Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 61
- Thread Author
- #1
விவாதக் காதல் – 27
சித்ரமகிழினி தன் பாதி முகத்தை மறைத்து இருந்த போர்வையை விலக்கியவள், “என்ன அக்கா? என்ன சொல்றிங்க நீங்க? கண்ணு, காதுன்னு பேசுறீங்க. எனக்கு ஒன்னும் புரியல” என்று குழப்பதோடு கேக்க.
"இல்ல சித்ரா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, உன்னோட கண்ணை பார்த்து தான் என் தம்பி..." என்று சசி உண்மையை சொல்ல வருவதற்குள்,
“அக்கா” என்று சசியை அழைத்த கொடி, "வேண்டாம்" என்றபடி தலை அசைத்தான்.
கொடியின் செயலை கவனிக்காத மகிழினி, “என்னாச்சு அக்கா? எதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.
“அது, அது ஒன்னும் இல்ல சித்ரா, நீ படுத்துக்கோ. நான் போய் தண்ணி கொண்டு வரேன்” என்று சொன்னவள். அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.
“என்னாச்சு இவங்களுக்கு? ஏங்க, சசி அக்கா என்ன சொல்ல வராங்க?” என்று அவனிடம் கேட்டாள்.
இதுவரை, கோவம், கண்ணீர், வீம்பு, நட்பு என்று பல பரிமாணங்கள் கலந்த விழிகளுக்கு சொந்தக்காரியாக தெரிந்தவளின் விழிகள், இவனுக்கு இன்று, இந்த நொடி, தன் மனதில் ஆயிரம் மாற்றங்களை நிகழச் செய்ததை உணரத் தொடங்கினான் கொடிவீரன்.
“ஹலோ சார். உங்கள தான் கேக்குறேன். என்னாச்சு, ஏன் அக்கா ஏதோ சொல்ல வந்து. எதையும் சொல்லாமலேயே போறாங்க. எதாவது பிரச்சனையா?” என்று மீண்டும் மகிழினி கேக்க.
அவளை உள் வாங்கிய இவன் கண்களுக்கு, செவிகள் கேக்கும் திறனையும், இதழ்கள் பேசும் வார்த்தையும் மறந்து இருந்த நிலையில்,
“சரி. என்னமோ போங்க, அக்காவும் தம்பியும் என்னமோ என்கிட்ட இருந்து மறைக்கிறிங்க. ஹ்ம் கத்திரிக்காய் முத்துனா சாம்பார்ல வராமல் போகுமா என்ன?” என்று மகிழினி சொல்லிக்கொண்டே தன் காது மெஷினை கழட்டி மேசை மேல் வைத்து, “குட் நைட் சார்” என்றவள், கண்கள் மூடி கட்டிலின் ஓரமாக படுத்துக்கொண்டாள்.
சில நொடிகள் தன்னை இவள் மொத்தமாக அவள் கண்களால் சிறை பிடித்து விட்டாள் என்ற உண்மையை உணர்ந்த கொடிவீரன், மனதளவில் மகிழிச்சி அடைய, அறையின் விளக்கை அணைத்த பின், கதவை சத்தமில்லாமல் மூடிய நிலையில், சோபாவில் வந்து அமர்ந்தான்,
“டேய், என்னடா நீ. ஏன் சொல்ல வேணான்னு சொன்ன? சித்ரா தான் நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த பொண்ணுன்னு அவகிட்ட சொல்லிருந்தா...”
“காரி என் மூஞ்சுல துப்பி இனி என்கூட சுத்தமா பேசாம இருந்துடுவாங்க.”
“என்னடா சொல்ற,?”
“ஆமா அக்கா. அவங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது.”
“டேய், இதுல பிடிக்க என்னடா இருக்கு.”
“அக்கா, அவங்க என்கூட சகஜமா பேச ஆரம்பித்ததே. எனக்கு ஒரு மஞ்சள் நிற ரோஜாவை அன்பளிப்பா தந்த பின்னாடி தான். அதாவது, நமக்குள்ள நட்பு மட்டுமே இருக்கனும்ன்னு அவங்க எனக்கும் தெரியப்படுத்தி, அவங்களுக்கும் அதை தெளியப்படுத்திக்குறாங்க. அப்படி இருக்கும் போது, எனக்கு அவங்க மேல அதை தாண்டி ஒரு ஈர்ப்பு இருக்குன்னு தெரிந்தா, அது நல்லா இருக்காது அக்கா.”
