• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே!

தூரம் 18

"நான் ஒன்னு கேக்கவா? திட்ட மாட்டீங்களே?" மெல்லிய குரலில் அவள் வினவ, "எனக்கு உன் மேல சந்தேகமே வரலயானு கேக்க போற. அதானே?" மறுகேள்வி பிறந்தது, அவனிடம்.

தலையை அசைத்தவளை முறைத்துப் பார்த்தான்.

"நான் இப்போ தான் அப்படி கேக்கிறேன். நீங்க என்ன சந்தேகப்படுவீங்கன்னு நான் சொல்லாம இருக்கல. ஏதோ ஒரு தயக்கம். நான் கஷ்டப்படுறேன்னு தெரிஞ்சா உங்களால நிம்மதியா இருக்க முடியாதுல்ல. அதையும் நெனச்சு தான் சொல்லல. ஆனா உங்க கிட்ட கண்டிப்பா சொல்லச் சொல்லி இன்னிக்கு அம்மா சொன்னாங்க. சொல்லத் தான் வந்தேன். நீங்க அதுக்குள்ள கேட்டுட்டீங்க" என்றாள்.

"நான் வெளிநாட்டுல ஒரு பொண்ணு கூட இருக்கேன்னு யாராவது சொன்னா நீ நம்புவியா?"

"என்னங்க இது? நீங்க அப்படில்லாம் பண்ண மாட்டீங்க. என்ன தவிர யாரையும் உங்களால நெனக்க முடியாது" அவசரமாக வந்தது, பதில்.

"அதே தான்! சிம்பிள். உன்னால என்ன தவிர எவனையும் நெனக்க முடியாது. நீ என் உசுரு டி. எனக்கு என் காதல விட உன் காதல் மேல அவ்ளோ நம்பிக்க. உன்ன சந்தேகப்பட்டா அது நான் என்னையே சந்தேகப்படுறதுக்கு சமன்" என்று கூறியவனின் கண்களில் அத்தனை காதல்.

"இன்னொரு விஷயமும் சொல்லவா?" என்றவள் ரஜன் ஐ லவ் யூ அனுப்பிய விடயத்தைச் சொல்ல, "அவன் சரியில்ல தான். நீ நம்பர ப்ளாக் பண்ணு. நான் பாத்துக்கிறேன்" என்று பல்லைக் கடித்தான்.

"நான் பண்ணிட்டேங்க. கடைக்கு போகாம மேசேஜ் போட்டது என் தப்பு தான். இல்லனா அப்பவே ப்ளாக் பண்ணி வெச்சிருக்கனும். நான் ஆர்டர் குடுத்த செயின வாங்க இன்னிக்கு வர சொல்லி இருக்காங்க. கடையில் ரஜன் இருப்பான். ஆனாலும் குடுத்த காசுக்கு அத வாங்கனும்ல? என்ன பண்ணுறது?" என்று கேட்டாள்.

"தனியா வேண்டாம். காவ்யா கூட போயிட்டு வா" என்று விட்டான்.

"சரிங்க" என்றவளுக்கு மீண்டும் முகம் வாடிப் போக, "ஊருலல்லாம் ரொம்ப தப்பா பேசுறாங்க. என்னால தாங்க முடியலங்க" என வருந்தினாள்.

"ஊருல பேசாத பேச்சா? ஒரு விஷயம் கெடச்சா அது உண்மயா பொய்யானு யோசிக்க ஒரு மனசும் இருக்காது. உடனே அதை நம்பி இன்னுமின்னும் மசாலா சேத்து வித விதமா பேசுவாங்க. அந்த வழக்கத்த நாம மாத்த முடியாது அம்மு.

இதையெல்லாம் காதுல வாங்கிக்காம கடந்து வந்துடனும். குத்தம் இருந்தா தான் நாம அத உள்வாங்கிக்கனும். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். தப்பு பண்ணாதப்போ நீ இதல்லாம் கண்டுக்காத.

