• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிறைவுப்பகுதி.

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
33

“நமக்குத் தெரியாமல் நடத்துற சர்ப்ரைஸ் கல்யாணம். காலையில கல்யாணத்தப்ப நீ மேடைக்கு வந்து, எனக்கு நல்லது செய்றேன்னு நதீராவைதான் நீங்க கட்டிக்கணும்னு சொல்லி மேடையை விட்டு இறங்கிட்டா? என்ன பண்ண முடியும் என்னால்? அப்படி ஒரு கேரக்டர் இல்ல அது நீதான்னு சொல்லியும் நீ நம்பலன்னா? அந்த இடத்தில் இப்படி நடக்க நிறைய சான்ஸ் இருந்தது. அதான் ஃபாத்தியை நடிக்கச் சொன்னேன்.”

“உன் மனசும் நோகக்கூடாது. அட் த சேம் டைம், நீ எனக்கு வேணும். யாரையும் நினைக்காம என்னை மட்டும் மனசுல சுமந்து, என்னைக் கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன். நீ எந்த வகையிலும் சஞ்சலப்படக் கூடாதுன்னுதான் மேரேஜ் ப்ரபோஸல் அப்பவே, அன்புதான் காதல்னா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு என் மனதிலுள்ளதைச் சொல்லி, மணமேடையிலயும் ஐ லவ் யூன்னு சொன்னேன்.”

“அந்த வார்த்தைதான் என் மனசுல சஞ்சலத்தை உண்டாக்கியது. ஒரே நாள்ல இன்னொரு பொண்ணுகிட்ட எப்படின்னு கேள்வி எனக்குள்ள. கொஞ்சம் இல்ல நிறையவே குழப்பம் தடுமாற்றம்” என்றாள்.

“கல்யாணத்துக்கு முந்தின நாள், நான் விரும்பின பொண்ணோட மட்டும்தான் என் கல்யாணம் நடக்கும்னு உனக்குப் பிராமிஸ் பண்ணினேன் நதி. அதை நீ சரியா கேட்ச் பண்ணியிருந்தா கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டப்ப, என்கிட்ட இப்படிச் சொன்னீங்களேன்னு கேட்டுருப்ப. நானும் ஆமாம்னு எல்லா உண்மையையும் அப்பவே சொல்லியிருப்பேன்.”

“அதான் சென்டிமெண்டா பேசி வாய் திறக்கவிடாமல் செய்துட்டீங்களே. அப்புறம் எப்படி கட்டிக்கமாட்டேன்னு மறுக்க முடியும்.”

“நீ சம்மதிப்பியான்னு நைட் புல்லா தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும். நீ சம்மதம் சொன்னதும் அப்படியே கட்டிக்கத் தோணிச்சி. நாகரீகம் கருதியும், உனக்கு என் மேலான இமேஜ் குறைஞ்சிடக்கூடாதுன்னும் விலகி நின்னேன்.”

“ம்... நிறைய டைம் உங்க இமேஜ் உங்க பார்வையில் தெரிஞ்சது” என்று புன்னகைத்து, “எப்படின்னு பலமுறை யோசிச்சிருக்கேன். இப்பப் புரியுது சாரோட பார்வைக்கான அர்த்தம்.”

“நிஜமாவே புரிஞ்சிருச்சிதான? அப்ப ஐ லவ் யூ சந்துரு சொல்லு?”

“நான் ஏன் சொல்லணும்? அதெல்லாம் முடியாது போங்க.”

“காதலனுக்கு ஒரு ஐ லவ் யூ சொல்ல முடியல. ஆனா அவன் தங்கைக்கு ஆயிரம் லவ் யூ போகுது” என்றான் முறைத்தபடி.

“ஹலோ நீங்க காதலன் இல்ல கணவன். உங்க தங்கைக்கு ஆயிரமென்ன லட்சம் லவ் யூ சொல்வேன். எதுக்காக தெரியுமா? என் காதலனை எனக்குக் கணவனா தந்ததுக்கு. அவளோட குடும்பத்துல நானும் ஒருத்தின்னு சொல்ல வச்சதுக்கு. அவள் என்மேல் வச்ச அன்புக்கு!”

“ஹ்ம் எல்லா இடத்திலும் ஹீரோ மார்க் ஸ்கோர் பண்ணுவான். நம்ம வீட்ல மட்டும் அப்படியே ஆப்போசிட்டா மின்னல் ஸ்கோர் பண்றா.”

