• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
30

நள்ளிரவு இரண்டு மணியளவில் தூக்கமில்லாது உழல்வதைக் கண்டவன், மனைவியை எழுப்பி அமரவைத்து என்னவென்று கேட்டான். எதுவும் கூறாது அவள் அமைதியாக இருக்க, அவளை ஆராய்ந்ததில் எதை உணர்ந்தானோ, சட்டென்று அறையை விட்டு வெளியேறி, சில நிமிடங்களில் குழந்தையுடன் வந்தவனை நன்றியுடன் பார்த்தாள் அனுரதி.

“இந்தப் பார்வையை முதல்ல மாத்து. கட்டினவனுக்கு நன்றி சொல்றாளாம். லவ் சொன்னா பரவாயில்லை” என முனகியபடி திட்ட, “சரி. சாரி” என்று தலையசைத்துப் புன்னகைத்தாள்.

குழந்தைக்குப் பால் கொடுத்து முடிந்ததும், அண்ணனிடம் கொடுத்து வந்ததவனை விழியகற்றாது பார்த்திருக்க, “பார்த்தது போதும். தூங்கு ரதிமா” என்றான்.

“எப்படித் தெரியும்?” என் தேவை என்னவென்று என்பதைக் கேட்காமல் விட்டிருந்தாள்.

“ஹான்! பார்த்ததால தெரியும்” என்று சாதாரணமாகச் சொல்ல, சில நொடி கழித்தே அவன் சொன்னதை உணர்ந்தவள், சட்டென குனிந்து துண்டை எடுத்து முன்பக்கம் முழுதாக மூட, “டூ லேட் மிஸஸ்.அறிவழகன்” என்று கள்ளச்சிரிப்பு சிரித்தான்.

“உன்னை... போ...” என செல்லமாகத் திட்டி திரும்பிப் படுக்க, கணவனின் மோகனச்சிரிப்பு அவள் காதருகினில்.

இதோ இன்று காலை ஏழுமணியளவில் ஆனந்தன்-சாரதா திருமணம், வீட்டினர் முன் அபிராமி வீட்டினில் எளிமையாக முடிந்திருந்தது. காலை உணவு முடித்து அனைவரும் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்க, சாரதா மட்டும் அறைக்குள் ஒதுங்கிக்கொண்டார்.

“அறிவழகன் சார் நீங்க தலைமுடியை ஷார்ட் பண்ணி, தாடி எடுக்கக் காரணம் அனுதானே?” என்று ஆரம்பித்தாள் மாலினி.

“மானி” என்ற அனுரதியின் அதட்டலைத் தொடர்ந்து, “நீங்க ரொம்ப ஷார்ப் மாலினி” என்று சிரிப்புடன் சொன்னான் அறிவழகன்.

“பொய் சொல்லாதீங்க. அதெப்படி நான் காரணமாக முடியும்?”

“அதுவா ரதி. நோ நோ அனுமா. லவ்வு லவ்வு” என்ற குரல் மருத்துவர்.வர்ஷாவிடமிருந்து வந்தது.

“டாக்டர்” என்று முறைத்தவளிடம், “நீ பிடிக்கலைன்னு சொன்ன பிறகு எப்படி ரதிமா? அதான் சொன்ன அடுத்த நிமிடம் சலூன் கடைக்குப் போயிட்டேன்” என்று அறிவழகன் சொல்ல,

“நான் எப்ப சொன்னேன்? எதாவது கனவு கண்டீங்களா?” என்றாள் அவள்.

“அனுமா அன்னைக்கு லிஃப்ட்ல வச்சி சார் அழகா இருக்காருன்னு சொன்னதுக்கு, என்ன ரசனைன்னு என்னைத் திட்ட ஆரம்பிச்சி அவரை வாட்டி எடுத்தியே ஞாபகமிருக்கா? அடுத்த நாளே மிஸ்டர்.பெர்பெக்டா வந்து நின்னார். ஆனாலும், அனுமா. அன்னைக்கு சாரை வச்சி செஞ்ச” என்று சத்தமாக சிரிக்க, அவள் கணவன் கண்ணனோ மனைவியின் கைபிடித்து அழுத்தம் கொடுத்து, “கிண்டல் போதும்” என்று அடக்கினான்.