உனக்கு தெரியும் நீ நல்லவனு. எனக்கு தெரியும் என் அம்மு தப்பானவ இல்லன்னு. உன் அப்பாம்மாவுக்கு தெரியும் நீ எப்படிப்பட்டவன்னு. உனக்கு நாங்க போதும். எங்க நம்பிக்க போதும்மு. உன்ன நாங்க நம்புறோம். எப்பவும் நம்புவோம். நீ அத மட்டும் எதிர்பார். அத வெச்சு சந்தோஷமா இரு" இதற்கு மேல் அவனால் ஆறுதல் கூற முடியவில்லை.

அவனது வார்த்தைகள் அவளுக்கு யானை பலத்தைக் கொடுத்தன. அவனது நம்பிக்கை போதுமே அவளுக்கு. வேறு என்ன வேண்டும்? இனி யாரை எண்ணியும் கவலை கொள்ள வேண்டாம் என்ற தைரியம் அவளில் சுடர் விட்டது.

"நான் இனி அழாம இருக்க ட்ரை பண்ணுவேன். உங்க நம்பிக்க போதும் எனக்கு. நான் கவலப்பட மாட்டேன்"

"உன்னால உன் லவ்வர விட்டு பிரிஞ்சு இருக்க ரொம்ப கஷ்டம் போல" என்று அவன் சொல்ல, "லவ்வரா? அது யாரு?" தலை கால் புரியாது பார்த்தாள்.

"அழுகைய சொன்னேன். இப்ப கூட அழ மாட்டேன்னு உறுதியா சொல்ல மாட்டல்ல? அழாம இருக்க ட்ரை பண்ணுறதா தான் சொல்ற" என முறைக்க, "வாக்கு குடுக்க முடியாதுல்ல? என்னால அழுகைய கன்ட்ரோல் பண்ண முடியாது. என்னை அறியாமலே சட்டுனு வந்துடும். உங்களுக்கு வாக்கு தந்தும் நான் அழுதேன்னா சரி வராதுல்ல. அதனால தான் அப்படி சொல்ல முடியல" என்று கூற,

"நல்லா பேச மட்டும் கத்து வெச்சிருக்க." என்றவன், "இப்படி இரு அம்மு. எத நெனச்சும் கவலப்படாத. நவீன் சொன்னத நெனச்சு எனக்கு பயம் வந்துருச்சு. மத்தவங்க அது சொல்றாங்க இது சொல்றாங்கன்னு நீ உன்னயே வருத்திக்கிட்டா என்ன அர்த்தம்? அதனால நீ டிப்ரெஷனாகினா அது உன்ன தான் பாதிக்கும்.

உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாதும்மு. உன்ன பத்தி கவலப்பட நாங்க மட்டும் தான் இருக்கோம். பழி சொல்ற யாரும் உனக்காக வந்து நிக்க போறதில்ல. அதனால நீ கவலப்படாத செல்லம். என்ன பத்தி, உன்ன பத்தி, நம்ம கொழந்தய பத்தி மட்டும் நெனச்சிட்டு சந்தோஷமா இரு" என்றவனை, அவளது அருகில் தான் இல்லையே என்ற கவலை ஆட்கொண்டது‌‌.

"சரிங்க. நான் முயற்சி பண்ணுறேன்" என்றவளைப் பார்த்து, 'மிஸ் யூ அம்மு! உன் கிட்ட இருக்கனும்னு தோணுது. ஆனா முடியலயே‌. இந்த தூரம் நம்மள பிரிச்சு வெச்சு கொடுமைப்படுத்துது டா. எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரமே உன்ன பாக்க வருவேன்' என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.

வெளிப்படையாகச் சொன்னால் அவள் இன்னும் நொந்து போய் விடுவாள் என்பதால் அமைதி காத்தான்.

