• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே!

தூரம் 16

மகளின் அழுகையில் அதிர்ந்து போன தாயுள்ளம், அவள் கூறிய விடயத்தில் பரிதவித்துப் போனது.

"என்னை எல்லாரும் தப்பு தப்பா பேசுறாங்கம்மா" என்று அவள் கதற, "அனு! அழாத. என்னாச்சு உனக்கு? யாரு என்ன பேசுறாங்க? அழாம சொல்லு டா" அவள் கூந்தலை மென்மையாக வருடிக் கொடுத்தார்.

"எல்லாரும் எல்லாரும் தான்மா. நான் கதிர் ஃப்ரெண்டு ரஜன் கூட பழகுறேன்னு சொல்லுறாங்க. கேவலமா பேசுறாங்க. எல்லாம் கூட தாங்கிப்பேன்மா. ஆனா இன்னிக்கு அத்தயும் ரொம்ப பேசிட்டாங்க" இதுநாள் வரை நடந்த விடயங்கள் அனைத்தையும் அன்னையிடம் ஒப்பித்தாள், புதல்வி.

துடித்துப் போனார், மங்களம். ஒரு பெண்ணுக்கு வரவே கூடாத வார்த்தைப் பிரயோகங்கள் இவை. உயிரிலும் உயர்ந்தது மானம் அல்லவா? அவளின் கற்பே இங்கு கேள்விக்குறியானதை அந்தத் தாயால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

"சம்மந்தியம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் நெனங்கவே இல்ல. மாப்பிள்ளையும் இல்லாத நெலமைல அவங்கள நம்பி உன்ன அங்க விட்டுட்டு வந்திருக்கோம். உன்ன நல்லபடியா பாத்துக்க வேண்டியது அவங்க பொறுப்பு. மகள் போல பாத்துக்காம வார்த்தையால வேல் பாய்ச்சி இருக்காங்க" அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

"நான் ஒரு தேவைக்காக தானேம்மா மேசேஜ் போட்டேன். அது கூட தப்பா? அதை மட்டும் வெச்சுக்கிட்டு நான் என்னமோ கதிருக்கு துரோகம் செஞ்ச மாதிரி பேசுறாங்க. நான் எப்படிம்மா அப்படி பண்ணுவேன்?" கண்ணீர் நில்லாமல் வழிந்தது, அவள் விழிகளில்.

"இந்த உலகம் அப்படித் தான் அனு‌. தப்பு பண்ணாமலே பொண்ணுங்க மேல பழி சுமத்துவாங்க. பொண்ணு சம்பந்தப்பட்ட குற்றத்த ஒரு ஆம்பள பண்ணினாலும் அவனை குத்தம் கொல்லுறத விட்டுட்டு இவளால தானேன்னு அந்தப் பழியும் பொண்ணு மேலயே தான் திரும்பும். ஆம்பளைங்க தப்பிடுவாங்க. அவங்க தப்பலன்னாலும் இந்த மாதிரி மனுஷங்க அவங்கள தப்பிக்க வெச்சு அப்பாவிங்கள குற்றம் சாட்டுவாங்க" என்றார்.

"ஊருல பேசுறத கூட நான் பெருசா அலட்டிக்கல. அத்த பேசுனது ரொம்ப வலிச்சுது. என்னை நம்பவே மாட்டாங்களாம்மா? நான் சொல்லுற நியாயத்த காதுலயே வாங்கிக்காம, ஒவ்வொரு பதிலையும் வேற கோணத்துல பாத்து அசிங்கமா பேசிட்டாங்க" வலியோடு அவரை நோக்கினாள்.

"நான் கேட்கிறேன் அவங்க கிட்ட. இந்த மாதிரி நியாயமே இல்லாம அவங்க நடந்துக்கலாமா?" ஆற்றாமையோடு வினவினார்.

"அய்யோ வேணாம்மா. நீ அவங்க கிட்ட கேட்டு சண்டை போடனும்னு நான் வரல. என் மனசுல உள்ள பாரத்த இறக்கி வெக்க வந்தேன். இந்த சீரியல்ல எல்லாம் ஒன்னு நடந்தா அத மறச்சு வெச்சுட்டு மாமியார் பத்தி தப்பாவே பேசாம இருப்பாங்க. என்னால அப்படி முடியல.

