இப்படிச் செய்திருப்பாளா என்ற எண்ணமே அவனுக்கு எழவில்லையா? என்னிடம் அவன் பற்றி யாராவது சொன்னால் ஏற்க மாட்டேன் தான். ஆனால் மனதினுள் சின்னஞ்சிறு சலனமொன்றாவது ஏற்படும் அல்லவா? இவனுக்கு அப்படியும் இல்லையே. அப்படியாயின் எத்தனை ஆழமாக தன்னை நேசிக்கிறான் எனப் புரிந்து கொண்டாள்.
இப்படியான துணைகள் கிடைப்பது அரிது தான். அப்படிப்பட்ட ஒருவனாக கதிர் தனக்குக் கிடைத்தது மாபெரும் அதிர்ஷ்டம் என்றே தோன்றியது. தன் அன்புக் கண்ணாளனைக் கண் இமைக்காமல் பார்த்தாள்.
"கண்ணு வெக்காத. எனக்கு வயிறு வலிக்கும்ல?" அவன் வயிற்றைத் தடவ, "அப்படினா எனக்கு ஊட்டி விடுங்க" என்றாள்.
"எப்படி ஊட்டுறது?" அவன் யோசிக்க, "ஆஆ" வாயைத் திறந்து காட்டினாள்.
"இந்தா" என ஊட்டி விட, "ம்ம்ம் யம்மி" ருசித்துச் சாப்பிட்டவளை அள்ளிக் கொஞ்ச பேண்ட்டும் போல் அவன் மனம் பரபரத்தது.
"என் கண்ணம்மா" அவளை ரசித்துப் பார்க்க, "நீங்க என் கண்மணி" அவன் கன்னத்தில் முத்தமொன்று வைத்தாள்.
"அழகி! இப்படியே நீ சிரிச்சுட்டு இருக்கனும் டா. இந்த ஜென்மத்துல என் ஆச இது ஒன்னு தான்" என்று அவன் கூற, "நான் சந்தோஷமா இருப்பேன். உங்களுக்காக இருக்க ட்ரை பண்ணுவேன்" என்று சொன்னாள்.
இருப்பினும் அவள் மனம் அவனது அருகாமைக்காக ஏங்கியது. இந்த விடயத்துக்குப் பிறகு அவளது தேடல் அதிகரித்துத் தான் போனது.
"பாப்பா என்ன சொல்லுறா?" என்று அவன் கேட்க, அவளுள் மெல்லிய அதிர்வு.
இந்தக் கலவரங்களில் குழந்தையையும் அல்லவா மறந்து போனாள்? தன்னை நம்பி வந்த குழந்தையை நான் தானே நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் தானே என நினைத்தவளுக்கு குற்றவுணர்வு முளை விட்டது.
"அம்மு" கனிவோடு அவன் அழைக்க, "இருக்காங்க. உங்க பாப்பா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுதாம்" என்று கூறியவள் வார்த்தைகளில் ஏக்கம் நிறைந்திருந்தது.
"இல்லயே. என் அம்மு பாப்பா தான் என்னை ரொம்ப மிஸ் பண்ணுதாம்" என்று அவன் கூற, "நெஜம்மா! மிஸ் யூ கண்ணா" என்றவளின் குரலில் காதலோடு தேடலும் ஒன்றரக் கலந்து இசைத்தது.
தூரம் தொடரும்.........!!
ஷம்லா பஸ்லி