"சரிம்மு! கவனமா இரு. ஏதாவதுன்னா கால் பண்ணு. நீ சாப்பிட்டியா?"

"ஆமா. நான் வீட்டுக்கு வந்தேன். இன்னிக்கு இங்க இருந்துட்டு போறேன்" என்றவள் குரலில் அத்தனை அயர்வு.

"சரிம்மா. தூங்கி ரெஸ்ட் எடு. லவ் யூ செல்லம்" அன்போடு விடைபெற்றுச் செல்ல, அவனது வார்த்தைகளில் நிம்மதி பெற்றவளாக உறங்கிப் போனாள், பாவை.

மறுநாள் விடிந்ததும் காவ்யாவை வரவழைத்து, நகைக் கடைக்குச் சென்றாள். அங்கு ரஜன் மட்டுமே நின்றிருந்தான்.

"அண்ணி! ரஜன் மட்டும் தான் இருக்கார். நாம திரும்பி போயிடலாமா?" என்று கேட்க, "ம்ம் சரி" என்றவளுக்கு இதை யாராவது பார்த்து வேறு விதமாக சொன்னால் என்ன செய்வது என திரும்பிச் செல்ல எத்தனிக்க,

"அனு!" எனும் அழைப்பு அவளைத் தடுத்து நிறுத்தியது.

உடல் இறுகியவளாய் வாயிலில் நிற்க, "உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என அவள் முன் வந்து நின்றான், ரஜன்.

"ம்ம்" என அவள் கூற, அவன் பார்வை காவ்யாவைத் தொட்டு மீண்டது.

"நான் ஓரமாகி நிக்கிறேன்" என காவ்யா பின்னோக்கி அடியெடுத்து வைக்க, "நில்லு காவ்யா" அவளது கையைப் பிடித்து நிறுத்தினாள், அனு.

"நீங்க ஏதோ சொல்ல வர்றீங்கனு புரியுது. ஆனா அத தனியா பேசத் தேவயில்ல. எல்லா விஷயமும் ஊரு முழுக்க தெரிஞ்சு போச்சு. எதுவா இருந்தாலும் காவ்யா முன்னுக்கு சொல்லுங்க" அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவளுக்கு அங்கு நிற்பது முள்ளின் மீது நிற்பது போல் இருந்தது.

"அன்னிக்கு உங்க நம்பருக்கு மேசேஜ் பண்ணது நான் இல்ல. என் ஃப்ரெண்டு ராகேஷ் தான்"

"யாரு பண்ணாலும் தப்பு தப்பு தான். நான் கல்யாணமான பொண்ணுன்னு தெரியும் தானே? அதுவும் உங்க ஃப்ரெண்ட் கதிரோட ஃவைப். எனக்குப் போய் அந்த மேசேஜ் அனுப்ப உங்களுக்கு அசிங்கமா இல்ல?" சீற்றத்துடன் சினந்தாள், அனுபமா.

"நான் இல்ல அனு. அப்படி அனுப்புனதுக்கு மட்டுமில்ல. இன்னொரு விஷயத்துக்கும் நான் உங்க கிட்ட சாரி கேக்கணும். கதிர் உன்ன கல்யாணம் பண்ண முன்னாடி நான் உன்ன விரும்புனேன். அத உன் கிட்ட சொல்ல முடியல.

இத பத்தி ஒரு நாள் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அதத் தான் யாரோ பரப்பி விட்டிருக்காங்க. நான் வேணும்னு ஒன்னும் சொல்லல அனு. ஆனா இது ஊருல வேற வேற விதமா பேசப்படுது. உன் கிட்ட சாரி கேக்கனும்னு தோணுச்சு" என அவன் கூற, அதிர்ந்து போனாள், அவள்.

இவன் தன்னைக் காதலித்தானா? இது அவளுக்குப் புதிது. இருப்பினும், அந்த அதிர்வில் இருந்து உடனடியாக மீண்டவள், "உங்களுக்கென்ன லூசா?" எனக் கேட்டிருந்தாள்.

