New member
- Joined
- May 1, 2025
- Messages
- 22
- Thread Author
- #1


தூரம் 01
ஓவென்று திரண்டு வரும் அலைகள் கரையைத் தீண்டி நனைத்து மீண்டும் திரும்பிச் சென்று வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தன. கடற்கரை மணலில் நின்றிருந்த பாவையின் விழிகள் எதிரில் தெரிந்த காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தன.
பலூன் வியாபாரியை சிறுவர் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்க, மற்றும் சிலரோ மணல் வீடு கட்டி விளையாடிக் களித்தனர். அதைப் பார்த்தவளுக்கு தன் பெற்றோருடன் வந்து விளையாடி மகிழ்ந்த இளம்பருவ நினைவுகள் நெஞ்ச மேடையில் வலம் வந்தன.
படகுக்குப் பின்னால் பதுங்கியிருந்த காதல் ஜோடியும் அவள் கண்களுக்குக் காட்சியளிக்க, அவர்களின் சில்மிஷங்களைக் காண நாணமுற்றவளாய் வேறு புறம் பார்வையைத் திருப்பினாள்.
வயதான பெண்மணிகள் ஊர்க்கதை பேசுவதும், தம் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சித் தீர்ப்பதும், காகங்கள் கரைந்தவாறு கருஞ்சிறகு விரித்துப் பறப்பதும் கூட ஒருவகை ரசனை உணர்வைக் கொடுத்தன.
ஆனால் ஒரேயொரு காட்சி அவள் இதயத்தை உருக்கிப் போட்டது. இளம் பெண்ணொருத்தி தன் கணவனின் கையைப் பிடித்து தோளில் சாய்ந்தவாறு நடந்து வந்தாள். அவர்களது தோற்றமே புதுமண ஜோடி என்பதை உணர்த்தி விட, அவளுள்ளும் ஏக்கம் படர்ந்தது.
"சித்தி! மேல பாருங்க" எனும் மழலை மொழியில் தலையுயர்த்தி வானத்தைப் பார்த்தாள், அனுபமா.
வீசும் காற்றை ஊடறுத்துப் பறக்கும் விமானம் அவள் மனதை உலுக்கியது. என்று அவளின் மனங்கவர்ந்த மணாளன் அதில் ஏறிச் சென்றானோ, அன்று முதல் அவளுக்கு விமானத்தைக் கண்டால் ஒரு வித வெறுமை உணர்வு தான்.
இளஞ்சிட்டாகப் பறந்த காலத்தில் விமானத்தைக் கண்டால் பெரும் புதையலைக் கண்டது போல் தான் துள்ளிக் குதிப்பாள். அது பார்வையை விட்டு மறையும் வரை விழி மூடாமல் பார்த்து கை கொட்டி ரசிப்பாள்.
ஆனால் இப்போது யாவும் தலைகீழாக மாறிப் போனது. அவன் வெளிநாடு சென்றது முதல் விமானம் என்றாலே வேம்பு போல் கசக்கும்.
கோயமுத்தூரை வசிப்பிடமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர், ராஜசேகர். அவர் மனைவி மங்களம். அவர்களுக்கு அனுபமா, அகல்யா என்று இரு மகள்கள்.
அனுபமா பாடசாலைக் கல்வியை முடித்ததோடு அவளைப் படிக்க வைக்கவில்லை. நன்றாக படிப்பாள் என்றாலும் தந்தையை மீறி எதுவும் செய்ய முடியாமல் அமைதியாகவிருந்தாள். படிக்கா விட்டால் ஒரு பெண்ணைப் பற்றி அடுத்த கட்டமாக சமுதாயம் எதைச் சிந்திக்கும்?
திருமணம்!
ஆம். அது தான் அனுபமாவின் வாழ்விலும் நடந்தது. வரன்கள் அவளைத் தேடி வந்தன. ஓரிரண்டு சம்மந்தங்கள் தட்டிக் கழிந்த பின்னர் கச்சிதமாக அமைந்தது, ஒரு வரன்.
அவன் கதிர். அவனும் மத்தியதர வர்க்கத்தினன். மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்பவன். அவனது தந்தை சிவராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர். தாய் சீதா. அவனுக்கு படிக்கும் வயதில் ஒரு தம்பியும் தங்கையும் தான். நல்ல குடும்பம், பையன் குணவாளன் என்று ஊரெங்கும் பேசியதால் ராஜசேகருக்கு அதனை விடுவதில் விருப்பம் இல்லை.
அனுவிடம் விருப்பம் கேட்க அவளும் சம்மதித்தாள். பதினெட்டு வயது மங்கையவளுக்கு அதனை மறுக்க எந்தக் காரணமும் இருக்கவில்லை. திருமணம் என்ற விடயம் அவளுக்குள் பூப்பூக்க வைத்தது.
சினிமாக்களில் பார்ப்பது போல் பெண் பார்க்கும் படலம், மாப்பிள்ளையோடு தனியாகப் பேச வைப்பது என்று ஒவ்வொன்றும் நடக்க, ஒருவித உற்சாகத்துடனே உழன்றாள்.