“அட ஆமா. அந்த தோற்றத்துல வாந்திதான் வந்தது. ஆனா, நீங்கள்லாம் அதைப்போய் எப்படிதான் ரசிச்சீங்களோ! உவ்வே” என்றாள் இப்பொழுது பார்த்ததுபோல்.

“பங்கம்டா தம்பிப்பையா” என்ற மதியழகன் வாயசைத்துக் கிண்டலடிக்க,

“அதையேன் கேட்குற அனுமா. நானும் வைக்க ஆரம்பிச்சதில் இருந்து திட்டிப் பார்த்தேன். அதட்டிப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். இவன் எதுக்கும் இடம் கொடுக்கலை. சாப்பிடவாவது தாடியை ட்ரிம் பண்ணுடான்னா சாமியார் ரேஞ்சில் தத்துவம் பேசுனான். ஒருநாள் அவனா எடுத்துட்டு வந்தான். அவ்வளவு ஆச்சர்யம் எனக்கு” என்றார் அபிராமி.

‘எனக்கானவள் பிடிக்கலைன்னு சொன்னா, ஏன் முகம் சுளித்தாலே எடுத்துருவேன்’ என்று மீட்டிங்கில் சொன்னது நினைவு வர, தன் வார்த்தைக்கு இருந்த மதிப்பு புரிந்தபோதும், “வரப்போற பொண்ணை விட அம்மா முக்கியமில்லையா மேனேஜர் சார்? அதென்ன மனைவி வந்தால்தான் திருந்திருவேன்றது? அம்மாவை மிஞ்சிய பெண் உண்டா என்ன? தெரியவே தெரியாத யாரோ ஒரு பெண்ணுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை, பெத்து வளர்த்த தாய்க்குக் கொடுக்கணும்னு ஏன் தோணலை? இது தப்பில்லையா?” என்றாள் நேருக்கு நேராகவே.

அனுரதியின் கேள்வியில் அமைதி மட்டுமே அவ்விடத்தில். ஏன் சாரதாவுமே மகளின் பேச்சில் அறை வாசலில் வந்து நின்றுவிட்டார்.

பல வினாடிகள் கழித்தே அதை உணர்ந்தவள், சுற்றிலும் பார்த்து மாமியாரிடம் என்னவென்று கேட்க, அவளருகில் வந்து தோளோடு அணைத்துத் தன் நன்றியைத் தெரிவித்தார் அபிராமி.

“சாரிம்மா. ரதியோட கேள்வி ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மகன்களுக்குமான கண்திறப்பு. என்னை மன்னிச்சிருங்கம்மா” என்ற அறிவழகனின் வார்த்தையில், “பரவாயில்லை அறிவா. எல்லா அம்மாக்களுக்கும் உள்ள ஆதங்கத்தை அனு உடைச்சி சொல்லிட்டா. உண்மையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்கு அனுமா” என்றவர் குரல் உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

மாமியாரின் மனதை மாற்ற எண்ணியதோ மனம்! “அப்ப ஆஃபீஸ்ல என் கேபின்ல அந்த லெட்டரை வச்சது நீங்களா?” என்றாள் அறிவழகனிடம்.

“அது நான் இல்லை. அதை வச்சவன் நம்ம கம்பெனியில் இப்ப இல்லை.” என்றான்.

“ஏன்? எனக்கு லெட்டர் வச்சதுக்காகவா. அதுக்காக வேலையை விட்டு தூக்குவாங்களா?” என்று முறைத்தாள்.

“உனக்கு மட்டும் வைக்கலை ரதிமா. அங்க உள்ள லேடீஸ் ஸ்டாஃப் அத்தனை பேருக்கும், இன்க்ளூடிங் கல்யாணம் முடிஞ்சவங்களுக்கும், அவங்கவங்க பெயர் வர்ற மாதிரியான பாடல்களை டைப் பண்ணி வச்சிருக்கான். அதான் முதல்ல வீட்டுல உள்ளவங்களுக்கு வைன்னு சொல்லி அனுப்பிவிட்டுட்டேன்” என்று சாதாரணமாகச் சொல்ல, கேட்டிருந்தவர்களுக்கு அவன் செய்ததில் தவறில்லை என்று புரிந்தது.