"நீங்க காதலிச்சீங்க ஓகே. ஆனா நான் இப்போ கதிரோட மனைவி. எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அதுக்கு பிறகு நீங்க எல்லாத்தையும் மறந்து இருக்கனும். அதோட இந்த விஷயத்த உங்களுக்குள்ளயே போட்டு புதைச்சு இருக்கனும்.

அதை விட்டுட்டு மத்தவங்க கிட்ட சொல்லி இருக்கீங்க. அது ஊருல எப்படி பேசப்படுது தெரியுமா? நான் கதிர ஏமாத்திக்கிட்டு உங்க கூட சேந்து கூத்தடிக்கிறதா இட்டுக்கட்டி இருக்காங்க. இதெல்லாம் உங்களால வந்தது. நீங்க தானே இத இல்லாம பண்ணனும். அத விட்டுட்டு சாதாரணமா சொல்லுறீங்க.

இப்படி நான் சொல்றதுலயும் பிரயோசனம் இல்ல. எல்லா விதமாகவும் பரவியாச்சு. அதுக்கான பேச்சையும் கேட்டாச்சு. வேதனையும் வந்தாச்சு. இனி ஒரு பிரயோசனமும் இல்ல" என்றவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.

"சாரி அனு" என அவன் மீண்டும் கேட்க, "போதும் நிறுத்துறீங்களா? வெறும் சாரியால எதுவும் மாறப் போறதில்ல. நான் அனுபவிச்ச வலியும் போகாது. இந்த அவப்பெயரும் மாறாது. மத்தவங்கள பாதிக்காம ஒரு விஷயத்த பண்ணப் பாருங்க. நீங்க ஆம்பள. நல்லா இருப்பீங்க. ஆனா எல்லாத்திலேயும் பாதிக்கப்படுறது பொண்ணுங்க நாங்க தான்.

அதுலயும் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா இது தெரிஞ்சும் கதிர் என்ன நம்பினார். அது எனக்கு பெரிய பலம்‌. எல்லா ஆம்பளங்களும் இப்படி இருக்க மாட்டாங்க. புருஷனும் நம்பாம போனா ஒரு பொண்ணோட கதி என்னாகும்னு யோசிச்சு பாருங்க. அத விட ஒரு நரகம் இருக்காது" என்றவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

"அண்ணாவுக்கு எல்லாம் தெரியுமா அண்ணி?" செல்லும் வழியில் காவ்யா கேட்க, "ஆமாடா தெரியும்" என பதிலளித்தாள்.

"நல்ல வேல. இத அண்ணன் கிட்ட சொல்லனும்னு அம்மா புலம்பிட்டு இருந்துச்சு. இதுல உங்க தப்பு எதுவும் இல்ல தானே அண்ணி. எல்லாம் ரஜனால தான். ஆனா அம்மா எதுவும் தெரியாம உங்கள திட்டிருச்சு" கவலையோடு பார்த்தாள், காவ்யா.

"ம்ம். அவங்களுக்கு உண்ம தெரியாதுல்ல. அதான்" என்று அவள் கடினப்பட்டு புன்னகைக்க, "நான் அப்படி இருக்க மாட்டேன் அண்ணி. யாரையாவது பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டா, அது உண்மயா பொய்யானு சரியா தெரியாம அவங்கள தப்பா எடை போட மாட்டேன். நம்ம எண்ணம் பிழைனு தெரிய வந்தா, நாம தப்பு பண்ண மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கும்ல?" என்று காவ்யா கூற,

"நீ சொல்றது கரெக்ட். அப்படித் தான் இருக்கனும். உண்ம தெரியாம ஒருத்தர தப்பா நெனக்கக் கூடாது" சின்னவளை அன்போடு நோக்கினாள், அனு.

தூரம் தொடரும்.........!!

ஷம்லா பஸ்லி
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top