கதிர் பார்ப்பதற்கு சினிமா ஹீரோ போல் இருந்தான். அவனது கட்டுமஸ்தான தேகமும், வடிவான முகமும் அவளை அடியோடு சாய்த்தன.
பிரச்சினைகள் அற்றதொரு அழகான வாழ்வை அவனோடு வாழ ஆரம்பித்தாள். அவளின் மணவாழ்வு மிக சந்தோஷமாகவே சென்றது, அந்தப் பிரச்சினை ஆரம்பிக்க முன்னால்.
கதிரின் தந்தை சில வாரங்களில் தவறி விட, அவர் கதிரின் திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்காக பெருந்தொகைப் பணத்தை கடன் வாங்கியிருப்பது அவரது நண்பர் மூலம் தெரிய வர, மொத்தக் குடும்பமும் உடைந்து போனது.
குடும்பப் பொறுப்போடு கடன் சுமையும் கதிரின் தலையில் விழ, திணறிப் போனான், அவன்.
தான் பெற்றுக் கொள்ளும் நாள் கூலியை வைத்து அன்றைய நாளைய செலவுகளை ஈடு செய்வதே பெரிய விடயம். இதில் கடனை செலுத்துவது சாத்தியமே இல்லை.
அடுத்து என்ன செய்வது? கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? தீவிர சிந்தனைக்கு ஆளானான், ஆடவன். நண்பன் ஒருவனுடன் கதைக்கும் போது அவன் வெளிநாடு செல்லவிருப்பது தெரிய வந்தது. அந்தத் தொழிலுக்கு இன்னொரு பணியாளும் தேவைப்படுவதும் தெரிந்தது.
கண்களை மூடித் திறந்தால் வெளிநாடு செல்ல முடியுமா என்ன? அங்குமிங்கும் அலைய வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். பணம் பணம் பணம். இந்தப் பணம் இல்லை என்றால் பிணமாகித் தான் போவோமோ என்று எண்ணி வெறுத்துப் போனான்.
இத்தனையையும் யோசித்த பிறகு அவன் மனதில் அனுபமா வந்து நின்றாள். அவனது மனைவி. அவனை நம்பி வந்தவள். அவளை விட்டு வெளிநாடு செல்வதா? ஆனால் அதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
வீடு சென்றவன் மனைவியை அழைத்து ஏதோ முக்கிய விடயம் சொல்ல வேண்டும் என்று கூறினான்.
"நான் வெளிநாட்டு வேலைக்கு போகப் போறேன் அம்மு" அவன் சொன்னதைக் கேட்டு, "சும்மா தானே சொல்றீங்க. எனக்கு வெளிநாடு போறது பிடிக்காதுன்னு தெரிஞ்சு விளையாடுறீங்களா?" அவன் தோளில் சலுகையாக சாய்ந்தபடி சிரித்தாள்.
"இல்லம்மு. சத்தியமா சொல்றேன். இந்த விஷயத்துல நான் விளையாடுவேனா?" மெல்லிய குரலில் அவன் வினவ, "அ..அப்போ நெஜமாவா சொன்னீங்க?" சடாரென எழுந்து நின்றாள், பெண்.
அவன் குரலில் இருந்த உணர்வு அவளுக்கு நிதர்சனத்தை உரைத்தது. அப்படியானால் உண்மையாகவே தன்னை விட்டுத் தொலைதூரம் செல்லப் போகின்றானா எனும் வினாவோடு அவனை ஏறிட்டாள்.
"ஏன் இந்த முடிவு?" மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டாள்.
"நம்ம வீட்டு நெலம உனக்கு புரியுது தானே? உன்னயும் குடும்பத்தையும் நான் சம்பாதிக்கிற காச வெச்சு பாத்துப்பேன். ஆனா இப்ப என் தலையில் கடன் சுமை விழுந்திருக்கு.
மெக்கானிக்கல் ஷாப்ல கெடக்கிற காசு வெச்சு கடனை அடைக்க முடியுமா? அப்பா கடனை ஒரு பையனா நான் தானே அடைக்கனும்? அதுவும் மூத்த பையன் நான். எல்லாத்துக்கும் நான் பொறுப்பேத்துக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்" அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
"எனக்கு எல்லாம் புரியுது. ஆனா என்னால நீங்க போறத ஏத்துக்க முடியாது. இங்க இருந்து வேற வேலை பாக்க முடியாதா?" சோகம் அப்பிய விழிகளை அவன் மீது நிலைநாட்டினாள்.
அவளின் பார்வையும், வார்த்தைகளில் தெரிந்த வலியும் அவனை என்னவோ செய்தன. அவளைப் பிரிய அவனுக்கு மட்டும் ஆசையா என்ன? ஆனால் சூழ்நிலை இப்படி இருக்க, அவனும் என்ன தான் செய்வான்?
