- Joined
- Aug 31, 2024
- Messages
- 956
- Thread Author
- #1
26
“என்ன காதலா? அதுவும் உங்க சின்னப் பையரா!” அதிர்ந்து கேட்டாள் அனுரதி.
“எஸ். ரொம்பவே சின்சியர்.”
‘அதெப்படி அவன் காதலிக்கலாம்?’ மனம் முரண்டினாலும், “யா...யாரை?” என கேட்டாள்.
மருமகள் கேள்வியில் தடுமாற்றத்தை உணர்ந்தவர், உள்ளூர புன்னகைத்து, “அதை அவன்தான் சொல்லணும். அதுதான் சரியும் கூட. அதேநேரம் நீயும் ஒருத்தரை ரொம்பத் தீவிரமா காதலிக்குற” என்றார்.
“யாரு நானு?” என்றாள் கிண்டலாக.
“ஆமா. நீதான்” என்றார் அழுத்தமாக.
“வாய்ப்பே இல்லை” என்று அவளும் அடித்துப் பேசினாள்.
“நீ உணரலைன்னு சொல்லு. வாய்ப்பில்லைன்னு சொல்லாத அனுமா.”
“ப்ச்... அத்தை காதல்னா இதுதான்னு, ஒருத்தன் வலிக்க வலிக்க சொல்லிக் கொடுத்துட்டுப் போனான். அப்புறம் எப்படி?”
“என்னன்னு?” கொஞ்சம் தவிப்புடனே கேட்டார்.
“காதலிச்சா பொண்ணுங்களை ஈஸியா மடக்கிரலாமாம் அத்தை. அந்தக் காதல் ஆட்டோமேடிக்கா, பொண்ணுங்களைக் கட்டிலுக்குக் கொண்டு வந்திரும்னு அவன் ஃப்ரண்ட் சொன்னானாம். நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் இடையில் நானும் அவனைக் காதலிச்சேனாம். அந்தக் காதல்தான் என்னைக் கட்டில்வரை இழுத்துட்டுப் போச்சாம். அப்ப நானும் உன்னைக் காதலிக்குறேனான்னு கேட்டான். அவன் கத்துக்கொடுத்த அந்தக் காதல், இப்பவரை என்னை வாழவிடலை. விடுமான்னும் தெரியலை அத்தை” என்று கண்ணீர் சிந்தினாள்.
“அனுமா” என தவித்தவருக்கு, கர்ப்பிணிப் பெண் அழுகிறாளே என்றும் இருந்தது. அழுகை கூட சில சமயம் மன அழுத்த நிவாரணி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவராகிற்றே!
“எப்படி அத்தை, அந்த வார்த்தையை மறக்க முடியும்? அது காதல் இல்லை, காமமும் இல்லை, வெறின்னு நீங்க சொல்றது என் புத்திக்குப் புரியுது. ஆனா, ஏத்துக்க முடியலை அத்தை. உங்க பையனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. வர்றேன்னு சொன்ன நேரத்தைத் தாண்டினாலே பைத்தியக்காரத்தனமா தேடுறேன். ரசிக்குறேன். வெட்கத்தை விட்டுச் சொல்லணும்னா, அறிவழகன்கிட்ட மயங்குறேன்தான். அவங்க செயல்ல என்னை மீறி சில நேரம் கட்டிப் பிடிச்சிக்கணும்னு தோணுது. எல்லாம் தோணுறதோட சரி. வெளிப்படையா சொல்ல முடியலை. அவங்களுக்குச் சின்னதா அடிபட்டால் கூட எனக்கே மாதிரி துடிச்சிப்போறேன். சொல்ல முடியாத ஓர் உணர்வு உள்ளுக்குள்ள பேயாட்டம் போடுது.”