இரவு ஏழு மணிபோல் மதியழகன் தம்பியை அழைத்துத் தன்னருகே அமரவைத்து, தொலைக்காட்சியில் ஓடும் படத்தின் இறுதிக் காட்சியைக் காண்பித்தான்.

பார்த்த நிமிடம் அறிவழகனுக்கு அது என்ன படமென்று தெரியவும் அசடு வழிய சிரித்தவனிடம், “காதலுக்கு மரியாதை. நீயும் உன் மனைவியும் காதலித்து கரம்பிடித்த கதை” என்றான் மதியழகன்.

அறிவழகனோ அசட்டு சிரிப்பு மாறாது, எழுந்து ஓடப்போனவனை கழுத்தோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான். “ஆ...அம்மா” என்ற அலறலில் என்னவென்று அனுரதி தவிர அனைவரும் பதறியடித்து வர, “மதி ஏன் அவனை அடிக்கிற? விடு” என்றார் அபிராமி.

அவனோ தாயிடம் தம்பியவன் காதல் கதையைச் சொல்ல, “நீ நம்பிட்டியாக்கும்” என்ற தாயிடம், “ம்...” என பாவமாய் தலையாட்டியவன் கைப்பிடியில் இருந்த அறிவழகன் தப்பித்து மாடிப்படியேற, அவனை விடாது தொடர்ந்த மதியழகனைக் கண்டு பெரியவர்கள் சிரித்து நகர, குழந்தை சத்தம் கேட்டு ஷண்மதி அறைக்குள் சென்றாள்.

“இங்க பாருண்ணா பேச்சு பேச்சாதான் இருக்கணும். கை நீட்டுறதெல்லாம் தப்பு தெரியுமா?”

“நீட்டுனா என்ன பண்ணுவ?” என்று சைகையில் கேட்டான்.

“அழுதுருவேன்” என்று வடிவேலு பாணியில் அழுது காட்டினான்.

உடன்பிறப்புகள் இருவரையும் ஆவென்று பார்த்திருந்தாள் அனுரதி. சட்டென்று சிரிப்பு வந்த போதிலும் அதை அடக்கி வளர்ந்த இரு ஆண்களின் விளையாட்டை ரசித்திருந்தாள்.

தாயின் திருமணத்தினால் தந்தையின் நினைவு எழ, தனிமை தேடி மேலே வந்திருந்தாள். அவர்களின் எதிரில் சற்று வெளிச்சம் கம்மியான பகுதியில் நின்றிருந்தவளை, சகோதரர்கள் விளையாட்டு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை.

“அனுரதியை முதலில் எப்ப, எங்க பார்த்த சொல்லு?” மதியழகன் கேட்டான்.

“உன் விஷயமா டாக்டர்.வர்ஷாவை பார்க்க போனப்ப” என்றவன் அன்று நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

மதியழகன், ஷண்மதிக்கான வாடகைத்தாய் கிடைத்திருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தம் போடவும் வந்த தகவலில், மருத்துவமனைக்கு. தானே நேரில் வந்திருந்தான் அறிவழகன். எல்லாம் பேசி முடித்து, ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமிட்டு முடிக்கையில், மருத்துவரின் கைப்பேசி எண்ணிற்கு அழைப்பு வந்தது. பேச ஆரம்பித்தவர் பதற்றத்துடன், “ரேப் அட்டெம்டா, சார் வேற யாராவது... சாரி சார். சரிங்க சார். நானே பார்க்கிறேன்” என்று அறிவழகன் இருப்பதை மறந்து வேகமாக வெளியே சென்றார்.

ஒப்பந்தப் பத்திரம் யாரிடம் இருக்க வேண்டுமென்று தெரியாமல், அதைக் கேட்பதற்காக பத்திரத்தை எடுத்துக்கொண்டு மருத்துவரின் பின்னால் செல்ல, மருத்துவமனையில் அடிப்பகுதியில்(சப்வே) உள்ள வாகனம் நிறுத்தும் இடத்திற்கு உட்புறமாக வந்த வர்ஷா, அப்பொழுது வந்திருந்த வாகனத்தின் அருகில் சென்றார்.

