Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 259
- Thread Author
- #1
பாரவி இட்ட தீ
மகேந்திர சக்கரவர்த்தி சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது அவ்விடததில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் கோலாகலத்தையும் சொல்லி முடியாது. சற்று நேரம் வரையில் ஒரே ஜயகோஷமும் எதிரொலியுமாயிருந்தது.
மாமல்லர் பாய்ந்து சென்று மகேந்திர பல்லவரைத் தழுவிக் கொண்டார். மந்திரிகளும் அமைச்சர்களும் கோட்டத் தலைவர்களும் சம்பிரதாய மரியாதைகளை மறந்தவர்களாய் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கொண்டார்கள். ஏககாலத்தில் பலர் பேச முயன்றார்கள்.
தளபதி பரஞ்சோதி மட்டும் சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக நின்றார். அவருடைய கண்களிலே வெட்கத்தின் அறிகுறி காணப்பட்டது. "நான்கூட ஏமாந்து போனேனல்லவா? சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும், இவர் பகைவர்களால் சிறைப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பி விட்டேனல்லவா?" என்ற எண்ணத்தினால் அவ்வீர வாலிபர் வெட்கமடைந்தார் போலும்!
ஆரவாரம் சற்று அடங்கியதும், மகேந்திர சக்கரவர்த்தி சபையோரைச் சுற்றி வளைத்துப் பார்த்து, "ஏது, எல்லாரும் ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள்? உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்தால், யுத்தத்திலேயே ஜயித்துவிட்டது மாதிரி தோன்றுகிறதே? நமது கோட்டைத் தளபதி மட்டும் சிறிது வாட்டமடைந்து காணப்படுகிறார்!" என்றபோது எல்லாருடைய கண்களும் பரஞ்சோதியை நோக்க, அவருடைய வெட்கம் இன்னும் அதிகமாயிற்று.
முதன் மந்திரி சாரங்கதேவர், "பல்லவேந்திரா! தாங்கள் வருவதற்கு ஒரு வினாடி நேரத்துக்கு முன்னால்தான், நம் சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டுபோய்ப் புலிகேசியுடன் போர் நடத்துவதாக நாங்கள் இங்கே தீர்மானித்திருந்தோம். தங்களுடைய வரவினால் அதற்கு இடமில்லாமற் போய்விட்டதே என்று நமது கோட்டைத் தளபதிக்கு வருத்தமாயிருக்கலாம்!" என்றார்.
"என்ன? என்ன? நம்முடைய சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டு போவதாக உத்தேசமா? இந்த அபூர்வமான யோசனையை யார் செய்தது? சேனாபதி! எப்படி என்னுடைய கட்டளையை மீறத் துணிந்தீர்? உமக்குக்கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா?" என்று பல்லவேந்திரர் சிம்ம கர்ஜனை போன்ற குரலில் கேட்க, சேனாபதி கலிப்பகையார் தாழ்ந்த குரலில், "பிரபு! தாங்கள் பகைவர்களால் சிறைப்பட்டிருப்பதைக் கேட்டபிறகு நாங்கள் எப்படிக் கோட்டைக்குள்ளே, பதுங்கிக் கொண்டிருக்கமுடியும்? தங்களை விடுவிக்க முடியாத பல்லவ சைனியம் இருந்தென்ன, இல்லாமற் போயென்ன?" என்றார்.
"ஆகா! நான் பகைவர்களால் சிறைப்பட்டிருந்தேனா? இது என்ன கதை?" என்று சக்கரவர்த்தி கேட்டபோது, அங்கே கூடியிருந்தவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
முதன் மந்திரி சாரங்கதேவர், சற்று முன்னால் சக்கரவர்த்தியின் தூதன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்ததையும், அவன் கூறிய அதிசயமான செய்தியையும், அதன்மேல் தாங்கள் தீர்மானித்ததையும் சுருக்கமாகக் கூறினார்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "ஆகா! நாகநந்தியடிகள் நான் நினைத்ததற்கு மேலே கெட்டிக்காரராயிருக்கிறார். சற்று நேரம் தாமதித்து வந்திருந்தேனானால் காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்குமே!" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.