“நான் என்ன செய்யட்டும் அத்தை? கல்யாணத்துக்கு முன்ன கதையில், சினிமாவில் வர்ற மாதிரி, காதல்ன்ற வார்த்தையில் ஒரு மயக்கம், எதிர்பார்ப்பு இருந்தது. கல்யாணத்துக்கு முன்ன காதலிக்க தைரியம் இல்லை. அப்பா இல்லாத பிள்ளை தப்பாப் போயிருச்சின்னு, யாரும் சொல்லிரக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். கட்டிக்கிட்டவனைக் காதலிக்கணும்னு கொள்ளை ஆசை. ஆனா, அவன் கொடுத்த விளக்கம், அதைத் தொடர்ந்து பண்ணிய கொடுமை...” அழுது தேம்பியபடி மாமியாரின் தோள் சாய்ந்து கொண்டாள்.
“வார்த்தையை வச்சி வாழ்க்கையை முடிவு பண்ணக்கூடாது அனுமா. இவ்வளவு நேரம் சொன்ன பாரு அதுதான் காதல்” என்றார்.
சட்டென மாமியாரின் தோளிலிருந்து எழுந்து அவரை முறைக்க, “அனுமா! அன்புதான் காதலாம். இப்ப உள்ள கலாச்சாரப்படி, அப்பா, அம்மா தொடங்கி பிடித்த எல்லார்கிட்டேயும் ஐ லவ் யூன்னு சொல்றாங்க. ஐ லவ் யூ மாம்னு சொல்லுற நிறைய பிள்ளைகளைப் பார்த்திருக்கேன்.”
“ம்... நானும்தான்” என்றாள் திருமணத்திற்கு முன் தாயைக் கட்டிக்கொண்டு சொல்வதை நினைத்து.
“நீ வேணும்னா காதல்ன்ற வார்த்தைக்குப் பதிலா, பிரியம், நேசம்னு சொல்லிப்பாரேன். இல்லைன்னா விரும்புகிறேன் சொல்லு. தமிழ்ல வார்த்தைகளுக்கா பஞ்சம்.” என்றார் அபிராமி.
“நீங்க ஏன் அத்தை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை? ஊருக்குதான் உபதேசமா?” அவரை மடக்கிவிடும் நோக்கில் அவள் கேட்க,
“என்ன பண்றது அனுமா? எனக்கு நீ சொன்ன கண்றாவிக் காதல் யார்கிட்டேயும் வரலையே” என்றார்.
“எனக்குனாப்ல வந்தா முடிச்சி வச்சீங்க? பேசிப் பேசியே ஒத்துக்க வைக்கலை.” என்றாள் சிணுங்கலாக.
“எனக்கு உன்மேல காதல் அனுமா. அதான் உன்னை விடக்கூடாதுன்னு என் பையனுக்கே முடிச்சி போட்டுட்டேன்.”
“நல்லவேளை தப்பிச்சேன்” என்ற மருமகளுக்குக் கொட்டு வைத்து, “என் பையன் ஒரு பொண்ணை தீவிரமா காதலிக்குறான்னு சொல்றேன். ரொம்ப கூலாயிருக்க?” என்று மகனை திரும்பவும் மாட்டிவிட,
“நல்லா கேட்டுப் பாருங்க அத்தை, அது பொண்ணு இல்லை, பொண்டாட்டியா இருக்கும். உங்க பையனுக்குப் பில்டப் கொடுக்கும்போது ஜாக்கிரதையா கொடுங்க. ஏன்னா, ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ. நல்ல பையனை வில்லனாக்கப் பார்க்காதீங்க” என்றாள் வயிற்றைத் தடவிக்கொடுத்தபடி.
“ம்க்கும் வில்லனாக்கிட்டாலும். சரி கிளம்பவா? இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும்” என்று அபிராமி சொன்னபொழுது, அனுரதியின் வயிற்றில் மெல்லியதாய் வலி வந்தது. வந்த சில நொடிகளில் போயிருக்க, “சாப்பிட்டுப் போகலாம் அத்தை” என்றாள் வலியை அவரிடம் சொல்லாது.
“மணி ஏழுதான் ஆகுது. அதான் காஃபி குடிச்சேன்ல போதும். இன்னும் உங்கம்மாவைத் தொந்தரவு பண்ண வேண்டாம்.”
