• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
பகுதி 6

துர்வாவின் அறையில், ரோஜாவின் அரவணைப்பில் குழந்தை திக்ஷிதா கட்டிலில் நிம்மதியாக உறங்குவதைப் பார்த்து துர்வாவின் தாத்தா நிம்மதி அடைந்தார்.
"ஏன்மா ரோஜா? நீ இவ்வளவு நேரம் இங்கேயே இருந்துட்டியே. உன்னை உன் வீட்ல திட்ட மாட்டாங்களா?" என்று துர்வாவின் தாத்தா நாசுக்காக ரோஜாவின் நிலையை அறிந்து கொள்ள, தன் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்டார்.
"என்னை திட்ட இந்த ஊருல யாரும் இல்ல தாத்தா" என்று ரோஜா குழந்தையின் உறக்கம் கலைந்து விடாமல் பொறுமையாக பதில் சொன்னாள்.
ஒரு தட்டில் நான்கு கோப்பையுடன் துர்வா, ”எக்ஸ்கியூஸ்மி”என்று கேட்டப்படி உள்ளே நுழைந்தவன், ரோஜாவின் முன் தட்டை நீட்டினான்.
"வேணா துர்கா. நான் வீட்டுக்கு போய் குடிச்சிக்கிறேன். நீங்க சாப்பிடுங்க" என்று ரோஜா அந்த கோப்பையை வாங்க மறுத்தாள்.
"ரோஸ் இது காபி தான். உனக்கு பிடிக்கும் தானே எடுத்துக்கோ" என்று துர்வா சொன்னதும், அதற்கு மேல் அவன் உபசரிப்பை தவிர்க்க முடியாத நிலையில் துர்வா தந்த காபியை கையில் எடுத்து, "நன்றி துர்கா " என்றாள்.
"திக்ஷி எழுந்ததும் பால் கொடுக்கலாம். தாத்தா நீங்க டீ எடுத்துக்கோங்க" என்று சொன்ன துர்வா தானும் ஒரு கோப்பையில் உள்ள காபியை அருந்தியப்படி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
"நேத்தே கேக்கணும்ன்னு நினைச்சேன். நீ இங்க எந்த ஏரியால இருக்க? உன் கணவர் என்ன வேலை பாக்குறாரு? உனக்கு எத்தனை பசங்க?” என்று துர்வாவின் தாத்தா தன் கேள்விகளை அடுக்க தொடங்கினார்.
கையில் இருந்த கோப்பையை மேசை மேல் வைத்த ரோஜா, எந்த கேள்விக்கும் பதில் தராமல் அமைதியாக இருந்ததை பார்த்து, துர்வா வராத அழைப்பிற்கு பதில் தருவது போல தன் கைபேசியுடன் அறையை விட்டு வெளியே சென்றான்.
துர்வாவின் இந்த செயலை மதித்த ரோஜா.... துர்வாவின் தாத்தாவை பார்த்தவள், "எனக்கு சமீபத்துல தான் விவாகரத்து ஆச்சு தாத்தா. பிள்ளைங்க எல்லாம் இல்ல. அந்த ஊருல இருந்தா புகுந்த வீட்டு ஆளுங்களை அடிக்கடி பாக்க நேரிடும். அது மீண்டும் ரெண்டு தரப்பிலும் தர்மசங்கடத்தை தான் உருவாக்கும். அதான் என் தோழனின் சகோதரி வீட்டுல நான் வாடகைக்கு தங்கி இருக்கேன். வேலை தேட தான் சில ஆவணங்களை நகல் எடுக்க கடை தெருவுக்கு வந்தேன். அப்போ நடந்த விபத்துல தான் இதோ இப்போ உங்க எதிர்ல உங்க பேத்தி பக்கத்துல உக்காந்து இருக்கேன்" என்று துர்வாவின் தாத்தாவிடம் தன் தற்போதைய நிலையை தெளிவாக எடுத்துரைத்தாள் ரோஜா.
