• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 10

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
அத்தியாயம் - 10

ஐந்து பேர் சூழ்ந்து கைகோர்த்து நின்று பிடித்தாலும் கைகளுக்குள் அடங்காத தடிமனாக வளர்ந்திருந்த பச்சை பசலேன்ற புளிய மரத்தில் புளியம் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்து காண்போர் கண்களைக் குளிர்வித்து நாக்கில் எச்சில் ஊற வைத்தது.

மரத்தில் கயிறுக் கட்டி நடுவில் பலகை போட்டு ஆடிக் கொண்டிருந்தவள் தன் இனிமையான குரலில் தன்னை மறந்து கண்களை மூடிப் பாடிக் கொண்டிருந்தாள். பாட்டுடன் ஊஞ்சலாடும் சுகம் அவளைத் தனி உலகுக்கே கொண்டு சென்றிருந்தது.

மெல்ல ஆடிய ஊஞ்சல் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து அசுர வேகத்தில் ஆடியது. அடி வயிற்றில் சுண்டியிழுப்பது போல் மின்சாரம் பாயச் சட்டென்று கண்களைத் திறந்தவள், இன்பமாக மூடியிருந்த விழிகள் மிரட்சியுடன் சுழன்று, ஆகாயத்தில் தலை கீழாக நிற்கும் ஊஞ்சலைக் கண்டு ஒரு நிமிடம் அவள் இதயம் நின்று துடித்தது.

பச்சை பசலேன்று காட்சியளித்த புளிய மரம் கருமை பூசியிருக்க, கொத்துக் கொத்தாகத் தொங்கிய புளியம் பழங்கள் மண்டை ஓடுகளாக மாறியிருந்தது. அவளைச் சுற்றி இருந்தவர்களும் மாயமாகி போயிருந்தனர்.

நடப்பது என்னவென்று யூகிப்பதற்குள் தலை கீழாக நின்ற ஊஞ்சல் மின்னல் வேகத்தில் கீழே இறங்கியது. நடக்கப் போகும் விபரீதம் உணர்ந்தவள் கயிறுகளை இறுக பற்றிக் கண்களை மூடிக் கொண்டாள்.

சீறிப் பாய்ந்து வந்த ஊஞ்சல் தரையில் நிற்கும் அல்லது கீழே பொத்தென்று விழும் என நினைத்தவளுக்கு, நடப்பது என்னவென்று புரியவில்லை. மெல்ல கண்களைத் திறந்தவளுக்கு மேலும் கீழும் சுற்றிக் கொண்டிருந்தைக் கண்டு உயிர் நின்றுவிடும் போலிருந்தது.

திடீரென்று ஊஞ்சல் நின்றுவிட கீழே இறங்கலாமென நினைத்த நேரம் பக்கவாட்டில் சுற்ற ஆரம்பித்தது. இதைத் சற்றும் எதிர்பாராதவள், இரு பக்க கயிற்றில் கையை நுழைத்து இரு கைகளையும் இணைத்துக் கொண்டாள். கையை விட்டால் அந்தரத்திலிருந்து தலை குப்புற விழுவது நிச்சயமென்பதால், ‘ஆ! ஆ!’ என அலற ஆரம்பித்தாள்.

அவள் அலறிய அலறலில் சுற்றிக் கொண்டிருந்த ஊஞ்சல் சட்டென்று பிரேக் அடித்து அந்தரத்தில் நின்றது. கைகள் உதறல் எடுத்துச் சிறிது சிறிதாகப் பிடி விலக, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கினாள். எந்த நொடியும் கீழே விழுந்து தலை சிதறுவது உறுதி என்பதை அறிந்தவளின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

“யாராவது இருக்கீங்களா? என்னைக் காப்பாற்றுங்க என்னைச் சுற்றி என்ன நடக்குன்னே தெரியலை. யாராவது இருந்தா என்னைக் காப்பாற்றுங்க!” எனப் பிதற்றினாள், கூப்பாடு போட்டாள். ஆனால், அதைக் கேட்க ஈ, காக்கா கூட இல்லை.

மெல்ல மெல்ல ஊஞ்சல் அசைய, அடுத்து நடக்கப் போவதை யூகிப்பதற்குள் தரையில் குப்பறடிக்க விழுந்து கிடந்தாள். மெதுவாக எழுந்தவள் சுற்றிப் பார்க்க இருண்ட பகுதியில் எந்தப் பக்கம் வழியேனத் தெரியாமல் விழித்தாள்.