“தொந்தரவா?” என்று முறைக்க,
“டங்க் ஸ்லிப் அனுமா. நீ உடம்பைப் பார்த்துக்க. உங்கம்மா நமக்கு தனிமையைக் கொடுத்துட்டு, அவங்க தனியா இருக்காங்க. ரெஸ்ட் எடுக்கட்டும் விடு” என்று அவர் செல்ல, வழியனுப்பி உள்ளே தாயிடம் சென்றாள்.
அடுத்த அரைமணி நேரத்திற்கெல்லாம் ஆரம்பித்த வலி, மெல்ல மெல்ல அதிகரிக்க, அதேநேரம் அரவிந்த் வர, உடனடி அழைப்பு அறிவழகனுக்குச் சென்றது.
அடுத்த பத்து நிமிடத்திற்குள் காருடன் வந்தவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். வரும்பொழுதே மருத்துவர்.வர்ஷாவிற்கும் அழைத்துச் சொல்லியிருக்க, இவர்கள் வந்த சில நிமிடங்களில், அவரும் வந்து பிரசவத்திற்கு முன்னான சிகிச்சை அளித்தார்.
இரவு பத்து மணிக்கெல்லாம் பனிக்குடம் உடைந்திருக்க, இருந்தும் கர்ப்பவாய் திறக்கவில்லை என்று காத்திருப்பில் வைத்திருந்தார் வர்ஷா. நேரம் ஆக ஆக ஆவணி மாத மழை வெளுத்து வாங்கியது. சாரதா, அபிராமிக்கு அழைத்துச் சொல்ல, அவரோ மதியழகன், ஷண்மதியை அழைத்து வராமல் ஆனந்தனுடன் வந்தார்.
மழையில் நனைந்து வந்ததால் அறிவழகன் கடிந்துகொள்ள, “என் மருமகள்தான்டா முக்கியம்” என்றுவிட்டார் அபிராமி.
அறைக்குள் வலியை அடக்கி நடப்பதும், உட்காருவதுமாக இருந்த மனைவியைக் கண்ட அறிவழகன் தவிப்புடன் நின்றிருக்க, ஏனோ அவளை அணைத்து அனைத்துமாகத் தானிருப்பதாகச் சொல்லி ஆறுதலளிக்க அவா எழுந்தது. இருந்தும் நெருங்க யோசனை.
அவர்களைக் கண்ட வர்ஷாவோ, அவனுக்கு மட்டும் கேட்குமாறு, “கடைசிவரை பொண்டாட்டியை தூர நின்னே பாருங்க அறிவழகன். அவளோட சேர்ந்து வாழ மட்டும் முயற்சிக்காதீங்க. அன்னைக்கு அவ்வளவு சொல்லியும், ப்ச்...” என திட்டி சலித்து ஆற்றாமையில் கிளம்பிவிட்டார்.
அவனும்தான் தடைகளை உடைத்து, அவளைத் தன்னுள் அடக்க முயல்கிறான். அருகில் செல்லவுமே கணவன் எண்ணம் புரிந்தாற்போல் விலகிச்செல்பவளை அவனும்தான் என்ன செய்வான்.
தாயும், மாமியாரும் அறைக்குள் வரவும், மனைவியை வராண்டாவில் நடக்கவிட்டு கண்பார்வையில் வைத்திருந்தவனுக்குக் கைபேசியில் அழைப்பு வந்தது.
“ரதிமா போன் பேசிட்டு வர்றேன். இங்கேயேதான் நடக்கணும். வலி வந்ததுன்னா உடனே என்னைக் கூப்பிடணும்” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் சென்ற மறுநிமிடம் அனுரதியை நெருங்கி வந்தவனையும், அவன் சொன்னவற்றையும் கேட்டவளுக்கு, பூமியே சுழல்வதுபோலான உச்சபட்ச அதிர்ச்சி.
“ரதிமா! என்ன இங்க நிற்கிற? நடக்கலையா? கால் வலிக்குதா?” கேள்விகளாய் கேட்ட கணவனின் குரலில் மலங்க விழிக்க, “என்னம்மா? எதையாவது பார்த்துப் பயந்துட்டியா? எப்படி வேர்க்குது பாரு” என்று தன் கைக்குட்டை கொண்டு அவள் முகம் துடைத்துவிட, கணவனையே விழியகற்றாது பார்த்திருந்தவள் என்ன நினைத்தாளோ, அவளாகவே கணவன் தோள்சாய்ந்தாள்.
