- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
11
அவளுக்கும் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் எண்ணமில்லை. ஏனெனில் முதல் திருமணத்தில் இருந்த எதிர்பார்ப்பு, ஆர்வம், பயம், தவிப்பு எதுவும் அவளிடம் இல்லை. ‘அவர்கள் மிரட்டினால் தான் ஏன் சம்மதித்தோம்? என்னை என்ன கொன்றா போட்டுவிடுவார்கள், வேறு மாதிரி எதிர்த்திருக்கலாமே? எது என்னை கட்டிப்போட்டது?’ என்ற எண்ணமே!
என்னதான் குழந்தை, தாய்க்காக என்று முடிவெடுத்தாலும் இத்துடன் முடித்துவிட்டு ஓடிவிடுவோமா என்ற உணர்வு அவளுள் எழவும், அவளின் பாவனை மாற, அதனை உணர்ந்தனரோ அவளின் நலம் விரும்பிகள்.
சட்டென சுதாரித்து, மாங்கல்யத்தை மணமகன் கையில் கொடுத்து கட்டச் சொல்ல, “ஓய்... ரதிப்பொண்ணு!” என்ற குரலில் சட்டென நிமிர்ந்து அவனைக் கண்டவள் விழிகள் அதிர்ச்சியில் நேர் நோக்க, பட்டென ஒரு புன்னகையைக் கொடுத்து, “மிஸஸ்” என்று ஒரு முடிச்சிட்டவன், “அனுரதி” என்று இரண்டாம் முடிச்சிட, “அறிவழகன்” என்று உச்சரித்து மூன்றாம் முடிச்சிட்டு மனைவியாக்கி, “மிஸஸ்.அனுரதி அறிவழகன்” என்று கண்சிமிட்ட, அவள் கண்களோ கொலைவெறிக்கு மாறியிருந்தது.
வேகமாக தாயிடம் திரும்ப அவர் சாதாரணமாகவே இருந்தார். அதற்குமேல் முடியாதென்பதாய் எழப்போனவளை மாலினி அழுத்திப் பிடித்து உட்கார வைக்க, ‘உனக்கு முன்னவே தெரியுமா?’ என்று தோழியைப் பார்க்க, அவளோ, ‘இல்லை மேடைக்கு வரும் பொழுதுதான்’ என கண்களாலேயே பதிலையும் சொன்னாள். மாலினிக்குமே மின்னஞ்சல் வந்த பொழுதுதான் தெரிந்தது. தோழியிடம் கேட்காது சாரதாவிடம் கேட்டு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டாள்.
“ப்ச்...” என சலிப்பாக அனுரதி அமர, அதற்குள் நெற்றியில் குங்குமம் இடப்பட்டது. சுற்றிலும் உள்ளவர்களுக்கு நிம்மதியான உணர்வு.
மனைவியின் முகம் அறிவழகனை உஷார்படுத்த, மச்சினன் அரவிந்துடன் பேச ஆரம்பித்துவிட்டான். அடுத்து சந்நிதி முன் மாலை மாற்றி வணங்கி, பின், அனுரதியின் திருமணத்தை அவள் அண்டை வீடுகளுக்கு அறிவிக்க என்று பெண் வீடு சென்றார்கள்.
விஷயம் அறிந்து வந்த அண்டை வீட்டினர் சிலர் வாழ்த்த, சிலர் நேரில் வாழ்த்தி, பின்னால் புறணி பேச என்று சற்று நேரத்திற்கெல்லாம் கல்யாணக் கலையைக் கொடுத்தது வீடு.
அறிவழகனோ படுகூலாக அமர்ந்திருக்க, அனுரதியோ எனக்கென்ன வந்தது என மேம்போக்காய் அமர்ந்திருந்தாள்.
பால் பழம் அவனிடம் கொடுக்க, அறிவழகனோ அதை மனைவியிடம் கொடுக்க, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாலும், வாங்கிக் குடிப்பதுபோல் பாவனை செய்து அவனிடமே திருப்பிக்கொடுத்தாள்.
“ரொம்ப குடிச்சிட்டீங்க மிஸஸ்.அறிவழகன். எனக்கு பால் இல்லவேயில்லை. பாருங்க” என்று அவளிடம் காண்பிக்க, அரவிந்த், மாலினி, கண்ணன் மூவரும் சிரிக்க, பெரியவர்கள் சிரிப்பை வாய்க்குள் அடக்க, அவளோ அனைவரையும் முறைக்க என நேரம் இலகுவாகவே சென்றது.