"எல்லாம் நன்மைக்குன்னு நினைப்போம் ரோஜா. நீ இங்கேயே இரு இதோ நான் இப்போ வரேன்" என்று சொன்ன துர்வாவின் தாத்தா நடையில் வேகத்தை கூட்டி அந்த அறையில் இருந்து தன் அறைக்குள் நுழைந்தவர் கையில் ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து கொண்டு மீண்டும் துர்வாவின் அறைக்குள் நுழைந்தவர், அந்தக் கார்டை ரோஜாவின் முகத்திற்கு முன்பு நீட்டினார்.
"என்ன தாத்தா இது?" என்று கட்டிலில் குழந்தை அருகில் இருந்து எழுந்த ரோஜாவின் கேள்விக்கு,
"இது நம்ம லைப்ரரி முகவரி தான்மா. அங்க நம்பிக்கையான ஒரு ஆள் வேலைக்கு வேணும். இது சேர்ந்தே ஆகணும் இல்ல. உனக்கு விருப்பம்னா நீ இங்கேயே வேலைக்கு சேர்ந்துக்கலாம். உனக்கு புத்தகம் தான் முதல் நண்பன் என்று துர்வா சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்" என்று தாத்தா சொன்னதும், முகம் மலர்ந்த ரோஜா,
"இந்த சூழ்நிலையில நான் இந்த வேலையை எதிர்பார்க்கவே இல்ல தாத்தா. கண்டிப்பா நான் உங்க நூலகத்துல வேலைக்கு வரேன்" என்று சொன்ன ரோஜா அந்த விசிட்டிங் கார்டை தன் கைப்பையில் வைத்து கொண்டவள், தன் முந்தானை குழந்தை திக்ஷிதாவின் விரல்களின் நடுவில் இருந்ததை கவனிக்காமல் கட்டிலில் இருந்து எழ முயன்றவளின் செயலை உணர்ந்து குழந்தை கண்கள் விழித்து, "அம்மா" என்று அழைத்தாள்.
"திக்ஷி பாப்பா அதுக்குள்ள தூங்கி எழுந்துட்டீங்களா? வாங்க வாங்க வாங்க" என்று செல்லம் கொஞ்சிய ரோஜா, குழந்தையை மீண்டும் தன் மடியில் அமர்த்தி கொண்டாள்.
"இங்க பாருங்க. உங்க அப்பா உங்களுக்கு பால் கொண்டு வந்து வச்சிருக்காரு. வாங்க பால் குடிக்கலாமா?" என்று குழந்தையை கொஞ்சியப்படி ரோஜா பால் கோப்பையை கையில் எடுத்து திக்ஷிதாவுக்கு பால்லை ஊட்டினாள்.
பாலை அருந்தும் சமயம் திக்ஷிதா இரும்பி ரோஜாவின் மேல் வாந்தி எடுத்ததும், "ஐயோ என்ன பாப்பா நீ. இங்க பாரு ரோஜா மேல எல்லாம் வாந்தி எடுத்துட்ட. துர்வா... துர்வா இங்க வாடா" என்று தாத்தா அழைத்ததும்,
"என்ன தாத்தா? என்னாச்சு?" என்று பதறி அடித்து துர்வா தன் அறைக்குள் நுழைந்தான்.
"இங்க பாருடா துர்வா. குழந்தை ரோஜா மேல வாந்தி எடுத்துட்டாள். முதல்ல பிள்ளையை ரோஜா கையில இருந்து வாங்கு. எங்க பாட்டிமா அவங்கள கூப்பிடு" என்று தாத்தா சொன்னதும், துர்வா குழந்தையை தூக்க போனவனிடம் பிள்ளையை தராத ரோஜா,
"துர்கா நீங்க பிள்ளைக்கு மாற்று துணி மட்டும் தாங்க. நானே மேலுக்கு துடைச்சு விட்டு துணியை மாத்தி விடுறேன். இங்க குளியல் அறை எங்க இருக்கு" என்று ரோஜா கேட்டதும், தன் ஆள் காட்டி விரலால் குளியல் அறையை காட்டிய துர்வா, குழந்தைக்கு மாற்று துணியை எடுத்து கொண்டு இவனும் ரோஜா பின் சென்றான்.