ஆனந்த அதிர்ச்சிதான் அறிவழகனுக்கு. “பிரசவத்தை நினைச்சி பயப்படுறியா ரதிமா?” என்றதும் ஆமென்று அவள் தலையசைக்க, தலையை மென்மையாக வருடியவன், “பயம் எதுக்கு ரதிமா? நான் கூடவே இருக்கேன்ல. சுகப்பிரசவம் நடந்து, சுகமா என்கிட்ட வருவீங்க பாரு” என்றான்.
அதற்கும் சம்மதமாகத் தலையசைத்தவள், அவனை அப்படியே இறுக்கக் கட்டிக்கொண்டாள். அவனோ அதை பயமென்று நினைக்க, அவளோ...!
திடுமென தன்மேல் அழுத்தம் அதிகரிப்பதை உணர்ந்தவன், மனைவி முகம் நிமிர்த்திப் பார்க்க, வலியைத் தாங்கிக்கொண்டு நின்றிருந்தளின் தோற்றமே கண்ணில்பட்டது. “வலி வந்திருச்சா? டாக்டரைக் கூப்பிடலாமா?” என்று நகர்ந்தவனை நகரவிடாது தடுத்தவள், “ப்ளீஸ் கொஞ்ச நேரம் இப்படியே நில்லுங்க” என்றாள்.
“என்ன மிஸஸ்.அறிவழகன் கட்டிப்பிடி வைத்தியமெல்லாம் பண்றீங்க” என்றான் இலகுவான மனதுடன்.
“இது நீங்க பண்ணியிருக்க வேண்டியது. கட்டிக்கோ, ஒட்டிக்கோன்னு வெட்டியா பேசிட்டிருக்க மட்டும் கூடாது. இப்படி கட்டிக்கணும். இன்னும் ஒட்டிக்கணும்” என்று வயிற்றில் அழுத்தம் கொடுக்காது சாய்வாக இறுக்கி கட்டிக்கொண்டாள்.
“ஏய்! வலிக்கப்போகுது ரதிமா.”
“அது ஒருபக்கம் வலிக்கட்டும். நீங்க கட்டிக்கோங்க” என்றாள் தோள்சாய்ந்தபடி.
“என் ரதிப்பொண்ணு அதிசயம் நிகழ்த்துறா. நம்பவே முடியலை. இது கனவில்லையே?” அவனின் ‘ஆ’ என்ற அலறலில், “நிஜம்தான் மேனேஜர் சார்” என்று தான் கிள்ளிய கணவனின் இடுப்பை தடவிக்கொடுத்தபடி, “தேங்க்ஸ்” என்றாள்.
“நான்தான் சொல்லணும் ரதிமா. இன்னுமே இனிய கனவு மாதிரியே இருக்கு. எப்படி இந்த மாற்றம்?”
“அதெல்லாம் காட்ஸ் சீக்ரெட். வெளில சொன்னா தப்பாகிரும்.”
“நான் கண்டுபிடிச்சிட்டா?”
“ட்ரை இட்” என்றாள் சிரிப்புடன்.
“அனு!” மாமியாரின் குரலில் வேகமாக விலக, விலகவிடாது இறுக்கிப் பிடித்தவன், “வேகம் வேண்டாம்னு சொல்லியிருக்கேன் ரதிமா” என்று கடிய, “போங்க மிஸ்டர்.பொறுமைசாலி” என்று விலகி மெல்ல அறை நோக்கிச் சென்றாள்.
வெள்ளிக்கிழமை விடியற்காலை நான்கரை மணிக்கெல்லாம், விட்டுவிட்டு வந்த வலிகள் தொடர் வலிகளாய் மாற, ஐந்தரை மணிக்கெல்லாம் பிறந்தாள் தேவதைப் பெண்ணொருத்தி.