“பொறாமையில பொங்காதீங்க. அவளுக்கு அன்பா தாங்குற கணவன், அன்பை மட்டுமே தர்ற குடும்பம்னு அமையணும். கடைசிவரை கஷ்டம் தெரியாத பொண்ணா வாழணும்ங்க” என்றாள் மனதார.

“வாழ வச்சிரலாமே நதிமா. மாமா முகிலை பார்க்கலாம் கேட்கிறாங்க.”

“எப்படிங்க செட்டாகும்?”

“சித்தார்த் வெண்மதி பிரச்சனை அப்பவும் நீ நோதான் சொன்ன. இப்பப் போய்ப்பாரு. நாம லவ் மேரேஜ்னு வெளில சொல்ல முடியாத மாதிரி இருக்கு, அவங்களோட காதல். என்ன ரொமான்ஸ்! ஹ்ம்...” என பெருமூச்சுவிட்டான்.

“உங்களை யார் ரொமான்ஸ் பண்ண வேண்டாம் சொன்னது? நீங்களா எதையாவது நினைச்சிக்கிட்டா நான் பொறுப்பில்ல” என்று முகம் திருப்ப..

“நான் மட்டுமே பொறுப்பாகிக்கறேன் நதிமா” என்று முத்தமிட வந்தவன் நிறுத்தி, வெட்கத்தில் விலகிய மனைவியின் முகம் பார்த்து “கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?” என்றான்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருவரும் கோவில் வர. இரு வீட்டினருடன் ஆறுமுகனின் புன்னகையுமே வரவேற்க, “இன்னைக்கு அபிஷேகம் செய்ய அம்மா ரெடி செய்திருந்தாங்க” என்றான் மனைவியிடம்.

“ஹேய் நதிமா சமாதானமாகியாச்சா? சமாதானமாகலன்னா இன்னும் இரண்டு நாள் எடுத்துக்கோங்க. நாங்க எதுவும் கேட்கமாட்டோம்” என்று மெல்ல தோழியிடம் குனிந்தவள், “உனக்கு ஹனிமூன் ஸ்பாட் எதுவும் கிடைக்கலையாடி? உங்க வீடே போதும்னு விட்டுட்டியா?” என்றாள்.

“ஏய் போடி” என்று நட்சத்திரா வெட்கத்தை மறைக்க முகம் திருப்ப.

“பார்றா! ப்ளான் பண்ணி இங்க வந்து உட்கார்ந்துப்பாங்களாம். வீட்டுக்காரர் பின்னாடியே சமாதானப்படுத்தப் போயிருவாராம். கேட்டா கோவமாம்.”

“என்ன நக்கல்ஸா? கோவில்ல வச்சி என்னடி பேசுற? வாயை மூடிட்டு சாமி கும்பிடு” என்று கண்டிக்க,

“ஹான்! ஜஸ்ட் விக்கல்மா ஹக்...” என்று செய்து காண்பிக்க,

“மின்னல் பேசாம சாமி கும்பிடு” என்ற தாயின் அதட்டலில் அமைதியானாள்.

“நான் உன்னைப் பார்த்தது இந்த இடத்தில்தான் நதி” என்று அவ்விடத்தைக் காண்பித்தான்.

“நீங்க கார்ல இருந்து இறங்கும்போதே பார்த்தேன். நீங்களும், அத்தையும் பேசினதைக் கேட்டதும் எனக்குள் ஒரு தடுமாற்றம். சம்சாரியாக்க நினைச்சிருக்கலாம்னு சொன்னப்ப அது நான்தான்னு ஒரு குரல்! சட்டுன்னு ஒரு பயம். டெய்லி வருவீங்களான்னு தெரியாது. ஆனா, உங்களைத்தேடி நான் வந்தேன்.”

“உன்னைப் பார்க்கவே நானும் தினமும் வந்தேன் நதி. அப்ப உன்னைப் பார்க்கலையே? தேடிப்பார்த்துட்டு நீ முஸ்லீம் பொண்ணுன்னதும் எப்படி வருவன்னு விட்ருவேன். ஆனா, தேடலை மட்டும் விடலை.”

