• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 15

பகலுணவு உண்ட பின்னர் கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள், அனுபமா‌. அவளது அருகில் கதையளந்தபடி அமர்ந்திருந்தாள், கதிரின் தங்கை காவ்யா.

"இந்த மூவி நல்லா இருக்கு அண்ணி" என்று காவ்யா சொல்ல, "அதானே சொன்னேன். நீ சொல்லுற புது மூவி எல்லாம் சுத்த வேஸ்டு" என்றாள், அனு.

"ஆமா. இப்போ வர்றது முக்கால்வாசி ஒன்னுமே புரியாது. வெறும் ஆக்ஷன் இருக்குமே தவிர வேற ஒன்னுக்கும் பிரயோசனம் இல்ல. ஆனா பழைய மூவில எவ்ளோ எமோஷன் இருக்கு. இந்த மாதிரி ஃபேமிலி மூவி எல்லாம் வேற லெவல்" என்று காவ்யா சொல்ல,

"ஆமாடா. நானும் எங்கம்மாவும் நல்லா மூவி பார்ப்போம். எல்லாம் பழையது தான். அம்மா அவங்க சின்ன வயசுல டிவில பாத்தத சொன்னா, அத யூடியூப்ல அடிச்சு பாப்போம். அம்மா - புள்ள சீன், ஃபேமிலி சென்டிமன்ட் வரும் போது என் கண்ணுல சட்டுனு கண்ணீர் வந்துரும்.

அத யாரும் காணாம தொடச்சி விட்டுக்குவேன். ஆனா இந்த அகல்யா இருக்காளே. அந்த மாதிரி சீன் வரும் போது என் மூஞ்ச பாத்துட்டே இருப்பா. கண்ணுல கண்ணீர் வந்தத கண்டா நான் செத்தேன். அந்த நாள் முழுக்க அதை சொல்லியே கலாய்ச்சி திரிவா" என்றுரைத்தவளுக்கு வீட்டு நினைவு வந்து ஒட்டிக் கொண்டது.

அங்கு வந்த சீதாவோ "ஏய் காவ்யா! படிக்காம இங்க என்ன பண்ணிட்டிருக்க?" என்று மகளை அதட்ட, "அண்ணி கூட சினிமா பாத்துட்டு இருந்தேன்மா" என்றாள், சிணுங்கலாக.

"சினிமா பாத்து தான் அவளவள் கெட்டுப் போற நெலம வருது. நீயும் அத பாத்துத் தொலக்க வேணாம். பேசாம போய் படிக்கிற வேலய பாரு" என்ற சீதாவின் பார்வை அனுவின் மீது ஒரு மாதிரிப் படிந்தது.

அவளுக்கு என்னவோ போலாகியது. ஓரிரு நாட்களாக அவர் தன்னோடு ஒழுங்காகவே கதைக்காதது போல் அவளுக்குத் தோன்றியது.

ஏதாவது கேட்டாலும் முகத்திலடித்தாற் போன்று பதில் வரும். இல்லையென்றால் முகங்கொடுத்துப் பேச மாட்டார். மாமியாரின் நடத்தையினால் உண்டான சந்தேகத்தை, தற்போதைய நடவடிக்கை உறுதி செய்தது.

"சும்மா இருங்கம்மா. இப்ப தான் படிச்சிட்டு வந்தேன். அதுக்குள்ள திரும்பவும் படிக்க சொல்லுறீங்க" என்றவள் அனுவின் அலைபேசியை எடுத்து கேம் விளையாட ஆரம்பித்தாள்.

சீதா ரிமோட்டை எடுத்து சீரியல் ஒன்றை ஓட விட்டு அமர்ந்து கொள்ள, அனுவும் அதில் தன் கவனத்தைக் குவிக்க பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டாள்.

சற்று நேரம் சென்றிருக்கும். "அண்ணீஈஈ" எனும் அலறலோடு அலைபேசியை நழுவ விட்டாள், காவ்யா.

அனுவும் சீதாவும் பதற்றத்தோடு அவளை நோக்க, "என்ன காவ்யா?" என்று வினவினாள், அனு.

"உங்களுக்கு மேசேஜ் வந்திருக்கு. நாட்டிபிகேஷன்ல பாத்தேன்" திக்கித் திணறிச் சொன்னவளைப் பார்த்து, "யார் டா? உங்க அண்ணனா? அதுக்கு போய் ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற?" சாதாரணமாகக் கேட்டாள், அவள்.

"இல்லண்ணி. ர..ரஜன்" அவள் திக்கித் திணறிச் சொல்ல, நொடியில் அதிர்ந்து போனது, அவளிதயம்.

பின்னர் ஏதோ ஞாபகம் வரப் பெற்றவளாக, "குடு. என்னன்னு பாக்கிறேன்" என்று கையை நீட்ட, அடுத்த கணம் காவ்யாவின் கையில் இருந்த அலைபேசியைப் பிடுங்கி எடுத்தார், சீதா.

அந்த குறுந்தகவலைப் பார்த்தவரின் கண்கள் சுட்டெரிக்கும் தீம்பிளம்பைக் கக்க ஆரம்பித்தன.