அக்கம் பக்கத்தினரை மாலை வரவேற்புக்கு அழைத்து, சற்று நேரத்திற்கெல்லாம் புகுந்த வீடு செல்ல கிளம்பச் சொல்லுகையில், அவள் மனம், அவன் வீடு செல்ல பிடிவாதக் குழந்தையாய் மறுத்தது. தாயின் கொஞ்சல், தம்பியின் கெஞ்சல், தோழியின் கண்டிப்பு அனைத்தையும் மீறி பிடிவாதமாய் அறைக்குள் அமர்ந்திருந்தாள்.
பொறுமையாக எழுந்து அறைக்குள் வந்த அறிவழகன், அனைவரையும் சைகையால் வெளியேறச் சொல்ல, சிறு புன்னகையுடனும், தயக்கத்துடனும், கோவத்தில் கணவனை எதுவும் சொல்லிவிடுவாளோ என்ற பயத்துடனும் சென்றார்கள்.
“ஏங்க என்ன இப்படி குழந்தை மாதிரி அழுது அடம்பிடிக்குறீங்க? உங்களை நான் பெரிய பொண்ணுன்னு நினைத்தேன். நீங்க என்னடான்னா... ப்ச்... போங்க மிஸஸ்.அறிவழகன்” என்று கட்டிலின் மறுபுறம் அமர்ந்தான்.
“ஹேய்! கட்டில்ல ஏன் உட்காருறீங்க? எழுந்திருங்க. அப்புறம் மிஸஸ்.அறிவழகன்னு இன்னொரு டைம் சொன்னா அவ்வளவுதான். இந்த மாதிரி உரிமை எடுக்கிறதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்” என்றவள் உடலில் லேசான நடுக்கத்துடன் கண்களில் சிறு பயமும் இருந்தது..
“ஏன் பயப்படுறீங்க? வேற இடம் இல்லைன்றதாலதான் உட்கார்ந்தேன்” என்றான் அமைதியாக.
“இடம் இல்லைன்னா நின்னுட்டே இருங்க. இந்த மாதிரி பக்கத்துல உட்கார்றது, சந்தர்ப்பம் கிடைச்சா தொட்டுப் பேசுறதுன்னு இருந்தா...”
“இருந்தா?”
“ஹெவி பனிஷ்மெண்ட் கிடைக்கும்” என்று அச்சுறுத்தினாள்.
‘எனக்கே மிரட்டலா’ என்றெண்ணிச் சிரித்தவன், “இதோ எழுந்திருச்சிருறேன்” என்று அவள் முன் வந்து பவ்யமாய் நின்றான்.
“ஏன் சொல்லலை?” என்றாள் மொட்டையாக.
“புரியலை? என்ன சொல்லலை?”
“அபிராமி மேடம் பையன்னு?”
“ஓ... அதுவா. நீங்க மாப்பிள்ளை யாரு, என்ன, ஏதுன்னு கேட்கலை. ஒருவேளை கேட்டிருந்தா விவரமா சொல்லியிருப்பாங்க. நாங்களா வான்டடா சொல்லி உங்களை சங்கடப்படுத்த வேண்டாம்னு சொல்லலை. நீங்க கேட்பீங்கன்னு நினைத்தேன். ஹ்ம்... சரி விடுங்க. வாங்க வீட்டுக்குப் போகலாம்” என்றான் சாதாரணமாக.
அவளோ எழவில்லை. மூளை எதையும் யோசிக்க மறுக்க ஒருவித குழப்பத்தில் அமர்ந்திருந்தாள்.
“முடிந்து போன எந்தச் சம்பவமும், உங்க... சாரி நம்ம வாழ்க்கையில் வராது. வாழ்க்கையைப் பற்றிய பயம் இருந்தா, அந்தக் கவலையை காலடியில் போட்டுட்டு, மகிழ்ச்சியை மனசுல ஏத்திக்கிட்டு வாங்க. நான் இருக்கேன் உங்களுக்கு” என்றான் மென்குரலில்.
“எல்லாமே நல்ல பாய்ண்ட்தான். ஆனா, பாருங்க அட்வைஸ்...”