“அந்தத் தேடல் எனக்கானது தானா? தினமும் யாரைத் தேடுறீங்க யோசிப்பேன். இப்பல்ல புரியுது சார் சாமியைப் பார்க்க வரலை. சம்சாரியாகப் பொண்ணு பார்க்க வந்திருக்கீங்கன்னு” என்று கேலி செய்தாள்.

“அனைத்திற்கும் காரணம் இந்த முருகப் பெருமானே! இவருக்கு லஞ்சம் தர்றேன்னு சொல்லிட்டு மாட்டேன்னுட்ட கோவத்துல, நமக்கு ஒரு அல்லக்கை சிக்கியிருக்குன்னு வச்சி சோதிச்சிட்டார்” என்றான் புன்னகையுடம்.

“சாமியை ஆசாமி மாதிரி பேசாதீங்க. நேரம்னு ஒண்ணு இருக்கே அதை மிஞ்ச யாராலயும் முடியாது. கடவுள் கணக்கை லஞ்சம் கொடுத்து கரெக்ட் பண்ண முடியுமா?”

“நான் ஒண்ணும் பேசல. நீ வக்கீலுக்குப் படிச்சிருக்க வேண்டியவள். மாத்தி எம்.சி.ஏ படிச்சி குடும்ப இஸ்திரியாகிட்ட. நாம வேண்டிக்காததைக் கூட அவருக்கு நான் செய்திடுறேன். ஓகேவா” என்று தங்கையை அழைத்து, “அதை எங்கே மின்னல்?” என்றான்.

“யசோம்மாகிட்ட இருக்கு அண்ணா. அபிஷேகம் முடிச்சி அலங்காரம் பண்ணினதும் ஐயர்கிட்டத் தரலாம்” என்றாள்.

“என்னதுங்க?”

“சஸ்பென்ஸ்.”

“நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். நீ சொல்லு கொடி?” என்று நாத்தனாரிடம் கேட்டாள்.

“சஸ்பென்ஸ்” என்று அண்ணன் சொன்னதைச் சொல்லிச் சிரிக்க,

“அண்ணன், தங்கை ரெண்டு பேருக்கும் என்னைக் கலாய்க்கிறதுன்னா தண்ணி பட்டபாடு. மத்த நேரம்னா குடுமிப்பிடி சண்டை போடுறீங்க” என்று அவர்கள் இருவரையும் முறைத்தாள்.

“சோ ஸ்வீட் நட்டுமா” என்று செல்லம் கொஞ்ச,

“மின்னல்! நட்சத்திராவை அண்ணின்னு கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்றது?” பேத்தியைக் கண்டித்தபடி பாக்கியவதி வந்தார்.

“எத்தனை தடவை சொன்னாலும் நோ தான். என் அண்ணியை நான் ஃப்ரண்டாக்கிக்கல. என் ஃப்ரண்டைத்தான் நீங்க அண்ணியாக்குனீங்க. நான் இப்படிதான் கூப்பிடுவேன். எனக்கா அண்ணின்னு எப்ப கூப்பிடத் தோணுதோ அப்ப கூப்பிட்டுக்குறேன்” என்றாள் மின்னல் பெண்.

“உன்னைத் திருத்தவே முடியாது.”

“ஆமா க்ரேன்மா. என்னைத் திருத்தவே முடியாது. நீங்க பார்க்கிற மாப்பிள்ளையாவது என்னைத் திருத்துறானா பார்க்கலாம்” என்று கண்சிமிட்டினாள்.

“மின்னல் அமைதியா இரு. பெரியவங்ககிட்ட வாய்க்குவாய் பேசாதன்னு எத்தனை முறை சொல்றது.”

“ம்மா... இப்படி எதுவுமே பேசக்கூடாதுன்னா என்னதான் பேசுறது?”

“உன் அண்ணியைப் பாரு எவ்வளவு அமைதியா பெரியவங்களை மதிக்கிறா” என்று தாய் சொன்னதும், ‘அவ்வளவு நல்லவளா நீ’ என்பதாய் நட்சத்திராவைப் பார்க்க, அவளின் அசட்டுச் சிரிப்பில் முறைத்துத் தாயைப் பார்க்க, அவரோ, “அவளைப் பார்த்துக் கத்துக்கோ. பூஜைக்கு ரெடியாகிருச்சி அங்கயிங்க நகராம இங்கயே நில்லு” என்று மகளைத் திட்டிக் கொண்டிருந்தார் சகுந்தலா.