கதவு திறந்ததும் அங்கு சாரதா, அரவிந்த் அமர்ந்திருக்க, பெண்ணைப் பார்த்தவருக்கு கண்கலங்கிப் போனது. அவரின் அனுபவத்தில் இதுபோல் வருவது முதல் தடவை என்பதால் பதற்றமும் கூட.

அனுரதியை அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்ல ஆள்கள் யாருமில்லை. இரகசிய சிகிச்சை என்பதால் செவிலி, வார்டிலுள்ள பையன்கள் என யாரையும் அழைக்கவில்லை. அரவிந்தை தூக்கி வரச்சொல்ல, அவனோ, அக்காவை அப்படிப் பார்த்ததில் இருந்து, கைகால் நடுங்க துக்கம் தாள இயலாது நின்றிருந்தான். ஓட்டுனரோ சற்று வயதானவராக இருக்க, காவலதிகாரியும் இன்னும் வந்திருக்கவில்லை.

என்ன செய்வதென்று புரியா நிலையில் நின்றிருந்தவரிடம் “டாக்டர் இதை...” என்றவாறு அறிவழகன் வர, நிமிர்ந்து பார்த்த வர்ஷாவிற்கு முகம் தெளிவாகியது. அவன் நம்பிக்கையானவன் என்பதால், அவனை தனியே அழைத்துச் சென்று தற்போதைய நிலையைச் சொல்லி உதவி கேட்டார்.

ஒரு வார்த்தை பேசாது கையிலுள்ள பேப்பரை அவரிடம் கொடுத்து வேகமாக வந்தவன், வாகனத்தின் உள்ளிருந்தவளை மெல்ல நகர்த்தித் தூக்க, தூக்கியவனுக்கு மனதே ஆறவில்லை.

‘நம் இனம் ஏன் இப்படி இருக்கிறது? பூவை கசக்கி நுகர்வதால் என்ன கிடைத்திரப்போகிறது?’ சில நிமிட சுகத்திற்காக அவர்கள் நடத்தும் வெறிச்செயலை அறவே வெறுத்தான் அறிவழகன். உடம்பெல்லாம் ஆங்காங்கே காயம் இருக்க, காயத்தில் கைபட்டால் அவளுக்கு வலிக்குமே என்று பக்குவமாகப் பிடித்துத் தூக்கினான். ‘அவள் அனுபவித்த வலியை விடவா’ என தோன்றினாலும், அதில் சிறிது கூட தான் கொடுத்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு அவனிடத்தில்.

“பார்த்துத் தூக்குங்க தம்பி. என் பொண்ணு வலிதாங்க மாட்டா. அவங்கப்பா ஆசை ஆசையா பொத்திப்பொத்தி வளர்த்த பொண்ணு. என் பொண்ணை அவன்...” நிறுத்திய சாரதாவின் கண்ணீர் பேச்சு, அறிவழகனுக்கும் கண்ணீரை வரவழைத்தது.

வேகமாக அறைக்குள் கொண்டு சென்று படுக்க வைக்கையில், அவனின் கை அவனறியாது அவள் தலை வருட, “கெட் வெல் சூன்” என்றன உதடுகள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
“அறிவழகன் சார், இன்ஸ்பெக்டர் வர்றதுக்கு முன்ன நீங்க கிளம்புங்க. ஃபைல் நாளைக்குக் கொண்டு வந்து தாங்க” என்று அந்த ஒப்பந்தத்தை அவனிடமே கொடுத்தார்.

“சரி டாக்டர். அந்தப் பொண்ணை எப்படியாவது உடலளவிலும், மனதளவிலும் சரி பண்ணிருங்க. பார்த்ததில் இருந்து நெஞ்செல்லாம் பதறுது” என்றான்.

“அது என்னுடைய கடமை சார். ப்ளீஸ் நிற்காம கிளம்புங்க” என்றவர், “மோனிஷா எல்லாம் ரெடியா” என்றார் செவிலியிடம்.

