• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
28


அதன் பொருட்டே குழந்தை மீது அத்தனை ஏக்கம் இருந்த போதும் ஆசைக்குப் பார்த்துக் கொஞ்சி வந்துவிட்டாள் ஷண்மதி. அடுத்து குழந்தையைப் பார்க்க வரவில்லை. மனைவியின் மனம் புரிந்து மதியழகனும் வரவில்லை. தாய், தம்பி எடுத்துச் சொல்லியும் வேலையைக் காரணம் காண்பித்து விலகி நின்றான்.

இதோ அதன்பிறகு இன்றுதான் வந்திருக்கிறாள். வந்ததும் குழந்தையைத் தூக்கச்சொல்லி மனம் உந்தியதுதான். மூளை இட்ட கட்டளையில் தன்னை அமைதிப்படுத்தி அமர்ந்திருந்தாள்.

குழந்தைக்குப் பெயர் வைக்கும் நேரம் வர, குழந்தையைத் தூக்கி வந்த அனுரதி, ஷண்மதி அருகில் வந்து குழந்தையை அவள் கையில் கொடுத்து, “தொட்டிலில் போடுங்க அக்கா” என்றாள்.

“நானா? இல்ல நீயே போடு” என்று குழந்தையைத் திருப்பிக் கொடுக்க,

“நீங்கதான் போடணும். இது என்னுடைய வேண்டுகோள்” என்று குழந்தையை வாங்காது இருக்க, ஷண்மதியோ கணவனைக் கண்டாள்.

அதுவரை ‘என்ன செய்கிறாள் இந்தப் பெண்?’ என்று தம்பி மனைவியைப் பார்த்திருந்தவன், பின் தம்பியைக் கேள்வியாய் நோக்க, அவனோ ‘தனக்குத் தெரியாது’ என்று தோள்குலுக்கினான். மனைவியின் புறம் திரும்பியவனிடம், அவளின் பார்வை வேண்டுதலாய் விழ, தன்னை மீறிச் சம்மதம் தெரிவித்திருந்தான். அதில் சந்தோசம் எழ, “நீங்களும் வாங்க” என்று கணவனையும் இழுத்துச் செல்ல, இருவரும் சேர்ந்தே தொட்டிலில் போட்டார்கள்.

“அடுத்து பெயர் வைக்க வேண்டியதுதான அனுமா. என்ன பெயர் தேர்வு செய்திருக்க?” மாலினி ஆர்வத்துடன் கேட்டாள்.

அதில் புன்னகைத்த அனுரதி, “ஷண்மதி அக்கா குழந்தைக்கு, நான் எப்படி மானிமா பெயர் வைக்க முடியும்? இது அவங்க குழந்தை. அவங்கதான் பெயர் வைக்கணும்” என்றாள் புன்னகையுடன். அவள் முகத்தில் சிறிதும் குழந்தையைக் கொடுக்கும் கலக்கம் இல்லை. ஒரு நிம்மதி உணர்வு மட்டுமே அவளிடம்.

குழந்தை மதியழகனுடையது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுமே, அனுரதியின் முடிவை எதிர்பார்த்திருக்கவில்லை. அபிராமி, சாரதாவுமே எப்பொழுதென்றாலும் இதுதான் நிஜம் என்பதால் அமைதியாக இருந்தனர்.

“அனு” என்று அதிர்வுடன், உண்மை தெரிந்தும் எப்படி என்று பார்த்த ஷண்மதி, “என் குழந்தையா?” என்று குழந்தையைக் கண்டவளுக்கு மலையளவு ஏக்கங்கள். அவளைப் பார்த்து குழந்தை அழகாய்ச் சிரிக்க, அம்மழலைச் சிரிப்பில் ஷண்மதியின் ஏக்கங்கள் பறந்து, ஆசைகள் துளிர்த்தது என்றால் மிகையில்லை.

அரவிந்த் அக்காவிடம், “அக்கா கொஞ்ச நாளாகட்டுமே” என்றான் குழந்தையைப் பிரியமுடியா தவிப்புடன்.