“ம்மா...” என பல்லைக்கடித்து தோழியின் புறம் திரும்பி, “நீ அமைதி. நான் வாயாடியா? நீ பேசினது எல்லாம் இவங்களுக்குத் தெரிஞ்சா இதெல்லாம் சொல்வாங்களா? இதோ...” என்று அரிச்சந்திரனைக் காண்பித்து, “இவனைப் பார்த்ததில் இருந்து காதுல ரெத்தம் வர வச்சியே அதை நான் யார்கிட்ட சொல்றது? முருகா இந்த இம்சைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்று” என்று கடவுளிடம் முறையிட்டாள்.

“கண்டிப்பா காப்பாத்துறேன் எம்.கே” என்றபடி முகில் வர, அப்பன் முருகரின் இதழ்கள் புன்னகை பூத்ததோ!

அவனை முறைத்து, “இங்க பார் நதி, உன் அண்ணன்கிட்ட சொல்லி வை. அவங்க பேசுறது, பார்க்கிறதுன்னு எதுவும் சரியில்லை. கோவத்துல அவங்களை எதாவது செய்துட்டா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்” என்றாள்.

“நீ பார்க்காதடி. நாம பார்த்தால்தான நம்மளைப் பார்க்கிறது தெரியும்” என்று தோழியின் கால்வாரினாள்.

‘உன்கிட்ட போய் சொன்னேன் பாரு’ என்பதாய் ஒரு பார்வை பார்த்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

சாமி அலங்காரம் முடிய மூன்று அடி உயர தங்கத்தில் செய்த வேல்; முருகரின் கைகளில் தஞ்சமடைந்தது.

‘இதான் அந்த சஸ்பென்ஸா’ என்று கணவனைப் பார்க்க, ‘ஆம்’ என்பதாய் அவன் தலையசைக்க, குடும்பத்திற்காகவும் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்ததற்காகவும் மனதார வேண்டி வீடு வந்தார்கள்.

“என்ன சித்தார்த் ஹேப்பியா?” என்று அரிச்சந்திரன் கேட்க,

“தேங்க்ஸ் ப்ரோ” என்றான் அவனும்.

“தேங்க்ஸ்லாம் வேண்டாம். வெண்மதியை நல்லா பார்த்துக்கோங்க. அவங்க ஹாஸ்பிடலைஸ்காக வித்ததுல, நிறைய நீங்கதான் வாங்கி இருக்கீங்க. அது உங்க பணம்ன்றதால அதை விட்ரலாம். மத்தபடி சொத்துப் பிரச்சனை முடிஞ்சிருச்சி. இதுவரை வாங்கினதுல பாதியை அவங்ககிட்ட கொடுத்திருங்க. அதிலும் பாதி வெண்மதி பங்கா உங்களுக்கேத் திரும்பி வரும். அப்புறம்...”

“இல்ல ப்ரோ. சொத்து முழுக்க முகில்கு மட்டும்தான். வெண்மதிக்கு நான் சம்பாதிக்குறது போதும். முடிஞ்சளவு இன்னும் பாதியையும் திருப்பித் தர முயற்சி செய்வேன்” என்றான் திடமாக.

“வேண்டாம் சித்தார்த். நாங்க கொடுத்தது கொடுத்ததாவே இருக்கட்டும். பாதி என் தங்கைக்காகக் கொடுக்க வேண்டிய பங்குதான். நாமெல்லாம் பிறந்ததில் இருந்து உறவு. இப்ப சம்பந்தி வேற. சோ, நடந்ததை மறப்போம்!”

முகில் சொன்னதற்கு அப்போதைக்கு அமைதி காத்தாலும், சொத்தை திருப்பிக் கொடுக்கும் சித்தார்த்தின் எண்ணம் மட்டும் மாறவில்லை. சொல்லிச் செய்வதை விட சொல்லாமல் செய்தலே நன்று என்பதை உணர்ந்திருந்திருந்ததால் மனைவியிடம் மட்டும் சொல்லியிருந்தான்.

சொத்து வழக்குக்கு இடைப்பட்ட காலத்தில், விவாகரத்து வழக்கை திரும்ப வாங்கியதும், ரெங்கசாமி, செல்லம்மா சாத்தூரில் இருக்க, சித்தார்த், வெண்மதி மதுரையில் நிரந்தரமாகத் தங்கினார்கள். மாமியார் மருமகள் பிரச்சனை வர சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்த முடிவிற்கு வந்திருந்தான்.