கால் போன திசையில் தொங்கிக் கொண்டிருந்த மண்டையோடுகளைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருந்தாள். உடலிலும் தெம்பில்லை கால்களிலும் பலம் இல்லாமல் நின்ற இடத்திலே உட்கார்ந்து ஆழத் தொடங்கினாள். ஏதோ சத்தம் கேட்க, அழுவதை நிறுத்திவிட்டு கூர்ந்து கவனித்தவளின் காதுகளில் பெண்ணின் சிரிக்கும் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசைக்கு எழுந்து நடக்க, சிரிக்கும் ஒலி வெவ்வேறு திசையில் கேட்க, குழப்பமாகி தான் தப்பிக்க வேறு வழி இல்லையென உணர்ந்தவளின் உடல் குலுங்க ஆரம்பித்தது. தன் முன் யாரோ நிற்பது போல் தெரிய தலை நிமிர்ந்து பார்த்து அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.

“என்ன வலிக்குதா? இதே வலிதானே எனக்கும் வலிச்சிருக்கும். நீ செத்தா அவங்களுக்கு வலிக்கும். விடமாட்டேன் ஒவ்வொருத்தரையா கொல்லுவேன்” தன் கோர முகத்தைக் காட்டினாள் சங்கவி. நகங்களால் அவள் முகத்தில் கோடு போட, இரு கண்களிலும் விரல்களை விட்டுக் கருவிழிகளைத் தோண்டினாள்.

‘ஆ! ஆ!’ வென அலறியவள், “என்னை ஒரே அடியில் கொல்லு. சித்ரவதை பண்ணிக் கொல்லாதே” என உலகமே கேட்கும் அளவுக்குக் கத்தினாள்.

வினோத்தும் சந்துருவும் அலுவலகம் சென்றிருக்க, ஒரு வாரமாகச் சரியான தூக்கமும் சாப்பாடும் இல்லாமல் அசதியில் மற்றவர்கள் தூங்கிவிட்டனர்.

ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்த இலக்கியாவின் முனகலில் எழுந்த திவ்யா, அவளைத் தட்டி எழுப்பினாள். ஆனால், திவ்யாவின் குரல் அவள் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.

இலக்கியா முனங்குவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் திவ்யா. திடீரென்று கண்களைப் பிடித்துக் கொண்டு இலக்கியா கத்திய கத்தலில் திவ்யாவும் சேர்ந்து, ‘வீல்’ என்று கத்தினாள். தெய்வானையும் வள்ளியம்மையும் அடித்துப் பிடித்து எழுந்து வந்து என்னவென்று திவ்யாவிடம் கேட்க, அவள் இலக்கியா பக்கம் கையை நீட்டினாள்.

துடித்துக் கொண்டிருக்கும் இலக்கியாவை தெய்வானையும் வள்ளியம்மையும் எழுப்ப, எதுவும் அவள் காதுகளில் கேட்கவில்லை.

சத்தம் கேட்டு உள்ளே வந்த சந்திரனும் சரவணனும் நடப்பதை யூகித்தவர்கள், தெய்வானை, வள்ளியை தள்ளிவிட்டு, சந்திரன் இலக்கியாவை தூக்கி உட்கார வைக்க, சரவணன் அவள் கைகளைக் கீழே இழுத்தார். ஆனால், இலக்கியாவின் பிடி தளரவில்லை. ‘பளார்! பளார்!’ என அறைந்தார்.

சரவணன் அடித்த அடியில் கனவு கலைந்து சுயநினைவுக்கு வந்தாள். தன் கைகளாலே கண்களைக் குத்திக் கொண்டிருந்த இலக்கியா செவ்வானமாக மாறியிருந்த கண்களைத் திறந்து, நான் சாகலையா? உயிரோடதான் இருக்கேனா?” எனக் கேட்டதும் எல்லோரும் ஆசுவாசமாகப் பெரு மூச்சு விட்டனர்.

இலக்கியாவின் தலையில் அடித்த திவ்யா, “கனவு கண்டு கத்தினியா? நாங்க என்னமோ சங்கவிதான் உன் உடம்புக்குள்ள புகுந்துட்டாளோன்னு நினைச்சிட்டோம்” என அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“சொல்ற அத்தனையும் பொய். சங்கவியை எதிர்த்துச் சண்டை போட்டாளாம். என்னை யாராவது காப்பாத்துங்கன்னு புலம்பிட்டே இருந்தா. யாராவது காதுல பூச்சுத்தியிருப்பாங்க அவங்களிடம் போய்ச் சொல்லு. நீ உண்மையைச் சொல்லலை, சங்கவி கொல்லமாட்டா நானே உன்னைக் கொல்வேன்” என இலக்கியா கழுத்தைநெறிப்பது போல் கையைக் கழுத்தில் வைத்தாள் திவ்யா.

