Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 262
- Thread Author
- #1
தியாகப் போட்டி
சிவகாமியின் அலறலைக் கேட்ட சர்ப்பம் சற்று நேரம் திகைத்து நின்றது பிறகு, தன் வழியே போய்விட்டது.
தூரத்தில் பாறைகளுக்கு அப்பாலிருந்து, "சிவகாமி! என்னைக் கூப்பிட்டாயா?" என்று ஆயனரின் குரல் கேட்டது.
"இல்லை அப்பா!" என்று சிவகாமி உரத்த குரலில் கூறினாள்.
இந்த இரண்டு வார்த்தைகள் மாமல்லருக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும் நன்றி உணர்ச்சியையும் உண்டாக்கின என்பதைச் சிவகாமி அவருடைய கரங்களின் ஸ்பரிசத்தினால் உணர்ந்தாள்.
இருவரும் மரத்தடியிலிருந்து சற்று அப்பால் சென்று பட்டப் பகல்போல் வெளிச்சமாயிருந்த பாறையின் மீது உட்கார்ந்தனர்.
"மன்னிப்புக் கேட்பதாகச் சொன்னாயே, சிவகாமி! எதற்காக?" என்று மாமல்லர் கேட்டார்.
"தங்களைப் பற்றிப் பொல்லாத வசை மொழிகளைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்ததற்காக! அம்மொழிகளை நம்பியதற்காக!"
"இவ்வளவுதானே! மன்னித்து விட்டேன் அப்படி யார் என்னைப் பற்றி என்ன கூறினார்கள்?"
"நாகநந்தி என்னும் புத்த பிக்ஷுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமல்லவா? அவர்தான் தங்களைப் 'பயங்கொள்ளிப் பல்லவன்' என்றார். தாங்கள் போர்க்களத்துக்குப் போகப் பயந்து கொண்டு காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சொன்னார், இன்னும் என்னவெல்லாமோ சொன்னார்...."
சிவகாமி கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மாமல்லர், "இதற்காக நாகநந்தியின் மேல் எனக்குக் கோபம் இல்லை என் தந்தைபேரில்தான் கோபம். இராஜ்யத்தைத் தேடி மகாயுத்தம் வந்திருக்கும்போது நான் கோட்டைக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்தால் 'பயங்கொள்ளி' என்று ஏன் ஜனங்கள் சொல்லமாட்டார்கள்?... அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் அதையெல்லாம் நீயும் நம்பினாயா, சிவகாமி?" என்றார்.
"ஆம், பிரபு! நம்பினேன் தங்களைப் பிரிந்திருந்ததில் என் மனவேதனையைச் சகிக்க முடியாமல் அந்த அவதூறுகளை நம்பினேன். 'இவ்வளவு மட்டமான மனுஷரின் காதல் இல்லாமற் போனால்தான் என்ன?' என்று எண்ணுவதில் ஓர் ஆறுதல் உண்டாயிற்று. ஆனாலும், என் வெளி மனம் அப்படி நம்பியதே தவிர, என் உள்நெஞ்சம் 'இதெல்லாம் பொய்' என்று சொல்லிக் கொண்டிருந்தது. 'மாமல்லர் வீர புருஷர்; அவருடைய காதலுக்கு நீ பாத்திரமானவள் அல்ல! ஆகையால், அவரைப் பற்றித் தாழ்வாக எண்ணுகிறாய்! இது உன் நீச குணம்' என்று என் உள் இதயம் எனக்கு இடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது பிரபு! என்னை மன்னிப்பீர்களா?'
"சிவகாமி! உன்னை மன்னிப்பதற்குரிய குற்றம் எதுவும் நீ செய்யவில்லை. அவ்வளவு மன வேதனைக்கு உன்னை ஆளாக்கியதற்காக நான்தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். இனி மேல் என்னைப் பற்றி அத்தகைய அவதூறுகளை நம்பமாட்டாயல்லவா?" என்று கேட்டார் மாமல்லர்.
"ஒருநாளும் நம்பமாட்டேன்; அந்தப் புத்த பிக்ஷுவை மறுபடி பார்க்க நேர்ந்தால் அவரை இலேசில் விடப்போவதில்லை!" என்றாள் சிவகாமி. பிறகு, திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு "பிரபு! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை என்று கதைகளில் சொல்கிறார்களே? அதிலே உங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று தயக்கத்துடன் கேட்டாள்.
"என்ன கேட்கிறாய், சிவகாமி! நம்பிக்கை உண்டா என்றால்?..."
"ஒரு உயிர் ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குப் போவது சாத்தியமாகுமா என்று கேட்டேன். அதாவது, ஒரு மனுஷர் பாம்பு உருவம் எடுத்துக் கொள்ள முடியுமா?..."