மனமே இல்லாது வீடு வந்தாலும், இரவில் தூக்கம் தொலைத்து, மறுநாள் சீக்கிரமே வந்தவன் அவசர சிகிச்சைப் பிரிவு வர, அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. நேரே மருத்துவரிடம் வந்தவன் ஒப்பந்த படிவத்தை ஒப்படைத்து, அப்பெண்ணைப் பற்றிக் கேட்க, முதல்லி சொல்ல மறுத்தவர் அவனின் பரிதவிப்பைக் கண்டாலும், திரும்பத்திரும்ப கேட்டு கெஞ்சியதில், யாருக்கும் தெரியக்கூடாதென்று அவள் வாழ்வில் நடந்ததைச் சொல்லி, தற்பொழுது வரை மயக்கம் தெளியாததையும் தெரிவித்திருந்தார்.

ரவிசங்கரைப் பற்றிய விவரம் கேட்க, பெண்ணின் பெயர் வெளியே வராமல் அந்த காவலதிகாரி பார்த்துக்கொள்வதாகச் சொன்னார். அறிவழகனுக்குமே மனம் கேளாது நேராக அந்த காவலதிகாரியைச் சந்தித்துப் பேச, யார் என்னவென்று விசாரித்தவர், முதலில் மறுத்து பின் ரவிசங்கர் மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை பற்றிக் கூற, மனம் சற்றே திருப்தியானதும் அவரின் எண் வாங்கி வந்துவிட்டான்.

அதைத் தொடர்ந்து தினமும் மருத்துவமனையில் அவன் வரவு இருந்தது. அவனுக்குமே அண்ணன் பற்றிய பிரச்சனையும் சேர, அனுரதி கண்விழித்துவிட்டாள் என்பதே சற்று நிம்மதியானது. என்றோ ஒருநாள் செல்லும் கோவிலுக்கு, அவளுக்காக தினமும் சென்று வேண்டி வந்தான். குழந்தைக்கான சிகிச்சை மாறியது யாருமே எதிர்பாராதது.

ஏற்கனவே நொந்திருந்தவள் மனது மறுபடியும் தங்களால் காயப்படப்போவது தெரிந்ததும், மனதார அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தான். ஒருவேளை குழந்தை வராமல் தோல்வியில் முடிந்தாலும், அவள்தான் தன் மனைவி என்பதில் உறுதியாக இருந்தான்.

“நடுவுல நீ வேற அப்படிப் பண்ணவும், தனி ஒருத்தனா பெரிய அடி. காரணமும் தெரியலை. சொல்ல வேண்டிய நீயும் எழுந்துக்கலை. வீட்டுல எல்லாரையும் ஆறுதல்படுத்தின நான், அழக்கூட வழியில்லாமல் நின்னுட்டிருந்தேன்டா அண்ணா. உயிர் உனக்கு அவ்வளவு சாதாரணமாகிட்டுல்ல? ஒவ்வொரு மனுசனுக்கும் வாழ சில காரணம் இருந்தா, சாக ஆயிரம் காரணம் இருக்கும். எல்லாரும் உன் முடிவை எடுத்தா, உலகமே சுடுகாடாதான் இருக்கும். நீ இங்க கஷ்டப்படுற. அங்க என்னை யாருன்னே தெரியாத அவள் கஷ்டப்படுறா. நான் யாருக்காக அழ? அந்த இரவுகளைக் கேட்டுப்பார் என் கண்ணீர்க்கதை சொல்லும்” என்று கோபத்தில் கத்தி கண்கலங்க, கேட்டிருந்த இருவருக்குமே கண்களில் கண்ணீர்.

தம்பியின் பாசத்தைத் தெரியாதவனா மதியழகன். அறிவழகனை அணைத்து விடுவித்து அவன் முகம் பார்த்து, “சாரிடா. ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன். அந்நேர புத்தி தடுமாற்றம் அப்படியொரு முடிவை எடுக்க வச்சிருச்சி. இனி எந்த சூழ்நிலையிலும் அப்படி நடந்துக்கமாட்டேன்” என்று சத்தியம் செய்தான்.