எல்லாத்தையும் எனக்குள்ள போட்டு புதைச்சு வெச்சுக்க முடியல. தலையே வெடிச்சிடும் போல இருக்கு. அதான் உன் கிட்ட சொல்லலாம்னு வந்தேன். எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு தோணுது. அவரை விட்டுப் பிரிஞ்சு நான் படுற கஷ்டம் பத்தாதுன்னு இந்த மாதிரி வேற அடி அடின்னு அடிக்கிறாங்க. எவ்வளவு தான் நானும் தாங்குறது?" அவள் குரலில் விரக்தி இழையோடியது.

"சில விஷயங்கள் அப்படித் தான் அனும்மா. இப்படியான கஷ்டம் வரும் போது நமக்கு மட்டும் ஏன் இப்படினு தோணும். ஏத்துக்க முடியாம இருக்கும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான பிரச்சினை.

நம்மளை விடவும் பிரச்சினை உள்ளவங்க இருக்காங்கனு நெனச்சு, நாம பல்லக் கடிச்சுட்டு கடந்து போக வேண்டியது தான். கவலப்படாத அனு. இதுல ஏதாவது நலவு இருக்கலாம். அப்படி நெனச்சுக்க" தன்னால் இயன்றளவு மகளுக்கு ஆறுதல் சொன்னாலும், அவரால் இன்னுமே இந்த விடயத்தை கிரகிக்க முடியவில்லை.

"நான் கொஞ்ச நேரம் உங்க மடில சாஞ்சுக்கிறேன்" என்று கூறியவளுக்கு இன்னுமே மனச்சுமை தீரவில்லை.

"சரிடா. இப்போ உங்கப்பா வந்துடுவார். இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவார்"

"ம்மா ம்மா! இதை அப்பா கிட்ட சொல்லாத ப்ளீஸ். இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டுமே" என்றவளுக்கு தந்தையிடம் சொல்வதை எண்ணி தயக்கமாக இருந்தது.

"என்ன அனு சொல்லுற? அப்படில்லாம் முடியாது. நான் உங்கப்பா கிட்ட எதையும் மறைக்கிறது இல்ல. அது உனக்கும் தெரியும்ல?" மங்களத்தை ஒரு வித பதற்றம் சூழ்ந்து கொண்டது.

"எனக்கு தெரியும்மா. ஆனா இது வேண்டாமே. அப்பாவுக்கு தெரியக் கூடாதுன்னு சொல்லல. தெரிஞ்சா அவர் அத்த கிட்ட போய் கேட்டுடுவாரோனு பயம். வீணா உங்களுக்குள்ள மனக்கசப்பு வேண்டாமேனு நெனைக்கிறேன்" தனது கருத்தை முன்வைத்தாள், மங்கை.

"நீ சொல்றதும் சரி. இருந்தாலும் நான் அவர் கிட்ட சமயம் பார்த்து சொல்லுறேன். மறச்சிட்டு இருக்கக் கூடாது. உனக்கும் சேர்த்து தான் சொல்றேன். இந்த விஷயத்த மாப்பிள்ளை கிட்ட சொல்லிடு. நீயா சொல்றது தான் சரி‌.

அது வெளியே யார் மூலமாவது தெரிஞ்சா அவர் என்ன நெனப்பார். ஒரே விஷயம் பல கோணங்கள்ல பாக்கப்பட வாய்ப்பு இருக்கு தெரியுமா? நீ சொன்னா ஒரு மாதிரி இருக்கும்‌. அதுவே இன்னொருத்தர் மூலமா தெரிஞ்சா அவர் மனநிலை வேற மாதிரி இருக்கும். அதனால நீ எல்லாத்தையும் விளக்கி சொல்லிடு" என அறிவுறுத்தினார்.