"வேற என்ன வேல பாக்க முடியும் என்னால? இருக்கிற வேலய விட்டா வேற வேல தேடுறதும் கஷ்டம். படிக்காததோட இழப்பு இப்ப புரியுது. இனி என்ன பண்ண? இந்த சான்ஸ மிஸ் பண்ண தோணல. போய் கடனை கட்டிட்டு வந்துடுவேன். என் நெலமய புரிஞ்சுக்க" கெஞ்சலுடன் கேட்டான்.
"என் நெலம உங்களுக்கு புரியாதா? உங்கள விட்டு எப்படி இருப்பேன்? என்னால அதெல்லாம் யோசிச்சு கூட பாக்க முடியல. என்னால முடியவே முடியாது" அவளுக்கு மனம் ஒப்பவில்லை.
"ப்ளீஸ்டா. என் செல்ல அம்முல்ல? என்னோட பாப்பா தானே?" அவளின் கையைப் பிடித்துக் கொள்ள, "நீங்க இல்லன்னா நான் அழுவேன்" அவனை அணைத்துக் கொண்டவளுக்கு அருவியாய் ஊற்றெடுத்தது, கண்ணீர்.
"இதோ பாரு அம்மு. நீ அழக் கூடாது. உன்ன அழாம பாத்துக்க தான் உன் அப்பாம்மா எனக்கு கட்டிக் கொடுத்திருக்காங்க. என்னால நீ அழலாமா?" அவளின் கன்னம் தாங்கி கண்ணீரைத் துடைத்து விட்டான்.
"அப்போ போகாதீங்க. என்னால நீங்க என் பக்கத்துல இல்லாத வாழ்க்கய கற்பனை பண்ணக் கூட முடியாது. எனக்கு இப்படியே இருக்கனும்" அவனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
"இங்க வா" அவளது தலையை வருடி ஆறுதல் கொடுத்தவனால் போக மாட்டேன் என்ற உறுதியை அளிக்க முடியவில்லை.
இரண்டு நாட்கள் நகர்ந்து செல்ல, மீண்டும் அவள் முன் வந்து நின்றான்.
"போகனுமா? கட்டாயம் போயாகனுமா?" அவன் முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளை வைத்தே விடயத்தை ஊகித்து விட்டாள், வஞ்சி.
"ம்ம்" தரை நோக்கித் தாழ்ந்தது, அவன் பார்வை.
"காசு? சும்மா போக முடியாது இல்லையா?" என்று அவள் கேட்க, "என் ப்ரெண்டு கிட்ட கடன் கேட்டிருக்கேன். அத வெச்சு போகலாம்" வெடுக்கென்று வந்தது, பதில்.
"அப்படின்னா முடிவு பண்ணிட்டு தான் என் கிட்ட வந்து கேட்கிறீங்க" அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் விடையில்லை.
"என் சூழ்நிலை அப்படி. வேற எதுவும் செய்ய முடியல அம்மு" வருத்தத்தோடு அவன் சொல்ல, "எதுவும் சொல்ல வேண்டாம். போங்க. போயிட்டு வாங்க" என்றாள்.
அந்த முடிவை அவனால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கும் போது மென்மனம் படைத்த அவளால் மட்டும் முடியுமா என்ன? ஊமையாகிப் போனது, அவனுள்ளம்.
நாட்கள் இறக்கை கட்டிப் பறக்க, கதிரும் நண்பனிடம் பணத்தைப் பெற்று வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டான்.
அனுபமா அவனோடு வழக்கம் போல் இருக்க முயன்றாலும் அவளால் முடியவில்லை. அடிக்கடி சிந்தனைக்குச் செல்வாள். கவலையாக இருப்பாள். அதை அவனால் பார்க்க முடியவில்லை.
அவளது வீட்டினருக்கும் விடயத்தைத் தெரிவித்தனர். மாப்பிள்ளையின் முடிவுக்கு அவர்கள் மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை.
"வெளிநாடு போற ஹஸ்பண்ட் வேணாம்னு சொன்ன. போறதா சொன்னாலும் அனுப்ப மாட்டேன்னு சொல்லுவ. இப்ப என்னாச்சு?" என்று அவளது தங்கை அகல்யா கேட்க,
"நாம நெனக்கிற மாதிரியா எல்லாம் அமையுது? சில நேரம் நாம ஒன்னு நெனப்போம். ஆனா கடவுள் விருப்பம் வேற ஒன்னா இருக்கும். மனசார ஒன்ன விரும்பினா மட்டும் அது நடந்துடாது டி. சூழ்நிலைகள் நம்ம விருப்பங்களை மாத்திக்கவும் வைக்கும். நடக்கிறத ஏத்துக்க தானே வேணும்?" உதட்டுக்கும் வலிக்காத புன்னகையொன்றை வழங்கினாள், தமக்கை.
நாட்களும் அதோ இதோவென்று செல்ல, கதிர் கட்டார் செல்லும் நாளும் வந்து சேர்ந்தது.
தூரம் தொடரும்......!!
ஷம்லா பஸ்லி
2025-05-22