‘இதுதான் காதலா? இந்த உணர்வுக்குப் பெயர்தான் காதலா? ஆம். இவன்தான் தன் காதல்!’ என்ற உணர்வை முழுமையாக அனுரதி உணர்ந்த தருணம். கண்சிமிட்டாது கணவனையே பார்த்திருந்தவள் மனம் ‘என் அழகன்’ என்ற பெருமிதத்தில் மிதந்தது.

“அம்மா எப்படி சம்மதிச்சாங்க?” மதியழகன் கேள்வியில் தாயின் வாயிலிருந்து சம்மதத்தை வரவைக்க, மருத்துவர் வர்ஷாவை உபயோகித்துக் கொண்டதைச் சொன்னான்.

“ப்பா!” என வாயில் கைவைத்த மதியழகன், “பயங்கரமான ஆளுடா நீ. எவ்வளவு அழகா காய் நகர்த்தி, அந்தப் புள்ளையைக் கவர் பண்ணியிருக்க?”

“கவர் பண்ணலைடா அண்ணா. கல்யாணம் பண்ணியிருக்கேன்.” என்று சட்டைக் காலரைத் தூக்கினான்.

“இரண்டும் ஒண்ணுதான்டா. ஆனா, இது பரிதாபத்தில் வந்ததில்லையே?”

ஏற்கனவே கணவன் பேச்சில், ‘எப்படி அந்த நிலையில் பிடித்தம் வரும்?’ கணவன் மெய்மறந்து சொல்லும் வார்த்தைகளில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன உணர்கிறோமென்ற நிலையில் மதியழகனின் வாயசைப்பிலான கேள்வியில் தனக்கான பதிலுக்காகத் தவிப்புடன் பார்த்திருந்தாள்.

“பாவம்னா அச்சோன்னு உச்சுக்கொட்டிட்டு போயிட்டே இருப்போம். பரிதாபம் பார்த்திருந்தா, செலவுக்குப் பணம் கொடுத்து விலகி வந்திருப்பேன். அவளுக்காக நான் ஏன் துடிக்கணும்? ஒவ்வொரு நிமிடமும் அவளுக்காக, அவள் குணமாக கடவுள்கிட்ட வேண்டணும்? பார்த்ததும் காதல் வர்ற சூழ்நிலை அது கிடையாது. ஆனா, எனக்கு எப்ப எப்படின்னு தெரியலை. என் குழந்தை அவள் வயிற்றில் என்றதும், இதுதான் கடவுளோட விரும்பம்னு புரிஞ்சிக்கிட்டேன். அவள் விருப்பமா முதல்ல கடவுள் காணிக்கை மாதிரி, முடியை சரிபண்ணி தாடியை எடுத்துட்டேன். அப்ப ஒரு பார்வை பார்த்துட்டு குனிஞ்சிக்கிட்டா பாரு, அதுதான். அந்த ஒரு நொடிப்பார்வைதான் எனக்கானது.” என்றான்.

“அதெப்படி அனுரதி சரியா நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வந்தாங்க?”

“அதுவா, இன்ஸ்பெக்டர் எதோ விசாரிக்க அத்தைக்கு கால் பண்ணியிருக்கார். அப்படியே அவளையும் விசாரிக்கையில் இதை சொல்லியிருக்காங்க. அன்னைக்கே நானும் தற்செயலா போன் செய்ய இதைச் சொன்னார். அதான் நானே வேலைக்கான விளம்பரம் கொடுத்துட்டேன். அவளை என் கண்ணுல காட்டின கடவுள் இதையும் செய்வார்ன்ற நம்பிக்கை. அவளும் வந்தா” என்று சிரித்தான்.

“ஏன்டா சிரிக்குற?”

“ம்... அது நான்தான் அந்த லெட்டர் வச்சேன்” என்றதில் மதியழகன், அனுரதி அதிர, “அப்ப ஏன் காலையில் பொய் சொன்னேன்னு கேட்குறியா? அவன்தான் முதல்ல வச்சான். அதை எடுத்துட்டு ஒரு குறுகுறுப்புல நான் வச்சேன். வச்சதும்தான் ரொம்ப சில்லியா பிஹேவ் பண்ணினது தெரிஞ்சது. அதை திரும்ப எடுக்குறதுக்குள்ள பார்த்துட்டா. அப்ப அவள் கொடுத்த காதலுக்கான விளக்கத்துல நொந்தே போயிட்டேன்டா அண்ணா” என்றான் பாவமாக.