“எப்ப இருந்தாலும் இதுதான்றப்ப, எதையும் மாற்ற முடியாது அரவிந்தா. அவங்களையும் ஏன் தவிக்க விடணும்?”

“ஆனாலும்?” அவன் தயங்க,

“எல்லாம் ஆகும்” என்ற தோழியைக் கண்டு, “உனக்குப் பெரிய தியாகின்ற நினைப்போ” என்றவாறு தன்னை முறைத்திருந்த மாலினியைப் பார்த்த அனுரதி, கண்சிமிட்டிச் சிரித்துத் திரும்ப, “உனக்கு பெரிய மனசுதான் அனுமா. உன்கூட பழகக் கிடைத்த வாய்ப்பை எண்ணி, கடவுளுக்கு நன்றி சொல்றேன்” என்றார் மருத்துவர்.வர்ஷா.

“எனக்கும் அதேதான் டாக்டர். என்ன அந்தக் கடவுளே நீங்கதான்னு சொல்லலாம். எனக்குன்னு ஒரு குடும்பம். என் சந்தோசம் எல்லாத்துக்கும் காரணம் நீங்க” என்றவள் அவரை அணைத்து, “ஓவர் எமோஷனலாகி உண்மையை உளறிராதீங்க டாக்டர். ஏன்னா இங்க சிலருக்கு உண்மை தெரியாது” என்றாள்.

“ம்க்கும்... அப்படியே தெரிய விட்டுருவ பாரு. போடி” என்றார் விளையாட்டாக.

“டி சொல்லுறது தப்பு டாக்டர். இருந்தாலும் லவ் யூ” என்று அவர் கன்னத்தில் முத்தமிட, அவளைத் தெரிந்த அனைவரும் ஆவென்று பார்த்திருந்தனர்.

“என்னைக்காவது எனக்கு இப்படி கொடுத்திருக்கியாடி?” பொறாமையில் மாலினி பொங்கி ‘டி’யை அழுத்தினாள்.

“சந்தடி சாக்குல நீயும் டி சொல்ற. ம்... பரவாயில்லை சொல்லிக்க” என்று பெரிய மனதாய்ச் சொல்ல, மாலினி அனுரதியைக் கிள்ள, அவளின் “ஸ்...” என்ற சத்தத்தில், “இது நீதானான்னு கன்பார்ம் பண்ணிக்கக் கிள்ளினேன். எதுவா இருந்தா என்ன. என் அனு சந்தோசமா இருக்கணும்” என்றாள் மாலினி.

தோழியை அணைத்து முத்தமிடுவது போல் சென்று, “என் புருசனுக்கே இதுவரை முத்தம் கொடுத்ததில்லை. உனக்கெப்படித் தர்றது?” என கேட்டு புருவம் உயர்த்தினாள்.

“அப்ப டாக்டருக்குக் கொடுத்த?” என்று அனுரதியை முறைக்க, “அவங்க என்னோட இன்னொரு தாய்” என்றாள் புன்னகையுடன்.

அவர்கள் பேசுவது மற்றவர்களுக்குப் புரிந்தாலும், புன்னகையுடன் அதை ரசித்திருக்க, சற்று தள்ளி நின்ற அறிவழகனோ, பலவித உணர்வுகளில் மனைவியவளை மட்டுமே பார்த்திருந்தான்.

தன்னை மட்டுமே காணும் கணவனின் பார்வையை உணர்ந்தாலும், இவ்வளவு நேரம் காணாதிருந்தவள், அவன் முன் வந்து நின்றாள்.

குழந்தை பிறக்கும் முன்வரை, உன் அண்ணன் குழந்தையைச் சுமப்பது அருவெருப்பு என்றவள். ‘அண்ணன் குழந்தை வயிற்றில், தம்பிக்கு மனைவி நான். என் குழந்தை எனக்குச் சொந்தமில்லையா?’ என்று பலவிதமாக மனதில் உழன்று கொண்டிருந்தவள், இதோ தெளிவான மனநிலையுடன் தன்முன்னே.