"என்னடி இது?" அவளைக் கோபத்தோடு பார்க்க, "அ..அத்த" அதிர்ச்சியோடு அவரை ஏறிட்டாள், மருமகள்.

டி' போட்டு அவர் பேசிய விதம் அவளை நன்கு தாக்கியது. தன்னோடு அன்பாகப் பேசும் மாமியாரின் வாயால் இப்படியொரு வார்த்தையைக் கேட்டதில் உடைந்து போனாள்.

"என் பையன் படாத பாடுபட்டு எங்கயோ போய் கஷ்டப்பட்டு உழைச்சு உன்ன நல்லபடியா பாத்துக்கிட்டா, நீ எவன் எவன் கூடவோ கூத்தடிக்கிறியா?"

அவரின் வார்த்தைகள் அவள் காதில் நாராசமாகப் பாய்ந்தன. நெருப்பிலிட்ட புழுவாக துடி துடித்துப் போனாள், பாவையவள்.

"ப்ளீஸ் அத்த! ஒன்னும் தெரியாம வார்த்தய விடாதீங்க. அதுல என்ன இருக்கு?" என அவள் பார்க்க முற்பட, "அவன் என்ன அனுப்பினான்னு பாக்க அவ்ளோ ஆசயா இருக்கா உனக்கு?" என்று கேட்டவர், "இங்க பாரு" என அவளிடம் காண்பித்தார்.

அதனைப் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான். வாயில் கை வைத்துக் கொண்டவளின் விழிகள் அகல விரிந்தன.

"பாத்தியா? ஐ லவ் யூ சொல்றான். அந்தளவுக்கு போயிடுச்சா?" என்று அவர் கேட்க, "அய்யோ போதும். ரஜன் எப்படி இப்படி அனுப்புனான்னு எனக்கு தெரியாது. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தன்னைப் புரிய வைக்க முயற்சித்தாள், அவள்.

"சம்மந்தம் இல்லாம தான் இந்த மாதிரி மேசேஜ் எல்லாம் வருதோ? குட்டு வெளிப்பட்ட பெறகும் ஏன் இந்த நாடகம்?" அவர் பார்வை வெறுப்பை உமிழ்ந்தது.

நொறுங்கி விட்டாள். தன் மீது சுமத்தப்படும் பழியை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது போனது.

"எனக்கு இதெல்லாம் தெரியாது. ஏன் இப்படி வந்ததுன்னு தெரியல. இப்படி தப்பா பேசாதீங்க" இமையோரம் நீர் துளிர்க்கத் துவங்கிற்று.

"நான் தப்பா பேசுறேனா? அது சரி. அவன் நம்பர் உனக்கு எப்படி? சேவ் பண்ணி வேற வெச்சிருக்க"

"நான் ஒரு தேவைக்காக மேசேஜ் போட்டேன் அத்த" என்று கூற, "அப்படி என்ன தேவை உனக்கு?" அவர் உறுத்து விழித்தார்.

"ரஜன் ஜுவல்லரி ஷாப்ல வேலை செய்றார்ல. கதிருக்காக ஒரு செய்ன் செய்ய சொல்லி அவருக்கு மெசேஜ் போட்டேன்"

"அதுக்கு மெசேஜ் தான் போடணுமா? தேவை இருக்குன்னா கடைக்கு போய் எல்லாம் கேட்க முடியாதா?" என்று கேட்டவரின் சந்தேகப் பார்வை அவளைப் பலமாய் ஊடுருவியது.

அவர் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டது அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது‌‌. தன்னை இந்தளவு சந்தேகிக்கிறாரே என்ற எண்ணம் மனதை உறுத்தியது‌.

"கடைக்கு போக எனக்கு பழக்கம் இல்லை. அதனால தான் கதிர் கிட்ட நம்பர் கேட்டு பேசினேன். அது ஒன்னும் தப்பில்லையே அத்த?" என்று அவள் கேட்க,

"தப்பில்லாம தான் எல்லாம் தப்பு தப்பா நடக்குதோ? அதானே நானும் பார்த்தேன். பொண்ணுங்க இடம் கொடுக்காம ஆம்பளைங்க என்னைக்கும் கிட்ட வர்றதில்ல. ஆம்பளைங்கள குறை சொல்லி குத்தம் இல்ல.

நீங்க வழிய போய் இளிச்சி சிரிச்சி பேசுனதால தானே அந்தப் பையன் ஐ லவ் யூ சொல்லுற அளவுக்கு போனான். இதெல்லாம் என் பையனுக்கு தெரிஞ்சா அவன் எப்படி தாங்குவான்? பொம்பளையா அடக்கமா கொஞ்சம் நடந்துக்க பாரு. வெளியில் தெரிஞ்சா நாறிடும்" என்று சொல்லி விட்டு நகர, அவளுக்கு யாரோ தன் இதயத்தை ஈட்டி முனையால் குத்துவது போல் வலித்தது.

இடிந்து போனாள், அனுபமா. அவரும் ஒரு பெண் தானே? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்? தன் மகளைப் பற்றி இப்படியொரு வதந்தி வந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டாரே.

