Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
❤காதல் ஓவியம்❤
ஓவியம்.9
“என்ன மாமா? என் மேல கோவமா இருக்கியா?”
“இல்ல கோபம் எல்லாம் இல்ல. சின்ன வருத்தம் தான்.”
“என்ன வருத்தம்? இன்னும் கேட்டால் நான் தான் உன் மேல வருத்தப்படனும்” என்றாள் முல்லை.
“ஏன் என்மேல உனக்கு என்ன வருத்தம்?” என்றான் புரியாது.
“ஆமா நீ எப்படியெல்லாம் இருக்க வேண்டியவன். இது என்ன திருடன் என்று ஒரு பழியை சுமந்துகிட்டு இப்படி சுத்திகிட்டு இருக்க?”
“நான் திருடன்ன்னு பெயர் வாங்க யார் காரணம்னு உனக்கு தெரியாதா?”
“ஏன் மாமா? என்னால தான் நீ திருடன் என்று பெயர் வாங்கினன்னு சொல்லாம சொல்றியா?”
“பைத்தியம் மாதிரி பேசாத. என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் உன் அம்மா தானே தவிர. நீ இல்ல.”
“அப்புறம் ஏன் மாமா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீ என்கிட்ட கோவப்பட்டு அப்படி கத்திட்டு, என்னை தள்ளி விட்டுட்டு போன?”
“அது அது வந்து.”
“சொல்லு மாமா. என்னை உனக்கு பிடிக்கலையா? அப்பச் சின்ன வயசுல இருந்து நான்தான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை காதலிக்கலை. அப்படித்தானே?”
“யார் சொன்னது? நான் உன்னை சின்ன வயசில இருந்து நேசித்தேன் தான்டி. இன்னும் கேட்டா நான் உன்னை முதன் முதலில் கோவில்ல பார்க்கும் போது, உனக்கு பார்வை இல்லன்னு தெரிஞ்சு, உன் கண்ணில் நான் சின்ன வயசில் விரும்பிய அதே ஓவியாவை பார்த்து தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனால், எப்போ நீ மயங்கி கீழே விழுந்து இந்த வீட்டுக்கு உன்னை அழைச்சுகிட்டு வந்தேனோ, அப்பவே நீ தான் என் முல்லையோவியம் என்ற சந்தேகம் இருந்துச்சு. ஆனா, அதுக்கு பிறகு உன்னை நான் உன் அக்கா கூட பார்க்கும் போது, நீ ஒன்னு பேசி, நான் கோபத்துல உன் கழுத்துல தாலி கட்டிட்டேன்.”
“அதுக்கு அப்புறம்தான் அன்னைக்கு நைட்டு நானும், சித்தியும் பேசும்பொழுது சித்தி என்கிட்ட கோபப்பட்டாங்க. உனக்கு கல்யாணம்ன்னு நடந்தால் அது ஓவியா கூட தான்னு சொன்னேனே. நீ எப்படி வழியில ஒருத்தவளை பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு எனக்கிட்ட சத்தம் போட்டாங்க. ஆனா, எனக்கு அப்போ தெரியல நீதான் என் முல்லைன்னு.” என்றான் விளக்கமாக.
“பொய் சொல்லாத மாமா. நீ என்னை மறந்துட்ட.”
“உண்மைதான். ஆனால், ஏதோ ஒரு மாயை. என்னுடைய மனசு அடுத்த நிலைமைக்கு யோசிக்க முடியாமல் ஆக்கிடுச்சு. எது எப்படியோ, நான் உன்னை முல்லைன்னு தெரியாம தான் கல்யாணம் பண்ணேன். ஆனா நீ போலீஸ்ன்னும் எனக்குத் தெரியாது. போலீஸ்ன்னு எனக்கு தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா உன் கழுத்துல நான் தாலி கட்டி இருக்க மாட்டேன்.”
“இல்ல நீ பொய் சொல்ற? என்னை சமாளிப்பதற்காக நீ என்னன்னமோ பொய் சொல்ற?”
“சரி என்னை நம்புறதும் நம்பாததும் உன்னோட இஷ்டம்” என்றான் அவன்.
“அத விடு மாமா. நீ எதோ கண்டிஷன் சொன்னியே என்ன அது?
“சொல்றேன் இரு. நீ என் கூட வாழனும்னா...”
“நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு?”
“இங்க பாரு. முதல் கண்டிஷன் உன் தொழில்ல நான் தலையிட மாட்டேன். என் தொழில்ல நீ தலையிடக்கூடாது.”
“அப்படினா?”
“அப்படினா, நான் காலத்துக்கும் இந்த திருட்டு தொழிலை தான் பண்ணுவேன்” என்றான்.
“மாமாஆஆ...”