குழந்தையைப் பார்த்தவன் அப்படியே மனைவியைக் காண, அவளும் அதையே செய்ய, ‘குழந்தை நம்முடையது என்று தெரியுமா?’ என கண்களால் கேட்க, கண்சிமிட்டிப் புன்னகைத்தவள், “தெரியும். மனம் தெளிந்ததாலயும், உங்க மனம் புரிந்ததாலும்தான், மனப்பூர்வமா குழந்தையைக் கொடுக்கிறேன்” என்றாள் மென்குரலில்.

“லவ் யூ” என்றான் பட்டென்று.

திகைத்து பின் விழி விரித்துச் சிரித்தவள், “எனக்கு ஆங்கிலம் வேண்டாம். சுத்தத் தமிழ்ல வேணும்” என்றாள்.

“அது கொஞ்சம் வேற மாதிரி இருக்குமே. பரவாயில்லையா ரதிப்பொண்ணு” என்றான் கிசுகிசுப்பாக.

‘காதல்’ என்பதற்கு ‘காமுறுதல்’ என்பதுதான் சுத்தத் தமிழ்ச்சொல். இன்னொரு வார்த்தை ‘மையல்.’ அதனால்தான் அப்படிச் சொன்னான்.

“அர்த்தம் ஒண்ணுதானே மேனேஜர் சார். தள்ளி நின்னா எப்படி? வாங்க குழந்தைக்குப் பெயர் வைக்குற வைபவத்தைக் கொண்டாடலாம்” என்றழைக்க, சட்டென அவளை உரசியபடி வந்தவனைக் கண்டு தள்ளிப்போக, மீண்டும் அவளை உரசியபடி வந்தவன், “தள்ளி நின்னா எப்படி மிஸஸ்.அறிவழகன்?” மையல் பார்வை ஒன்றை மனைவியை நோக்கி வீசினான் அறிவழகன்.

“சுத்திலும் ஆளுங்களை வச்சிக்கிட்டு, என்னதிது?” என கடிந்து ஷண்மதி மதியழகன் அருகில் வந்தவள், “இன்னும் என்ன யோசனை? போங்க போய் உங்க குழந்தைக்குப் பெயர் வையுங்க” என்றாள்.

வார்த்தை வரவில்லை ஷண்மதிக்கு. ‘நன்றி’ என்ற வார்த்தையை உணர்ச்சி பொங்க கையெடுத்துக் கும்பிட, “அக்கா என்ன பண்றீங்க? கையைக் கீழே இறக்குங்க” என்று இறக்கிவிட்டாள்.

“உன் உருவத்தில் என் அம்மாவைப் பார்க்கிறேன் அனு” என்றாள் ஷண்மதி.

ஷண்மதியின் அதீத உணர்ச்சியில் மனம் நெகிழ்ந்தாலும், நல்ல நேரம் செல்வதை உணர்ந்து, “அதுக்கென்ன. யங் அன்ட் க்யூட்டா இதோ நிஜ அம்மாவே இருக்காங்க. இவங்களை அம்மாவா நீங்க வச்சிக்கோங்க. எனக்கு என் அபிராமி அத்தை இருக்காங்க” என்று ஷண்மதியை சாரதாவிடம் விட்டாள்.

“உனக்கு அம்மான்னா எனக்கும் அம்மாதான் அனு” என்று ஷண்மதி சாரதா கையைப் பற்றிக்கொள்ள, “உனக்கு அக்கான்னா, எனக்கும் பொண்ணுதான் அனுமா.” மகளிடம் சொல்லி, “போய் குழந்தைக்குப் பெயர் வை ஷண்மதி” என்றார் சாரதா.

குழந்தை அருகில் சென்று மெல்ல குனிந்து, கொண்டு வந்திருந்த செயினை குழந்தையின் கழுத்தில் போட்டு, “மதிமலர்” என்றாள் மென்மையாக.

“ஹேய்! சூப்பர்!” கரகோஷம் எழ, அடுத்து மதியழகன் குழந்தையின் கன்னம் தொட்டு, “மதிமலர்” என உச்சரிக்க, திரும்பவும் அதே ஆரவாரம்.