"பாட்டிமா கட்டிலை சுத்தம் செய்து, போர்வையை எல்லாம் மாத்தி விட்டு, இந்த அறைக்கு சாம்பரணி போட ஏற்பாடு பண்ணுங்க" என்று துர்வாவின் தாத்தா அங்கே பணி புரியும் வேலை ஆட்களை, அறையை சுத்தம் செய்ய சொன்னார்.
ரோஜா குழந்தையை சுத்தம் செய்தவள், பிள்ளையை துர்வாவிடம் கொடுத்து விட்டு தன் புடவையை மேலாக கழுவி கொண்டு இருந்தாள்.
குழந்தை திக்ஷிதாவை தன் தாத்தாவிடம் தந்த துர்வா, தன் அலமாரியில் இருந்து புது புடவையை எடுத்து வந்து ரோஜாவிடம் நீட்டியவன், "ரோஸ்... உன் மேல எல்லாம் ஈரம். பிளீஸ் இந்தா இந்தப் புதுப் புடவையை மாத்திக்கோ" என்று துர்வா சொன்னதும்,
"ஐயோ... வேணா துர்கா. கொஞ்ச நேரத்துல ஈரம் எல்லாம் சரியாகிடும். இதுக்கு ஏன் புது புடவை எல்லாம். வேணாம்" என்று ரோஜா அந்த புடவையை வாங்கி கொள்ள மறுத்து விட்டாள்.
"ஏன்மா வேணாம் சொல்ற? இது புதுப் புடவ தான் வாங்கிக்கோ. துர்வா நீ தா. நான் சொன்னா ரோஜா வாங்கிப்பாள்" என்று தாத்தா சொல்ல, மறுப்பு ஏதும் சொல்லாமல் ரோஜா துர்வாவின் கையில் இருந்த புடவையை வாங்கி கொண்டு குளியல் அறைக்கு சென்றாள்.
சில நொடிகளில் புது புடவையை கட்டிக்கொண்டு இவர்கள் அருகில் வந்தவள், குழந்தையை மீண்டும் தன் வசமே வாங்கி கொண்டாள். "பாப்பாக்கு இன்னும் பசிக்குதா?" என்று ரோஜா கேக்க, குழந்தை சோர்வாக, ‘இல்லை’ என்று தலை ஆட்டியவள் மீண்டும் ரோஜா தோளில் படுத்து கொண்டாள்.
“துர்கா பிள்ளைக்கு இட்லி இடியப்பம்ன்னு இந்த மாதிரி காலை உணவு தாங்க. இப்போ பீவர் இல்ல. இருந்தாலும் மருந்து எல்லாம் நேர நேரத்துக்கு தந்துடுங்க. அப்புறம்..." என்று ரோஜா தன் வார்த்தையை மென்னு விழுங்க,
"நீங்க பேசிட்டு இருங்க. நான் இதோ வரேன் " என்று சொல்லிக்கொண்டே தாத்தா அங்கிருந்து நகர்ந்தார்.
"என்ன ரோஸ்? எதாவது சொல்லனுமா?" என்று துர்வா கேட்டான்.
"ம்... ஆமா துர்கா" என்று ரோஜா சொன்னவள், தன் தோள் மீது உறங்கி கொண்டு இருந்த திக்ஷிதாவை கட்டிலில் படுக்க வைத்து துணைக்கு இரண்டு பக்கமும் தலையணையை அணைத்து வைத்தவள்.
"குழந்தைக்கிட்ட இனி கடுமையா நடந்துக்காதிங்க. அந்த பிஞ்சு உள்ளத்துக்கு என்ன தெரியும் பாவம். நமக்கே நம்ம அம்மா மேல எவ்வளவு பாசம் இருக்கும் சொல்லுங்க. பாவம் குழந்தை இப்படியா ஜுரம் வரும் அளவுக்கு அவள் மீது கோவத்தை காட்டுவீங்க" என்று ரோஜா தன் கண்களில் கோவத்தை வெளிப்படுத்தினாள்.