“இரு நான் சொல்லி முடிச்சுடுறேன். அடுத்த கண்டிஷன், எக்காரணத்தைக் கொண்டும் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆன விஷயம், உன் அம்மாவுக்கு தெரியக்கூடாது.”
“அது எப்படிமாமா?” தெரிஞ்சா தானே நான் உன் கூட இருக்க முடியும்?”
“இப்போதைக்கு தெரியத் தேவையில்ல. தெரிஞ்சிக்கும் போது அவங்களாவே தெரிஞ்சுக்கட்டும்.
“ம்... சரி.”
“அடுத்தது, இப்போதைக்கு நமக்குள்ள அன்னியோன்ய வாழ்க்கை எதுவும்...” அவன் முடிக்கும் முன்,
“மாமா நிறுத்து. அந்த ஒரு கண்டிஷன் மட்டும் வேண்டாம். உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியாது. நீ என்னை என்னன்னு நெனச்ச? என்னை என் அம்மா மாதிரின்னு நினைச்சியா? இல்ல மாமா. அந்த எட்டு வயசுல உன்னை நான் இழந்துட்டு இந்த நிமிஷம் வரை, உன் காதலுக்கு என்னை பரிசளிக்க தான் காத்துக்கிட்டு இருக்கேன். அந்த அன்பு உனக்கு புரியவே புரியாது இல்ல.” என்றாள் ஆதங்கமாக.
“ஏய்! இல்ல. நான் சொல்ல வரது என்னன்னா...”
“போதும் மாமா நிறுத்து. நீ அவசரப்பட்டு அவசரப்பட்டு உன் வாழ்க்கையில எவ்வளவு விஷயத்தை இழந்துட்ட தெரியுமா?” என்றாள்.
“யாருடி அவசரப்பட்டது. அந்த அகில் உன்னை என்னெல்லாம் பேசினான். அதை பாத்துக்கிட்டு என்னை சும்மா இருக்க சொல்றியா?” என்றான் கோபமாக.
“இல்ல இல்ல மாமா. நீ எனக்காக தான் அந்த காரியம் பண்ணன்னு எனக்கு தெரியும். இருந்தாலும்...”
“இங்க பாரு முல்லை. முடிந்த விஷயத்தை பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. என்னை அவங்க சீர்திருத்த பள்ளியில் சேர்த்துட்டு, கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் நான் படாதபாடு பட்டுட்டேன். 18 வயசுல நான் வெளியே வரும்போது எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லைன்னு நினைச்சேன். ஆனா, என் சித்தி அவங்க அவங்களோட வாழ்க்கையாவே நினைத்து இன்ன வரைக்கும் எனக்காக வாழ்ந்துட்டு இருக்காங்க. நான் என்ன தான் அவங்கள கலாய்ச்சு பேசினாலும், எனக்கு கண்கண்ட கடவுள் அவங்க தான்.”
“தெரியும் மாமா.”
“என்ன தெரிஞ்சு, என்ன புரோஜனம்? என் வாழ்க்கையும் என் சித்தி வாழ்க்கையும் நாசமானதுக்கு உன் அம்மா தானே காரணம்.” என்றான்.
“அதுவும் தெரியும் மாமா. ஆனா, அம்மா எதையும் வேணுமின்னே செய்யலையே.”
“போதும். உன் அம்மா புராணத்தை நீ பேசப் போற என்றால், இப்பவே நீ கிளம்பி போய்க்கிட்டே இருக்கலாம்.”
“சும்மா போ போன்னு சொல்லாத மாமா. உன்னை விட்டு நான் இனிமேல் எங்கேயும் போகமாட்டேன்.” என்று சொன்ன முல்லை கதிரை கட்டிக் கொண்டாள்.
“ஏய்! இப்ப எதுக்கு நீ அழுவுற”
“நான் இந்த நிமிஷம் அழுவுறது தானே உன் கண்ணுக்கு தெரியுது. என் எட்டு வயசுல இருந்து உனக்காக நான் அழுதுகிட்டு தான் இருக்கேன். அது தெரியுமா உனக்கு?”
“என்னடி உளர்ற?”
“ஆமா மாமா. நான் ஒரு நாள் தூக்கத்தில் உன் பெயரை சொல்லி உளறினேன்னு, அன்னைக்கு நைட்டு ஃபுல்லா என் அம்மா என்னை அந்த அகிலொட பேச்சைக் கேட்டுக்கிட்டு நடுராத்திரியில் மொட்டை மாடியில நிற்க வைத்தாங்க தெரியுமா?”
“என்னடி சொல்ற?”
“ஆமா. இதெல்லாம் கொஞ்சம் தான். இன்னும் எவ்வளவு கஷ்டத்தை நான் அனுபவிச்சேன்னு உனக்கு என்ன தெரியும்? வருஷ வருஷம் என் பிறந்த நாளைக்கு என் கையில உன் பேரை நீ ஓவியமா வரைவ இல்ல. ம்... நீ மறந்து இருப்ப மாமா” என்றாள்.