சித்தார்த் அறியாதது, வெளியே வாய் பேசினாலும் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும் என்பது. காலம் அவர்களை ஒன்றிணைக்கும்!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
டெல்லி! காலை ஆறுமணி. “ஹையோ என்னை விடுங்க டைமாகிருச்சி. மாமா எழுந்து வாக்கிங் போயிருப்பாங்க. நீங்க இழுத்து மூடிட்டுப் படுத்துட்டு இருக்கீங்க. என்னையாவது எழுந்துக்க விடுறீங்களா?” சினுங்கினாள் நட்சத்திரா.

“குளிருக்கு உன்னைக் கட்டிப்பிடிச்சிட்டுப் படுத்தா கதகதப்பா சுகமாயிருக்கு நதிமா” என்றான் அரிச்சந்திரன்.

“இருக்கும் இருக்கும். அத்தை வர்றதுக்குள்ள எழுந்திருச்சி குளிச்சிட்டு வாங்க.”

“ஏன்டி எப்பப்பாரு குளிகுளின்னு விரட்டுறதுலயே இருக்க?”

“பொறுப்பான வக்கீல் மாதிரியா இருக்கீங்க. குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க?”

“அடிப்பாவி! உனக்குக் குழந்தை கொடுக்கிற முயற்சியில் நான் இருந்தா என்னையே குழந்தை சொல்றியா?”

“ஹையோ! இப்படிப் பச்சையா பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன்ல.”

“நான் எப்ப அப்படிப் பேசினேன்? அப்ப இதுக்கு என்ன பெயர்” என்று அவளை அணைத்து காதுக்குள் பேச, கணவனின் எல்லை மீறிய பேச்சுகள் தாளாது, தன் இதழால் அவன் வாய்மூடி சில நொடிகளில் விட்டவள், “வாய் அதிகமாகிருச்சி” என கண்டித்துக் கண்சிமிட்டினாள்.

“எனக்கு அதிகமாகிருச்சா? இப்ப நீ பண்ணினதுக்கு என்னடி அர்த்தம்?” என்றதும் அவள் விலகி ஓட, அவன் விரட்ட, “வேண்டாம் விட்ருங்க” என்று கெஞ்சியவளை விரட்டிப் பிடித்ததில் இருவரும் கட்டிலில் விழ, “அர்த்தம் சொல்லு?” என்றான்.

“அதெல்லாம் தெரியாது.”

“தெரியாம விடுறதா இல்ல” என்றான்.

“அ...அது கணவன் மனைவிக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் பண்றது மச்சான்.” கண்ணடித்து அவனைத் தள்ளிவிட்டு ஓட,

திரும்பவும் வளைத்துப் பிடித்து, “குழந்தை மாதிரியா பிஹேவ் பண்றேன். உன்னை...” என்று சந்திரனவன் நட்சத்திரப் பெண்ணவளைத் தனக்குள் பொதிந்து கொண்டான்.

வரவேற்பறையில் உள்ள பெரிய புகைப்படத்திற்குள் புன்னகை முகமாகப் பார்த்திருந்தார் பாக்கியவதி. அவரின் புகைப்படத்திற்கு மாலை போட்டிருக்க, அவரின் இறப்பு தேதி இரண்டு மாதங்களைக் காட்டியது.

ஏழாம் தலைமுறையைப் பார்க்க ஆசைப்பட்டவர், பேரனின் திருமணத்தையும், பேத்தியின் நிச்சயதார்த்தத்தையும் பார்த்த திருப்தியில் படுக்கையிலேயே உயிரை விட்டிருந்தார்.

முகில் குமாரைத் திருமணம் செய்ய யோசித்த மின்னல், அண்ணன் திருமணத்தன்று பெரியவர்களிடம் தன்னைப் பெண் கேட்கச் சொல்லியதை அவன் வாயிலாகக் கேட்டிருந்ததால், சின்னதாகத் தயக்கம் இருந்த போதிலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் சம்மதித்துவிட்டாள். திருமணத்திற்கு இடைவெளி அதிகம் இருந்ததால் நிச்சயதார்த்தம் மட்டும் வைத்துக் கொண்டார்கள்.