"உனக்கு கோவமெல்லாம் வருமா ரோஸ்? முதல் முறை நீ கோவமா பேசி நான் பாக்குறேன். ம்... தப்பு தான் குழந்தைக்கிட்ட நான் அப்படி நடந்து இருக்க கூடாது" என்று துர்வா தான் செய்த தவறை உணர்ந்து இருந்தான்.
"ஆனா, இத்தனை மாசம் இந்த பிரச்சனை இல்லாமல் எப்படி குழந்தையை பாத்துகிட்டீங்க?" என்று ரோஜா ஆச்சிரியமாக கேட்டாள்.
"அம்மா சாமிகிட்ட போய் இருக்காங்க. சீக்கிரம் வருவாங்கன்னு சொல்லி தான் ஏமாத்திக்கிட்டு வந்தோம்" என்று விரக்தியாக சொன்னான் துர்வா.
"இனியும் அப்படியே சொல்லுங்க. ஆனா சாமிகிட்ட போன அம்மா, என்ன வேலை இருந்தாலும் வீக் என்ட் உன்னை பார்க்க வருவாங்க.... தினமும் நீ அவங்ககிட்ட வாட்சப்ல கூட பேசலாம்னு சொல்லுங்க" என்று சொன்ன ரோஜா குழந்தையின் நெற்றியில் முத்தமிட்ட பின், தன் கை பையில் இருந்த ஒரு கவரை எடுத்து சென்றவள், குளியல் அறையில் இருக்கும் தன் ஈரப் புடவையை அதில் வைத்துகொண்டு வாசலை நோக்கிச் சென்றாள்.
"ரோஸ் ஒரு நிமிஷம்" என்று அவளை அழைத்தப்படி துர்வா ரோஜாவின் அருகில் சென்றான்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
"நீ சந்தோஷமா இருக்கியா? உன்னை பார்த்தா ஏதோ மாதிரி இருக்கு. உனக்கு எதாவது பிரச்சனையா ரோஸ்?" என்று துர்வா கேட்ட கேள்விக்கு அவனுக்கு விடையாக ரோஜாவின் புன்னகை மட்டுமே கிட்டியது.
ஹாலில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த தாத்தாவை நோக்கி சென்றாள் ரோஜா. அவளை பின் தொடர்ந்து சென்றான் துர்வா.
"தாத்தா உங்ககிட்ட ஒரு உதவி கேட்கட்டுமா" என்று ரோஜா கேக்க, துர்வா ஏதும் புரியாதவனாக விழித்தான்.
"என்னமா நீ உதவி அது இதுனு பெரிய வார்த்தை எல்லாம் பேசுற. சொல்லு நான் என்ன பண்ணனும்?" என்று தாத்தா உரிமையாக கேட்டார்.
"நான் வார இறுதி மட்டும் வந்து பாப்பாவை பார்த்துட்டு போக உங்க அனுமதி வேணும்" என்று தயங்கியப்படி ரோஜா கேட்டதும்,
"அதெல்லாம் வேணாம்மா. நீ வார இறுதி எல்லாம் வர வேணாம்... " என்று தாத்தா கடுமையான குரலில் பேசியதும் ரோஜா முகம் வாடினாள்.
"வார இறுதி மட்டும் இல்லடாமா. நீ எல்லா நாளும் இந்த வீட்டுக்கு வரலாம். இது உன்னோட வீடு" என்று சிரித்த முகத்துடன் தாத்தா சொல்ல, ரோஜாவின் முகம் மீண்டும் மலர்ந்தது.
"ரொம்ப நன்றி தாத்தா. நான் போய்ட்டு வரேன். வீட்டுக்கு போய்ட்டு உங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு வேலை விஷயத்தை பத்தி விவரம் கேட்டுக்கிறேன்" என்று ரோஜா சொன்னதும், தன் கைபேசியை எடுத்த தாத்தா,
"இந்தாமா. என்னோட போன்ல உன் நம்பரை சேவ் பண்ணி, நீ என் போன்ல இருந்து உன் போன்க்கு ஒரு மிஸ்ட் கால் தந்துக்கோ" என்று விவரமாக சொன்னபடி தாத்தா தன் கைபேசியை ரோஜாவிடம் தந்ததும், அவளும் அவர் சொன்னது போலவே இருவர் எண்ணையும் தெரிந்து கொண்டனர்.