“யார் வேணும்னாலும் பண்ணலாம். அனுபவிக்கிறவங்களுக்குதான் வலி, வேதனையின் வேகம் புரியும். சரியா? ஏங்க நான் சொன்னது அறிவுரை இல்லை அட்வைஸ்” என்று அவள் வார்த்தையை மறித்துப் பேசியதில், ‘அடப்பைத்தியமே!’ என்று அனுரதி கணவனைப் பார்த்தாள்.
“என்ன கேவலமா லுக் விடுறீங்க?”
“ஹ்ம்... அறிவுரைக்கும், அட்வைஸ்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சேன். எப்படி யோசிச்சாலும் ஒரே அர்த்தம்தான் வருது” என்றாள் நக்கலாக.
“அப்படியா சொல்றீங்க? டங்க் ஸ்லிப்பாகிருக்கும்” என்று மெல்ல கட்டிலில் அவளருகில் அமரப்போக,
“மேனேஜர் சார்! செப்பல் கூட ஸ்லிப்பாகும். பார்க்குறீங்களா? முதல்ல கட்டிலை விட்டு எழுந்திரு. இருக்க இடம் கொடுத்தா படுக்கப் பாய் கேட்ட கதையா இருக்கு நீ பண்றதைப் பார்த்தா. எழுந்திரு சொல்றேன்ல” என்று அதட்டல் போட்டாள்.
“மிஸஸ்.அறிவழகன் செப்பல் ஸ்லிப்பாகுறதை அப்புறமா பார்க்கலாம். நீங்க இருக்க மட்டும் இடம் கொடுங்க போதும். படுக்கப் பாயெல்லாம் கேட்கமாட்டேன். வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றம்” என்றான் அப்பாவியாய்.
‘அப்படியா?’ என்பதாய் அவனைப் பார்க்க,
“நிஜம்ங்க. பாய்க்குப் பதிலா, கட்டில்ல ஒரு ஓரமா படுக்க இடம் கொடுங்க போதும்” என முடிக்கும் முன் அவன்மேல் தலையணை வந்து விழ, “ஏங்க இவ்வளவு கோவம்? நீங்க இவ்வளவு கோவப்பட்டா, நம்ம குழந்தையும் உங்க மாதிரி கோவக்காரவங்களா பிறக்கப் போறாங்க” என்று இன்னும் அவளைக் கடுப்பேற்றினான்.
அனுரதி அவனைத் திட்ட வாயெடுக்க, “கிளம்பியாச்சா?” என்று வெளியில் இருந்து குரல் கேட்கவும், அதுவரை மனைவியின் மனநிலையை மாற்றப் பேசிக்கொண்டிருந்தவன் விளையாட்டைக் கைவிட்டு, “உங்க அம்மா, தம்பியை நாம பார்த்துக்கலாம்ங்க. இல்லை வேற எதாவது இருந்தாலும் நம்ம வீட்டுல போயி பேசிக்கலாம். இங்க வேண்டாம். உங்க அம்மாவோட தவிப்பு உங்களுக்குத் தெரியலையா? நம்ம பொண்ணு புருஷனோட சந்தோஷமா இருக்கணும்னு, ஆயிரம் கடவுளை வேண்டிட்டு இருக்காங்க. உங்க தம்பி, சொல்லவே வேண்டாம். அக்காவுக்காக அவ்வளவு பாடுபட்டவன். நீங்க வாழப்போற வாழ்க்கைதான் அவனுக்கான நிம்மதி” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தான் அறிவழகன்.
கணவனின் கூற்று நூறு சதவீதம் உண்மை என்று தெரிந்தாலும், அவனுக்கு முன் தன் வீம்பை விட்டுக்கொடுக்க விரும்பாது, “என்ன சென்டிமெண்டா? அதெல்லாம் வேலைக்காகாது. போங்க சார்” என்றாள் கடுப்பாக.
“அட இப்பதான்ங்க புரியுது. சினிமாவுல மாதிரி புருஷனே தூக்கிட்டுப் போகணும்னு ஆசையில இருக்கீங்களா? இதை அப்பவே சொல்லியிருக்கலாமேங்க. அச்சோ! இவ்வளவு நேரம் வேஸ்டா போச்சே. வாங்க போகலாம்” என்று அவளை தூக்குவதற்காக நெருங்கினான்.