‘அன்னைக்கு மாதிரி வீடியோ எடுத்து வைத்திருப்பாளோ, அதைப் போட்டுக் காட்டிட்டா அசிங்கமா போயிருமே’ எனத் திருதிருவென முழித்த இலக்கியா கனவில் கண்டதைச் சொன்னாள்.

“மண்டையோடா இருந்துச்சா! அண்ணி, இப்படிக் கனவு வந்தா என்ன நடக்கும்னு தெரியலையே. இவ வேற கனவு கண்டேன்னு வயிற்றில் புளியை கரைக்காளே” என நெஞ்சைப் பிடித்தார்.

“ஒன்னும் நடக்காது தெய்வா. எதுக்குத் தேவையில்லாம பயந்துகிட்டு இருக்க? பகல் கனவெல்லாம் பலிக்காது” வள்ளி ஆறுதல் சொன்னாலும் அவரின் மனதிலும் பயப்பந்து உருண்டு கொண்டிருந்தது.

மாலை வினோத்தும் சந்துருவும் வந்ததும், இலக்கியா கண்ட கனவு பற்றித் தெய்வானைச் சொல்ல, வாடிப் போன இலையாக வினோத்தின் தலை கீழே தொங்கியது. சில மணி நேரங்கள் யோசித்த வினோத் சரவணன் முன் நின்றான்.

“மாமா, இங்க நடக்கிறதை நாங்க பார்த்துக்கிறோம். எது நடந்தாலும் அது எங்களோட போகட்டும். உங்க யாருக்கும் எதுவும் ஆகிடக் கூடாது” வினோத் சொல்ல.

சரவணன் பதில் சொல்ல யோசிக்க, “எங்களைக் கொன்னுருவான்னு பயப்படுறீங்களா வினோ. எங்க உயிரே போனாலும் பரவாயில்லை. இந்த நிலைமையில் உங்களை விட்டுட்டுப் போறதா இல்லை” எனத் திவ்யா பிடியாக நின்றாள். அவளுடன் இலக்கியாவும் கைகோர்த்தாள்.

“பார்த்தியா இவங்களை. என்ன ஆனாலும் அதை எதிர்க்கத் தைரியமா நிற்காங்க. நீ கோழை மாதிரி பேசாதே போய் ஆக வேண்டியதைப் பார்” என்றார் சரவணன்.

திவ்யா, இலக்கியா இருவரும் வினோத்தைப் பார்த்து, “வவ்வே” என்றுவிட்டுச் சென்றனர்.

“இந்த ரெண்டு பேய்களையும் பார்த்தும் சங்கவி எப்படிப் பேயா வந்து ஆடிட்டு இருக்கா? அதுவும் கனவுலையும் வந்து இம்சை பண்றா. நிம்மதியா பகலிலும் தூங்கவிட மாட்டாளா?’ சந்துரு கிண்டலாகச் சொல்லவும், திவ்யா, இலக்கியா இருவரும் தங்கள் அருகில் இருந்த தலையணையைத் தூக்கி அவன் மீது எறிந்தனர்.

“இலக்கியா கண்டது கனவு இல்லை, நிஜம். இலக்கியாவுக்குக் கனவுபோலப் பிம்பத்தை உண்டாக்கி அவளைக் கொல்ல பார்த்திருக்கா. அவ நம்ம கூடவேதான் இருக்கா. ஒவ்வொரு அசைவையும் கவனிச்சிட்டு இருக்கா. எவ்வளவு சீக்கிரம் அவ இறந்த விஷயம் வெளியில் வருதோ அதைப் பார்த்துதான் சங்கவி அடங்குவா” வள்ளியம்மை சொல்ல.

வினோத்தின் கைப்பேசி அழைக்க, காதில் வைத்தவன் பேசிவிட்டு, “சந்துரு, நாளைக்கு நகுல் வீட்டுக்கு முகிலன் விசாரிக்கப் போறானாம். நம்மையும் கூடக் கூப்பிடுறான்” என்றதும் போலாமெனத் தலையை ஆட்டினான் சந்துரு.