"நான் ஒன்னும் தப்பு பண்ணலயேம்மா. ஏன் விளக்கி சொல்லனும்?" அவர் சொன்ன விதம் அவளுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

"அப்படி இல்லடா. ஆனாலும் சொல்லுறது நமக்கு நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நாம புருஷன் கிட்ட பகிர்ந்துக்கனும். ஒளிவு மறைவு இல்லாம இருக்கனும். நம்ம பொண்டாட்டி நம்ம கிட்ட எதையும் மறைக்க மாட்டாங்கிற நம்பிக்கைய நாம புருஷனுக்கு கொடுக்கனும்.

அப்படி இருந்தாலே மத்தவங்களால எந்த பிரச்சினையும் வராது. யாராவது நம்மள பத்தி தப்பா சொன்னா கூட, அவ அப்படி இல்ல. ஏதாவது இருந்தா என் கிட்ட சொல்லுவானு அவங்க கிட்ட முகத்துல அறஞ்ச மாதிரி சொல்லிடுவாங்க. நம்மளை எந்த நேரத்திலும் சந்தேகப்பட மாட்டாங்க.

கணவன் மனைவிக்குள்ள இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் தான் புரிதலும், ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம இருக்கிறதும். நமக்குள்ள விட்டுக் கொடுப்புகளோட வாழனும். மத்தவங்க கிட்ட நம்ம துணைய விட்டுக் கொடுக்கவே கூடாது" என்று மங்களம் சொல்ல, அவளுக்கும் கதிரிடம் சொல்லி விடுவோம் என்ற சிந்தனை உதித்தது.

தாயார் சொல்வதும் உண்மை தானே? இன்னொருவர் சொல்லித் தெரிவதை விட, தன் மூலம் இந்த விடயம் அவனுக்குத் தெரிய வருவது சிறந்தது என்று அவள் மனம் ஒப்புக் கொண்டது.

"சரிம்மா. நான் இன்னிக்கே சொல்லுறேன்" என்று தலையசைக்க, "நல்ல பிள்ளை" அவளின் தலையைக் கோதிக் கொடுத்தார்.

"அம்மாவும் பிள்ளையும் என்ன பேசுறீங்க?" என்று கேட்டவாறு வந்த தந்தையைக் கண்டவள், "அப்பா" என்றழைக்க,

"உட்கார் அனு" எழுந்து கொள்ளப் போனவளை கையுயர்த்தித் தடுத்தார்.

"முறுக்கு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடு" என அவர் கொடுக்க, "அகல்யாவுக்கு கொடுங்க. அவளுக்காக தானே கொண்டு வந்தீங்க?" என்று மறுத்தாள், மகள்.

"ரெண்டு பேருக்கும் தான். நீ வந்திருக்கேனு அம்மா மேசேஜ் போட்டிருந்தா" என்று அவர் சொல்ல, "சுடச்சுட நியூஸ் போகுதா?" வாயில் கை வைத்தாள், அவள்.

"பின்ன? நீ என்ன நெனச்சக்கா? நம்ம அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பயங்கர லவ்ஸு. அம்மாவுக்கு மேசேஜ் போட சொல்லிக் கொடுத்திருக்கேன். சோ வாட்சப்ல லவ்வ வளர்க்கிறாங்க" என்றவாறு துள்ளலுடன் வந்தாள், அகல்யா.

"அடடே! சொல்லவே இல்ல" அனுபமா வியந்த பாவனையோடு நிற்க, "இவ சும்மா சொல்லுறா அனு. நீ கண்டுக்காத" மெல்லிய வெட்கம் படர்ந்தது, மங்களத்தின் முகத்தில்.

"முறுக்கு தாங்கப்பா" தனக்காக வாங்கி வந்த பொதியை எடுத்துக் கொண்டு கொறிக்க ஆரம்பித்தாள், அகல்யா.

"முறுக்கு வாசம் வீசவும் மோப்பம் பிடிச்சு வந்திருக்கா" என்று அனு சொல்ல, "அப்படித் தான்" கண்சிமிட்டினாள், தங்கை.