“நீ சொல்றது எனக்கு புரியலடா. இப்போ என்ன நீ அவளை கா...”
“ஐயோ அக்கா. சத்தியமா இது வரை அப்படியெல்லாம் ஏதும் இல்ல.”
“இதுவரைனா? அப்போ இனிமே,??” கேள்வியாய் நிறுத்தினாள் சசி.
“இனிமே அப்படி இருக்க சாத்தியமான்னு தெரியல.” என்றான் யோசனையாக.
“நான் வேணா, நம்ம அம்மாகிட்ட சொல்லி, சித்ராவை அவங்க பாட்டிகிட்ட உனக்கு கல்யாணம் பண்ண சம்மதம் கேக்க சொல்லவா?”
“அம்மா இதுக்கெல்லாம் ஒத்துப்பாங்களா அக்கா?” என்று சிறு எதிர்பார்ப்புடன் கேட்டான் கொடிவீரன்.
“என்ன, என்ன இங்க என் பெயர் அடிபடுது?” என்றபடி ஜெயா இவர்களை நோக்கி வர,
“ஐயோ அம்மா” என்று அலறினான்.
என்னடா, அக்காவும் தம்பியும் ராக்கொள்ளைகாரங்க போல இங்க உக்காந்து பிளான் போடுறீங்க. என்ன மேட்டர்?”
“ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. அக்கா நீ போய் தூங்கு. அம்மா நீங்களும் போங்க.” என்று வேகமாக எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
“டேய் நில்லு” என்று தாய் அதட்டியதும் அவன் நிற்க, “உக்காரு இப்படி.” என்று தன்னருகே அமர வைத்து, “சசி என்னாச்சு? என்ன பேசிகிட்டு இருந்திங்க. இவன் ஏன் நான் சம்மதிப்பேனான்னு கேட்டான்? என்ன வெளிநாட்டுக்கு எங்காவது போக போறானா என்ன?” என்று மகளிடம் கேட்டார்.
“அதெல்லாம் இல்லம்மா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம ஊருக்கு மெடிக்கல் கேம்புக்கு வந்த நர்ஸ் பொண்ணோட கண்ணை பார்த்து உன் புள்ள பீல் ஆகிட்டான்.” என்று அவனை மாட்டிவிட்டாள்
“நர்ஸ்கு பொண்ணா. அப்போ அந்த பொண்ணு குழந்தையா?” என்று அதிர்ந்து கேட்டார் ஜெயா.
“எம்மா தாயே. நர்ஸ்கு பொண்ணு இல்ல. நர்ஸ் அவ்வளவு தான்.”
“ம்... சரி. இப்போ என்ன நான் போய் அந்த பொண்ணு வீட்ல இவனுக்காக பொண்ணு கேட்கணுமா. நான் ரெடி தான். பொண்ணு எந்த ஊரு? என்ன பெயரு? அவங்க இப்போ எங்க இருக்காங்க?”
“பொண்ணு சென்னை. பெயர் சித்ரமகிழினி. இப்போ அவங்க இந்த வீட்டுல தான் இருக்காங்க.” என்று புன்னகையுடன் சொன்னாள்.
“ஏய் என்னடி சொல்ற.!?”
“ஆமாம்மா. உன் பையன், நம்ம சித்ரா கண்ணை பார்த்துதான் பித்து பிடிச்ச மாதிரி இருந்துருக்கான்.” என்று தம்பியைப் பார்த்தாள்.
“அக்கா, அதெல்லாம் ஒன்னுமில்ல. அம்மா, அக்கா ரொம்ப பில்டப் பண்ணுது.” என்றான் வேகமாக.
“டேய் கொடிவீரா! உண்மையாவாடா? உனக்கு சித்ராவை பிடிச்சி இருக்கா?”என்றவர் குரலில் அவ்வளவு ஆர்வம்.
“அச்சோ அம்மா. இதுவரை அப்படி ஒரு எண்ணம் எல்லாம் இல்ல. ஆனா...”
“என்ன ஆனா?” என்றாள் சசி.