நிச்சயத்தன்றுதான் பாட்டியும் இறந்தது. அவருக்குக் காரியமெல்லாம் முடிந்ததும், ரவிச்சந்திரன் குடும்பம் அப்படியே டெல்லியில் நிரந்தரமாகக் குடியேற, நந்தகுமார், யசோதா தம்பதியர் சொந்த ஊரான கழுகுமலையில் இருக்கும் வீட்டைச் செப்பனிட்டு, அவர்களுடன் வர மறுத்த திலகவதியையும், வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்கள்.

அண்ணன், தங்கை இருவரும் தன் அப்பாவிடம் ஜுனியர் வக்கீலாகவும், தேவைப்படும் நேரங்களில் தனி வழக்கும் எடுத்துக் கொள்கிறார்கள்.

கூடிய விரைவில் டெல்லியின் பெரிய வக்கீல்களின் பட்டியலில், அப்பா ரவிச்சந்திரன் போல் அவரின் மக்களும் வருவது உறுதி.

முகிலுடனான மின்னலின் உறவு, பெரியவர்களுடன் நின்றுவிட்டது. இன்றைய காதலர்கள் போல் மணிக்கணக்காக இல்லையென்றாலும், பெயருக்குக் கூடப் பேசிக்கொள்வதில்லை. அவனுமே மின்னலைத் தனக்குத் தர சம்மதித்ததே போதும் என எண்ணினானோ! அதைவிட அவளின் மீதான தேடலால் திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயம் இருந்ததால், எப்பவாவது சின்னதான மெசேஜ் மட்டுமே அவர்களிடம்.

‘மெசேஜ் வளர்ந்து பேச்சாகி! பேச்சு வளர்ந்து தேடலாகி! தேடல் வளர்ந்து காதலாகி! காதல் வளர்ந்து கல்யாணத்தில் முடிய வேண்டுமென்பதே, நம் அனைவரின் பிரார்த்தனையும்!’

“நதி...”

“ம்...”

“நதீஈஈ...”

“என்னங்க?”

“நதீரா!”

கணவனை முறைத்து “அதான் என்னன்னு கேட்கிறேன்ல. சொல்ல வேண்டியதுதான?” என்றாள்.

“ஹனிமூன் போகலாமா?”

“அதான் டெல்லி முழுக்க சுத்திப் பார்த்தாச்சேங்க. தாஜ்மஹால் கூட போயிட்டு வந்தோமே!”

“எதைச் சொல்ற? ஈவ்னிங் போயிட்டு நைட் வந்ததையா? அதுதான் உங்க ஊர்ல ஹனிமூனா? போடி” என்றவன், “ஹேய் நதி! நாம மகாபலிபுரம் போகலாமா? நாம நேருக்கு நேரா மீட் பண்ணின இடம். நமக்கே நமக்கா இரண்டு நாள்கள்!” கண்கள் மின்ன கனவுடன் சொன்னான்.

“போகலாம். ஆனா, ரெசார்ட் வேண்டாம்ங்க. அங்க கேமரா வச்சிருப்பாங்க” என்று பட்டென்று அவன் கனவைக் கலைத்தாள் அவனின் நதீரா.

“உன்னை... சரி மகாபலிபுரம் போயிட்டு நைட் சென்னையில் நம்ம வீட்டுக்குப் போயிரலாம். சரியா?”

“அப்ப டபுள் சம்மதம்” என்றவள், “ஆமா உங்க சிகரெட் பழக்கம் என்னாச்சி?” என கேட்டாள்.

“போயே போச்சி. இப்பல்லாம் அதுல இன்ட்ரெஸ்ட் போகலை. என் பொண்டாட்டிக்கு மத்தவங்க என்னைத் தப்பா நினைப்பாங்களேன்ற பயம் இருக்கு. அதை நேரிடையா சொல்லலை. சொல்லலைன்னா அப்படியே விட்டுர முடியுமா? சோ விட்டாச்சி” என்று மனைவியின் நெற்றியில் முட்டிச் சிரித்தபடி, “லவ் யூ நதி” என்றான்.