“அப்புறம்?”

“அப்புறமென்ன கல்யாணம்தான்” என்றான் இதழ் விரிந்த புன்னகையுடன்.

“நீ நல்லாயிருக்கணும் அறிவு. எனக்கான வேண்டுதல் உனக்காக மட்டுமே” என்று தம்பியவனை அணைத்து விடுவித்து கீழே சென்றான்.

மதியழகன் சென்றதும், நிலவின் வரவை கண்ணகற்றாது பார்த்திருந்தவன் முதுகில் விழுந்த அழுத்தமும், இடையில் தோன்றிய இறுக்கமும் யாரென்று புரிந்தவன் கண்கள் தன்னாலேயே விரிய, சில நிமிடங்கள் அந்த இனிமையை ஆழ்ந்து அனுபவித்தான் அறிவழகன்.

“ஹேய் ரதிப்பொண்ணு! அப்பப்ப உடம்புல மின்சாரத்தைப் பாய்ச்சுற” என்று அணைத்தவாக்கில் திரும்ப, அவனுக்கேற்றார்போல் வழி செய்து கொடுத்தவள் அணைப்பு இன்னும் இறுகிப்போனது.

“என் ரதிப்பொண்ணுக்கு என்னவாம் இப்ப?” என்று தானும் அணைக்க,

“காதல்னா இதுதானா? இந்த அளவில்லாத, எதிர்பார்ப்பில்லாத, சுயநலமில்லாத அன்புதான் காதலா?” என்றவள் குரல் மென்மையிலும் மென்மையாக வந்தது.

“நீ என்ன நினைக்குற?”

“இதுதான் அதுன்னு தோணுது” என்றாள் சிணுங்கலாக.

“நாங்க பேசியதைக் கேட்டியா?”

“ம்... ஒண்ணுவிடாம.”

மனைவியின் மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டியவன், “யாரோ காமத்துக்கான அடித்தளம்தான் காதல்னு சொன்னாங்க” என்றான் கேலியாக.

“இருந்துட்டுப் போகட்டும். அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதானே!” என்றாள் படுசாதாரணமாக.

“ஆஹா! ரதிமா நீயா இது? என்னைக் கிள்ளு பார்ப்போம்” என்றதும் அவன் நெஞ்சில் அவளிதழ் முதன்முறையாகப் பதிய, மனைவியின் முத்தத்தை உணரவே நிமிடங்கள் பிடித்தது அறிவழகனுக்கு. அவளின் மாற்றம் அவ்வப்பொழுது தெரிந்ததுதான். இருப்பினும் இதை எதிர்பார்க்கவில்லை. தன் காதலுக்கான அங்கீகாரமாகவேபட்டது. நெஞ்சில் பதிந்திருந்த அவள் முகம் நிமிர்த்தி, முகமெங்கும் மென்முத்தம் வைத்தவன், வன்முத்தம் ஒன்றை அவளிதழில் பதித்து விலகி இறுகக் கட்டிக்கொண்டான்.

நொடிகள் நிமிடங்களாய் மாற, சின்னச்சின்னதாய் விழுந்த மழைத்துளியும் அவர்களை அசைக்கவில்லை. துளி தூரலாகி, பெருமழையாகும் முன் சூழ்நிலை உணர்ந்து இருவரும் விலக, விலகியவளை இழுத்து அணைத்தவன் காதோரம் குனிந்து, தன் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னான். அவ்விஷயத்தைத் தெளிவுபடுத்தவில்லை எனில், எதோவொரு மூலையில் இருந்து மனைவியின் மூளையைக் குடைந்து கொண்டிருக்கும். அப்படி இல்லையெனினும் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லதென்றே சொல்லிவிட்டான்.

அதிர்ந்து கணவன் முகம் பார்த்தாள் அனுரதி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top