“ஏ...ஏய்...” என துள்ளி எழுந்தவள், “அறிவிருக்கா உனக்கு?” என்று அடுத்த வார்த்தை பேசுமுன், “அதெல்லாம் நாளைக்குக் கடையில் போயி வாங்கிக்கலாம். நீங்க வாங்க” என்று இன்னும் நெருங்கினான்.
“வே...வேண்டாம் நா... நானே வர்றேன். நீ... நீ போ” என்று அவனை விரட்ட,
“சரிங்க” என்று வாசல் திறந்தவன் வெளியே செல்லும் முன், “மிஸஸ்.அறிவழகன் இதுவும் அறிவுரை இல்லை அட்வைஸா எடுத்துக்கோங்க. சட்டுன்னு துள்ளி எழுந்துக்குறது, அளவுக்கதிகமா உணர்ச்சிவசப்படுறது, உங்களுக்கும், குழந்தைக்கும் நல்லதில்லை. அட்வைஸா இல்லாட்டியும் ரெக்வஸ்டா எடுத்துக்கோங்க” என்று அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
அவனின் அலப்பறையில் இருந்து வெளியே வந்தவள். “ஷப்பா! இவன் என்ன இப்படி இருக்கான். அந்தம்மா இவனைப் பெத்துச்சா, இல்லை பணம் கொடுத்து செஞ்சிச்சா தெரியலை. ஆக மொத்தம் இரண்டும் ஒவ்வொரு வகை டார்ச்சர்” என்று அவர்களை அஃறிணைப் பொருளாக்கி மனதிற்குள் தாளித்து, பின் அப்படித் திட்டியதற்காக தன்னையே கடிந்து, “அம்மாவுக்காகவும், தம்பிக்காகவும் அப்புறம் இந்த குழந்தைக்காகவும்தான் அவங்க வீட்டுக்குப் போறேன். சமீபமா இந்தக் கோவம் வேற என்னை ரொம்பவும் ஆட்டுவிக்குது. அது அவங்களைப் பாதிக்காமல் இருக்கணும் கடவுளே!” என்ற வேண்டுதலோடு வெளியே வந்தாள்.
தாய் வீட்டில் காலை உணவு முடித்து புகுந்த வீடு வர, ஆரத்தி எடுத்து வலது காலை எடுத்துவைத்து உள்ளே வந்ததும், பூஜையறையில் விளக்கேற்ற, அடுத்து அதே தரமான பால், பழம் சம்பவம் நடந்தது.
ஏனோ, இந்தத் திருமணத்தில் எது நடந்தாலும் கடைசிவரை தோழியை விட்டு விலகமாட்டேன் என்று கூடவே இருந்தாள் மாலினி. இதுவரை அறிவழகன் வீட்டினர் பற்றிய பயம் இல்லையென்றாலும், மனம் தோழியின் நலத்தை நாடியது.
மதிய உணவு முடிந்ததும், மருமகளிடம் வந்த அபிராமி, “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அனுமா. நாலு மணிக்கெல்லாம் ப்யூட்டிஷியன் வந்திருவாங்க. சேலைக்கு ப்ளீட் எடுத்து ரெடியாயிருக்கு. முடிந்தளவு நீயே கட்டிக்கோ. துணைக்கு மாலினி இருக்கா. மத்தவங்கன்னா வயிறைப் பார்த்தா கேள்வி வரும். அது உனக்கும் தர்மசங்கடம். ட்ரெஸ் அந்த ரூம்ல இருக்கு. அங்கேயே ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று வலதுபக்க அறையைக் காண்பித்தார்.
“ஏங்க...” என்று அறிவழகன் ஆரம்பிக்க, விட்டால் போதுமென்று அந்த அறைக்குள் சென்று ஐக்கியமாகிவிட்டாள் அனுரதி.
“ஹா...ஹா... சோ ஸ்வீட்” என கொஞ்சிக் கொண்டான் மிஸ்டர்.அனுரதி.
“அறிவா! என்ன பண்ணின அவளை? நீ வாயைத் திறக்குறதுக்குல்ல தலைதெறிக்க ஓடுறா?”
“அது கணவன் மனைவிக்கான சீக்ரெட் மீ” என்று புன்னகை மாறாது தன்னறைக்குச் சென்று படுத்தான்.