இப்படிக் கேட்டபோது சிவகாமியின் உடம்பு மறுபடியும் நடுங்குவதை மாமல்லர் கண்டார். உடனே அவளை ஆதரவோடு தன் அகன்ற மார்பிலே சேர்த்து அணைத்துக் கொண்டு, "இதென்ன வீண் பீதி! மனுஷனாவது, பாம்பு உருவம் கொள்வதாவது? அப்படி ஒருவன் பாம்பு உருவம் எடுத்து உன்னைத் தீண்ட வரும் பட்சத்தில், நான் கருடன் உருவங்கொண்டு வந்து அவனை சம்ஹரிப்பேன், அல்லது உன் எதிரே அவனுடைய விஷப் பல்லைப் பிடுங்கி எறிவேன். நான் இருக்கும்போது உனக்கு ஏன் பயம்?" என்றார்.
"பிரபு! எப்போதும் தாங்கள் என் அருகில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொண்டிருப்பீர்களா? இந்த ஏழைப் பெண்ணைக் காப்பாற்றுவது ஒன்றுதானா உங்களுக்கு வேலை? உங்களுடைய பாதுகாப்பை எதிர்பார்த்து இராஜ்ய லக்ஷ்மி காத்துக் கொண்டிருக்கிறாளே?" என்றாள் சிவகாமி.
"சிவகாமி! நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லு! இராஜ்யம் எக்கேடாவது கெடட்டும் என்று விட்டுவிட்டு உன்னோடு இருந்து விடுகிறேன். உன்னைவிட எனக்கு இராஜ்யம் பெரிதல்ல..." என்று மாமல்லர் கூறிவந்தபோது, சிவகாமி குறுக்கிட்டாள்.
"பிரபு! அவ்வளவு சுயநலக்காரி இல்லை நான். அப்படி உங்களை எனக்கே உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. விஸ்தாரமான சாம்ராஜ்யத்திற்கு உரிமை கொண்டவர் தாங்கள். வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சத்தின் சிம்மாசனத்துக்குத் தனி உரிமை பூண்டவர். எத்தனையோ லட்சம் பிரஜைகள் தங்களுடைய தோள் வலியையும் வாள் வலியையும் நம்பி இந்தப் பெரிய ராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொல்லாத பகைவர்களை விரட்டி அடித்துப் பிரஜைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுடைய இந்த இரு புஜங்களிலும் சார்ந்திருக்கிறது. அத்தகைய புஜங்கள் இன்று இந்த ஏழையை அணைத்துக் கொண்டிருப்பது என்னுடைய பூர்வஜன்மத்து சுகிர்தம். ஆனால், இந்தப் பாக்கியத்தினால் என் தலை திரும்பிப் போய்விடவில்லை. என் பகுத்தறிவை நான் இழந்துவிடவில்லை. பல்லவர் குலம் விளங்கவந்த மாமல்லருடைய வலிமையும் வீரமும் கேவலம் இந்தச் சிற்பியின் மகளைப் பாதுகாப்பதற்காக மட்டும் உபயோகப் படவேண்டும் என்று ஒருநாளும் சொல்லமாட்டேன். அப்பேர்ப்பட்ட மகா தியாகத்தைத் தங்களிடம் நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். இந்தக் கிராமவாசிகள் புள்ளலூர்ச் சண்டையில் தாங்கள் நிகழ்த்திய வீரச் செயல்களைப் பற்றி உற்சாகமாகப் பேசுவது என் காதில் விழும் போது என் உள்ளமும் உடலும் எப்படிப் பூரிக்கின்றன, தெரியுமா?"
"சிவகாமி இந்தக் கிராமவாசிகள் உன்னுடைய நடனக் கலைத் திறனைப் பற்றி பாராட்டும்போது நானும் அப்படித்தான் பூரித்துப் போகிறேன். நினைத்துப் பார்த்தால், என்னுடைய சுய நலத்தைப் பற்றி எனக்கு வெட்கமாய்க்கூட இருக்கிறது."
"தங்களிடம் ஒரு சுயநலத்தையும் நான் காணவில்லையே, பிரபு!"
"நீ காணமாட்டாய், சிவகாமி! உன்னுடைய காதலாகிற பொன்னாடையினால் என்னை நீ போர்த்திவிட்டுப் பார்க்கிறாய். அதனால் என்னிடமுள்ள குற்றங்குறைகளை நீ காணமாட்டாய். ஆனால், என்னுடைய சுயநலத்தை நான் நன்றாக உணர்கிறேன். இறைவன் உனக்கு அற்புதமான கலைச் செல்வத்தை அளித்திருக்கிறார். அதையெல்லாம் நான் எனக்கென்று ஆக்கிக் கொள்ளப் பார்க்கிறேன். என்னைப் போன்ற சுயநலக்காரன் யார்? உன்னுடைய அற்புத நடனக்கலை இறைவனுக்கே உரியது. கேவலம் மனிதர்களுக்கு உரியதல்ல என்று என் தந்தை கூறுவதுண்டு. அதன் பொருள் நேற்று இந்தக் கிராமத்துக் கோயிலில் நீ நடனமாடிய போதுதான் எனக்குத் தெரிந்தது. இறைவனுக்கு உரிய நிவேதனப் பொருளை நான் அபகரிக்கப் பார்ப்பது தெய்வத்துக்குச் செய்யும் அபசாரமாகாதா என்று கூட எண்ணமிட்டேன்..."