அடுத்து பெரியவர்கள் பெயர் சொல்லி, சின்னவர்களும் சொல்ல, “அறிவா, அனு வந்து பெயரைச் சொல்லுங்க” என்ற அபிராமியிடம் தலையசைத்து, இருவரும் ஒருவரையொருவர் அர்த்தமாய் பார்த்தபடி குழந்தையிடம் குனிய, தாய் தகப்பனைக் கண்ட குழந்தை சிறிது சப்தமெழுப்பிச் சிரித்தாள்.

அதில் புன்னகை வரப்பெற்றவர்கள், “மதிமலர்” என்று சேர்ந்தே உச்சரித்து குழந்தையின் நெற்றியில் முத்தமிடச் செல்கையில், இருவர் தலையும் முட்ட, “ஸ்...” என நிமிர்ந்து, “ஏன் முட்டுனீங்க? வலிக்குது” என்றாள் அனுரதி.

“அச்சோ! என் ரதிப்பொண்ணுக்கு வலிக்குதா? இரு” என்று தலையில் தேய்த்துவிட்டான்.


“அனுமா ஒரு முறை முட்டினா கொம்பு முளைக்கும். இன்னொரு முறை முட்டிரு” என்ற மாலினியின் குரலில், ‘அட ஆமாம்ல’ என நினைக்குமுன் அறிவழகன் முந்திக்கொண்டு முட்டிவிட்டு ஓட, “ஏய்!” என்றபடி அவனை விரட்டி ஓட, மனம் நிறைவாய் அவர்களைப் பார்த்திருந்தார்கள் நலம் விரும்பிகள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
விழா நல்லபடியாக முடிய, மருத்துவர் குடும்பத்துடன், மாலினியும் கணவனுடன் கிளம்ப, அறிவழகன் குடும்பத்தார் மட்டுமே அங்கு இருக்க, ‘அடுத்து என்ன பண்ணலாம்?’ என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் பால் குடிக்கும் பச்சிளங் குழந்தைக்கு தாய்ப்பால் அவசியமாகிற்றே.

“எட்டு மாதம்வரை அனு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கட்டும் அத்தை. மற்ற உணவு பழகவும் நிறுத்திக்கட்டும்” என்றாள் ஷண்மதி.

“அதுவரை?” சாரதா கேட்க,

“ஒரே குடும்பம்தான்” என்றாள்.

‘சரி வருமா’ என்று அபிராமி, சாரதா யோசிக்க, “குழந்தைக்குப் பால் மட்டும்தான் நான் கொடுப்பேன். மத்ததெல்லாம் நீங்க புருசன், பொண்டாட்டி பார்த்துக்கோங்க. எங்களுக்கு அதற்குமேல் உரிமையில்லை. அப்படித்தானங்க” என்று கணவனையும் இழுத்தாள் அனுரதி.

“யா... ரதிமா என்ன சொன்னாலும் சரிதான்” என்று அறிவழகன் ஆமாம் சாமி போட்டான்.

சாரதாவோ, ‘என் மருமகன் எவ்வளவு பொறுமைசாலின்றதைப் பார். இனிமேல் எதாவது குறை சொல்லு’ என்பதாய் மகளை முறைக்க, ‘ம்க்கும்... மருமகனுக்கு ஜால்ரா அடிக்கிற உங்க மாதிரி மாமியாரை பார்த்ததில்லை தாயே’ என்று பதிலுக்கு முறைத்து முகம் திருப்பினாள் அனுரதி.

“அபிமா அதுக்கப்புறம் எங்க வீட்டுக்குப் போகலாம்னு இருக்கோம்” என்றார் ஆனந்தன்.

“என்னண்ணே சொல்ற?” என்றார் திகைப்புடன்.

“நடப்பைச் சொல்றேன் அபிமா. குழந்தையோட எங்க வீட்டில் இருக்கிறதுதான் நல்லது. எல்லாரும் நல்லவங்கதான். அவங்களுக்குள்ள குழந்தையை வச்சி பிரச்சனை வந்திரக்கூடாதே.”

“அப்படி இல்லண்ணே. அறிவா அனு பக்குவமானவங்க. நீங்க பயப்படுற அளவுக்கு இல்லண்ணே” என தவித்தார் அபிராமி.