******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
34
“சார், நீங்க சொன்னது போல வினோத்தை நாளைக்கு வரச் சொல்லிட்டேன். அவனை இதுவரை ஃபாலோ பண்ணதில் வேற எதுவும் துப்பு கிடைச்சுதா?” வினோத் குற்றவாளியாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இருக்கலாமோ என்ற சந்தேகமும் முகிலனுக்கு இருந்தது.

“எல்லாமே வெற்றிடமாத்தான் இருக்கு முகிலன். வீடியோவை வைத்துத் தவறான வழியில் போயிட்டு இருக்கேனோ என்ற சந்தேகம் இருக்கு. அதான், உன்னை வினோத் கூடப் போகச் சொன்னேன்” என்றான் கண்ணன்.

“சார், ஆறு மாசமா ஃபாலோ செஞ்சும் எதுவும் கிடைக்கலையா? அப்படின்னா கொலையாளி வேற எங்கயோ ஒளிஞ்சிருக்கான் போல.”

“ஆமா முகிலன், அதான் வழியை மாற்றப் போறேன். இப்ப போற வழி சரியா இருந்தா கண்டிப்பா கொலையாளி மாட்டுவான்” என்ற கண்ணன் பேனாவால் மேசையில் தட்டிக் கொண்டிருந்தான்.

“நகுலோட போட்டோ ஏதாவது வினோத்திடம் இருக்கான்னு கேட்டீயா? அவனிடம் இல்லைன்னா, நாளைக்குப் போற இடத்தில் போட்டோ கேட்டு வாங்கிட்டு வா. ஏன்னா, ஹெட்கான்ஸ்டபிள் வரதன், நகுல் ஃப்ரெண்ட் கரண் வீட்டை நோட்டம் பார்த்துட்டு இருக்கார். நகுல் போட்டோவை அவரிடம் கொடுத்து, கரண் வீட்டுக்கு வந்து போறானான்னு கவனிக்கச் சொல்லனும்.”

“ஏற்கனவே கேட்டுட்டேன் சார். அவனிடம் எந்தப் போட்டோவும் இல்லை. கரண் வீட்டுக்குப் போனப்பக் கூட அவனைப் பார்க்கலை. சங்கவி மொபைலில்தான் பார்த்ததா சொன்னான்.”

“சங்கவி மொபைலா! அவ மொபைல் என்னிடம்தானே இருக்கு. அதில் அவ பேசிய வீடியோ, அவங்க பேமிலி போட்டோ, ஒரு சிலரோட நம்பர்தானே இருக்கு. அவ நம்பரை வைத்து முகவரி தேடினா, பொய்யான முகவரி கொடுத்து இருக்காங்க. அதனால்தான் வினோத் மேல சந்தேகம் அதிகமாச்சு. அதிலிருந்த ஒரு நம்பரை தொடர்பு கொண்டுதான் வினோத் முகவரியையே கண்டுபிடிச்சேன்.”

“சாகப் போற நேரத்தில் வீடியோ எடுத்தவ எல்லாப் போட்டோஸையும் ஏன்அழிக்கனும்? ஒரு சிலரோட நம்பர்னா, அதில் ஏன் வினோத் வீட்டு நம்பர் யாருடையதும் இல்லை?” முகிலன் சந்தேகத்தை எழுப்ப,

“வினோத்தை மாட்டிவிடப் பிளான் பண்ணி வேலை பார்த்திருக்கான் கொலையாளி. வினோத்துக்குக் கால் செஞ்சு, சங்கவியோட மொபைல் வாங்கின பில் ரசீது, இல்லைன்னா அட்டை பாக்ஸ் ஏதாவது இருந்தா போட்டோ எடுத்து அனுப்பச் சொல்லு.”

முகிலன் உடனே வினோத்தை அழைத்துக் கேட்க, அவன் ரசீது மட்டுமில்லாமல் கைப்பேசியைப் பிடித்தபடி சங்கவி நிற்கும் புகைப்படத்தையும் அனுப்பிவிட்டான்.

தன் கையிலிருந்த கைப்பேசியும் புகைப்படத்திலிருந்த கைப்பேசியும் வெவ்வேறாக இருந்தது. கையில் இருந்த சங்கவியின் கைப்பேசியில் ஏதோ பார்த்துவிட்டு, வினோத் அனுப்பின ரசீதையும் பார்த்ததும் வேகமாக எழுந்த கண்ணன் மேசையின் மீது குத்தினான்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top