• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 17

கதிர் கேட்ட கேள்வியில் திக்கென்றானது அனுபமாவுக்கு. அவனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதோ? படபடத்துப் போனாள், பெண்ணவள்.

"சொல்லு. நீ என் கிட்ட எதையாவது மறைக்கிறியா?" மீண்டும் அவன் அதே வினாவைத் தொடுக்க, "எ..என்னங்க" தடுமாறி நின்றாள்.

"கேட்ட கேள்விக்கு பதில் வேணும். ஒழுங்கா பதிலைச் சொல்லு" அழுத்தமாக அவன் சொல்ல, அவளை மௌனம் வலை வீசிப் பிடித்தது.

என்னவென்று பதில் சொல்வது? ரஜனின் விடயம் தெரிந்து விட்டது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அதை அவன் எப்படி எடுத்துக் கொண்டான்? தன் மீது கோபமாக உள்ளானா?

அவனின் ஒட்டுதல் இல்லாத பேச்சு அவளைத் தவியாய்த் தவிக்க வைத்தது. உடல் லேசாக நடுங்க ஆரம்பிக்க, சட்டென்று கட்டில் முனையை ஊன்றிப் பிடித்தாள்.

"ஆமா" அவள் குரல் நடுங்கியது.

"சொல்லு. என்ன விஷயம்?" உணர்வற்ற குரலில் அவன் வினவ, "உங்க ஃப்ரெண்ட் ரஜன் கூட என்னை எல்லாரும் சேர்த்து வெச்சு பேசுறாங்க" பட்டென்று சொல்லி விட்டாள்.

ஆழ்ந்த மூச்சொன்று அவனிடம் வெளிப்பட்டது.

"த..தங்கம்" அச்சத்துடன் அவள் அழைக்க, "என்ன?" எனக் கேட்டான்.

"என் மேல கோபமா? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?" தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொள்ள, குரல் கமறியது.

"கோபம் தான் அனு. எனக்கு என் மேலயே கோபம். இவ்வளோ பெரிய ஒரு விஷயத்த என் கிட்ட மறைச்சிருக்க. இதெல்லாம் சொல்லுற அளவுக்கு நான் உனக்கு நம்பிக்கைய தந்து இல்லயேனு நெனக்கும் போது என் மேலயே எனக்கு கோபம் வருது. அந்தளவுக்கு நான் ஆகிட்டேன்ல? என் கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணவே இல்லையா?" என்று அவன் கேட்க,

"இல்ல. அப்படி இல்லங்க. இந்த மாதிரி பேசாதீங்க" அவசரமாக மறுத்தாள், அவள்.

தன் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை அவளால் அக்கணம் வார்த்தைகளினால் வடிக்க முடியாது போனது.

"அங்க தானே இருக்கான். பெருசா என்ன பண்ணிடப் போறான்? அவனால எனக்குத் தேவையான எந்த ஆறுதலையும் தர முடியாதுன்னு நெனச்சுட்டியா? பக்கத்துல இல்லாத இவனால எந்த பிரயோசனமும் இல்ல. இவன் கிட்ட மறைச்சுடலாம்னு முடிவு எடுத்தியா?" மீண்டும் அவன் கேட்க,

"அய்யோ நிறுத்துங்க. ப்ளீஸ்" சத்தமாகவே அலறி விட்டாள், வஞ்சி.

அவள் குரலோடு உடலும் நடுங்கியது. அவன் தன்னை இப்படியெல்லாம் கேள்வி கேட்பது என்னவோ செய்தது. அவனும் தன்னைத் தவறாக நினைத்து விடுவானோ?

'அய்யோ... கூடவே கூடாது. அப்படி நடக்கவே கூடாது' ஓவென்று ஓலமிட்டது, அவளுள்ளம்.

யார் வேண்டுமானாலும் தன்னைத் தவறாக நினைக்கலாம். ஏனெனில் அவர்கள் அவளை சாதாரணமாக அறிந்தவர்கள். ஆனால், கதிர் அப்படியல்லவே.

அவளை முழுதாக ஒப்படைத்தது அவனிடம் தான். அவனுக்காக தன் வாழ்வு, கற்பு, உள்ளம் என அனைத்தையும் சமர்ப்பித்து விட்டாள். அவளை நன்றாக அறிந்ததும் அவன் ஒருவன் தான்.

அவனே தவறாக நினைத்தால் எதிலும் பயன் இல்லை. இந்த வாழ்க்கையில் அர்த்தமே அற்றுப் போய் விடும். அப்படி மட்டும் நடக்கவே கூடாது என தன் இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.

அவள் குரல் அவனது மனதை உலுக்கியது போலும். சிந்தனை தெளிந்து விட்டான்.

"அம்மு" என்று அழைக்க, கதறி விட்டாள், அனுபமா.

இத்தனை நேரம் அடக்கிய அழுகை காட்டாற்று வெள்ளமாக உருவெடுக்க, விம்மி அழுதாள். அவளின் அழுகையில் மனம் கசங்கியது, கணவனுக்கு.