தங்கையின் கலக்கம் உணர்ந்தாலும், “எல்லாமே குழந்தைன்ற புள்ளியில் பிசகலாம் அபிமா” என்றார்.

“அத்தை விடுங்க. அவங்க மனசு போலவே நடக்கட்டும்” என்றாள் அனுரதியும்.

“ப்ச்... எப்படிடா?” தன் விருப்பமின்மையை அபிராமி காண்பித்தார்.

“ம்மா... இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள அடுத்ததை ரிலீஸ் பண்ணிரலாம். டோண்ட் ஒர்றி” என்றான் வந்த சிரிப்பை அடக்கியபடி.

கணவன் கைபிடித்துத் தன்னருகே இழுத்தவள், “கேப்ல கெடா வெட்டுறீங்களா மேனேஜர் சார். தொலைச்சிருவேன்” என்று மிரட்ட,

“அப்ப வெட்டலாம்ன்றியா?” மனைவியின் முகம் அருகாமையில் இருக்கக் கண்டு மோகனப்புன்னகையுடன் கேட்டான்.

“உன்ன வெட்டிருவேன். உன் பார்வையே சரியில்லை. போ” என்று தள்ளிவிட, மீசையில் மண் ஒட்டாத குறையாகத் தாயின்புறம் திரும்பியவனை, அனைவரும் குறுகுறுவெனப் பார்க்க, “ஹிஹி... பனிரெண்டு மாசம் எதுக்கு? பத்து மாசம் தானேன்னு கேட்குறாம்மா” என்று சிரிக்க, னங்கென்று அவன் தலையில் கொட்டிய அனுரதி, “லூசு! அம்மாகிட்ட பேசுற பேச்சா இது. உன்னால என் மானமே போச்சி” என்று அறைக்குள் ஓடிவிட்டாள்.

பார்த்தவர்கள் பக்கென்று சிரிக்க, “அது சும்மா லுலுலாய்க்கு. நாங்க இப்படிதான் அடிக்கடி...”

“அசிங்கப்படுவியாடா மகனே” என்ற அபிராமிக்கு அப்படியொரு சிரிப்பு.

“நீங்க என்னை இன்சல்ட் பண்ணிட்டீங்க மீ. நான் வீட்டைவிட்டு வெளிய போறேன்” என்று எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

“மருமகனே! வாசல் இந்தப்பக்கம். நீ மறந்தாப்புல உள்ள போற பாரு” என்று அறிவழகன் காலை வாரினார் ஆனந்தன்.

“ஓ... ஆமாம்ல. இருந்தாலும் இங்கேயும் வாசல்தான் இருக்கு. பை” என்று அறைக்குள் செல்ல, கிண்டல் சிரிப்புகள் அவனைத் துரத்தியது.

“என்ன மிஸஸ்.அறிவழகன்? சபையை நேக்கா கலைச்சிட்டு வந்துட்டீங்க” என்றபடி மனைவியின் அருகிலமர்ந்தான்.

கணவன் தோள் சாய்ந்து, “ஆனந்தன் அப்பா இடத்திலிருந்து யோசிச்சா சரியாதான் இருக்கு. ஷண்மதி அக்கா எமோஷனல் டைப். அவங்க பக்கத்தில் இருக்கும்போது குழந்தை என்னைப் பார்த்து சிரித்தால், பாரு பெத்தவள்னு தெரியத்தான செய்யுதுன்னு ஆரம்பிக்குற பொறாமை, பெருசா எதிலும் கொண்டு போய் விட்டுரக்கூடாது. தன் பொண்ணைப் பற்றித் தெரிந்ததால்தான், அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கார். இருந்தாலும் பெரியவங்க துணையில்லாமல் எப்படி பார்த்துப்பாங்கன்னுதான் யோசனையா இருக்கு” என்றாள்.

“எனக்கொரு ஐடியா இருக்கு. நீ என்ன சொல்லுவன்னுதான்...” தயக்கமாக நிறுத்தினான்.

“இதுல தயங்க என்னங்க இருக்கு? உங்க எண்ணங்கள் எப்பவும் தப்பாக இருந்ததில்லை. எதுவாயிருந்தாலும் யோசித்துதான் பேசுவீங்க. சொல்லுங்க?” என்றாள்.