சிவகாமி அப்போது எழுந்து மாமல்லருக்கு முன்புறமாக வந்து குனிந்தாள். அவளுடைய உத்தேசத்தை அறிந்து மாமல்லர் அவளைத் தடுப்பதற்கு முன்னால், அவருடைய பாதங்களைத் தொட்டுத் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டாள்.
பின்னர் அவர் எதிரில் அமர்ந்து கூறினாள்: "சுவாமி! என்னுடைய நடனக் கலை இறைவனுக்கே உரியதாயிருக்கும் பட்சத்தில், அந்த உரிமை பூண்ட இறைவன் தாங்கள்தான். அந்த நாளில் நான் ஆர்வத்துடன் என் தந்தையிடம் நடனக் கலையைப் பயின்றதன் காரணம், அடுத்த தடவை தாங்கள் வரும்போது தங்களுக்கு ஆடிக்காட்டி மகிழ்விக்கவேண்டும் என்னும் ஆசையே. எனது நடனக் கலை கனிந்து உணர்ச்சியும் உயிரும் பெற்றதெல்லாம் தங்களுடைய காதலினால்தான். என்னை மறந்து ஆனந்த பரவச நிலையில் நான் ஆடும்போதெல்லாம், தங்களுடைய அன்புக்கு உரிமை பூண்டவள் என்னும் எண்ணமே அந்த ஆனந்த பரவசத்துக்கு ஆதாரமாயிருக்கிறது. திருநாவுக்கரசர் பெருமானின் இனிய தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டு நான் அபிநயம் பிடிக்கும்போது தங்களுடைய திருவுருவந்தான் என் அகக்கண் முன்னால் நிற்கிறது. தங்களால் கிடைத்த இந்தக் கலைச் செல்வத்தை வேறொருவருக்கு உரிமையாக்க எனக்குப் பாத்தியதையில்லை. நடனக் கலை தெய்வத்துக்கும் எட்டாத கலையாகவே இருக்கட்டும். தங்களைக் காட்டிலும் அது எனக்கு உயர்ந்ததல்ல. தாங்கள் வாய்திறந்து ஒரு வார்த்தை சொன்னால் போதும். உடனே அந்த நடனக் கலையை இந்த நதிப் பிரவாகத்திலே விட்டுவிட்டு ஒரு முழுக்கும் போட்டு விடுகிறேன்."
மடல் விரிந்த மாதுளை மொட்டுப் போன்ற சிவகாமியின் செவ்விதழ்களை மாமல்லர் தமது அகன்ற கரத்தினால் மூடினார். "சிவகாமி! நீ இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல என் தர்ம சங்கடந்தான் அதிகமாகிறது. ஒருநாள் நீ இந்தக் கலையை விட்டு விடத்தான் வேண்டியிருக்கும் என்று எண்ணும்போது எனக்குப் பகீர் என்கிறது. பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி அரங்க மேடையில் நின்று நடனமாடுவது என்பது நினைக்க முடியாத காரியம் அல்லவா? அதை எண்ணும்போதுதான் உண்மையிலேயே நான் உன்னுடைய தந்தையின் சிற்பக் கலைச் சீடனாக இருந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது. அப்படியானால் இந்த மூன்று நாட்களைப்போல் நம் வாணாள் முழுவதுமே ஆனந்தமயமாயிருக்குமல்லவா? சாம்ராஜ்யம் என்னத்திற்கு? யுத்தமும் இரத்த வெள்ளமுந்தான் என்னத்திற்கு? உண்மையாகவே சொல்கிறேன், சிவகாமி! நான் சக்கரவர்த்திக்குச் சொல்லி அனுப்பி விடுகிறேன், எனக்கு இராஜ்யம் வேண்டாம் என்று. நானும் நீயும் உன் தந்தையுமாகப் படகில் ஏறிக் கொண்டு கிளம்புவோம். ரதியையும், சுகரையும் கூட அழைத்துக் கொள்வோம். எங்கேயாவது கடல் நடுவிலுள்ள தீவாந்தரத்துக்குப் போய்ச் சேர்வோம். அங்கே நமது வாணாளை ஆனந்தமாகக் கழிப்போம் என்ன சொல்கிறாய்? 'ஆகட்டும்' என்று சொல்லு!"
"ஒருநாளும் சொல்லமாட்டேன்!" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுச் சிவகாமி மேலும் சொன்னாள்.