"சரி தாத்தா நான் கிளம்புறேன். துர்கா.. பாப்பா எழுந்ததும் அவ அழுதா நீங்க பதிலுக்கு அவகிட்ட கோவப்படாதிங்க. வேணும்னா தாத்தா போன்ல இருந்து எனக்கு வீடியோ கால் பண்ணுங்க, நான் பாப்பாக்கிட்ட பேசுறேன்"
என்று ரோஜா சொன்னதும், துர்வா அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தான்.
"டிரைவரை கூப்பிடு துர்வா " என்று தாத்தா சொல்ல, ரோஜாவும் துர்வாவும் வாசலை நோக்கி நடந்தார்கள். கார் அருகில் சென்ற ரோஜா, மீண்டும் துர்வாவின் அருகில் வந்தவள்,
"தேங்க்ஸ் துர்கா" என்று சொன்னாள்.
"எதுக்கு ரோஸ் தேங்க்ஸ்?" என்று புரியாமல் கேட்டான் துர்வா.
"புத்தகத்துக்கும் புடவைக்கும்" என்று சொன்ன ரோஜா காரில் ஏறி அமர்ந்து கொள்ள துர்வா கை அசைத்து அவளை வழி அனுப்பி வைக்க, கார் துர்வா வீட்டை விட்டு வெளியேறியதும் துர்வா தன் வீட்டுக்குள் நுழைந்தான்.
"பாவம் துர்வா அந்த பொண்ணு. அவ மனசுல எவ்வளவோ கவலை இருக்கு போல. ஆனா எங்க அதெல்லாம் சொன்னா அவ மேல நம்ம பரிதாபப்பட போறோம்ன்னு நிறைய கவலைகளை அவளுக்குள்ள புதைச்சு வச்சிருக்கா" என்று கவலையாக சொன்னார் தாத்தா.
"ஏன் தாத்தா? ரோஸ்க்கு என்ன பிரச்சனை? அவ கல்யாண வாழ்க்கையில எதாவது...?" என்று துர்வா தன் தாத்தாவிடம் கேட்க, சாமி அறைக்குள் நுழைந்த தாத்தா, அங்கே இருந்த மாங்கல்யத்தை எடுத்து வந்து துர்வா கையில் தந்தவர்
"உன் கையாள இந்த தாலி சீக்கிரம் உன் ரோஸ் கழுத்துல ஏற போகுதுடா" என்று துர்வாவின் கேள்விக்கு விடையாக மஞ்சள் கயிறை தந்தப்படி தன் அறைக்குள் நுழைந்த தாத்தாவை ஏதும் புரியாத மன நிலையோடு பார்த்து கொண்டு இருந்தான் துர்வன்.
----------------------------------------------------------------------------------
துர்வாவின் வீட்டில் இருந்து காலை ஆறு மணி அளவில் கனகாவின் வீட்டுக்கு திரும்பிய ரோஜாவாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, அப்போது தான் கனகா தன் அறையில் இருந்து அரை தூக்கத்தில் ஹாலை நோக்கி வந்தாள்.
"என்ன ரோஜா? அதுக்குள்ள சர்ச்க்கு போய்ட்டு வந்துட்டியா?" என்று இரவு நடந்த விஷயங்களை அறியாத கனகா, ரோஜாவை கேள்வி கேட்டபடி கண்கள் மேசையை பார்க்க, அங்கே இரவு ரோஜா தனக்காக எழுதி இருந்த லெட்டரை மோகனின் புகைப்படம் பத்திரமாக பிடித்து வைத்து இருந்ததை பார்த்து, அந்த கடிதத்தை வாசித்தாள்.