மனைவியின் நம்பிக்கை மீதான கர்வப்புன்னகையுடன், தன் யோசனையைச் சொல்ல ஆரம்பிக்க, அவளோ அதிர்ந்து, பின் வியந்து, கணவன் முகத்தைக் காண, புருவம் உயர்த்தி, “உனக்குச் சம்மதம்தானே?” என கேட்டான்.

ஒரு வேகத்தில் அறிவழகனை கட்டியணைக்க, அவனோ தடுமாறி கட்டிலில் விழ அவன் மேலே தானும் விழுந்தவள், முகமெங்கும் முத்தார்ச்சனை நிகழ்த்தி, கணவனைத் திக்குமுக்காடச் செய்து, “நான் உங்களை பைத்தியக்காரத்தனமா நேசிக்குறேன்” என்று தன் காதலைச் சொன்னாள்.

“அப்பக்கூட காதலிக்குறேன் இல்லையா?” என்றான் மென்குரலில்.

“ம்கூம்... அந்த வார்த்தை நீங்க சொல்லலாம் தப்பில்...”

“ரதிமா... ரதி” என்ற உலுக்கலில் தன்னுணர்வு வந்தவளுக்கு, இவ்வளவு நேரம் மனதின் ஆசை கனவாக வந்ததில், தன்னை மீறிய உணர்வுகளில் திகைத்து விழித்தாள்.

கணவனின் உலுக்கலில் கனவின் தாக்கத்தில் இருந்து வெளி வந்தவள், ‘நானா? நானா இது? வன்முறையால்ல இருக்கு.’ தனக்கே கேட்டு வெட்கத்தில் தலை கவிழ்ந்து, “ம்...” என சம்மதமாய் தலையசைத்தாள்.

“எப்ப? எப்படி செய்யலாம்?” என்று மனைவியிடம் கேட்டவனுக்கு, ‘இது சரி வரவேண்டுமே’ என்ற யோசனை மட்டுமே.

“உங்க இஷ்டப்படி” என்ற மனைவியின் குரலின் வித்தியாசத்தை உணர்ந்தவன், “என்னாச்சி ரதிமா? சட்டுன்னு என்னவோ போலாகிட்ட? உடம்புக்கு எதாவது செய்யுதா?” என்று கழுத்தில் கைவைத்து பரிசோதித்தான்.

கனவின் தாக்கத்தில் இருந்தவள், ஒருவித மயக்கத்தில் அவன் கையை தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு, “உடம்பு நல்லாதான் இருக்கு. மனசுதான்...”

“மனசுக்கென்ன? புரியலை?” என்றவன் அதன்பின்னே அருகில் இருப்பவள் முகம் நிமிர்த்திப் பார்க்க, எதை வேண்டவே வேண்டாம் என்றாளோ, எதை வார்த்தையாகக் கூடக் கேட்கமாட்டேன் என்றாளோ, அதை அப்பட்டமாய் பலவித வர்ணஜாலங்களில் காட்டிக்கொண்டிருந்தன அவள் விழிகள்.

“ரதிப்பொண்ணு!” அவள் கண்களில் காதலைப் படித்தானோ! இன்னும் அவளருகில் நெருங்கி, “உன் கண்ணு என்னவோ சொல்லுதே ரதிப்பொண்ணு. நிஜமா?” என்றான் மென்மையாக.

“ம்... இருக்கலாம். ஆனா, என்ன சொல்லுது?”

“என்னென்னவோ சொல்லுது. அதை எப்படி விவரிக்குறதுன்னு தெரியலை. வித் யுவர் பெர்மிஷன்” என்றவனின் வில்லங்கமான விளிப்பில் விழிகள் விரிய, கன்னத்தில் இச்சொன்றை நச்சென்று வைத்து எழுந்து ஓடிவிட்டான்.


“அழகா!” அவளின் அழைத்தல் கேட்காது போய்விட, கன்னம் தொட்டு ஈரம் உணர்ந்தவளுக்கு அழையா விருந்தாளியாய் நாணம்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top