"பிரபு! அப்படியானால், அந்தத் தூதன் கூறியது பொய்யா? தாங்கள் பகைவர்களிடம் சிறைப்படவில்லையா?" என்று சேனாபதி கலிப்பகையார் கேட்க மகேந்திரர் கூறினார்: "அது பொய்தான், நான் பகைவர்களிடம் சிறைப்படவில்லை. அப்படி நான் சிறைப்பட்டிருந்தாலும் என்னை விடுவிப்பதற்காக நீங்கள் படை திரட்டிக்கொண்டு புறப்பட்டிருக்க வேண்டியதில்லை. என்னை விடுவித்துக் கொள்ள எனக்குத் தெரியும். முன்பின் தெரியாத தூதனுடைய வார்த்தையை அவ்வளவுக்கு நீங்கள் நம்பி விட்டீர்களே? நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் என்பதை மாமல்லனாவது பரஞ்சோதியாவது உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா?"
"பிரபு! தாங்கள் சிறைப்பட்டீர்கள் என்ற செய்தி என்னுடைய அறிவைக் குழப்பிவிட்டது. பல்லவ குமாரரும் மனம் கலங்கிப்போய் விட்டார்" என்றார் பரஞ்சோதி.
"அவன் ஒற்றனா? அப்படியானால் சிங்க இலச்சினை அவனிடம் எப்படி வந்தது?" என்று முதல் அமைச்சர் கேட்டார்.
"நான்தான் அவனிடம் கொடுத்தேன். இந்த அதிசாமர்த்தியசாலியான ஒற்றனைக் கைப்பிடியாய்ப் பிடிப்பதற்காகவே நான் வடக்குப் போர் முனையிலிருந்து தெற்கே போயிருந்தேன்..."
"பிரபு! எதிரியின் ஒற்றனிடம் சிங்க இலச்சினை ஏன் கொடுத்தீர்கள்? கொடுத்தபோது அவன் ஒற்றன் என்று தெரியாதா?"
"ஒன்பது மாதத்துக்கு முன்னாலேயே தெரியும். நமது கோட்டைத் தளபதி காஞ்சிக்கு வந்த அன்றே அந்தச் சந்தேகம் என் மனத்தில் உதித்தது. வாதாபி ஒற்றர்கள் பல்லவ ராஜ்யமெங்கும் பௌத்த சங்கங்களின் மூலமாக வேலை செய்து வருவதை அறிந்தேன். அவர்களையெல்லாம் பிடிப்பதற்காக இத்தனை நாளும் நாகநந்தியை வெளியில் விட்டிருந்தேன். கோட்டை முற்றுகை தொடங்குவதற்குள் நாகநந்தியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு தெற்கே போனேன். கடைசியாக, மண்டபப்பட்டுக் கிராமத்தில் கண்டுபிடித்தேன்."
"என்ன, மண்டபப்பட்டிலா?" என்று மாமல்லர் தூக்கி வாரிப் போட்டவராகக் கேட்டார்.
"ஆமாம், மாமல்லா! மண்டபப்பட்டிலேதான் அங்கே நமது ஆயனரையும் சிவகாமியையும்கூடப் பார்த்தேன். அவர்களைப் பெரும் வெள்ளத்திலிருந்து நீ காப்பாற்றியது பற்றிச் சொன்னார்கள். இருவரும் சந்தோஷமாயிருக்கிறார்கள். ஆயனர் அங்கே மலைக்கோயில் அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்குத் தக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். நாகநந்தியைத் தேடிக்கொண்டு மண்டபப்பட்டுக்குப் போனதில் இந்த ஒரு நன்மையும் ஏற்பட்டது.."
ஆயனரும் சிவகாமியும் எதிரிகளின் ஒற்றர்கள் என்று நாகநந்தி கூறிய விஷங்கலந்த வார்த்தைகளினால் புண்பட்டிருந்த மாமல்லரின் உள்ளம் இதைக் கேட்டுக் குதூகலித்தது. அவருடைய மனத்தில் பொங்கிய உற்சாகம் முகமலர்ச்சியாகப் பரிணமித்தது.
"பிரபு! ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டதா?" என்று சேனாதிபதி கலிப்பகை கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.
அவருக்குப் போர்க்களத்தில் யுத்தம் செய்யும் முறைதான் தெரியுமே தவிர, இந்த மாதிரி ஒற்றர் தந்திரங்களெல்லாம் தலை வேதனை அளித்தன.