“நானும்” என்று அவனைக் கட்டிக்கொள்ள,

“ஹ்ம்... நானும்! இல்ல சேம் டூ! இப்படிச் சொல்லியே எஸ்கேப்பாகிரு. அதை வார்த்தையா சொல்லிராத” என குறைபட்டுக் கொள்ள, சட்டென்று சிரித்து பட்டென்று தன் கன்னத்தில் முத்தமிட்டுச் செல்லும் மனைவியைப் புன்னகையுடன் பார்த்திருந்தான் அரிச்சந்திரன்.

குளித்துக் கீழே வந்தவர்கள் தங்களின் தேன்நிலவைப் பற்றிச் சொல்லி அனுமதி வாங்கினார்கள்.

“ஷப்பா! உங்க ஹனிமூன் ஸ்பாட்லாம் வேற லெவல் தனித்துவம் வாய்ந்தது” என்று கிண்டலடித்தாள் மின்னல் கொடி.

கேலி செய்த தோழியைக் கண்டு கண்ணடித்து, “ஐ லவ் யூ மயிலு” என்றாள் நட்சத்திரா.

“நீங்க ரெண்டு பேரும் திருந்தமாட்டீங்க. இதுவரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லை” என்று அரிச்சந்திரன் முறைக்க,

“அதான் நீங்க சொல்லும் போதெல்லாம், நானும் ஆமாம் சொல்றேனேங்க” என்று புருவம் உயர்த்தி கிண்டலாய்ப் பார்த்தாள்.

“நண்பிடா!” என்று தோளணைத்தாள் மின்னல் கொடி.

“அம்மா இந்த ஜோடியை சீக்கிரமே பிரிச்சி விடுங்க. இல்ல நான் தனிக்குடித்தனம் போயிருவேன்” என்று கடுப்பாகக் கத்தினான்.

“என்னது தனிக்குடித்தனமா? அப்ப நம்ம வீட்டுக்கு அத்தை மாமாவோட கொடியும் வந்திரட்டும்ங்க” என்றாள் வேகமாக.

“நதீஈஈ...” என்று பல்லைக்கடிக்க,

“டேய் அரி! நான்தான் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல போகாத சொல்லியிருக்கேன்ல. நீ போறதும் இல்லாம, அம்மா, அம்மான்னு என்னையும் இழுத்து விடுற. முதல்ல வேலைக்குக் கிளம்பு. சென்னை எப்ப கிளம்புறீங்க?” என்றார் சகுந்தலா.

“நாளைக்குக் கிளம்புறோம்மா” என்றான்.

சின்னதாய் மழை தன் துளிகளை பூமிக்குத் தெளித்துக் கொண்டிருக்க, சென்னை வந்து மகாபலிபுரம் செல்லக் கிளம்பி காரில் ஏறிய இரண்டு நிமிடத்திற்கெல்லாம், அரிச்சந்திரன், நட்சத்திரா இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் பூங்காவை நோக்கிப் பயணித்தது.

அந்தப் பூங்கா அவர்களின் வாழ்க்கையில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பதை தான் நாம் அறிவோமே!

காரை ஓரம் நிறுத்தி மழைத் தூறலையும் ரசித்து, கணவனுடன் கைகோர்த்து அந்த குறிப்பிட்ட இருக்கையில் அமர, “இதுதான்ங்க நம்மளோட ஒரிஜினல் ஹனிமூன் ஸ்பாட். நம்ம சந்தோஷத்தையும், கஷ்டத்தையும் பார்த்தது இந்த பார்க். நம்மை அறியாமல் நம்ம மனசைப் பகிர்ந்ததும் இங்கதான்” என்று கணவன் தோள்சாய்ந்து, “ஐ லவ் யூ சந்துரு” என்றாள் அவன் முகம் நோக்கி.

குனிந்து மனைவியின் கண்களில் கண்ட காதலில் மயங்கி, “நானும்தான்” என்று புன்னகைத்தான்.

தான் சொன்னதை அவன் திருப்பிச் சொல்வதை உணர்ந்து, “ஹ்ம்.. உங்களை...” என்று சிணுங்கிச் செல்லமாய் இரண்டு அடிகள் கொடுத்து தோள்சாய்ந்து கண்மூடினாள்.

ஜில்லென்ற மழைத்துளிகளுடன், அங்கு இருந்த மரமும் காற்றிற்குத் தன் பூக்களைத் தூவி ஆசீர்வதித்ததோ! ஜில்லென ஒரு காதல்! மழைத்துளியின் ஜில்லிப்பாய் நம்முள்ளும்!



நட்புடன்


சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top