"அழாத. ப்ளீஸ் டா. அழுகைய நிறுத்து" என்று அவன் சொல்ல, "முடியலங்க. என்னை அழ விடுங்க. அடக்கி அடக்கி என்னால இருக்க முடியல. இந்த கவலைகள தாங்க முடியல" ஏங்கி ஏங்கி அழலானாள், ஏந்திழை‌.

"நான் சொன்னா கேப்ப தானே?" என்று அவன் கேட்க, "கேப்பேன். ஆனா இப்ப வேண்டாமே" என்றாள்.

வீடியோ அழைப்பெடுத்தவன், அவளின் முகம் பார்க்கும் போது தவித்துப் போனான். காதல் சொட்டும் விழிகள் இன்று கவலையால் பளபளத்தன. கண்ணீர் குளமாக நிரம்பி வழிந்தது.

அழ வைக்கவே கூடாது என்ற உறுதியோடு தானே அவள் கரம் பிடித்தேன்? ஆனால், இப்பொழுதெல்லாம் அவள் முகத்தில் கண்ணீரையும், கவலைக் கோடுகளையும் அல்லவா காண முடிகிறது?

"அம்மு இங்க பார். என் முகத்த பாரு" என்று கூற, கன்னத்தில் கண்ணீர்த் தடங்களோடு அவனை ஏறிட்டாள்.

"நான் உன் தங்கம்ல?" மென்மையான குரலில் வினவ, "ம்ம்" தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

"என்னை உனக்கு பிடிக்கும் தானே?" குழந்தையிடம் கேட்பது போல் அவ்வளவு அழகாகக் கேட்டான்.

"பிடிக்கும்" ஒற்றை வார்த்தையில் சொல்லியவளுக்கு உதடுகள் அழுகையில் துடித்தன.

"நீ என் அம்மால்ல? உன் குழந்தை சொன்னா கேட்க மாட்டியா?" தலையை சரித்து அவன் கேட்ட பாணியில், "கேப்பேன்" எனும் வார்த்தை அவளை அறியாமலே வந்து விட்டது.

"அப்ப கண்ண தொட. அழாம நான் சொல்லுறத கேளு" என்று விட்டான்.

அவளின் இரு கரங்களும் மேலெழுந்து விழி நீரைத் துடைத்து விட்டன. உதட்டைக் கடித்து விடுவித்து அழுகையை விழுங்கிக் கொண்டாள்.

"கிட்ட வா" என்று அழைக்க, "ம்ம்ம்" என்றவாறு அலைபேசியை நெருங்கி வர, "நான் உன்ன நம்புறேன் அம்மு. உனக்காக நான் இருப்பேன்" என்றவாறு அவள் நெற்றியில் முத்தமொன்று வைத்தான்.

துளி கண்ணீர் அவள் விழிதனில் ஊற்றெடுத்து கன்னம் வழியே கீழிறங்கி நெஞ்சம் தொட்டது. அவன் வார்த்தைகள் ஆழ்மனத்தில் ஆழமாய் ஊடுறுவி வலிகள் தீர்த்தன.

"ப்ச் அடியே! அழக் கூடாதுன்னு சொன்னேன்ல?" செல்லமாக அவளைத் திட்ட, "இது ஆனந்தக் கண்ணீர் மாமா" என்றவளின் இதழ்கள் சிரிப்பில் துடித்தன.

"ஏதாவது சொல்லி சமாளிச்சிடு. கள்ளி!" என்றவன் சிரிப்போடு பார்த்தாலும், அவனது மனமோ தன்னவளை எண்ணி ஏங்கிப் போனது.

சற்று முன் நடந்ததை மீட்டிப் பார்க்கலானான். இன்று ஆர்வத்தோடு அவனவளுடன் பேச வந்தவனுக்கு அவனது நண்பன் நவீனிடமிருந்து அழைப்பு வந்தது‌.

"சொல்லுடா" அழைப்பை ஏற்றவன் வெகு நாள் கழித்து நண்பன் அழைத்த உற்சாகத்தோடு உரையாடலைத் துவங்கினான்.

"உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். பொறுமையா கேளு டா" என்க, அவனது புருவங்கள் இடுங்கின.

"சொல்லு" என்று விட, "ஊருல உன் வைப் அனுவ நம்ம ரஜன் கூட சேத்து வெச்சு பேசுறாங்க. இந்த விஷயம் எப்படி ஆரம்பிச்சதுன்னே தெரியல. அவன் கிட்ட கேட்டா அவனுக்குத் தெரியாதுன்னு மழுப்பி விடுறான். ரொம்ப சீரியஸா போயிட்டிருக்கு.

நம்ம கேங்ல கூட அனு தங்கச்சிய தப்பா பேசுறாங்க. என்னால பாத்துட்டு இருக்க முடியல டா. உனக்கு தெரியுமோ தெரியல. இருந்தாலும் சொல்லுறேன். அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னு எனக்கு தெரியும்" என்று கூற, அதிர்ச்சியில் உறைந்து போனான், கதிர்.

தன்னவளைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களா? ஏன்? எப்படி? நினைக்கவே அவனால் தாங்க முடியவில்லை.