“இல்லக்கா. நம்ம எதாவது நம்ம பிரியத்தை சொல்ல போய், அவங்க நம்மள தப்பா நினைச்சுட்டாங்கனா என்ன பண்ணுறது?”
இதுல தப்பா நினைக்க என்ன இருக்குடா தம்பி.?”
“அதானே. நம்ம நம்மளோட விருப்பத்தை சொல்லுறோம். சரினா சரின்னு சொல்லட்டும். இல்லைனா இல்லைனு சொல்லட்டும். இதில் என்ன?” என்றார் ஜெயா.
“அம்மா அப்போ உங்களுக்கு...” என்று முடிக்காது நிறுத்தினான் கொடிவீரன்.
“டேய், எனக்கும் சித்ராவை ரொம்ப பிடிக்கும்டா. அவளை நான் இதுநாள் வர என்னோட இன்னோரு மகளா தான் நினைச்சேன். இனி அவ என் மருமகளா மாற, என்ன பண்ணணுமோ அதை பண்ணுறேன். நீ கவலைப்படாத. போ போய் தூங்கு” என்றார்.
“அம்மா, நீ செம்ம ஷார்ப்தான் போ. அப்புறம் என்னடா தம்பி. உன் ரூட் கிளியர் தான். இனி பக்குவமா அம்மாவே சித்ராகிட்ட பேசி விஷயத்தை ஸ்மூத்தா முடிச்சு வைப்பாங்க. போ போய் தூங்கு” என்றாள் சசி.
“ம்... சரிக்கா. அம்மா நீங்களும் போய் நேரத்தோடு படுங்க” என்று சொன்னவன் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியோடு, தன் அறைக்குள் நுழைந்து, படுக்கையில் சரிந்தான்.
மறுநாள் காலை கொடிவீரன் உறங்கி கொண்டு இருந்த அறையின் ஜன்னல் வழியே, குயில்கள் கூவும் சத்தம் கேட்டு, இரண்டு கரங்களையும் சூடு பறக்க தேய்த்து, தன் முகத்தை வருடியப்படி கண்களைத் திறந்தவன் கண் எதிரில், எல்லாம் வல்ல ஈசனின் காட்சி தோன்ற, அவன் மனதில் மட்டும் அப்பட்டமாக மகிழினியின் நினைவுகள் நிறைந்து இருந்ததை உணரந்தான்.
அவள் நினைவை மனதில் சுமந்தபடியே குளியல் அறை சென்றவன், சில நிமிடங்கள் கடந்த நிலையில், நீல நிற சட்டையும், அதற்கு பொருத்தமாக நீல நிற சரிகை வேஷ்டியும் உடுத்தி கொண்டு, கண்ணாடி முன் நின்று தன் சிகையை சரி செய்தவன் கண்களுக்கு, முகம் காட்டும் கண்ணாடியும் தன்னவளின் வதனத்தை ப்ரதிபலிக்க, தனக்குள் சிரித்து கொண்டான். மேசை மேல் இருந்த சின்ன ரப்பர் பேன்ட் எடுத்து தன் முடியை ஒருசேர சேர்த்து, அதை இறுக்கமாக கட்டிக்கொண்டு, தன் அறையில் இருந்து வெளியே வந்தவனின் கண்கள், முதலில் தேடியது என்னவோ மகிழினியை தான்.
“டேய் தம்பி. என்னடா, நாளைக்கு எனக்கு கல்யாணமா? இல்ல உனக்கு கல்யாணமா? மாப்பிள்ள கணக்குல டாப்பா கிளம்பி வந்துருக்க? என்ன சமாச்சாரம்?” என்று சசி கிண்டல் செய்ய.
‘அவளை சம்சாரம் ஆக்கத்தான்’ என்று மனதில் நினைத்த நொடி இன்பமாய் அதிர்ந்து, அந்த எண்ணத்தை எண்ணி மானசீகமாக தலையில் கொட்டி, பின், “அக்கா, கொஞ்சம் சும்மா இருக்கியா? ஆமா எங்க வீட்டுல யாரையும் காணோம்? நீ ரெடி ஆகலையா? மணி ஆச்சு பாரு” என்றவன், சசியின் அறையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான்.