இவர்கள் ஏன் இப்படியாக, மகளுக்கும் மருமகளுக்கும் பாரபட்சம் காட்டுகிறார்கள்? இருவரும் பெண்கள் தானே? மருமகள் என்றால் இரும்பு பொம்மையா? அவளுக்கும் மனம், மானம், உணர்வுகள் அனைத்தும் இருக்கும் அல்லவா?

வெறுத்துப் போனது அவளுக்கு. தானும் ஒரு பெண் என்ற வகையில் முறையாகப் பார்த்தால், ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் இன்றைய சமூகம் அதற்கு மாற்றமாக நடந்து கொள்கிறது.

பழி சொல்வது, சந்தேகிப்பது, குத்திக் காட்டுவது, கோர்த்து விடுவது போன்ற விடயங்களில் தற்போது பெண்ணுக்கு பெண் தான் எதிரியாக மாறுகிறாள். தனக்கு ஒன்று நடக்கும் போது துடித்துப் போகும் யாவரும், பிறருக்கு ஒன்றெனும் போது அவர்களது இடத்திலிருந்து யோசிக்க மறந்து போகின்றமை வருத்தமான விடயமாகும்.

"என் தப்பு தான். நான் அந்த ரஜனுக்கு மேசேஜ் பண்ணியிருக்கக் கூடாது" என்று தலையில் கை வைத்தவளுக்கு, அதனை மாபெரும் குற்றமாகக் கருதவும் முடியவில்லை.

ஏனெனில் அவள் ரஜனின் தொலைபேசி எண்ணை வாங்கியது கதிரிடம் தான். ஒரு தேவைக்காக என்று மட்டும் சொன்னவள், இந்தப் பிரச்சினைகள் வரும் முன்னர் அவனுக்கு குறுந்தகவல் அனுப்பி வெள்ளியிலான கழுத்துச் சங்கிலியொன்றை ஆர்டர் செய்திருந்தாள்.

அதற்குப் பிறகு அவனுடன் பேசவே இல்லை. இன்று எப்படி அவன் அந்த குறுஞ்செய்தியை அனுப்பினான் என்று புரியவே இல்லை. தன்னைச் சுற்றி மாய வலை ஒன்று சுற்றப்பட்ட உணர்வு.

நடக்கின்ற விடயங்கள் யாவும் தன்னைக் குறி பார்த்து எய்யப்படுவது போல் இருந்தது. அத்தனை நிகழ்வுகளும் அவளைத் தானே காயப்படுத்துகின்றன?

தான் என்னவோ கதிருக்கு துரோகம் செய்தது போல் சொல்வதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொண்டவள் ஆட்டோ பிடித்து தன் வீட்டினை வந்தடைந்தாள்.

"அனு! வா வா" மகளின் எதிர்பாராத வருகையில் மங்களம் குளிர்ந்து போனார்.

"அம்மா" ஓடிச் சென்று தாயை அணைத்துக் கொண்டாள் அவள்.

"தனியா தான் வந்தியா?"

"ஆமாம்மா. உங்கள பாக்கனும் போல இருந்துச்சு. அதான் ஓடி வந்தேன்" முகத்தை சரி செய்து கொண்டாலும், அவள் குரலில் ஒரு தழுதழுப்பு இருக்கவே செய்தது.

"சரிடா உட்கார்" மகளை அழைத்து அமர வைக்க, " நீயும் இரும்மா" அவரது கையைப் பிடித்து அமர்த்தியவள் அவர் மடியில் தலை வைத்துக் கொண்டாள்.

"அனு" அவளது செய்கைகள் அவருக்கு வித்தியாசமாக இருந்தன.

"ப்ளீஸ்மா எதுவும் பேசாத. நான் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கேனே" என்று கெஞ்சுதலோடு கேட்க, அவரும் அமைதியாகி விட்டார்‌.

அவள் மனதினுள் எதையோ வைத்துக் கொண்டு மருகுவது புரிந்தது. இருப்பினும் ஒன்றும் கூறாமல் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தார்.

"புருஷன் வெளிநாட்டுக்கு போயிட்டா பொண்ணுங்க எல்லாம் தப்பான வழியில் போயிடுவாங்கன்னு இந்த உலகத்துல ஒரு நியதி இருக்காமா?"

"இல்லடா! யாரு சொன்னது?" என மறுப்பாக தலையசைத்தவர், "ஏன் இப்படி கேட்ட?" புரியாமல் பார்த்தார்.

"அப்போ என்னை ஏன் அப்படி சொல்லுறாங்க?" உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டு அவள் வினவ,

"என்ன பேசுற நீ? என் பொண்ணு அப்படி இல்ல. யாரு அப்படி சொல்றது?" தாய் மனம் பதைபதைத்தது.

"எல்லாரும் சொல்றாங்கம்மா. என்னை தப்பு தப்பா பேசுறாங்க" என்றவளின் கண்களில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாகப் பீறிட்டுப் பாயத் துவங்க, வெடித்துக் கிளம்பியது, அழுகை.

தூரம் தொடரும்.......!!

ஷம்லா பஸ்லி
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top