"இந்தாங்கம்மா" என அனு தாயிடம் பையை நீட்ட, "போதும் டா" கொஞ்சத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.

"நீங்களும் எடுங்கப்பா" தந்தைக்கும் கொடுத்தவள் சாப்பிடத் துவங்க, "நானும் தர்றேன்" அகல்யாவும் பெற்றோருக்கு தன்னுடையதில் சிறிதளவைப் பகிர்ந்து வழங்கினாள்.

"வீட்டுல எல்லாரும் சுகமாம்மா?" என்று ராஜசேகர் கேட்க, "ஆமாப்பா இருக்காங்க" என்றவளுக்கு மாமியாரின் நினைவில் முகம் சுருங்கியது.

இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் முகபாவனைகளை சரி செய்து கொண்டாள்.

அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள், அனு. அவளின் சிந்தனைகள், கவலைகள் யாவும் தற்காலிகமாக தூரம் செல்ல, அவர்களோடு இயல்பாக கதை பேசினாள்.

இரவாகி விட்டது. காவ்யாவிடம் இருந்து அழைப்பு வர, "நான் வீட்ல இருக்கேன்" என்று மட்டும் கூறி வைத்து விட்டாள்.

காவ்யாவிடம் சொல்லி தானிருக்கும் இடத்தை அறிவது மாமியாரின் வேலை என்பதை ஐயந்திரிபற யூகித்த அனுபமாவுக்கு உள்ளம் இறுகியது.

"அக்கா! செஸ் விளையாடலாமா?" என்று அகல்யா அழைக்க, "வா" என அவளோடு இணைந்து விளையாடத் துவங்கினாள்.

நேரம் சென்றதே தெரியவில்லை. இரவு உணவு உண்ண மங்களம் அழைக்க, லூட்டிகளுடன் சாப்பிட்டு முடித்தனர். வீட்டிலிருந்து வரும் போது இருந்த அழுத்தம் தற்போது இல்லாது போனது போல் உணர்ந்தாள்.

அனுவின் கண்கள் கடிகார முட்களின் மீது படிந்தன. அகல்யா களுக்கென்று சிரிக்க, "என்னடி?" புருவம் உயர்த்தினாள், தமக்கை.

"ராஜகுமாரன் குதிரையில் வர்றதுக்கான அலார்ம் படுதுல்ல. அதனால அக்கா இப்போ ஓடோடிப் போய் ஃபோனை எடுக்கப் போறா" என்று சொல்ல, "கலாய்க்காத" தங்கையின் தோளில் செல்லமாக அடித்து விட்டு, அலைபேசியை சார்ஜில் இருந்து நீக்கிக் கொண்டு அறையினுள் நுழைந்தாள்.

இன்று கதிரிடம் எப்படியாவது ரஜன் பற்றிச் சொல்லியே தீர வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டாள். அவளிடம் தவறில்லை என்ற போதிலும் தன் மீது இத்தகையதொரு பழி சுமத்தப்பட்டதக் கூற அவளுக்கு தயக்கமாக இருந்தது.

'இனியும் லேட் பண்ணக் கூடாது. கண்டிப்பா சொல்லனும்' என நினைத்துக் கொள்ள, கதிர் அழைத்து விட்டான்.

அழைப்பை ஏற்றவள், "ஹலோ" என்க, "ஹலோ" என்ற குரல் அவள் புருவங்களை முடிச்சிடச் செய்தது.

"என்னங்க?" கேள்வியாகக் கேட்டவளுக்கு அவன் குரலில் ஏதோ மாற்றம் இருப்பது போல் விளங்கிற்று.

வழக்கமாக அம்மு, பொண்டாட்டி, செல்லம் என்று எவ்வளவு உற்சாகமாக அழைப்பான்? இன்றைய குரலில் எதுவும் இல்லையே?!

"உன் கிட்ட ஒன்னு கேக்கனும்"

"கேளுங்க" யோசனையோடு அவள் கூற, அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவள் இதயம் ஒரு முறை நின்று துடித்தது.

தூரம் தொடரும்.......!!

ஷம்லா பஸ்லி
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top