"அடிப்பாவி கனகா. இடியே இடித்தாலும் உன்னை தூக்கத்துல இருந்து எழுப்ப முடியாதுன்னு மோகன் சொன்னது சரியா தான் போச்சு" என்று வாய் விட்டு புலம்பிய கனகா, "இப்போ குழந்தை எப்படி இருக்காள்? டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று ரோஜாவிடம் விவரம் கேக்க. அங்கே நடந்த எல்லா நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் ரோஜா.
"சரி நீங்க போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதா இருந்தா தூங்குங்க. நான் என் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு, குளிச்சிட்டு சர்ச்க்கு கிளம்புறேன்" என்று ரோஜா சொன்னதும்,
"இனி தூக்கம் வரது கஷ்டம் தான். வா நானும் உன் கூட சர்ச்க்கு வரேன்" என்று கனகா சொன்னாள்.
காலை எட்டு மணி அளவில் இவர்கள் இருவரும் ஒன்றாக சர்ச்க்கு சென்றவர்கள் ஜெபம் முடித்த பின்பு அங்குள்ள மரத்தடி நிழலில் அமர்ந்தார்கள்.
"நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கவா?" என்று ரோஜா கேட்டதும்...
"என்ன உன் நண்பன் எதாவது என்னை கேள்வி கேக்க சொன்னானா?" என்று கனகா கேக்க,
“இல்ல இல்ல. நானே தான்..." என்று ரோஜா தயங்கியபடி கனகாவை பார்க்க,
"என் மோகனை பற்றி கேக்ப்க போறியா? " என்று கனகா கேட்டதும்,
ரோஜாவின் அமைதியே கனகாவின் மௌனத்தை உடைத்தது...
"என் மோகன் ஒரு டாக்டர். எத்தனையோ பேருக்கு இலவச மருத்துவம் பார்த்த வள்ளல். நானும் அவரும் பத்து வருடம் காதலித்து அப்புறம் ரெண்டு வருடம் குடும்பத்துக்காக ஒருவரை ஒருவர் பாக்காம பேசாம இருந்தோம். ஆனா, அந்தப் பிரிவு தான் எங்க காதலை மேலும் பலப்படுத்தியது. அவர் ஒரு அனாதை. எங்க கல்யாணத்த என் வீட்ல ஏத்துக்காததால, எல்லாம் இருந்தும் நானே என்னை அனாதையா ஆகிகிட்டேன். நாங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் முடிச்சு ஹாப்பியா தான் வாழ்ந்தோம். எங்க போறாத காலம் கொரோனா நோயில பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிகிச்சை பார்த்த என் மோகன், என்னை தனியே தவிக்க விட்டுட்டு கண் மூடிட்டாரு.”
“இதுல என்ன கொடுமைன்னா, என் மோகனோட உடலை என்னால கடைசியா கட்டி தழுவ கூட முடியல. அதனால தான் நான் இப்பவுமே என் அறையில அவரோட டிரஸ், அவரோட போர்வை, அவரோட துண்டுன்னு எல்லா உயிரற்ற பொருள்களுடனும், அவரோட உயிர் கலந்து இருக்குன்னு நம்பி வாழ ஆரம்பிச்சிட்டேன். ஆனா, உன் நண்பன்... அதான் என் தம்பி இருக்கானே, அவன் என்னை மறுமணத்துக்கு சம்மதிக்க வைக்க போராடுறான். ஆனா, என் மோகனுக்கு தந்த இதயம், முரளி வந்து கேட்டா கூட நான் அவனுக்கு தர மாட்டேன்" என்று தன் வேதனையை மறைத்து கொண்டு கனகா நகைசுவையாக பேசினாலும், அவரின் கண்கள் அவர் படும் வேதனையை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.
உயிர் இருந்தும் சடலமாக இருக்கும் சில உறவுகள்.
உயிர் பிரிந்தும் சாகா வரமாக மாறியது சில உணர்வுகள்.

குறை ஒன்றும் இல்லை..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
குழந்தையும் பாவம்... கனகா😥😥😥😥😥உனக்கு ஒரு நல்லது விரைவில் நடக்கும் டி
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top