“இல்லடி மறக்கல.”
“அதே மாதிரி எனக்கு நீ ஜெயிலுக்கு போன மறு வருஷம் பிறந்தநாள் வந்துச்சு. உன்னுடைய பெயரை உன் ஞாபகமா நானே என்னுடைய உள்ளங்கையில் எழுதும்போது, இதே அகில் என் அம்மாகிட்ட சொல்லி இந்த கையில என்னை எவ்வளவு தடவை அடி வாங்க வெச்சான் தெரியுமா? இப்படியே அவனுடைய அட்டூழியம் தாங்கவே முடியல. அப்பப்ப அவன் என்கிட்ட ரொம்ப தப்பா நடந்துக்க பார்த்தான். எனக்கு வீட்டில் இருக்கவே பிடிக்காமல், நான் அப்பாகிட்ட சொல்லி ஹாஸ்டல்ல சேர்ந்துட்டேன்.”
“இன்னொரு விஷயம் தெரியுமா? நான் ஹாஸ்டல்ல இருந்தாலும் சரி, வீட்ல இருந்தாலும் சரி. தரையில் தான் படுத்துப்பேன். கஞ்சி சோறு தான் மாமா சாப்பிடுவேன். என்னுடைய கதிர் மாமா ஜெயிலில் அஞ்சு வருஷம் அனுபவித்த எல்லா தண்டனையையும் நானும் அனுபவிக்கணுமுன்னு, இந்த அஞ்சு வருஷமும் நானும் வீட்டிலேயே சிறையில் வாழற மாதிரி தான் மாமா இருந்தேன். அதுக்கப்புறமா என்னுடைய 13 வயசுல தான் நான் இவன்கிட்ட இருந்து என்னை காப்பாற்றிப்பதற்காக ஹாஸ்டல்ல போய் சேர்ந்தேன். அப்படி இருந்தும் லீவுக்கு வரும் பொழுதெல்லாம் என்கிட்ட இவன் ரொம்ப தகாத வார்த்தை பேசுவான். தப்பா நடந்துக்க பாப்பான். அம்மாகிட்ட சொன்னா அம்மாவுக்கு அதெல்லாம் புரியாது. நான் உன் மேல இருக்கிற அன்பில் தான் அகில் மேல பொய் சொல்றேன்னு என்னையே திட்டுவாங்க.
“உன் அம்மாவுக்கு...” என்று கதிர் பல்லைக் கடிக்க,
“வேணாம் மாமா. அவங்க எல்லாம் யாரும் எனக்கு வேண்டாம். நீ மட்டும் போதும். என்னைக்கு நான் உன்னை பார்ப்பேன் என்று ஒவ்வொரு நாளும் காத்துகிட்டு இருப்பேன் தெரியுமா. ரோட்ல யாராவது உன் பெயரை சொல்லிக் கூப்பிட்டால் கூட, பைத்தியம் மாதிரி ஓடி போயி அவங்க நீயாக இருக்க கூடாதான்னு ஏங்கி இருக்கேன். உனக்கு எங்க என் காதல் தெரியப்போகுது? ஏன் மாமா நீ இருக்கிற இடத்துக்கு உன்னை நான் தேடி வருவது எனக்கு கஷ்டம். ஆனால் நீ நினைச்சிருந்தா என்னை பாக்க வந்திருக்கலாமே. நீ என்னை மறந்துட்ட மாமா. உனக்கு என்னை பிடிக்கல. அதனாலதான் ரோட்டில் நின்னு இருந்த எதோ ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுன. ஆனா, இப்போ என்னடானா பாசமா பேசுற” என்று தன் ஆதங்கத்தையும் சேர்த்து சொன்னாள்.
“உன்மை தான்டி. உன்னை பார்த்த முதல் நாளே நீ ஓவியாவா இருக்கக்கூடாதுன்னு ஒரு மனசு நினைத்தாலும். நீ என் முல்லையா இருக்கணும்னு தான் என் மனசு ஏங்குச்சு. அதுக்கப்புறம் உன்னை பார்க்க பார்க்க எனக்காக பிறந்தவள் நீ என்ற எண்ணம் என் மனசுல ஆழமா பதிஞ்சுச்சு. அதனாலதான் என்னையே அறியாமல் உன் கழுத்தில் தாலி கட்டினேன். அதுக்கப்புறம் நீ போலிஸ்ன்னு தெரிஞ்சவுடனே எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிருச்சு. அதைவிட பெரிய கஷ்டம் உன் அம்மா இந்துன்னு தெரிஞ்ச உடனே எனக்கு நரக வேதனையா இருந்துச்சு. அதனால தான் உன்கிட்ட நான் கோச்சுக்கிட்டேன்.”