"என் அனு அப்படி இல்ல டா. அவ தங்கம். எனக்காகவே பிறந்தவ. என்ன தவிர யாரையும் அவ நெனச்சி கூட பாக்க மாட்டா" என்றவனின் குரலில் மெல்லிய நடுக்கம்.

"எனக்கு தெரியும். ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி பேச்சு ரொம்ப ஆபத்தானது டா. அவங்க மனச குழப்பி, ரொம்ப காயப்படுத்திடும். அவங்க ப்ரெக்னன்டா வேற இருக்காங்க. ஒரு டாக்டரா நான் சொல்லுறேன் மச்சி. இது ரொம்ப பயங்கரமானது.

அவங்க எப்பவும் அழுதுட்டு இருந்தா, இத பத்தியே யோசிச்சுட்டு இருந்தா அது அவங்க ஹெல்த்த பாதிக்கும். ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்ணுவாங்க. இது நல்லதில்ல. நீயும் பக்கத்துல இல்ல‌. ஆனா நீ அவங்களுக்கு ஆறுதலா இருக்கனும். உன்ன தவிர யாராலயும் அவங்கள சரி பண்ண முடியாது" என்று நவீன் சொல்ல, அவனுக்கும் அது சரியென்றே பட்டது.

"சரிடா. நான் பாத்துக்கிறேன். சொன்னதுக்கு தாங்க் யூ" நன்றியுரைத்தான், கதிர்.

"ஓகே டா. டேக் கேர். ஏதாவது வேணும்னா கால் பண்ணு. என்னால முடிஞ்ச உதவிய பண்ணுறேன்" என வைத்து விட்டான்.

தலை சுற்றிப் போனது, கதிருக்கு. தன்னவள் பற்றி எத்தனை அபாண்டமான பழி? இது அவளுக்குத் தெரிந்தால் தாங்குவாளா? ஊரில் அடிபடுகிறது என்றால் அவளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லையே.

பல கோணங்களில் யோசித்தவனுக்கு சில நாட்களாக அவள் முகம் சரியில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவள் ஏதோ கவலையில் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது‌ தானே?

அதன் காரணம் இதுவாகத் தான் இருக்க வேண்டும் என சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்து கொண்டான். அவள் இதைத் தன்னிடம் சொல்லி இருக்கலாமே? ஏன் மறைத்தாள்? தான் அவளை சந்தேகமாக நினைத்து விடுவோம் என எண்ணிக் கொண்டாளோ?

அந்த நினைவே அவனுக்கு அருவறுப்பைக் கொடுத்தது. உண்மை தானே? தன்னை நம்பி வந்த பெண்ணை சந்தேகப்பட்டு விட்டால் தன்னை விட கேவலமானவன் இருக்க முடியுமா?

இந்த உலகத்தில் அப்படியும் சில விடயங்கள் நடக்கத் தான் செய்கின்றன. வெளிநாடு சென்ற கணவனை விட்டு விட்டு, ஊரில் அவன் மனைவி கள்ளக் காதலனோடு தொடர்பு என்ற செய்திகள் நாளுக்கு நாள் செவியை எட்டுகின்றமை பொய்யல்ல.

ஆனால் அவனது அம்முவின் மீது அவனுக்கு அபார நம்பிக்கை. அவள் குழந்தை போன்றவள். அப்படியொரு எண்ணம் அவள் மனதில் துளி கூட துளிர்த்து இருக்காது.

தனக்காக அவள் ஏங்கிப் போவதையும், தன் அலைபேசி அழைப்புக்காக காத்துக் கிடப்பதையும், அம்மு' என்ற ஒற்றை அழைப்பில் உருகி தனக்காக எதையும் செய்யத் துணிவதையும், தங்கம் என்ற அழைப்பாலேயே ஒட்டுமொத்த அன்பையும் வெளிப்படுத்தி விடுவதையும் அவன் அறிவானே.

அப்படிப்பட்டவள் மீது அவன் சந்தேகம் கொள்ளலாமா? அது அவனது காதலையும் அல்லவா கொச்சைப்படுத்தி விடும்?

அவள் மீதான அவனது நம்பிக்கை கொஞ்சமும் மாறவில்லை. ஆனால் இவ்வளவு வலிகளையும் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு தன்னிடம் நடிக்கிறாளே? தன்னால் ஆறுதல் சொல்ல முடியாது என்பதாலா மறைத்தாள்? சொல்ல முடியாத அளவுக்கு நான் அவளது மனதில் பதிந்து விட்டேனா? நான் சந்தேகப்படுவேன் என அவள் நினைத்தாளா?

இப்படியான வினாக்கள் அவனுள் சுனாமியை உண்டு பண்ணியதன் விளைவாகத் தான் அவளுக்கு அழைத்த போது, முதலில் ஒரு மாதிரி பேசினான். ஆனால் அவள் 'தங்கம்' என்ற போது அவனின் கோபதாபங்கள் உடைந்து போயின. அவளைத் தேற்றுவதை முதல் வேலையாகக் கருதிக் கொண்டான். இது தான் கதிர்.‌ இது தான் காதல்!

தூரம் தொடரும்.......!!

ஷம்லா பஸ்லி
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top